கி.ரா நினைவுக் குறிப்புகள் – 32-33

This entry is part 7 of 10 in the series கி.ரா. - அ.ரா.

32

மதுரைக்காரர்களுக்கு விருதுநகருக்குத் தெற்கே இருப்பவர்கள் எல்லாம் தெக்கத்தி ஆட்கள்தான். இலக்கிய வட்டாரத்தில் தெக்கத்தி எழுத்தாளர்கள் என்ற சொல்லாட்சி, 1980 கள் வரை, நெல்லை, கன்யாகுமரிக்காரர்களைக் குறிக்கும் சொல்லாக இருந்தது. கன்யாகுமரி எழுத்தாளர்கள் கூட அந்தச் சொல்லாட்சிக்குப் பெரிதும் சொந்தக் கொண்டாடுவதில்லை. ஆனால் நெல்லைக்காரர்கள், தங்களைத் தெக்கத்திச் சீமைக்காரர்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையோடு இருந்தார்கள்.

இந்தப் பெருமையை மங்கச் செய்து, கரிசல் எழுத்தாளர்களின் கூட்டத்தையே தெக்கத்தி எழுத்தாளர்களின் கூட்டமாக மாற்றியவர் கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏரான கி.ராஜநாராயணன் தான். கரிசல் இலக்கியம் என்பதற்கு நில அடையாளம், மொழி அடையாளம், புழங்குபொருட்கள் மற்றும் தொழில்சார் கருவிகள் கொண்ட வாழ்வியல் அடையாளம் எனத் திட்டமிட்டு உருவாக்கித்தந்து, அதன் வெளிப்பாடாக கரிசல் வட்டாரச் சொல்லகராதியைத் தொகுத்துத் தந்ததன் மூலம் கரிசல் இலக்கியப்பரப்பை விரிவாக்கினார் கி.ரா. அவர் உருவாக்கிய பரப்பிற்குள் பூமணி, பா.ஜெயப்பிரகாசம், தமிழ்ச்செல்வன், சோ.தர்மன், தனுஷ்கோடி ராமசாமி, கௌரிசங்கர், உதயசங்கர், கோணங்கி போன்ற கதைக்காரர்களும் தேவதச்சன், தேவதேவன், சமயவேல், வித்யாஷங்கர் போன்ற கவிகளும் அந்தப் பரப்பைப் பலவித வண்ணங்கள் கொண்டதாக மாற்றினார்கள். அந்த மாற்றத்திற்குப் பின்னால் நெல்லை எழுத்தாளர்களும் கூட கரிசல் என்ற சொல்லை தெக்கத்தி என்ற சொல்லால் பெரிதாக்கித் தங்களையும் இணைத்துக்கொண்டு பெரிய அடையாளத்துக்குள் இணைந்து கொண்ட நிகழ்வைச் சமகாலத் தமிழ் இலக்கியப் பெருநிகழ்வு என்று சொல்லலாம்.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வண்ணதாசன், கலாப்ரியா, விக்ரமாதித்யன் போன்றவர்கள் தங்களின் நிலப்பரப்பிலிருந்து வந்த முன்னோடியாகக் கி.ராஜநாராயணனைக் கொண்டாடியதை நேரில் கண்டிருக்கிறேன். இவர்களில் பலரும் கி.ரா.வைப் பார்க்கப் புதுவைக்கு வந்து போவதுண்டு. அவர்களில் ஒருசிலரின் வருகையின்போது நானும் உடன் இருந்திருக்கிறேன். தெக்கத்தி எழுத்தாளர் என்றோ, கரிசல் எழுத்தாளர் என்றோ தங்கள் அடையாளத்தைச் சொல்லிக் கொள்ளாத இருவர் கி.ரா. வைப்பார்க்க வந்தபோதும் அவரோடு இருந்திருக்கிறேன். ஒருவர் தோப்பில் முகம்மது மீரான்; இன்னொருவர் கழனியூரன். கழனியூரன், கி.ரா. நாட்டுப்புறக் கதைகளைத் தொகுத்தபோது உடனிருந்து தொகுப்புக்கு உதவியவர். அவரைப்போலவே தொகுப்புக்கு உதவிய இன்னொருவர் பாரததேவி. கழனியூரனும் தோப்பிலும் புதுவைக்கு வந்து கி.ரா.வோடு பேசும் விதத்தைக் கவனித்த எவரும் அவர்கள் நெருங்கிய உறவுக்காரர்கள் என்றுதான் நினைப்பார்கள். அவரோடும் கணவதி அம்மாவோடும் உறவுமுறை சொல்லிப் பேசிச் சிரித்து மகிழ்ந்துவிட்டுப் போவார்கள்.

