kamagra paypal


முகப்பு » இலக்கிய விமர்சனம், இலக்கியம், சிறுகதை

முத்துலிங்கத்தின் நாட்குறிப்புக்கள்

தனது சொந்த வாழ்க்கை, அல்லது தான் கண்டு கேட்டு அறிந்த பிறரது வாழ்க்கை இவற்றின் தெறிப்புக்கள் சற்றேனும் கலவாத முழுமையான புனைவுகள் என்பவை மிக அரிதானவையே.; எனினும் ஒட்டு மொத்தப் பொது மானுடவாழ்வின் சிறுதுளிகள் பல கலந்த புனைவிலக்கியங்களை  ஒரு குறிப்பிட்ட வாழ்க்கையின் வரலாற்று ஆவணமாக முழுமையாக ஏற்பதற்கில்லை.அவை புனைவுகள் மட்டுமே

உலக இலக்கியப்பரப்பின் பல்வேறு காலகட்டங்களிலும் தனி மனித வாழ்க்கைப் பதிவுகள் பிறரால் சரிதங்களாகவும், தன் வரலாறாகவும் நாட்குறிப்புக்களாகவும் கடிதங்களாகவும் நினைவுக்குறிப்புக்களாகவும் எழுதப்பட்டு வந்திருக்கின்றன. மகாத்மாவின் சத்திய சோதனையும்,,உ வே சாவின் என்சரித்திரமும், ஆனந்தரங்கம்பிள்ளையின் நாட்குறிப்புக்களும், ,தஸ்தயெவ்ஸ்கியின் மனைவி அன்னாவின் நினைவுக்குறிப்புக்களும் இல்லாமல் போயிருந்தால் குறிப்பிட்ட அந்த ஆளுமைகளின் பன்முக இயல்புகள், அவர்கள் எதிர்ப்பட நேர்ந்த சிக்கல்கள், அவர்கள் வாழ்ந்த காலகட்டம் சார்ந்த சமூகத்தின் பண்பாடு அரசியல் ஆகியவை குறித்த வெவ்வேறான பின்புலங்கள் ஆகியவற்றை அறிய முடியாமலே போயிருக்கும்.

தன் வரலாற்றையும் தான் அறிந்த வேறொருவரது வரலாற்றையும்  புனைவுப்பாணியில் நாவலாக்கித் தரும் போக்கும் சமகாலத் தமிழ் இலக்கியத்தில் செல்வாக்குப்பெற்று வருகிறது. அந்த வரிசையில் குறிப்பிடத்தக்க ஓர் இடத்தைப்பெற்றிருப்பது திரு அ முத்துலிங்கம் அவர்களின் ’உண்மை கலந்த நாட்குறிப்புக்கள்.’.. பாமாவின் ’கருக்கு; ’ராஜ் கௌதமனின் ‘சிலுவை ராஜ் சரித்திரம்’,கே ஏ குணசேகரனின் ;வடு;, , சிவகாமியின் ;உண்மைக்கு முன்னும் பின்னும்’, தேனி சீருடையானின் ‘நிறங்களின் உலகில்’, முத்து மீனாளின் ‘முள்’ போன்றவை நாவல் போக்கில் எழுதப்பட்ட தன் வரலாற்றுப் பதிவுகளில் சில. நாட்குறிப்புப் பாணியில் தன் வரலாற்றைப் புனைவாகத் தந்திருப்பதில் முத்துலிங்கம் அவர்களே  முன்னோடியாக நிற்கிறார். ’உண்மை கலந்த’ என்னும் நூலின் முன்னொட்டே இது ஒரு தன் வரலாறு என்னும் நம்பகத் தன்மையை ஏற்படுத்தி விடுகிறது. ’உண்மையோடு பின்னிப் பிணைந்திருக்கும் அந்த நாட்குறிப்புக்களைத் தான் கையாண்டிருக்கும் உத்திகளாலும் நுட்பங்களாலும் செழுமைப்படுத்திப் புனைவு இலக்கியமாக  அளித்திருக்கிறார் முத்துலிங்கம்.

