kamagra paypal


முகப்பு » அனுபவம், இசை

ராக நிழல்

“நாலு பேரு நல்லா கேக்கற மாதிரி பாட்டு எதுவும் நீ ரெகார்டு பண்ணவே மாட்டியா?” என்று நான் கணக்கு நோட்டிலிருந்து கிழித்த பேப்பரில் எழுதிக் கொடுத்த பாட்டு லிஸ்ட் பேப்பரை ஆட்டியபடியே என்னிடம் கேட்ட “அண்ணே” அடைந்த எரிச்சலுக்கு ஒரு வருட‌ பிண்ணணி உண்டு. சிறுவயது முதல் இலங்கை வானொலியின் இடுப்பில் அமர்ந்தபடி பாடல் வெளிகளில் பயணம் போய் வரும் பாக்கியம் எனக்கு வாய்த்திருந்தது. அதன் விளைவாக விசித்திரமான பெயர்கள் கொண்ட படங்களில் இடம்பெற்ற அற்புதமான பாடல்கள் எனக்குள் பதியன் செய்யப்பட்டு என்னுடன் எனக்குள் வளர்ந்தபடியே இருந்தன…பதினோராம் வகுப்பு நுழைந்தவுடன் எனக்கும் அப்பாவுக்கும் ஒரு “புரிந்துணர்வு ஒப்பந்தம்” ஏற்பட்டது. மாதம் நாற்பது ரூபாய் எனக்கு இசையனுபவ வளர்ச்சி நிதியாக அப்பாவால் ஒதுக்கப்பட்டது. TDK, CONEY, SONY போன்றவை அந்த நாற்பது ரூபாய்க்கு “உயர் தட்டு” கேசட்டுகளாக தெரிந்ததாலும் விரலுக்கேற்ற வீக்கம் நினைப்பில் இருந்ததாலும் அப்போதுதான் வரத்துவங்கியிருந்த T-Series பட்ஜெட்டுக்கு பேருதவியாக இருந்தது. கேஸட் பதினைந்து ரூபாய், பதிய பதினைந்து ரூபாய். பத்து ரூபாய் மிச்சம் பிடித்தால் பிரதி மூன்றாம் மாதமும் ஒரு கேசட் போனஸாக பதிந்து கொள்ளலாம் என்ற மகிழ்ச்சி அளிக்கும் திட்டத்தில் மனமெல்லாம் லயித்திருந்த பருவத்தின் துவக்க வருடம்…

ஒரு கேஸட் எப்படி பதிவு செய்வது என்பதில் எனக்கென‌ சில பண்புகள் பாடல்கள் கேட்டுக் கேட்டுப் பழகியதில் காலப்போக்கில் உருவாகியிருந்தன. அதில் முக்கியமானது, பாடல் வரிகளும் இசைக்கோர்ப்பும் எனக்குள் பதிவாக வேண்டும். பிறகு அதில் வரும் ஒரு வரியோ இசைத்துளியோ திடீரென்று எனக்குள் முளைத்து நகர்ந்து நாக்கில் வந்து நிற்க வேண்டும். இல்லையேல் அது பதிவு செய்யும் அளவுக்கு நல்ல பாடல் இல்லை என்றொரு எண்ணம். இதனால் பெரும்பாலும் ஒரு பாடல் என் லிஸ்டுக்கு வருவதற்குள் சில வருடங்கள் பிடித்து விடும். அத்துடன் பாடல் ஒரு உணர்வுச் சரமாய் இருக்க வேண்டும் என்று மனது சொல்லிக் கொண்டே இருக்கும். உணர்வுச் சரங்கள் என்றாலே அதை தொடுப்பது பெரும்பாலும் நினைவின் கரங்களாகத் தானே இருக்கிறது!

