திரு.வெங்கட் சாமிநாதன் முதன் முதாலாக எழுதிய கட்டுரை ‘பாலையும், வாழையும்’ சி.சு.செலப்பாவின் ‘எழுத்து’ இதழில் வெளியானது. அக்கட்டுரையும், அதைத் தொடர்ந்து வெ.சா எழுதிய விமர்சனக் கட்டுரைகளும் ‘பாலையும், வாழையும்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவயானது. இதுவே வெ.சா-வின் முதல் புத்தகமாகும். இதற்கு முகப்புரை எழுதியவர் சி.சு.செல்லப்பா. இம்முகப்புரையில் புத்தகத்தின் சிறப்புகள் குறித்து எழுதியதோடு மட்டுமல்லாமல், வெ.சா-வுக்கு முன்பு புதுமைப்பித்தன், வ.ரா, க.நா.சு – ஆகியோர் தமிழ் விமர்சனத்தில் பதித்த தடம் குறித்தும், அவர்களில் ஒருவராக வெ.சா இருப்பார் என்ற கருத்தையும் முன்வைக்கிறார் செல்லப்பா.
பாலையும் வாழையும் என்ற இந்த இலக்கிய விமர்சனக் கட்டுரைத் தொகுப்பு தமிழுக்கு ஒரு புதியவித சேர்கை என்று சொல்லத்தக்கதாகும். வ.வே.சு ஐயருடைய சிறுகதைகளைப் பற்றிப் புதுமைப்பித்தன் கூறுகையில், ‘அவருடைய கதைகளில் பாலைக்கு வெக்கை நம்மைப் பொசுக்கும்’ என்று எழுதியது நினைவுக்கு வருகிறது. அதவாது அவ்வளவு உக்கிரமான எழுத்துப்போக்கு என்றுகொள்ள வேண்டும். இந்தப் புத்தகத்தின் கட்டுரைகளைப் பற்றி அதேதான் எனக்குச் சொல்லத் தோன்றுகிறது. வெ.சாமிநாதன் கட்டுரை கருத்துகள் நம்மைக் கடுமையாகச் சாடும், ஆனால் பாலையின் உஷ்ணத்தோடு வாழையின் குளிர்ச்சியையும் காணலாம். அந்தக் குளிர்ச்சி அளவும் ‘ஒயஸிஸ்’ என்கிற விரிந்த பாலையில் அங்கங்கே காணும் குறைந்த அளவு செழுநிலம் அளவுக்குத்தான். ஏனெனில் நமது இரண்டாயிரம் ஆண்டு கலை இலக்கிய பாரம்பரியத்தை மொத்தமாக அளவிட்டு பாலைதான் அதிகம் இருப்பதாகவும் அங்கங்கே சிறிய பசுமைதான் இருப்பதாகவும் கணிக்கிறார். அவர் எப்படி அவ்வாறு சொல்கிறார் என்று கேட்பதானால் இந்தப் புத்தகப் பக்கங்கள் அவர் கூற்றுகளுக்குத் தக்க ஆதாரங்களை அள்ளித்தரும்.
