பவளமல்லியின் வாதை & மௌன முள்

பவளமல்லியின் வாதை

அவ்வப்போது வந்து போகிறவர்களால்
வெடித்தெழும் அழுகை
விசும்பலாகித் தேயவும்
கனத்த மெளனத்துள்
Trees_Dead_Floor_Forest_Plants_Trunk_Groundபுகுந்து கொள்கிறது துக்க வீடு.
காணப் பொறுக்காத
முற்றத்துப் பவளமல்லி
உதிர்க்கத் தொடங்குகிறது பூக்களாக
மின்னற் பொழுதில்
விண்மீனாகி விட்டவனின் நினைவுகளை.
கன்னங்குழியச் சிரித்த பிள்ளைக் காலத்துக்கு
கண்கள் மினுங்கப் பயணிக்கிறார் அம்மா.
கற்ற வித்தை யாவிலும்
வெற்றிக்கோப்பை ஏந்தி நின்றதை
புளங்காகிதத்துடன் நினைவு கூர்கிறார் அப்பா.
பதின்மத்தில் தன் பாவடையை அணிந்து
சுழன்றாடியதைச் சொல்லும் பொழுதே
நகைக்கிறாள் அக்கா.
நண்பனாய் அடித்த அரட்டைகளில்
தமையனாய் அடைகாத்த அன்பில்
திளைத்து நிற்கிறார்கள் தம்பி தங்கைகள்.
ஊருக்கெல்லாம் உதவியதாக
உற்றார் போற்றியதை நினைந்து
பெருமிதம் உறுகிறார்கள் மனைவி மக்கள்.
தன் பங்காய்ப் பொன்னாச்சி
பேரனின் பால்யக் குறும்புகளை
அடுக்கிக் கொண்டு போக
சிரிப்பால் நிறைகிறது முற்றம்.
ஓர்நொடி சிலிர்த்த மல்லிச் செடி
யாசிக்கிறது காலத்தை மறுநொடி
ததும்பிய அத்தனை விழிகளிலும்
தகித்த வெம்மை தாளாது.

ராமலக்ஷ்மி

oOo

மௌன முள்

ஒரு கோப்பையில் பாதியிருப்பதை
அதில் மீதமிருக்கும் இல்லாமை
Silence_Desert_Steps_Footstep_Path_Sand_Alone_Single_Quiet_Quite_Ssh_Shh_Mouth_Closeநிறுவுதல்போல
ஏதுமில்லாமல் ஏதோவொன்றை
நிரூபித்துக்கொண்டிருக்கிறது மௌனம்
மௌனம் ஒரு ஆட்கொல்லியல்ல யெனினும்
மௌனம் ஒரு கூரிய முள் போல
ஒரு செடி எதற்காக முள் தாங்கி நிற்கிறதோ
அதற்காகவே மௌனித்திருக்கிறான் மௌனி
நினைவுகளின் வலியில் லேசாக
குருவைக்கத் துவங்கும் மௌனம்
பின்னொரு காக்கா முள் போல
அபரிமிதமாக வளர்ந்து இறுதியில்
எவருடைய பாதையிலோ செடியிலிருந்து
தனித்துத் துருத்திக்கொண்டிருக்கும்
ஒற்றை ராட்சத முள்ளாக வளர்ந்து நிற்கிறது
ஒரு மௌனியின் மௌனம்
அருண் காந்தி


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.