தெலுங்கு மக்கள் மனதில் கே.வி.மகாதேவன்

1சில நாட்களுக்கு முன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தெலுங்கு சேனல் ஒன்றில் நடத்தும் ஒரு இசைப்போட்டி நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்தேன். அன்று ‘சங்கராந்தி’ (பொங்கல்) சிறப்பு நிகழ்ச்சி. அந்தப் பண்டிகையையும், தெலுங்கு கலாசாரத்தையும் பிரதிபலிக்கும் பாடல்களைப் போட்டியில் பங்கேற்பவர்கள் பாடவேண்டும். இந்தத் தலைப்பில் எனக்கு மனதில் சில பாடல்கள் தோன்றின. அதே பாடல்களைப் போட்டியாளர்கள் பாடினார்கள். அப்பொழுதுதான் கவனித்தேன். இதில் பல பாடல்களுக்கு இசை கே.வி.மகாதேவன்! எஸ்.பி.பியும் கே.வி.மகாதேவனின் இசை மேதமையைச் சுட்டிக்காட்டினார்.

நான் சமீபத்தில் படித்ததொரு கட்டுரையில் ஒரு சம்பவம் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆதிவாசிகள் பாடும் பாடல்களைப் பதிவு செய்ய அவர்களிடம் ஒரு வெள்ளைக்காரர் செல்கிறார். அவர்கள் பாட அந்த வெள்ளைக்காரர் அதைப் பதிவு செய்துகொண்டு செல்கிறார். சில வருடங்களுக்குப் பிறகு அவர்களை மறுபடியும் சந்தித்து ஏதேனும் புதிய பாடல்கள் இருந்தால் பாடுங்கள் என்று கேட்கிறார். அவர்கள் பாடிய ஒரு பாடல் அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அது ஒரு வெள்ளைக்காரர் வந்து பாடல் பதிவுசெய்துகொண்டு சென்றதைப் பற்றியது! கட்டுரையாசிரியர் இதைச் சொல்லிவிட்டு எப்படி கலாசாரத்துடன் ஒருவன் உரையாடும்பொழுது அவனும் கலாசாரத்தின் ஒரு கூறாக மாறுகிறான் என்று சொல்கிறார். கே.வி.மகாதேவனை தெலுங்கு மக்களின் கலையுணர்வோடு உரையாடிய ஒரு ஒப்பற்ற கலைஞனாகவே நான் பார்க்கிறேன். அவர் உருவாக்கிய பல தெலுங்குப்பாடல்கள் இப்போது ஆந்திரப்பிரதேசத்தில் கலாசாரக் கூறுகளாகவே மாறிவிட்டன.

நாட்டார் கலை எல்லா கலாசாரங்களிலும் முக்கியமான ஒரு அங்கமாக திகழ்கிறது. நாட்டார் இசையை ஆதாரமாகக் கொண்ட பல மகாதேவனின் பாடல்கள் இன்றும் தெலுங்குதேசம் எங்கும் பட்டிதொட்டிகளில் முழங்குகின்றன. முதலாக நாம் பார்க்கப்போகும் பாடல் தமிழிலும் பெரும்புகழ் பெற்றது. ஆனால் இந்தப் பாட்டின் தாக்கம் தமிழை விடத் தெலுங்கில் அதிகம் என்று நிச்சயமாகக் கூறலாம். (இந்த பாட்டினால் தான் மகாதேவனுக்கு ‘மாமா’ என்ற செல்ல பெயர் வந்தோ என்னவோ? அறிந்தவர்கள் கூறலாம்.)

எடுத்த எடுப்பிலேயே நாட்டார் பாடல்களுக்கே உரிய உற்சாகத்துடன் ஆரம்பிக்கிறது இந்தப் பாடல். இடையிசை ஆகட்டும், அந்த ‘மாமா மாமா’, ‘பாமா பாமா’ சொல்லாடலும், அது வரும் இடத்தில் உள்ள துள்ளலும் இந்தப் பாடலை எல்லோருக்கும் பிடித்த ஒரு பாடலாக ஆகிவிட்டது. ‘மன்சி மனசுலு’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல், இன்று வரையிலும் எல்லா இசைப்போட்டிகளிலும் பாடப்படுகிறது.