வெ.சாமிநாதன் ‘எழுத்து’ பத்திரிகைக்கு அறிமுகமானது இந்த நூலில் உள்ள முதல் கட்டுரையான ‘பாலையும், வாழையும்’ மூலம். அந்தக் கட்டுரையையும் பின் தொடர்ந்த கட்டுரைகளையும் படித்தபோதும் இப்போது இந்தப் புத்தகத்தை மொத்தமாகப் படிக்கிறபோதும் எனக்கு நினைவுக்கு வருவது புதுமைப்பித்தன். புதுமைப்பித்தனைப் பற்றி சில வார்த்தைகள். அவரது விமர்சனக் கட்டுரைகளை எத்தனைப் பேர் படித்திருக்கிறார்களோ? முப்பது – நாற்பதுகளில் அவர் க்ரூஸேட் ஆக, சிலுவைப் போராக, வேகத்தோடும் வேதனையோடும் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி வழி எழுத்துப் போக்கைத் தாக்கியது வரலாறு. அவருக்கு முன் வ.ரா தாக்கி புது இலக்கிய படைப்பு பாரதி வழியில் முன்செல்ல களம் ஏற்படுத்தியதும் வரலாறு. அதெல்லாம் இன்றைக்குப் பழசாகி விட்டாலும் அந்த உடன்நிகழ்காலத்தவனான எனக்கு இன்னும் பசுமை நினைவாக இருக்கிறது. வெளிய்நாட்டு இலக்கியப் படைப்புகளை அபேஸ் செய்வது, அதாவது மூலத்தை ஒப்புக்கொள்ளாமல் சுயமாக, தான் எழுதியது போலக் காட்டுவது, அதாவது ‘மாரீசம்’. இவ்விதத்தில் கல்கி எவ்வளவு முறை தாக்கப்பட்டார் அன்று புதுமைப்பித்தனால்! கல்கி மட்டுமில்லை. தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ் ஆராய்ச்சி, தமிழ்நாடு, தமிழ் சமூகம், தமிழனின் ரசனாசக்தி, பண்டிதர்கள், தமிழ் இலக்கியப் புறம்பான பார்வைகள், கவிதயின் க்ஷீணம், பழம் பெருமையையே பேசும் தமிழன் குணம், ஒன்றை வைத்துக்கொண்டே வழிபாடும் செய்யும் மனப்பாண்மை இத்யாதி மனோபாவங்களை, நிலையைக் கண்டு மனம் புழுங்கி கொதித்துப் பேசப்பட்டவைகளே அவரது சூட்டுக்கோல் வரிகள். சில சாம்பிள்கள்.
1. தமிழுக்கே விமோசனம் கிடையாது என்று நினைத்துக்கொண்டிருக்கும் சமயத்தில்.
2. தமிழுக்கு சிறுகதையும் புதிது, நாவலும் புதிது. வசனநடையும் புதிது. அவ்வளவு உயர்ந்த இலக்கியங்கள் இருக்காது என்று எதிர்பார்ப்பது சகஜம்; ஓரளவு உண்மை. தமிழ்நாட்டு நாவல்களில் இலக்கியஸ்தானம் பெறக்கூடிய நாவல்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
3. நமது கலைவளம் எந்த நாட்டினரும் பொறாமை கொள்ளத்தக்க அளவுக்கு இருக்கத்தான் செய்கிறது. நம்மைப் பொருத்தமட்டில், ‘நாம் குங்குமம் சுமந்த…’ ‘பெரியார்கள்’தான் (அதாவது கழுதை).
4. நமக்கு இருக்கும் கலையுணர்ச்சியைப் பற்றி எண்ணும்பொழுதெல்லம் ஒளவைக் கிழவி ஒரு அரசனுக்குக் கொடுத்த ‘ஸர்டிபிகேட்’தான் நினைவுக்கு வருகிறது. ‘இருளைவிரட்டும்படியான ரத்னாபரணங்களை வாரியணைத்துக்கொண்டு சிம்மாசனத்தில் பெருமிதமாய் உட்கார்ந்திருக்கும் அரசனே, மனிதன் அற்புதமான கனவுகளை எல்லாம் கல்லில் எழுப்பும் மட்டில் நீ திருதராஷ்டிரன்தான். அந்தோ! அதுமட்டுமா! அலைமேல் அலையாக எழும் சப்தஜாலங்களான கவிதையை அனுபவித்தறியாத இரண்டு ஓட்டைச் செவிகளும் உனக்கு உண்டு’. (இருள் தீர் மணி விளக்க… செவியும் உள என்ற செய்யுள்.) அந்த எழிலார் பெருமானின் வம்ச வளர்ச்சியோ தமிழ்நாடு என்று சொல்லும்படி இருக்கிறது நம் கலைவளர்ச்சி.
5. நமது கலைவளர்ச்சி பண்டைப் பழங்கணக்காக பொருட்காட்சிசாலையில் வைத்த அபூர்வங்களாகவே இருக்கின்றன.
6. இப்பொழுது இலக்கியத்தின் பெயரால் நடக்கும் ஆராய்ச்சிகள் முதல் குரங்கு தமிழானகத்தான் மாறியதா என்பது முதல், கம்பன் வைஷ்ணவனா, சைவனா, தமிழ் எழுத்துகள் ‘ஓம்’ என்ற முட்டையை உடைத்துக்கொண்டு வெளிவந்த வரலாறு வரையிலுள்ள இலக்கியப்புறம்பான தொண்டுகள்.