cassetteஅத்தகைய நினைவுக் கரங்கள் இசையின் விசைக்கேற்ப அசைவதே ஒரு அலாதியான அனுபவ அற்புதம் இல்லையா? முதலில் மேலோட்டமான‌ பாட்டு. பிறகு வரி, வரியின் பொருள், இதை தூக்கிக் கொண்டு நகரும் இசை, அந்த இசை வாகனத்தில் உட்கார்ந்து பொருளை அசை போட்டபடி அலையும் மனது, அந்த மனம் போகும் இடங்கள், இடங்களில் நடக்கும் நிகழ்வுகள், அந்த நிகழ்வுகள் சார்ந்த நினைப்புகள்… பிறகு அதன் ஒவ்வொரு ஸ்வரஸ்தானத்திற்குள்ளும் ஒட்டிக் கொண்டு, கேட்கும் காலத்தையெல்லாம் அதனுள் இட்டு பெருக்கிக் கொண்டே போகும் நினைப்புகள் பற்றிய நினைப்புகள்…முத்தாய்ப்பாக‌ பாட்டு என்பதே நினைவுகளின் ஸ்வர அசைவு என்ற நிலைப்பு…!

இத்தகைய நிலைப்பாடு வேண்டும் மனது  ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டு விற்கப்படும் “ரெடிமேட்” கேஸட்டுக்களை விரும்புவது இல்லை. இவ்வாறு வருடக்கணக்கில் உள்ளேற்றி வைத்திருந்த பாடல்கள் ஒவ்வொன்றாக அப்பாவின் நிதியதவியுடன் கேஸட் வடிவில் என் பாடப்புத்தகங்கள் பக்கத்தில் வந்து உட்காரத் துவங்கின.

முதல் ஓரிரண்டு வருடங்களில்தான் முன்னர் சொன்ன “அண்ணன்” இருந்த கடை அறிமுகமானது. பெரியார் பேருந்து நிலையம் பக்கத்தில் இருக்கும் “ஜம்ஜம்”ல் ஒரு மசாலா டீ அருந்தியபடி கண்ணை அங்குட்டும் இங்கிட்டும் அலைய விட்டீர்களென்றால் கடைக்கு அருகில் இருக்கும் சர்ச்சுக்கு நேரெதிரே இருக்கும் வரிசையான கடைகளில் அந்தக் கடை தட்டுப்படும்…எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும் ஏராளமான “ரெகுலர் கஸ்டமர்கள்” கொண்ட அக்கடையில் எனக்கு ஏமாற்றமான அனுபவமே மிஞ்சியது. ஒரு பட கேஸட், இருபட கேஸட்,  பாடகர் தொகுப்பு என்று விற்பதிலேயே அந்தக் கடைக்கு ஆர்வம் அதிகம் என்று பின்னாளில் புரிந்து கொண்டாலும், அந்தக் கடையில் இருந்த அண்ணன் எரிச்சல் அடைவதற்கு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகியிருக்கக்கூடும்…”பகவதிபுரம் ரயில்வே கேட்”, “வட்டத்துக்குள் சதுரம்”, “முடிவில்லா ஆரம்பம்”, “பாலூட்டி வளர்த்த கிளி”, “மணிப்பூர் மாமியார்”, “நதியை தேடி வந்த கடல்” , “நெஞ்சிலாடும் பூ ஒன்று” என்று என் லிஸ்டில் இருந்த படப்பெயர்களையும் பாடலின் முதல் வரியையும் அவர் மேலோட்டமாக படித்துப் பார்க்கும் பொழுது அவர் முகத்தில் தெரிவது ஏளனமா கேவலமா பச்சாதாபமா கோபமா என்று புரியாது…படித்து விட்டு ஒரு மாதிரி ஏற இறங்க என்னை பார்த்தபடி “இதெல்லாம் இல்லப்பா” என்பார் லிஸ்டில் முக்கால் வாசியை கிராஸ் செய்தபடி…அப்போதெல்லாம், இந்தப் பாடல்களை இலங்கையை விட்டால் வேறெங்கும் கேட்கவே முடியாதோ என்று வியப்பும் கவலையுமாக ஏமாற்றத்துடன் வீடு திரும்புவேன்…