‘அக்கா செல்லெல்லு’ என்ற படத்தில் சுசீலா பாடிய ‘பாண்டவுலு பாண்டவுலு’ என்ற இன்னொரு பாடல், நாட்டார் பாடலுக்கே உரிய ஒரு தாளகதியுடன் ஆரம்பிக்கிறது. இடையிசையில் மகாதேவனின் கைவண்ணம் தெளிவாகத் தெரிகிறது. சரணத்தில் பாடலின் துள்ளலும், வேகமும் சற்றும் குறையாமல் எடுத்துச் செல்வார். சரணம் முடியும் தருவாயில் வேகத்தை சற்று குறைப்பார். அதனால் மறுபடியும் வேகத்துடன் பல்லவி ஆரம்பிக்கும்போது நமக்கு எழுந்து நடனமாடவேண்டும்போல் தோன்றும். (இந்தப் பாடலின் காட்சி அமைப்பும் வேடிக்கையாக இருக்கும். முதல் இரவு அன்று இந்த மாதிரி குத்தாட்டம் போட்டால் கணவன்மார்கள் மிரளத்தான் செய்வார்கள்.)

‘மூக மனசுலு’ என்னும் படத்தில் வரும் இந்த நாட்டார் இசைப்பாடலில் தவில் மற்றும் நாதஸ்வரத்தை வெகு நேர்த்தியாக மகாதேவன் உபயோகித்திருப்பார். இந்த விஷயத்தில் மகாதேவன் ஒரு முன்னோடியோ என்று தோன்றுகிறது. பிற்காலத்தில் வந்த பல இசையமைப்பாளர்கள் இதுபோல் நாட்டார் பாடல்களுக்குத் தவில் மற்றும் நாதஸ்வரம் நன்றாக உபயோகித்திருக்கிறார்கள். (சட்டென்று இளையராஜா கண் முன் தோன்றுகிறார்.) இந்தப் பாடலும் தெலுங்கு திரையிசையில் வந்து புகழ்பெற்ற நாட்டார் பாடல்களில் ஒன்றாக இன்றும் திகழ்கிறது.

இன்னும் பல நாட்டார் பாடல்களை மகாதேவன் கொடுத்திருக்கிறார். ‘தசரா புல்லோடு’வில் வரும், ‘செதிலோ செயேசி செப்பு பாவா’ போல் பல பாடல்கள். நாட்டார் பாடல்கள் வரிசையில் மகாதேவன் அளித்த மிகவும் சிறப்பான முழுவதும் கிடைக்காத இன்னொரு பாடல்:

இந்தப் பல்லவி ஒன்றைக் கேட்ட மாத்திரத்திலேயே மகாதேவனின் இசைப்புலமை நமக்குப் புரியும். குஹன் ராமனைப் பார்த்துப் பாடும் பாடல் இது. குஹன் படகோட்டி என்பதனால் இந்த பாடலின் பல்லவியும் படகில் மிதக்கும் அனுபவத்தை நமக்குக் கொடுக்கும்படி அமைத்திருப்பார். ‘சம்பூர்ண ராமாயணம்’ படத்தில் வரும் இந்தப்பாடலும் வெகுவாகப் புகழ்பெற்ற ஒரு பாடல். இன்றும் பரவலாக ஒலித்துக்கொண்டிருக்கும் பாடல்.

நமது கலாசாரத்தின் பல கூறுகள் பெண்களை ஒட்டி இருக்கின்றன. அவர்கள் கடைப்பிடிக்கும் விரதங்கள், அவர்கள் செய்யும் நோன்புகள், அவர்கள் தங்கள் வீட்டையும், வீட்டில் உள்ளோரையும் கவனிக்கும் விதம், என்று பல வகையில் அவர்களையே கலாசாரத்தின் பிரதிநிதிகள் ஆகிறார்கள். இது இந்தியா முழுக்கப் பொதுவான ஒன்றே. தெலுங்கு தேசத்திலும் அதுபோல்தான். ஒரு லட்சியப் பெண்ணை உருவாக்குவதுதான் பல படங்களின் லட்சியமாக இருந்திருக்கிறது. (இதில் பெண்களின் விருப்பம் எவ்வளவு என்பது வேறு விஷயம்.) இதைப் போன்ற லட்சியப் பெண்மணியை உருவாக்குவதற்கு அதற்கான சூழலும், சூழலுக்கேற்ற பாட்டும், இசையும் உருவாக்கப்பட்டன.

