நள்ளென் நாதம்

இந்தியப் பாரம்பரிய இசைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் கோவிட்-19

தி வீக் இதழில் பூஜா அவஸ்தி

பண்டிட் ராமேஸ்வர் பிரசாத் மிஸ்ரா-வினுடைய குரு படே  ராம்தாஸ் மிஸ்ரா. அவர் பெனாரஸ் கரானா பள்ளியைச் சேர்ந்தவர். அவரிடம் பயிற்சி செய்யும்போது, ஞாபக சக்தி மட்டுமே சிஷ்யர்களுக்கு ஆபத்பாந்தவனாக இருந்தது. “காலையிலும், மாலையிலும் நாங்கள் சாதகம் செய்வோம். என் மூத்தோர்கள் சொல்வதுண்டு,  செல்லப் பிராணிகளுக்கு உணவளிக்கப்படும், ஆனால் ரியாஸை (கர்நாடக சங்கீதத்தின் சாதகம்) தவறவிட்டால், உனக்குக் கிடைக்காதென்று. ஒவ்வொரு ராகத்தையும்  மனனம் செய்யவேண்டியிருந்தது. குறிப்புகளோ, பதிவுகளோ இருக்காது மீண்டும் பயிற்சி செய்யவேண்டுமென்றால். என் குரு சொல்வார் இசையொன்றும் மளிகைப் பட்டியல் அன்று, குறித்துவைத்துக்கொள்ள. அது ஒருவருக்குள் ஆத்மார்த்தமாக உட்புகவேண்டும்” என்கிறார் 75 வயதான மிஸ்ரா.

அவர்போன்ற செவ்வியல் இசைக் கலைஞர்களுக்கு, இசையில் தொழில்நுட்பதை எந்த விதத்திலும் பயன்படுத்துவதென்பது அதன் ஆன்மா, தூய்மைக்கு ஊறுவிளைவிப்பதேயாகும். வீடடங்கோ, வருமான இழப்போ எந்த விதத்திலும் இந்தப் பார்வையை மாற்றுவதாக இல்லை. “தொழில்நுட்பம் மோசமான குரு” என்கிறார். “இது ஒருவரை அடிமைப்படுத்தும். மின்னணு தம்புரா (பாடகருக்கு சுதி சேர்த்து இணைந்திசைக்கப்படும் ஓர் இசைக்கருவி) பயன்படுத்தும்பொழுது ஒரு சலிப்பையே கேட்பவர்களுக்குக் கொடுக்கும். தரவுயர்வுகளுக்கு ஏதும் இடமிருக்காது. திடீரென்று மின்சாரம் தடைபட்டால் என்னாகும்? கலைஞனுக்குப் பதற்றத்தையே கொடுக்கும்!”, என்கிறார் லக்னோவைச் சேர்ந்த கையால் இன்றும் தம்புரா பயிற்சிசெய்யும் பாடகர். இன்று எல்லோரும் மின்னணுகொண்டு தம்புரா பின்னணியில் ஒலிப்பதை புழக்கத்தில் அதிகரித்திருக்கிறார்கள்.

சாஸ்திரீய சங்கீதம் தொடர்ந்த கவனிப்பும் உள்வாங்குதலும் கோரும். செவ்வியல் இசையென்பது ஒரு சேகரிப்புச் சுவை. ஒலிகளிலும் சொற்களிலும் இருக்கும்  மெல்லிய ஏற்ற இறக்கம், சந்தம், இன்னிசையெல்லாம் இசையில் பயிற்றுவிக்கப்படாத காதுகளுக்குச் சென்றுசேர்வதில்லை. தொற்றுநோய்க் காலத்தில் மற்ற எல்லாவற்றையும்விட இசைதான் அதிக பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. காணொளி வழியாகப் பயிற்றுவிப்பவர்களுக்குக்கூட கணிசமான அளவில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இந்தத் தொற்றுநோய்க் காலத்தில் வீட்டு உதவி அல்லது தொழிற்சாலை ஊழியர்களுக்குப் பணம் செலுத்துவதற்கான தார்மீக உரிமைகூட,  நுண்கலை ஆசிரியர்களுக்கு நீட்டிக்கப்படவில்லை. இணையம் மூலமாக நிகழ்நிலைக் கச்சேரிகளில் நிகழ்த்துவதற்கான சிக்கல்களைப் பலரும் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அகலப்பாட்டை வலை வசதி, ஜூம் போன்ற சந்திப்புகளுக்கான மென்பொருள் போன்ற செலவுகளை உணர்ந்தேயிருக்கிறார்கள். இருந்தாலும் எந்தவொரு ஊதியமும் இல்லாமல், அவர்கள் இலவசமாக, தங்களின் சங்கீதம் மக்கள் மனதைச் சென்றடைய வேண்டுமென்று கச்சேரி செய்கிறார்கள்.

