பஞ்சமி

முழிப்பு தட்டி விழித்த பரிமளாவிற்கு சிறுது நேரம் சித்தம் புலப்படவில்லை. தூங்கிக்கொண்டிருந்த தாம் திடீரென விழித்தெழுந்து விட்டதும், தம் தாய் அருகில் தூங்கிக்கொண்டிருப்பதும் அவளது மூளைக்கு எட்ட சில நொடிகள் பிடித்தன. கண்களைக் கசக்கிகொண்டே சுவரில் தொங்கிக்கொண்டிருந்த கடிகாரத்தைப் பார்த்தாள். மணி நான்கைத் தாண்டி இருந்தது அவளுக்கு மங்களாகத் தெரிந்தது. கண்களில் தெளிவு வந்திருக்கவில்லை.

வழக்கமாக எழுவதைவிட இன்று சற்று முன்னதாகவே தூக்கம் கலைந்துவிட்டதை எண்ணி அவளுக்கு கோபமாக இருந்தது.

என்றும் அதிகாலை நாலரை மணிக்கு மேல் அவள் தூங்குவதில்லை. உடல்நிலை சரியில்லாத அல்லது வீட்டிற்கு விலக்கான நாட்களில் கூட இந்த வழக்கம் மாறுவதில்லை. எழுந்து பல்துலக்கியபின் முதல் வேலையாக முந்தைய நாள் முழுதும் எஞ்சிய கழுநீரை, கழுநீர் பாத்திரத்திலிருந்து வேறொரு குடத்திற்கு மாற்றி, அருகிலிருக்கும் மாட்டுத் தொழுவத்தில் கொண்டு சேர்ப்பது வழக்கம். 

பல வருடங்களாக அவளின் தாய் சுலோச்சனா அதை செய்து வந்தாள். பரிமளா அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டு சில வருடங்கள் ஆகின்றன.

பரிமளா குழந்தையாக இருக்கும் போதிருந்தே சுலோச்சனா தினமும் அவ்வாறு மாட்டுத் தொழுவத்திற்கு சென்று வருவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். அதற்கு முன்பு எவ்வளவு காலம் அவ்வாறு சுலோச்சனா செய்து வந்தாள் என்று பரிமளா கேட்டதில்லை. 

ஆனால் அவளுக்கு தெரிந்து ஒருநாள் கூட இந்த நடைமுறை தவறியதில்லை. 

சொந்த பந்தங்களின் வீட்டு விஷேஷங்களோ, நல்லது கெட்டது என எதுவுமே இவர்களின் இந்த ஏற்பாட்டைத் தடுத்ததில்லை. 

தாயும் மகளும் அந்த ஊரில் அதே வீட்டில் பல்லாண்டுகளாக தனியாகவே வாழ்ந்து வருவதும், அவர்களுக்கு சொந்தமென்று சொல்லிக்கொள்ள வேறு யாரும் இல்லாததுவுமே அதற்கு காரணங்கள்.

பரிமளா பிறந்த சில மாதங்களிலேயே சுலோச்சனாவின் கணவர் காலஞ்சென்று விட்டிருந்தார்.

அத்தோடு கணவர் வழியிலிருந்த சொந்தங்களும் இவர்களை முழுவதுமாக கைவிட்டிருந்த நிலையில் சுலோச்சனா மட்டுமே தனிமனுஷியாக நின்று குடும்ப பாரம் முழுவதையும் சுமந்து நடத்த வேண்டிய நிர்பந்தம் உண்டானது. 

இன்னன்ன வேலைகள்தான் என்று இல்லாமல், அக்கம்பக்கத்து வீடுகளில் சமைத்துக் கொடுப்பது, பத்து பாத்திரங்கள் தேய்ப்பது, வீட்டை சுத்தம் செய்து தருவது என எவ்வளவோ செய்து பரிமளாவையும் ஆளாக்கினாள்.

இப்போது அவளுக்கிருக்கும் ஒரே வேண்டுதல், பரிமளாவை ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்கும்வரை தமக்கு சக்தியிருக்க வேண்டுமென்பது மட்டுமே.

சமீப காலமாக உள்ளூர் ஜோதிடர்கள் மட்டுமின்றி, தெரிந்தவர்கள் பரிந்துரைக்கும் வெளியூர் ஜோதிடர்கள், பூஜாரிகளென பலரையும் அணுகி பரிமளாவின் திருமணம் பற்றியும், எதிர்காலம் பற்றியும் விசாரித்து வருகிறாள்.

காலைக்கடன்களை முடித்து, முகங்கழுவிக்கொண்டு வந்த பரிமளா, கருங்கல்லாலான அந்த கழுநீர் பானையை அதன் காதுகளை பிடித்து தூக்கி, அருகிலிருந்த உலோக குடத்திற்கு மாற்றினாள். அந்த மாக்கல் பானையும் கூட பரிமளா நினைவு தெரிந்த நாளிலிருந்து பார்த்துக் கொண்டிருப்பது தான்.

கைதவறி கீழே விழும் பக்ஷத்தில் உடைந்து விடுமென்றும், இன்று அது போல கற்பானை எங்குமே கிடைப்பதில்லை என்றும், அதை பரிமளா சுத்தப்படுத்தவோ, சாய்த்துவைக்க முயலும்போதோ சுலோச்சனா பலமுறை எச்சரித்திருக்கிறாள்.

முந்தையநாள் சமையல் கழிவுகள், சாப்பிட்ட தட்டில் மீதியான உணவுகள், வாழைப்பழத் தோல், அரிசி கழுவிய நீர், அவர்கள் பருகியது போக மீதமான சாதம் வடித்த கஞ்சி, கொத்துமல்லிக் கட்டின் கீழ்ப்பகுதி என பலவும் கலந்த கலவை அந்த கழுநீர்.

