மூலம் : பொத்தூரி விஜயலட்சுமி
தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்
இரவு மணி எட்டரை ஆனது. சாப்பிட்டு வந்தவுடன் வீட்டுச் சொந்தக்காரர் அழைத்தார்.
“ராமச்சந்திரா, உனக்கு போன்” என்றார்.
சென்று ரிசீவரை எடுத்தான். அப்பா பேசினார்.
“சின்னவனே, நான்தாண்டா” என்றார்.
“என்னப்பா விஷயம்?” என்று கேட்டான்.
“சின்னவனே, பாட்டிடா” மேற்கொண்டு அவரால் பேச இயலவில்லை.
என் இதயம் நழுவிடும் போலிருந்தது. “எப்போ?” என்று கேட்டான்.
“இப்போத்தாண்டா. பத்து நிமிஷம் ஆகிறது” என்றார் தந்தை.
“நா கிளம்பி வரேம்ப்பா” என்றான்.
ஊருக்குச் செல்வதாகக் கூற வேண்டியவர்களிடம் கூறிவிட்டு பணத்தை சேகரித்துக் கொண்டு பஸ் ஸ்டாண்டிற்கு வருவதற்குள் கடைசி பஸ் போய் விட்டது.
சாலையில் ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அதில் ஏறினான். வீட்டை அடைந்தபோது நள்ளிரவு தாண்டியது. வீட்டிற்குள் நுழைவதற்கு மனம் வரவில்லை. அப்பா வந்து அவனை அழைத்துச் சென்றார். வீட்டின் முன்பாக நான்கு ஓலைத் தட்டிகளை கட்டி பாட்டியைப் படுக்க வைத்திருந்தார்கள். பெரியவர்கள் சிலர் ஹரி நாமத்தைப் பாடிக் கொண்டிருந்தார்கள். இரவு முழுவதும் மனிதர்கள் வந்த வண்ணமிருந்தனர்.
காலை ஒன்பது மணிக்கு நான்கு க்வாலிஸ் கார்கள் வந்தன. ஹைதராபாதிலிருந்து பெரியப்பா, பெரியம்மா, பெரியத்தை, சின்னத்தை, மாமாக்கள், அவர்களின் பிள்ளைகள் அனைவரும் இறங்கினர்.
பாட்டிக்கு என்ன குறைவு? பிள்ளைகள் எல்லோரும் நல்ல நிலையில் இருந்தனர். பேரப் பிள்ளைகளும் நல்ல உத்தியோகத்தில் இருந்தனர். அனைவரும் சேர்ந்து ஆரவாரமாகப் பாட்டியை அனுப்பி வைத்தோம்.
சாப்பாடு முடிந்ததும் லீவு இல்லை என்று சொல்லி என் கசின்கள் அனைவரும் திரும்பிச் செல்லக் கிளம்பினர்.
“நீயும் வரியாடா? வழியில் டிராப் செய்றோம்” என்று கேட்டான் என் அண்ணன் சூரியம்.
“இல்லையில்லை. நான் பதினைந்து நாள் லீவு போட்டு வந்திருக்கேன்” என்றேன்.
“நல்ல காரியம் செய்தாய். நீ உடனிருந்தால் உன் அப்பாவுக்கு உறுதுணையாக இருக்கும்” என்றார் தாத்தா உறவுள்ள ஒரு பெரியவர்.
“ஆமாம். அவனுக்குப் பாட்டி மீது பிரியம் அதிகம்” என்றாள் ஒரு கிழவி.
பெரியம்மாவுக்குக் கோபம் வந்தது. “யாருக்குத் தான் பிரியம் இல்லை? பெரிய உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு அத்தனை நாள் லீவு கிடைக்க வேண்டாமா?” என்றாள் ஆத்திரமாக.
அது உண்மைதான். என் பெரியண்ணனின் பிள்ளைகளும் என் அத்தைகளின் பிள்ளைகளும் பெரிய வேலையில் இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். நான் ஒரு சின்ன ஊரின் கிராமிய வங்கியில் அட்டெண்டராக வேலை செய்கிறேன்.
