ஒலி/ஒளி மயமான எதிர்காலம்

2008 ல் இந்தியாவில் விஞ்ஞானம் படிக்கும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. காதணி பற்றி பேச ஆரம்பித்தேன். மன்னிக்கவும், மின்னணு காதணி பற்றி, அதாவது MP3 கருவிகள் பற்றி பேசினோம். பலரிடம் (60%) இக்கருவிகள் இருந்தன. என்ன கேட்கிறார்கள்? ஹாரிஸ் மற்றும் யுவன் காதுகளில் தாராளமாகக் குதிக்கிறார்கள். பள்ளியை அடைந்தவுடன், Mp3 யை அவிழ்த்துவிட்டுப் பாடம் கேட்கிறார்கள். சில நாட்கள் பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்று பத்திரிகைகள், நாவல்கள் படிப்பது மற்றும் இண்டர்நெட்டில் மேய்கிறார்கள். பள்ளிக்குப் பேருந்தில் செல்லும்/திரும்பும் போது Mp3!

ஆக, MP3 கருவிகள், பொழுதுபோக்குக்கு மட்டுமே! பலரும், ஒலி வழியாகப் பல வகையில் அறிவை வளர்த்துக் கொள்ளும் வழிகளை அறியாமலே இருப்பது 21 ம் நூற்றாண்டின் சோகமான உண்மை. செவி மற்றும் விழிவழி அறிவை விரிதாக்கும் தொழில்நுட்பங்களை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம். இருவகைத் தொழில்நுட்பங்களை ஆராய்வோம் :

1) ஒலிப் புத்தகங்கள் (Audio books)
2) மின் புத்தகங்கள் (E-Books).

ஒலிப் புத்தகங்கள்

நான் சந்தித்த மாணவர்களிடம் இரண்டு பெரும் விஞ்ஞானிகளின் சுயசரிதத்தை ஒலித்தட்டு ஒன்றில் கேட்பதற்காகக் கொடுத்தேன். இம்மாணவர்கள் இப்படி ஒரு புத்தகத்தைப் பார்ப்பது (கேட்பது) இதுவே முதல் முறை. சரி, ஒலிப் புத்தகங்கள், சமீபத்தில் வந்த முன்னேற்றங்களா? ஒரு விதத்தில் ஆமாம், ஒரு விதத்தில் இல்லை. சொல்லப்போனால், இது ஒரு 50 ஆண்டு பழைய சமாச்சாரம். இன்றும் பல மேற்கத்திய நாடுகளில், பொது நூலகங்களுக்குச் சென்றால், ஒலிப்புத்தகங்கள் பல வடிவங்களில் கிடைக்கின்றன. காஸட் நாடாக்கள், மற்றும் ஒலித் தட்டுக்களாய் பல புத்தகங்களைக் கேட்டு மகிழலாம். பல ஆங்கிலக் காவியங்கள், கவிதைகள் மற்றும் சுய முன்னேற்றப் புத்தக வகைகளை ஒலிமயமாகக் கேட்கலாம்.

கேட்மான் (Caedmon, a subsidiary of Harper Collins Publishers) என்ற நியூயார்க் நிறுவனம் 1950 களில் ஆரம்பித்து பல புத்தகங்கள் மற்றும் கவிதைத் தொகுப்புகளை ஒலி வடிவாகப் பதிவு செய்யத் தொடங்கியது. இதில் ஆரம்பத்தில் பல வகைச் சிக்கல்கள். முதலில் அந்நாளைய இசைத்தட்டுக்கள் வீட்டில் கேட்பதற்கு மட்டுமே. காஸெட்டு நாடாக்கள் வந்த பிறகு, சோனி நிறுவனத்தின் வாக்மேன் கருவி வந்தபின் சற்று முன்னேற்றம். டிஸ்க்மேன் என்ற கையடக்கமான ஒலித்தட்டுக் கருவி (portable CD player) வந்த பிறகு இன்னும் கொஞ்சம் முன்னேற்றம். ஆனால், 1980 களின் வந்த கையடக்கமான கருவிகள் அநாவசியத்திறகு மின்கலங்களை (batteries) விழுங்கிப் பல முன்னோடிகளைக் கைவிடச் செய்தன.