தெலுங்கில் ஆகச்சிறந்த ‘லட்சியப் பெண்மணி’ பாடல் என்றால் அது ‘முத்தியால முக்கு’ என்னும் படத்தில் வரும் ‘முத்யமந்தா பசுபு முகமந்த சாயா’ என்ற பி.சுசீலா பாடிய பாடலாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். எந்த ஒரு பண்டிகை வந்தாலும், இந்தப் பாடல் தொலைக்காட்சியில் வந்துவிடுவது நிச்சயம். (‘சத்யம்’ என்ற இசையமைப்பாளர் அமைத்த ‘தெல்லா வாராக முந்தே’ என்ற பாடலை இதற்கு இணையாகச் சொல்லலாம்.) எடுத்தவுடன் புல்லாங்குழல் வழியாக ஒரு காலைப்பொழுதை கண்முன் நிறுத்துகிறார் மகாதேவன். சுசீலா பாடும் விதமும், இடையிசையில் வரும் வாதியங்களும், பாட்டின் அமைப்பும் ஒரு மங்களகரமான காலைப்பொழுதின் உணர்வை நமக்குக் கொடுக்கின்றன. குரலாகட்டும், வாத்தியங்கள் ஆகட்டும் மென்மையாகவே ஒலிக்கும்.

இந்தப் பாடல் மக்களை மட்டும் அல்ல, பிற இசையமைப்பாளர்களையும் பாதித்திருக்கிறது. இந்த பாடலில் மயங்கிய இசையமைப்பாளர் கீரவாணி (தமிழில் மரகதமணி) இதைப் போலவே ‘சீதா ராமையா காரி மனவராலு’ என்னும் படத்தில் ஒரு பாடல் செய்தார். இந்த இரு பாடல்களுக்குமுள்ள ஒற்றுமையை எஸ்.பி.பி தன் நிகழ்ச்சியில் சுட்டிக்காட்டினார். கீரவாணிக்கு மகாதேவன் மேல் மிகுந்த மரியாதை இருப்பதாகவும், ‘முத்தியால முக்கு’ பாடல் போல் ஒரு பாடல் செய்யவேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும் கூறினார். கீரவாணி செய்த பாடலைக் கேளுங்கள்.

இந்தப் பாடல்களில் வரும் கதாநாயகிகள் போல் பெண்கள் இருக்க விரும்புவார்களோ இல்லையோ, மருதாணி இட்டுகொள்வதை விரும்பாத பெண்கள் மிகவும் அரிதாகவே இருப்பார்கள். மருதாணி இலைகளை பறித்து, அரைத்து, வீட்டில் உள்ள பெண்களுக்கு இடும் வழக்கைதையும், அதன் ஊடாக குடும்பத்தில் உள்ள பாசத்தையும் சொல்கிறது ‘கோரிண்டாகு’ என்ற படத்தில் வரும் இந்தப் பாடல். இதை மிவும் போற்றப்பட்ட கவிஞரான ‘தேவுலாப்பள்ளி கிருஷ்ண சாஸ்திரி’ அவர்கள் இயற்றினார். ஆனந்தபைரவி ராகத்தின் அடிப்படையில் அமைந்திருந்தாலும், நமக்கு அந்த ராகத்தை நேராகக் காட்டாமல் அதன் அழகை மட்டும் கொடுக்கிறார். ஏதோ ஓரிரு இடங்களில் ஆனந்தபைரவி எட்டிப் பார்க்கிறது. அதுவும் பல்லவி முடியும் தருணம் அந்த ராகம் எட்டிப்பார்த்து இனிமையைப் பலமடங்கு கூட்டுகிறது. அதேபோல் சரணம் முடியும் தருணத்திலும் வெகு அழகாக ஆனந்தபைரவியைக் கையாண்டிருப்பார் மகாதேவன். முப்பது வயதுக்கு மேற்பட்டவர் இந்தப் பாடலை அறியவில்லை என்றால் அவர் தெலுங்கராக இருக்க முடியாது என்பது என் நம்பிக்கை. (முப்பது வயதிற்கு உட்பட்டவர் முமைத்கானை அறியவில்லை என்றால் அவர் தெலுங்கராக இருக்க முடியாது என்கிறான் என் நண்பன்.)