7. இந்த செளந்தர்ய உணர்ச்சியற்ற பாழ்வெளி எப்பொழுதும் இந்தமாதிரி ஒன்றுமற்றதாகவே போய்விடாது என்ற நம்பிக்கைக்கு இடம் இருக்கிறது. தமிழ் மறுமலர்ச்சியின் பிராமித்தியூஸ், நமது அசட்டுக்கலை உணர்ச்சிக்கு பலியான பாரதியார், அவரும் பாவங்களை எழுப்ப முடியவில்லையானால், பழைய நாகரிகச் சின்னங்களை அணிந்துகொண்டு உலா வரும் நமது மடாதிபதிகளைப் போல தமிழும் ஒரு ‘அனக்ரானிஸமாகவே’ காலவித்தியாசத்தின் குரூபமாகவே இருக்க முடியும்.
8. தற்காலப் பண்டிதர்கள் இலக்கியம் எது என்ற கவனிக்க முடியாமல் எல்லாவற்றையும் புகழ்ந்துகொண்டு இடர்ப்படுவதற்குக் காரணம் அவர்கள் இலக்கியம் என்றால் என்னவென்று அறியாததுதான்.
9. இன்று பாட்டு எழுதவேண்டுமெனில் பாஷையின் வளத்தை அறிந்து அதை சாகசமாக உதறித்தள்ளவும், ஏற்றுப் பயன்படுத்தவும் தகுதி வாய்ந்த பயிற்சியும் உணர்ச்சியின் வேகத்தை அனுபவித்து அறியக்கூடியவர்களாலேயே முடியும். இன்று அப்படிப்பட்டவர்கள் யாருமே கிடையாது என்பது என் கட்சி.
10. இனி வரும் காலத்தில் வறட்சியா வளமா என்பது இன்றைய நிலையில் ஊகிக்க முடியாத விஷயம்,
11. ஒற்றை பாரதியை வைத்துக்கொண்டு உடுக்கடித்து காலந்தள்ளியது நமக்குப் பெருமை அல்ல.
12. பாரிச வாயுவும், பக்க வாதமும் போட்டலைக்கும் இன்றைய கவிதை உலகிலே!
இது போன்று எத்தனையோ காட்டலாம். ஏன் இப்படி குரல் எழும்பவேண்டும் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளலாம். இதிலே உண்மை இல்லை? அதிலும் கசப்பான உண்மைகள்! ‘இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால் நெஞ்சு பொறுக்குதில்லையே’ என்று பாடினான் பாரதி. ‘தமிழ் தமிழ் என்று மொழிப்பற்று கொண்டவர்களைப் போலப் பலர் கம்பீரமாகப் பேசுகிறார்கள். தமிழில் உயர்தர கணிதம், ஸயன்ஸ், வைத்தியம், நவீன அரசியல் நுட்பங்கள் முதலியவைகளை சொல்ல முடியாத குறையை நிவர்த்தி செய்ய இவர்கள் ஏதேனும் செய்ததுண்டா’ என்று வ.ரா சூடாகக் கேட்டார். இத்தனைக்கும் அசையவில்லையே தமிழன் என்று புதுமைப்பித்தன் இன்னும் ஆத்திரத்தோடு பேசினார். இவர்களுக்குப் பின் க.நா.சுப்ரமணியம், தமிழ்மொழி இலக்கிய வளர்ச்சிக்கு உகந்த வழிகளைக் கையாளாமல் பழம்போக்கிலேயே எழுதி பேசிக்கொண்டிருக்கும் பேராசிரியர்களையும் இலக்கியத்தரம் ஏறாத இரண்டாம் தர படைப்புகளை தயாரித்துக்கொடுக்கும் எழுத்தாளர்களையும் இன்னும் தீவிரமாகத் தாக்கினார்.
