kamagra paypal


முகப்பு » தொழில்நுட்பம், நிதி

பிட்காயின் 101

பணத்தினால் வெற்றியை உருவாக்க முடியாது. ஆனால், பணத்தை உருவாக்கும் சுதந்திரத்தினால் வெற்றியைப் பெற்றுத் தர இயலும்.
நெல்சன் மண்டேலா

How_Bitcoin_works_Infographic_Visually

பிட்-காயினால் எதை வேண்டுமானாலும் வாங்க இயலும். ஒரு துண்டு பீட்ஸா முதல் அதிஆடம்பரமான விலையுயர்ந்த மாட மாளிகை வரை என்ன பொருள் வேண்டுமோ, அதை நீங்கள் பிட்காயினை (bitcoin) விலையாகக் கொடுத்துப் பெற்றுக் கொள்ளலாம். பிட்காயினின் மதிப்பு ஒரு சில டாலரில் துவங்கி ஆயிரக்கணக்கான ரூபாய் வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கும். சில சமயம் பிட்காயின் பற்றிய தகவல்கள் துப்பறியும் நாவல் போல் இருக்கும்; பல சமயங்களில் பிட்காயின் பற்றிய சாத்தியங்களை அறியும்போது மின்சாரத்தைக் கண்டுபிடித்தபோது ஏற்படும் அதிசயம் உண்டாகும். ’தூணிலும் இருப்பான்! துரும்பிலும் இருப்பான்!!’ என இறைவரைச் சொல்வது போல், எங்கெங்கு காணினும் பிட்காயின் என பரந்த உலகின் இண்டு இடுக்கான பிரதேசங்களிலும் பிட்காயினைப் பார்க்கலாம். அதே சமயம் அதே இறைவரை எங்கும் கண்டறியமுடியாத பேதைமை போல், பிட்காயின் ஒளிந்துகொண்டு மறைபொருளாக இருப்பதையும் சுட்ட முடியும்.

பிட்காயின் என்றால் என்ன? எதற்காக இந்த பிட்காயின் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்?

இது கணியுலகு. இலக்கங்களும் எண்ணியலும் சார்ந்த உலகு. இந்த எண்ணியல் (digital) உலகிற்கான எண்ணியல் நாணயமாக பிட்காயின் இருக்கிறது. அரசல புரசலாக செய்தித்தாள்களை புரட்டி இருந்தால் கீழ்க்கண்ட செய்திகளைப் படித்து இருப்பீர்கள்:

1. மாலைமலர்: பிட்காயின் பயன்பாடு மோசடிக்கு வழிவகுக்கும்: இந்த நாணயத்தின் பயன்பாடு குறித்து எந்த நாடுகளும் தெளிவான ஒழுங்குமுறை விதிகளை இதுவரை வெளியிடவில்லை. இந்த நாணய முறைக்கென எந்த குறிப்பிட்ட விதிமுறைகளும் இல்லாமல் முதலீட்டுத் தயாரிப்பாக வளர்ந்து வரும் இதன் பிரபல்யம், மின்னணு பதிப்பின் மிகப் பெரிய முதலீட்டாளர் மோசடியாக வெடிக்கக்கூடும் என்ற கவலை அரசு அதிகாரிகளுக்கும், பொருளாதார நிபுணர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. சீனா மற்றும் பிரான்ஸ் நாடுகள் இந்த நாணயமுறைக்கு எதிராக முடிவெடுத்துள்ளது.

2. தினகரன்: பிட்காயின்: இந்தியர்களுக்கு ரூ.100 கோடி இழப்பு: கடந்த மாதம் இந் நிறுவனம் திவால் நோட்டீஸ் அனுப்பியது. இதன் கணக்கில் இருந்த சுமார் ரூ.3,000 கோடி மதிப்புள்ள 8 லட்சத்து 50 ஆயிரம் பிட்காயின்கள் திருடு போனதாக அறிவித்தது. பிட்காயின் வர்த்தகத்தில் இந்தியர்கள் உட்பட 1.27 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். இதில் ரூ.35 ஆயிரம் பிட்காயின் வைத்திருந்த இந்தியர்களுக்கு சுமார் ரூ.100 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