எனக்குச் சிறு வயதிலிருந்தே படிப்பு ஏறவில்லை. வீட்டிலேயே இருந்தால் பாட்டி செல்லம் கொடுத்து கெடுத்து விடுவாள் என்று தன்னோடு அழைத்துச் சென்றார் என் பெரியப்பா. ஒரே வாரத்தில் சொல்லாமல் ஓடி வந்து விட்டேன். ‘எக்கேடாவது கெட்டுப் போ’ என்று விட்டு விட்டார்கள்.
ஒருவழியாக இன்டர் பாஸ் ஆனபின், ‘இனி படிக்கமாட்டேன்’ என்று பிடிவாதம் பிடித்தேன். வங்கியில் ஒரு அட்டெண்டர் வேலை வாங்கித் தந்தார் என் பெரிய மாமா.
என் அம்மா வருந்தினாள். அவளைப் பாட்டி சமாதானப்படுத்தினாள். “அவர்கள் எல்லாம் தங்கக் கட்டியைத் திங்கப் போகிறார்களா? இவனும் ஒருநாள் தின்பான்?” என்றாள் என் பாட்டி.
பாட்டி இறந்த இரண்டாம் நாளிலிருந்தே கர்மா செய்யத் தொடங்கிவிட்டார்கள். பெரியம்மா, பெரியண்ணன், அத்தைகள் இருவர் மட்டுமே இருந்தார்கள் மீதி எல்லோரும் சென்று விட்டார்கள்.
வீட்டு வேலையெல்லாம் அம்மா பார்த்துக் கொண்டாள். பெரியம்மாவும் அத்தைகளும் கதை பேசிக் கொண்டும் காபி குடித்துக் கொண்டும் காலம் தள்ளினார்கள்.
“கொஞ்ச நாள் முன்னால்தான் ஹைதராபாதில் குக்கடபல்லி என்ற இடத்தில் இடம் வாங்கினோம். பத்து லட்சம் ஆனது. அதில் ஒரு வீட்டை கட்டிவிட்டால் பிள்ளைகள் இருவருக்கும் ஆளுக்கொரு வீடு அமையும்”
“வைர எக்சிபிஷனில் வைர செட் ஒன்று வாங்கினேன். குறைந்த விலைக்கே கிடைத்தது. இரண்டு லட்சம்தான்” என்று அவர்கள் லட்சங்களில் பேசிக் கொண்டிருந்தார்கள்.
என் பெரியப்பாவும், பெரிய மாமாவும் ஒரே டிபார்ட்மெண்டில் பணி புரிகிறார்கள். சமமான பதவி வகித்தார்கள். “என் அத்தான் தேசத்தைக் கொள்ளை அடிக்கிறான்” என்று இவர் சொன்னால், “என் மச்சினன் கோவிலைக் கொள்ளையடிக்கிறான்” என்று அவர் சொன்னார். இப்படி ஒருவரைப் பற்றி குறை சொல்லிக் கொண்டிருந்தார்கள். என் சின்ன மாமா காண்ட்ராக்டர். நல்ல வருமானம். எனக்கு ஒரு சித்தப்பா இருக்கிறார். அவர் அமெரிக்காவில் பணி புரிகிறார். அமெரிக்கா சென்ற பின் நானகைந்து முறை வந்தார். அவ்வளவுதான். அவருடைய பிள்ளைகளை போட்டோவில் பார்ப்பதோடு சரி.
பாட்டியின் கர்மகாண்டம் நல்லபடி முடிந்தது. பன்னிரண்டாம் நாள் ஆசீர்வாதம் முடிந்ததும் எல்லோரும் சென்று விட்டார்கள். பெரியப்பாவும் அத்தைகளும் கூட கிளம்பத் தயாரானார்கள்.
“கிருஷ்ணா, அம்மாவின் தங்க நகைகளை அவளுடைய பெண்களுக்குத் தானே தரவேண்டும்?” என்றார் பெரியப்பா.
“அப்படியே செய்வோம் அண்ணா. அம்மாவிடம் மூன்று வடம் சந்திரஹாரம் சங்கிலி இருந்தது. அதை இரு பெண்களும் எப்படி வேண்டுமனாலும் பிரித்துக் கொள்ளட்டும்” என்றார் என் அப்பா.
“அதை விற்று ஆளுக்குப் பாதி எடுத்துக் கொள்வோம்” என்றாள் பெரியத்தை.
பல ஆண்டுகளாக என் மனதில் இருந்த கோரிக்கையை வெளிப்படுத்தினேன். “பாட்டியின் சந்திரஹாரம் எனக்கு வேண்டும்” என்றேன்.