இந்த உறவு வரலாற்றில் சொல்லப்பட்ட பிறழ்வான நிலைக்கு எதிரானது. இந்தியாவில் இசுலாமியர்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகவே விஜயநகரத்தில் இந்து ராஜ்ஜியம் நிறுவப்பட்டதாகவும், அங்கிருந்து வந்த நாயக்க ஆட்சியாளர்கள் மதுரை வரை வந்து இசுலாமியர்களை விரட்டியடித்ததாகவும் வரலாறு சொல்கிறது. அதற்கு முன்பு ஆந்திரப் பகுதியைக் கைப்பற்றிய இசுலாமிய அரசர்களும் தளபதிகளும் நாயுடுகளின் வீட்டுப் பெண்களை வம்படியாகத் திருமணம் செய்ய விரும்பினார்கள் என்றும், அதனை ஏற்காத நாயுடுகள் ஆந்திராவிலிருந்து இடம்பெயர்ந்து வந்தார்கள் என்றும், தெலுங்குச் சாதிகளின் தொன்மங்களில் பேசப்பட்டுள்ளன. கி.ரா. எழுதிய கோபல்ல கிராமம் நாவலில் கூட அந்த இடப்பெயர்வுக்கதை இடம்பெற்றுள்ளது. தனது நாவலில் அப்படிச் சித்திரித்த கி.ரா., தோப்பிலோடும், கழனியூரனோடும் மாமா-மாப்பிள்ளை என்று உறவுசொல்லிப் பேசிக் கொண்டிருப்பார் .

1991-92 ஆக இருக்கும். கி.ரா.வைப் பார்க்கப் புதுவை வந்திருந்தார் தோப்பில். சந்தித்த அன்று முதல் எனக்கும் மாமா தான். கி.ரா., பெரிய மாமா ஆனதால், நான் சின்ன மாமா ஆகிவிட்டேன். அப்படித்தான் தோப்பில் அழைப்பார். அவர் மேடையில் பேசுவதைக் கேட்பதைவிட தொலைபேசியில் பேசுவதை விரும்பிக் கேட்பேன். நீண்ட நேரம் பேசுவோம். கடலோரக் கிராமத்தின் கதை, சாய்வு நாற்காலி தவிர எல்லாமே வந்தவுடன் அழைத்துத் தந்து படித்துக் கருத்து கேட்பார். அவ்விரண்டையும் போலவே கூனன் தோப்பு, துறைமுகம், அஞ்சு வண்ணம் தெரு, குடியேற்றம் என எல்லா நாவல்களுமே தமிழக இசுலாமிய சமூகத்தின் உள்கட்டுமான நெருக்கடிகள் பற்றிய அலசல்களே. வியாபாரம் சார்ந்து திருநெல்வேலியில் வாழ நேர்ந்தாலும் எழுத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திலேயே தான் இருந்தார். சிறுகதைகளில் குறிப்பான வெளிகளைப் பார்க்க இயலாது.

நான் நெல்லைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த ஆண்டில் தான் தோப்பிலின் சாய்வு நாற்காலி சாகித்ய அகாதமி விருது(1997) பெற்றது. அவரது படைப்புகளை முன்வைத்து ஒருநாள் கருத்தரங்கம் ஒன்றை 1998 மார்ச்சில் நடத்தத் திட்டமிட்டபோது கி.ரா. மாமாவை அழைக்க முடியுமா? என்று கேட்டார் தோப்பில். அவர் தான் எனக்கு அகாடெமி விருது கிடைக்க முக்கியமான காரணம் என்றும் சொல்லி, அவரை அழைக்க முயற்சி செய்யுங்கள் என்றார். ‘அழைக்கலாம்; ஆனால் கி.ரா. பயணம் செய்து வரவேண்டுமே; இவ்வளவு தூரம் பயணம் செய்யத் தயங்குவாரே’ என்று சொல்லிவிட்டு முயற்சி செய்தேன். நாங்கள் பேசிக்கொண்டது போலவே அவர் வரவில்லை. ஆனால் தோப்பிலுக்காக ஒருநாள் முழுக்கக் கருத்தரங்கம் நடத்துவது குறித்து பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார். இதுதான் பல்கலைக்கழகங்கள் இலக்கியத்திற்குச் செய்யவேண்டிய வேலை என்று சொல்லி ஒரு அஞ்சலட்டை எழுதிப் போட்டிருந்தார்.

