இந்திய இசையில் முதல் சிம்பொனி?

mast3

கடந்த வியாழக்கிழமை (ஜுலை 1, 2010) மாலை, லண்டன் செளத்பேங்க் (Southbank) கலைக்கூடத்தில் ராயல் ஃபெஸ்டிவல் அரங்கில் (Royal Festival Hall) நடைபெற்ற பண்டிட் ரவிஷங்கரின் சிம்பொனி அரங்கேற்றத்தை உலகம் முழுவதுமுள்ள இசை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்தனர். இந்திய ராகங்களை அடிப்படையாகக் கொண்ட சிம்பொனியைக் கேட்கும் அனுபவத்துக்காக பல காலமாகவே ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். மூன்று கான்சர்ட்டோக்களின் (Concerto) வழியாக இந்திய இசையை மேற்கிசை வடிவத்தில் முன்னரே பொருத்திப் பார்த்திருந்தாலும், சிம்பொனி என்பது இந்திய கலைஞர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரு பெரும் கனவாகவே இருந்திருக்கிறது. இளையராஜா லண்டன் ஃபில்ஹார்மொனிக் குழுவினரோடு சேர்ந்து ஒரு சிம்பொனியை உருவாக்கினார். ஆனால் ஏதோ குழப்பங்களால் இன்றுவரை வெளியிடப்படாமலே இருக்கிறது. அதனால் முதன்முதலில் ஓர் இந்தியக் கலைஞரிடமிருந்து வெளிவரும் சிம்பொனி ரவிஷங்கருடையது என்ற அடிப்படை எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது.

லண்டன் ஃபில்ஹார்மோனிக் குழுவினர் மேடையில் வீற்றிருக்க, அரங்கமே மெளனமாக இசை மேதைக்காகக் காத்துக்கொண்டிருந்தது. தன் பத்தாவது வயதில் அண்ணன் உதய் ஷங்கரின் ஆடல் குழுவுடன் மேடையேறத் தொடங்கிய ரவிஷங்கரின் சிதார் ஒலிக்காத இசை மேடைகளே உலகில் இல்லை. பாரீஸ் சாம்ஸ் எலீஸின் லிடோ (Lido) அரங்கம் முதல் ஜப்பானின் புதிய ஃபில்ஹார்மானிக் வரை புதிய இசையுடன் உறவு கொள்ளத் துடிக்கும் காதலனாகவே தொண்ணூறாவது வயதிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 1960களில் ஒரு ராக் ஸ்டாருக்கு இணையாக மதிக்கப்பட்ட ரவிஷங்கரை பெனாரஸிலிருந்து வெள்ளை மாளிகை, இங்கிலாந்து ராணியின் இல்லம் வரை இந்திய இசை அழைத்துச் சென்றுள்ளது.

01sld2பிரெஞ்சு திரைப்பட இயக்குனர் ழான் ரென்வா (Jean Renoir), கென்னடி ஃபோர்ட், பீட்டில்ஸ் குழுவினர், ஜார்ஜ் ஹாரிசன்(George Harrison), ஜான் கோல்ட்ரான் (John Coltrane), எல்.சுப்ரமணியம், லதா மங்கேஷ்கர், சுபின் மேத்தா, ஜாகிர் ஹுசைன், ஹரி பிரசாத் செளராஸியா, சத்யஜித் ரே, ரிச்சர்ட் அட்டன்பரோ (Richard Attenborough), பீட்டர் செல்லர்ஸ்(Peter Sellers), ஜிமி ஹெண்டெரிக்ஸ் (Jimi Hendrix) என இவரை குருவாகக் கொண்ட உலக கலை மேதைகளின் பட்டியலை மட்டுமே சில மெகாபைட்டுகள் நிரப்ப முடியும். குறிப்பாக ஜார்ஜ் ஹாரிசன், ஜான் கோல்ட்ரான், பிலிப் கிளாஸ் (Philip Glass), எஹுதி மெனுஹின் (Yehudi Menuhin) போன்ற இசை மேதைகள் ரவிஷங்கரின் இசையிலிருந்து பல இந்திய இசைக் கூறுகளை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்கள்.