புத்தகங்கள் அதிகம் விற்க மூன்று முக்கியமான தேவைகள் :

1) தரம் மற்றும் எளிய உபயோக முறை
2) குறைந்த விலை மற்றும்
3) சுலபமான விநியோகம்.

இவை மூன்றும் 1990 களில் இன்டர்நெட் மற்றும் MP3 ஒலிநயம் வந்தபின் நிலைமை மிகவும் மாறிவிட்டது. MP3 ஒலிக் கருவிகளின் விலை குறைந்தபின், மேலும் ஒலிப்புத்தகங்களின் நிலை மேம்பட்டுவிட்டது. MP3 ஒலி முறையில், ஒலித்தரம் நாளடைவில் குறைவதில்லை. மேலும், இன்டர்நெட் மூலம் ஒரு 100 மெகாபைட் அனுப்புவது சர்வ சாதாரணமாகப் போய்விட்டது. கடைக்குப் போய் ஒலிப்புத்தகம் வாங்கத் தேவையில்லை.

இன்று பெரும்பாலும் மேற்கத்திய ஆங்கில நாவல்கள் வழக்கமான புத்தகம் மற்றும் ஒலிப்புத்தகமாக வெளியிடப்படுகின்றன. அமேஸான் (www.amazon.com) போன்ற பெரும் இணைத்தள புத்தகசாலைகள் எல்லா வகையான புத்தகங்களையும் வெளியிடுகிறார்கள். இணைத்தளத்தில் புத்தகத்தின் ஒரு டிரெய்லர் பார்த்துவிட்டு, கிரெடிட் கார்டில் பணம் செலுத்திவிட்டுப் புத்தகத்தைத் தரவிறக்கம் (download) செய்ய உங்கள் வீட்டில் இருந்தபடியே 1 மணி நேரம் செலவழித்தால் போதும்!

கேட்மான் நிறுவனத்தின் புத்தகங்களின் தரம் மிகவும் உயர்ந்தது. புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒரு தனிக் கோப்பாக அழகாகப் பின்னணி இசையுடன் அறிமுகம் செய்கிறார்கள். ஒலிப் புத்தகங்களை ஒரு மேம்பட்ட கலையாகவே மாற்றி வருகிறார்கள். நாவலில் வரும் கதாபாத்திரங்களுக்கேற்ப குரலை மாற்றி சுவாரசியப்படுத்துகிறார்கள். மேற்கத்திய நாடுகளில் சில சமயம் வேடிக்கையான ஒரு காட்சி, ஒலிப்புத்தக உபயத்தில்: வாகன நிறுத்துமிடத்தில் நின்ற காரிலிருந்து நபர் இறங்குவதற்கு இத்தனை நேரமா? அவர் ஒலிப் புத்தகத்தில் ஆழ்ந்துவிட்டார்! கோப்பு முடிந்த பிறகுதான் இறங்குவார்!

ஓரளவிற்கு ஒலிப் புத்தகம் மற்றும் அறிக்கைகள் பரவ ஆப்பிள் நிறுவனமும் காரணம். 2004 ஆம் ஆண்டு இந்நிறுவனம் பாட்காஸ்ட் (PodCast = Programming On Demand + Broadcast) என்ற புதிய முறையை வணிக உலகத்திற்கு அறிமுகப்படுத்தினார்கள். இதன் பின்னே உள்ள சிந்தனை யாதெனில், ஒரு கேட்பாளர் அரை மணி நேரத்திற்கு மேல் எதையும் கேட்க மாட்டார். அதனால், கோப்புக்களை இன்டர்நெட் மூலம் பல பாகங்களாக வாரம் அல்லது நாள் ஒரு முறை பெற்றுக்கொள்ள வழி செய்கிறார்கள்(syndicated content). கோப்புக்களை MP3 கருவிகளில் பிடித்துவிட்டு (பிடிக்கும் நிரலுக்கு podcatcher என்று பெயர்வேறு!) பிறகு கேட்டுக் கொள்ளலாம்.