இவர்களுக்கெல்லாம் ஏதோ வெறும் ஆத்திரம், வெறுப்புணர்ச்சி, காழ்ப்பு, விரக்தி மனப்பாண்மை இருந்தது என்று சொல்லமுடியாது. அவர்கள் கோபம், இரண்டாயிரம் ஆண்டு வளப்பெருமை பேசும் வாய்கள் மேற்கொண்டு வளத்துக்குக் கையைப் பயன்படுத்தவில்லையே என்ற தார்மீகக் கோபம். தார்மீகக் கோபம் என்றால் என்ன? ‘righteous indignation’ என்று சொல்வது. அதுக்கு விளக்கம், ‘indignation arising from an outraged sense of justice and morality’ என்பது. அதாவது, நியாயமும் நேர்மையும் பங்கப்படுத்தப்பட்ட, இலக்கியத்துறையில் தேக்கமும், போலித்தனமும் தூக்கி நிற்பது கண்டு வேதனை, உலக இலக்கியத்தரத்துக்கு உயரும் ஸ்மரணையே இல்லாமல் ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரையாக ருசித்துக் கொண்டிருக்கும் அவலநிலைகண்டு எரிச்சல். இது போன்றவை அவர்களுக்கு இந்த தார்மீகக் கோபம் ஏற்படக் காரணம். இவர்கள் வழியில்தான் அறுபதுகள் எழுபதுகளில் கோபம் கொள்பவர் வெ.சாமிநாதன். அவர் வார்த்தைகளேயே கேட்போம்:
‘நம்மிடம் கலைத்திறன் வாழ்ந்து வருகிறது என்பது உண்மையானால், நமது சமுதாயத்தின் கலையுணர்வு அறவே அற்றுவிடவில்லை என்பது உண்மையானால், கிட்டத்தட்ட 1800 வருடங்களுக்கு முன்பே நாம் ஸ்தாபித்த இலக்கிய வளம் இன்றைய இலக்கியத்திற்கும் அதன் அளவுக்கும் அல்லது அதற்கும் மேலாக, ஒரு மகத்தான செழுமையை உண்டாக்கி இருக்க வேண்டும். அப்படி இல்லை. வறண்ட பாலைவனத்தைத்தான் காண்கிறோம். சமுதாயத்தின் நீடித்த கலையுணர்வுதான் முக்கியம்… எந்தெந்த காலங்களில் எந்தெந்த இலக்கிய உருவங்கள் ஆட்சி செலுத்த இருக்கின்றனவோ அந்தந்த உருவங்களில்தான் கலைஞனின் அனுபவங்கள், உணர்ச்சிகள், கற்பனைகள் கலைப்படைப்புகளாகத் தரப்படுகின்றன. ‘உருவம்’ முக்கியமல்ல, வேண்டிய ஒரே முக்கியத்தன்மை உத்வேகம்தான் என்றார் எச்.எல்.மெங்கன் என்ற அமெரிக்க விமர்சகர், அந்த உத்வேகம் நம்மிடம் செத்துவிட்டது என்பதுதான் உண்மை.’ (பாலையும் வாழையும் கட்டுரையிலிருந்து.)
இதிலிருந்து எது அவருக்கு ‘பிராவொகேஷன்’ கோபக்காரணம், தூண்டுகோல் என்பது நமக்குத் தெரிகிறது. உத்வேகம் என்பது அடிப்படையான விஷயத்தைத் தொடுகிற்து. உத்வேகம் ஒரு தனிமனிதனுக்கோ, சமூகத்துக்கோ, சமுதாயத்துக்கோ ஏற்பட, அதுக்கு சுரணை உணர்வு அதாவது ‘சென்ஸிபிலிட்டி’ இருந்தாக வேண்டும். அது நமக்கு நமக்கு இருக்கா என்பது கேள்வி. சாமிநாதன் ‘சுரணை உணர்வு’ என்று கட்டுரையின் ஆரம்பித்திலேயே சொல்கிறார்.
அடிப்படைகளை விட்டு தடம் தவறி, தடுமாறி, இடையில் மேல் படிந்த தூசுச் சேர்க்கைகளையெல்லாம் பற்றிக்கொண்டு விடுவ்து நமக்கு இப்பொழுது மிகச் சுலபமாகி இருக்கிறது. இலக்கியமாகட்டும், கலைகளாகட்டும், எந்த அறிவுத்துறையுமே ஆகட்டும், விஷயஞானம் உள்ளவர்களுக்கும் சுரணை உணர்வு உள்ளவர்களுக்கும் அடிப்படைகளின் தொடர்பு நீங்குவதில்லை. ஆனால் இன்றைய தமிழ்ச்சமூகத்தின் கலைவறட்சியில் அறிவார்ந்த பாலையில் சுரணைப் பஞ்சத்தில். யானை பார்த்த குருடர்களாக எல்லாப் பெருந்தலைகளுக்கும் கலை, இலக்கிய அடிப்படைகளைப் பற்றிய சுரணை, உணர்வின்மை காரணமாக, எதை எதையெல்லாமோ கலையாக, இலக்கியமாகக் கொண்டு, தொண்டு செய்து புகழ்பெற்று ஊர்வலம் வரும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.’
