இலக்கிய ஏஜெண்டுடன் ஒரு சந்திப்பு 

வாங்க தம்பி, வாங்க. நான் தான்  செந்தமிழ்ராசன். வணக்கம். எங்கிருந்து வர்றீங்க? தேனியா? அட, நம்ம கவிஞர் ஊராச்சே, தம்பிக்கு சொந்தங்களா அவர்? பரவாயில்ல. சொந்தமாயிருந்தாலும் பெரிய மனுஷங்களாயிட்டா நாம கொஞ்சம் வெலகியே இருக்கணும். அதாங்க மரியாத. எலே, ராஜா, தம்பிக்கு சூடா ஒரு காப்பி வாங்கிட்டு வா.

பி.எஸ்சி எழுதியிருக்கீங்களா? பாஸ் ஆயிடுமில்லே? இல்லாட்டி தான் என்ன, நான் எந்த காலேஜுக்குப் போனேன்? இப்ப சென்னைல நாலு வீடு இருக்குது. ஒக்காந்து சாப்பிடலாம். மனசு கேக்குதுங்களா? நாம்ப ஒக்காந்துட்டா நம்பளப் பாத்து பசங்களும் ஒக்காந்துற மாட்டாங்களா? அதான் ஒரு நாளக்கி பதெனெட்டு மணி ஒழைக்கேறேன். பாக்குறீங்கல்ல, எனக்கு என்ன வயசு இருக்கும் சொல்லுங்க? அம்பதா? போங்க தம்பி. யாருக்கும் சொல்லிடாதீங்க, அறுபத்து மூணு ஆகுது. எல்லாம் ஒழைப்பு தான் தம்பி.

சரி வந்த விஷயத்த சொல்லுங்க. ஒங்க ஊரு பசங்க எல்லாம் காலேஜி முடிஞ்சதும் மெட்ராசில தனியார் டி.வி.கம்பெனி வாசல்ல போயி நிக்கரானுங்க. டிவி-ல பணம் குடுப்பானா தம்பி? வெளம்பரம் தான் கெடைக்கும். அதுக்கு பதிலா நாலு கவித எழுதினா பேப்பர்ல போடலாம். நூறு இருநூறு கெடைக்கும். 

அப்டியா, நீங்களும் கவிதை எழுதியிருக்கீங்களா? நூறு கவிதையா? எப்படி தம்பி இந்த வயசில இவ்ளோ நெறய எழுதினீங்க? ஸ்பைரல் பைண்டிங்க் நல்லாருக்கே! இப்டித்தான் கொண்டுட்டு வரணும். சிலவங்க பழய பேப்பர்ல எழுதி ஸ்டேப்ளர் போட்டுட்டு வருவாங்க. எடுக்கற போதே மொத பக்கம் கிழிஞ்சிடும்.

கோவில்பட்டில ஒக்காந்து எழுதினீங்களா? பாட்டி வீடா? அதான பாத்தேன், எட்டயபுரத்துக்குப் பக்கமாச்சே! பாரதியாரோட ஆவி அங்கனே ஒலாவிக்கிட்டிருக்கும்னு சொல்லுவாக, அதான் உங்க கிட்ட கவித மழையாப் பொழிஞ்சிருக்கு போல! 

வெக்கப்படாதீங்க தம்பி, கவிஞன்னா இந்த மாதிரி ஆயிரம் பேரு பாராட்டுவாங்க. அதையெல்லாம் கம்பீரமா ஏத்துக்கணும். பாரதியாரப் பாத்தீங்கல்ல, சோத்துக்கில்லாம கெடந்தாரு, ஆனா எமதர்மனயே வாடா மிதிக்கறேன்னு சொன்னாரில்லயா? 