நூலின் உட்பிரிவுகள் அனைத்தும்  நாட்குறிப்புப் பதிவுகளாக  எழுதப்பட்டிருப்பதால் இதைத் தன் வரலாற்று நாவல் என்று சொல்வதைக்காட்டிலும் ஒரே இழையில் தொடுக்கப்பட்ட பல்வேறு சிறுகதைகளின் தொகுப்பாக அமைந்திருக்கும் தன்வரலாற்றுப் புனைவு என்று கூறுவதே பொருத்தமானதாகத் தோன்றுகிறது. இந்நூலின் சில பகுதிகள் தனி ஆக்கங்களாகவும் வெளிவந்திருக்கின்றன என்பதை சுட்டும் பின்னட்டைக்குறிப்பும் இக்கருத்துக்கு வலுச் சேர்க்கிறது. நாவலுக்கே உரித்தான காரண காரியத் தொடர்ச்சி, நேர்கோட்டு அல்லது அ-நேர்கோட்டு வரிசை முறையிலான சம்பவத் தொடுப்புக்கள் என எதுவும் அற்றதாய் , துண்டு துண்டாய் அமைந்திருக்கும் எந்தத் தலைப்பை முதலில் படித்தாலும் சுவாரசியமான சிறுகதை ஒன்றைப் படிப்பது போல நிறைவு தருவதாய் – அதே வேளையில் ’கொலாஜ்’ போன்ற அந்தத் துண்டுகளின் வழி ஒரு முழுமையான வாழ்க்கைச் சித்திரத்தைக் கண்டடைய முடியும் வகையிலும் அமைந்திருப்பதால்  சிறுகதைப்பாணியிலான தன் வரலாறு என்று இந்நூலை மதிப்பிடலாம். துணுக்குகளாய்த் தரப்படும் நிகழ்வுகளைப் பிணைத்திருக்கும் சரடுகள் நூலின் ஆசிரியரும் அவரது சுற்றமும் நட்பும் அவர் கண்டும் கேட்டும் பழகிய மனிதர்களும் அவரது சொந்த வாழ்க்கை குறித்த நினைவுகளுமே.

பிள்ளைப்பருவத்தில் யாழ்ப்பாணத்திலிருக்கும் நல்லூர்க்கோயிலுக்குக் குதூகல மனநிலையில் கூட்டமாகச் செல்கிறது குடும்பம். திருவிழா நெரிசலில் வளையல் வாங்கச்சென்ற அம்மா எங்கோ காணாமல் போய் விடுகிறார். மூன்று குழந்தைகள் கூட்ட நெருக்கடியில் இறந்த செய்தி ஒரு புறம் வெளியாக……தன் குழந்தைகளைத் தேடித் தாயும், தாயைத் தேடி அந்தக் குடும்பமும் தவிக்கிறது. ஒருவழியாகத் தாய் வந்து சேர்ந்து கொள்ள ஒரு புறம் நிம்மதி கிடைத்தாலும் கொண்டாட்ட மனநிலை என்பது எல்லோருக்குமே முற்றாகக் கழன்று போகிறது…’’கோயில் விழாக்களில் பிள்ளைகள் தொலைவார்கள், அம்மாக்களும் தொலைய முடியும் என்று அப்போது நான் புரிந்து கொண்டேன்,,,வெகு நேரத்துக்கு அம்மாவின் உடல் நடுங்கிக்கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது’’ என்ற முரண் கலந்த முத்தாய்ப்புடன் முடிகிறது அந்தச் சித்திரம்…மிகச்  சிறியதொரு கிராமத்திலிருந்து திருவிழா காணப்போகும்போது சிறுபிள்ளைகளிலிருந்து பெரியவர்கள் வரை மிக இயல்பாகத் தொற்றிக்கொள்ளும் உற்சாகம், மாட்டு வண்டி சவாரி…அம்மாவின் அழகான தோற்றம்… மகிழ்ச்சியான மனநிலை இவற்றின் விரிவான விவரணைகளோடு தொடங்கி அந்த மனநிலைக்கு நேர் எதிரான இறுக்கமான சூழல்முரணோடு முடிப்பதே இதற்கு ஒரு சிறுகதைத் தன்மையை அளித்து விடுகிறது… வற்புறுத்தல் காரணமாய் மனமில்லாமல் சங்கீதம் கற்று ’கனகசபாபதி தரிசனம்’ பாடலை மட்டும் மனமுருகப்பாடி, ஒரு கட்டத்தில் அதை அடியோடு நிறுத்திவிட்ட தங்கைக்குள் ஒளிந்திருந்த வெளியே சொல்லப்படாத சோகம், பேச்சுப்போட்டிக்கு மகனை ஆவலோடு வெளியூர் அனுப்பி விட்டு  அவன் திரும்பி வந்தபிறகு தான் பரிசு பெறவில்லை என்பதை சொல்லத் தவிக்கும் அவனிடம் – அதைத் தானாகவே  மிக நுட்பமாக உணர முடிந்து விட்டதால் அது பற்றி ஒரு சொல் கூடக் கேட்காமல் ‘’வாறன் வாறன் எல்லாம் முடிஞ்சு போச்சு’’ என்று தன் வேலையில் தொடர்ந்து இயங்கிக்கொண்டே அவனோடான உரையாடலைத் தவிர்த்தபடி அவனை சங்கடப்படுத்தாத தாய் என நூலின் பல காட்சிகளுக்குள்ளேயுமே ஏதோ ஒரு சிறுகதை புதைந்து கிடக்கிறது.