மேற்கூறிய அனைத்தும் வேறு ஒருவருக்கான பின்னணியோ என சந்தேகப்படுமளவுக்குப் பத்து வயது சிறுவனுடன் கைகோர்த்தபடி குழந்தையின் குதூகலத்துடன் அந்த அரங்கத்தில் ஆரவாரித்துக்கொண்டிருக்கும் ரசிகர்களை மகிழ்வுடன் ரவிஷங்கர் பார்வையிட்டார். ஒரு பத்து நிமிட கரகோஷத்துக்குப் பிறகு அரங்கின் சலசலப்பு அடங்க, மேடையிலிருந்து இறங்கித் தன் மனைவி சுகன்யாவுடன் ரசிகர்களை வணங்கி முதல் வரிசையில் அமர்ந்தார்.

ரவிஷங்கருக்கு இரு கொண்டாட்டங்களுக்கான தருணம் இது. சிம்பொனி இசை உலகில் முதல் காலடி எடுத்து வைக்கும் இந்திய இசைக் குழந்தை பற்றிய சுகமான அவஸ்தை ஒரு புறம். தன் பெருமையையும், ஹிந்துஸ்தானி இசையின் மரபையும் தொடரும் தன் மகள் அனுஷ்கா ஷங்கரின் கையால் ஒலிக்கப்போகும் முதல் சிம்பொனி என்ற வகையில் தந்தையின் பூரிப்பு மற்றொரு புறம்.

அவருடன் சேர்ந்து சொகுசாக இருக்கையில் சாய்ந்து இசையைக் கேட்கத் தொடங்குமுன் சிம்பொனி பற்றி ஓரிரு வார்த்தைகள் நாம் பார்த்துவிடலாம்.

தஞ்சை சர்போஜி மன்னரின் அரசவைக்கலைஞரான வடிவேலுவைத் தொடர்ந்து சி.வி.ராமனின் தம்பி சி.சுப்பிரமணி ஐயர் என சிலர் நம் கர்நாடக பாணி இசையை மேற்கிசை வடிவங்களுடன் ஒத்திசைக்க முயன்றாலும் பல காரணங்களால் அவை ஆரம்பநிலைப் பரிசோதனைகள் என்ற நிலையைத் தாண்டவில்லை. உலகப் போர்களுக்குப் பின் வாழ்வின் ஒவ்வொரு நிமிட சுகங்களையும் பொக்கிஷமாகச் சேர்க்கத் தொடங்கிய மேற்கு நாடுகள், கண்களுடன் செவிகளையும் திறந்து மற்ற உலகங்களை கவனிக்கத் தொடங்கியது. தகவல் தொடர்பு மின்னல் வேகத்தில் முன்னேறியதால் பல மூலைகளில் தங்களுக்குள் குழுமியிருந்த குழுக்கள் வெளிச்சத்துக்கு வரத்தொடங்கின. இதனால், பல காலமாக இந்திய இசையின் பெருமை தெரிந்தாலும், அவ்வஸ்துவையும் தொட்டுப் பார்க்கலாமா புரியுமா என சந்தேகம் ஒரு பக்கம், இந்திய இசை தரும் மயக்கம் மறுபக்கம் என பலர் மெல்ல அருகே வரத்துவங்கினர்.

எட்டிப்பார்பவர்களை உள்ளிழுக்கும் காந்தமாக இந்திய இசை இருந்தாலும், மொழித்தடையால் அதன் நுணுக்கங்களை விளக்கும் கலைஞர்கள் குறைவாகவே இருந்தனர். சிறுவயதிலே பாரீஸ், அமெரிக்கா என பல நாடுகளுக்கு தன் அண்ணனின் குழுவோடு பயணம் செய்திருந்ததால் ரவி ஷங்கருக்கு மொழித்தடையில்லை. ஒரு கலாசார பிரதிநதியாக இந்திய இசையை,குறிப்பாக ஹிந்துஸ்தானி இசை வடிவத்தை மேற்கு நாடுகளுக்கு அறிமுகப்படுத்தத் தொடங்கினார்.