வீட்டிலேயே ஆடு, மாடுகளை வளர்ப்போர் அதற்கென இருக்கும் பெரிய சிமெண்ட்டு தொட்டிலில் அதனை இட்டு, தங்கள் கால்நடைகளுக்கு தண்ணீர் காட்டுவது வழக்கம். வீட்டில் பிராணிகள் இல்லாத போது, அருகிலிருக்கும் தொழுவத்தில் கொண்டு சேர்ப்பதும் உண்டு.

தொழுவத்தின் உரிமையாளர்கள் இவ்வாறு கழுநீர் கொண்டு தரும் சிலர் வீடுகளுக்கு கொடுக்கின்ற பாலுக்கான தொகையில் ஒரு சிறு அளவு தள்ளுபடி செய்வதும் உண்டு.

ஆனால், சுலோச்சனாவோ, பரிமலாவோ என்றுமே அவ்வாறு தள்ளுபடிக்காக இதனை செய்ததில்லை. இன்னும் சொல்லப் போனால், இவர்கள் இருவரும் பால் வாங்குவதும் கூட கிடையாது. சுயமாக இவ்வளவு காலமும் இதனை தங்கள் நாளின் ஒரு வழக்கமாக செய்து வருகின்றனர்.

பானையிலிருந்து கூடத்திற்கு மாற்றிய கழுநீரின் புளித்த மனம் குளிர் காற்றில் கலந்து வீசியது. பரிமளாவிற்கு இது புதிதல்ல.

குடத்தை எடுத்துக்கொண்டு கூடத்திற்கு வந்தாள். சுலோச்சனா இன்னமும் எழுந்திருக்கவில்லை. கடிகாரத்தைப் பார்த்தாள். மணி நான்கைத் தாண்டியிருந்தது.

கடந்த சில மாதங்களாக சுலோச்சனா, தமக்கு வந்துவிட்டிருந்த மூச்சிரைப்பு நோய்க்காக மருந்து எடுத்துக்கொண்டிருக்கிறாள். ஆரம்பத்தில் மூச்சுவிட சிரமமாக இருந்த நேரங்களில், சாதாரண வயது மூப்பு காரணமாக இருக்குமென்று இருந்துவிட்டவள், பிறகான நாட்களில் பாதிப்பு அதிகமாவதை உணர்ந்து மருத்துவமனைக்கு சென்று சோதித்ததில் அவளுக்கு சுவாசம் தொடர்பான பிரச்னைகள் இருப்பது தெரிந்து தொடர் மருந்துகளை உட்கொள்கிறாள். பல்லாண்டுகளாக ஓய்வு உறக்கமின்றி உழைத்ததற்கான பலன் அவை.

மருந்தின் வீரியம் சுலோச்சனாவை பல நேரங்களிலும் தூக்கத்திலேயே அமிழ்த்தி விடுகின்றன. பரிமளா அவளை ஒருபோதும் தொந்தரவு செய்வதில்லை. அவளுக்கு ஓய்வு தேவை என்பதை அறிந்திருந்தாள்.

ஓசையின்றி வாசற்கதவை திறந்து வெளியில் சென்ற பரிமளா ஒரு கையில் குடத்துடன், மறு கையில் மெதுவாக கதவை சாற்றிவிட்டு, வீதிக்கு வந்தாள்.

மழைக்காலமானதால் இன்னும் விடிந்திருக்கவில்லை.

மழை பெய்யாவிட்டாலும் சில்லென்ற சாரல் காற்று உடம்பை சிலிர்க்கச் செய்துகொண்டிருந்தது. வீதி விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. தெருமுக்கிலோ, பக்கத்து வீதியிலோ நாய்கள் சில குரைக்கும் சப்தம் அந்த இருளை திகிலூட்டுவதாக இருந்தது. பரிமளா இருளில் ஈரமான அந்த வீதியில் மழைநீரில் இடறிவிடாமல் கவனமாக செல்ல வேண்டியிருந்தது.  இரவு நல்ல மழை பெய்திருக்க வேண்டுமென நினைத்துக்கொண்டாள்.

தெரு முடிந்து, ஆற்றோர ஒத்தையடிப் பாதை வழியாக நடக்கத் துவங்கினாள். முழுதும் களிமண்ணாலான அந்த பாதையும் அதன் தடுப்பு வறப்புகளும் மழை ஈரத்தில் வழவழத்து இருந்தன. 

அதில் வழுக்கி விடாமல் நடக்க சிரமப்பட்டாள். இவள் வரும் சந்தடி கேட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக வரப்பு ஓர பெருச்சாளிகள் ஓடி வங்குகளுக்குள்ளும், வரப்பையொட்டிய வயக்காட்டிற்குள்ளும் மறைந்துகொண்டன.

களிமண் பாதை முடிந்து அடுத்த வீதியின் முற்றத்தில் சேருமிடத்தில் தான் குதிரைக்காரன் பாட்டி வீடு இருந்தது.

அவளொரு அனாதைக் கிழவி.

அவளது கணவர் பலகாலங்களாக குதிரைவண்டி ஓட்டிவந்ததும், சில வருடங்களுக்கு முன்பு வயது மூப்பில் இறந்து போனதும் ஊரறிந்த சங்கதி. கணவர் இறந்தபிறகு கிழவிக்கு போக்கிடமின்றி தனியாகவே அந்த வீட்டில் வாழ்ந்து வருகிறாள். வயது எழுவதைத் தாண்டியிருந்தும் யாருடைய துணையுமின்றி தனியாகவே வாழ்ந்துவரும் அந்த கிழவி ஓரிரு நாட்கள் தவிர பெரும்பாலும் பரிமளாவின் வருகைக்காக வாசலில் காத்துக்கொண்டிருப்பாள். அவள் இல்லாத சில நாட்களில் பரிமளா அவள் வீட்டுக் கதவைத் தட்டி அழைப்பதோ, அவளை எழுப்புவதோ கிடையாது. 