இப்படியாக மாதங்கள் செல்லச் செல்ல, வேறு சில கடைகளும் கையை விரிக்க, ஒரு முறை நான் கொடுத்த லிஸ்டை பார்த்து “தங்க ரங்கனா…” [“உதடுகளில் உனது பெயர் ஒட்டிக் கொண்டது அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது” / MSV/ ஜெயச்சந்திரன்‍-சுசீலா] என்று அவர் அதிர, கடையில் இருந்த சிலர் திரும்பிப் பார்த்தனர். அன்றுதான் அவர், இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் வரும் வரிகளை எரிச்சலுடன் சொன்னார்! அதற்கு முந்தைய மாதம் தான் “நண்டு” படத்தில் வரும் “கைசே கஹூன்” பாடல் கொடுத்த போது “எப்படிப்பா தமிழ் படத்துல இந்தி பாட்டு வரும்” என்று அவர் உசுப்பேறியிருந்தார்… “சும்மா நீயா எதையாவது எழுதிட்டு வர தம்பி. தங்கரங்கன் அப்படின்னு படமெல்லாம் இல்ல” என்று சற்றே குரலுயர்த்திச் சொல்லி விட்டு, சற்று நேர அமைதிக்குப் பின், “முருகன் இட்லி கடை இருக்குல்ல அது பக்கத்துல ஒரு அடிபம்பு இருக்கு. அது பக்கத்து காம்பவுண்ட்ல ஒரு கடை இருக்கு அங்குட்டு போய் கேளு” என்றார். எனக்கு அவர் கேலி செய்கிறாரா பழி வாங்குகிறாரா என்று தெரியவில்லை. போய்த்தான் பார்ப்போமே என்று நினைத்த பத்தாவது நிமிடம் நான் பம்பு பக்கத்தில் இருந்தேன். இன்று அந்த அடிபம்பை தவிர தெருவின் அடையாளங்கள் அடியோடு மாறி விட்டன. ஆரிய பவன் இருந்த முக்கிலிருந்து மேலமாசி வீதியில் போத்தீஸ் நோக்கி நடந்தால், சத்தமாக பேசிச் சிரித்துக் கொண்டிருக்கும் குஜராத்திகளின் கடைகள் வந்தவுடன் காதுகளை கூர்மையாக்கிக் கொள்ளுங்கள். அந்தக் கடைகளின் அடியில்தான் “குணசீலன் கடை” புதையுண்டு கிடக்கிறது. ஒரு வேளை, வருடக்கணக்கில் காற்றில் பரவிக் கொண்டே இருந்த பாடல்கள் விட்டுப்போன நினைவொலி உங்கள் காதுகளில் விழுந்தாலும் விழக்கூடும்…அன்று நான் அடிபம்ப் அருகே நின்று கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தபோது, பக்கத்தில் பல குடித்தனங்கள் வாழும் “ஸ்டோர்” போன்ற ஒரு காம்பவுண்டில் ஒரு வீட்டிலிருந்து ஸ்பீக்கர் சத்தம் கேட்டது. மதுரை நகருக்குள் இருக்கும் பெரும்பாலான கேஸட் கடைகளில் பதிவு செய்வதற்காக கொடுக்கப்படும் கேஸட்டுகள் அங்கு அனுப்பப்பட்டே பதிவு செய்யப்பட்டு வந்தன என்பது அப்போது எனக்குத் தெரியாது.