மனம் கனக்க வைத்துத் துயரப்படுத்தும் சம்பவங்களைக்கூட கிண்டலும் கேலியுமாக அங்கதச்சுவையோடு விவரித்துக்கொண்டு போகும் புறநிலைப்பார்வையும் திரு முத்துலிங்கத்துக்கு மிக இயல்பாக வசப்பட்டிருப்பதை ஒவ்வொரு சம்பவ விவரிப்புக்கு இடையிலும் காண முடிகிறது. செயற்கையான பாவனைகள் அற்ற இயல்பான அந்த எள்ளல் சுவையே எந்த இடத்திலும் அலுப்புத் தட்டாதபடி இந்நூலின் சுவாரசியத்தைத் தொடக்கம் முதல் இறுதி வரை தக்க வைக்கிறது.

தனக்கு பூகோளம் கற்றுத்தந்த சுப்பிரமணியம் மாஸ்டரைப் பற்றி வருணிக்கும்போது  ‘’எவ்வளவுதான் உண்மையை நீட்டினாலும் இவருடைய உயரம் 5 அடி 3 அங்குலத்தைத் தாண்டாது. இருபது வயதானதும் இவர் உயரமாக வளர்வதை நிறுத்தி விட்டார்;. ஆனால் அகலமாக வளர்வதை நிறுத்தவில்லை’’என்று சொல்லிக்கொண்டு போகும் முத்துலிங்கம், வகுப்புக்குக் கொண்டு வர வேண்டும் என்றுஅந்த ஆசிரியர்  பட்டியல் போட்டுத் தரும் பொருட்களை வாங்க வேண்டுமானால் ’’ஒரு சிறு ராஜகுமாரனாக இருந்தால் ஒழிய’’ இயலாது என்று அந்த அங்கதத்தைத் தொடர்ந்து வளர்த்துக் கொண்டு போகிறார்.

எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே விடை எழுதிப் பத்து மார்க் சம்பாதித்து விட்ட சக பள்ளித் தோழனைப் பற்றிக் குறிப்பிடும்போது ’’இவன் பிற்காலத்தில் படித்து பெரிய டொக்டராக வந்தான். எல்லா வியாதிகளுக்கும் ஒரே இஞ்செக்‌ஷன் போட்டிருப்பானோ தெரியாது’’ என்று கிண்டல் செய்கிறார். பேச்சுக்கு அதிபதியான புதன் தனக்கு அனுகூலமாக இருப்பதாக ஆசிரியர் சொல்லியும் தான் பேச்சுப்போட்டியில் தோற்றுப்போகும்போது ’’ஏழாம் வீட்டுக்கு அதிபதியான புதன் அன்று என்னை மறந்து இன்னும் பெரிய தந்திரக்காரனுக்கு உதவப்போயிருக்கலாம்’’ என்று இயல்பான எள்ளல் சுவையை இழையோட விடுகிறார்.