அந்தக் கட்டுரை இந்த அவலநிலையைத் தக்க ஆதாரம் காட்டி விளக்குவதாக இருக்கிறது. ‘பான்ஸாய் மனிதன்’ கட்டுரையும் இதே கருத்தை இன்னும் சில ஆதாரங்களோடு வலியுறுத்துகிறது.
‘தமிழனை எதுவும் ஏதும் செய்துவிடுவதில்லை என்பதை நம் சரித்திரமே பிரலாபிக்கிறது. எந்தச் சூறாவளியும் அவனை லேசாக அசைப்பது கூட இல்லை. மந்தத்தனத்துடன் யுகயுகமாக அவலட்சண உறக்கம் கொண்டிருக்கும் பிரமிடு அவன். இப்பிரமிடுகளின் பூத உருவும் தொன்மையும் நம்மை பிரமிக்க வைக்கின்றன. சமஸ்கிருத படிப்பு, ஆங்கிலக்கல்வி, உலக மாற்றங்கள், தன் நிகழ்காலத்திலேயே தன்னுடன் உறவு கொள்ள நிர்பந்திக்கும் விஞ்ஞான வள்ர்ச்சி இவை ஏதும் அவனது இயல்பை மாற்றிவிடவில்லை. மாறாக அவனது குரூர இயல்புகளின் வளர்ச்சிக்கே அவை சாதகமாயின என்று குறிப்பிட்டு இலக்கியம் மட்டுமின்றி, ஓவியம், சிற்பம், சினிமா, நாடகம் முதலிய துறைகளிலும் நாம் சிந்தித்து செயல்பட்டது குறிப்பிடும்படியாகவே இல்லை என்று ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டுகிறார். ‘காலதேவன்’ என்ற கட்டுரையும் இந்த ரகத்ததுதான். அதில்:
‘திருக்குறள் வாழ்கிறது (நியாயமாகத்தான்.) ஆனால் திருகடுகமும் சிறுபஞ்சமூலமும் வாழ்கின்றனவே. ஆசாரக் கோவையும் பழமொழியும் வாழ்கின்றனவே. காலதேவன் என்ன செய்ய முடிந்தது? ஏன்? நம் மண்ணில், மனப்பாங்கில் விமர்சன நோக்கும் சிந்தனை வளமும் இல்லை. இப்போக்கு நீடித்தால்? நீடிக்காது என்று சொல்ல ஆதாரம் எதுவும் இல்லை…’
‘தமிழர் பண்பாடு’ என்ற கூச்சல் இந்நாட்களில் மிக அதிகம் காதைத் துளைக்கிறது. அது என்னவென்று இதுவரை யாரும் சொல்லவில்லை. என் மனதுக்கு அது மூன்று குணங்களைக் கொண்டதாகத் தோன்றுகிறது.
1. எதையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும் என்ற மனப்பான்மை இன்மை. ஏன், ஆராய்ச்சியில் வெறுப்புக்கூட. ஆராயாது விடவே எவையும் வாழ்வு அளிக்கப்பட்டு தொன்மையாக்கப்பட்டுவிடுகின்றன.
2. மரபு கொண்ட எதையும் பக்தி கொண்டு வழிபடும் குணம்.
3. பழமையின் குணங்களை மீறும் எந்தப் புதுமையிலும் ஆராயத வெறுப்பு.’
இப்படி ஏராளமான இடங்களில் வெவ்வேறு அம்சங்கள் பற்றியும் வெவ்வேறு கோணங்களிலிருந்தும் விவகாரமாகப் பார்த்த பல கருத்துகளை இந்தப் புத்தகம் நெடுகக் காணலாம்.