அது சரி, எங்கிட்ட வர்ணும்னு எப்படித் தோணிச்சு? அடடே, ‘மண்ணின் மைந்தன்’ சொல்லியனுப்பினாரா? அவரும் ஒங்கள மாதிரிதான். ரெண்டு பெரிய நோட்டுபொஸ்தகம் நெறய சிறுகதெ எழுதியிருந்தாரு. மொத்தம் இருவத்தஞ்சு கதெ. அற்புதமா எழுதியிருக்காரு தெரியுமா? யாரப் பாத்தா வெளியிடுவாங்கன்னு தெரியாம ரெண்டு வருஷமா முழிச்சிக்கிட்டிருந்தாரு. சொல்றனேன்னு கோவிச்சிக்காதீங்க தம்பி. இந்த எழுத்தாளங்களே பாவப்பட்ட ஜன்மங்க. வெளி ஒலகமே தெரியறதில்ல. நல்ல வேளயா எங்கிட்ட வந்தாரு. இப்ப பாருங்க, அவரோட மொத பொஸ்தகம் ரெடி. சன்மானம் அய்யாயிரம் எங்கையில இருக்கு. பாத்தீங்கன்னா வந்து வாங்கிக்க சொல்லுங்க.

கொஞ்சம் ஒக்காருங்க. ரெண்டு கவிதயப் படிச்சிடறேன்….அடடே, என்னமா எழுதியிருக்கீங்க தம்பி. கவிதைன்னா இப்டி தான் இருக்கணும். சிலவங்க எழுதறானுங்களே சகிக்கவே முடியாம. சபாஷ்! இது தாங்க கவித. 

இப்பல்லாம் யாருகிட்ட பணம் இருக்குன்னு பாருங்க. ஐ.டி.ல இருக்கவங்க,  கால்சென்ட்டர்ல இருக்கவங்க, வெளியூர்லருந்து சென்னைல வந்து இஞ்சினீரிங்க் மெடிக்கல் படிக்கெறவங்க, – இவங்க கிட்டதான! அவங்கள மய்யமா வச்சி எழுதினாத்தான போணியாகும். நல்லாப் புரிஞ்சிவச்சிருக்கீங்க தம்பி. ரொம்ப சரியான எழுத்து. ஒங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. ஒரு பொஸ்தகம் வரட்டும். நீங்க எங்கியோ போய்டுவீங்க.

மறுபடியும் வெக்கப்படறீங்களே! நான் பதிப்பாளர் இல்லீங்க. எனக்கு இலக்கிய ஏஜண்ட்டுன்னு பேரு. அமெரிக்கால பொஸ்தகம் போடணும்னா இலக்கிய ஏஜண்ட்டு மூலமாத்தான் போகணும். நம்மூர்ல தான் நேரடியா பதிப்பாளர பாக்கவேண்டியிருக்கு. அப்டிப் பாத்தாலும் ஒங்க எழுத்த வாங்கி வச்சிக்குவாரு. ஒரு பதிப்பாளரு ஒரு நாளக்கி எத்தன பக்கம் தான் படிக்க முடியும்? ஒரு பொஸ்தகம் வர்றதுக்கே ரெண்டு வருஷமாய்டும். அமெரிக்கால பாருங்க, ரெண்டாயிரம் ஏஜண்ட்டுங்க இருக்காங்க. அதனால மாசத்துக்கு ரெண்டாயிரம் பொஸ்தகம் வெளியாகுது. ரெண்டாயிரம் எழுத்தாளர்ங்க பொழைக்கறாங்க. நம்ப நாட்டையும் அது மாதிரி மாத்தணும்னுதான்  இந்தத் தொழில்ல நொழஞ்சிருக்கேன் தம்பி. 

ஒங்க கவிதைய நாலஞ்சு பதிப்பாளர்கிட்ட காட்டி யாரு ஜாஸ்தியா குடுப்பாங்களோ அவங்களுக்குக் குடுப்பேன். ராயல்டில பாதிய அட்வான்சாவே வாங்கிக் குடுத்துடுவேன். எனக்கு வெறும பதினஞ்சு பர்செண்ட்டு கமிசன் தாங்க. நீங்களா விரும்பி இருவது பர்செண்ட்டு குடுத்தாலும் வாங்கமாட்டேன். எழுத்தாளனொட ஒழைப்பத் திருடின மாதிரி ஆய்டும் தம்பி. நமக்கு தொழில்ல நேர்ம தான் முக்கியம். 