எல்லோரும் அதிர்ச்சியடைந்தனர். “என்னடா இது? எங்கம்மாவின் தங்க நகை உனக்கு எப்படிச் சேரும்?” என்று கேட்டாள் சின்னத்தை.
“இது இவனுடைய சொந்த யோசனை இல்லை. பின்னால் பெரியவர்கள் இருந்து நாடகம் நடிக்கிறார்கள்” என்றாள் பெரியத்தை வன்மத்தோடு.
“என்ன பேச்சு இது?” கோபத்தோடு கேட்டார் அப்பா.
“அத்தனை தூரம் நாடகம் ஆட வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை” என்றாள் அம்மா.
சண்டை முற்றுவதற்கு முன்பாக நான் இடையில் புகுந்தேன். “எனக்குச் சும்மா தர வேண்டாம். அதற்கான பணத்தை நான் கொடுத்து விடுகிறேன். எனக்கு பாட்டியின் நினைவாக அந்த சந்திரஹாரம் வேண்டும். அவ்வளவுதான்” என்றேன்.
அத்தைகளின் முகத்தில் தெளிவு பிறந்தது. “சரி. ஆவணி மாதத்தில் எங்கம்மாவின் பெயரில் புது நகை செய்து கொள்கிறோம். அதற்குள் பணத்தைக் கொடுத்து இதை எடுத்துச் செல்” என்று கெடு விதித்து விட்டு சென்றார்கள்.
அம்மா என் தலை வீங்கும் அளவுக்கு என்னைத் திட்டித் தீர்த்தாள். “இப்போதே கழுத்து வரை கடனில் முழுகி உள்ளோம். இது வேறயா? பணம் கொடுத்து வாங்கினாலும், அது தெரியாதவர்கள் நாம்தான் பாட்டியின் சங்கிலியை பிடுங்கிக் கொண்டோம் என்பார்கள். நமக்கு எதற்கு இந்த அவப்பெயர்? நான் ஏன் சொல்கிறேன் என்று புரிந்து கொள்ளடா, சின்னா” என்றாள் அம்மா.
அம்மாவின் பேச்சை நான் கேட்கவில்லை. இடையில் இரண்டு மாதங்கள் இருக்கிறது. அந்த நகையின் மதிப்பு முப்பத்திரண்டாயிரம். அத்தனை பெரிய தொகையைச் சேர்ப்பது என்னப் போல் சாதாரண வேலை பார்ப்பவனுக்கு எளிதல்ல.
ஆசைப்பட்டு வாங்கிய செகண்ட் ஹாண்ட் ஸ்கூட்டரை விற்றேன். எனக்கு என் அப்பா எப்போதோ வாங்கித் தந்த தங்கச் சங்கிலியையும் மோதிரத்தையும் விற்றேன். மாதாமாதம் கட்டிய சீட்டையும் எடுத்தேன். எப்படியோ தொகையைச் சேர்த்து ஹைதராபாத் சென்று சின்னத்தையிடம் பணத்தைக் கொடுத்து சங்கிலியை வாங்கி வந்தேன்.
போகாவிட்டால் கோபிப்பார்கள் எனபதால் பெரியப்பாவின் வீட்டுக்குச் சென்றேன். நான் சொன்ன விவரங்களைக் கேட்டு கனனத்தில் கை வைத்து வியந்தாள் பெரியம்மா. “இன்றைய விலையில் ஒரு கிராமுக்கு முப்பது ரூபாய் குறைந்துள்ளது. அதிலும் பழைய நகை. கடையில் விற்றால் இருபத்தெட்டாயிரத்திற்கு ஒரு பைசாகூட அதிகம் கிடைக்காது. மீதி பணத்திற்கு உனக்கு விளக்கெண்ணைய் கொடுத்திருக்கிறாள் உன் சின்னத்தை சுதா. நீ ஒரு பைத்தியக்காரப் பையன். இத்தனைப் பணத்தைத் கொட்டி அந்த முரட்டு சங்கிலியை எதற்கு வாங்கினாய்? அதே தொகைக்குக் புதுப்புது டிசைனில் பிடித்ததை வாங்கிக் கொள்ளலாம்” என்றாள்.
