kamagra paypal


முகப்பு » இலக்கிய விமர்சனம், இலக்கியம், சிறுகதை

வர்ணனையின் ரசவாதம்

அ.முத்துலிங்கத்தின் புனைவுகள் தம் நடையில் ஒருவிதமான கவர்ச்சியைக் கொண்டிருக்கிறது. அது முதன்முதலாக தன் வாழ்வில் ஒரு புனைவை வாசிப்பவரையும் சரி, இதுவரைத் தமிழில் வெளியான அத்தனை புனைவுகளை வாசித்தவரையும் சரி ஒரே நேரத்தில் கவரக்கூடியதாக இருக்கிறது. குழந்தைத்தனத்தின் குதூகலம், வாலிபத்தின் வனப்பு, முதுமையின் கனிவு, துறவின் அமைதி என்று அனைத்தையும் கலந்த ஒருவிதமான கவர்ச்சி அது.

எளிமையான சொற்களின் நடுவே இன்ன இடத்தில்தான் அந்தக் கவர்ச்சி இருக்கிறது என்று குறிப்பிட்டுச் சொல்லிவிட முடியாத மாயம் அது. அந்த மாயக்கலவையின் ஒரு தனிமத்தையாவது கண்டறிய முயன்றதில் ஒன்று சிக்கிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். அது அவர் வர்ணனைகள்!

புனைவு வாசிப்பில் நாட்டமில்லாதவர்களில் பலரும், புனைவின் ஒரு முக்கியமான அம்சமான வர்ணனைகளின் ஒவ்வாமையினால் ஒதுங்கிவிட்டதாகச் சொல்வதுண்டு. எனக்கே அதில் சொந்த அனுபவமும் உண்டு. ஆனால் முத்துலிங்கம் தடைக்கற்களையே படிக்கற்களாக ஆக்குகிறார். ஒரு வர்ணனையை அவரால் அழகியல் தன்மையோடும், கதைக்கான அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாகவும் ஒரே நேரத்தில் வைக்கமுடிகிறது. எளிமையாகத் தோன்றும் இவரது வர்ணனைகளை வாசித்துவிட்டு சாதாரணமாக அடுத்த வரிக்குப்போவது ஒருபோதும் எனக்கு நிகழவில்லை. அந்த காட்சிக்குள் முழுமையாகச் சென்று மீண்டபிறகே நகரமுடிந்திருக்கிறது.

அந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதே இக்கட்டுரை.

தகவல்களை வர்ணனைகளில் நுழைக்கும் உத்தி பழசுதான் என்றாலும் முத்துலிங்கத்தின் கைவண்ணத்தில் அது ஒரு புதிய சாத்தியத்துடன்கூடிய பொலிவை அடைகிறது. ‘அமெரிக்காவில் ஜனாதிபதி ஐஸன்ஹோவர் தனது இரண்டாவது தவணை ஆட்சியைத் தொடங்கி நாலு மாதங்கள் ஆகிவிட்டன. அவனுடைய நாட்டு ஜனாதிபதி மகசெசெ விமான விபத்தில் இறந்துபோய் இரண்டு வாரம் ஆகிறது. பின்னாளில் உலகப் பிரபலமாகப்போகும் ஒசாமா பின்லேடன் பிறந்து ஒருமாதம் ஆகியிருந்தது. இது ஒன்றும் அவனுக்குத் தெரியாது’ [குதிரைக்காரன்] என்பது ஓர் உதாரணம். இந்த வர்ணனை, கதையில் மார்ட்டின் என்பவனின் நாட்டையும், கதை நடக்கும் காலத்தையும், அவனுக்கு உலக விஷயங்கள் தெரியாது என்பதையும் சுவாரஸ்யமாகச் சுட்டுவது மட்டுமல்லாமல், வரலாறு தவிர்க்கமுடியாத மூன்று ஆளுமைகளையும் வாசகருக்கு நினைவில் மீட்டிச்செல்கிறது.