கெளம்பனுங்களா? ஒம்பது மணி பஸ்சா? நல்லது. அடுத்த மாசம் வந்துபாருங்க. நல்லபடியா முடிச்சிடறேன். இந்தாங்க, செலவுக்கு வச்சிக்குங்க. இருநூறு போறுமில்லயா? பின்னாடி கழிச்சிக்கலாம். இருங்க, என்ன பேர்ல வரணும்? ‘தேனிவாணன்’ னா? நல்லாருக்கே, தமிழ்வாணன்ற மாதிரி!

இன்னொரு விஷயம் தம்பி. நல்லா எழுதறவங்க யாரா இருந்தாலும் எங்கிட்ட அனுப்புங்க. நம்மால நாலு பேர் முன்னுக்குவந்தா அத விட நமக்கு என்ன வேணும் தம்பி? பாரதிதாசன் சொன்னாரில்லயா, தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லைனு?

******** 

வாங்க தம்பி. தேனிவாணன் அனுப்பிவச்சாரா? சவுக்கியமா இருக்காரா? நல்ல கவிஞராச்சே! பாத்துக்கிட்டே இருங்க, ஒரே வருஷத்துல ஒசரப்போய்டுவாரு. கமல் கிட்ட ரெண்டு கவிதயக் காட்டினேன். அசந்துட்டாரு. விஸ்வரூபம்-ரெண்டு வந்த ஒடனே கூட்டிட்டு வாங்கன்னாரு. அவங்கவங்க அதிஷ்டம் தம்பி! நா வெறும் கருவி! 

ஆமாங்க, இந்தியாலயே நா ஒர்த்தன் தான் இந்த தொழில்ல எறங்கியிருக்கேன். இலக்கிய ஏஜண்ட்டுன்னா சாமான்யமில்ல தம்பி. நெளிவு சுளிவு தெரியணும். பதிப்பாளர்களோட நாடியப் புடிச்சிப் பாக்கணும். நாலு பெரிய மனுஷங்களோட சகவாசம் வேணும். வெத்துப் பசங்கல்லாம் இதுல நொழய முடியாது தம்பி. 

நாவலாசிரியரா நீங்க? ரொம்ப நல்லதாப் போச்சி. அறுநூறு பக்கமா? பரவாயில்ல. இப்பல்லாம் ஐநூறு பக்கமாவது எழுதினாத்தான் நாவல்னு ஒத்துக்கிறாங்க. அப்பத்தான் எண்ணூத்தம்பது ரூபான்னு வெலை வெக்க முடியும். பொருட்காட்சில ஆயிரம் காப்பி விக்கும். கடைக்காரருக்கு முப்பது பர்செண்ட்டு, எழுத்தாளருக்குப் பதினஞ்சு பர்செண்ட்டு. மிச்சம் பதிப்பாளருக்கு. கம்ப்யூட்டர்லாம் வெச்சிகிட்டு தொழில் பண்றவங்களுக்குக் கட்டுப்படியாக வேண்டாமா? அதுக்காக ஆயிரம் பக்கம்லாம் எழுதிடாதீங்க. பேப்பர் வெல எகிறிட்டுது..

‘வசந்த ராகவ நாராயணன்’கற பேர்ல எழுதறீங்களா?  புனைப்பேரா? இல்லயா? வசந்தாங்கறது அம்மா, ராகவன்கறது அப்பா, நாராயணன்கறது நீங்களா? பரவாயில்லயே, இயற்பெயரே புனைபெயர் மாதிரி அழகா இருக்கே!