தோப்பில் கருத்தரங்கிற்குக் கி.ரா.வை அழைக்க முடியாததை எப்படியாவது ஈடுகட்ட வேண்டும்; திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு அவரை அழைக்கவேண்டும் என்பதில் எங்கள் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வே. வசந்தி தேவியும் ஆர்வம் காட்டினார். முனைவர் வே. வசந்திதேவி இலக்கியவாதிகளைப் பல்கலைக்கழகத்தோடு தொடர்புபடுத்துவதில் ஆர்வம் கொண்டவர். எழுத்தாளர்கள் தொ.மு.சி.ரகுநாதனையும் சுந்தரராமசாமியையும் பல்கலைக்கழக ஆட்சிப்பேரவையின் உறுப்பினர்களாக ஆக்கும்படி ஆளுநருக்கு அவர் தான் பரிந்துரைத்தார். இளையோர் நலத்திட்ட ஆலோசனைக்குழுவில் தோப்பில் முகம்மது மீரானும் தமிழ்ச்செல்வனும் இடம் பெற்றிருந்தார்கள்.

அவரது பதவிக்காலம் முடியும் நிலையில் பெண்ணியம் குறித்து மூன்றுநாள் கருத்தரங்கம் ஒன்றினை நடத்தினோம். அக்கருத்தரங்கின் தலைமையுரையை நிகழ்த்த கரிசல் எழுத்தாளர் கி.ரா.வை அழைக்க வேண்டும் என்று என்னிடம் வலியுறுத்தினார். அப்போது கி.ரா., தயாராக இருந்தால் நமது பல்கலைக்கழகத்தில் கூட அவரை ஓராண்டு வருகைதரு பேராசிரியராக நியமிக்கலாம் என்றார். அவர் நமது பல்கலைக்கழகப்பகுதியைச் சேர்ந்தவர். நமது பல்கலைக் கழகப் பகுதியின் மனிதர்களை எழுதியவர் என்று அடிக்கடி சொல்வார். புதுச்சேரிக்குப் போன கி.ராஜநாராயணனுக்குத் திரும்பவும் கரிசல் பூமிக்குத் திரும்பும் ஆசை இல்லை என்பது தெரிந்தபின் அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டோம்.

33.

இப்போது அவர் பெயர் புதுவை இளவேனில். புதுவையில் அறியப்பட்ட நிழற்படக்கூடத்தை நடத்திக்கொண்டிருக்கிறார். நிகழ்காலத்தில் நிழற்படக்கூடங்களுக்கு நல்ல வருமானம் இருக்கிறது என்பதால் அதை நிறுவி நட த்துகிறார். கல்யாணப்போட்டோ எடுப்பதைத் தாண்டி இப்போதெல்லாம் தொடர்ச்சியாகப் பிறந்தநாட்களுக்கு வெவ்வேறு இடங்களைத் தேர்வுசெய்து கொண்டாடும் நடுத்தரவர்க்கம், படங்களாகப் பதிவுசெய்யத் தொழில்முறைப் புகைப்படக்காரர்களை அணுகுகிறார்கள். கையிலிருக்கும் அலைபேசிக் காமிராக்களின் படங்களைத் தாண்டியும் வீட்டு விசேச நிகழ்ச்சிகளான பூப்புனித நீராட்டு, நிச்சயதார்த்தம், திருமணத்திற்கு முன் சந்திப்பு, வளைகாப்பு, அறுபதாம் கல்யாணம் என ஒவ்வொன்றையும் படங்களாகப் பதிவுசெய்து கணினியின் பக்கங்களில் தொகுத்து வைத்துக்கொள்கிறார்கள். முன்புபோல் ஆல்பம் போட்டு வைத்துக்கொள்வதில்லை.

