வரலாற்றில் அடியோட்டம் தேடும் பழமலய்

கவிதையை ரசிப்பதற்கு எந்த முன்னுரையும் பீடிகையும் இருக்கக்கூடாது. எனவே இது கவிதைக்கான முன்னுரை என்பதை விட பழமலய் என்னும் ஆளுமையைப்பல கோணங்களிலிருந்தும் அணுகும் முயற்சி என்பது பொருந்தும். வெறும் கவிஞர் என்ற சட்டகத்திற்குள் பழமலய்யை அடக்கமுடியாது என்பது அவரது சில கவிதைகளைப் படித்த உடனே தெரிந்து விடும். மேலும் கவிதை என்னும் வடிவத்திற்கு பண்டிதத்தனமாகவும், சாஸ்திரீயத்தனமாகவும் கொடுக்கப்பட்ட இலக்கணங்களை அறிந்தே மீறினார் என்ற குற்றச்சாட்டும் பழமலய் மீது இருப்பதால் எந்த மோனநிலையில் தன் கவிதைகளை ‘உண்டு பண்ணினார்’ என்பது பார்க்கப்படவேண்டும். வாழ்வு முழுவதும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் எல்லா உழவுப்பின்னணிக்கவிஞர்களையும் போலவே இவரும் கிராம உறவுகள், கிராம வறுமை, இளமைக்காதல், தமிழ்த்தேசீயம், மத்தியதரக்கனவுகள் ஈடேற்றம், பேரக்குழந்தை சுகம் என்று சுற்றி வருகிறார் என்றாலும் இவற்றுக்குள் தன் பல்வேறு அடையாளங்களைத்தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கிறார். இந்தத்தேடலின் தத்தளிப்பைப் பார்க்கிறபோது இவர் தொலைத்தது அடையாளத்தையா ஆன்மாவையா என்ற சந்தேகம் வருகிறது. காலதேச வர்த்தமானத்தில் எப்போதும் நடக்கக்கூடிய சங்கதியே இது.

காலனீயக்காலத்தில் ஆப்பிரிக்காவிலிருந்து மேற்கிந்தியத் தீவுகளுக்குக்குடிபெயர்ந்த கறுப்பின மக்களிடையில் ஒரு நம்பிக்கை இருந்தது. ‘என் ஆன்மாவே! ஓர் அடிமை ஜென்மமாக இந்தப் பரதேசத்திற்கு நான் கொண்டு வரப்பட்டேன். என் சாவுக்குப் பிறகு மீண்டும் என் பூர்வ தேசமான ஆப்பிரிக்காவிற்கே நீ போய்விடு!” என்பதாக இருந்தது அந்த நம்பிக்கை. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதுகளின் வாக்கில் இது ஒரு மத நம்பிக்கையாக மாறி ஒட்டு மொத்த கறுப்பின மக்களிடையே பரவியது. இதற்கு ‘ரஸ்தாஃபேரியனிசம்’ என்று ஒரு பெயரும் கொடுத்தார்கள்.

பழமலய் கவிதைகளை மொத்தமாகப் படிக்கிறபோது இந்த அடிமை ஆப்பிரிக்க ஆன்ம உணர்வு தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. விடுதலைக்கான எந்த அறிகுறியும் இல்லாத சூழலில் இருக்கும் ஆன்மா அந்தச்சூழலையே நேசிக்க எத்தனிக்கும் முயற்சியும் எவ்வளவு முயற்சி செய்தாலும் அது சாத்தியப்படாமல் அந்த ஆன்மா அங்கலாய்த்து ஆலாய்ப் பறப்பதையும் நம்மால் பரிதாபத்தோடு பார்க்க முடிகிறது.