பாரம்பரிய ஹிந்துஸ்தானி இசை, குருவுக்கும் மாணவர்களுக்கும்  இடையிலான ஒரு நெருங்கிய பந்தம் மூலமாகக் கற்றலை  அளிக்கிறது. எனவே, நேரிடைத் தொடர்பென்பது அதன் மிக முக்கிய அம்சம். இது ஒரு வாய்வழி பாரம்பரியம், நேரமும் பொறுமையும் அவசியம். இத்தகைய கடுமையான தன்மை அதன் பயன்பாட்டைக்  கட்டுப்படுத்துகிறது என்று விமர்சகர்கள் நம்புகின்றனர். பண்டிட் நரேந்திர நாத் தார் கீழ் பயிற்சியளிக்கும் டெல்லியைச் சேர்ந்த 45 வயதான சரோத் இசைக்கலைஞர்  சந்திரிமா ராய் கூறுகையில், பாரம்பரியக் கற்றலின் மிகப் பெரிய நன்மை, ஒரு மாணவரிடமிருந்து “100 சதவீத கவனக் குவிப்பு” கோரும். “நீங்கள் இசையை வெறுமனே உருவாக்கவோ, அழிக்கவோ இயலாது” என்கிறார்.  “உடல் சூழலைத் தாண்டியும் பயிற்சி தொடர்கிறது. இசை என்பது மற்ற கலை மாதிரியன்று . ஓர் ஓவியத்தில் தவறைத் திருத்துவது மாதிரி இசையில் சாத்தியமில்லை. மாணவரின் திறனுக்கேற்ப குரு முன்நகர்கிறார். ஒருவர் மிகவும் உறுதியாக இருக்கவேண்டும். நீங்கள் அவசரமாக இசையைக் கற்றுக்கொண்டால், வாழ்நாள் முழுவதும் அந்தத் தவறைச் சுமக்கநேரும்.” ஊரடங்கு வாழ்க்கைக் காலத்தில் ராய் டிஜிட்டல் முறையில் கற்றலையும் கற்பித்தலையும் பயன்படுத்திக்கொண்டார். அவரது குருவின் பிறந்த நாளில், அவரும் அவரது நண்பர்களும் நலிந்த இசைக் கலைஞர்களுக்குப் பணம் திரட்டுவதற்காகக் கட்டண  நிகழ்நிலை இசை நிகழ்ச்சியை நடத்தினர்.

“மாணவர்களுடன் தொடர்பில் இல்லாதது அவலம்தான்” என்று அவர் கூறுகிறார். “சரியான குறிப்பை,  சுருதியைக் கண்டுபிடிப்பது புதிய மாணவர்களுக்குச் சவாலாகும். இணைய அலைவரிசை காரணமாக ஒலிப் பரிமாற்றத்தில் நேர தாமதம் இருப்பதுபோல. நிகழ்நிலை கற்பித்தல், சிக்கலாக இல்லாமல் செய்யக்கூடியதாக இருக்கவேண்டும். ஒருபோதும் நான் நினைத்துப் பார்த்திருக்காத அளவில் வெளிநாட்டுப்  பார்வையாளர்களையும் புதிய மாணவர்களையும் என்னால் சென்றடைய முடிந்தது,” என்கிறார் சந்திரிமா. 

பண்டிட் மிஸ்ராவின் மாணவர் 50 வயதான பிரமோத் உபாத்யாயைப் பொருத்தவரை, நிகழ்நிலையில் கற்பிப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வதற்கான போராட்டம், மாணவர்களின் பெற்றோர்கள் கொடுக்கும் கஷ்டங்களோடு சேர்ந்து இன்னும் அதிகரித்தது. அவர்கள் என்னிடம் கூறுகிறார்கள், ‘உங்களுக்குப் பயணச் செலவு மிச்சம், உங்கள் கட்டணத்தைக் குறைக்கவேண்டும்’, என்று உபாத்யாய் அவர்களிடம் கேட்டிருக்கிறார்கள். அவரைப் பொருத்தவரை, இதுபோன்ற கோரிக்கைகள் கல்வி ஆசிரியர்களிடம் கோரப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அவரது குறைந்துவரும் வருமானத்தை ஈடுசெய்ய, உபாத்யாய் ஒரு சிற்றுண்டிச் சேவையைத் தொடங்கவேண்டி வந்துள்ளது. தங்களை வருமான ரீதியாக நிலைநிறுத்திக்கொள்ள, காய்கறிகளை விற்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களைப் பற்றியும் அவர் குறிப்பிடுகிறார்.

