இறந்த குழந்தைகள் (கேனெட்டிக்கு பிறகு)
— ஜார்ஜ் சிர்டெஷ்
அவர்களுக்கிடையே ஏறத்தாழ சுத்தமாக ஒன்றுமே இல்லை. மனிதக்குரங்கு
தன் மரித்த குட்டியை பேணுகிறது ஏதோ உயிருடன் உள்ளது போல்,
அதன் அசைவற்ற மென்மயிர் உருவை மிருதுவாக கவனமாய் ஏந்துகிறது;
கீழே விட மறுக்கிறது. உடனடிக் கடமை அதுவே; கட்டாயம் ஆற்ற வேண்டும்.
அது கண்கள், வாய், மூக்கு
மற்றும் காதுகளை பரிசோதிக்கிறது, குட்டிக்கு
முலை கொடுக்க முயல்கிறது. அதை பராமரிக்கிறது.
கிள்ளி அகற்றி சுத்திகரிக்க பார்க்கிறது. ஒரு வாரம் போல் கழிய
முலையூட்டுவதை நிறுத்தும் ஆனால் அதன் உடலில் வந்தமரும்
பூச்சிகளை வீசி அடிக்கும் மேலும்
அதன் சுகாதாரம் மீது ஆழமான ஆர்வம் காட்டும். முடிவில்
அதை கீழே வைக்க ஆரம்பிக்கும், அதை விட்டு விட கற்கும்.
அது சுருங்கி காய ஆரம்பிக்கும் மேலும் பயங்கரமாக நாறத் துவங்கும்.
உறுப்புகள் ஒவ்வொன்றாய் உதிர்வது வரை
அவ்வப்போது அது தோலில் கடிக்கும். சிறிதுசிறிதாக
அது அழுகும். தோல் கூட சுருங்க ஆரம்பிக்கும்.
கடைசியில் தன் மனதின் பின்னணியில் அது புரிந்து கொள்ளும்.
அது மென்மயிர் பொருட்களுடன் விளையாடும். ஒரு நுட்பமான
சுதாரிப்பு உள்ளது. மரித்தவரின் பாத்திரங்களை திருப்பு.
கடந்த காலத்துக்கு திரும்பு. மறத்தல் நல்லது.
உன் சின்னங்சிறு கட்டிலில் திரும்பத் திரும்ப புரளு
உன் மனதின் பின்பகுதி புரிந்து கொள்ளும் வரையில்.
வெளியே
— ஜார்ஜ் சிர்டெஷ்
நீ நிறையவே மறக்கிறாய். நினைவு உதிர்ந்து போகும்,
அதன் பிசாசு உறுப்பு தொடர்ந்து ஆட.
பலகையை சுத்தமாய் அழி ஒவ்வொரு முறையும்,
நேற்று என்பதே இல்லாதது போல் அழுத்தித் தேய்.
தனது உள்ளார்ந்த தொந்தரவு செய்யும் வாசனைகளுடன்
உன் அம்மா நகர்ந்து செல்கிறாள். நீ தரைக்கு குறுக்கே ஓடி,
உன் பளு பற்றி தெரிந்திருக்க, அவளது அவளது மடியில் ஒளிகிறாய்.
வெளியே கொலைத் தண்டனைகள், பொது-அரங்கு விசாரணைகள்.
அரசுக் குழுமத்தின் நடவடிக்கைகளுக்கு கதவு திறந்து கொள்ளும்.
உன்னால் கொடுக்க முடிந்ததை விட
அதிகம் வேண்டும் கூட்டங்கள் தெருக்களில் உள்ளன.