இன்று அவள் பரிமளாவிற்காக காத்திருக்கவில்லை. அவள் வீட்டு வாசல் விளக்கு கூட அணைந்தே இருந்தது. கிழவி இன்னமும் எழுந்திரிக்கவில்லை என்பதை புரிந்துகொண்ட பரிமளா அவளை தொந்தரவு செய்யாமல், மாட்டுத் தொழுவதை நோக்கி நடந்தாள். வயற்காட்டின் தெற்கிலிருந்த மாட்டுத் தொழுவத்தின் சாண வாடை காற்றில் வீசியது.  

அடுத்த அடி வைத்த பரிமளாவின் காலருகில் சடாரென எங்கிருந்தோ ஓடிவந்த ஒரு நாய் வந்து நின்றது.

இதயம் ஒருநொடி நின்றுவிட்டதைப் போல பதறிய பரிமளாவின் உடல் நடுங்கிய நடுக்கத்தில் கையில் வைத்திருந்த குடத்திலிருந்த கழுநீர் சற்று அசைந்து வெளியில் சிந்தியது. 

பெரிதான சப்தத்துடன் குறைக்காமல், அவளுக்கு மட்டுமே கேட்கும்படி அதே நேரத்தில் தொண்டையிலிருந்து மிகக் குரூரமாக உறுமுவது போல பற்களைக் காட்டி அது செய்த கோர இரைச்சல் பரிமளாவை ஸ்தம்பிக்கச் செய்தது. 

ஓரடி வைத்தால் தம்மீது பாய்ந்துவிடும்படியாக தனக்கு வெகு அருகாமையில் நின்றுகொண்டிருக்கும் அந்த நாயை பரிமளா எதிர்பார்த்திருக்கவில்லை. இவ்வளவு வருடங்களில் எப்போதும் இப்படியொரு அதிர்ச்சி ஏற்பட்டதில்லை. ஆங்காங்கே வழக்கமாக இருக்கும் தெருநாய்கள் கூட இவளை எப்போதும் இப்படி இம்சித்ததில்லை. ஆனால் இப்போது பரிமளா செய்வதறியாது நடுங்கிக்கொண்டிருந்தாள்.

வீதியில் இவளைத் தவிர வேறு யாரும் தென்படவில்லை. 

இன்று பார்த்து குதிரைக்காரன் பாட்டியும் வரவில்லையே என்று பரிமளா பதட்டமானாள்.

சற்று துணிந்து கையை நீட்டி நாயை விரட்ட முயன்றாள். பரிமளாவின் அதட்டல் நாயை சற்று விலக செய்யவும், தைரியம் வந்தவளாய் சட்டென கீழே கிடந்த கல் ஒன்றை எடுத்து நாய் மீது வீசுவது போல பாவனை செய்யவே, அந்த கரிய நாய் விலகியோடத் துவங்கியது. இரண்டொரு மிரட்டல்களில் அந்த நாய் தூர ஓடி மறைந்தது. பரிமளாவிற்கு நிம்மதியாக இருந்தது. 

சீக்கிரமாக தொழுவத்திற்கு சென்று கழுநீரை ஊற்றிவிட்டு வந்துவிடவேண்டுமென்ற எண்ணத்தில் பரிமளா சற்று வேகமாக நடக்கத் துவங்கினாள். இருள் சிறிதும் விலகாதது சற்று குழப்பமாக இருந்தது. மனம் பதைத்தவளாய் சுற்றிலும் வேறு யாராவது ஜனநடமாட்டம் இருக்கிறதாவென்று பார்த்தாள். 

தெய்வாதீனமாக, வயற்காட்டின் வடக்கில் வரப்பின் மீது யாரோ நடந்து செல்வது தெரிந்தது.

பரிமளாவிற்கு மனதிற்குள் சற்று ஆறுதல் கிடைத்தது. 

வருவது பால்காரக் கோனார் தான் என்பதை நொடியில் தெரிந்துகொண்டாள். இந்த அதிகாலை வேளையில் இப்படி இடுப்பு வேட்டியும், தலையில் முண்டாசும் கட்டிக்கொண்டு, வெற்று உடம்புடன் வயற்காடு வரப்பின் மீதோ, மாட்டுத் தொழுவதிலோ, அருகிலிருக்கும் பம்புசெண்டு சுவர் மீதோ பலமுறை அவரை பரிமளா பார்த்திருக்கிறாள். கழுநீர் கொண்டு வரும் பரிமளாவிடம் சிறிது உரையாடுவதும் உண்டு. சமயங்களில் அவரே பரிமளாவின் கையிலிருக்கும் குடத்தை வழியிலேயே வாங்கிக்கொண்டு தொழுவம் வரை வந்து விட்டுசென்றதும் உண்டு. 

அவரைப் பார்த்தவுடன் பரிமளாவிற்கு நிம்மதியாக இருந்தது. 

அவர் கூப்பிடும் தூரத்தில் இல்லையென்றாலும் நிச்சயம் அவரும் பரிமளாவைப் பார்த்திருக்க வேண்டும். வழக்கமாக தன்னைப் பார்த்ததும் அருகில் வரும் கோனார் இன்று இவளை சட்டை செய்தது போலத் தெரியவில்லை. 

பரிமளா தொழுவத்திற்கு வந்து கழுநீரை தொட்டியில் கொட்டினாள். அங்கேயே இருந்த தண்ணீர் தொட்டியில் குடத்தை முக்கியெடுத்து, கழுவி வெளியே ஊற்றினாள். மீண்டுமொருமுறை கோனார் எங்கிருக்கிறாரென பார்த்தாள். இப்போதும் அவர் இவளருகில் வருவது போலத் தெரியவில்லை. வரப்பின் மீதே அங்குமிங்கும் உலவிக்கொண்டிருந்தார். பிறகு எதிர்திசையில் நடந்து செல்லத் துவங்கினார். கையிலொரு லாந்தர் விளக்கு கூட இல்லாமல் இருட்டில் எங்கு செல்கிறாரென்று பரிமளாவிற்கு குழப்பமாக இருந்தது. 