தமிழ்ச்சூழலில் இது அபூர்வமாகக் காணக்கிடைக்கிற ஒன்று. இதற்கு இணையாகச்சொல்ல நாம் வெகு தொலைவு பின்னுக்குச் சென்று சங்க இலக்கியப் பாடல்களைத்தான் பார்க்க வேண்டும். அங்கே தான் யார் மனதும் நோகாமல் தங்கள் மனதில் இருக்கும் ஆதங்கத்தை மிக நுட்பமாக வெளிப்படுத்தப்படக்கூடிய மனிதர்களைப்பார்க்கமுடியும். தனிப்பட்ட வாழ்க்கையில் நடப்பதாக இருந்தாலும் அந்த வாழ்க்கை நிகழ்ச்சிகள் வழியாகச் சமூக,அரசியல்,பண்பாட்டுப் பிரச்சினைகளும் தெரிய வரும். ஆண்டாள் பாடல்களிலும், கம்பன் கவிதைகளிலும் இவை காணக்கிடைக்கா. சங்ககாலத்திற்குப் பிறகு மனித வாழ்க்கைச்சம்பவங்களின் அடியாகத்தோன்றிய கவிதைகள் இந்த நீண்ட நெடிய வரலாற்றில் மிகவும் குறைவு. தென்படுபவையும் சித்தர்களுடையதைப்போல வாழ்வு மறுப்புக் கவிதைகளாக இருக்கும். (வாழ்வு மறுப்புக் கவிதைகளின் இலக்கியச் செல்வாக்கை நாம் மறுக்கவில்லை)

மிகைப்படுத்தப்படாத ஒரு வாழ்க்கை வரலாற்று நூலைப்படித்த அனுபவம் பழமலய்யின் கவிதைகளில் கிடைக்கிறது. அடகில் சிக்கிய தனது நிலத்தை மழைக்காலம் வந்தும் மீட்க முடியவில்லையே என்கிற ஒரு அசாமிய கிராமத்து உழவனின் ஆங்காரத்தை,அப்பாவித்தனத்தை ஜானு பருவா தனது திரைப்படம் ஒன்றில் காண்பித்திருப்பார். தனது மனைவி, குழந்தைகள் எல்லோரையும் விடத் தான் உழும் நிலத்தின் மீது அவனுக்கு அப்படியொரு வெறி. இது பாரம்பரியமாக வந்த வெறி. பழமலய்க்கும் வாழ்க்கை மீது அப்படி ஒரு வெறி இருக்கிறது.

தமிழ்ச்சமூகம் மற்றும் அதன் இலக்கியப்பிரிவு என்பவை இப்படியொரு மனிதனைத்தாங்கிக்கொள்ளாது. அதற்குக் காரணங்கள் உண்டு. இரண்டுமே பல சட்டைகளைப்போட்டிருக்கின்றன. சங்ககாலப் பொற்காலச்சட்டை, திராவிடச்சட்டை, பகுத்தறிவுச்சட்டை, வைதீகப்பண்பாட்டுச்சட்டை, ஐரோப்பியச்சட்டை, சோவியத் (மற்றும் க்யூபச்) சோசலிசச்சட்டை, தொழிற்சங்கச்சட்டை, தமிழ்த் தேசீயச்சட்டை, பின் காலனித்துவ, பின் நவீனத்துவ, பின் அமைப்பியல்வாதச்சட்டைகள் (என்பவற்றோடு இப்போது புதிதாகச்சேர்ந்திருக்கிற பண்பாட்டுக்கலகச்சட்டை) வரை தனித்தும் சேர்த்தும் போட்டிருக்கிற தமிழர்களுக்கிடையே பழமலய் போட்டிருப்பது மிகக்குறைந்த ஆடைகளே. வெறும் கோவணம் என்று கூடச்சொல்லலாம். நமது மூதாதையர் போட்டிருந்த அதே கோவணம்.

அந்த மூதாதையர் மொழியே பழமலய்க்குக் கைவந்திருக்கிறது. இந்த மொழி ஒரு இனக்குழு சமுதாயத்தினுடைய மொழி. அவர்கள் பண்பாட்டு மொழி. காலத் தாக்குதல்களைக் கடந்த மொழி. காலத்தாக்குதல்கள் கொண்டு வந்த சமூக,பண்பாட்டு மாற்றங்களுக்கு வளைந்து கொடுக்காத மொழி. இந்த மொழி தான் மனிதர்களைப்பிரித்து வைத்திருந்த மொழி என்பதுவும் பழமலய்க்குத்தெரியும். அதனால்தான் பிரித்து வைக்கப்பட்ட மனிதர்கள் சார்பாகப் பேசுகிறபொழுது இவரது மொழிக்குக் கவித்துவம் சேருகிறது. புறக்கணிக்கப்படுகிற வேதனைகள் இரட்டைமலை சீனிவாசன் போன்றவரின் முயற்சிகளைக் குறிப்பிட்டுச் சொல்கிறது மூலமாக வெளிப்படுகின்றன.