ஆனால், தொழில்நுட்பத்துடன் இணைந்த செவ்வியல் இசையின் முயற்சியொன்றும் புதியதன்று. உதாரணமாகக் கைபேசி செயலிகளின் பயன்பாட்டால், மின்னணு தப்லாவைக்கூட ஒருவர் அகற்றமுடியும். குரல்களைச் சரியான சுருதிக்கு ஏற்றவாறு மாற்றலாம், இதனால் தொழில்நுட்ப ரீதியாகக் குறைபாடுள்ள பாடகர்களின் குரல்கள்கூட மெல்லிசையாக ஒலிக்கக்கூடும். “இதெல்லாம் ஓர் ஒழுக்கமான சாத்னா (கற்றல்) அன்று. பெற்றோர் என்னிடம் வருகிறார்கள், அவர்களின் முதல் கேள்வி, எப்போது எங்கள் குழந்தை ஓர் இசை நிகழ்ச்சியில் பங்கேற்கத் தயாராக இருக்கும்? எப்போது இவள்(ன்) மேடைக் கச்சேரிக்கு தயாராவாள்(ன்)? இசை என்பது ஒரு காலவரைக்குட்பட்ட  கற்றல் அன்று என்று நான் அவர்களுக்குச் சொல்கிறேன் ” என்கிறார் உபாத்யாய், தனது இரு குழந்தைகளுக்குமே திறமை இருந்தபோதிலும் அவர்களிருவரையும் இசைத் தொழிலைத் தொடரவிட அவர் அனுமதிக்கவில்லை.

உபாத்யாய், மிஸ்ரா இவர்களின் இரு தலைமுறைகளுக்கிடையில் தம்புராவின் பயன்பாடு கிட்டத்தட்ட மறைந்துவிட்டது. உபாத்யாயே மிக அரிதாகத்தான் தம்புராவில் பயிற்சி செய்கிறார். “இந்த தலைமுறையினருக்குத் தம்புராவிற்கும் சித்தாருக்கும் உள்ள வித்தியாசத்தைகூட  சொல்லத் தெரியாது,” என்கிறார். ஹிந்துஸ்தானி சாஸ்திரீய இசைக்கலைஞர்களிடையேகூட, ஹார்மோனியம் இசைக்கருவிகளை வாசிப்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர், ஏனெனில் அவர்களின் வருமானம் முக்கியக் கலைஞரின் வருவாயைச் சார்ந்திருக்கும்.

ஹவுராவைச் சேர்ந்த ஹார்மோனிய இசைக்கலைஞர் பிரதீப் குமார் பாலித், 53, ஊரடங்குக் காலத்தில் தனது மாணவர்கள்  அனைவரையும் இழந்தார். “ஓர் ஆசிரியருக்கும் மாணவனுக்கும் ஆன பந்தத்தை வலைவழியே நடக்கும் நிகழ்நிலை வகுப்புகள் ஈடுசெய்யாது. ஒரு குரு நகரும் விதம், அவர் சுவாசிக்கும் விதம் அனைத்தும் கற்றலின் ஒரு பகுதியாகும். ஆத்மாக்களின் சந்திப்பு சாத்தியமில்லை நிகழ்நிலை கற்றலில்,” என்கிறார் தொழில்நுட்பத்துடன் நட்பு பாராட்ட முயற்சித்த இசைக்கலைஞர் பாலித்.

“முக்கிய கலைஞரின் மனநிலை, நுணுக்கங்களுடன் துணை இசைக்கலைஞர்  ஒத்திசைக்க வேண்டியிருப்பதால், ஒரு துணை இசைக்கலைஞரின் பணி மிகவும் கடினம். ஒரு மோசமான துணை இசைக்கலைஞர் ஒரு பாடலின் ஆன்மாவை அழிக்க முடியும்,” என்று தனது மாணவர்கள் திரும்புவதற்காகக் காத்திருக்கும் பாலித் கூறுகிறார். மற்ற வேலைகளைத்தேட அவர் முயன்றது வீணில் முடிந்தது. லக்னோவில், நேரம் எல்லாவற்றையும்விட சக்தி வாய்ந்தது என்றும் தொற்றுநோய் என்றென்றும் நிலைக்காது என்றும் பண்டிட் மிஸ்ரா கூறுகிறார். ஆனால், அது அசாவேரியின் மெல்லிசையை அபஸ்வரமாக மூழ்கடிக்குமா என்பதற்குக் காலம்தான் பதில்  சொல்லும்.

மூலம்: https://www.theweek.in/theweek/leisure/2020/12/10/a-subdued-melody.html

A subdued melody By Puja Awasthi 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.