நகைச்சுவை உணர்வு கொண்டவர்களுக்கே கைவரக்கூடியது அங்கதம். ஊடும் பாவுமாக நகைச்சுவை விரவி வராத நாட்குறிப்பு எதுவுமே இந்த நூலில் எதுவும் இல்லை என்பது இந்தத் தன் வரலாற்றின் குறிப்பிடத்தக்க ஓர் அம்சம். அவர் கொழும்பில் வேலை பார்த்தபோது, அது வரை  மூன்று கறி வகைகள் மட்டுமே செய்து பழகிய மனைவி அருமையாய் முயன்று செய்து அனுப்பிய துவரைக்கூட்டு , ’சாப்பாடுதூக்கி’யால்  மாறிப்போய்விட,, வேறு யாரோ ஒரு பெண் தன் காதலனுக்கு அனுப்பிய துண்டுச்சீட்டுடன் கூடிய சாப்பாடு அவருக்கு வந்து சேர்கிறது. மிகச்சரியாக அதே நாளில் அவர் மிகவும் விரும்பிய அந்தப் பதார்த்தத்தை…பக்கத்து…வீட்டு, மேல் வீட்டு.,கீழ்வீட்டு சிநேகிதிகளிடமெல்லாம் பாடம் கேட்டுப் பாடுபட்டுச் சமைத்து’’ அனுப்பியிருக்கும் மனைவிக்கு அவரது எதிர்வினை ஏமாற்றமளிக்க சில தினங்கள் சென்ற பிறகே தனக்கு  அனுப்பப்பட்ட உணவு என்னவென்பதையே அறிந்து கொள்கிறார் அவர். ’’ஆனால் இதுநாள் வரை அந்த உண்மையை என் மனைவியிடம் நான் சொல்லவில்லை’’ என்று முடிகிறது சுவாரசியமான அந்த நாட்குறிப்பு

பாஸ்டனில் பேத்தியைப் பள்ளியில் விடுவதற்கு வரைபடம் வைத்துப் பாதையைப் பற்றிய பாடம் சொல்லித் தரும் மகள் ’இதைப்புரிந்து கொள்வதற்கு ராக்கெட் சயன்ஸ் தேவையில்லை’ என்கிறாள். பேத்தியோடு உடன் படிக்கும் தோழியைக் கூட்டிச்செல்ல வரும் தாயிடம் வழி சொல்லும்போது மகள் சொன்னதையே அவரும் சொல்லி விட,, பிறகுதான் வழி கேட்ட அந்தப்பெண் ஒலீவியாவே ஒரு ராக்கெட் விஞ்ஞானி என்பது தெரிய வருகிறது… மகள் இடுப்பில் கை வைத்து விழுந்து விழுந்து சிரிக்க…’இரண்டு கைகளாலும் வாயைப் பொத்த வேண்டியது இப்பொழுது என்னுடைய முறை’’ என்கிறார் முத்துலிங்கம்.

