ரசிகன்

இன்று

வர்ணம் பாடி முடித்ததில் இருந்து நானும் கவனித்துக் கொண்டிருந்தேன். உட்கார்ந்திருந்த பத்துப் பேர் ஒருவர் ஒருவராகக் கரைந்து கொண்டிருந்தார்கள்.

ஒவ்வொருவரும் எழுந்து போகும் போது முறைத்துப் பார்த்தேன். ஓங்கி ஓங்கித் தாளம் போட்டேன். பாடிக் கொண்டே உச்ச ஸ்தாயியில் முகம் சுளிக்கக் கூட முயற்சி செய்தேன்.

போனவர்கள் இன்னும் வேகமாக அகன்றார்கள்.

அலுவலக நண்பர்கள் இருவர் எழுந்து ‘தம்’ அடிக்கப் போவதாகக் கை காட்டிச் சென்றார்கள். திரும்ப வரவேயில்லை. தனி ஆவர்த்தனம் நெருங்கியது. மிஞ்சி இருக்கும் நாலு புண்ணியவான்கள் அகன்று விடுவார்களோ என்ற பயத்தில் மிருதங்கத்தானைக் கண்களால் கெஞ்சினேன். அவனோ இரக்கமேயில்லாமல் ஆவர்த்தனம் தொடங்கினான். பளார், பளாரென்று காது கிழிய அவன் அடித்த அடியில் மூன்று பேர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு ஓடினார்கள்.

எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. உட்கார்ந்திருந்த ஒருவருக்காக இன்னும் முக்கால் மணி நேரம் பாட வேண்டுமா? இல்லை நிறுத்தி விட்டு வீட்டுக்குப் போய் டி.வி பார்க்கவா?

ஆனால் உட்கார்ந்திருந்தவர் நகரவில்லை. என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். வயதானவர். எங்கேயோ பார்த்தது போல இருந்தார்.

மங்களம் பாடி எழுந்த போது மிருதங்கத்தான் வயலினானைப் பார்த்துக் கண்ணடிப்பது தெரிந்தது. கேலி செய்கிறான்! அடி அடி யென்று மிருதங்கத்தை விளாசிவிட்டு என்னையே கிண்டல் செய்கிறான். கர்நாடகக் கச்சேரி உலகின் முதல் உண்மை எனக்குப் புரிந்தது. கச்சேரி தோற்றால் பழி பாடியவன் பேரில்தான்.

மர மேடையில் கோபத்துடன் தொம் தொம்மென நடந்து இறங்கிய போது என்னுடைய ஆடியன்ஸ் அப்படியே அமர்ந்து இருந்தார். சற்றுக் கவலை எழுந்தது. வயதானவர். இவ்வளவு நேரம் தனியாக அமர்ந்து இருக்கிறார். வீட்டுக்குச் சொல்ல வேண்டுமோ என்னவோ. கடவுளே! தெரியாமலே முகாரி பாடி விட்டேனோ?

அப்பா தம்புராவைத் தூக்கிக் கொண்டு பின்னால் இறங்கி வந்தார்.

“கார்த்தி..இதப் பிடி”, என்று அதைக் கையில் கொடுத்து விட்டு வேட்டியை இறுக்கிக் கட்டினார்.

சபா காரியதரிசி வந்தார். “பையன் நல்லாப் பாடினானே”, என்றார். மனிதர் இத்தனை நேரமாகக் கண்ணிலேயே படவில்லை.

அப்பா, “டேய்..சார நமஸ்காரம் செஞ்சுக்க. முதல் முறையா சீஸன்ல சான்ஸ் கொடுத்திருக்கார்”, என்றார்.

நான் காலில் விழத் தயாரானேன்.

காரியதரிசி, “அதெல்லாம் வேண்டாம் சார்”, என்றார்.

நான் நிமிர்ந்தேன்.

அப்பா, “விழுடா. சொல்றேன்ல”, என்றார்.

“வேண்டாம் சார்.”