நான் அந்தப் பேச்சையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பாட்டியின் சந்திரஹாரத்தைப் பெற்றது எனக்கு பேரானந்தமாக இருந்தது. அவர்கள் வீட்டில் ஏதோ நாலு பருக்கை கொறித்து விட்டு ரயிலேறினேன்.
வீட்டுக்கு வந்தபின் அத்தை கொடுத்த பிளாஸ்டிக் டப்பாவின் மூடியைத் திறந்து பார்த்தேன். சிவந்த பட்டுத் துணியில் மூட்டை கட்டியிருந்தது. அந்த பட்டுப் புடவை என் பாட்டியின் கல்யாணப் புடவையாம். கிழிந்தபின் அதிலிருந்த ஜரிகையை எடுத்து வெள்ளியாக உருக்கிக் கொண்டாளாம். அந்த புடவையைத் துண்டுகளாகக் கிழித்து பல விதங்களில் பயன்படுத்தினாள் பாட்டி.
ஜாக்கிரதையாக மூட்டையைப் பிரித்தேன். மூன்று வடம் சந்திரஹாரம். கல் பதித்த லட்சுமி தேவியின் டாலருக்கு ஐந்து வளையங்கள் இருந்தன. மூன்று வளையங்களில் சங்கிலிகள் கோர்த்திருந்தன. இரண்டு வளையங்கள் காலியாக இருந்தன. எனக்கு அதைப் பார்த்ததும் கண்ணீர் வந்தது.
நான் என் தாத்தாவைப் பார்த்ததில்லை என் அப்பா மீது தாத்தாவுக்கும் பாட்டிக்கும் மிகுந்த அன்பு. மேல்படிப்பு படிக்கும் வாய்ப்பிருந்தும் உடல் நிலை சரியில்லாத தாத்தாவைப் பிரிந்திருக்க விருப்பமில்லாமல் விவசாயம் செய்து கொண்டு வீட்டோடு இருந்து விட்டார் அப்பா.
நான் பிறக்கும் போதே பலவீனமாகப் பிறந்தேனாம். அம்மாவுக்கு ஏதோ உடம்பு சரியில்லையாம். பாட்டிதான் என்னை வளர்த்தாளாம். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து பாட்டியின் கழுத்தில் இந்தச் சங்கிலி இப்படியே இருந்தது.
“இந்த இரண்டு வளையங்களும் காலியாக உள்ளதே” என்று கேட்டால், “ஐந்து வடம் சங்கிலி இளைத்துப் போய் மூன்று வடமாக மாறியது. எல்லாம் உன் தாத்தாவின் சாமர்த்தியம்” என்பாள் சிரித்துக் கொண்டே.
“தாத்தா நல்லவர் இல்லையா?” என்று கேட்டால், “அப்படிச் சொன்னால் சாமி கண்ணைக் குத்தும். உன் தாத்தா ரொம்ப நல்லவர். செலவு அதிகமானால் அவர் மட்டும் என்ன செய்வார், பாவம். பெரிய குடும்பம். பொறுப்பு அதிகம். நான், என் சொத்து என்று சுயநலமாக இருக்கக் கூடியவர் இல்லை உன் தாத்தா. எனக்கு நிறைய நகை இருந்தது. வங்கி, ஒட்டியாணம், காசுமாலை. எல்லாம் போயிற்று. இது மட்டும்தான் என்னோடு ஒட்டிக் கொண்டு இன்னும் இருக்கிறது” என்பாள்.
“இதை விற்கவில்லையா?” என்று கேட்டால், “விற்றிருப்பார்தான். ஆனால் என் மீதிருந்த அன்பு குறுக்கே வந்தது. இது என் பிறந்த வீட்டார் போட்ட நகை. எங்களுக்கு அதிர்ஷ்டமான ஆபரணம். இதை விற்கவில்லை என்று பெயரே தவிர, பல முறை அடகு வைத்து மீட்டிருக்கிறோம் கணக்கே இல்லை. எத்தனை கஷ்டம் வந்தாலும் இந்த ஒரு நகை எங்களைக் காப்பாற்றி விடும். எத்தனையோ தேவைகளில் இருந்து எங்களை காப்பாற்றியிருக்கிறது. உன் சித்தப்பாவின் படிப்பிற்காக ஒரு வடம் சங்கிலியையும் உன் சின்னத்தையின் கல்யாணத்திற்காக இன்னொரு வடம் சங்கிலியையும் விற்கவேண்டி வந்தது. உன் தாத்தா ரொம்ப வருத்தப்பட்டார். தான் போவதற்குள் இந்த சங்கிலியில் உள்ள வளையங்களை நிரப்பி விடுவேனென்று சொல்லிக் கொண்டே இருப்பார். அதை நிறைவேற்றாமலே போய் விட்டார், பாவம்” என்பாள் பாட்டி.
