அறிதல் – நெடுங்கவிதை

tree

நிதானமாக வளரும்
இந்தத் தூங்குமூஞ்சி மரம்
நூறு ஆண்டுகளாக ஒரே இடத்தில்
கம்பீரமாக நிற்கிறது
பறக்க ஆவல் கொள்ளும்போது
கிளைகளில் இளைப்பாறி, கூடுகள்கட்டி குஞ்சுகள் காணும்
பறவைகள் மூலம் அது எங்கும் பறக்கிறது
ஒரு மரம்
பறப்பதையும் விட, அது நிற்பதிலேயே
அதன் கம்பீரம் விண் உரசுகிறது
நூறு ஆண்டு மரத்தையும்
கடக்கும் நொடியில் பார்க்காதீர்கள்
வயிற்றிலிருந்து உந்தி வரும் சிசுவை
அதே கணம் முதுதாழிக் கிழமாக்காதீர்கள்
மயக்கும் தோற்றம் காட்டும்
மரத்தின் அடிப்பாகத்தை உற்றுப் பாருங்கள்
ஓடிச் சென்று அதனை ஒரு பெண்ணாக
கட்டிக் கொள்ளுங்கள்
உங்கள் கைகளை மீறி, நிற்கும் பாகத்தை விட்டு
முடிந்த வரை அதை இறுக்குங்கள்
பேரின்பங்கள் எதிலும் கிட்டாத உவகை
உங்களுக்குள் கிளைத்துப் பெருக்கெடுத்து ஓடும்
மரமும்
ஒரு மானைப்போல
கொம்புகள் விரிய
பல அடி உயரத்துக்குத் துள்ளி மேலே ஓடுவதை
உங்கள் உடலின் துடிப்புச் சொல்லும்
நதியோடிய பாதையில் அரித்துக் கிடக்கும்
மலைக்கற்களைப் போன்ற மரப்பட்டையை
வாஞ்சையாகத் தடவி மேலே பாருங்கள்
கண்களில் மின்னல் கிளைகளைப் பாய்ச்சும்
ஒளிரும் பச்சையிலை நட்சத்திரங்கள்
வியப்பு அடங்கும் வரை பார்த்து
ஓவியக் கோடுகளைப் போன்ற கிளைகளுக்குத் தாவுங்கள்
வளர்ந்த யானை ஒன்றின் உயர
தூரத்துக்கும் மேல்
ஏழு பெரும் பெருக்கக் கிளைகள்
மூன்றரை அடி இடைவெளி வீதத்தில்
உயர்ந்து, வளைந்து, தாழ்ந்து செல்கின்றன
அந்த ஏழு கிளைகள் ஒவ்வொன்றில்
பத்துக்கும் குறையாத இளம்பெருக்கக் கிளைகள்
இடைவெளி விட்டு நீள்கின்றன
இளம் கிளைகளில் இருந்து பல நூறு சிறு கிளைகள்
எல்லாத் திக்குகளிலும் பரந்து விரிந்து சூரியனைக் கசிகின்றன
ஓர் அணிலாக எல்லாக் கிளைகளிலும் ஓடுவோம்
ஒரு கிளையில் மரங்கொத்தி வடித்த பொந்துக்குள்
பச்சைக்கிளி ஒன்று சென்று வருகிறது
ஒரு பொந்திலேயே தன் ஆயுளை எந்தக் கிளியும் முடிப்பதில்லை
பொந்தில் சில காலம் கிளி, சில காலம் புறா, சில காலம் நாகம்
பொந்தை துளைத்து, பொதுவில் வைத்த மரங்கொத்தி
அதே மரப் பொந்துக்குத் திரும்பி வரும் என்பது நிச்சயம் இல்லை
ஒரு கிளையில் பச்சைநிற புழு ஒன்று
பறவைகளுக்குத் தன்னையே பொதுவில் வைத்து ஊர்கிறது
ஒரு கிளையில் சிலந்தி ஒன்று தன் இழை வழியே தொங்கி
உன்னைச் சாய்த்துவிடுவேன் வேண்டாம் வேண்டாம் என்று
மரத்தோடு விளையாடுகிறது
ஒரு கிளையில் நான்கு முட்டைகள் பொரியும் காக்கையின் கூடு
கூட்டுக்கான சுள்ளிகள் எதுவும்
கட்டப்பட்ட மரத்திலிருந்து உடைக்கப்பட்டது இல்லை
ஒரு கிளைக்கும் மற்றொரு கிளைக்குமான இடைவெளியையும்
கிளையின் தூரத்தையும், கிளையின் திசையையும்
கிளைகள் உயர்ந்து, தாழ்ந்து, வளைந்து செல்வதையும்