உள்ளே நுழைந்தவுடன் நீளமான டேபிளுக்கு அந்தப் பக்கம் அமர்ந்திருந்த பெரியவர் ஒருவர் எழுந்து “வாங்க தம்பி” என்றார். அவர் தான் குணசீலன். அவருக்கும் எனக்கும் குறைந்தது இரண்டு தலைமுறை இடைவெளியேனும் இருக்கும். பளீர் வெள்ளையில் சட்டையும் வேட்டியும் கருப்பு நிற தடி பிரேமில் கண்ணாடியும் போட்டிருந்தார். மீசை மொத்தமும் ஷேவிங் கீரீம் அப்பியது போல நரைத்திருந்து மா.பொ.சியை நினைவுபடுத்தியது. “ஒரு கேசட் பதியணும்” என்று சொல்லிக் கொண்டே அவரிடம் பேப்பரை நீட்டினேன். நம் அண்ணன் கிராஸ் போட்ட பாடல்களுக்கெல்லாம் டிக் போட்டுக் கொண்டே போன அவர் பில் புக்கை எடுத்தபடி TDKன்னா அறுபது T-Seriesனா முப்பது என்றார். டிசீரிஸ்லயே பண்ணுங்க என்று சொன்னபடி கடையை நோட்டம் விட்டேன்…மூன்று செட் வைத்து வேலை நடக்கிறது என்பது மூன்று வெவ்வேறு கேஸட்டுகள் ஒரே சமயத்தில் சரி பார்க்கப்படுவதிலிருந்து தெரிந்தது…நாலு நாள்ல வந்து வாங்கிகுங்க என்றபடி பில்லைக் கொடுத்தார். அன்று தொடங்கி, பதின் வயதுகள் முழுவதும் பரவி இருபதுகள் முழுவதும் இறங்கி சுமார் பதினைந்து வருடங்கள் மாதம் ஒரு முறையேனும் அந்தக் கடையிலிருந்து மனம் முழுக்க இசையை சுமந்து வந்திருக்கிறேன்…

தொழில் தாண்டி அவரின் இசை ஆர்வத்தின் வேர் பல பாடல்களின் அடியில் பரந்து படர்ந்திருக்கிறது என்பதை உணர்த்திக் கொண்டே இருந்தார் அவர். தலையணை அளவில் இருக்கும் மூன்று தடித்த புத்தகங்களில் அவரிடம் இருக்கும் பாடல்கள் பற்றிய தகவல்கள் அழகான கையெழுத்தில், பதிவு செய்ய வருவோர் பார்த்து செலக்ட் செய்ய வைக்கப்பட்டிருந்தன. அதன் மூலப்பிரதி அவராகவே இருந்தார். எந்த பாடலை சொன்னாலும் அதன் படம், பாடகர்களை சொல்லும் திரைப்பாடல் களஞ்சியமாக அவர் தெரிந்தார். “தேவன் தந்த வீணை” பாடலை பதியும் லிஸ்டில் பார்த்த உடனே ” SPB வேணுமா ஜெயச்சந்திரன் வேணுமா” என்பார். அத்துடன் நில்லாமல், “இரண்டையும் உட்கார்ந்து கேளுங்க ஜெயச்சந்திரன் பாடினதுல பாட்டு ஃபுல்லா கிடார் கூட வரும் SPBல வராது” என்பார். அவர் இளையராஜாவை கரைத்து குடித்திருக்கிறார் என்பது சில மாதங்களிலேயே தெரிந்து போனது…சில பாடல்களின் படம் என்னவென்று தெரியாமல் பாட்டின் வரியை மட்டும் எழுதிக்கொண்டு போவேன். சட்சட்டென்று அவரிடமிருந்து பதில் வரும். “ஏதோ நினைவுகள்” என்றவுடன் “அகல் விளக்கு” என்பார். “மலரே என்னென்ன கோலம்” [சங்கர் கணேஷ்] என்றவுடன் “ஆட்டோ ராஜா” என்பார். அத்தோடு நில்லாமல், ஆட்டோ ராஜாவுல சந்தத்தில் பாடாத கவிதைன்னு ஒரு நல்ல பாட்டு இருக்கு. மறந்தும் ஒளியும் ஒளியும்ல அதப் போட்டா பார்த்துரக் கூடாது அது இளையராஜாவுக்கு நாம பண்ற பாவம் என்பார்!