அதுவரை இந்திய இசை என்றாலே இனச்சார்புடைய இசை (Ethnomusic) என பிரித்து பார்த்தவர்கள், உலக இசையின் தாயாக இந்திய மற்றும் ஆப்பிரிக்க (ஸ்டீவ் ரீச்- Steve Reich எனும் கலைஞரால்) இசை வகைகளைக் குறிப்பிடத் தொடங்கினர். பண்டிட் ரவிஷங்கர், உஸ்தாத் அல்லா ராக்கா கான், உஸ்தாத் ஜாகிர் ஹுஸேன் போன்ற கலைஞர்களால் நம் இசையின் பாரம்பரியமும் (Melodies and Rhythms ஆல்பம்), இசை நுணுக்கமும் (West Meets East, East Greets East ஆல்பம்) வெளியே தெரியத் தொடங்கின. அதே சமயம் எல்லா `உலகலாவிய` கலைஞர்கள் போல, பீட்டில்ஸ், ராக் அண்ட் ரோல் குழு அடையாளமான ஹிப்பி கலாசாரத்துக்கு ரவி மாறிவிட்டார் என்ற அவப்பெயரும் இந்தியாவில் உருவானது. இந்திய இசை முறையை பின்பற்றினாலும் மாற்றாந்தாய்ப் பிள்ளையாக இந்தியாவில் பலர் ரவிஷங்கரை மதித்தனர்! ஆனால் இன்று இப்போக்கு மாறியுள்ளது.

லண்டன் ஃபில்ஹார்மானிக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் டேவிட் மர்ஃபி (David Murphy) ரவிஷங்கரையும், குழுவின் முதன்மைக்கலைஞர்களையும் (Lead artists)அறிமுகப்படுத்தி நிகழ்ச்சியைத் தொடங்கினார். கடந்த பத்து மாதங்களாக பிலிப் கிளாஸ், டேவிட் மர்ஃபி போன்ற கலைஞர்களுடன் கலந்தாலோசித்து ரவிஷங்கர் இக்குழந்தையைப் பெற்றிருக்கிறார். மேடையேறத் தயாரானதும் இதற்கு பண்டிட் ரவிஷங்கரின் சிம்பொனி ஒன்று (Symphony 1) எனப் பெயரிட்டார். இச்சிம்பொனி சங்கம இசை (Fusion) முயற்சி அல்ல.முழுவதும் இந்திய இசையை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. வடிவம் மட்டும் மேற்கத்திய சிம்பொனியை கொண்டுள்ளது.

ரவிஷங்கரின் சிம்பொனியை வாசிக்கும் அனுஷ்கா சங்கர்
ரவிஷங்கரின் சிம்பொனியை வாசிக்கும் அனுஷ்கா சங்கர்

இதுவரை மூன்று கான்சர்ட்டோக்கள், பல புதிய ராகங்கள், மேற்கிசையுடன் சேர்ந்து பயணிக்கும் இந்திய சங்கம இசை வடிவங்கள் என பல உருக்கமான காற்றோவியங்களை வரைந்திருக்கிறார். ஆனாலும், அன்றைய நிகழ்ச்சி சிம்பொனி இசையின் சவால்களை சந்திக்கத் தவறியது என்று குறிப்பிடலாம்.

பல இசை வடிவங்களைக் கடந்து நிற்கும்படியாக சிம்பொனி இசையின் சவால்கள் என்னென்ன?

சிறுகதை ஆசிரியன் நாவல் எழுத முயற்சிக்கும்போது சந்திக்கும் தடைகளுடன் இதை ஒப்பிடலாம். மற்ற இசை வடிவங்களை விட சிம்பொனிக்கு விரிவான மற்றும் ஆழமான படைப்புத் திறமை தேவை. இசைக்கோவைகள் எழுதுவதால் மட்டும் சிம்பொனி படைத்துவிட முடியாது. பல கருவிகளைப் பற்றிய அறிவு, அவற்றில் உண்டாகும் ஒலி அமைப்புகள், வாத்தியக்கருவிகள் ஒன்றாக ஒலிக்கும்போது உண்டாகும் ஒத்திசைவு, அரங்கின் ஒலிக்கட்டுப்பாடு (Hall acoustics) என பல்துறை பற்றிய விரிவான அறிவு அவசியமாகிறது. இது தொழில்நுட்பம் சார்ந்த சவால்.