‘ஓடை நீரே, ஆறுகளிடம் சொல்லு.
ஆற்று நீரே, கடல்களிடம் சொல்லு.
கடலே, கடலே, முகில்களிடம் சொல்லு.
முகிலே, முகிலே, மக்களிடம் சொல்லு.
எம் மக்களிடம் சொல்லு.’

என்று தம் ஆற்றாமையையும், கையாலாகாத்தனத்தையும் வெளிப்படுத்துகின்றன. இந்த கையாலாகாத்தனம் கன்னடத்தில் சித்தலிங்கையா மூலமாகவும், மலையாளத்தில் கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் மூலமாகவும் ஆவேசக்கவிதைகளாக வெளிப்பட்டபோது அவற்றில் இசைத்தன்மை கூடக்கலந்து வந்தது. பழமலய்யின் சமீபத்திய இலக்கிய மூதாதையர் இசைத்தன்மையை உதறிவிட்டனர். இந்திய மாநிலங்களிலேயே இசை கலந்த கவிதையையும், நாடகம் என்கிற அற்புத கலை வடிவத்தையும் உதறிய மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் மாறிப்போனது. இதற்குப் பழமலய் சார்ந்திருக்கும் நடு நாடும் விதிவிலக்கல்ல.இந்த அவலகரமான மாற்றம் ஒவ்வொரு மண்டலத்திலும் ஒவ்வொரு விதமாக நிகழ்ந்தது. இது தனியாக, விரிவாக விவாதிக்கப்படவேண்டிய விஷயம்.
தொண்டை மண்டலமும், நடு நாடும் தமிழ்நாட்டின் எல்லைப்பகுதிகளாக இருந்துவிட்டபடியால் பல தாக்குதல்களை நேரடியாக எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை அவற்றுக்கு ஏற்பட்டது.இம் மண்டலங்களின் மீது தொடர்ச்சியாக ஏற்பட்ட அரசியல் தாக்குதலும், பண்பாட்டுத் தாக்குதலும் அவர்கள் இசையிலிருந்து மட்டுமா அவர்களைத்தூரப் போக்கின?அவர்களது நிலம் வழிப்பட்ட பண்பாட்டு வடிவங்களிலிருந்தும் தூரப் போக்கின. இப்பொது அங்குக் காணப்படும் தீவிரமான வைணவப்பற்றும், ஆழமான திரௌபதி வழிபாடும் எந்த அளவுக்கு அந்த மண்ணுக்குரியவை? காராளர் என்னும் உழவர் பண்பாடு அகண்ட தமிழகத்தின் இன்றியமையாத அம்சமாக இருந்ததை கல்வெட்டுகளும், நாட்டார் கலைகளும் இப்போதும் சொல்கின்றன.அதன் எல்லா நிறைகுறைகளுடனும் ஊடுபாவாக மக்கள் வாழ்வோடு எப்போதும் கலந்திருக்கும் அது இராமன் கால்பட்ட அகலிகையைப்போல சமயம் வரும்போது உயிர் பெறும். அது நீர் வழிப்பட்ட பண்பாடு. வைதீக மரபைப்போன்ற நெருப்பு வழிப்பட்டதல்ல. இந்த நீர்வழிப்பண்பாடு வளமைப்பண்பாட்டில் கால்கொண்டு தாய்த்தெய்வ வழிபாட்டை முன் நிறுத்துவது. இதுவே சக்தி வழிபாடு. ஐயனாரைக்காவல் வைத்திருக்கும் தேவதை வழிபாடும் இதுவே. அரசியல் காரணங்களால், கால நிர்ப்பந்தத்தினால் ஒரு வேளை இப்பண்பாடு பின்னுக்குத்தள்ளப்பட்டாலும் இது மக்கள் வாழ்விலிருந்து முற்றிலும் மறையாமல் இருக்கும் வல்லமை கொண்டது. காரணம் இது வாய்வழிப்பண்பாடு. தொன்மங்கள், சடங்குகள் மூலமாக உயிர்வாழ்வது. நாயக்கர் கால ஆட்சி இம்மண்டலங்களின் கலாச்சார வேர்களை அசைத்துப் பார்த்திருக்கலாம். ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கலாம். ஆனால் மறைந்து போன அதன் அம்சங்களில் ஒன்றான சக்தி வழிபாடு பங்காரு அடிகளார் மூலமாக மேலும் தீவிரத்தோடு எழுந்து வந்து அம்மக்கள் வாழ்க்கையின் பிரிக்கமுடியாத பாகமாக ஆகிவிட்டதை நாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்?