ஒரு பெண்ணின் நிறத்தைக் குறிப்பிட வருகையில், ‘சற்று அதிகமாகப் பால் கலந்த தேநீர் கலர்’ [ஆச்சரியம்] என்கிறார். ஒவ்வொரு நாளும் நாம் பார்த்துப் பழகிய விஷயங்களிலிருந்தே இவருடைய புதுமையான வர்ணனைகள் எழுகின்றன. ‘அவளுக்கு வெடித்து அழுகை வந்தது. கார் கண்ணாடித் துடைப்பான்போல இரண்டு கைகளாலும் மாறி மாறி கன்னத்தை துடைத்தாள். அப்படியும் நிற்காமல் கண்ணீர் பெருகி வழிந்து கன்னத்தை நனைத்தது’ [புதுப் பெண்சாதி] என்ற வர்ணனையில் ஒரு நுணுக்கம் இருக்கிறது. அவளின் அழுகை, கதையின் அந்த இடத்தில், கணவன் காட்டிய அன்பின் நெகிழ்ச்சியால் வருவது. அக்கண்ணீருக்குப் பின்னால் பொங்கிக்கொண்டிருக்கும் சந்தோஷத்தைப் பெரிதாக வெளியே காட்டிவிடவேண்டும் என்ற ஆசையே ‘கார் கண்ணாடித் துடைப்பான்போல’ துடைத்துக்கொண்டு அவளை அழச்செய்கிறது. நவீனத் தொழில்நுட்பம் ஒன்றை வர்ணனையில் கொண்டுவந்து அதை ஓர் உளவியல் வெளிப்பாட்டுடன் இணைத்துவிடுகிறார். இயந்திரங்கள், செடிகொடிகள், விலங்குகள், மனிதர்கள் என்று அனைத்தின் அசைவுகளையும் ஒன்றுடனொன்று பிணைத்துப் பார்க்கும் ஒரு மனம்தான் இத்தகைய வரிகளை எழுத இயலும்.

‘ஏதாவது கேள்விகேட்டால் சாரா அதை முதலில் தலைக்குள் உள்வாங்கி, பரிசுச்சீட்டு குலுக்குவதுபோலத் தலையைக் குலுக்கி, பின்பு பதில் இறுப்பதுதான் வழக்கம்’ [புளிக்கவைத்த அப்பம்] என்பது சாரா என்ற பாத்திரத்தின் குணாதிசயம். உரையாடலின்போது பேச்சிலோ, உடல்மொழியிலோ அடுத்தவரைத் தவறியும் காயப்படுத்திவிடக்கூடாது என்ற அதீத அக்கறை கொண்டிருப்பதே இவ்வாறு தலை குலுக்குபவர்களின் பொதுத்தன்மை என்பது என் அவதானிப்பு. இந்தகுணம் கொண்ட அமெரிக்க, ஐரோப்பியர்கள் சிலரை நானும் சந்தித்ததுண்டு. இப்பின்னணி, அந்த வர்ணனைக்குப் பிறகான சாராவின் சொற்களை எனக்கு முப்பரிமாணத்தில் துலங்கவைத்தன. ‘சிறுமியின் தகப்பனார் பக்கத்தில் நின்றாலும் தெரியாது. பேசினாலும் கேட்காது. சாப்பாட்டு நேரம் வந்தபோது அவர்தான் அழைத்தார். அவர் அரைவாசி பேசிய பின்னர்தான் அவர் வாய் அசைந்ததைக் கண்டுபிடித்தார்கள்’ [குற்றம் கழிக்க வேண்டும்] என்று மூன்றே சொற்றொடர்களில் ஒரு ஆளின் சுபாவத்தை மிக நெருங்கி அறியச்செய்துவிடுகிறார்.

காதல் ஒருவரை முற்றாக ஆட்கொள்ளும் தருணங்கள் அழகும் உக்கிரமும் கலந்து வெவ்வேறு கோணங்களில் வந்து விழுகின்றன. ‘கண்களை எடுக்க முடியாமல் அவளையே பார்த்தான். திடீரென்று ஒரு சுவாசப்பையை நிரப்புவதற்குத் தேவையான காற்றுகூட அறையில் இல்லாமல் போனது’ [பாரம்] என்ற வரியில் நாம் அடையும் அனுபவம் அவ்வாறனதே. ‘காசை எறிந்து எறிந்து ஏந்திக்கொண்டே முட்டை வாங்க கடைக்குள் நுழைந்தேன்’ [மெய்க்காப்பாளன்] என்ற காட்சியில் அவனுடைய விளையாட்டுத்தனம் பளிச்சிடுகிறது. அடுத்த நொடியில், சற்றுத்தொலைவில் நிற்கும் அவளின் அழகு அவனுடைய விளையாட்டுத்தனத்தில் இருந்து என்றென்றைக்குமாக அவனை விடுவித்துவிடுகிறது. கணநேரத்தில் நிகழ்ந்துவிட்ட அந்த மாற்றத்தைக் கதை பூடகமாகவே சொல்கிறது. அப்படி அவனை மாற்றிவிட்ட அந்த அழகுக்குக் காரணம் அவளது முத்துப்பற்களோ, மீன்விழியோ, கனியுதடோ, அன்ன நடையோ மற்ற மரபான, தேய்ந்துபோன நளினங்களோ அல்ல. முத்துலிங்கம் இப்படி எழுதுகிறார்; ‘அவளுடைய கழுத்துக்கும் என்னுடைய இருதயத்துக்கும் ஒருவிதமான தொடர்பு ஏற்பட்டது. அவளது கழுத்து நீண்டு தலை உயரும் ஒவ்வொருமுறையும் என் இருதயம் ஒரு துடிப்பைத் தவறவிட்டது’.