மங்களகரமான பாடல் வரிசையில் வைக்க வேண்டிய மற்றுமொரு மகாதேவன் பாடல் இங்கே. இந்தப் பாடலை பற்றி நான் எதுவும் எழுதபோவதில்லை. பல ராகங்களைத் தாங்கி செல்லும் ஒரு அற்புத பாட்டு. இதுவும் தெலுங்கு பேசும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்ட ஒரு பாடல்…

மொழிக்குக் கொடுக்கப்படும் மரியாதை ஒரு கலாசாரத்தை மதிப்பிடும் கருவியாக இருக்கிறது. மொழியின் வளர்ச்சியும் கலாசார வளர்ச்சியும் சேர்ந்தே இருப்பவை என்றும் கூறலாம். 1970-களில் தெலுங்குமொழி மேல் மிகுந்த பற்றுகொண்ட இயக்குனர்களில் மிக முக்கியமானவர்கள் கே.விஸ்வநாத் மற்றும் பாபு (Baapu). இவர்கள் இருவரின் திரைப்படங்களிலுமே உரையாடல்கள் ஆகட்டும், பாடல்கள் ஆகட்டும், நல்ல இலக்கியத்தன்மை கொண்டவையாக அமைந்தன. பாடலாசிரியர்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டது. இதனால் பாடலாசிரியர்களும், வசனகர்த்தாக்களும் இவர்களின் படத்தில் பணிபுரிய ஏங்கினார்கள். இவர்களின் படங்கள் ஆபாசம் அற்றவையாகவும், மனிதர்களின் நுண்ணிய உணர்வுகளை காட்டுவதாகவும் இருந்தன. இன்றைக்கும் தெலுங்கு திரைப்படங்களின் சிறந்த படங்கள் என்று பட்டியலிட்டால் இவர்கள் இருவரின் படங்கள் அந்தப் பட்டியலில் கணிசமான இடங்களை ஆக்கிரமித்துக்கொள்ளும்.

இப்படிப்பட்ட இரு சிறந்த இயக்குனர்களுக்கு ஆஸ்தான இசையமைப்பாளராய் கே.வி.மகாதேவன் திகழ்ந்தார். அவர்களுக்கு மகாதேவன் மீது இந்த நம்பிக்கை எதனால் ஏற்பட்டது? கே.வி.மகாதேவன் பாடலாசிரியர்களுக்குக் கொடுத்த மரியாதைதான் காரணம். மகாதேவன் எப்போதுமே பாட்டுக்குதான் மெட்டுப் போடுவார். பாடலாசிரியர் ஒரு பாடலை எழுதிவிட்டால் அதில் ஒரு வார்த்தையை கூட மாற்றச் சொல்லமாட்டாராம் மகாதேவன். வரிகள் எவ்வளவு கடினமாக இருந்தாலும், மெட்டமைப்பதற்கு உகந்ததாக இல்லாமல் இருந்தாலும், மகாதேவன் அதற்கு மெட்டமைத்துவிடுவார் என்று சொல்வதுண்டு. இதனால் கவிஞர்கள் தங்கள் முழு கற்பனையையும் உபயோகித்துப் பாடலை எழுதமுடிந்தது. இது மெட்டுக்கு சரி வருமோ வராதோ என்று கவலை அவர்களுக்கு இல்லாமல் இருந்தது. அதை மகாதேவன் பார்த்து கொள்வார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது.