உழவர் ஆன்மீகத்தை மீட்டெடுத்த பங்காரு அடிகளாரைப்போல உழவர் அழகியலை மீட்டெடுக்கும் பொறுப்பு பழமலய்யின் தலையில் விழுந்தது. முப்படைகளும் நிறைந்திருக்கும் போர்க்களத்தில் நிராயுதபாணியாக அனுப்பப்பட்ட ஒரு குழந்தைப் போர்வீரனைப்போல இசையைத் தூரப் போட்டு விட்ட கவிதையைப் படைக்கச்சொல்லி காலம் அவரைப் பணித்தது.

திராவிடப்பண்பாடு என்ற பெயரால் நாத்திகம் போன்ற அதற்கு முற்றிலும் எதிரான அம்சங்களை ஆரவார அரசியல்வாதிகள் மக்கள் மீது திணித்ததைப் போலப் பழமலய் என்கிற கிராமத்தான்மீது அவன் தாங்கிக்கொள்ள முடியாதபடி, புரிந்து கொள்ள முடியாதபடி ஏராளமான தாக்குதல்கள் நிகழ்ந்தன. உண்மையில் இந்தத்தாக்குதல்கள் கண்ணில் காண முடியாத நோய் உயிரிகளாக (வைரசாக) தங்கவேல் படையாட்சியிடம்தான் குடிகொண்டிருந்தன. தனது முன்னோர்களிடமிருந்து அவர் சுவீகரித்துக்கொண்டவை அவை. மகனைப் படிக்க அனுப்பி எல்லா வைரசுகளையும் அவன் மீது சுமத்தி விட்டார். இந்த வைரசுகளின் பாதிப்பைத் தாண்டித்தான் நாம் பழமலய்யின் உண்மையான சொரூபத்தைப்பார்க்க வேண்டும். மறைந்து போன உழவர் பண்பாட்டின் எச்சதொச்சங்களையும் அதன் மூலம் பார்க்கலாம்.

இதன் ஒரு பகுதியை,தனது உண்மையான சொரூபத்தை, பழமலய் முதன்முதலாகக் காண்பித்தது அவரது முதல் கவிதைத்தொகுப்பான ‘சனங்களின் கதை’ தொகுப்பின் மூலமாகத்தான். வைதீகமும், அரசியலுமே கவிதையை உற்பத்தி செய்துகொண்டிருந்த காலத்தில், அந்த ஆயுதங்களின் முனை மழுங்கிய காலத்தில், இத்தொகுப்பு வெளியான காலத்தில் இத்தொகுப்பின் கவிதைக்காட்சிகள் மிரட்சி தருபவையாக இருந்தன. ஷேக்ஸ்பியரின் துன்பியல் நாடகங்களில் ஒன்றான ‘மேக்பெத்’ நாடகத்தில் அதன் நாயகன் மேக்பெத் பல கொலைகளைச்செய்து அரியணை ஏறுவான். அரியணையில் ஏறிய பிறகு அவனால் கொலை செய்யப்பட்ட ஒரு தளபதி பேங்கோவின் ஆவி வடிவம் அவன் முன் தோன்றி அவனை அலைக்கழிக்கும். மிரட்டும். இப்படியான மிரட்சியைக் கவிதை ரசிகர்கள் குறிப்பாக வைதீக அழகியலுக்கும், சோசலிச அழகியலுக்கும் மாற்றுத் தேடிக்கொண்டிருந்த ரசிகர்கள் நேரடியாக அனுபவித்தார்கள். இந்த மிரட்சியைச் சந்திரமுகியின் ஆவேச நடனம் வெளிப்படுத்திய மிரட்சியோடும் ஒப்பிடலாம். ‘மன்னனே! என் ஆசை நாயகனைக் கொன்று என் உடலை நீ பெண்டாளலாம். ஆனால் என் ஆன்மா உனக்கும் உன் அதிகாரத்திற்கும் எட்டாத பொருளடா!’ என்று அடங்காத தாகத்தோடு அலையும் அவளது ஆன்மாவின் வெறியாகவும் பார்க்கலாம். பழமலய்யின் பல மூதாதையரின் ஆங்காரமும், ஆதங்கமும் ‘சனங்களின் கதை’ மூலமாக வெளிப்பட்டிருக்க வேண்டும். ஆங்காரம் என்பது வெறும் கோபம் மட்டுமல்ல என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும்.