இளையராஜா தமிழ்ல விட கன்னடத்துல சில பாட்டு நல்லா போட்டுருப்பார் என்பார். பத்தாண்டுகள் கழித்து பெங்களூரில் ஒரு மழை இரவில் பணி முடிந்து திரும்புகையில் டிராவல்ஸ் காரில் “கீதா” கேட்ட போது அவர் சொன்னது சரி என்று தோன்றியது.

“நல்லதொரு குடும்பம்” படத்தில் வரும் “சிந்து நதிக்கரை ஓரம்” பாட்டை என் பேப்பரில் பார்த்தவுடன், “தம்பி இந்தப் பாட்டு கிறுக்கு பிடிக்க வச்சுரும்” என்றபடி தன் தூரத்துச் சொந்தம் ஒருவரின் கதை சொன்னார். “பக்கத்து நரசிங்கம்பட்டிலதான் இருக்கான். மூணு நாலு மாசத்துக்கு ஒரு தடவை இங்க வந்துருவான். ஒரு கேஸட் முழுக்க இந்தப் பாட்டை பண்ணி வாங்கிட்டு போவான். தெனம் ராப்போழுது படுக்கைய போட்டா ஒரு மணி நேரம் இதே பாட்டுத்தான் ஓடிக்கிட்டுருக்கும். தெனமும் போட்டு அடிச்சா கேஸட் தாங்குமா? கொஞ்ச மாசத்துல அறுந்துரும். திருப்பி வந்துறுவான்” என்றவர் தொடர்ந்து, “பாட்டா இது? மனசுல என்ன துக்கம் இருந்தாலும் கசக்கித் தூக்கி தூர எறிஞ்சு தூங்கப் பண்ணிரும். வாணிஸ்ரீ மொகத்த பாக்கணுமே…சுசீலா புகுந்தாப்ல இருக்கும்” என்றார்.

விழியோரத்து கனவும் இன்று கரைந்தோடிடுதே” கொடுத்த போது, “நாமெல்லாம் அந்தி மழையில ரொம்ப நனைஞ்சுட்டோம். அதனால இதை அதிகம் கவனிக்காம விட்டுட்டோம். ஆரம்பத்துல ஒரு வயலின் வரும் பாருங்க‌… அஞ்சு செகண்டுதான் ஆனா அடிவயித்துல ஒரு மாதிரி பண்ணும்” என்றார்.

ஒரு முறை “நானொரு கோயில் நீயொரு தெய்வம்” [நெல்லிக்கனி / சங்கர் கணேஷ் / SPB – மலேசியா வாசுதேவன்] பாடலைக் கொடுத்திருந்தேன். பதிவு செய்து தருகையில் சரிபார்க்க அந்தப் பாடலை ஓட விட்ட அவர் கண்மூடி அமர்ந்து விட்டார். பாடல் முழுவதும் ஓடியபின், “சே… ஒரு பயகூட எங்க இருக்கான்னு தெரியலையே” என்று கம்மிய தழுதழுத்த‌ குரலில் அவர் சொன்னபோது நீர்த்துப் போன நட்பு காலம் பற்றிய முதுமையின் ஆதங்கம் தெரிந்தது.  கல்லூரி காலம் முழுவதும் “கங்கை வேடன் தன்னை ராமன் தோழன் என்று கொண்டானே ; கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னை தந்தானே; கவிவேந்தன் கம்பன் வந்து நம்மைப் பாட மாட்டானோ – கதையல்ல உண்மை என்று வரலாறு காட்டானோ” அவ்வப்போது எட்டிப் பார்த்துக்கொண்டே இருந்தது.