எண்பதுகளில் நான் சிறுவனாக ஒரு குக்கிராமத்தில் வசித்தபோது எங்களுக்கு சைக்கிள் டயர் ஓட்டுவது, வைக்கோல்போர் ஏறுவது, பனங்காய் வண்டி ஓட்டுவது, தண்ணீர்தண்டு பறிப்பது போன்ற பலவிதமான விளையாட்டுக்கள் இருந்தன. அவற்றில் ஒன்று நோட்டீஸ் பொறுக்குவது. அரசியல் கூட்டங்கள், கோயில் திருவிழாக்கள், சினிமா வெளியீடுகள் என்று பலவற்றுக்கும் ஆட்டோ அல்லது காரில் வந்து ஒலிபெருக்கியில் விளம்பரம் செய்துகொண்டே நோட்டீஸ் போடுவார்கள். அவற்றை யார் அதிகம் சேகரிக்கிறார்கள் என்பதில் கடும் போட்டி நிலவும். கிளம்பும் வாகனம் அடுத்த தெருவில் நிற்கும் என்பதால் பின்னால் கூட்டமாகத் துரத்திக்கொண்டே ஓடுவதும் உண்டு. இது பல பத்தாண்டுகளாக கிராமங்களில் இருந்துவந்த விளையாட்டுத்தான். முற்காலத்தின் மாட்டு வண்டிகள் பின்னர் ஆட்டோக்களாக ஆகியதுதான் முன்னேற்றம். முத்துலிங்கம் அக்காட்சியை ‘அப்படி ஓடும்போது விளம்பரத்துண்டுகளை அள்ளி வீசுவார்கள். வாழ்நாள் முழுக்க இந்த ஒரு தருணத்துக்காகவே காத்திருந்ததுபோல் நானும் தம்பியும் பாய்ந்து புழுதியில் விழுந்து புரண்டு அந்த துண்டுகளைப் பொறுக்குவோம்’ [ஜகதலப்ரதாபன்] என்ற ஒரே வாக்கியத்தில் நோட்டீஸ் பொறுக்குவதை அதன் மொத்த வேகத்துடன் பதிவுசெய்திருக்கிறார்.

‘அப்பொழுது நான் மிகச் சின்னவன். ஒரு வாழைப்பழத்தை முழுதாகக் கடிக்கத் தெரியாது. பக்கவாட்டில் கடித்து உண்ணத்தான் தெரியும்’ [எங்கள் வீட்டு நீதிவான்], ‘வாழ்க்கையில் அதுவரைக்கும் அவன் கட்டியது விளையாட்டுக் கடிகாரம்தான். முதலில் நேரத்தைப் பார்த்துவிட்டு பின்னர் முள்ளைத் திருப்பிவைக்கவேண்டும்’ [தீர்வு] என்பன போன்ற சிறுவயதுக்கே உண்டான சில செய்கைகளை வர்ணனையாக ஆக்குவதிலும் இவரது எழுத்துக்கள் தனிச்சிறப்பானவை.