இந்தப் பின்னணியில் பார்க்கிறபோதுதான் பழமலய் பலவாக எழுதிய எல்லாக்கவிதைகளையும் இத்தொகுப்பில் சேர்க்க விரும்பிய பழமலய்யின் ‘பேராசை’ யை நாம் புரிந்து கொள்ள முடியும். தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் பற்றிய தகவல்களும், தான் முக்கியம் என்று கருதுகிற தனது வாழ்க்கைச்சம்பவங்களை ஒட்டிய பல விவரங்களும் கொடுத்திருப்பது வாசகன் தனது உண்மையான ‘கோலத்தை’ப் பார்க்கவேண்டும் என்பதனால்தான். இந்தக்கோலத்தைப்பார்த்த பிறகு கையில் மாலையை வைத்துக்கொண்டு ஒரு மகாகவியைத் தேடி அலைந்து கொண்டிருக்கும் தமிழ் விமர்சகர்கள் நிச்சயமாக மாலையைத் தனது கழுத்தில் ப்போடமாட்டார்கள் என்பது அவருக்குத்தெரியும். அதற்காக உழவர் வாழ்வைத்தாண்டிய தன் கவிதைப்பயணத்தின் மூலம் உழவர் பண்பாட்டின் அராஜகத்தையும் அவர் சுட்டிக்காட்டத்தவறவில்லை. ஒளிவு மறைவில்லாமல் தான் காட்ட விரும்பிய கோலத்தின் பகுதியாகவே அதை எடுத்துக்கொண்டார்.

கவிதை மட்டுமல்ல எந்தக் கலைப்படைப்பையும் அதன் பின்னணி அறிந்தவர்களே முழுமையாக ரசிக்கமுடியும். இது இயற்கை. பி.எஸ்.ராமையாவின் படைப்புகளின் மீது சி.சு.செல்லப்பா கொண்டிருந்த கண்மூடித்தனமான ஒட்டுதலுக்குக் காரணம் இருவரும் ஒரே பின்னணியைக் கொண்டவர்கள் என்பதனாலும் தானே! அப்படி ஒரு ரசிகனே பழமலய்யின் மனசில் இருப்பது. நீங்கள் அப்படி ஒரு ரசிகராக இருந்தால் (உங்கள் பின்னணி எதுவாக இருந்தாலும்) இவரது கவிதைகளைப் புரிந்து கொள்ளவும், ரசிக்கவும் முடியும்.மேலும் விளக்கமாகச்சொன்னால் தற்போதைய சட்டக வழிப்பட்ட இலக்கிய வடிவங்கள் நோக்கில் இவையெல்லாம் கவிதைகள் கிடையா. வடிவத்தில் மட்டுமல்லாமல் உள்ளடக்கத்திலும் சட்டகங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிற இக்காலகட்டத்தில் இப்படியொரு ஒரு புதிய வடிவை பழமலய் சமைத்திருக்கிறார். இந்த எல்லாக்கதைகளும் தொண்டைமண்டலம் மட்டுமல்லாமல் பிற பகுதிகளிலும் இப்போதும் நடந்து கொண்டுதானிருக்கின்றன. இவை தொடர்ந்து நடக்கவும் செய்யும் தான். இப்படியொரு தனித்தன்மையுடன் அந்தக்கதைகள் பதிவு பெறும்போது அது இலக்கியம் என்கிற எல்லையைத் தாண்டி பண்பாட்டு ஆவணம் என்கிற நிலையை அடைகிறது. எல்லா இலக்கியங்களும் பண்பாட்டு ஆவணம் என்கிற தகுதியைப்பெறுவதில்லை.(அப்படி அடையாமல் இருப்பது ஒரு குறையும் இல்லை.