நான் கடைசியாகக் காலில் விழுந்தேன். காரியதரிசி நகர்ந்து கொண்டார். புழுதியில் வெள்ளை வேட்டி சட்டையுடன் புரண்டு எழுந்தேன்.

காரியதரிசி, “சார்..நான் சொன்னேனே. அந்த வேலை விவகாரம். கொஞ்சம் பார்த்து செஞ்சீங்கன்னா..”, என்றார்.

“கவலையே படாதீங்க. எல்லாம் முடிஞ்ச மாதிரி தான்”, என்றார் அப்பா. பிறகு என்னை அழைத்துக் கொண்டு முன்னால் வந்தார்.

“அது யாருப்பா?” என்று வயதானவரைக் காட்டிக் கேட்டேன்.

“அவரா? நம்ப தூரத்து சொந்தம்..வா, ஆசீர்வாதம் வாங்கிக்க”, என்றார்.

நான் கச்சேரியில் கடைசி வரை அமர்ந்திருந்த கடனுக்காக அந்த வயதானவர் காலிலும் விழுந்து எழுந்தேன்.

லஸ் கார்னருக்கு ஆட்டோ பிடிக்க நடந்து போனோம். அப்பா தம்புராவை என் கையில் கொடுத்து விட்டு கையை வீசிக் கொண்டு நடந்தார். லஸ்ஸின் இரக்கமற்ற மஞ்சள் வெளிச்சமய உலகில் ஜிப்பாவும் வேஷ்டியும் அணிந்து தம்புராவும் கையுமாக நின்று கொண்டிருந்தேன். ஆளற்ற கச்சேரியில் பாடியதை எண்ணாமல், என் வயதொத்த இளைஞர்கள் பைக்குகளில் தாண்டிப் போவதைப் பார்த்துக் கண் கலங்கியது.

அன்று

முதற்கண் நாங்கள் சங்கீதக் குடும்பம் அல்ல என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன். என் தாத்தாக்களோ, பாட்டிகளோ யாரும் கர்நாடக சங்கீதம் பாடி அறியேன். அப்பாவின் வாலிபத்தில் மதுரையில் பக்கத்து வீட்டு நண்பர் ஒருவர் அறிமுகப்படுத்தித் தான் சங்கீதம் எங்கள் குடும்பத்தில் பிரவேசித்தது. இருந்த போதும் அப்பாவோ அம்மாவோ ராகங்களைப் பற்றிய சர்ச்சையில் ஈடுபட்டோ பெரிதாகத் தாளம் போட்டோ கூட நான் பார்த்ததில்லை. டிவியிலும் ரேடியோவிலும் கச்சேரி கேட்பார்கள்.

அமைதியாகக் கிரிக்கட்டும் கண்ணாமூச்சியுமாக கழிந்த என் சிறு பருவத்தில் புயலென நுழைந்தார் மாண்டலின் சீனிவாசன். பத்து வயதில் சங்கீத மேதையாக அவர் அறிமுகமானது, தமிழகமெங்கும் என்னைப் போன்று மகிழ்ந்து குலாவி வாழ்ந்த சிறுவர்களின் வாழ்க்கையில் ஒரு பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது.

srinivas-01

சென்னையில் ராம நவமிக்கு மாம்பலத்தில் நடந்த கச்சேரிக்கு அப்பா என்னை அழைத்துப் போனார். ஆயிரக்கணக்கான அப்பாக்கள். எல்லோரும் மாண்டலினை ரசித்தார்கள். அதே நேரம் திரு.சீனிவாசன் பின்னால் பெருமையுடன் அமர்ந்திருந்த அவர் தந்தையையும் கவனித்துக் கொண்டார்கள். வரப் போகும் ஆபத்தை அறியாமல் நான் பாதி கச்சேரியில் அப்பாவின் மடியில் படுத்துத் தூங்கிப் போனேன்.

ஒரு நாள் மாலை சரியாக நான் பேட்டிங் பிடிக்கும் நேரம் அம்மா வீட்டிலிருந்து கூப்பிட்டாள்.