நாவல கையோட கொண்டுவந்திருக்கீங்களா? நல்லது. பதிப்பாளருக்குக் கதைச் சுருக்கம் சொல்லணுமே, தனியா வச்சிருக்கீங்களா? பரவாயில்லயே, ரெடியாத்தான் வந்திருக்கீங்க. கதாநாயகன் யாரு? அனாதயா சென்னைக்கு வந்து, பாத்திரக்கடைல வேலை பாத்து, அடி ஒதயெல்லாம்பட்டு, துபாய் போய் சம்பாரிச்சி, பெரிய ஆளாகி, சிங்கப்பூர்ல போய்ப் பாத்திரக்கடை வைக்கிறாரா? அப்புறம் பெங்களூர்ல கம்ப்யூட்டர் கம்பெனி ஆரம்பிக்கிறாரா? தமிழ் மீடியத்துல படிச்சவங்களுக்கு மட்டுந்தான் வேல குடுக்கிறாரா? தீம் ரொம்ப நல்லாருக்கே! இப்டில்லாம் பாசிட்டிவ்வா எழுதினாத்தான் இளைஞர்க படிக்கிறாங்க. சிங்கப்பூர் போனதேயில்லயா? அதனாலென்ன, ரெண்டு தமிழ்ப்படம் ஒரு தெலுங்குப்படம் பாத்துட்டுதானே எழுதினீங்க? தெருப்பேரெல்லாம் சரியா இருக்கான்னுமட்டும்  நெட்டுல பாத்துடுங்க. எதுக்கும்  ஒரு தடவ முழுசாப் படிச்சிடறேன். அடுத்த மாசம் வர்றீங்களா?

இன்னொரு விஷயம் தம்பி. நல்லா எழுதறவங்க யாரா இருந்தாலும் எங்கிட்ட அனுப்புங்க. நம்மால நாலு பேர் முன்னுக்குவந்தா அத விட நமக்கு என்ன வேணும்? பாரதிதாசன் சொன்னாரில்லயா….? ஓ, ரயிலுக்கு நேரமாச்சா?

**** 

வணக்கம்மா, வாங்க. ஒக்காருங்க. ராஜா, ஓடிப்போய் ஒரு பெப்ஸி வாங்கிட்டு வாப்பா. கலெக்டர் மேடம் சொன்னாங்க ஒங்களப்பத்தி. ஒங்க நாவலப் படிச்சிட்டு ரெண்டு ராத்திரி தூங்கவே முடியலேன்னாங்க. அவ்வளவு உணர்ச்சிவசப்பட வச்சுட்டுதாம். ‘இளைய நந்தினி’ க்கு எழுத்துலகத்துல  நல்ல எதிர்காலம் இருக்குன்னாங்க.

எப்படிம்மா இந்த சின்ன வயசுல எம்.பி.ஏ. வும் படிச்சிக்கிட்டு இப்படில்லாம் அழகா எழுதவும் முடியுது, நம்பவே முடியலெ! நடுத்தர வர்க்கத்து ஜனங்களப் பத்தி எழுதின நாவல்ல இதான் மொதல் எடத்துல நிக்கும்னு தோணுது. அப்பா பேங்க்குல இருக்கார், அம்மா டீச்சர், தங்கச்சி மெடிக்கல் படிக்குதா? நல்ல குடும்பம். கேக்கவே சந்தோஷமா இருக்கும்மா. மேற்குப் பதிப்பகத்துல சொன்னா கண்டேன் கண்டேன்னு அள்ளிட்டுப் போய்டுவாங்க. இப்ப சொன்னா ஜனவரில வந்துடும்.

எதுக்கும் ஒங்க பயோ-டேட்டாவும் குடுங்க. ஆமாம், நீங்க எந்த ஐ.ஐ.எம்.ல முடிச்சீங்க?

என்னது, கரஸ்பாண்டென்சில எம்.பி.ஏ.வா? என்னம்மா இப்டி குண்டத் தூக்கிப் போடறீங்க? நெலவரம் தெரியாம இருக்கீங்களே! ஐ.ஐ.எம்.முல எம்.பி.ஏ.முடிக்கலேன்னா ஒங்க நாவல எப்படி வெளியிடுவாங்க? பதிப்பகத்துக்குன்னு ஒரு ஸ்டேண்டர்டு இருக்கில்லயா? இந்த சேத்தன் பகத் வந்து மார்க்கெட்ட சொதப்பிட்டாரேம்மா!