அவரைக் கத்தி கூப்பிட சங்கோஜமாக இருந்தது. மேலும் ஆளரவமற்ற அந்த நிசப்த வேளையில் தம் குரல் மட்டும் அவ்வளவு சப்தமாக கேட்டு அக்கம்பக்கத்தினர் ஏதேனும் தவறாக நினைத்துக்கொள்ள போகிறார்களோ என்ற எண்ணமும் அவளுக்கிருந்தது. 

அவரை கூப்பிட்டு பேசும் எண்ணத்தை விட்டு, அங்கிருந்து கிளம்பினாள். 

தெருமுக்கில் இன்னமும் குதிரைக்காரன் பாட்டி வீடு தூக்கத்திலேயே இருந்தது. வேகமாக நடந்தாள். வீட்டிற்குள் நுழைந்து நேராக கழிவறை சென்று கால்களைக் கழுவிக்கொண்டு கூடத்திற்கு வந்தாள்.

சுலோச்சனா இன்னமும் எழுந்திருக்கவில்லை. 

அவளை பார்த்த பரிமளத்திற்கு மிகுந்த வாஞ்சை ஏற்பட்டது. காலம் முழுதும் தமக்காக ஓடிக் களைத்த உடல், தம் உணவிற்கும், உடைக்கும் இருப்பிடத்துக்கும், படிப்பிற்குமென அனைத்திற்கும் ஒற்றை மனுஷியாய் இவ்வளவு காலமும் உழைத்து தன்னை இப்படி ஆளாகியவளாயிற்றே என்று என்னும் போது பரிமளாவிற்கு கண்கள் கலங்கின. 

அவளை எழுப்பாமல், வாசல் தெளித்து, சாணம் மெழுகலாமென்று நினைத்தவள் இன்னும் விடியாதது கண்டு சற்று நேரம் கழித்து செய்துகொள்ளலாமென்று நினைத்துக்கொண்டாள். 

பள்ளிக்கு கொண்டுசெல்ல வேண்டிய புத்தகங்களை எடுத்து பையில் வைத்துக்கொண்டு, பேனாவிற்கு ஊற்ற மை புட்டியைத் தேடினாள். ஜன்னல்திட்டிலிருப்பது கண்டு அதை எடுக்க எழுந்தவள், அதன் அருகிலேயே நான்கு மூலைகளிலும் மஞ்சள் குங்குமமிட்டு, “ஓம்” என்று நடுவில் எழுதப்பட்டிருந்த ஒரு நோட்டு புத்தகம் ஒன்று இருப்பதைக் கண்டாள். 

புதிதாக இருந்த அந்த நோட்டு, சுலோச்சனா வாங்கியிருக்கவேண்டுமென்று நினைத்துக்கொண்டு திறந்து பார்த்தாள்.

“சங்கரன் அகஸ்திய நாடி ஜோதிட நிலையம், வைத்தீஸ்வரன் கோவில்” என்று அச்சடிக்கப்பட்ட தலைப்பிற்கு கீழே,

ஓம் 

குருவே துணை. 

திருச்சிற்றம்பலம்.

நாள். 06 05 1992

திதி – சதுர்தசி

நட்சத்திரம் – மிருகசீரிடம் 

கரணம் – பத்திரை 

பெயர் – பரிமளா

பிறப்பு – 1976

அகத்தியர் அருளிய நாடி சாஸ்திர ஓலை எண் ௨௪௮௬ 

சுப மங்களம் 

என்று கையெழுத்தாக எழுதப்பட்டிருந்தது. 

சில நாட்களுக்கு முன்பு சுலோச்சனா மாயூரம் சென்றிருந்ததும், அருகே வைத்தீஸ்வரன் கோயில் சென்றபோது, தமக்கு நேரம் சரியில்லை என்று ஒரு ஜோதிடர் கூறியதாக சொன்னதும் பரிமளாவிற்கு நினைவில் வந்தது. 

அம்மா அந்த நிகழ்விலிருந்து தம்மீது மிகுந்த அக்கறையுடனும், அச்சத்துடனுமே இருப்பது பரிமளாவுக்கே சற்று வித்தியாசமாகவும், அதிகப்படியாகவும் இருந்தது. 

பரிமளவிற்கு இது போன்ற ஜோதிட, ஜாதக விஷயங்களில் பெரிதான ஆர்வம் ஒன்றுமில்லை. எப்போதாவது உள்ளூர் கோவில்களுக்கு சென்று, தோன்றிய போது மனதிற்குள் ஏதேனும் வேண்டிக்கொள்ளும் ஒரு சாதாரணப் பெண் தான் இவள். எப்போதும் இதுபோன்ற விஷயங்களில் பெரிதாக நாட்டம் கொள்வதில்லை என்பதால் அவளால் எளிதில் தாயின் கவலையை கடந்து சென்று விட முடிந்தது.

இந்த நோட்டு அவர் எழுதிக்கொடுத்ததாகத் தான் இருக்கவேண்டும் என்று எண்ணி மேலும் அதைப் படிக்கத் தொடங்கினாள்.

அதில் தம்மைப் பற்றி என்ன கூறியிருக்குமென்ற ஆர்வம் அவளை ஆட்கொண்டிருந்தது.

“ஓம் தெங் கிலி வா செயஞ்கொள்ளப்பிரபஞ்சம் வாவா

ஐயும் ஸ்ரீறீங் காமனையும்தான் வென்ற ஈஸ்வரா வாவா”

என்ற மந்திரத்தை எழுதி அதற்கு கீழேயே அதற்கான விளக்கத்தை எளிதாகப் புரியும்படியான வார்த்தைகளால் அந்த ஜோதிடரே எழுதியிருந்தார்.