உரைநடை வடிவத்தில் இப்படியொரு சோதனையைச்செய்து பார்த்தவர்கள் என்று தமிழில் மூன்று பேரைச்சொல்லலாம். மா.அரங்கநாதன் (பறளியாற்று மாந்தர்), வண்ணநிலவன் (கம்பாநதி) மற்றும் சுமதி (கல்மண்டபம்). சமூகம் சார்ந்த வாழ்க்கை மதிப்பீடுகளைப் பேணமுடியாத ஒரு தனி மனிதனின் அல்லது குடும்பத்தின் தத்தளிப்பை இவற்றில் காண்கிறோம். அச்சமூக அமைப்பிலிருந்தே விலக்கம் பெறுவது என்கிற நிலைக்குச் சென்று விடும் அளவுக்கு அத்தத்தளிப்பு அவர்களைப் பாடாய்ப்படுத்தி விடுகிறது. சமூக அடிப்படையிலான படைப்பு வெளியில் சிகரத்தைத்தொட்டவர் என்று கருதப்படும் கி.ராஜநாராயணன் கூட இந்த விஷயத்தில் பின் தங்கிப்போனார். அவரால் வரலாறு மட்டுமே தர முடிந்தது. மனித குல விசித்திரங்களை கோலம் போட்டுக்காண்பிக்க முடிந்தது.ஆனால் விலகிப்போன பழைய வாழ்க்கையின் மேன்மையையும், புரிபடாத புதிய வாழ்க்கையின் ஒவ்வாமையையும் சமமாகவே கருதுகிற அனுபவத்தை தனக்கு முடிகிற ஒரு மொழியில் கொடுக்கிறதனால் பழமலய் கவிதைகள் சட்டகத்தைத்தாண்டிப்போகின்றன. நீண்ட குழப்பத்திற்குப்பிறகு வாழ்வின் சாரத்தைப்பார்க்கும் முயற்சியே இது.

எதிர்மறையும் உடன்பாடுமான இவற்றில்
எத்துணைக்கு ஒன்ற முடிகிறது?
கருத்த பெண்ணின் சிரித்த முத்துக்களாய்க்
காணுகிறது பிறைநிலவு.
கவிழ்ந்த கண்ணாடியில்
மல்லாந்து கிடக்கிறது சிற்றெறும்பு
மலர்களை வரைகின்றன மாயத்தூரிகைகள்.
யோகம், தியானம்- என்றெல்லாம்
வருத்திக்கொள்ள வேண்டாம் நான்.
இதயக்கரையைப்புணரும்
இடைவிடாத அலைகள்.
குமிழிகள் முகிழ்த்து வெடிக்க
நடுத்தெருவில் பெய்யும் மழை
ஆனாலும்
நனைவதால் மட்டும் கரைபவை அல்ல
ஆற்றுக்கூழாங்கற்கள்
கூழாங்கல் ஒருப்போலப்பொடிவதற்கு
கூட வேண்டியிருக்கின்றன ஆண்டுகள்

இந்த ‘ஆண்டுகள்’ என்பது ஒரு பருவம். தனது முதல் தொகுப்பான ‘சனங்களின் கதை’யிலேயே இதை அடைந்தார் பழமலய். கிளியப்பட்டு ஆயி, திட்டக்குடித்தாத்தா, தையல் நாயகி, மண்ணாங்கட்டியின் அப்பா, கோதண்டன் மாமா என்பவர்கள் எல்லோரும் ஒரு சமூகத்தினுடைய பிரதிநிதிகள் என்று ஒரு மட்டத்திலிருந்து அவர்களை ‘இல்லாமைச்சமூகத்தின்’ பண்பாட்டு வெளிப்பாடுகள் என்ற மட்டத்திற்கு உயர்த்தியிருக்கிறார்.

இவர்கள் குருவிக்கும் தாகம் எடுக்கும் என்பதனால் ‘குருவித்தொட்டி’ கட்டி ‘குருவித்தண்ணி’ ஊத்தியவர்கள்.

இவர்களுக்கும் கேள்விகள் உண்டு.