எப்படியும் நாவல ரெண்டு மாசத்துக்குள்ள கொண்டுவரணுமா? அப்படி என்னம்மா அவசரம்? உங்களுக்குக் கல்யாணமா? கல்யாணத்தன்னிக்கே வெளியீட்டு விழாவா? புதுமையா இருக்கே! படிச்ச பொண்ணுங்க என்னமா சிந்திக்கிறீங்க! ஓ, கல்யாணம் முடிஞ்ச ஒடனே கனடா போய் செட்டிலாறீங்களா?

ராஜா, ரெண்டு பேருக்கும் காப்பி கொண்டுவாப்பா. எனக்கு சக்கர கொஞ்சமா போடணும், தெரியுமில்லயா? 

இங்க பாரும்மா, ஒரு நாவல பப்ளிஷ் பண்ணனும்னா கொறஞ்சது ஆறு மாசமாவது வேணும். நீங்க நெனக்கற மாதிரி கத்திரிக்கா சாம்பார் வெக்கற சமாச்சாரமில்லே. புரிஞ்சுதா?

ஏம்மா கண்ண கசக்கறே? இதெல்லாம் ரொம்ப செலவு பிடிக்குற வெவகாரம். வேணும்னா ஒன் கதயெ எதாச்சும் வாரப் பத்திரிகைல போடச் சொல்லட்டுமா?  பொஸ்தகமாத்தான் போடணுமா? ரொம்ப பேஜார் பண்றயேம்மா. சரி, எவ்ளோ காப்பி போடணுங்கறே? ஐநூறு போதுமா? இரும்மா கணக்கு போட்டு சொல்றேன்….எப்டியும் ரூபா ரெண்டு லட்சம் ஆயிடும். பரவால்லயா?

வெளியீட்டு விழாவையும் நான்தான் பாத்துக்கணுமா? அதெல்லாம் நான் பண்றதில்லயேம்மா. சில்லறை வேலை நெறய  இருக்குமே. ஆள்பலம் வேணுமே..மேற்கொண்டு செலவாகுமே. அது சரி, கல்யாண மண்டபம் ஃபிக்ஸ் ஆயிட்டுதா?

என்னது எக்மோர்லயா? அந்த மண்டபமா? ஒரு நாளைக்குப் பத்து லட்சம் கேட்பாரே செட்டியார்? நிஜமாவா? அங்க தான்   வெளியீட்டு விழா நடத்தணும்னா ரொம்ப செலவாகுமேம்மா, நான் கொறச்சி சொல்லிட்டனே….சரி, ஒங்க ஆசையை எப்படியும் நெறவேத்திடலாம். ஆயிரம்  காப்பி போட்டு வரவங்களுக்கெல்லாம் கிஃப்ட்டா கொடுத்திடலாம். பெரிய ரூபா நாலரைன்னு முடிச்சிடலாமா? வீட்ல கேட்டு நாளைக்கி சொல்றீங்களா? 

அட, இதுக்கெல்லாம் என்னம்மா நன்றி சொல்லிக்கிட்டு. மொதல்லயே பட்ஜெட்டு இவ்ளோன்னு சொல்லிருந்தீங்கன்னா இவ்ளொ நேரம் டைப் செட்டிங்க்கு கொடுத்திருப்பனே. எலேய், ராஜா, நம்ம ஷாஜகான வரச்சொல்லு. அர்ஜெண்ட் ஒர்க்னு சொல்லு.

கலெக்டரம்மா சொன்னபெறகு அட்வான்ஸெல்லாம் கேட்கறது சரியான்னு தெரியல்லெம்மா. இருந்தாலும் நீங்க கொடுக்கறதால வாங்கிக்கிறேன். ரெண்டு லட்சத்துக்கு செக் குடுக்கிறியாம்மா? ஸ்டாம்ப் பேப்பர்ல அக்ரிமெண்ட்டு போட்டுறலாமா? இன்னிக்கி நல்ல நாள் தான். வேண்டாமா? நானும் ஒங்கள மாதிரிதம்மா. மனுஷனுக்கு வாய்வார்த்த தான் முக்கியம். கையெழுத்தெல்லாம் எதுக்கு? 

