என்னவென்பது

நியதிகளேதுமற்றதே போல் தோன்றும்
இந்தக் கானகத்தில்
பற்ற ஒரு நியமம் தேடியலைகிறேன்
எப்போதும் உடுத்து அலையும்
வெண்ணிற உடையில்
களிகூடி மிதந்து
காடே சொந்தம்போல்
இறங்கிவரும் பட்டுப்பூச்சிகள்
அவ்வப்போது தீற்றிச் செல்வதை
கறையெனக் கொள்வதா
வண்ணமா
உயிர்பற்றிக் கொண்டாடும்
இவ்வாழ்வில்
கால்கள் இடறியும்
கலைகள் பயின்றும்
கைகள் பிணைக்குற்றும்
மாண்பை தரிசித்தும்
இன்னும்
இன்னுமோர் தருணம்
என்றலைதல்
ஆட்டத்தின் ஓரங்கம் என்பதா
அதுவே ஆட்டமென்பதா
பற்றிலேதும் வரவின்றி
உதித்து விரைந்து
உதிரும் நாட்களுக்குள்
கணக்கேதுமின்றி
எதையும் பதியாமல்
தடமெதுவும் இல்லாமல்
மகிழ்வேதும் தாராமல்
துயரதுவும் கொள்ளாமல்
மறைந்து போவது
குறைவென்பதா அன்றி அதுவே
நிறைவென்பதா
உரைகல்

வீதியெங்கும் வழியும்
உன்னதம்பொழியும் இசை
யாருமுணரா வித்வம்
விரல்களின் நர்த்தனம்
அரங்கம் ஒன்றிருந்தால்
கோடிகள் பெறும் படைப்பு
தெருமுனையில் தன்னந்தனியே
தவிப்பேதுமின்றி
தன்னிலை நினைப்பேதுமின்றி
வாசிப்பவனின் யாசகம்
யாதாக இருக்கக்கூடும்
கடந்தவர் நின்றவர்
விரைந்தவர் இரந்தவர்
யாவரும் யாரவன்
என்றறியாதவரே
ஏந்திய குவளையில்
சிந்திய இக்காசுகள்
இழந்துபோன நுண்ணுணர்வுகள்
வீழ்ந்துபோன அறிதல்
வணிகமே வாழ்வென்றாதல்
- ஜீன் வெய்ன்கார்ட்டென் (Gene Weingarten), ஜோஷுவா பெல் என்ற புகழ்பெற்ற அமெரிக்க வயலின் இசைக்கலைஞரைக் கொண்டு நடத்திய ‘த கிரேட் சப்வே வயலின் எக்ஸ்பெரிமெண்ட்’ – டின் தாக்கத்தில்.
கடந்த வழி
காண்பதெதுவும் புதிதல்ல
யாரும் மாறிவிடவோ
மாற முயற்சிக்கவோ
ஒன்றுமில்லை
பதற வேண்டாம்
இருண்ட கண்டத்திலிருந்து
கிளம்பிப் பரவிய
காலங்களிலிருந்து
இப்படித்தான் இருந்திருக்கிறது
ஓரங்கள் வெடிப்புற
அடிப்பாதம் தேயத்தேய
நடந்து கடந்த
மலைகளும் நதிகளும்
வனங்களும் பாலைகளும்
எதையும் எப்போதும்
மாற்றி விடவில்லை
இணைப்பதை விட
பிரிப்பது எளிது
ஆக்குவதை விட
அழிப்பது
எளிய வழிகள்
எல்லாருக்குமானவை
எனவே என்றுமுள்ளவை
உங்கள் வழியை
இன்றே தேர்ந்தெடுங்கள்
அவ்வப்போது எழும்
அவ்வரிய குரல்களைக்
கேட்டு பதற வேண்டாம்
நம் வழி
மனிதத்தின் வழி
***
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