–‘கல்லாய்ச் சமைந்து கடவுளாய்’ நிற்கும் ‘மலையாத்தாள்’ எந்த ஊரிலிருந்து எந்த ஊருக்குப்போனாள்? இந்த மரக்கிளையில் தொங்கிச்செத்தாளா? பச்சைக்குழந்தை ரெண்டும் பரிதவித்ததெந்த விதம்?’
–அடுப்புக்குச் சுள்ளி பொறுக்கிய ஆயி குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு ஆற்றைக்கடக்கும்போது ஏழு கன்னிமார்கள் அழைத்தார்கள் என்று சொல்லி ஆத்தோடு போனாள். அந்த கன்னிமார்களின் பேச்சு ,குழந்தையின் அழுகை, தாயின் குரல் இப்போதும் கேட்கிறதா?
— ஏன் புதிய கண்ணகிகளை இந்தக் கிராமத்துப் பெண்கள் உருவாக்கிக்கொண்டேயிருக்கிறார்கள்? ‘நானும் பத்தினி, என் தாயும் பத்தினின்னா-இந்தப்பாறையோட நான் மேலே போவணும்!…இந்தக் குகை வாய் மூடிக்கணும்!’ என்று ஏதோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு பெண் சொன்னது இப்போதும் ஏன் கேட்டுக்கொண்டிருக்கிறது?
–சமணர் படுக்கைகளில் எப்போதும் யாழிசையும்,குழலிசையும் கேட்கின்றன. படுக்கை முழுவதும் பொன்னும் மணியும் சிதறிக்கிடக்கின்றன. எதை நாம் எடுத்துக்கொண்டோம்? எதை விட்டு விட்டோம்?
–பிறப்புத்தரும் முதல் நிர்வாணத்தையும், இறப்புத்தரும் இறுதி நிர்வாணத்தையும் அவை தரும் பாடங்களையும் எதிரொலிக்கும் சமணர் குகைக்கோயில்கள் கொண்ட மலைகளின் செய்தியை இன்னும் ஏன் யாரும் காது கொடுத்துக்கேட்கவில்லை?
— இரஞ்சன்குடி மலைக்கோட்டையில்- கோட்டைச்சுவரின் சிகரத்துக்கல்லொன்றைப்பார்க்காமல் தவறவிட்டவர்கள் இழந்தது என்ன?

இப்படியாக சனங்களின் கேள்விகள் அவர்களின் மொழியிலேயே கேட்டுகொண்டிருக்கின்றன.
பழமலய்யின் புதிய கேள்விகளில் வித்தியாசம் ஒன்றுமில்லை. இந்தப்புதிய கேள்விகளின் மொழி தான் மாறிவிட்டது. காண்பதிலும், கேட்பதிலும் அறிந்தவையும்,அறிந்து கொள்ள முடியாதவையும் இருக்கின்றன. இதிலிருந்து விடுதலை இல்லை.

— கேசவனைப் ‘படாச்சி’ செருப்பால் அடித்தவர். ஆயி வெளக்குமாத்தை எடுத்தவள். இருப்பினும் ‘படாச்சி’ கேசவனுக்கு பொங்கல் இனாம் கொடுக்கிறார்? கேசவனுக்கும் ‘படாச்சி’ மீதுள்ள பிரியம் குறையவில்லை. குழந்தை இல்லாத அவர்களை ‘எடுத்து எரிப்பதாக’ வாக்குக்கொடுக்கிறான். இந்த வாக்குகளையும், ஒப்பந்தங்களையும் எப்போது தாண்டிப்போவது?

தாற்காலிகமாக பழமலய்யின் கவனத்தைக் கவரும் பல அம்சங்களை ஒதுக்கிவிட்டுப்போகும்போது இவற்றைக்கவனிக்க முடியும். கற்பனையான பகைவர்களைக்கண்டு திடீரென்று கோபம் கொள்ளும் பழமலய் அதைக்கூட கவிதை மொழியிலேயே வெளிப்படுத்துகிறார் தான்.