ஜென்சி பாடல்களாய் பதிவு செய்தபோது “நீ வருவாய் என நான் இருந்தேன்” [சுஜாதா / MSV /கல்யாணி மேனன்] பாட்டையும் லிஸ்டில் எழுதியிருந்தேன். பார்த்த மறுநொடி, “இதப்பாடினது கல்யாணி மேனன். ஜென்சி இல்லை. ஜென்சிக்கு கொஞ்சம் ஜலதோஷம் பிடிச்சா இப்படித்தான் இருக்கும்…இந்த கேஸட்டுல எப்படி பொருந்தும்” என்றார். வாணி ஜெயராமின் நல்ல பாடல்கள் அனைத்தையும் பதிவு செய்தாயிற்று என்று நினைத்த போது “சமுத்ர ராஜ குமாரி“யை [எங்கள் வாத்தியார் / MSV / SPB – வாணி ஜெயராம்] எப்படி விட்டீங்க என்று ஆனந்த அதிர்ச்சியூட்டி சிறுவயதின் எச்சமான ஞாயிற்றுக்கிழமை மதிய நேரத்து இலங்கை வானொலியை நினைவில் திருக வைத்தார்….எல்லாம் இருப்பது போலவே இருந்து கொண்டே இருந்தால் காலம் எதற்கு? நாம் எதற்கு? 2004ல் விடுமுறைக்கு மதுரை சென்ற போது மூன்று கேசட்டுகள் பதியச் சென்றிருந்தேன். கடைக்குள் காலம் கத்தரியுடன் காத்திருந்ததை நான் அறிந்திருக்கவில்லை. ஒரு வருடமாக சிடி ரெக்கார்டிங்கும் செய்யத் துவங்கியிருந்தார் அவர். ஆனால் வளர்ச்சியின் மகிழ்ச்சிக்குப் பதில் முகம் களையற்று இருப்பது போலத் தோன்றியது. பில் போட்டபடியே “ரெண்டு மூணு மாசத்துல கடையை மூடிடலாம்னு இருக்கோம் தம்பி” என்றார். அவரின் பார்வை அந்த தடித்த புத்தகங்களின் மீது இருந்தது. கண்கள் தளும்பியிருந்தன…”ரொம்ப டவுனாயிருச்சு…ஏதோ mp3ன்னு வந்திருக்காமே இம்மாத் தண்டிதான் இருக்குமாம் ஆனா ஆயிரம் பாட்டு வச்சுக்கலாமாம்” என்று தன் விரற்கட்டையை காட்டியபடி, “இனிமே யாரு ரெக்கார்ட் பண்ணி பாட்டு கேக்கப் போறாங்க‌”  என்றார். “முப்பது வருஷமா எங்கூடவே புள்ளக்குட்டிங்க மாதிரி இதுக இருந்துருச்சுதுக” என்று அவர் கைகாட்டிய அறையெங்கும் அடுக்கடுக்காய் கிராமபோன் ரெக்கார்டுகள் துவங்கி சிடிக்கள் வரை நிரம்பியிருந்தன… நான் அவரையே பார்த்தபடி நின்றிருந்தேன்…”அதுக” எத்தனை கேஸட்டுக்களுக்குள் ஏறி எத்தனை வீடுகளுக்குள் புகுந்திருக்கும்! எத்தனை ஆயிரம் மனங்களில் அமர்ந்திருக்கும்! எத்தனை கோடி எண்ணங்களை வகுந்திருக்கும்!

நான் கொடுத்த கேஸட்டுகளுடன் அவர் எனக்காக தனியே ஒரு கேஸட் பதிவு செய்து ஞாபகார்த்தமாக கொடுத்தார். ஒவ்வொரு கேஸட் பதிவு செய்த பின்னும் அதன் உள்ளடக்க அட்டையில் தேதியிட்டு கையெழுத்திடும் பழக்கம் எனக்கு இருந்தது. அவர் எனக்கென பதிவு செய்து கொடுத்த கேசட்டில் அவரை கையெழுத்திடச் சொன்னேன்…

அன்று காம்பவுண்டு தாண்டி அடிபம்பு வரை வந்து வழியனுப்பினார். “நல்லாருங்க போயிட்டு வாங்க” என்று அவர் சொன்னபோது, தான் உருவாக்கி விளையாடி, பின் ஒன்றுமில்லாமல் போகச்செய்யும் கோடிக்கணக்கான இழைகளில் ஒன்றை வெட்டிய திருப்தியுடன் கத்தரியை கையிலேந்தி தன் அடுத்த வேலையை பார்க்கப் போயிருந்தது காலம்.