தமிழ் மரபிலக்கியம் நவீன இலக்கியம், உலக இலக்கியம் என அனைத்திலும் ஆர்வமும் பயிற்சியும் கொண்டு அவற்றைத் தனதாக்கிக்கொண்டிருப்பவர் முத்துலிங்கம். ’’புத்தகத்தில் உண்மையான பற்று வைக்கும் ஒருவருக்கு வேறு பற்று இருக்காது. ஆயிரம் புத்தகம் படித்தால் ஆயிரத்தியோராவது புத்தகத்தில் வியப்பதற்கு விசயம் குறைந்து கொண்டே வரும், எனக்கோ வியப்பு கூடிக்கொண்டு வருகிறது’’ என்று சொல்லும் புத்தகக் காதலர் அவர். அதனாலேயே நாட்குறிப்புக்களின்  செய்திகளைத் தொடுத்துக்கொண்டு போகும்போது, நெருடலோ செயற்கைத்  தன்மையோ  இல்லாமல் மிக இயல்பாக இலக்கியச் செய்திகளும் மேற்கோள்களும் தொடர்ந்து அவற்றினூடே ஒருங்கிணைந்து பொருந்தியபடி வந்து கொண்டே இருக்கின்றன…இவரது தன் வரலாற்றுக்கு அடர்த்தி சேர்க்கும் மற்றுமொரு கூறாக இதைக் குறிப்பிடலாம்.

சிறு வயதில் திருட்டுத்தனமாய்த் தரகர் ஐயாவின் புது சைக்கிளை ஓட்டி வந்த வேளையில் தந்தை தன்னை விரட்டிக்கொண்டு வந்த காட்சியை விவரிக்கும்போது ‘’ சிண்டரெல்லா ராசகுமாரன் போல ஐயா செருப்பைத் தலைக்கு மேல் தூக்கியபடி ஓடினார். பன்னிரண்டு மணி அடிக்குமுன்னர் வீடு போய்ச் சேர வேண்டும் என்று தலை தெறிக்க ஓடிய சிண்டரெல்லா போல நான் ஓடினேன்’’ என்கிறார். மனைவி அனுப்பிய உணவைப் பாராட்டி ‘’அடகென்று சொல்லி அமுதை இட்டாள் கடகம் செறிந்த கையாள்’’என்ற பழம்பாடல் ஒன்றைத் துண்டுச்சீட்டில் எழுதி வைக்கிறார். ஆறே இல்லாத யாழ்ப்பாணத்தைக் குறித்து நினைவு கூரும்போது சிலப்பதிகாரத்தின் ‘வாழி காவேரி’யும் கம்பனின் ஆற்றுப்படலத்து சரயுவும் அவர் நெஞ்சில் விரிகின்றன. பாஸ்டனில் பார்க்க விரும்பும் இடம் எது என்று கேட்கும் மகளிடம் புலிட்ஸர் பரிசு பெற்ற பெண்கவிஞர் ஆன் செக்ஸ்டன் நடந்து போன அதே நதி தீரத்தில் தானும் நடந்து செல்ல வேண்டுமென்ற விருப்பத்தை வெளிப்படுத்துகிறார். வாழ்ந்தது போக .மிச்சமிருக்கும் தன்  வாழ்நாளைப் பற்றி எண்ணிப்பார்க்கும்போது  தஸ்தயெவ்ஸ்கியின் சூதாடிகள் நாவலில் தன்னிடமிருந்த கடைசி கூல்டினைப் பணயமாக வைத்த அலெக்சேய் இவானவிச்சின் மனநிலை அந்தக்கணத்தில் எப்படி இருந்திருக்கும் என்பதையே அவரது மனம் அசை போடுகிறது..வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் அவரது நெஞ்சம் ஏதேனும் ஓர் இலக்கியத்தைச் சுமந்தபடியே அலைந்திருக்கிறது என்பதற்கு அவரது நாட்குறிப்புக்கள் சாட்சியம் அளிக்கின்றன.

இளமையிலேயே தாயை இழந்த ஏக்கம் தன்வரலாறு நெடுகிலும் விரவிக்கிடந்தாலும் வாழ்நாள் முழுவதும் தனிக்கிணறு ஒன்று வேண்டுமென ஆசைப்பட்டு அரைக்கிணற்றுக்கான பணத்தை மட்டுமே சேர்க்க முடிந்த அன்னையின் ஆதங்கத்தை ’’மணமுடித்து வந்த நாளில் இருந்து அம்மா பாதிக்கிணற்றையே ஆட்சி செய்தார். அவர் இறந்தபோதும் பாதிக்கிணறு தோண்டக்கூடிய அளவுக்குத்தான் பணம் சேர்த்திருந்தார்;’’ என்று வெளிப்படுத்தும் கட்டம் உச்சம் தொடுவதாக அமைந்திருக்கிறது..