அடுத்த சவால் சிம்பொனியின் கட்டமைப்பில் உள்ளது. காவியம் , நாடகம் போன்றவற்றில் நிகழும் கடலலை போன்ற ஏற்ற இறக்கங்கள், உணர்ச்சி குவியும் நாடக தருணங்கள் சிம்பொனியிலும் உண்டு. பொதுவாக சிம்பொனி இசைக்கருவிகள் மட்டுமே கொண்டு இசைக்கப்படும். ஓபரா (இசை நாடகம்) போல் பாடகர்கள் கிடையாது.அதனால் இசை நுட்பங்கள் வழியே மையக் கருவின் உணர்வுகளை வெளிக்கொண்டு வரவேண்டும். கதாபாத்திரங்களின் உணர்வுகளை மோதவிடும் நாடகம் போல, வாத்தியக்கருவியின் இசை பல தளங்களில் ஒன்றோடு ஒன்று மோதி விரிவடைந்துகொண்டே இருக்கும். ரசிகர்களையும் மிகு உணர்ச்சியின் உச்சகட்டம் வரை கொண்டு சென்றபின், மையச் சிக்கல் சமன்பட்டு பேரமைதிக்கு படிப்படியாக திரும்பும்.

சிம்பொனி வடிவம் தரும் சவால் காந்த சக்தி போன்றது. கலைஞர்களை ஈர்ப்பதும் விலக்குவதும் இவ்வடிவமே. கர்நாடக சங்கீத முறைகள் போல் கறாரான இசை வடிவம் சிம்பொனியில் இருந்ததில்லை. கடந்த 150 ஆண்டுகளாக பல இசைக்கலைஞர்கள் சிம்பொனி இசைவடிவத்தை வளர்த்துள்ளனர். சுதந்திரமான வடிவங்களில் பலவித சாத்தியங்களை தன்னுள் அடக்கியபடி மேற்கிசையில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை சிம்பொனி பிடித்துள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் பீத்தோவன்,ஹைடன் (Joseph Haydn),ராபர்ட் ஷூமன் (Robert Schumann), ரிச்சர்ட் ஸ்ட்ராஸ் (Richard Strauss) போன்ற இசை மேதைகளால் கண்டெடுக்கப்பட்ட சிம்பொனி ஓபரா வடிவின் உச்சகட்டத்தில் பிறந்த குழந்தை. ஓபரா எனும் இசை நாடகத்திலிருந்து பிறந்த இசைக் காவியம். சிம்பொனியின் வடிவம் தரும் சவால் இன்றளவும் திறமையான கலைஞர்களை அதன் பால் ஈர்த்துக்கொண்டிருக்கிறது.அதனாலேயே இன்று எந்த மேற்கிசை மேடைகளிலும் சிம்பொனி இல்லாமல் இசை நிகழ்ச்சி நடப்பதில்லை.

ஃபில்ஹார்மொனிக் சிம்பொனியிலிருந்து ஒரு காட்சி
ஃபில்ஹார்மொனிக் சிம்பொனியிலிருந்து ஒரு காட்சி

மற்ற இசை வடிவங்களான கன்சர்ட்டோ (Concerto) , சொனாட்டா (Sonata) போன்ற வடிவங்களைத் தாண்டி சிம்பொனிக்கு கிடைத்த வரவேற்புக்குக் காரணம் என்ன?

பலதரப்பட்ட வாத்தியக்கருவிகளைக் கொண்ட சிம்பொனியில் தனித்துவம் பெற்ற கருவியென எதுவும் கிடையாது. கன்சர்ட்டோ வகையில் ஒரு குழுவுக்கு முன்னணியாக ஒரு வாத்தியக்கருவி ஒலிக்கும். இதனாலேயே கன்சர்ட்டோ இசைக்கோவைகளை வயலினுக்கான கன்சர்ட்டோ, சிதாருக்கான கன்சர்ட்டோ என முதன்மை வாத்தியக்கருவியை மையமாகக் கொண்டு வகைப்படுத்துவர்.