இளவேனில் நிழற்படக்கூடத்தை நடத்தினாலும் அவர் ஒரு கலைஞர். மனிதர்களை – அவர்களின் பலவிதமான உணர்வுகளோடு படம் பிடித்த நிழற்படக்கலைஞர். அவரால் படம் பிடிக்கப்பட்ட தமிழ்நாட்டு ஆளுமைகள் பலவிதமானவர்கள். முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியைப் பலவிதமாகப் படம் எடுத்தவர். அவரைக்கூட ஓர் எழுத்தாளர் என்ற அளவிலேயே படங்களாக எடுத்துத் தந்தார். எழுத்தாளர்கள் பலரும் அவரது காமிராவினால் பிடிக்கப்பட்ட படங்களில் புன்னகைக்கவும், நிற்கவும், நடக்கவும், நண்பர்களோடு பேசிக்களிக்கவும் விரும்பினார்கள். பிரபஞ்சன், ரவிக்குமார், ராஜ்கௌதமன், லெனின் தங்கப்பா,ரமேஷ் ப்ரேம், போன்ற புதுவையோடு தொடர்புடைய எழுத்தாளர்களுக்கு அப்படியான படங்களை எடுத்துக்கொடுத்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டு எழுத்தாளர்களான தேவதேவன், பா.செயப்பிரகாசம், ஞானக்கூத்தன், கனிமொழி, பாமா, இன்குலாப், கோவை ஞானி, ராசேந்திரச் சோழன், அழகிய பெரியவன், தியோடர் பாஸ்கரன், வண்ணதாசன், கலாப்ரியா, சாருநிவேதிதா, ஆ.ரா.வேங்கடாசலபதி, சுகுமாரன், சல்மா முதலானவர்களைப் படங்களாக எடுத்து மகிழ்வித்தவர். என்னையும் அப்படியான படங்களில் பார்க்க ஆசைப்படுவதாகச் சொல்வதுண்டு.

புதுவைக்கு வரும்போது சொல்லுங்கள்; படம் எடுக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். அவர் எடுக்க விரும்பிய காட்சிகள் நானும் கி.ரா.வும் உட்கார்ந்தும் நடந்தும் பேசித் திரிந்த காட்சிகளை. அந்தக் காட்சிகளை விவரிப்பார். “அப்பா (கி.ரா.வை அவர் அப்பொழுதே இப்படித்தான் அழைத்தார்) இருந்த ஒவ்வொரு வீட்டிலும் அவரோடு உங்களைப் பார்த்திருக்கிறேன். திருநெல்வேலிக்குப் போன பிறகும் வந்து சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த காட்சிகள் எனக்குள் இருக்கிறது. நீங்களும் அவரும் தாகூர் கலைக்கல்லூரிக்குப் பின்புறம் விமான நிலையப்பாதைகளிலும் விளையாட்டு மைதானங்களிலும் நடந்துகொண்டே பேசிக்கொண்டு போவீர்கள். பல நேரம் அவர் முன்னே நடக்க, நீங்கள் ஓரடி பின்னால் போவீர்கள். சில நேரங்களில் நின்று கையை அசைத்து விவாதிப்பீர்கள். அவர் அதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருப்பார். அந்தக் காட்சிகளையெல்லாம் இப்போது திரும்பவும் படமாக்க முடியாது என்றாலும் பல்கலைக்கழகம், கடற்கரை, கி.ரா. குடியிருந்த வீடுகள், காலை நடைக்குப் போகும் விமானநிலையப்பாதை எனப் பல இடங்களில் எடுக்கவேண்டும் என்று சொன்னார். என்னைப் படங்கள் எடுக்கலாம். என்னோடு கி.ரா.இருக்கும் படங்களை எடுக்க முடியாது.

இப்போது புதுவை இளவேனிலாக இருக்கும் இவரை முதலில் பாபுவாகவே அறிவேன். இலாசுபேட்டை தாகூர் கலைக்கல்லூரிச் சாலையில் இருந்த வீட்டிற்குப் போகும்போது தினசரிகள் வாங்கி வந்து கொடுக்கும் சிறுவனாகப்பார்த்தேன். பேப்பர் போடும் பையன் மேலே வந்து தந்துவிட்டுப் போகிறான் என்று நினைத்தேன். ஆனால் பேப்பரைக் கொடுத்துவிட்டுக் கணவதி அம்மாவிடம் காபி வாங்கிக் குடித்துவிட்டுப் பையொன்றை வாங்கிக் கொண்டு போனான். அவர்களுக்குத் தேவையான பொருட்கள் வாங்கித்தருவதற்காகத் தினசரி வந்துவிடுவான் என்பது பின்னர் தெரிந்தது.