3. நாணயம் விகடன்: அமெரிக்காவை அல்லல்படுத்தும் புது மோசடி: பிட்காயின்… உஷார், உஷார்! : அமெரிக்க அரசாங்கமோ, இது முழுமை பெறாத அரைவேக்காட்டு சிஸ்டம். அமெரிக்காவுக்குள், பிட்காயின் பொருட்களுக்கு எதிராக மாற்றப்பட்டால் பண்டமாற்று சட்டம் அதைக் கண்காணிக்கும். யார் எத்தனை காயின் மாற்றுகிறார்கள், யாருக்குப் பணம் போனது என்று விசாரிப்போம் என்று எச்சரிக்கிறது அமெரிக்கா. இதுவும் தவிர, வருமானம், கேப்பிட்டல் கெயின்ஸ் டாக்ஸ் என்ற குழப்பமெல்லாம் வேறு இதில் நிறையவே இருக்கிறது.

4. தி ஹிந்து: பிட்காயின் = நாணயமான நாணயமா? – இராம.சீனுவாசன்: பிட்காயின் சட்டவிரோத நடவடிக்கை களுக்கும் பயன்படுவதாக அமெரிக்க காவல் துறை கண்டுபிடித்துள்ளது. சில்க் ரோட் என்ற இணையதளம் மூலம் சட்டவிரோத வியாபாரம் செய்த ஒரு நிறுவனத்தில் நடந்த சோதனையில் அவர்கள் 26 ஆயிரம் பிட்காயின்களை வைத்திருப்பது தெரியவந்தது. இதே போன்று மற்றொரு மெய்நிகர் பணம் 2006ல் உருவாக்கப்பட்டு பல சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதை அமெரிக்க அரசு கண்டுபிடித்து அழித்தது. இதனால்தான் இந்த மெய்நிகர் பணமான பிட்காயினை பயன்படுத்த வேண்டாம் என்று பல நாடுகள் கூறுகின்றன.

5. தினமணி: பிட் காயின்: ஓர் எச்சரிக்கை மணி – எஸ். ராமன்: பிட் காயின்கள் எந்த ஒரு பொருளாதார கட்டுப்பாட்டுக்கும் உள்படாத, ஊக வணிகத்தை மட்டுமே அடிப்படையாக கொண்ட கற்பனை கஜானாவில் பிறந்த நாணய மாற்று முறை. அந்த நாணய புழக்கத்திற்கு பின்னால், அறிவிக்கப்பட்ட நிஜ சொத்துகள் கிடையாது. அதன் மதிப்பில் ஏற்படும், யூகங்களுக்கு அப்பாற்பட்ட ஏற்ற தாழ்வுகளால்,அந்த நாணய மாற்று முறையை பின்பற்றுபவர்களுக்கு பெருத்த நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

இந்த பண பரிவர்த்தனை மூலம், போதை மருந்து கடத்தல் நடந்திருப்பதை கண்டுபிடித்த அமெரிக்க புலனாய்வு துறை, 28.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள பிட்காயின்களை பறிமுதல் செய்திருக்கிறது. போதை மருந்து கடத்தல் தவிர, 10 சதவீத அளவிலான சர்வதேச பிட் காயின் பண பரிவத்தனை, ஆன் லைன் சூதாட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. பல பாதுக்காப்பு வளையங்களையும் மீறி, பிட் காயின் கஜானாவில் சேமிக்கப்படும் தொகைகள், இணையதள கடத்தல் மூலம் களவு போய்க்கொண்டிருக்கும் நிகழ்வுகளுக்கும் குறைவில்லை.

இவ்வளவு பேர் பயமுறுத்தும்போது, ஓரிரு ஆக்கபூர்வமான பார்வையும் கிட்டியது:

அ) ஆழம்: பிட்காயின் என்றொரு அதிசயம்: இந்திய ரிசர்வ் வங்கி,‘வேண்டுமென்றால் உபயோகித்துக்கொள், பிரச்னை என்றால் என்னைக் கேட்காதே’ என்பது மாதிரியான வழிகாட்டுதலையே அளித்திருக்கிறது. இதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. 2013ல் ஒரு பிட்காயினின் மதிப்பு 16,000 ரூபாய். ஆனால் அடுத்த நாளே ஒரு ரூபாய் ஆனாலும் யாரையும் போய் கேட்கமுடியாது. .அதுமட்டுமில்லாமல் இதற்கு இவ்வளவு மதிப்பு இருக்கிறது என்கிற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கும் வரைதான் அந்த மதிப்பு தக்கவைக்கப்படும். (இது எல்லா பண்டங்களுக்குமே பொருந்தும்).
பிரசன்னா