தீர்மானிப்பவை வேர்கள் என்றால்,
வேருக்கு அந்த வித்து எங்கிருந்து வந்ததோ
பாழடைந்த சுவரில் மோதி வளராமல்
பாதியிலேயே முடமாக நிற்கும் அந்தக் கிளையின் மீதம்
வேர்களில்தான் மறைந்திருக்குமோ
மண்ணுக்கு அடியில் சல்லி வேர்களுடன் எல்லாத் திக்கிலும் பரவி
நீர் உறிஞ்சும் அதே வேர்கள்தான்
மேலே கிளைகளில் இலைகளாகவும் முளைத்து காற்றை உறுஞ்சுகின்றனவோ
ஒரு மரத்தின் முழு வடிவம் என்பது
கீழ்ப்புறம் வேர்களாகவும் மேல்புறம் கிளைகளாகவும் அமைந்த
வேர்இலை உடுக்கையோ
இலைகளைக் கொத்துகளாகவும், தனி இலைகளாகவும் பார்க்க வேண்டும்
போரில் ஒருவர் பின் ஒருவராக முன்னேறும் ராணுவ வீரர்கள் போல
ஒரு காம்பில் இலைகள் வீர அணிவகுப்பு செய்கின்றன
ஆண்டுகளால் ஒரு மரம் எதை இழந்தாலும்
இலையின் வடிவத்தையோ, அளவையோ மாற்றிக் கொள்வதில்லை
பாதாம் செடியின் பெருத்த இலைகளைப் பார்த்து
நூறு ஆண்டு தூங்குமூஞ்சி மரம்
அதன் இலைகளைப் பெரிதாக்க விரும்புவதில்லை
விதவித மரங்களின் விதவித வடிவ இலைகள்
நமக்கு  எதை உணர்த்த முடியாமல் தவிக்கின்றனவோ
முகத்தில் வழவழப்பும் முதுகில் சொரசொரப்பும்
இல்லாத இலைகளே இல்லை எனலாம்
மரத்திலிருந்து சுழன்று விழும் இலைகள்
அந்த மரம் செடியாகத் துளிர்த்தபோது வந்த
முதல் இரண்டு இலைகளின் மகவுகள்தானே
இலையில் இடமும் வலமுமாகச் செல்லும் நரம்புகள்
ஒரு மரம் அதன் இலைகளுக்குக் கொடுக்கும் தனித்தனி அடையாளங்களோ
இலையுதிர்கையிலும் அழாத இந்த தூங்கு மூஞ்சு மரங்கள்தான்
மனிதனுக்கு முதலில் இரவில் தூங்கச் சொல்லிக் கொடுத்தவையோ
அதோ உச்சிக்கிளையைப் பாருங்கள்
அங்கிருந்து அணில் ஒன்று
இளம்சிவப்பும், வெள்ளையும் கலந்த இந்த மரத்தின்
பூக்களாக கிளைக்குக் கிளைக்குத் தாவி
கீழிறங்கி வந்து
இதோ இந்தச் செம்மண் சாலையில் ஓடுகிறது
மரம் இப்போதும் நீண்டும் வளைந்தும்
தெருதெருவாகவும் கிளைகிளையாகவும்
ஆண்டுகளை விழுங்கி வளர்கிறது
அதோ அந்தப் பாறைக் கல்லில் அமர்வோம்
இப்போது நாம் அமரும் கல்
ஏதோவொரு காலத்தில் ஓடிய நதியின் தடத்தில்
கிடந்த மலையின் மிச்சமாக இருக்கலாம்
மரங்களால் சூழப்பட்ட இந்தத் தெருவை
நிதானமாகப் பார்ப்போம்
சிறுவன் ஒருவனின் கையிலிருந்து நழுவிய
மஞ்சள்நிற பலூன் ஒன்று முள் செடியில் மோதி உடைகிறது
ஓர் ஆணும் பெண்ணும்
துணிகளைச் சரி செய்துகொண்டு புதரிலிருந்து வெளியேறுகிறார்கள்
இருபதுக்கு மேற்பட்ட வண்ணத்துப்பூச்சிகள்
சிறு கொத்துப்பூக்களை மொய்க்கப் போட்டியிடுகின்றன
வெள்ளைப் புள்ளி சிவப்பு பூச்சிகள் இரண்டு
முன்னம் பின்னமாக புனைந்துகொண்டு நகர்கின்றன
கருப்பு நிற பூனையொன்று
முன் கால்களில் ஒன்றைக் கையாகப் பயன்படுத்தி
அதன் எச்சியையே தொட்டு முகத்தைத் துடைத்துக் கொள்கிறது