பரிமளாவிற்கு அந்த மந்திரத்திற்கான விளக்கம் தேவையான ஒன்றாகத் தோன்றாததால் சிரமப்பட்டு அதை படிக்கவிரும்பாமல் அடுத்த பத்திக்கு தாவினாள்.

“ஜனன விவரம்” என்ற தலைப்புடன் ஆரமித்த அந்த பத்தி இவ்வாறு சென்றது.

தாயாவாள் நற்கண் கொண்டாள்
அப்பன் ராசன்
சேயவளோ ஏகம்
ஜனனம் ராக்ஷஷமாம் சதயத்தில் கேது தசை துவாதசி
அரள் மேனி| பசுஞ்சாந்தம்| அதிரம் விழிகள்|
இருள் கேசம்| நெடும் கண்டம்| பரவும் ஸ்தனங்கள்|
மத்தி நாபி இடதில் களங்கம்|

“சுலோச்சனா எனும் பெயருக்கு அழகான கண்கள் உடையவள் என்று பொருள், அப்பெயர் கொண்டவள் தாயாகவும், தகப்பன் பெயர் ராசன், ராஜேந்திரன் என அரசன், ராஜாக்கள் சம்மந்தமான பொருளுடைய பெயராக இருக்குமென்பது அகத்தியர் கூற்று.

சேயவளோ ஏகம் – ஏகம் என்றால் ஒன்று, சேய், அதாவது இந்த தம்பதிக்கு  குழந்தை ஒன்று தான். அதுவும் பெண் குழந்தை. உடன் பிறந்தோர் யாருமில்லை.

ராட்சச கண நக்ஷத்திரங்களில் ஒன்றான சதய நக்ஷத்திரத்தில், துவாதசி திதியில், கேது தசையில் புவியில் ஜனனம் நிகழும் என்கிறார் சித்தர்.

அரள் மேனி என்கிறார். அரள் என்றால் அரளி. அரளி போன்ற நிறமுடையவளாகவும், சாந்தஸ்வரூபியாகவும், ஈரமான அழகிய விழிகளைக்கொண்டவளாகவும் இருப்பாள் அவள்.

இருண்ட கேசம்,  அதாவது நல்ல கருமையான தலைமயிர், நெடும் கண்டம் – கண்டமென்றால் கழுத்து, நெடிய கழுத்தும், பரவலான முலைகளும் என அவள் இருப்பாளென்கிறது ஓலை.”

பரிமளா உள்ளூர வெட்கப்பட்டுக் கொண்டாள்.

“தட்டையான வயிற்றில் நாபிக்கு இடது புறத்தில் களங்கம். அதாவது மச்சம் இருக்க வேண்டுமென்று இருக்கிறது.”

தினமும் தாவணி உடுத்தும் பொழுதெல்லாம் தம் இடையில் இருக்கும் மச்சம் தெரியாதபடிக்கு மறைத்து கட்டிக்கொள்ளும் பரிமளா தமக்கு அங்கே மச்சம் இருப்பது ஓலையில் எப்படி தெரிந்தது என்று வியந்தாள்.

“ஜென்ம விவரம்” எனும் தலைப்பிட்டு ஒரு பாடல் பொருளுடன் சென்றது.

…….எட்டேழு பிறவியதில் சிக்கும்முன்னே
சரபமென மீனமென பக்ஷியுமுண்டே
சக்கிலியன் பண்டாரத்தி பலவும் சென்றே
வாசனமாய் நாமத்துடன் வடிவம் கொண்டே
கன்னியென பரதத்தில் பிறப்புமுண்டே.

“இந்த பெண்ணுக்கு இது எம்பத்தி ஏழாவது பிறவியாகும், இதற்கு முன் பாம்பாகவும், மீனாகவும், பறவையாகவும் பிறந்திருக்கிறாள்.

ஒரு பிறவியில் சக்கிலியர் வீட்டிலும், இன்னொரு பிறவியில் வீரசைவ பண்டாரத்தியாகவும் பிறந்திருப்பதாக அகத்தியர் உரைக்கிறார்.

வாசனம் என்றால் மனம். அதிலும் நறுமணம். வாசனமாம் நாமத்தில் வடிவம் கொண்டு., அதாவது இவளது இந்த பிறவிக்கான நாமம், நறுமணத்தைக் குறிக்கும் சொல்லாக இருக்க வேண்டுமென்றும், கன்னியாக பிறவி என்றும், அது பரத கண்டத்தில் நிகழுமென்றும் குறிப்புள்ளது.”

பரிமளாவிற்கு உடல் மயிர்க்கூச்செரிந்தது. பொதுவாக ஜோதிடர்கள் சில கடந்தகால நிகழ்வுகளையும், எதிர் காலத்தில் நிகழப்போவதை சிறிதும் பொத்தம் பொதுவாகக் கூறி சமாளிக்கும் நபர்களாகவே நினைத்துக் கொண்டிருந்தாள். 

ஆனால், இங்கே ஒரு ஓலைச்சுவடியில், அதுவும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு யாரோ ஒரு சித்தரால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் குறிப்புகளில் இந்த இருபதாம் நூற்றாண்டில் பிறந்து வாழ்ந்துகொண்டிருக்கும் தம்மைப் பற்றிய துல்லியமான அங்க அடையாளங்கள், பெயர், குணங்கள், தாய் தகப்பனார் பெயர்கள், குலதெய்வம், பிறந்த ஊர், என அனைத்தும் சிறிதும் பிசகாமல் இருக்கிறதென்றால் என்னவென்று சொல்வது என வியப்படைந்தாள். 

நம்பவும் முடியாமல், தள்ளவும் முடியாமல் பெருங்குழப்பமடைந்தாள்.