உதாரணத்திற்கு சில பாடல்களைப் பார்ப்போம். இன்று தெலுங்கில் முதன்மையான பாடலாசிரியர் என்று கருதப்படும் ‘ஸிரிவென்னெல சீதாராம சாஸ்திரி’ அவர்கள் அறிமுகமான முதல் படத்திற்கு இசையமைத்தவர் மகாதேவன். படத்தின் பெயர் ‘சிரிவென்னல’. இயக்குனர் கே.விஸ்வநாத். சீதாராம சாஸ்திரி எழுதிய பல்லவி வரிகள் இவை: “சரசத் ஸ்வர சுர ஜரி கமனமௌ சாம வேத கானமிதி, நே பாடின ஜீவித கீதம் ஈ கீதம்”. மிகவும் கடினமான சொற்கள். சற்று கரடுமுரடாக இருக்கும் என்றும் சொல்லலாம். கவிஞரின் புலமைக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்த இந்தப் பாடல், மெட்டமைக்க சுலபமான ஒன்றல்ல. ஆனால் இதை வெகு அழகான மெலடியாக மாற்றியிருப்பார் மகாதேவன். எங்கெல்லாம் ‘ஆ’காரங்கள், ‘ஈ’காரங்கள், ‘ஊ’காரங்களை நீட்ட முடியுமோ, அங்கெல்லாம் அவைகளை நீட்டி, எங்கே அவற்றை சுருக்க வேண்டுமோ அங்கே சுருக்கி, வசீகரமான ஒரு தாளகட்டில் பாட்டை அமைத்து, கடினமான வார்த்தைகளின் மேல் மென்மையான ஒரு போர்வையைப் போர்த்திவிடுகிறார். எஸ்.பி.பியின் குரலும், சுசீலாவின் குரலும் அவருக்கு பக்கபலமாக அமைகின்றன. இந்தப் படம் புல்லாங்குழல் கலைஞனைப் பற்றியது என்பதால் பாடல் முழுவதும் புல்லாங்குழலின் இசை வியாபித்திருக்கிறது. அது பாட்டுக்கு மேலும் இனிமையைக் கூட்டுகிறது. சீதாராம சாஸ்திரி அவர்கள் இதற்குப் பிறகு பல பாடல்களை எழுதியிருந்தாலும், பல தேசிய, மாநில விருதுகளைப் பெற்றிருந்தாலும், இன்னும் அவரை இந்தப் பாடல் மூலம்தான் பலர் அடையாளம் காட்டுகிறார்கள். பாடலில் உள்ள கவித்துவத்தைச் சிதைக்காமல் மகாதேவன் அமைத்த மெட்டும் இன்று வரையிலும் இந்த பாடல் எல்லோர் மனதிலும் குடிகொண்டிருப்பதர்க்கு முக்கியமான காரணம் என்பதை சீதாராம சாஸ்திரியே ஒத்துகொள்வார்.