பல இசைக் கருவிகள் கூட்டாக ஒலிப்பதால், சிம்பொனி குழுவின் அளவு இசைக்கலைஞரின் கற்பனைக்கும் இசைக்கோவையின் தேவைக்கும் கட்டுப்பட்டது. அதேசமயம் கரைபுரண்டோடும் கற்பனையைக் கொண்டே சிம்பொனியை எழுத முடியும். எழுநூறுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களால் அமைந்த மாஹ்லரின எட்டாவது சிம்பொனி, நான்கு பேர் கொண்ட குழுவைக் கொண்டு அமைந்த பிலிப் கிளாஸின் இரண்டாவது சிம்பொனி – என குழு அளவில் பலமாதிரிகள் உண்டு. சிம்பொனியின் இந்த சுதந்திரத்தால் இசையமைப்பாளர்கள் விரிவான கருவையும் , பல வாத்தியக்கருவிகளையும் தேர்ந்தெடுக்கிறார்கள்.

சிம்பொனியின் கட்டமைப்பை எப்படி புரிந்து கொள்வது?

ஒரு வீடு கட்டத் தேவைப்படும் வடிவமைப்பைக்கொண்டு எப்படி ஒரு நகரத்தை உருவாக்க முடியாதோ அதேபோல் ஒரு பாடல் அல்லது கான்சர்ட்டோவின் கருவைக்கொண்டு சிம்பொனியை உருவாக்க முடியாது. சிம்பொனியின் இயல்பு விரிவாகச் சொல்வது. பன்முக உணர்வுகளை தன்னுள் கொண்ட மாபெரும் கட்டமைப்பு. அக்கட்டமைப்பின் தூண்களை இசை அலங்காரங்கள் தாங்கிப் பிடிக்கின்றன. எந்தெந்த கருவிகள் எந்தெந்த நேரங்களில் ஒலிக்க வேண்டுமென்ற அனுமதிச் சீட்டு இசையமைப்பாளரிடம் உள்ளது.மேற்கிசை அடிப்படையில் ஒத்திசைவை (Harmony) அடிப்படையாகக் கொண்டது. பல வாத்தியக்கருவிகள் ஒன்றாக இசைக்கும்போது அமையும் சுமூகங்களும், முரண்களும் அதன் அடிப்படை. சில கருவிகள் மேல் சுருதியில் இசைக்கும்போது, சில கீழ் சுருதியில் ஒலிக்கும். இவ்விரு ஒலிகளின் தாளம், ஒலியளவு வேறுபடலாம்.

பொதுவாக சிம்பொனி நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கும். அவற்றை Movement என்றழைப்பர். கடந்த நூற்றாண்டில் இது மூன்று பகுதிகளாக சுருங்கியது. ‘துரிதம், நிதானம், மித வேகம், துரிதம்’ (fast – slow (lyrical) – moderate speed – fast) என்ற எளிமையான சூத்திரத்தில் சிம்பொனியின் பகுதிகளை பகுக்க முடியும். இப்பகுதிகளை ஒரு பொதுவான கரு இணைத்திருக்கும். மேம்போக்கான ஒற்றை கோண நிகழ்வு சிம்பொனியின் கருவாக அமைய முடியாது. பல உணர்வுகளை பிரதிபலிக்கும் கரு நான்கு பகுதிகளில் தகுந்த ஏற்ற இறக்கங்களுடன் நிகழ்வதால் ரசிகர்களின் கவனத்தை கவரும் ஆரம்பம், சிக்கல், சுமூகமான முடிவு என ஒரு திரைக்கதை போல அமைந்திருக்கும்.