“போங்கம்மா”, என்றேன். மாலை முழுதும் ஃபீல்டிங் பிடித்த என் கை பேட்டை விட மறுத்தது.

“ஒரு நிமிஷம் வந்திட்டுப் போ”, என்றாள் அம்மா.

எனக்கு அப்பா பூனை வாங்கிக் கொடுப்பதாகச் சொல்லியிருந்தார். ஒரு வேளை பூனை தான் வந்து விட்டதோ? பேட்டைக் கொடுத்து ஓடினேன். வீட்டுக்குள் போய், “பூனை எங்கே”, என்று கேட்டேன்.

பூனை இல்லை. பாகவதர் இருந்தார். தரையில் ஆர்மோனியப் பெட்டியுடன் இளையராஜாவைப் போல அமர்ந்திருந்தார்.

அப்பா, “கார்த்தி, பாட்டு டீச்சர் வந்திருக்கார் பாரு. நமஸ்காரம் பண்ணு”, என்றார்.

அப்போது தொடங்கியது.

நான் மலங்க மலங்க விழித்தபடி தரையில் உட்கார்ந்தேன். டீச்சர் சுருதி கண்டுபிடிக்க ஸரிகம பாடச் சொன்னார். பாடினேன். “நல்ல குரல்”, என்று தெரிவித்தார். அப்பாவும் அவரும் சிறிது நேரம் டீச்சரின் குரு பரம்பரை பற்றி விவாதித்தார்கள். செம்மங்குடி சீனிவாச ஐயரிடம் டீச்சரின் குரு பத்து நாள் படித்ததால் செம்மங்குடி பாணி என்று முடிவு செய்தார்கள்.

டீச்சர் கிளம்பும் போது இருட்டி விட்டது. கிரிக்கட்டில் அன்றைய சரித்திரத்தில் என் பெயர் இல்லை. வாசலில் நின்றபடி டீச்சரும் அப்பாவும் பேசிய சில சொற்கள் என்னைத் துணுக்குறச் செய்தன.

“திங்கள், செவ்வாய், வியாழன் மூணு நாளும் வந்திடறேன்”, என்றார் டீச்சர்.

“எத்தனை மணிக்கு வருவீங்க?”

“அஞ்சு மணிக்கு கரக்டா வந்திருவேன்.

“ஐந்து மணியா?! வீட்டை விட்டு ஓடிப் போக வேண்டிய நேரம் வந்து விட்டது.

இன்று

ஆட்டோக்காரர்கள் எல்லோரும் தம்புராவைப் பார்த்து விட்டு ஓட்டம் பிடித்தார்கள். கடைசியில் ஒருவர் நிறுத்தினார். தம்புராவுக்குத் தனியாக இருபது ரூபாய் கேட்டார். ஏறிக் கொண்டோம்.

முதல் கச்சேரி செய்திருக்கிறேனே, கோடி கோடியாய் சன்மானம் கிடைத்திருக்குமே என்று நினைப்பீர்கள். ஒரு உண்மையைச் சொல்லவா? என் அப்பா சபா காரியதரிசியின் மனைவியின் தம்பிக்கு வேலை வாங்கிக் கொடுத்ததால் தான் இந்தக் கச்சேரி. இது போல இன்னும் இரண்டு பேருக்குச் சொல்லியிருந்தார். சீஸன் சமயத்தில் மூன்று கச்சேரிகள்!

வீட்டில் அம்மா ஆரத்தியுடன் நின்றிருந்தாள். அக்கம்பக்கத்தில் எல்லோரும் வேடிக்கை பார்த்தார்கள்.

உள்ளே போனதும் அம்மா, “கச்சேரி எப்படி இருந்தது”, என்று அப்பாவிடம் கேட்டாள். எனக்குக் கோபம் வந்தது.

“நீங்களாவது வந்திருக்கலாம்ல? ஒருத்தர் மட்டும் தான் கச்சேரி முழுசும் கேட்டார்”, என்றேன்.