‘அடித்தார்கள்
உரைத்துக் குரைக்கின்றன என்று நாய்களை
அசைந்து எழுகின்றன என்று மரங்களை
சுமந்து செல்கின்றன என்று முகில்களை
விரித்துப் படிக்கின்றன என்று மலைகளை’

என்று அவர் சொல்வதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.ஆனால் இது கவிதைச்சந்தை. அதுவும் இப்போது பின் நவீனத்துவக்காலம். பண்பாட்டுக்கலகங்களை தனி வாழ்க்கையில் மட்டுமல்லாமல் இலக்கியத்திலும் கேட்கிறார்கள்.அந்த வாழ்க்கை நோக்கும், அந்த மொழிநடையும் தான் செல்வாக்கில் இருக்கின்றன. அது வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கிறது. இது இங்கே மட்டுமில்லை. உலகமெங்கிலும் தென்படுகிற சமாச்சாரம் தான். நமது வாழ்க்கையே பின்நவீனத்துவமாகத்தானே மாறிப்போயிருக்கிறது? இது பழமலய்க்குப் புரியாது. புரியாமலிருப்பதே பழமலய்யின் பலம்.

மொழி-வாழ்க்கை-இலக்கியம் என்ற மூன்றையும் ஒரே நேர்கோட்டில் தான் பார்ப்பது என்ற பிடிவாதம் மூலமாகப் பல சவால்களைப் பழமலய் முன் வைக்கிறார். இந்தச் சவால்கள் எல்லோருக்கும் புரிபடாது. இது வாசகனின் ‘உள்வாங்கும் அளவை’ப் பொறுத்தது. இந்த வாசகனுக்கு பழமலய்யின் சகபயணியாக இருக்கும் தகுதி இருக்கவேண்டும். இதற்காகப் பழமலய்யை ஓர் ஆன்மீகக்குருவாகக்கருத வேண்டியதில்லை. இந்த ‘உள்வாங்கும் தன்மை’ யைப் பொதுமைப்படுத்த முடியாது. பண்பாட்டுத்தளத்தில் இந்தப்பொதுமைப்படுத்தல் ஏடாகூடமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுப்பண்பாடு வேறு. தனிப்பண்பாடு வேறு. தனித்து நிற்கும் தகுதி உடைய பல பண்பாடுகளே பொதுப்பண்பாடாக மாறும். பழமலய் தனிப்பண்பாட்டின் பிரதிநிதி. இந்தத் தனிப்பண்பாடு இது நாள்வரை அங்கீகரிக்கப்பட்டதில்லை.

அவ்வப்போது இதற்கு ‘முச்சந்தி இலக்கியம்’ என்கிற மாதிரி பெயர் கொடுப்பார்கள். முச்சந்திக்கு வராதது எப்படி இலக்கியமாகும்? கலையாகும்? பழமலய் முதலில் தனது வாழ்க்கையையும், தனது மூதாதையர் வாழ்க்கையையும் முச்சந்திக்குக்கொண்டு வந்தார். அவரது இலக்கியம் தானாக முச்சந்திக்கு வந்தது.

எந்தக்கேள்விக்குத்தான் முச்சந்தியில் இடம் இல்லை? கிராமத்தை விட்டு வெளியே வரும் பழமலய் வேறு வகையான கேள்விகளைக் கேட்கிறார்.

‘ஏதோ ‘புதிதாய்ப்பிறப்பதா’மே!
பிறக்க முடியுமா?
பிறப்பித்துக்கொள்ள முடியுமா?
‘சாகாக்கல்வி’ கற்றுப்
போகாமலே இருப்பதா?
அலுப்பும் சலிப்பும் இல்லாத
ஆன்மாவும் காயமும்
ஆகக்கூடியவையா?

முச்சந்தியில் கடைசியாகக்கேட்கப்படும் கேள்விகள் இவை. பழமலய்யும் கேட்கிறார். ஆனால் அவரைப் பாடாய்ப்படுத்திக்கொண்டிருப்பது இத்தகைய அபூர்வமான கேள்விகளா? அல்லது இத்தொகுதி முழுவதும் விரவிக்கிடக்கும் ‘சாதாரண வாழ்க்கை’ பற்றிய கேள்விகளா? என்பது
தான் நம்முன் உள்ள கேள்வி.

( ‘காவ்யா’ வெளியீடாக வர இருக்கும் ‘பழமலய் கவிதைகள்’ தொகுப்புக்கு எழுதிய முன்னுரை)