சரி. அப்போது தேவையாக இருந்தது. விற்றார். அதன் பிறகு என் அப்பாவைத் தவிர மீதி மகன்கள் நன்றாக மேலுக்கு வந்து விட்டார்கள். அமெரிக்காவில் இருக்கும் சித்தப்பா, இங்குள்ள பெரியப்பா இரண்டு பேரும் கை நிறைய சம்பாதிக்கிறார்கள். பெரியம்மா கழுத்தைத் திருப்ப முடியாதபடி நகை செய்து போட்டுக் கொண்டிருக்கிறாள்.
“அவர்களின் தேவைக்காகத் தானே உன் சங்கிலியை விற்றார் தாத்தா. உனக்கு இரண்டு சங்கிலிகள் செய்து கொடுக்கக் கூடாதா?” என்று கேட்டால், என் வாயை அடைத்து விடுவாள் பாட்டி.
“இப்படியெல்லாம் பேசி என்னை வம்பில் மாட்டி விடுவாயா? வீண் பேச்சு பேசாதே. நான் கொடுத்தால் பதிலுக்கு அவர்களும் கொடுக்க வேண்டுமா? நான் அம்மா. அவர்கள் குழந்தைகள்” என்பாள் பெருந்தன்மையோடு.
வெளியில் சொல்லாவிட்டாலும் அப்பாவின் மீதும் எங்கள் மீதும் பாட்டிக்கு அன்பு அதிகம். மீதி பிள்ளைகளைப் போல நங்கள் முன்னேறவில்லை என்ற வருத்தம் அவளுக்கு உண்டு. என்னுடையது சிறிய உத்தியோகம். என் அக்காவையும் கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்தோம். அவள் கணவருக்கும் விவசாயமே தொழில்.
“அவனைக் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று தன் மீதி இரு மகன்களிடமும் பாட்டி. சொல்வது வழக்கம். அவர்கள் அதை மதிப்பதில்லை. ஆனால் பாட்டிக்கு எங்கள் மேல் பாரபட்சம் அதிகம் என்று அவர்கள் பாட்டியை நிந்தித்தார்கள்.
“எங்களுக்காக வக்காலத்து வாங்கி நீங்கள் கெட்ட பெயர் வாங்கிக் கொள்ளாதீர்கள்” என்று பாட்டியிடம் கூறுவாள் என் அம்மா.
தான் எத்தனை பெருந்தன்மையாக இருந்தாலும் சொத்தில் பங்கு கேட்டு வந்த மகன்கள் இருவரையும் பார்த்து வருந்தினாள் பாட்டி.
“அவர்கள் ஏறிச் செல்லும் சின்ன காரின் மதிப்பு கூட இல்லை இந்தச் சொத்து. அந்தச் சிறிய அளவு ஆஸ்தியைக் கூட உடன் பிறந்தவனுக்கு விட்டுக் கொடுக்கும் இங்கிதம் இவர்களுக்கு இல்லாமல் போய் விட்டது. என்ன மனிதர்களோ இவர்கள்” என்று பாட்டி வருந்துவது வழக்கம்.
“கவலைப்படாதேம்மா. எனக்கு என்ன குறைச்சல்? சாப்பிட உணவும் வசிக்க வீடும் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நீ எங்களோடு இருக்கிறாய்” என்பார் என் தந்தை.
“என்னால் உனக்கு எந்த பிரயோஜனமும் இல்லையேடா” என்பாள் பாட்டி.
எங்கள் பாட்டி எங்களோடு இருந்தது எங்களுக்கு மலை போல் நம்பிக்கையை அளித்தது. எனக்கு நினைவு தெரிந்த பின் கூட அவளுடைய சந்திரஹாரம் அடகுக்குச் சென்று வந்து கொண்டுதான் இருந்தது. என் அக்காவின் கல்யாணச் செலவுக்கும், புயல் காற்றில் எங்கள் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்த போதும் அந்த ஆபரணமே எங்களைக் காப்பற்றியது.