“யாரு? நம்ப ராமநாதன் தாத்தாவா?”, என்று கேட்டாள் அம்மா. நான் மகிழ்ந்து போனேன். என் கச்சேரிக்கு வந்த ஓரே ஆளை எல்லோரும் தெரிந்து வைத்திருந்தார்கள்.

“மிருதங்கம் சரியில்லை”, என்றார் அப்பா.

எனக்குச் சோர்வாக இருந்தது.

“அடுத்த கச்சேரிக்கும் தாத்தா வருவாரா?” என்று கேட்டேன்.

“உயிரோட இருந்தா வருவார். நான் அவங்க குடும்பத்துக்கு நிறையப் பண்ணியிருக்கேன். நிறையக் கடமைப்பட்டவர்”, என்றார் அப்பா.

என் கச்சேரிக்கு எங்கள் குடும்பத்துக்கு கடமைப்பட்டவர்கள் தான் வருவார்கள் போலிருக்கிறது.

அன்று

பத்தாவது வகுப்பு படிக்கும் போது பக்கத்துப் பள்ளியில் நடந்த தியாகராஜ உற்சவத்தில் தான் நான் முதன் முதலாக வெளியில் பாடியது. எனக்கு வெளியில் பாடுவதை நினைத்துப் பயமாக இருந்தது. அப்பாவிடம் நான் தனியாக வீட்டுக்குள் பாடியே வாழ்க்கையைக் கழித்தால் என்ன என்று கேட்டேன்.

நன்றாக அடி வாங்கினேன்.

உற்சவத்தன்று என்னைப் போல பல மாணவர்களும் மாணவிகளும் வந்திருந்தார்கள். பெரிய கூட்டம். முதலில் எல்லோரும் சேர்ந்து பாட வேண்டும். பாடினோம். நான் முடிந்த வரை தணிவான குரலில் பாடினேன். தியாகராஜரை மனதிற்குள் நினைத்தால் போதும் என்று தோன்றியதால் சிறிது நேரத்தில் பாடுவதை நிறுத்தி விட்டு மற்றவர்களை வேடிக்கை பார்த்தேன்.

தனித்தனியாகப் பாடும் நேரம் வந்தது. ஒரு வழியாக என்னைக் கூப்பிட்டார்கள். நான் மேடையில் ஏறும் போது தான் இரு பக்கமும் மிருதங்கத்தையும் வயலினையும் கவனித்தேன். எனக்குப் பயம் அதிகமாகியது. தொடை நடுங்கியது. அவர்கள் இருவரும் என்னை வாஸிம் அக்ரம் ஸ்ரீகாந்த்தைப் பார்ப்பது போலப் பார்த்தார்கள்.

பாடத் தொடங்கினேன். முன்னால் உட்கார்ந்திருந்தவர்களைப் பார்க்காமல் விட்டத்தைப் பார்த்தவாறு பாடினேன். அப்பா பின்னால் இருந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். என்னை இந்த கதிக்கு ஆளாக்கி விட்டாரே என்று தோன்றியது. மிருதங்கம் தாளத்தை ஒரு பக்கமாக இழுத்தது. எனக்கும் அவனுக்கும் ஒரு யுத்தமே நடந்தது. பாடி முடித்தவுடன் தலையைக் குனிந்தவாறே மேடையிலிருந்து இறங்கினேன்.

அப்பா வந்து வெளியே அழைத்துப் போனார். நான், “எப்படிப்பா பாடினேன்?” என்று கேட்டேன்.

“நல்லாப் பாடின..வயலின் தான் சரியில்ல.”

இன்று

கச்சேரி முடிந்த மறு நாள் ஆஃபீஸ் போனேன். அப்பாவின் நண்பரின் கம்பெனி. அக்கவுண்ட் கிளார்க் வேலை. காலையில் போனால் மாலை வரை அரட்டை தான்.