பண்டிட் ரவிஷங்கரின் சிம்பொனி, மரபார்ந்த சிம்பொனி பாணியில் நான்கு பகுதிகளைக் கொண்டது. நான்கு விதமான ராகங்களைக் கொண்டு இப்பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதல் பகுதி – `காஃபி ஜிலா` எனும் ராகத்தை அடிப்படையாகக் கொண்ட அமைப்பு. சிம்பொனியின் விதிமுறைப்படி முதல் பகுதியில் இசையின் கரு அறிமுகமாகி விரிவடையத் தொடங்கும். ஒரு குறிப்பிட்ட இசைக்கோவை பல வேகங்களில், தாள பேதங்களால் பல முறை ஒலிக்கும். இப்படி மீண்டும் மீண்டும் ஒலிக்கும் துண்டுகள் மையக்கருவை வலியுறுத்தியபடி மற்ற பகுதிகளிலும் ஒலிக்கும். இப்படிப்பட்ட அமைப்பு முதல் பகுதியில் நிகழவில்லை. இதனாலேயே பகுதிகளுக்கு இடையே பொது சரடு என எந்த ஒலித்துண்டும் அமையவில்லை. மேலும், வயலின்கள் ராக அடிப்படையில் ஒன்றாக ஒலித்தாலும், அனுஷ்காவின் சிதார் முதல் பகுதி முழுவதும் தனித்தே ஒலித்துக்கொண்டிருந்தது. ஒபோ,ரீட்,செல்லோ போன்ற கருவிகளின் ஒலிகளால் சிதாரின் இசை தெளிவாக வெளிப்படவில்லை.

இரண்டாவது பகுதி – `ஆஹிர் பைரவி` ராகத்தில் அமைந்திருக்கிறது. மெதுவாகப் பயணிக்கும் இப்பகுதி ஹிந்துஸ்தானி இசையின் ஆலாபனை முறையில் அமைந்திருக்கிறது. அனுஷ்காவின் சிதார் முதன்மையாக இருந்தாலும், கூடவே ஒலித்த புல்லாங்குழல் அதிகாலையில் ஒலிக்கும் மங்கல இசை போல் கணீரெனக் கேட்கிறது. ரவிஷங்கரின் வாழ்க்கைக் குறிப்பில் காசி கங்கைக்கரையில் கழித்தத் தன் சிறு வயது அனுபவங்களை விவரித்திருப்பார். நாதபிரம்மமாக ஒலிக்கும் இசையின் அடிப்படை உணர்வு இந்திய இறைப்பாடல்களில் இருக்கிறது என சிறுவயதில் இக்கரையில் உணர்ந்திருப்பதாகக் கூறியிருப்பார். ஆஹிர் பைரவி ராகத்தில் அமைந்த இப்பகுதியில் ஒலிக்கும் இசையைக் கேட்கும்போது பெருநதியைப் பார்த்து நம் அகம் விரிவடைவது போல் தோன்றுகிறது. நினைவுகளால் காலத்தைக் கடக்க வைப்பதே இசையின் நோக்கம் என்பதை மிக அழகாக உணர்த்துகிறது. ஆழமான உணர்வுகளையும், பழைய ஞாபகங்களை மீட்கும் பகுதியாகவும் இது அமைந்துள்ளது.