கட்டெறும்புகள் அதன் பின் பகுதியை மட்டும்
மேலே தூக்கியபடி எங்கோ விரைகின்றன
சைக்கிளில் வந்த ஒருவன் யாரும் தள்ளாமலே கீழே விழ
உடைந்த ஓடுகளையும் பொறுக்க முடியாமல் நத்தை நகர்கிறது
ரெண்டு கிளிகள் எதற்காகவோ சத்தம் எழுப்பிச் செல்கின்றன
குப்பைத் தொட்டியின் மேல்
ஒரு பெண் நாய் முன்னங் கால்களை வைத்து நிற்கிறது
அதற்கு இரண்டு, நாலு, ஆறு, எட்டு பால் காம்புகள்
இந்தக் காட்சிகளை அப்படியே சூரிய ரசம் பூசப்பட்ட
ஓவியமாக பத்து நிமிடம் நிறுத்திப் பார்ப்போம்
மீண்டும் எல்லாவற்றையும் போக அனுமதிப்போம்
அதோ, ஒரு தென்னை மரத்துக்கு அருகில்
சிறு புதைமேட்டைப் பாருங்கள்
நண்பர் ஒருவரின்
கருணை கொலை புரியப்பட்ட
நாய்க்குட்டி அதில் தூங்குகிறது
தடுப்பூசி போடாததால்
டினு எனும்
அந்த பொமேரியன் நாய்க்குட்டி மீது
போலியோ பாய்ந்து குதறியதில்
அதன் நான்கு கால்களும் முடமாகிவிட்டன
சிறுநீர், கழிப்பு எல்லாம் படுக்கையில்
வைரஸ் ஒரு தீவிரப் பயணியாகி
டினுவின் மூளை வரை வந்து எட்டிப் பார்க்க
வலி தாங்க முடியாமல்
தலையும், கண்களும் துடிக்க
அது ஓயாமல் குரைக்க
பக்கத்து வீட்டு சிறுவர்கள்
சுவரில் ஏறி நின்று
லொள் லொள் என்று பதிலுக்குக் குரைத்துக் காட்ட
கண்ணீர் கசிய
டினுவும் மேலும் ஆவேசமாக குரைக்க
தூங்க முடியவில்லை என்று எதிர்வீட்டுக்காரி
சண்டைக்கு வந்துவிட்டாள்
கைவிடுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை
ஆயிரம் ரூபாயில் உயிரை அமைதியாக அனுப்பி வைக்க
மருத்துவர்கள் வீட்டுக்கே வருகிறார்கள்
விஷம் உள்ளேறுகையில் வெறிகொண்டு
கடித்து குதறிவிடலாம் என்பதால்
முதலில் தூக்க மருந்து ஊசி செலுத்தப்பட்டது
வயிற்றின் துடிப்பின் வழியேயும்
டினுவின் குரைப்புக் கேட்டது
பிறகுதான்
அந்தத் துரோகக் கொலை மருந்து ஊசி
அதன் இதயத்தில் குத்தப்பட்டது
சாதாரணமாக 20 மில்லி மருந்தே உயிரைப் பறித்துவிடும்
இது 120 மில்லியையும் நிதானமாகப் பருகித்தான் முடிந்தது
சாவின் கடைசிக் கண்களையும் காட்டாத
அந்த டினுவைப் பார்த்து
நண்பனின் பெண் விசும்பிக் கொண்டே
பார்த்து, பத்திரமா போ என்றாள்
செத்த நாயை தென்னை மரத்துக்கு அருகில்
புதைத்தால் நல்ல உரம் என்றார்கள்
நாயின் தட்டு, துண்டு, சோப்பு, அதற்கு வாங்கிய சாக்லெட், மருந்து
எல்லாவற்றையும் சேர்த்து குரைப்பு சத்தம் கேட்காத
ஆழத்தில் புதைத்தோம்
நேற்று உரித்த தேங்காயை
குலுக்கிய போது குரைப்புச் சத்தத்துடன் மூன்று கண்கள்
அதைக் குடித்த
உங்களுக்கும் எனக்கும்
அயல் தேச நண்பர்களுக்கும்
இரண்டு, இரண்டு, இரண்டு கண்கள்
அந்தக் கண்கள் நாய்களுடையதாகவும் இருக்கலாம்
எதிரே
அவிழக் காத்திருக்கின்றன
புதிர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.