முந்திய நாள் கச்சேரிக்கு வந்திருந்த நண்பர்களைப் பார்த்தேன். அவர்களாகவே கச்சேரியைப் பற்றிப் பேசுவார்கள் என்று நினைத்தேன். ஒருவர் கூடப் பேச்சே எடுக்கவில்லை. எனக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. நன்றாகப் பாடினாய் இல்லை பாடவில்லை என்று கருத்துச் சொன்னால் என்ன? அடுத்த கச்சேரிக்குக் கூப்பிடக் கூடாது என்று முடிவு செய்தேன். பிறகு இவர்களும் வரா விட்டால் தாத்தா மட்டும் தான் இருப்பார் என்று தோன்றியதால் முடிவை மாற்றிக் கொண்டேன்.

லஞ்ச் நேரத்தில் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். உலக நடப்புகள், உள்ளூர் நடப்புகள் எல்லாவற்றைப் பற்றியும் பேசினார்கள்.

கடைசியாக நான் பொறுக்க மாட்டாமல், “நேத்து நைட் எப்பிடி”, என்றேன்.

எல்லோரும் என்னைப் பார்த்தார்கள்.

“எது எப்பிடி?”

“பாட்டு..எப்பிடி?”

“ஓ..அதுவா?” எல்லோரும் மௌனமாக இருந்தார்கள்.

“உனக்கு வயலின் வாசிச்சானே, அந்தப் பையன எங்கயோ பார்த்த மாதிரி இருந்தது.”

“எதோ சீரியல்ல வரான்னு நினைக்கறேன்.”

“நேத்து தென்றல் பார்த்தியா?”

இப்பொழுது மெட்டி ஒலி, திருமதி.செல்வம் என்று சீரியல் பற்றிப் பேசத் தொடங்கினார்கள். என் பாட்டைப் பற்றி ஏன் யாருமே அபிப்ராயம் சொல்வதே இல்லை? அவ்வளவு மோசமா? இல்லை இது எல்லாம் ஞான சூன்யங்களா? தீர ஆராய்ந்ததில் எல்லோரும் ஞான சூன்யங்கள் என்ற முடிவுக்கு வர வேண்டி இருந்தது.

***

111229-give_carnati_878152f

[நன்றி: தி ஹிந்து]

இரண்டாவது கச்சேரி தி.நகரில். தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னால் போய் விட்டேன். எனக்கு முன்னால் ஒருவன் கச்சேரி செய்து கொண்டிருந்தான். என் வயதுதான் இருக்கும். நல்ல கூட்டம். தலையை ஆட்டி எல்லோரும் ரசித்தார்கள். சில இடங்களில் ‘ஆஹா’ என்று கத்தினார்கள். நான் இப்படிக் கத்தியவர்களைக் குறித்து வைத்துக் கொண்டேன். நான் பாடும் போது என்ன செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

அவன் பாடி முடித்ததும் பெரும் கரவொலி. மேடையில் பலர் போய்க் கை கொடுத்தார்கள். பெருமையுடன் இறங்கி வந்தான்.

நான் நிமிர்ந்து நின்று கொண்டேன். அவன் தாண்டிப் போகும் போது கம்பீரமாக அவனைப் பார்த்துத் தலையாட்டினேன். அவன் கவனிக்கவே இல்லை. மேடையில் ஏறினேன். பெரிய அதிர்ச்சி! மிருதங்கம், முதல் கச்சேரியில் வாசித்த அதே ஆள்! அடப் பாவி! ஏன் ஊமைச்சியைப் போல என்னைச் சுற்றி வருகிறாய்? சிறையில் கல்லுடைத்தவன் போல இருந்தன அவன் கைகள். என்னை முறைத்தவாறே மிருதங்கத்துக்குச் சுருதி கூட்டினான்.