ஆ) குங்குமம் : “பிட்காய்ன் என்ற மின்பணம்”: மறையீட்டுச் செலாவணி (CryptoCurrency) என்பது எண்ணியல் செலாவணியில் ஒரு நவீன வகை. நேரடியாக அல்லாமல் மறையீடுகளின் (Cryptography) அடிப்படையில் எண்ணியல் செலாவணியைப் பயன்படுத்துகிறது இது. I LOVE YOU என்பதை 143 என்கிறார்களே, அதுவே ஒரு மறையீடு தான். நடந்த பரிமாற்றம் Block Chain என்ற பகிரப்பட்ட பொது கணக்கேட்டில் பதியப்படும். இந்தக் கணக்கேட்டின் பிரதி பயனர் மென்பொருள் வைத்திருக்கும் அனைவரிடமும் இருக்கும். எந்தவொரு பரிமாற்றமும் நடந்த 10 நிமிடங்களுக்குள் உலகம் முழுக்க இருக்கும் பயனர்களின் கணக்கேட்டில் அது பதியப்பட்டு விடும்.
சி. சரவணகார்த்திகேயன்

மேற்கண்ட கட்டுரைகளைப் படித்தால், பிட்காய்ன் என்றால் என்ன, எப்படி அதைப் பெறுவது, எவ்வாறு அது உருவாகிறது என்பது தெரியவரும். சுருக்கமாக, பிடிகாயினின் ஆய பயன்கள் என்ன என்று பட்டியலிட்டால்:

  • சங்ககால பண்டமாற்றை தற்காலத்திற்பேற்ப இயக்கும் நவீன பணம்
  • தங்கத்தைப் போன்ற அசையா முதலீட்டுகளை நம்பாமல், பொருளுக்கேற்ற மதிப்பைப் பெற்றுதரும் நாணயம்
  • அமெரிக்காவின் டாலர், பெட்ரோல் பணம், ரிலையன்ஸ் பங்கு என்று வழக்கமாகக் கொழிப்போரைத் தவிர்க்கும் பரிமாற்றம்
  • நடுவே புகுந்து சேவைக் கட்டணம் விதிக்கும் தரகர்களும், வைப்பு நிதிக்குக் கூட மாதாந்திர கட்டணம் போடும் வங்கிகளையும் நீக்கும் சமச்சீர் உலகிற்கான மதிப்பீடு
  • ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பணத்தை நம்பகமாக மாற்றும் வலைச்சாதனம்
  • ஸ்கொயர், கூகுள் வாலெட் (Google Wallet), ஆப்பிள் பே (Apple Pay), பேபால் (PayPal) போல் இணையம் வழியாகவும் பெருநிறுவனங்களின் முதுகில் ஏறியும் சாதாரணர்களைப் பிணைக்க எண்ணாமல், தன்னார்வலர்களின் படைப்புத்திறனின் மூலமாகவும் தனிமனிதர்களின் கால்கோள் முயற்சிகளை ஒருங்கிணைப்பதாலும் உருவாகும் நாடுகளைக் கடந்த மெய்நிகர்நிதி (virtual currency)

பிட்காயின் எவ்வாறு மாறும், எப்படி முக்கியத்துவம் அடைகிறது என்பதற்கு தொலைபேசியை உதாரணமாகச் சொல்லலாம். துவக்க காலத்தில் தெருவிற்கு ஒரு தொலைபேசி இருக்கும். நான் கல்லூரிக்கு சென்றபோது, என்னுடைய பக்கத்துவீட்டிற்கு எதிர்த்த வீட்டிற்கு டிரங்க் கால் போட்டு, நான் ஐந்து நிமிடம் கழித்து அழைப்பதாகச் சொல்வேன். அவர்களும், என் வீட்டிற்குச் சென்று என் குடும்பத்தாரை அழைத்து வருவார்கள். ஐந்து நிமிடம் கழித்து, ஒரு நிமிடம் மட்டும் பேசிவிட்டு, வைத்துவிடுவேன். இப்போது எல்லோரின் கையிலும் செல்பேசி. எப்போது வேண்டுமோ, எப்படி வேண்டுமோ, அவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள்.