சமூகச் சிக்கல்கள் மற்றும் மொழி சார்ந்த ஆசிரியரின் தனிப்பட்டகருத்துக்கள்,  பார்வைகள் இவையும் கூட நாட்குறிப்புக்களில் இடம் பெறத் தவறவில்லை. நாற்பது வருட காலம் கொழும்பு, ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், சூடான், சோமாலியா எனப் பல நாடுகளில் பணியாற்றி ஓய்வுபெறும் வேளையில் மனம் ஒரு புறம் கனத்தும் இலகுவாகியும் மகிழ்ச்சியோடும் துக்கத்தோடும் வீடு வந்து சேரும் அவர் , தன் மனைவியிடம் ஆறுதலை நாட ,மனைவியோ  ‘’நீங்கள் ஓய்வு பெற்று விட்டீர்கள், எனக்கு எப்போது ஓய்வு ?‘’ என்ற வினாவோடு அவரை எதிர்கொள்கிறார். ’’அதைக்கேட்டு ’நான் ஆடிப்போய்விட்டேன்; நான் அதை யோசித்துப்பார்த்ததே இல்லை’’ என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார் நூலாசிரியர்.. ‘’இவருடன் சேர்ந்து வாழ்ந்ததே ஒரு பெரிய சாதனை,… ஏனோ இதற்காக ஒருவரும் நோபல் பரிசு தருவதில்லையே’’ என்று நோபல் பரிசு பெற்ற கப்ரியல் கார்ஸியா மார்க்குவேஸின் மனைவி சொன்னதும் கூட அப்போது அவர் நெஞ்சுக்குள் வந்து போகிறது. , ,வாழ்நாள் முழுவதும் விறகடுப்புப் புகைக்கூடாரத்துக்குள்ளேயே கழித்த தன் தாயும், தன் சகோதரன் செய்த குற்றத்துக்காக வல்லுறவைத் தண்டனையாய்ப் பெற்று அதற்கு எதிராக நீதி கேட்டுப்போராடிய பாகிஸ்தானியப்பெண் முக்தாரன் பிபியும்  அவர் நினைவில் எழுகிறார்கள். ‘’ஒரு குழந்தை பிறந்ததும் தாய் முகத்தைப்  பார்த்துக்கொண்டு பாலை உறிஞ்சுகிறது. பிறகு தாயை உறிஞ்சுகிறது… இன்னும் வளர்ந்ததும் பெண்ணினத்தை உறிஞ்சுகிறது……ஒரு பெண் படைக்கப்பட்டது ஆயுள் முழுவதும் உறிஞ்சப்படுவதற்குத்தான். அவளுக்கு இன்னும் ஓய்வு நாள் குறிக்கப்படவில்லை’’’ என்ற தன் கருத்தோடு அந்த நாட்குறிபுக்கு முத்தாய்ப்பு வைக்கிறார் அவர்..