அங்கு ஒரு பள்ளிக்கூடம் உள்ளது. அங்கு ஒரு குச்சி
மற்றும் கெரட் உள்ளன. டிராக் சூட் அணிந்த ஒரு சிறுவன்
தன் கழுத்துப் பட்டை வெட்டுக்குள் அழுது சளி வடிக்கிறான்
மேலும் சற்று சீக்காய் உணர்கிறான்,
அதே நேரத்தில், இதனிடையே, காலம் மறந்து விட்ட நிலம்
பிரம்மாண்ட பூக்களாய் மலர்கிறது,
ஒரு வெக்கையான கோடை பிற்பகலில் பேருந்தில்
நீ கடந்து செல்லும் பெரும் வயல்கள், கனிந்த பொழுதுகள்
போப்பிப் பூக்கள், சோளம் மற்றும் கருநீல செர்ரிகளாக சிவப்பேறும் வாசம்,
லண்டன் புற நகர் ஒன்றில் ஒரு டஜன்
எந்திரப்புல்வெட்டிகளின் ஓசை, கடந்து போன மேய்ச்சல்வெளிகள்,
சுத்தமாக துடைத்து, திருப்பி எழுதப்பட்டு,
எண்களோ பெயரோ அற்ற வயல்கள்,
உனக்கு ஒருக்காலும் தெரிந்திராத ஒரு அந்நிய இடம் போல,
உன்னால் சரிவர நினைவுற முடியாத அந்த சதை வாசனை.
ஒரு புயலுக்குப் பின்
— ஏமி லவல்
நீ பனிக்கட்டி மரங்களுக்கு கீழ் நடக்கிறாய்.
நீ செல்வதை அலங்கரிக்க
அவை தள்ளாடி, விரிசலிட்டு
தங்களை அபாரமாய் வளைக்கின்றன.
உனக்கு முன்
அவற்றை வண்ணத்துக்குள் சுண்டுகிறான் வெண்சூரியன்.
அவை நீலம்,
மேலும் மங்கலான ஊதா
மேலும் மரகதப் பச்சை.
அவை மஞ்சள்-பழுப்பு,
ஒளிர்பச்சை,
மேலும் கோமேதகம்.
அவை வெள்ளியால் பின்னப்பட்டு சுடரும்.
திடுக்கிட்டதால் நிச்சலனமாகி,
கொத்தாகி, சிம்புகளாகி, பன்னிறம் பெறும்.
நீ பனிக்கட்டி மரங்களுக்குக் கீழ் நடக்கிறாய்
பளீர்பனி நீ நடக்க கிறீச்சிடும்.
என் நாய்கள் உன் மேல் தாவி குதிக்கும்,
அவற்றின் குரைப்பு காற்றைத் தாக்கும்
உலோகம் மேல் கூரிய சுத்தியல் அறைதல்களாய்.
நீ பனிக்கட்டி மரங்களுக்குக் கீழ் நடக்கிறாய்
ஆனால் நீ பனிக்கட்டி பூக்களை விட அதிகம் ஜொலிக்கிறாய்
எனக்கு நாய்களின் குரைப்பு உன் அமைதியை விட
ஒன்றும் சத்தமாயில்லை.
நீ பனிக்கட்டி மரங்களுக்குக் கீழ் நடக்கிறாய்
காலை பத்து மணிக்கு.
ஏமி லவல் (1874-1925)
ஏமி லவல் இருபதாம் நூற்றாண்டின் முக்கிய அமெரிக்க படிமக் கவிஞர். எஸ்ரா பவுண்டுடன் இணைந்து ஒரு புரவலராகவும் எழுத்தாளராகவும் படிம இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றவர். லவல் ஓரினச்சேர்க்கையாளர். ஆடா டிவைர் ரசல் எனும் நடிகையுடனான உறவு இவரது “Pictures of the Floating World” தொகுப்பில் உள்ள பிரபலமான காமக் கவிதைகளுக்கு தூண்டுதலாக அமைந்தது. லவல் குள்ளமானவர். சுரப்பிக் கோளாறால் வாழ் நாளெல்லாம் மிகப்பருமனாக தோற்றமளித்தார். கவிஞர் விட்டர் பைனர் மற்றும் எஸ்ரா பவுண்ட் இவரை காண்டாமிருகக் கவிஞர் என்று அழைத்தது இலக்கிய வரலாற்றின் மிக குரூரமான கேலி என்று கருதப்படுகிறது. லவல் தனிப்பட்ட உரையாடல்களில் பெண்ணியவாதத்தை மறுத்தவர். இறந்த ஒரு வருடத்தில் இவருக்கு புலிட்சர் விருது “What’s O’Clock” என்ற தொகுப்புக்காக அறிவிக்கப்பட்டது.