பாட்காஸ்ட் இன்று பெரிதும் வளர்ந்துவிட்டது. பல மேற்கத்திய ஒலிபரப்பாளர்கள் தங்களின் மிக சிறந்த நிகழ்ச்சிகளை பாட்காஸ்டாக வெளியிடுகிறார்கள். கனடாவை சேர்ந்த சிபிசி (CBC – Canadian Broadcasting Corporation) இதில் தலையாய நிறுவனம். அவர்களின் மிகவும் பிரசித்தி பெற்ற விஞ்ஞான நிகழ்ச்சியான Quirks and Quarksஐ உலகில் எங்கிருந்தாலும் ரசிக்கலாம். அலுவல் மற்றும் பல காரணங்களுக்காகப் பயணம் செய்வோருக்கு இந்தத் தொழில்நுட்பம் வரப்பிரசாதம். வீணாகும் நேரம் வெகுவாகக் குறைக்கப்படும்.

வளரும் நாடான இந்தியாவிற்கு இது ஒரு மிக முக்கியமான, பயனுள்ள தொழில்நுட்பம். படிப்பறிவு என்ற சொல்லுக்கே சவால் விடுகிற தொழில்நுட்பம். படிக்காதவர்களை மாற்றுவதற்கு முன் அவர்கள் கேட்காதவர்களா என்று சற்று யோசிப்போம். பார்வையற்றவர்களும் இதனால் பயனடையலாம். என் பார்வையில் இந்திய வெளியீட்டாளர்கள் இதைப் பற்றி அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. கைபேசி தொழில்நுட்பத்தை விலை குறையச் செய்த நிறுவனங்கள் இந்த வாய்ப்பைச் சரியாக பயன்படுத்த வேண்டும். ஒரு கல்கி, சுஜாதா, சிவசங்கரி மற்றும் பல திறமையான படைப்பாளர்களைப் பெருவாரியான எழுத்தறிவற்றவர்களுக்கு எடுத்துச் செல்ல இது அருமையான வாய்ப்பு. ஒலி வடிவத்தில் (கைபேசி தொழில்நுட்பத்தை போல) சில செளகரியம் – கணினி எழுத்து வடிவ(fonts) போராட்டங்கள் இல்லை. திறமையாக ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் புத்தகங்களைப் படிப்பவர்களும், தரமாக ஒலிப்பதிவு செய்பவர்களும் நம்மிடம் பலர் உள்ளனர்.

தமிழ்ப் பத்திரிக்கைகள், இலவச இணைப்பு சமாச்சாரங்களில் எத்தனை காலம் ஓட்டுவார்கள்? இணையதளத்தில் படிக்கும் முறை சில ஆண்டுகளாக வந்துள்ளது. ஏன் இவர்கள் பத்திரிகையின் சில பகுதிகளை பாட்காஸ்டாக வெளியிடக் கூடாது? பல தொடர் நாவல்கள் இப்படி அருமையாக வெளியிடலாம். இதில் வருமான பயமிருந்தால், பழைய தொடர்களை இப்படி ஏன் வெளியிடக் கூடாது? ’வயலும் வாழ்வும்’ போல அறுக்காமல் சுவையாக வெளியிட்டால் நிச்சயமாக வெற்றி பெறலாம். இதை ஒரு மாற்று வருமானமீட்டு முறையாக (alternate revenue stream) வளர்க்கலாமே?

அதற்குமுன் இக்கட்டுரையைப் படிப்பவர்கள் MP3 கருவிகள் உங்களிடம் இருந்தால், இண்டர்நெட்டில் பல பாட்காஸ்டுகள் மற்றும் ஒலிப்புத்தகங்களைத் தேடுங்கள் – கிடைக்கும். பல இணையதளங்களில் சமீபத்திய ஒலிப் புத்தகங்களை வாங்கலாம். கவிஞர் வைரமுத்து சொன்னதை சற்று மாற்றி, ‘கோதையின் அறிவு (காதல்) இன்று செவி வழி பிறந்தது’.

மின் புத்தகங்கள்

இளமைப் பருவத்தில் மிகப் பெரிய சுமை புத்தக சுமை. உயர் கல்வியில் இது பெரிதும் மாறி வருகிறது. ஒற்றைப் புத்தகத்துடன் பேருந்து படிக்கட்டுக்களின் தொங்கும் கல்லூரி மாணவர்களைப் பற்றி சொல்ல வரவில்லை. உதாரணத்திற்கு, மணிமேகலை ஸ்டான்போர்டு பல்கலைகழகத்தில் இன்று உயிர்தொழில்நுட்பம் (Bio-tech) படிக்கிறாள் என்று வைத்துக் கொள்வோம். அவள் என்ன புத்தக் மூட்டையைச் சுமந்து செல்கிறாளா? சைக்கிளில் வகுப்புக்குச் செல்லும் அவள் முதுகுப்பையை ஆராய்வோம்.