…ஈராறில் பழுதொன்றும் கடியும் உண்டே|

வேறேது ரோகமென ஒன்றுமுண்டோ|

“ஈராறு, அப்போது பழுதொன்று என்கிறார் மாமுனிகள். அதாவது பன்னிரண்டு வயதில் எங்கேனும் அடிபட்டு அல்லது விபத்தில் அங்கஹீனம் உண்டு.”

பரிமளாவிற்கு நன்றாக நினைவிருக்கிறது. உடன் படிக்கும் மாணவனுடன் விளையாடிக்கொண்டிருக்கும்பொழுது, தவறுதலாக அவன் பரிமளாவின் காதணியை பற்றி எடுத்ததில், அவளின் காதின் கீழ்ப்பகுதி அறுந்து போனது. உயிர் போய்விடும் படியானதொரு வலியுடன், ஆடைகளிலெல்லாம் ரத்தம் கொட்ட அழுதுகொண்டிருந்த அவளை ஆசிரியர்களிருவர் வாரியெடுத்து அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

தையல் போட்டு வைத்தியம் செய்யவேண்டியதாகிப் போன அந்த சம்பவத்தில் அறுபட்ட காது, இன்னமும் பார்ப்போர் அனைவரும் கேட்கும்படியாக அறுபட்ட காதாகவே உள்ளது.

“ஈராறில் பழுதொன்றும் கடியும் உண்டே. அப்படியானதொரு அங்க ஹீனமும், கடியும் உண்டு. நாயோ, அரவமோ, வேறேதாவது பிராணிகள் மூலம் கடிபட்டிருக்க வேண்டியதாக ஓலை உரைக்கிறது.

வேறேது. ரோகமென எதுவும் உண்டோ என்று நம்மிடமே கேட்கும்படியாக ஆரோக்கியம் நன்றாக இருக்குமென்கிறார் சித்தர் பெருமான்.”

…ஈரெட்டில் கட்டுக்கு வகையுமுண்டு|

“ஈரெட்டு பதினாறு. பதினாறு வயதில் கட்டுக்கு, அதாவது கல்யாணத்திற்கு வகையுமுண்டு.”

பரிமளா பூரித்தாள். அவளுக்கு பதினாறு துவங்கி சிறிது நாட்களே ஆனது நினைவிற்கு வந்தது. 

தென்மேற்கு தந்திடலாம் தேவன் பேரும்|

பேராறு சொல்லிடவே பிள்ளை ரெண்டாம்|

“பிள்ளை தென்மேற்கு திசையிலிருப்பான். இவளுக்கு இரண்டு மக்கட்பேறுக்கு பிராப்தமுண்டு. அந்த இரண்டு குழந்தைகளும் ஆறு பேரை சொல்லும் என்கிறார் அகத்தியர். 

அதாவது, தாய் தந்தை பெயர்கள் இரண்டு, தம் பெயர்கள் இரண்டு, தமக்கு பிறக்கப் போகும் குழந்தைகள் இரண்டு என ஆறு பேரின் பெயர்களை சொல்லும்படியான வாழ்க்கை அமையும் என்று பொருள். தமக்கு பிறக்கப் போகும் குழந்தைகள் அவர்களின் குழந்தைகள் தம் பெயரை சொல்லும் காலம் வரை ஆயுள் உண்டு என்பதை மறைபொருளாகக் கூறுகிறார்.”

பொன்னுக்கும் குறையில்லை நிறைகளுண்டே|
தப்பித்தால் தருமமுண்டு தலையுமுண்டு|
பருவத்தில் அகாலத்திற்கிடமுமுண்டு
எட்டாமிடத்திலொரு இடருமுண்டு
பேதாளம் வழியிலொரு வஞ்சமுண்டு
பஞ்சமியில் மறைவுக்கோர் முறையுமுண்டு
நியதியிலே நியாயமுண்டு விளக்குமுண்டு.
திருச்சிற்றம்பலம்!!!

“பொன் பொருளுக்கும் குறையேதுமில்லை,

தப்பித்தால் தருமமுண்டு தலையுமுண்டு” என்கிறார் சித்தர் பிரான்.

எதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்கிறார்.?

இந்த ஜாதகதாரருக்கு எட்டாம் இடத்தில் பிரச்சனை என்று எச்சரிக்கிறார். 

ஒரு இடர் உண்டு என்கிறார். எட்டாம் இடமான ஆயுள் ஸ்தானத்திற்கு துஸ்தானம் எனும் மறுபெயரும் உண்டு. அதில் பொதிந்துள்ள பிரச்சனையால், மரணமும் சம்பவிக்க வாய்ப்புண்டு என்கிறார். 

அது பருவத்தில் நடக்குமென்கிறார். பருவமென்பது பதினாறு வயதை குறிக்கிறது. 

அது எவ்வாறு சம்பவிக்கலாமென்றால், பேதாளம் வழியிலொரு வஞ்சமுண்டு என்கிறார்.

பேதாளம் என்பது துர் ஆத்துமாக்களை, பூத பிசாசுகளை குறிக்க பண்டைய காலங்களில் வழக்கத்திலிருந்து வார்த்தையாகும். 

அதன்படி, இந்த ஜாதகதாரருக்கு பூதங்களின் மூலமோ, ஏதேனும் ப்ரேதாத்மாவின் இடைஞ்சலாலோ மரணம் நேர வாய்ப்புண்டு என்கிறார் அகத்தியர். 

முக்கியமாக அத்தகையதோர் நிகழ்வு, பஞ்சமி திதியிலேயே நிகழுமென்கிறார்.

முடிபாக, கடைசி பாடல் வரிகளிலிருந்து இந்த ஜாதகதாரர் தெரிந்து தெளிந்துகொள்ள வேண்டியனவாக, இவரின் பதினாறாம் வயதில் அகால மரணம், பூத, ப்ரேதாத்மாவின் மூலமாக இருக்கும், பஞ்சமி திதியில் நடக்கும், என்பதையெல்லாம் கூறும் சித்தர், இறுதியாக நியதியிலே நியாயமுண்டு விலக்குமுண்டு என்கிறார். 