ஒரே மாசத்துல ரெடி பண்ணிடறேன். கல்யாணத்தன்னிக்கி பிரமாதமா வெளியீட்டு விழா நடத்திப்புடலாம். சந்தோஷமா போய்ட்டு வாம்மா…

இரும்மா, ஒரு விஷயம்… கல்யாணப் பத்திரிகை அனுப்ப மறந்துட மாட்டியே?

அட, கல்யாணம்னாலே நம்ப தமிழ்ப் பொண்ணுங்களுக்கு எப்டி தான் வெக்கம் வருமோ!  நீ என்னென்னிக்கும் இதே மாதிரி சந்தோஷமா சிரிச்சிட்டிருக்கணும்மா…. அதோட ஒரு விஷயம்மா. நல்லா எழுதறவங்க யாரா இருந்தாலும் எங்கிட்ட அனுப்புங்க. நம்மால நாலு பேர் முன்னுக்குவந்தா அதவிட நமக்கு என்ன வேணும்? பாரதிதாசன் சொன்னாரில்லயா….? 

**** 

வாங்க, மண்ணின் மைந்தன் சார். ஒங்க ராய்ல்டி பணம் ஐயாயிரம் இந்தாங்க. தேனிவாணன் சொல்லலியா? சரி விடுங்க. ராஜா, கவிஞருக்கு ஒரு காப்பி கொண்டாடா கண்ணு.

கவிதைத் தொகுப்பு எப்ப வரும்னு கேக்கறீங்களா? எம்.சி.எம். பதிப்பகத்துல ரெடி பண்ணிக்கிட்டிருக்காங்க. எப்படியும் ஜனவரி புக் எக்ஸிபிஷனுக்கு வந்துடும். கவலைப்படாதீங்க. சந்தோஷம் தானே? எழுத்தாளனோட சிரிச்ச மொகத்த பாக்கறதில தான் எனக்கு சந்தோஷம் போங்க…

**** 

வாங்க தேனிவாணன் தம்பி. ஊருக்கெல்லாம் போய்ட்டு வந்திட்டீங்களா? எல்லாரும் சௌக்கியமா? ஒங்க பொஸ்தகம் வர்றத எல்லாருக்கும் சொல்லிட்டீங்களா?  வேலைக்கு ஏதாச்சும் முயற்சி பண்ரீங்களா? வெறும கவிதை எழுதிட்டிருந்தா வயிறு ரொம்பாது தம்பி. யாரும் பொண்ணு குடுக்கமாட்டாங்க… 

மனீஷாம்பா பதிப்பகத்துல ஒங்க கவிதைத் தொகுப்பை வெளியிடறதா ஒத்துக்கிட்டிருக்காங்க.  இந்தாங்க அட்வான்ஸ் ரெண்டாயிரம். என் கையிலெருந்து தர்றேன். எப்படியும் ஜனவரி புக் எக்ஸிபிஷனுக்கு ரெடியாயிடும். அப்புறம் பாருங்களேன்!  சந்தோஷம் தானே? எழுத்தாளனோட சிரிச்ச மொகத்த பாக்கறதில தான் எனக்கு சந்தோஷம்… 

இன்னொண்ணு தம்பி, ஒங்க அடுத்த தொகுப்புக்கு இப்பவே எழுத ஆரம்பிச்சிடுங்க. பிரபலமாயிட்டீங்கன்னா திடீர்னு நாலு பப்ளிஷர் ஒரே சமயம் வந்து நிப்பாங்க. டென்ஷன்ல எழுதமுடியாம போயிரும் பாருங்க.