பெரிதாகச் சுமையில்லை. அதனுள் வில்லை கணினி (tablet PC) உள்ளது. அதென்ன புதிதாக வில்லை சமாச்சாரம்? மாணவர்களுக்கு மிக செளகரியமான ஒரு விந்தைத் தொழில்நுட்பம். விசைப் பலகையை (keyboard) கணினியின் திரைக்கு பின் அழகாக மறைத்து விடலாம். அது சரி, இதனால் மாணவர்களுக்கு என்ன பயன்? வட அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் ஒரு முறை உள்ளது. பாடம் நடக்கும் முன்தினம், பாடக் காட்சியளிப்பு கோப்புக்களை (Presentation files) போதிப்பாளர் பல்கலைக்கழக இணைத்தளத்தில் மேலேற்றி விடுவார். கம்பியில்லா இணைமயமான இவ்வுலகில், மாணவர்கள் காட்சியளிப்பு கோப்புக்களை தங்களது வில்லைக் கணினிக்கு தரவிறக்கம் செய்துவிடுகிறார்கள். அவர்கள் படிக்கும் பாட புத்தகமும் அவர்களது வில்லை கணினியில் இருக்கும். விரிவாளர் பாடம் நடத்தும் போது, கணினி திரையிலே எழுதுவாள் மணிமேகலை. இதில் காகித சமாச்சாரம் இல்லை. புத்தகத்தையும் பாடம் கேட்கும் போது பார்த்துக் கொள்ளலாம். தேவையானால், கணிணி மூலம் அதில் கோடிட்டுக் கொள்ளலாம் (highlight).

அதென்ன கணினியில் புத்தகம்? இது ஒரு பத்து ஆண்டுகளாக மிகவும் வளர்ந்துவிட்ட விஷயம். அடோபி (www.adobe.com) என்ற அமெரிக்க மென்பொருள் நிறுவனம், பிடிஎஃப் (PDF) என்ற நியம் வருவதற்கு காரணம். இந்த நியப்படி கோப்புகளை உருவாக்கினால் அடோபியின் படிக்கும் (Reader) மென்பொருள் (தரவிறக்கம் இலவசம்) கொண்டு படிக்கலாம். இம்முறையில் தமிழ்ப் புத்தகங்களை எளிதாகக் கணினியில் படிக்கலாம். இம்முறை கொண்டு பல மின் புத்தகங்களை கணினியில் படிக்கலாம். புதிதாக வரவிருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ’ஐபாட்’ (iPad) இத்துறையின் போட்டியை இன்னும் துரிதப்படுத்துவது நிச்சயம். இதுதான் மின் புத்தகமா? இல்லை. மின் புத்தகம் கணினியிலிருந்து மாறுபட்டது. அதாவது, நாம் மின் புத்தகம் என்று சொல்வது மின்புத்தகக் கருவியின் சுருக்கம்.

புத்தகங்கள் பல நூறு ஆண்டுகளாக இருந்து வந்துள்ளதால் அதன் தன்மைகளைப்பற்றி நாம் அதிகம் கவலைப்படுவதில்லை. புத்தகங்கள் 1) கைக்கடக்கமானவை, 2) வளைந்து கொடுக்கக் கூடியவை, 3) மற்றும் ஒற்றைப் புத்தகத்திற்கு அதிகம் கனமில்லை. புத்தகங்களைப் படிக்க ஒளி தேவை. கணினிகள் 1-ஆம் மற்றும் 3-ஆம் தன்மைகளில் முன்னேறி வந்தாலும் பல விஷயங்களில் படுத்தத்தான் செய்கின்றன. இன்றுள்ள மடிக்கணினிகள் மிஞ்சிப் போனால் 6 மணி நேரத்திற்கு ஒரு முறை மின்னேற்ற அடம் பிடிக்கின்றன. அத்துடன் கணினித் திரைகள் ஒளி வெளியனுப்பும் கருவிகள்; உள்வாங்கும் கருவிகள் அல்ல. 6 மணி நேரத்தில் நாவல்களைப் படிப்பது கொஞ்சம் கடினம்.