பின்னர் ஒருமுறை பார்த்தபோது, அந்தச் சிறுவன் இளைஞனாக மாறிய தோற்றத்தில் இருந்தான். ஒரு ஆட்டோவின் பக்கத்தில் நின்றிருந்தான். கி.ரா. வீட்டின் வாசலில் நின்றிருந்த அந்த வண்டியைக் கவனிக்காமல் படியேறினேன். அந்த இளைஞன் எனக்கு வணக்கம் சொன்னான். நானும் வணக்கம் தம்பி என்று சொல்லிவிட்டு மேலே போய்விட்டேன். போனதும் எங்கேயாவது கிளம்பிறீங்களா? என்று கி.ரா.விடம் கேட்டேன்.

‘ஏன் அப்படிக் கேட்கிறீங்க’

“கீழே அந்தப் பாபு ஆட்டோவோடு நிற்கிறாரே ”என்று சொன்னேன். அவர்களுக்காக அவன் ஒரு ஆட்டோவை அழைத்துக் கொண்டுவந்திருக்கிறான் என்று நினைத்து அப்படிச் சொன்னேன்.

“ஓ.. அதுவா.. பாபுவோட வண்டிதான். வேலையில்லாமெ இருக்கிறானேன்னு வங்கியில் சொல்லி ஏற்பாடு செய்தேன். நானும் கொஞ்சம் பணம் கொடுத்தேன். இப்போ அவன் ஆட்டோவுக்குச் சொந்தக்காரன். காலையில் வருவான். எங்களுக்குத் தேவையான சாமான்களை வாங்கிக் குடுத்து வண்டியெடுத்துட்டுப் போய் ஆட்டோ ஸ்டேண்டில் இருப்பான்” என்றார்.

நான் பாண்டிச்சேரியில் இருந்தவரை பாபு சொந்த ஆட்டோவை ஓட்டும் ஆட்டோக்காரராக இருந்தார். சில வருடங்கள் கழித்துப் பாண்டிச்சேரி போனபோது நண்பர் ரவிக்குமாரோடு அவரைப் பார்த்தேன். அவரை அறிமுகம் செய்தபோது ‘ அவரைத் தெரியுமே. கி.ரா.வீட்டில் பல தடவைப் பார்த்திருக்கிறேன்’ என்றேன். “அப்போது அவர் பாபு; இப்போது புதுவை இளவேனில்” என்று அறிமுகம் செய்தார். புகைப்படம் எடுப்பதில் தேர்ச்சிபெற்று புகைப்படக் கலைஞராக மாறிக்கொண்டிருக்கிறார் என்று சொன்னார். ரவிக்குமார் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் அவரோடு நெருக்கமாக இருந்தார்.

அவர் எடுத்த படங்கள் பல இதழ்களில் வந்துகொண்டிருந்தன. கி.ராஜநாராயணை மட்டுமல்லாமல், புதுவையின் அடையாளங்கள் பலவற்றை எடுத்து வைத்திருந்தார். கி.ரா.வையும் புதுவையும் இணைத்துப் படங்கள் எடுத்தார். அதை புதுவையின் பிரெஞ்சு அடையாளங்களைக் கொண்ட ஹோட்டல் தெவில்லாவில் இருந்த மேரி ஹாலில் நட த்தினார் என்பது ஞாபகம். அதன் தொடக்கவிழா அல்லது நிறைவுவிழாவிற்கு வரமுடியுமா? என்று கேட்டார். என்னால் போகமுடியவில்லை. 2003 செப்டம்பரில் புதுவையில் நடந்த அந்தக் கண்காட்சிப் பிறகு கோவையில் மார்ச் 2004 இல் நடத்தப்பெற்றது. அதற்கு நடிகர் சிவகுமார், ஓவியர் ஆதிமூலம், மலையாள சினிமா இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் வந்து பாராட்டினார்கள். கி.ரா.வை படமாகத் தொகுத்தளித்த அந்தப் நிழற்படக் கண்காட்சிதான் புதுவை இளவேனிலைத் தேர்ந்த நிழற்படக்கலைஞராக உலகத்திற்கு அறிமுகம் செய்தது.

கி.ரா. - அ.ரா.

கி.ரா நினைவுக் குறிப்புகள் – 31 ”சிறுகதையை அப்படியே நாடகமாக்க வேண்டும் என்று அவசியமில்லை.”

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.