மைக்குக்கு நேராக உட்கார்ந்து நிமிர்ந்து பார்த்தால் இன்னும் பெரிய அதிர்ச்சி! எல்லோரும் போய் விட்டார்கள். நாலு பேர் தான் அமர்ந்து இருந்தார்கள். ராமநாதன் தாத்தா இன்னும் உயிரோடு இருக்கிறார் என்று தெரிந்தது. எதிரில் உட்கார்ந்திருந்தார். அவர் மேல் எனக்குப் பாசம் பொங்கியது.

எல்லோரும் ஏன் போனார்கள்? இன்னொரு கச்சேரி இருக்கிறது என்று தெரியாதா? என்னிடம் என்ன குறை கண்டார்கள்?

நான் பாடி முடித்த போது மறுபடி ராமநாதன் மட்டும் தான் இருந்தார். அப்பாவுடன் அவர் அருகே போனேன்.

“நமஸ்காரம்”, என்றேன்.

தாத்தா தலையை ஆட்டினார்.

“கச்சேரி எப்படி?” என்றேன்.

அப்பா, “போகலாம் வாடா..”, என்றார்.

“இருப்பா..தாத்தா, கச்சேரி எப்படி இருந்தது?”

தாத்தா என்னைக் குழப்பத்துடன் பார்த்தார். பிறகு ஈன ஸ்வரத்தில் “என்ன கேக்கிறாய் தெரியலியே?” என்றார்.

நான் உரத்து, “கச்சேரி எப்பிடி?” என்றேன்.

“எனக்குக் காது கொஞ்சம் கேக்காது..”

நான் அப்பாவைப் பார்த்தேன்.

“வா, போகலாம். நேரமாகுது..”, என்றார்.

***

வீட்டில் மறுபடி ஆரத்தி. நான் பெரும் குழப்பத்தில் இருந்தேன். வீட்டுள்ளே போனவுடனே, “காதே கேக்காம எதுக்குப்பா கச்சேரி வரார்?”

அப்பா, “அவ்வளவு சங்கீத ரசனை”, என்றார்.

பிறகு நான் முறைத்ததும், “நான் தான் சொன்னேனே. நமக்கு ரொம்பக் கடமைப்பட்டவர்”, என்றார்.

நான், “ஏம்பா என் பாட்டுக்கு மட்டும் யாரும் வரதில்ல?” என்றேன்.

“முதல்ல அப்பிடித்தாண்டா இருக்கும்”, என்றாள் அம்மா.

“நான் நல்லாப் பாடலியா?”

இருவரும், “நல்லாப் பாடற”, என்றார்கள் கோரஸாக.

மறு நாள் காலை நான் ஒரு முடிவுக்கு வந்திருந்தேன்.

“அப்பா, நான் இனிம பாடப் போகிறதில்ல”, என்றேன்.

அப்பா அதிர்ச்சியுடன், “ஏண்டா?” என்றார்.

“தனியா சபால பாட பயமாயிருக்கு.”

“உளறாத.”

“இல்லப்பா. போதும் பாடினது. கம்ப்யூட்டர் படிக்கிறேன்.”

“பேத்தாத. போய்ப் பல் தேச்சிட்டு வா.”

நான், “அப்பா, சீரியஸாச் சொல்றேன்…தியாகராஜருக்குக் குட் பை”, என்றேன்.

****

முதலில் என் முடிவின் தீவிரம் எனக்கே புரியவில்லை. அன்று மாலை சாதகம்(பயிற்சி) செய்யும் நேரம் வந்தது; சென்றது. நான் பாடவில்லை. மறு நாள் காலை அப்பா என்னிடம் வந்தார்.

“ஏண்டா சாதகம் பண்ணல?” என்றார்.

நான் நன்றாகத் தலையணையைக் கட்டிப் படுத்துக் கொண்டு, “இல்லப்பா”, என்றேன்.

அப்பா கவலையுடன், “ஏண்டா?” என்றார்.

“நான் தான் சொன்னேனே, பாட்டுக்குக் குட்பை”, என்றேன்.

அம்மா உள்ளிருந்து ஓடி வந்தாள். “அப்படில்லாம் சொல்லாதரா கார்த்தி”, என்றாள்.