அதே போல், தனியொரு மனிதனுக்கு முக்கியத்துவம் தரும் சாதனமாக பிட்காயின் உருவாகிறது. ஒவ்வொருவரைத் தொடர்பு கொள்ள ஒவ்வொரு சாதனம் இருக்கிறது. சிலருக்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும். சிலருக்கு ஸ்னாப்சாட் மூலம் படம் போட வேண்டும். சிலருக்கு வாட்ஸ்ஸாப். வேறு சிலருக்கு ஃபேஸ்புக் தூதுவன். இதே போல் தனி மனிதனின் விருப்பத்திற்கேற்ற உலகை ‘பிட்காயின்’ உண்டாக்குகிறது. குடும்பத்திற்கு ஒரு வங்கிக் கணக்கு வைத்துக் கொண்டு, மொத்த வரவு-செலவுக் கணக்கை அந்த ஒரு நிறுவனத்தின் மூலம் திருப்தி செய்த காலம் காலாவதியாகிக் கொண்டு இருக்கிறது.

வங்கிகளின் சேவையைப் பெறவியலாமல் கோடிக்கணக்கானோர் இருக்கிறார்கள். சரியாகச் சொன்னால், உலகெங்கும் இருநூற்றைம்பது கோடி பேர்களுக்கு வைப்பகக் கணக்கு கிடைக்கவில்லை. அதாவது, இவர்களின் குடும்பத்தையும் சேர்த்துக் கொண்டால், கிட்டத்தட்ட ஐநூறு கோடி மக்களுக்கு வங்கி மூலமாக பணப் பரிமாற்றம் என்பது கற்பனையில் மட்டுமே சாத்தியமாகவுள்ளது. சேமிப்புக் கணக்கு துவங்க இயலாது. நினைத்தவுடன் வேண்டாம்; நூறு மைல் நடந்தாலும், நடப்புக் கணக்கை ஆரம்பித்து, சம்பளத்தை பாங்கில் போட முடியாது. தவணை அட்டைப் பெற முடியாது; கடன் அட்டைக்கு விண்ணப்பிக்க முடியாது.

இதில் ஒரேயொருவரின் கதையைப் பார்ப்போம்.

அகதியாக ஈரானில் புகலிடம் பெற்று, இலக்கியமும் அறிவியலும் படித்தவர் ஃபெரெஷ்டே ஃபொரோ (Fereshteh Forough). அதன்பிறகு 2012ல் தாய்நாடான ஆஃப்கானிஸ்தானிற்கே திரும்பச் செல்கிறார். ஆஃப்கானிஸ்தான் பெண்களை வறுமையில் இருந்தும் அடக்குமுறையிலும் இருந்து விடுவிப்பதற்காக ‘பெண்களுக்கான அடித்தள இணைப்பகம்’ (Women’s Annex Foundation) அமைப்பை நிறுவுகிறார். அந்த அமைப்பின் சார்பில் ஆஃப்கானிஸ்தானின் பல சிறுநகரங்களிலும், கிராமங்களிலும் மகளிருக்கான கணினிக் கல்வியும் ஆங்கிலப் பயிற்சியும் கொடுக்கும் பள்ளிகளை அமைக்கிறார்.

கணினியில் நிரலி எழுதுபவர் பெங்களூரூவில் இருந்தால் என்ன? காபூல் நகரத்தில் பணிபுரிந்தால் என்ன? ஒடெஸ்க் (oDesk.com), ஈலான்ஸ் (Elance.com), ஃப்ரீலான்ஸர் (Freelancer.com), ஸ்டாஃப் (Staff.com), டாப்டால் (TopTal.com) என இணையம் மூலமாக இத்தனை ரூபாய்க்கு இன்ன வேலை என்று செய்து முடிக்கத் தெரிந்தவர்களை ஃபெரெஷ்டே ஃபொரோ உருவாக்குகிறார். ரூபி, ஜாவாஸ்க்ரிப்ட், மருத்துவக் குறிப்புகளை எழுதுதல் போன்றவற்றிற்கு ஆஃப்கான் பெண்மணிகளைத் தயார் செய்கிறார். இவர்களால் நுணுக்கமான தகவல்களை மணிக்கணக்காக பொறுமையாகவும் பிழையின்றியும் கணினியில் உள்நுழைக்க இயலும். வீட்டில் இருந்தே வேலை பார்க்கக் கூடிய தொழில்களை இராப்பகலாக செய்ய முடியும். பயனர்களோடு சரளமாக ஆங்கிலத்தில் உரையாடி அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும் தெரியும்.