மகாதேவன் இது போன்ற பாடல்களுக்கு இசையமைத்தபோது யாரும் வியக்கவில்லை. ‘இதைத்தான் அவர் பல வருடங்களாக செய்து வருகிறாரே’ என்ற சகஜமான ஒன்றாகவே எல்லோரும் நினைத்தார்கள். ‘சிரிவேன்னல’ வருவதற்குப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கே.விஸ்வநாத்தின ‘செல்லெலி காபுரம்’ என்ற படத்தில் ஞானபீட விருது பெற்ற ஸீ.நாராயண ரெட்டி ஒரு கடினமான பாடலை அமைத்திருப்பார். ஒரு கவிஞன் தன் கவிதையால் ஒரு நர்த்தகியை வெல்லவேண்டும் என்பதே ‘சந்நிவேசம்’. பாடல் எழுத கவிஞர்களுக்கு இதைவிட நல்ல ‘situation’ கிடைக்காது. கவிஞர், நம் சினிமா பாஷையில் சொல்ல வேண்டும் என்றால், ’பூந்து விளயாடியிருப்பார்’. சாஹித்யம் கரடுமுரடாக ஆரம்பிக்கும். முதல் சரணத்தில் அதுவே வெகு மிருதுவாக மாறிவிடும். இரண்டாவது சரணத்தில் மறுபடியும் கடினமான சொற்கள் வர ஆரம்பிக்கும். மெதுவாக சூடுபிடித்து ஒரு உச்சியை வார்த்தைகள் தொடும். பல விதமான உணர்ச்சி மாற்றங்களுக்கு ஈடு கொடுத்து, ஒரு வரி எந்த உணர்ச்சியைப் பற்றிப் பேசுகிறதோ அதற்குத் தகுந்தாற்போல் தன்னை மாற்றிக்கொண்டு நகரும் மகாதேவனின் மெட்டு. முதல் சரணத்தில் ஆழ்ந்த அமைதி கொடுக்கக்கூடிய ஒரு மெட்டு. இரண்டாவது சரணத்தில் ஒரு சிறு சோகத்தைக் காட்டிவிட்டு, ருத்ர தாண்டவம் ஆடும் மெட்டு. கவிஞரின் உணர்ச்சி பொங்கும் வரிகளை முழுமையாகப் புரிந்துகொண்டு அதற்கு மெருகூட்டும் வகையில் மெட்டமைத்த மகாதேவன், எல்லா கவிஞர்களும் மதிக்கும் ஒரு இசையமைப்பாளராக இருந்ததில் வியப்பொன்றும் இல்லை. இந்தப் பாடலும் இன்றைக்கும் பல போட்டிகளில் பாடப்படுகிறது. எல்லோராலும் ரசிக்கப்படுகிறது.

எவ்வளவு வளைந்து, நெளிந்து சென்றாலும், எவ்வளவு கடினமான சொற்களாக இருந்தாலும் அவற்றுக்கேற்றவாறு மெட்டமைக்கும் மகாதேவனின் திறனைப் பார்த்தோம். இதை விடக் கடினம் மென்மையான தருணங்களுக்காக எழுதப்பட்ட மென்மையான வார்த்தைகளுக்கு இசையமைப்பது. அந்த வார்த்தைகளில் உள்ள காருண்யத்தை இசை வாயிலாக இன்னும் சிறப்பாக வெளிபடுத்தும் இசையமைபாளரையே மக்கள் சிறந்த இசையமைப்பாளராகக் கருதுகிறார்கள். அந்த வகையில் பாபு இயக்கிய ‘சம்பூர்ண ராமாயணம்’ என்னும் படத்தில் வரும் இந்தப் பாடலைக் கேட்போம். சபரி ராமனைக் காணும் தரும் இது. ராமனைக் கண்டவுடன் தன் கண்ணில் நீர் தேங்கியதால் ராமனை சரியாக பார்க்க முடியவில்லையே என்று சபரி ஏங்குகிறார். சபரி ராமன் பால் கொண்ட அன்பை நேர்த்தியாக வெளிப்படுத்தும் வரிகளால் பாடல் எழுதப்பட்டிருக்கிறது. மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்தும் சஹானா ராகத்தில் இந்தப் பாடலைத் தொடங்குகிறார் மகாதேவன். கறாரான எதுகை மோனைகளை கைவிட்டுவிட்டு சபரி தனக்கு தானே பேசிக்கொள்வது போல் அமைத்திருக்கிறார் பாடலாசிரியர். இதை போன்ற உரைநடை வடிவங்களுக்கு இசையமைப்பது கடினம். ஆனால் மகாதேவன் மென்மையான மெலடியை வெளிப்படுத்தும் சஹானா, ஆனந்தபைரவி இரண்டு ராகங்களையும் பயன்படுத்தி அழகான மெட்டமைத்திருப்பார்.