அன்று அவர் எனக்கென கொடுத்த கேசட் சில வருடங்களுக்கு முன் அறுந்து போனது. அறுந்தவை அனைத்தையும் தூக்கி வீசிட‌ முடியுமா? வீசத்தான் வேன்டுமா? மீண்டும் பாடாது, பாட வைக்க முடியாது என்று தெரிந்தும் அந்த கேசட் பத்திரமாக இருக்கிறது. வைத்திருக்க மனம் விரும்புகிறது. மீண்டும் நிகழவே வாய்ப்பில்லை என்று நன்றாகத் தெரிந்தும் அதன் நீட்சியான  நினைவுகள் எல்லாம் நம்மை விட்டு விலகி விடுகிறதா? அல்லது விலக்கத் தான் முடிகிறதா? அறுபட்ட ஒன்று முற்றிலும் அப்புறப்படுத்திவிடக் கூடிய தன்மை அடைகிறது என்றால் அது அறுபடுவதற்கு முந்தைய நிலையில் இணைத்திருந்த இரண்டு நுனிகளில் குறைந்தபட்சம் ஒன்றேனும் சுயநலத்தின் பூச்சு கொண்டதாக இருந்திருக்க‌ வேண்டும் இல்லையா? கேசட்டாக இருந்தால் என்ன மனித உறவாக இருந்தால் என்ன? இதானே அறுபடுதலின் அம்சம்? நல்ல வேளை. குணசீலனுக்கும், எனக்கும், அந்த கேஸட்டுக்கும் அந்த நிலை இதுவரை நேரவில்லை. நினைவின் பரணில் நிரந்தரமாகிப் போன நினைவு நாடாக்களில் ஒன்றாக அடுக்கப்பட்ட கேஸட்டுக்களின் நடுவே அமைதியாக அமர்ந்திருக்கிறது அந்த அறுபட்ட கேஸட்.

6 Comments »

 • Senthil said:

  இசையால் உருவான இசைக்கு நிகரான உறவின் வெளிப்பாடு!!!

  # 19 August 2014 at 7:22 pm
 • Suriya said:

  Awesome Kumaran… Enakkum oralavukku entha cassette recording pazhakkam irunthathu.. Never located this shop.. I could definitely connect the emotion..

  # 20 August 2014 at 12:24 pm
 • SHANMU said:

  Excellent Kumaran!
  Even I have also traveled back to those days!
  Those days were golden days and memories!
  Mesmerizing article!
  Do Keep it up!

  # 22 August 2014 at 9:43 am
 • சந்திரமௌலி said:

  எழுபது எண்பதுகளின் இசைக் குழந்தைகளை வளர்த்த இளையராஜா என்னும் அன்னைக்கு சமர்ப்பிக்கபட்ட சிறந்த சொல்சித்திரம்.

  # 29 August 2014 at 7:59 am
 • Anand said:

  அருமையான கட்டுரை குமரன்.பால்ய வயதிற்கு போய் வந்த அனுபவம்.இன்றைய உலகில் குணசீலன் போன்றவர்களை காண்பதரிது.
  தொடர்ந்து பகருங்கள்!!

  # 1 September 2014 at 7:19 pm
 • Jegan said:

  The same experience for me .But with another one in Madurai.
  Stero world music center. opp to Madura coats.

  # 23 February 2015 at 9:19 am

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.