நியதி என்பது விதியைக் குறிக்கிறது. 

இப்படி அகால மரணம் சம்பவிக்க வேண்டுமெனும் விதியில் மாற்றமில்லை என்றாலும், விலக்கும் உண்டு என்கிறார். 

நுணுக்கமாக யோசித்து தெளிய வேண்டியதான இந்த வரிகளில், ஒரு நுட்பத்தை வைத்துள்ளார் அகத்தியர்.

அதாவது, இந்த விதி வலியதானதாக இருப்பினும் அதிலொரு விலக்கு உண்டு என்கிறார். ஆனால் அப்படி விலக்கு நிகழுமென்றும் அறுதியாகக் கூறவில்லை.

புரிந்துகொள்ள வேண்டியது, மரணத்திற்கும் அதிலிருந்து விலக்குக்குமான விகிதம் சரிபாதி எனலாம். விதி வலியது. அதை சித்தர் பெருமகனார் கூற முயலவில்லை. 

ஐம்பது விழுக்காடு ஆயுள் தீர்க்கமெனக் கொள்க.

திருச்சிற்றம்பலம்!!! “

பரிமளா முகம் இருண்டிருந்தது.

இதயத் துடிப்பு அந்த நிசப்தத்தை நிறைத்துக்கொண்டிருந்தது. அவளால் இதையெல்லாம் வழக்கம் போல நம்பாமல் கடந்து செல்ல இப்போது முடியவில்லை. இதுவும் வழக்கமான ஜோதிடர்கள் செய்வது போல ஜாலம் என்று அவளால் நினைக்கக் கூட முடியவில்லை. 

முதல் சில வரிகளைப் படிக்க ஆரமித்தபோதே அவள் முற்றிலும் அதன்மீது நம்பிக்கை கொண்டவளாகிப் போயிருந்தாள்.

அவளின் எதிர்காலங்கள் பற்றிய வர்ணனைகளைப் படிக்கும் பொழுதெல்லாம் அவள் மிகுந்த உற்சாகத்துடனேயே இருந்தாள். அதில் கூறியுள்ளபடி நல்லதொரு கணவர், பொன்னென குழந்தைகள், குறைவில்லா செல்வம், நிறைந்த ஆயுள் என வாழ்வது பற்றியெல்லாம் கனவுகள் கண்டபடியே அந்த விளக்க உரைகளை படித்து வந்த பரிமளா கடைசி பாடலில் முற்றிலுமாக சிதைந்து போயிருந்தாள்.

இறுதியாக இருந்த சில நுணுக்கமான விஷயங்கள் அவளுக்கு சரியாகப் புரியவில்லை என்றாலும், தமக்கு பதினாறு வயதில் ஒரு பஞ்சமி திதியில், பேய் பிசாசுகளின் மூலம் மரணம் என்று கூறுவது புரிந்தது.

தமக்கு இப்போது பதினாறு வயது என்பதை நினைக்கும் பொழுது அவளின் பதைபதைப்பு கொடூரமான உயிர் பயமாகி போனது.

தமக்கு எப்போது வேண்டுமானாலும் மரணம் நேரலாமென்பதற்கு ஐம்பது சதவிகிதம் சாத்தியக் கூறுகள் உண்டு என்பதை எப்படி எடுத்துக்கொள்வதென பரிமளாவிற்கு புரியவில்லை. அழுகை வந்தது. அருகில் சுலோச்சனா இன்னமும் தூங்கிக்கொண்டிருந்தாள். அம்மாவென்று கத்திக்கொண்டு, அவளை கட்டி அணைத்துக்கொள்ள வேண்டும் போல இருந்தது. 

தொண்டைக்கு வந்து உருண்டுகொண்டிருந்த அழுகையை அடக்கிக் கொண்டு செய்வதறியாது விழித்துக் கொண்டிருந்தாள்.

அதிலும் பேய் பிசாசுகளின் மூலம் மரணம் என்று எழுதப்பட்டிருந்தை மீண்டுமொருமுறை மனதில் நினைக்க  கூட அவளுக்கு குலை நடுங்கியது. 

திகில் படங்களைக் கூட பார்க்கத் திராணி இல்லாத பரிமளாவால் பேயைப் பார்ப்பது, அதனால் துன்புறுத்தப்பட்டு மாண்டு போவது என்றெல்லாம் யோசிக்கவே பேரச்சமாக இருந்தது. மரணம் நிகழும் நாளென ஓலையில் குறிப்பிட்டிருந்த திதியான பஞ்சமி என்ற பெயரே அவளுக்கு ஏதோ அமானுஷ்யமான வார்த்தையாகத் தோன்றியது. 

தமக்குப் பின்னே ஏதோ ஒரு உருவம் நின்றுகொண்டிருப்பது போல, கட்டிலுக்கு அடியிலிருந்து ஒரு கை வந்து தம் கால்களை பிடிப்பது போல, முகம் பார்க்கும் கண்ணாடியில் கோர உருவங்கள் தெரிவது போலவெல்லாம் அவளுக்கு கற்பனைகள் வந்தன.

அவளால் மேலும் தனிமையிலிருக்க முடியவில்லை. சுலோச்சனாவை எழுப்பிவிடவேண்டுமென்று தோன்றியது. 

சுலோச்சனா இன்னமும் தூங்கிக்கொண்டிருப்பது கண்டு பரிமளாவிற்கு கோபமாக இருந்தது. 

அவளை எழுப்பிவிடும் எண்ணத்துடன், சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்த கடிகாரத்தைப் பார்த்தாள். மணி நான்கைத் தாண்டி இருந்தது!

