சூன்ய விளையாட்டு

நடராஜர்/சுதந்திரம்

தவறுதான்
உன் கால்மீது நான் நிற்பது
தவறுதான்
தவிர்க்க முடியவில்லை
தவிர்க்கவும் முடியாது.
உன்னைப் போலத்தானே நானும்
என் இன்னொரு கால்மீது
எட்டுப்பேர் பிரமிட் செய்கிறார்கள்.
எனக்கு முன்னேயிருப்பவனின்
நாய் செத்த நாற்றத்தை
சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்
என் பின்னேயிருப்பவன்
என்னைச் சினையாக்கத் துடிக்கிறான்
பொறுத்துக்கொண்டிருக்கிறேன்.
என் தோள்மீதிருப்பவனின்
மடிக்கணிணி என் தலைமீதிருத்தி
பூனைக்கெத்தனை முடியென்று
பொய் கணக்கு எழுதுகிறான்.
உன்னைப் போலத்தானே நானும்
என்னால் அசையவும் முடியவில்லை
முடிந்தால் நீயும்
ஒரு ஏமாளியின் தலைமீது அல்லது
ஒரு இளிச்சவாயனின் கால்மீது
உன் இன்னொரு காலை வைத்து நிற்கப்பார்
முடியாவிட்டால், மூடிக்கொண்டிரு.

வழி

என்னை நான்
முற்றாயறிய
எனக்கொரு வழி சொல்லுங்களென்றான்

உன்னை நீ
முற்றாயறியவில்லையென
உனக்கார் சொன்னாரென்றார்

என்னை நான்
முற்றாயறிய
எனக்கொரு வழி சொல்லுங்களென்றான்

நீயென நீ நினைக்கும் நீ பெரிதென
நீயென நீ உணரும் நீ சிறிதென
உனக்கெப்படிதெரிந்ததென்றார்

என்னை நான்
முற்றாயறிய
எனக்கொரு வழி சொல்லுங்களென்றான்

உன்னை நீ
முற்றாயறிந்து
என்ன செய்யப்போகிறாயென்றார்

என்னை நான்
முற்றாயறிய
எனக்கொரு வழி சொல்லுங்களென்றான்

உன்னை நீ
முற்றாயறிய
உனக்கு நான் எப்படி வழி சொல்வது என்றார்.

சூன்ய விளையாட்டு

யோசிக்க யோசிக்க
யோசனைகள் சூன்யத்தில் முடிகின்றன
யோசிக்காமலிருக்க இருக்க
தன்னுணர்வில் சூன்யம் நிரம்புகிறது
இப்படி சூன்ய விளையாட்டு

தனக்கும்

எங்கிருந்து
எந்த வழியாக
எங்கு சென்றடைகிறதென
ஏதொரு விவரமுமில்லாரயிலில்
நிகழ்ந்ததவன் பயணம்
வர்ணம் வெளிறிய முகங்களை
வைக்கோல் நிரம்பிய உடல்களை
காணப் பிடிக்காச் சலிப்பில்
கண்களை மூடிக்கொண்டான்
ரயில் தடம்விட்டுத் தரையிறங்கி
இரு மலைகளினிடைவெளியில்
தரையற்ற தடத்தில் செல்லுமென
அசரீரி சொல்லக் கண் திறந்தவன்
பிறர்க்கு நிகழ்வது தனக்குமென்று
மறுபடியும் கண்களை மூடிக்கொண்டான்
தலைக்குள்ளிருந்த பெண்ணைத் தழுவியவாறு