சில புத்தகங்களை ஒரு ஒல்லியான டைரி அளவில் ஒரு கருவியில் படிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அதுவும் ஒரு வாரத்திற்கு மின்னேற்ற அடம் பிடிக்காமல் சமர்த்தாக வேலை செய்தால்  எவ்வளவு செளகரியம்? நீண்ட ரயில் பயணத்தில்  பிடித்ததைப் பளுவாகச் சுமக்காமல் சுகமாகப் படிக்க வழி இருந்தால்? வாருங்கள் மின் புத்தக உலகத்திற்கு.

அமேஸான் நிறுவனம் முதல் ஆண்டில் 5 லட்சம் கிண்டில் (Kindle) என்ற மின் புத்தக கருவிகளை (எடை 1 கிலோ) விற்றுத் தள்ளியது. 2010 ல், 10 லட்சம் கிண்டில் விற்க திட்டம். ஒப்பிட்டுப் பார்த்தால், ஆப்பிள் நிறுவனம் அதன் முதல் ஆண்டில், 2 லட்சம் MP3 கருவியான iPod களை விற்றது. மிகவும் சூடான தொழில்நுட்பத் துறை இந்த மின் புத்தக துறை. இன்றைய நிலையில், 200 முதல் 300 டாலர் வரை விலை விற்கும் இக்கருவிகள் 2012 ல் 100 டாலர்களுக்குச் சரிந்து சிரித்தால் வியப்பில்லை. 2012 ல் இந்நாளைய கருப்பு வெள்ளைத் திரை மாறிப் பல வண்ணமாக மாற வாய்ப்புகள் இருக்கின்றன. 40 மணி நேரம் வரை மின்னேற்ற அடம் பிடிக்காமல் சமர்த்தாக வேலை செய்கிறது. கம்பியில்லா இணைமயமான இவ்வுலகில், சந்தா கட்டினால், காலை செய்தித் தாளும் கிண்டிலில். படிக்கப் படிக்க தூக்கம் வந்தால், ஒலிக் காதணியை (headphones) மாட்டிக் கொண்டால், புத்தகத்தை கேட்கவும் வசதி உண்டு. ’இங்கே திரும்புடா சண்டாளா’ என்று GPS-ல் திட்டுவாளே, அதே வாசக-பேச்சுத் (text to speech) தொழில்நுட்பத்தை இதிலும் கொண்டு வந்துவிட்டார்கள். கிண்டிலில் ஒரு 200 புத்தகங்கள் அடக்கம். கம்பியில்லா இணைய உத்திகளால், பல ப்ளாக்குகளையும்(blogs) படிக்கலாம். கிண்டிலின் வெற்றிக்கு காரணம், குழப்பமான கணினி இணத்தல் தேவையில்லை. இந்த கருவியிலிருந்தே புத்தகங்களின் முன்னோடிகளை படித்து, வாங்கலாம். இதனால் மேலை நாட்டுப் பாட்டி தாத்தாக்களும் சுலபமாக வாங்கி உபயோகிக்க முடிகிறது.

சரி, மின் புத்தகம் சரேலென வந்த தொழில்நுட்பமா? இதன் ஆரம்பம், 1970 களில் ஜெராக்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சியில் தற்செயலாக நிகழ்ந்தது. நிக் ஷெரிடன் என்பவரால் புதிய கணினித் திரை முறைகளை ஆராயும் போது கைரிகான் என்ற நுட்பத்தை கண்டுபிடிக்கப் பட்டது; சில வணிகக் காட்சி முறைகளுக்கு உபயோகப்படுத்தப்பட்டு பிறகு கைவிடப்பட்டது. 1990 களில் MIT பாஸ்ட்னிலிருந்து வெளியேறி, ஜோசஃப் ஜேகப்ஸ்ன் என்பவர் E.Ink என்ற நிறுவனத்தை தொடங்கினார்.