சபரியைப் பற்றிப் பேசும்போது நம் கலாசாரத்தில் பக்திப்பாடல்களின் பங்கைப் பற்றி நினைக்காமல் இருக்கமுடியாது. தெலுங்கு திரைசையில் பக்திப்பாடல்களுக்கு ஒரு பெரிய பாரம்பரியமே இருக்கிறது. ஆதி நாராயண ராவ், ராஜேஷ்வர் ராவ், பெண்டியால நகேஷ்வர் ராவ், டீ.வி.ராஜு, ஆர்.சுதர்சனம் போன்ற பலர் பல அருமையான பாடல்களை கொடுத்திருக்கிறார்கள். அதைக் கருத்தில் வைத்துப் பார்க்கும்போது இந்த விஷயத்தில் மகாதேவனின் பங்கு, தெலுங்கை விட தமிழில் அதிகம் இருந்திருப்பதை காணலாம். மகாதேவன் தமிழில் செய்த அளவு தெலுங்கில் புராணப்படங்கள் செய்யவில்லை என்றே கூறவேண்டும். இருப்பினும், ‘சம்பூர்ண ராமாயணம்’, ‘ராம ஆஞ்சநேய யுத்தம்’ போன்ற படங்களில் நல்ல பக்திப்பாடல்களைக் கொடுத்திருக்கிறார். ‘ராம ஆஞ்சநேய யுத்தம்’, என்னும் படத்தில் வந்த புகழ்பெற்ற இந்தப் பாடலை கேட்போம். மகாதேவனின் முத்திரை படிந்த அழகான பாடல்.

கே.வி.மகாதேவன் மரபிசையில் தெலுங்குத் திரையுலகில் ஆற்றிய பங்களிப்பும் மிகப்பெரியது. ‘கே.வி.மகாதேவனும், கர்நாடக சங்கீதமும்’ என்ற முந்தைய கட்டுரையில் விரிவாக அதைக்குறித்து எழுதிவிட்டதால், இங்கு இரண்டு பாடல்களை மட்டும் தருகிறேன்.

முதலாவது, ‘சப்தபதி’ என்னும் படத்தில் வரும் ‘நடனம் ஆடேனே’ என்னும் வசந்த ராகத்தில் அமைந்த பாடல். இந்தப் பாடலை பற்றி எதையும் எழுதி விளக்கத் தேவையில்லை. கேட்கும் உங்களுக்கு இதன் அருமை தானாகவே புரியும்.

‘சங்கராபரணம்’ திரைப்படத்தைக் குறித்து எவ்வளவோ பேசிவிட்டாலும், சொல்வதற்கு விஷயங்கள் மீதம் இருந்தபடியே இருக்கின்றன.மரபிசையின் ஈர்ப்பை மட்டும் நம்பியே எடுக்கப்பட்ட அந்தப்படம், ஒரு தைரியமான பரீட்சார்த்த முயற்சி என்று சொல்லலாம். கே.விஸ்வநாத் கதையை எவ்வளவு நம்பினாரோ, அவ்வளவே மகாதேவனையும் நம்பினார் என்பது நமக்கு படம் பார்க்கும்பொழுது புரியும். வேடூரி சுந்தர ராமமூர்த்தியின் அற்புதமான வரிகளுக்குத் தன் மொத்த அனுபவத்தையும் வைத்து இசை அமைத்தார் மகாதேவன். பாடல்கள் எல்லோராலும் ரசிக்கப்பட்டன. பல விருதுகளை அள்ளிக்குவித்து, மக்கள் மனதில் ஒரு இடத்தை பிடித்துக்கொண்டது படம். இந்த படத்தின் பாடகர்ளின் வாயிலாகத்தான் எஸ்.பி.பி. என்னும் பாடகர் முழுமையடைந்தார். இதை எஸ்.பி.பியே பல மேடைகளில் சொல்லி இருக்கிறார். எஸ்.பி.பியால் மரபிசை பாட முடியும் என்று இந்தப்படம் நிரூபித்தது. இந்த வருடம் காமராஜர் அரங்கத்தில், ‘சென்னையில் திருவையாறு’ நிகழ்ச்சியில் தான் பாடிய மரபிசை சார்ந்த திரைப்பாடல்களை மேடையில் பாடிகொண்டிருந்தார். அவர், “ஓம்கார நாதானு” என்று ஆரம்பிக்கும்பொழுது எழுந்த கரகோஷத்தை வைத்து நாம் மக்கள் இன்னும் இந்த படத்தின் பாடல்களின் மேல் வைத்திருக்கும் மரியாதையைப் புரிந்து கொள்ளலாம். மகாதேவன் இசையமைத்து எஸ்.பி.பி பாடிய ஓர் அருமையான ராகமலிகையை இப்பொழுது கேட்கலாம்.