இருந்தாலும் வேலை கிடைக்கவில்லை. மேற்கண்ட வலையகங்களில் கடை விரித்தாலும், கொள்வாரில்லை. ஏன்?

இவர்களுக்கு எப்படி சம்பளம் கொடுப்பது? உழைப்பதற்கான ஊதியத்தை எவ்வாறு தருவது என்பது சிக்கலாக இருந்தது. பணத்தைப் பரிமாற, வங்கிக் கணக்கு தேவை. வங்கிக் கணக்கைத் துவக்குவதற்கு வங்கிகள் தேவை. இதுவோ தாலிபான் பிரதேசம். தாலிபானோ, உள்ளூர் தாதாவோ, வங்கிகளைக் கொள்ளையடிக்கும் தேசம். அப்படியே வங்கிகள் இயங்கினாலும், ஆண்களுக்கு மட்டுமே வங்கிகள் இயங்கும் தேசம். இஸ்லாமியச் சட்டங்களின்படி கட்டுப்பெட்டியாக பெண்களை வங்கிக் கணக்கு துவக்கவிடாத தேசம். ’மனைவிக்கு பணம் தருவதா!’ என்று பிடுங்கி வைத்துக் கொள்ளும் தேசம்.

இங்கேதான் பிட்காயின் உள்ளே நுழைகிறது. கையில் செல்பேசி இருந்தால் போதும். செல்பேசியில் ஒரு பணப்பை (wallet) செயலியை நிறுவினால் போதும். வேலை செய்தால் கூலி. நடுவில் மூக்கை நுழைத்து கமிஷன் அள்ளும் இடைத்தரகர்கள் கிடையாது. அரசாங்கத்தின் வருமானவரி கிடையாது. உள்ளூர் காவல்துறையின் லஞ்சங்கள் கிடையாது. அடியாள் தாதா/ரவுடி கும்பல்களுக்குத் தரவேண்டிய மாமூல் கிடையாது. அப்படி தரகுப்பணம், வருமானவரி எல்லாம் நீக்கினாலும் கணவனின் பறிமுதலும் கிடையாது. அத்தனை பணமும் உழைத்தவருக்கே முழுமையாகச் சென்றடையும்.

இந்த ஆஃப்கானிஸ்தானிய பெண்கள் எல்லாம் கணி வித்தகர்கள் இல்லை. கொந்தர்கள் இல்லை. அறிபுனை படித்துத் திரியும் வருங்கால யுடோபிய கற்பனாவதிகள் இல்லை. அவர்கள் வாழ்விற்கு ஆதாரம் பணம். அது பெருவதற்கான கருவியாக பிட்காயின் அமைந்திருக்கிறது. அவ்வளவுதான்!

இது மாதிரி ஐநூறு கோடி பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு பிட்காயின் வரப்பிரசாதம்.

அடுத்த பகுதியில் இந்த பிட்காயின் ஏன் நிலைத்து நிற்கும் என்பதையும், எவ்வாறு இயங்குகிறது என்பதையும், போலி நோட்டு அச்சிடுவது எவ்வாறு இயலாது என்பதையும், மோசடிகளை எவ்வாறுத் தவிர்க்கிறது என்பதையும் பார்ப்போம்.

நோக்குநூல்கள்:

1. The Age of Cryptocurrency: How Bitcoin and Digital Money Are Challenging the Global Economic Order by Paul Vigna and Michael J. Casey

2. Bit by Bit: How P2P Is Freeing the World by Jeffrey Tucker

3. The Book Of Satoshi: The Collected Writings of Bitcoin Creator Satoshi Nakamoto by Phil Champagne

4. Bitcoin: A Peer-to-Peer Electronic Cash System – Satoshi Nakamoto

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.