**** 

வாங்க சார், வாங்க சார்! சொல்லியனுப்பியிருந்தா நானே வந்திருப்பெனே! ஐயா இவ்ளோ தூரம் வந்துட்டீங்களே! வாடா செந்தமிழ்ராசான்னா ஓடி வந்திருக்க மாட்டேனா? போன வாரம் கூட ஒங்க கடைக்கு வந்திருந்தனெ. சகலை வீட்டுல வளகாப்பு. சென்னைல ஒங்க கடைய விட்டா தரமான நகைக்கடை வேற ஏதுங்க? மொத்தம் எட்டு எடத்துல கடை இருக்கா? கொச்சின்லயும் ஆரமிச்சிட்டீங்களா? ஆமாங்க, அவங்க சென்னைல வந்து கடை வெச்சா, நாம்பளும் அவுங்க ஊர்ல வெச்சிக் காட்டணுமில்லீங்களா.. அப்பத்தானே நம்பளுக்கு மரியாத. ஐயா, காப்பி சாப்பிடறீங்களா? இப்ப நா என்ன பண்ணணும், சொல்லுங்க.

ரொம்ப சந்தோஷங்க. ஒங்கள மாதிரி பெரிய மனுஷங்கெல்லாம் அரசியலுக்கு வந்தாத்தான் நாட்டுக்கு நல்லது.  பாருங்க,  தங்கம் என்னா வெல விக்குது! ஐயாமட்டும்  மந்திரி ஆயிட்டு  கிராமுக்கு ஐனூறு ரூபா கொறச்சீங்கன்னா ஏழைங்க மனசாற வாழ்த்துவாங்கய்யா. 

நீங்க சொல்றது சரி தாங்க. அரசியல்ல நொழயணும்னா கவிதை, இலக்கியம், சினிமா, சங்கீத சபான்னு எதுலனாச்சும் நமக்குப் பழக்கம் உண்டுன்னு காட்டினாத்தானுங்களே மரியாதெ…..எங்கிட்ட சொல்லிட்டீங்கல்லே, விடுங்க. ஒங்க பேர்ல ஒரு நாவல் போட்டுரலாம். அதொட ஒரு கவிதை பொஸ்தகமும் போட்டுரலாம். அப்ப தான் கெத்தா இருக்கும். கவிதைக்கு  “நகைக்கடையில் பூத்த நல்ல தமிழ்ப்பாக்கள்”னு தலைப்பு வச்சிரலாம். நாவலுக்கு “உதிரம் சிந்தும் உஸ்மான்ரோடு” ன்னு போட்டுரலாம். ஏஐ மூலமா மேலட்டைல  ஏழைங்க கஷ்டப்படுறத காட்டினா ரசிகனுங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க. நார்வே ஸ்வீடன்ல இருக்கிற சிலோன்காரங்களப் புடிச்சா இண்டர்னேஷனல் லெவலுக்குக் கொண்டுபோய்டுவாங்க. 

எனக்கு இதெல்லாம் ரொம்ப சின்ன விஷயங்க. கைவசம் ரெண்டு கவிஞனுங்க இருக்காங்க. ஒரு நாவலாசிரியன் இருக்கான். மூணு பேருமே வேல வெட்டி இல்லாதவங்க தான். நாவல் எழுதுறவன் கொஞ்சம் நல்ல மாதிரி. சொன்னாக் கேப்பான். இந்த கவிஞனுங்க தான் ரொம்ப ‘இது’ பண்ணிக்கிறாங்க. இலக்கிய ஏஜண்ட்டுன்னா அட்வான்ஸ் கேக்கறாங்க. ஆளுக்கு பத்தாயிரம் குடுத்து பிடிஎஃப் வாங்கி  வச்சிருக்கேன். இன்னும் தலா பத்து கவித பாக்கி இருக்கு. கவித நல்லா எழுதரானுங்களா, முழுசா சரிக்கட்டணும்னா இன்னும் கொஞ்சம் செலவாகும். இப்பல்லாம் கவிஞர்கள் நேரா சினிமாவுக்குப் போயிடறாங்கய்யா. புதுப்புதுசா பொடிப்பசங்கல்லாம் இசையமைக்க வந்துடராங்களா,  அவங்களுக்கு புதுக்கவிஞர்களத்தான் புடிக்குது. இஷ்டம் போல வேல வாங்கலாமில்லயா?  இவங்களும் ஆறு மாசம் பட்டினி கெடந்தாலும் சரி, ஒரு படத்துல பேர் வாங்கிட்டா அப்புறம் பாட்டுக்குப் பத்தாயிரம் கெடைக்குமேனு நப்பாசைல ஸ்டூடியோ வாசல்லயே நிக்கறாங்க. அதனால தனியா எழுதிக்கொடுக்கறதுன்னா ரேட்டு ஏறிப்போச்சுங்க. பாத்து செய்யணும்..