திரும்பி சுலோச்சனாவின் தோளில் தட்டி எழுப்ப எத்தனித்தவள், ஒரு கணம் நிதானித்தாள்.

காலை எழுந்ததிலிருந்து பார்த்தபோதெல்லாம் இதே நேரத்தையே காட்டிக்கொண்டிருப்பது போல அவளுக்கு உரைத்தது.

மீண்டுமொருமுறை நிதானமாக கடிகாரத்தைப் பார்த்தாள். 

மணி நான்கைத் தாண்டி இருந்தது!

சரியாக சிறிய முள் நான்கிலும், பெரிய முள் ஒன்றிற்கும் இரண்டிற்கும் நடுவிலும் இருந்தது. நொடி முள் ஓடாமல் ஏழிற்கும் எட்டிற்கும் இடையே தத்திக்கொண்டிருந்தது. 

கடிகாரம் செயலற்று போயிருந்தது! 

முந்தைய நாள் மாலை நான்கு மணியளவில் அதன் இயக்கம் நின்றுபோயிருக்க வேண்டுமென்பதை பரிமாளாவால் புரிந்துகொள்ள முடிந்தது!

பதறிய மனதுடன், ஜன்னல் மேடையிலிருந்த தம் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். 

மணி இரண்டு பதினைந்து வாக்கில் இருந்தது.

பரிமளாவிற்கு முதுகுத் தண்டில் சுளீரென அடித்தது போல வலித்தது. அந்த குளிர் இரவிலும் உள்ளங்கைகள் வியர்த்துக் கொண்டிருந்தன. தொண்டை வறண்டு போயிருந்தது. தாம் ஏதோ மாயத்தில் மாட்டிக்கொண்டிருப்பது போலவும், அதிலிருந்து மீள முயற்சிக்கும் தம்மை உடல், உருவமற்ற பல கைகள் உள்ளிழுத்துக் கொள்வது போலவும் ஜாலங்கள் தோன்றின. 

சுலோச்சனாவை எழுப்பி விட மீண்டும் அவளது தோளைத் தொட்ட அதே நேரத்தில், வாசற்கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டு, பயத்தில் உறைந்தாள் பரிமளா. 

இந்த நடுநிசியில் யார் இப்படி கதைவைத் தட்டுவதென அவளுக்கு புரியவில்லை. கதவைத் தட்டும் ஓசை தமக்கு மட்டுமே கேட்கும்படியானதொரு மாயமோ என்றும் தோன்றியது. இப்படியெல்லாம் யோசித்துக்கொண்டிருக்கும் பொழுதே மீண்டும் கதவு தட்டப்பட்டது.

எழுந்து திறப்பதற்கோ, யாரென்று வாய் திறந்து கேட்பதற்கோ பரிமளாவிற்கு தைரியமில்லை.

சப்தத்தில் சுலோச்சனாவே எழுந்துகொண்டாள்!

வேகமாக சென்று வாசல் விளக்கைத் தட்டி, கதவைத் திறந்தாள். 

வாசலில் குதிரைக்காரன் பாட்டி நின்று கொண்டிருந்தாள்!

இரவு வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமே உறங்கச் சென்றிருந்த பால்கார கோனார் தூக்கத்திலேயே இறந்துவிட்ட விஷயத்தை சொல்லி அவரின் மனைவி வந்து தம்மை அழைத்ததையும், மேற்கொண்டு ஆகவேண்டிய காரியங்களுக்காக உதவிக்கு சுலோச்சனாவை கூட்டிக்கொண்டு செல்வதற்கு தாம் வந்திருப்பதையும் சொன்ன பாட்டியை கண்ட சுலோச்சனா அதிர்ந்தாள். 

உடல் ஜில்லிட்டுப் போயிருந்ததைக் கண்டபோது உறங்கச் சென்ற சிறிது நேரத்திலேயே உயிர் பிரிந்திருக்க வேண்டுமென்று கோனார் மனைவி யூகித்துக் கூறியிருந்ததையும் பாட்டி தெரிவித்தாள்.

தகவல் சொல்வது, சங்கு சிகண்டி, பாடை ஏற்பாடுகள், மயான வேலைகளுக்கெல்லாம் ஆண் ஆட்கள் செய்து கொண்டாலும், வீட்டு வேலைகளுக்கு சில பெண்கள் தேவை என்பதால் தன்னையும் அழைத்துக் கொண்டு செல்ல வந்திருந்த குதிரைக்காரன் வீட்டு பாட்டியுடன் அவசரத்தைப் புரிந்துகொண்டு, செல்ல தீர்மானித்த சுலோச்சனா பரிமளாவைக் கண்டாள்.

பிரமை பிடித்தவள் போல நின்றுகொண்டிருந்தாள் பரிமளா. அவளிடம் சொல்லிவிட்டு தலைமயிரை முடிந்துகொண்டு அவசரமாக கிளம்பிச் சென்றாள் சுலோச்சனா.

அவள் கையிலேயே இன்னமும் இருந்த கைக்கடிகாரத்தில் மணி பார்த்தாள். இரண்டே முக்கால் ஆகியிருந்தது. சுமார் ஒருமணி நேரத்திற்கு முன்பு தாம் தொழுவத்திற்கு சென்று வந்தது, வழியில் நாய் மறித்தது, கோனாரைக் கண்டு வந்தது என முழுவதும் ஒரு திரைப்படம் போல மனதில் ஓடியது. 

வியர்த்திருந்த உச்சந்தலையிலிருந்து வழிந்த வியர்வை அவளின் கன்னத்தில் வழிந்தது.

சட்டென ஏதோ புரிந்துகொண்டவள் ஆணியில் தொங்கிக்கொண்டிருந்த நாள்காட்டியை கழற்றிப் பார்த்தாள்.

“திதி: பஞ்சமி 7. 53 (AM 9.33)” என்றிருந்தது.


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.