கல்வி தருவதாக வாக்களித்து, நாடுவிட்டு நாடு அழைத்து வந்து, உறவுக்காரச் சிறுமியைத் தன் வீட்டுவேலைக்கு அமர்த்திக்கொள்கிறார் அந்த அம்மாள். வேலையின்போது நடக்கும் சிற்சிறு தவறுகளுக்கும் வசவுகளும் அறைகளும் சிறுமிக்குக் கிடைக்கின்றன. பல்லாண்டுகள் கழித்து, அவள் இன்னும் சிறுமியாக இல்லாத ஒருநாளில் அவளுக்குத் திருப்பித்தாக்கும் தருணம் வாய்க்கிறது. ‘கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு அவரை நேருக்கு நேர் பார்த்து ‘அதற்கு என்ன இப்போ?’ என்று கேட்டேன். அவர் அப்படியே நின்றார். முகத்தில் முதல் தடவையாக ஒருவித அச்சத்தைக் கண்டேன். புகைப்படம் எடுக்க மெதுவாக பின்னுக்கு நகர்வதுபோல நகர்ந்தார்’ [ஐந்து கால் மனிதன்] என்று அந்தக்காட்சியை எழுத்தில் வடிக்கிறார். இவர் வர்ணனைகளின் மூலப்பொருட்களாக எளிமையான ஆனால் நாம் எளிதாகத் தவறவிட்டுவிடும் நிகழ்வுகளே இருக்கின்றன. இத்தனை முறை பார்த்தும் இப்படி நமக்குத் தோன்றவில்லையே என்று வாசகரிடம் ஒரு ஏக்கத்தை அவை இயல்பாக ஏற்படுத்துகின்றன.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தமிழில் வர்ணிக்கப்பட்டுவிட்ட பெண்களின் மார்புகளுக்குக்கூட இவர் ஒரு பரவசமான வர்ணனையை அளிக்கிறார், ‘சின்ன உருண்டையான மார்புகள் என்றாலும் விசையானவை’ [22 வயது] என்று. விசை என்ற சொல்லை யாரும் இப்படியொரு இடத்தில் பொருத்திப் பார்த்திருப்பார்களா? ஒருவேளை அங்குதான் இவரது வர்ணனைகளின் சூட்சுமம் இருக்கிறதோ? அதே கதையில், ‘தாயினுடைய சப்பாத்தை அணிந்து டக்குடக்கென்று நடக்கும் சிறுமியின் நடைபோல அவளுடைய ஆங்கிலம் கனமானதாக இருந்தது’ என்கிறார். அந்த வர்ணனையில் மொழியை ‘எடை’போடும் ஒரு புது அழகு பயின்றுவருகிறது.

இவரது வர்ணனைகளில் மெல்லிய கேலி, கிண்டல்கள் விரவி இருக்கின்றன. ‘எழுத்தை எழுதிவிட்டு அதைக்கொடியில் காயப்போடுவதுதான் சமஸ்கிருதம் என்று கனகசுந்தரி கேலியாகச் சொல்வாள்’ [கனகசுந்தரி] என்பது ஓர் எடுத்துக்காட்டு. வெறும் கேலியாக மட்டும் இல்லாமல், ‘இலங்கை தேசியகீதத்தை நானும் சாவித்திரியும் சேர்ந்து பாடுவதாகத் திட்டமிட்டு ‘மன்மத ராசா மன்மத ராசா’ என்று முதல் இரண்டு வரிகளைப்பாடினோம். நிறைய அகதிகளை ஏற்றுமதி செய்யும் ஒரு நாட்டின் தேசியகீதத்தைப் போலவே அது ஒலித்தது. ஒருவருமே கண்டுபிடிக்கவில்லை ஆனால் கைதட்டினார்கள்’ [மூளையால் யோசி] என்று ஒரு கசப்பான உண்மையைக் கேலியாக வெளிப்படுத்தும் அம்சமும் அதில் இருக்கிறது..

தகவல்கள், சுபாவம், காதல், மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, கிளர்ச்சி, கேலி போன்றவற்றை வெளிக்காட்டுவதில்தான் இவருடைய வர்ணனைகள் சிறக்கின்றன என்று சொல்லிவிட இயலாது. ‘ஒரு மரக்கொப்பு முறிந்ததுபோல நடுவிலே முறிந்துபோய்க் கிடந்தவளைப் பார்க்க முடியவில்லை’ [எல்லாம் வெல்லும்] என்ற வர்ணனையில் கோரமான ஈழப்போர்க்காட்சி வாசகரைப் பதறவைக்கக்கூடியது.

அ.முத்துலிங்கத்தின் உரைநடை, எளிமையும் புதுமையும் ஆழமும் சரியான விகிதத்தில் கலக்கப்பட்ட கவர்ச்சியான வர்ணனைகளைக்கொண்டு சமைக்கப்பட்டுள்ளது. இன்னும் நாலு வரி வர்ணனைகள் எழுதமாட்டாரா என்று வாசகரை ஏங்கவைப்பதால் அது முழுமையாக வெற்றியடைந்திருக்கிறது.

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.