தெலுங்குக் கவிஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்கள் சாஹித்யதிற்கு மேலும் மெருகூட்டியது, கே.விஸ்வநாத், பாபு போன்ற சிறந்த இயக்குனர்களின் பார்வையைப் புரிந்து கொண்டு அவர்கள் படங்களைத் தன் இசையால் சிறப்பித்தது, நாட்டார் இசை, மரபிசை இரண்டிலும் சிறந்த பாடல்களைத் தந்தது போன்ற காரணங்களால் கே.வி.மகாதேவன் தெலுங்கு மண்ணில் பெரிதும் கொண்டாடப்பட்டதொரு இசையமைப்பாளராகத் திகழ்ந்தார். முராரி என்ற தயாரிப்பாளர் மகாதேவனைத் தவிர வேறு யாரையும் தன் படங்களுக்கு தேர்ந்தெடுக்க மாட்டார். அன்று புகழின் உச்சியில் இருந்த இயக்குனர் ராகவேந்திர ராவ் வேறொருவரை தேர்வு செய்யலாம் என்று சொன்ன பொழுது, “படத்தை வேண்டுமானால் கை விடுவேனே தவிர மகாதேவனை விடமாட்டேன்” என்று சொல்லிவிட்டார். அவர் தயாரித்த எல்லா படங்களுமே தரமான படங்கள் என்பதை முக்கியமாகக் கூறவேண்டும். இப்படி, தெலுங்குத் திரையுலகில் தரமான படங்கள் தர நினைத்த எவரும் மகாதேவனையே நாடினர் என்பதிலிருந்து அவர் மீது அத்திரையுலகில் இருந்த மரியாதை நமக்குப் புரியும்.

நான் இங்கு கொடுத்த பாடல்கள் வெகு சிலவே. இவை அல்லாமல் இன்னும் நூற்றுக்கணக்கான மகாதேவனின் பாடல்கள் இன்று தெலுங்கு மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றன. நாம் திரையிசைப்பாடல்களைப் பார்த்தால் பல ‘ஹிட்’ பாடல்கள் காலபோக்கில் மறந்துவிடுகின்றன. அல்லது அவை ‘பழமை’ ஆகிவிடுகின்றன. புதிய தலைமுறையை அவை ஈர்ப்பதில்லை. நம் கலாசாரத்தின் ஓர் அங்கமாக மாறும் கலைப்படைப்புகள் சாகாவரம் பெறுகின்றன. கே.வி.மகாதேவனின் பல தெலுங்குப் பாடல்கள் அவர்களுடைய திருவிழாக்களின்போதும், கொண்டாட்டங்களின்போதும் திரும்பத் திரும்ப இசைக்கப்படுபவை. ஒருவிதத்தில் அந்த விழாக்களையே பாடல்கள் மூலம் நினைவு கூர்ந்துவிடமுடியுமளவுக்கு குறியீடுகளாக மாறிப்போனவை. பல நூறு ஆண்டுகளுக்குப் பின்பு மகாதேவனின் பெயர் மறந்துவிட்டிருக்கலாம். ஆனால் தெலுங்கு பேசுபவர்களின் வீடுகளில் இந்தப் பாடல்கள் ஒலித்துக்கொண்டுதான் இருக்கும். இதுவே மகாதேவனின் மிகப்பெரிய சாதனை என்று சந்தேகம் இல்லாமல் கூறலாம்.

பெங்களூரில் மென்பொருள் துறையில் பணிபுரியும் எஸ்.சுரேஷ், மரபிசையிலும், இந்தியத் திரையிசையிலும் தணியாத ஆர்வம் கொண்டவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி எனப் பல இந்திய மொழிகளின் முக்கியமான திரையிசைப் பாடல்களையும் அறிந்திருக்கிறார். அவற்றைக் குறித்தும், மரபிசைக்கலைஞர்கள் குறித்தும் எஸ்.சுரேஷ் எழுதும் பதிவுகளை http://sureshs65music.blogspot.com/ என்ற தளத்தில் படிக்கலாம்.