நான் வேலையில் சேர்ந்த பின் எங்கள் வீட்டு நிலைமை கொஞ்சம் மெருகடைந்தது. ஐம்பது கிமீ தூரம் பயணம் செய்து ஒவ்வொரு சனி ஞாயிறும் வீட்டுக்கு வருவேன்.
ஆறு மாதத்திற்கு முன் பாட்டிக்கு மலேரியா வந்தது. நோய் குறைந்தாலும் பாட்டி அதிலிருந்து மீளவில்லை. பட்டணத்திற்கு அழைத்துச் சென்றால் நல்லது என்றார் எங்கள் கிராமத்து மருத்துவர்.
“எந்த பட்டணமும் வேண்டாம். ஒன்றா, இரண்டா? எண்பது வயதாகிறது. இந்தப் பறவை பறந்து செல்வதற்கு ஒரு காரணம் வேண்டுமல்லவா? இதைப் பிடித்து நிறுத்த வேண்டுமென்று முயற்சிக்காதீர்கள்” என்றாள் பாட்டி.
பாட்டிக்கு உடம்பு சரியில்லை என்று தெரிந்து அமெரிக்காவில் இருந்து சித்தப்பாவும் சித்தியும் வந்து பத்து நாட்கள் தங்கிச் சென்றார்கள். “தேவையானால் யாராவது ஆளை ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். நான் பணம் அனுப்புகிறேன்” என்றார் சித்தப்பா.
அவருக்குத் தெரிந்தது அவ்வளவுதான். இந்த ஊரில் பாட்டிக்கு உதவி செய்வதற்கு மனிதர்களுக்கா பஞ்சம்? அதற்கு அமெரிக்காவிலிருந்து டாலர் தேவையா என்ன? பாட்டியின் நல்ல குணமே போதும். தாமாகவே வந்து உதவுவார்கள்.
யாருடைய கையையும் எதிர்பார்க்காமல் இறைவனின் பெயரை உச்சரித்துக் கொண்டே போய்ச் சேர்ந்து விட்டாள். பாட்டி இறப்பதற்கு நான்கு நாட்கள் முன்பு போய்ப் பார்த்தேன்.
“சின்னவனே, என் வேலை இப்போதோ அப்போதோ என்று உள்ளது. மனிதன் உயிரோடு இருப்பதை விட போன பின் செலவு அதிகம். மீண்டும் பாகப் பிரிவினை என்று வருவார்கள். உன் அப்பாவுக்கு வருவாய் கைக்கும் வாய்க்குமாக உள்ளது. என் சந்திரஹாரத்தை அடகு வைத்து பணம் வாங்கி வா. இன்னும் எதற்கு அடகு என்று நினைத்தால், விற்று விடு” என்றாள்.
எனக்கு கோபமாகவும் வருத்தமாகவும் இருந்தது. “வாழ்ந்த காலம் முழுவதும் பிள்ளைகளுக்காக கவலைப்பட்டது போதாதா, பாட்டி? இனி இந்த அடகு வைக்கும் நினைப்பை விட்டு விடு” என்றேன்.
“எத்தனை ரோஷம்டா உனக்கு, சின்ன ராமச்சந்திரய்யா” என்றாள் சிரித்துக் கொண்டே. என் தாத்தாவின் பெயரும் ராமச்சந்திரய்யா தான். அதுதான் நான் பாட்டியைக் கடைசியாகப் பார்த்தது. போய்ச் சேர்ந்து விட்டாள்.
பாட்டியின் பழைய நகைக்காக நான் சண்டை போட்டேன் என்று என்னை எல்லோரும் பைத்தியக்காரன் என்றார்கள்.
அவர்களின் கண்களுக்கு அது வெறும் தங்க நகை. ஆனால் அது என்னைப் பொறுத்தவரை அது பாட்டியின் மறுஉருவம். எங்களைப் பாதுகாத்த கற்பக விருட்சம். சற்றும் சிதையாமல் இருக்க வேண்டிய இனிய அடையாளம்.
நான் எல்லாவற்றிலும் என் தாத்தாவைப் போலவே இருப்பதாக என் பாட்டி அடிக்கடி கூறுவாள். தாத்தா என் பாட்டிக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மீதி இரண்டு சங்கிலிகளையும் செய்து அதில் கோர்க்க வேண்டியது என் பொறுப்பு.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