யாழ்ப்பாணம் கொழும்பு ஆகிய இடங்களில் கழித்த இளமை நினைவுகள் இவரது தன் வரலாற்றில் ஊடாடினாலும் உலகின் பல்வேறு இடங்களில் பணி புரிந்ததாலோ அல்லது மிகவும் சுதந்திரமான நாடு என்று சொல்லப்படும் கனடாவைத் தன் வாழிடமாகத் கண்டடைந்து தேர்ந்த தாலோ புலம் பெயரும் சோகங்கள்.,போராட்டங்கள் ஆகியவை இவரது நாட்குறிப்புக்களில் மிகுதியாகப் பதிவாகவில்லை எனினும் நாடு நாடாகச் சிதறுண்டு வாழும் மக்களின் மொழி எந்த அளவு நிலைக்கக்கூடியதாக இருக்கும் என்பதை ’சுவருடன் பேசும் மனிதர்’ என்னும் நாட்குறிப்பில் இவர் பதிவு செய்திருக்கிறார். ஈராக்கில் பிறந்து ஈரான் சிரியா போன்ற நாடுகளில் பணி செய்து கனடாவில் முடி திருத்தும் பணியில் இருக்கும் அராமிக் மொழி பேசும் ஈராக்கியர் ஒருவரை சந்திக்கிறார் நூலாசிரியர். தன் மொழி பேச எவருமே இல்லாமல் – தன்னுடன் பேசிக்கொண்டிருந்த மனைவியும் இறந்து் போக, ..தன் மொழியை மறக்கக்கூடாதென்பதற்காகவே இரவு நேரங்களில் சுவரோடு உரையாடிக்கொண்டிருக்கும் அந்த வினோத மனிதர் இவருக்கு வியப்பூட்டுகிறார்.. ஹீப்ருவைப்போலவே பழமை வாய்ந்ததெனினும் இஸ்ரேல் என்ற நாடு ஒன்று இருப்பதால் பிழைத்து வாழும் அதனைப்போலத்  தன் அராமிக் மொழியும் வாழ வழியில்லை என்றும் தன் மொழி பேசுவோர் ஈரான் ஈராக் சிரியா லெபனான் இஸ்ரேல் போன்ற பல இடங்களிலும் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கும்போது அவ்வாறு நாடில்லாமல் போகும் ஒரு மொழி தழைப்பதற்கு வாய்ப்ப்பே இல்லை என்றும் உறுதிபடச் சொல்கிறார். அந்த முடிதிருத்துநர். இலங்கைக்காரராகிய தன் மொழியை சிங்களம் விழுங்கிக்கொண்டு வருவதை அந்த வேளையில் அவரோடு பகிர்ந்து கொள்கிறார் ஆசிரியர். முடி வெட்டிக்கொண்டிருந்த அந்த நிலையில் ’’தத்தம் மொழிகளை இழந்து கொண்டு வரும் இருவரையும் ஒரு போர்வை பிரித்தாலும் அவர் வேதனையும் இழப்பும் துயரமும்’’ தன்னுடையது போலவே இருந்ததாக உணரவும் செய்கிறார்…. ஆனாலும் தன் மொழியின் மீது வைத்த நம்பிக்கையை அவர் இழக்கத் தயாராக இல்லை. நாடு அழிந்தால் மொழி அழியும் என்று அதுவரை உறுதியாகச்சொல்லிக் கொண்டிருந்த அராமிக் மொழிக்காரர் ‘’ஒரு மொழியை அழிய விட்டு விடுவோமா..அது யேசு பேசிய மொழி அல்லவா’’ என்ற வாக்கியத்துடன் விடை தரும்போதுதான் அவர் உணர்வதும் அதுவே என்பது புரிகிறது. ஆசிரியரின் திடுக்கிடலோடு கூடிய மகிழ்ச்சியுடன் அந்த நாட்குறிப்பு முடிவடைகிறது.

பல்வேறு தளங்களிலான சம்பவங்கள், வெவ்வேறு வாழ்க்கைத் தரம் சார்ந்த……வேறு வேறு நாடுகளில் வாழும் மனிதர்கள், தனது சொந்த எண்ண ஓட்டங்கள், மனப் பதிவுகள் எனப்பலவற்றையும் சொந்த வாழ்க்கை என்னும் சரட்டில் தொடுத்துத் தன் வரலாறாக ஆக்கம் பெற்றிருக்கும்  ‘உண்மை கலந்த நாட்குறிப்புக்கள்’, ஒரு தனி மனித வாழ்க்கையைச் சித்தரிப்பதோடு நின்று விடாமல் மானுட வாழ்க்கையின் சில தரிசனங்களையும் முன் வைப்பதாலேயே ஒரு ’தன்வரலாற்று நாவல்’ என்னும் தகுதிக்கு உரியதாகிப் புனைவிலக்கியமாகச் சிறக்கிறது.

 

 

 

 

 

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.