“இவனுக்கு வேற ஓண்ணுமில்ல. சோம்பேறித்தனம்”, என்றார் அப்பா.

நான் வீறு கொண்டு எழுந்து உட்கார்ந்தேன், தலையணையை விடாமல்.

“யாருக்குப்பா சோம்பேறித்தனம்? பனிரெண்டு வருஷமா காலையில ஆறு மணிக்கு எழுந்து கத்தியிருக்கேன்..நீங்க குறட்டை விட்டுத் தூங்கும் போது”, என்றேன்.

அம்மா இதற்குள் கண்ணீரும் கம்பலையுமாக கைவிடப்பட்ட அபலை போல ஆகி இருந்தாள்.

“நாங்க செஞ்ச தியாகத்துக்கெல்லாம் அர்த்தமே இல்லாம போயிடும்டா”, என்றாள்.

“நான் மட்டும் தியாகம் செய்யலையாம்மா?” என்றேன். எனக்குத் தொண்டை அடைத்தது. “இவ்வளவு வருஷமா வீட்டுக்குள்ளயே உக்காந்து படிச்சிருக்கேன். இப்ப பார்த்தா, ஒரு பய என் பாட்டக் கேக்க வரல..என்ன புண்ணியம் சொல்லுங்க”, என்றேன்.

அப்பா நிதானமாக, “டேய்..மகராஜபுரம் சந்தானம் முதல்ல பாடும் போது யாருமே கேக்க வரல. அப்புறம் பாரு..திருவிழாக் கூட்டம்”, என்றார்.

“அப்பா..நான் கூட்டம் வரணும்னு சொல்லல. என் பாட்டு எப்பிடி இருக்குனு ஒருத்தர் கூட சொல்லலியே.”

“நல்லா இருக்கு”, என்றார்கள் இருவரும் கோரஸாக.

“நீங்க சொன்னா போதாது”, என்றேன்.

“அடுத்த கச்சேரியாவது பாடிரு. ஒப்புக்கிட்டாச்சில்ல”, என்றார் அப்பா.

நான் யோசித்து, “சரி..ஆனா அது தான் கடைசி”, என்றேன்.

அடுத்த கச்சேரியன்று காவிய புதன். யாரும் வர மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருந்தது எனக்கு.

வாணி மஹால் அருகே மூன்றாவது கச்சேரி. என் வாழ்க்கையில் கடைசி முறையாகப் பாடுகிறேன் என்று மனதில் உறுதி செய்து கொண்டேன். மறுபடியும் காது கேட்காத தாத்தாவை மகிழ்விக்க என் மனம் ஒப்பவில்லை. கச்சேரி மதியம் ஒரு மணிக்கு. சபாவின் அருகில் கேன்டீன் உண்டு. டி.வியில் அன்று நல்ல சினிமா எதுவும் கிடையாது. மிதமான வெயில். இதற்கு மேல் யாரும் வரா விட்டால் நான் பாடுவதில் அர்த்தமே இல்லை.

ஆனால் நான் மேடையில் அமர்ந்து சுற்றிப் பார்த்த போது நல்ல கூட்டம். கிட்டத்தட்ட ஐம்பது பேர் இருப்பார்கள். நான் ஆச்சரியத்துடன் பாடத் தொடங்கினேன். வர்ணம் பாடி முடித்துப் பார்த்தால் யாரும் நகரவில்லை.

எனக்குச் சற்றுக் கவலை பிறந்தது. ஒவ்வொருவரையும் உற்றுப் பார்த்தேன். ஏன் யாரும் நகரவில்லை? இடித்த புளி போல அமர்ந்து இருந்தார்கள்.

தனி ஆவர்த்தனத்தின் போது மறுபடி எல்லோரையும் கவனித்தேன். மூன்றாவது வரிசையில் அப்பா ஆஃபீஸ் ஹெட் கிளார்க் தெரிந்தார்.