மூன்றாவது பகுதி – ரவிஷங்கர் அமைத்த `தோகா` எனும் ராகத்தை அடிப்படையாகக்கொண்டது. இரண்டு `க` கொண்ட ராகம். கர்நாடக சங்கீதத்தின் மேளகர்த்தா முறையில் ஒரு ராகத்தில் ஒரே ஸ்வரம் இருமுறை ஒலிக்காது. ராகத்தின் ஸ்வர வரிசையில், குறிப்பிட்ட ஒரு ஸ்வரம் ஒரு முறை மட்டுமே இடம்பெறும். ஹிந்துஸ்தானியில் இவ்விதி தளர்த்தப்பட்டுள்ளது. `தோ` கா என்ற பெயருக்கு ஏற்றார்போல இரண்டு `க` அமைந்திருக்கிறது.தோகா ராகத்தில் இரண்டாம் ஸ்வரம் இல்லை. மூன்றாம் ஸ்வரமும் ஸ்வர பேதமடைந்த நான்காம் ஸ்வரமும் ஒலிக்கிறது. இப்பகுதியில் புதுவிதமான தாள முறை கையாளப்பட்டுள்ளது. ஜப்தால் (2+3+2+3) வரிசையில் ஒவ்வொரு இசைக்கருவியும் தனித்தாளத்தில் தொடங்கும். ஒவ்வொரு கருவியும் வெவ்வேறு ஸ்வரத்தில் தொடங்கி, கணித முறைப்படி ஒத்திசையாகக் குறிப்பிட்ட நேரம் வரை ஒன்றாக ஒலிக்கும். ஒரு தொடர் விளையாட்டு போல் செல்லோ குழுவும், வயலின் குழுவும் ஏற்ற இறக்கங்களுடன் ஒலிக்க, சிதாரும் புல்லாங்குழலும் ஒத்திசைவில் ஒலிக்கின்றன. இந்நான்கு குழு இசையும் எந்த புள்ளியில் சேர்ந்து ஒலிக்கும் என்ற விளையாட்டே இப்பகுதியை இனிமையாக மாற்றுகிறது. (இது போன்ற தாள ஆராய்சிகளை இசைக்கலைஞர் `விக்கு` விநாயக்ராமின் மகன் செல்வகணேஷ் மற்றும் ஜான் மெக்லாலின் (John McLaughlin) கொன்னக்கோல் முறையில் The Gateway to Rhythm என்ற தனி ஆல்பத்தில் தொகுத்துள்ளனர்.)

நான்காவது பகுதியில் பயன்படுத்திய `பஞ்சாரா` ராகம் ரவிஷங்கர் அமைத்த ராகமாகும். நாட்டுப்புற இசை வடிவமாக இப்பகுதி அமைந்துள்ளது. பஞ்சாரா இன மக்களின் அன்றாட வாழ்வில் பிறப்பு, இறப்பு நிகழ்வுகளை உணர்த்தும் இசைக்கோவை. நீண்ட நேரம் ஒலிக்கும் சிதார் ஆலாபனை தனியாகக் கேட்க இனிமையாக இருந்தாலும், மற்ற வாத்திய கருவிகளின் ஒலியுடன் சேராமல் தனித்தனியே ஒட்டவைத்தது போல் இருக்கிறது. மற்ற மூன்று பகுதிகளை விட, இப்பகுதியின் கரு சிதார் இசையில் நன்றாக வெளிப்பட்டுள்ளது.

தனித்தனியாகக் கேட்கும்போது மெய்மறக்கச் செய்யும் பகுதிகளாக இருந்தாலும், ஒரு சிம்பொனிக்குத் தேவையான விரிவான கட்டமைப்பு இல்லாததால் இப்பகுதிகளை ஒரு குடையின் கீழ் இணைக்க முடியவில்லை. நான்கு தனிப்பாடல்களாக ருசிப்பதால் கன்சர்ட்டோ பாணியாக மட்டுமே இதை வகைப்படுத்த முடியும்.

மேற்கிசை கிளாஸிகல் வரலாற்றில் சிம்பொனி ஒரு கலைஞனின் பெருங்கனவிலிருந்தே பிறந்திருக்கிறது. பீத்தோவனின் ஐந்தாவது சிம்பொனி, மாஹ்லரின் எட்டாவது சிம்பொனி, ஷூமன்னின் நான்காவது, பிலிப் கிளாஸின் இரண்டாவது என சிம்பொனியின் கட்டமைப்பு மிகவும் விரிவானது,ஆழமானது. ஒவ்வொரு இசைக்கருவியின் தனியிசையும் இச்சட்டகத்தின் அடிப்படைகளாக அமைந்தாலும், சிம்பொனியின் கருவே இவற்றுக்கான அச்சாணி. இப்படிப்பட்ட விரிவான இசையும் அந்தந்த நாட்டின் நாட்டார் இசை முறைகளையும், கருவையும் அடிப்படையாகக் கொண்டே பல சிம்பொனிகள் எழுதப்படுகின்றன.