ஜோசஃப்பின் ஆராய்ச்சி, electrophoretic display என்ற தொழில்நுட்பம். இது ஒரு நுண்ணிய கொழாயடி சமாச்சாரம். ஒரு சராசரி தலைமுடியின் அளவில் (40 மைக்ரோ மீட்டர்) ஒரு காப்ஸியூலில் ஒரு விசேஷ எண்ணையில் டைடேனியம் டையக்சைட் என்ற வெள்ளை சமாச்சாரத்தை மிதக்க விடுகிறார்கள். இந்த சின்னஞ்கிறு காப்ஸியூலில் எல்க்டிரானிக்ஸ் கொண்டு தேவைப்பட்ட இடங்களை கருப்பாக மாற்ற முடிகிறது. இதை இங்கு விளக்குவதற்குக் காரணம் உள்ளது. ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு இதை செய்ய வேண்டும்? இப்படி எல்க்டிரானிக்ஸ் கொண்டு ஒரு புத்தகத்தின் ஒரு பக்கத்தை திரையில் வரைந்து விட்டால், அதன் பின் அடுத்த பக்கம் திருப்பும் வரை மின்சாரம் தேவையில்லை.. இதனாலேயே மின் புத்தகங்கள் சமர்த்தாக 40 மணி நேரத்திற்கு மின்னேற்ற (recharging) கோரிக்கையைk கைவிட முடிகிறது.

அமேஸான், சோனி, மற்றும் பலர் E.Ink நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை உபயோகித்து பல மின் புத்தகங்களைச் சந்தைக்கு கொண்டு வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

இந்தத் தொழில்நுட்பத்தால் என்ன நிகழவிருக்கின்றன என்பது குறித்துப் பல கருத்துக்கள் நிலவுகின்றன. கணினி ஆசாமிகள் எல்லாம் தெரிந்தவர்கள் போல வருங்காலத்தை வருணிக்க முயல்வார்கள். பிறகு எசகு பிசகாக ஆகிவிட்டால், ‘ங’ என்று முழிப்பார்கள் (சாதாரண மனிதர்கள் ‘ஞ’ என்றுதான் முழிப்பார்கள்!). இவர்கள் ஜோஸியத்தில் வருடங்கள் சற்று தள்ளிப் போக வாய்ப்பு உண்டு. ஆனால் அவர்கள் சொல்லும் போக்கு (trends) அதிகம் மாறுவதில்லை. சில வருங்கால முன்னேற்றங்களைப் பார்ப்போம்.

பல புதிய ஆராய்ச்சிகள் இன்னும் 2 வருடங்களில் (2012) வண்ண மின் புத்தகங்களைச் சாத்தியமாக்கும். பயணக்குறிப்புகள், மற்றும் வரைபடங்கள்(maps), ஜிபிஎஸ் இன்னும் 1 வருடத்தில் (2011) சாத்தியம். இன்னும் இரண்டு வருடங்களில் (2012) வளையும் மின் புத்தகங்கள் வர வாய்ப்புள்ளது. பல மொழிப் புத்தக ஆற்றலை மின் புத்தகங்கள் இன்னும் 1 ஆண்டில் பெற்றுவிடும்.

புத்தகங்களை தவிர பல மிக வினோத உபயோக முயற்சிகள் ஆராயப்பட்டு வருகின்றன. உதாரணத்திற்கு, மருந்துப் பெட்டி ஒன்றைத் திறந்தால் அதில் பல்வேறு மொழிகளில் மருந்தை உபயோகிக்கும் முறையை தயாரிப்பாளர்கள் அச்சடிக்கிறார்கள். இன்னும் 5 வருடங்களில், மருந்து பெட்டியின் ஒரு பகுதியை அழுத்தினால், தமிழ் மட்டுமே தெரியும். கையடக்கத் தொலைபேசிகள் தயாரிப்பவர்கள் இந்தத் தொழில்நுட்பத்தைப் பெரிதும் உபயோகப் படுத்துவார்கள் என்று உறுதியாக சொல்லலாம். ஏனென்றால், மின்னேற்ற பிரச்சனை இவர்களுக்கு பெரிய விஷயம். சுருக்கமாகச் சொல்லப் போனால், இந்தத் தொழில்நுட்பத்தின் உபயோகங்கள் முழுவதும் புரிந்து கொள்ளப்படவில்லை.

படிப்பதற்குச் சுமையை ஒரு காரணமாக்க இனிமேல் வாய்ப்பிருக்காது. கேட்டோ அல்லது பல புத்தகங்களைச் சுலபமாக படிக்கும் ஒலி/ஒளி எதிர்காலம் மிகவும் நம்பிக்கையூட்டுகிறது.