பரவாயில்லையே..சங்கீதம் கேட்கிறாரே. சற்றுத் தள்ளி எங்கள் பழைய வீட்டின் அருகில் இருந்த ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவருக்குப் பக்கத்தில் அம்மாவின் பழைய நண்பி.

இவர்கள் எல்லோரும் சேர்ந்து கச்சேரி கேட்க வந்திருக்கிறார்களா? எனக்கு மெல்ல புரியத் தொடங்கியது. அப்பாவைத் திரும்பிப் பார்த்து முறைத்தேன்.

ஒருவாறு கச்சேரியை முடித்து எழுந்தேன். எல்லோரும் ஒன்று போலக் கை தட்டினார்கள்.

மேடையின் பின்னால் நான் அப்பாவிடம், “கட்சிக் கூட்டத்துக்கு ஆள் பிடிக்கிற மாதிரி பிடிச்சு வந்திருக்கீங்க?” என்றேன். அப்பா சும்மா இருந்தார்.

பிறகு, “இல்லடா..நீ ரொம்ப சோர்ந்து போயிட்ட..அதான்”, என்றார்.

நான் களைப்புடன் திரும்பினேன்.

“பாடுறத நிறுத்திடாதடா..” என்றார் அப்பா பரிதாபமாக.

பக்கத்தில் யாரோ கத்திக் கொண்டிருந்தார்கள். திரும்பிப் பார்த்தோம்.

சபா காரியதரிசி ஒரு வயதானவரைப் பார்த்து, “டேப்பக் குடுங்க”, என்று கத்தினார்.

பெரியவர், “இப்ப என்ன பெரிசா நடந்திடுச்சி”, என்றார்.

காரியதரிசி என்னைப் பார்த்து, “நம்மளக் கேக்காம கச்சேரி முழுசையும் டேப் பண்ணியிருக்கார்”, என்றார்.

அப்பா அந்தப் பெரியவரிடம், “டேப்பக் குடுங்க. ரிகார்டெல்லாம் பண்ணக் கூடாது”, என்றார்.

பெரியவர், “இல்ல சார்..வீட்டுல சும்மா போட்டுக் கேக்கத் தான”, என்றார்.

நான் அப்பாவிடம், “இவர் நம்மளுக்குத் தெரிஞ்சவர் இல்லையா”, என்றேன்.

அப்பா அசிரத்தையுடன், “இல்லடா”, என்றார்.

பெரியவரிடம் நான், “கச்சேரி எப்பிடி இருந்தது?” என்று கேட்டேன்.

அவர், “தம்பி..பிரமாதமாப் பாடின. அதுவும் காம்போதி ஆலாபனை..ராவணனே பாடின மாதிரி இருந்தது”, என்றார்.

ராவணனா..?!

அப்பா, “டேப்பக் குடுமையா”, என்றார்.

நான், “அப்பா! இருங்க. சார்..வேற என்ன நல்லா இருந்தது?” என்றேன்.

“செம்மங்குடி பாணியோ?”

“ஆமாம்”, என்றார் அப்பா.

“தெரியறது. ‘இந்த சௌக்ய'”, என்று கத்திப் பாடத் தொடங்கினார் பெரியவர்.

காரியதரிசி விழித்தார். “டேப்ப அவரே வச்சிக்கட்டும்” என்றேன் அவரிடம்.

சபாவிலிருந்து வெளியே வந்தோம். அப்பாவின் கும்பல் எல்லோரும் விடைபெற்றுக் கிளம்பினார்கள். ஒருவராவது என்னிடம் என் பாட்டைப் பற்றிப் பேசவில்லை.

நான் என் முதல் ரசிகரிடம், “வீட்டுக்கு வாங்களேன். சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்”, என்றேன்.

“இல்லப்பா. நான் கிளம்பறேன்”, என்றார் பெரியவர்.

“ஃபோன் நம்பர் குடுத்திட்டுப் போங்க. அடுத்த கச்சேரிக்குச் சொல்லி அனுப்புறேன்”, என்றேன்.

திரும்பினால், அப்பா என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தார்.