முன்னர் ரவிஷங்கர் இதுபோன்ற விரிவான கருவைக்கொண்ட இசையைத் தந்திருக்கிறார். Melodies and Rhythms ஆல்பம் ஹிந்துஸ்தானி இசை வரலாற்றை விவரிக்கிறது. தொன்மத்திலிருந்து தொடங்கும்விதமான கரு. மக்களின் கனவாக வழிவழியாக காலந்தோறும் வழிந்தோடி இன்று இருக்கும் அமைப்பாக மாறியிருப்பதாக அதை விவரித்திருப்பார். இந்திய இசைக்கான அடிப்படைக்கூறுகளை ஆராயும் அதே சமயம், நாட்டுப்புற இசை வடிவத்திலிருந்து கிளைத்த இந்திய இசை மரபையும் ஒலித்துண்டுகளாக அமைத்திருப்பார். இப்படிப்பட்ட கட்டமைப்பு ரவிஷங்கரின் சிம்பொனியில் நமக்குக் கிடைக்கவில்லை.

மிகப்பெரிய கனவை படைப்பாக்கிய மாஹ்லர் தன் எட்டாவது சிம்பொனியில் பிரம்மாண்டமாக அகலக்கால் வைத்தார். அபிமன்யூ போல வெளிவரத்தெரியாத திசையில் முடிவில்லாமல் திறந்தவெளியில் விரிவடைந்துகொண்டேயிருக்கும் படைப்பு அது. ஆனால்,பிற்கால சிம்பொனிகளுக்கு லட்சியத்தின் எல்லையை கற்பனைக்கெட்டா தூரத்தில் நிறுத்திய மாதிரியாக இன்று அமைந்திருக்கிறது. இப்படிப்பட்ட சவால்களை ரவிஷங்கரின் சிம்பொனி சந்திக்கவில்லை. தனிப்பாடல்கள் என்ற அளவிலேயே நின்றுவிடுகிறது.

இந்திய இசையில் ஒரு ஆலாபனையைப் பலமணி நேரங்கள் மெருகேற்ற முடியும். மலையேற்றம் போல், கேட்பவர்களை முடிவு தெரியாத உயரத்துக்குக் கொண்டுசெல்ல முடியும். அப்படிப்பட்ட விஸ்தாரமான அலங்காரத்தைக் கொண்டு பல விளையாட்டுகளை கர்நாடக/இந்துஸ்தானி கலைஞர்கள் நிகழ்த்துவார்கள். அனுபவித்துப் பாடும் அவர்களின் கனவுக்குள் ரசிகர்கள் உலாவர முடியும். புதிய தரிசனங்களை அடைய முடியும்.இப்படிப்பட்ட உணர்வுகளை இச்சிம்பொனி தரவில்லை. இந்திய ராக அமைப்பைக் கொண்டிருந்தாலும் சிம்பொனிக்குத் தேவையான விரிவாக்கம் எந்தப் பகுதியிலும் அமையாததால், ஐம்பது நிமிடங்கள் நீளும் இசை தனியாவர்தனமாக நின்றுவிடுகிறது.

ரவிஷங்கரின் ராகத்தேர்வுகளில் கடைசி இரு பகுதியில் ஒலிக்கும் அனுஷ்காவின் சிதார் மிகவும் இனிமையாக அமைந்திருக்கிறது. இப்பகுதிகள் ஹிந்துஸ்தானி இசை உணர்வுகளை இதுவரை கேட்டிராத வண்ணத்தில் ரசிகர்களுக்கு அளிக்கும் என்பது உண்மை. சிம்பொனி என்பதை மறந்து இப்பகுதிகளை கண்டிப்பாக ரசிக்க முடியும்.

இந்திய சாஸ்த்ரிய இசையில் மரபார்ந்த கிராமிய/நாட்டார் இசை மற்றும் கரு இணையும்போது விரிவான கட்டமைப்புகள் சாத்தியமாகும். அவற்றை அடிப்படை ஆயுதமாகத் தேர்ந்தெடுக்கும் கலைஞனின் சிம்பொனி கனவு நிறைவேறும். அப்படிப்பட்ட பல இசைக்கலைஞர்கள் நம்மிடையே உண்டு! அதுவரை சிம்பொனிக்காக காத்திருப்போம்.