கோவிச்சுக்காதீங்க. சுருக்கமா சொல்லிடறேன்,  இவருக்கு இருவது அவருக்கு இருவது, நாவலுக்கு பதினஞ்சு, எனக்கு ஏதோ ஒங்க இஷ்டம்னு மொத்தம்  ஒரு ‘ரூபா’ ஆயிடுங்க.. என்ன இப்பவே குடுத்துடறீங்களா? 

சரியா இருக்குங்க. எனக்குத் தெரியாதா, ஒங்க பையில எப்பவும் பத்து ‘ரூபா’க்குக் கொறையாதுன்னு. ஒரு ரூபால்லாம் ஒங்களுக்குத் தண்ணிபட்ட பாடுன்னா. இப்ப நீங்க சொல்லிட்டீங்கல்ல, ஒரெ மாசத்தில முடிச்சிடறேன். ஆனா வெளியீட்டுவிழா ஏற்பாடெல்லாம் ஒங்களொடது. சரிதானுங்களே? 

*** 

என் இனிய நண்பர்களே! ‘இளைய நந்தினி’யாகிய எனக்கும் திரு தமிழரசனுக்கும் இன்று நடந்தேறிய திருமணவிழாவில் எனது முதல் நாவலை வெளியிடவேண்டும் என்ற ஆசை நிறைவேறிவிட்டது. பெண்களின் எளிய ஆசைகள் கூட பல சமயம் நிறைவேறுவதில்லை. ஆனால் என் கணவரோ, திருமணமான முதல் நாளிலேயே என் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி ‘இளைய நந்தினி’ என்னும் நாவலாசிரியையாக  என்னை இலக்கிய உலகில் அறிமுகப்படுத்தி யிருக்கிறார். இவருக்கு எப்படி நன்றி  தெரிவிப்பது என்று புரியாமல் தவிக்கிறேன். இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்த இலக்கிய ஏஜண்ட்டு திரு செந்தமிழ்ராசன் அவர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். அவர் மட்டும் இல்லையென்றால் இந்த நாவல் இன்று வெளிவந்திருக்க வழியில்லை. அவரை இப்போது பேச அழைக்கிறேன்.

*** 

பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே, வணக்கம். இந்தச் செந்தமிழ்ராசன் ஒண்ணும் பெருசாச் செஞ்சுடலீங்க. இன்னிக்கி நாட்டுல இளைய நந்தினி மாதிரி நாவல் எழுதறவங்க இன்னும் எவ்ளவோ பேர் இருப்பீங்க. எனக்குத் தெரிஞ்ச நகைக்கடை உரிமையாளர் ஒருத்தர், என்ன அற்புதமா நாவல் எழுதியிருக்கார் தெரியுமா? ஒரு கவிதைத் தொகுப்பும் எழுதியிருக்கார். அதுக்கும் நான்தான் வேலை செய்யறேன். நல்லா எழுதறவங்கள எப்படியாவது வெளில கொண்டுவந்துடணும்னுதான் ஒரு நாளைக்குப் பதினெட்டு மணி நேரம் ஒழைக்கெறேன். அதுனால, நல்லா எழுதறவங்க யாரா இருந்தாலும் எங்கிட்ட அனுப்புங்க. நம்மால நாலு பேர் முன்னுக்கு வந்தா அத விட நமக்கு என்ன வேணும் சொல்லுங்க? பாரதிதாசன் சொன்னாரில்லயா, தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லைனு?


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.