இப்படி அவர் திரும்பத்திரும்ப வலியுறுத்தி இருப்பதால் இந்தப்புத்தகம் பூராவும் இந்த ஒரே விஷயத்தைப் பற்றித்தான் நச்சுப்படுத்தப்பட்டிருப்பதாக நினைத்துவிடக்கூடாது. அடிப்படை தொனி, அதாவது ‘கீ நோட்’ அதுதான். ஏனென்றால் இன்று இந்திய அளவுக்கு, சர்வதேச அளவுக்கு படைப்புத்தரம் உயராமல், வளம் பெருகாமல் இருப்பதற்கு காரணங்களை ஆராய்வதே அவர் நோக்கம். ‘கலைஞனும் சூழலும்’ என்ற கட்டுரையில் வெகு நுட்பமாக ஆராய்கிறார். சூழ்நிலை சரியாக இருந்தால் கலைஞன் சரியாக இருப்பான். சூழ்நிலையைப் பான்படுத்திக் கொள்ள கலைஞன் தவறினாலும் போச்சு. இங்கிலீஷில் ‘milieu’ என்கிறோமே சூழ்மை, வாழ்க்கைநிலை, அது குறிப்பாக தமிழ்நாட்டில் எப்படி இருக்கிறது என்பது இதுவரை வேறு எந்தப் புத்தகத்திலும் இவ்வளவு ஆழ்ந்து இதுவரை பார்க்கபப்ட்டதில்லை. என்னைப் போல இல்லாமல், இலக்கியத்துக்கு மட்டுமின்றி அவர் மற்ற கலைத்துறைகளையும் ஆராய்பவர். இலக்கியத்துக்கும் அவற்றிற்கும் உள்ள தொடர்பு, ஒன்றிற்கு மற்றொன்று சம்பந்தப்பட்டது என்ற அடிப்படையில் இந்த எல்லாத்துறைகளுமே புரட்சிகரமான புதுமைப்பாங்கு கொண்டால்தான் தமிழ்வளம் பெருகும். இல்லையேல் சட்டியில் ஒரு அளவுக்கு மேல் வளராமல் அப்படியே வளர்ச்சி தடைப்பட்ட ஜப்பானிய பான்சாய் செடியாக தமிழும் இருந்துவிடுமே என்ற கவலையில் ஏற்பட்ட கோபம் அவருடையது. அவர் கவலையில் நாமும் பங்குகொண்டோமானால் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படும் இந்த கூற்றுகள் பெரும்பாலும் எவ்வளவு சரியானது என்று நமக்கே படும்.
[செல்லப்பாவுடன் வெ.சா]
அடுத்து: பொதுப்படையாக இப்படி அவல நிலையைச் சொல்லிவிட்டு அவர் நின்று விடவில்லை. ‘விஞ்ஞான விமர்சனம்’ என்ற கட்டுரையில்:
‘எந்தத் தனியொரு இலக்கியாசிரியனும் இலக்கிய வளர்ச்சியில் முன் செல்பவனாக இருந்தால் அவன் தனது காலத்திய ரசனைக்கே ஒரு எல்லை வகுத்துவிடுகிறான். அவ்வெல்லையை தன் ஒவ்வொரு படைப்பின் மூலமும் விஸ்தரித்து விடுகிறான். அதிக ஆழமுடையதாக்குகிறான். உத்வேகத்தை அதிகமாக்குக்கிறான். இவற்றின் மூலம் புதிய இலக்கியக் கோட்பாடுகளையும் சித்தாந்தங்களையும் உருவாக்கிவிடுகிறான். ஏனெனில் அவனது படைப்பு இதுவரை இருந்த கோட்பாடுகள், சித்தாந்தங்கள் இவற்றை மீறி படைக்கப்பட்டுவிட்டது. ஆகவே அவனது படைப்பை அளவிட புதிய கோப்டாடுகளும் சித்தாந்தங்களும் தோன்றும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடுகிறது. இந்த சித்தாந்தங்கள் அவனது காலத்திய படைப்புகளின் அளவீடுகளை, மதிப்புகளை மாற்றியமைத்து ஒரு புதிய நோக்கை சிருஷ்டிப்பதோடு எதிர்கால படைப்புகளின் பாதையையும் நிர்ணயித்து அவற்றை மதிப்பிடும் அளவுகோல்களையும் உண்டாக்கி விடுகின்றன. ஆகவே அளவுகோல்களான சித்தாந்தங்களுக்கும் கோட்பாடுகளுக்கும் ஒரு நிரந்தர வாழ்வு, ஸ்தானம் என்பது கிடையாது, இலக்கிய ரசனை என்பது விஞ்ஞானக் கோட்பாடுகளுக்கு அடங்கி வாழாத, தன் வழிச்செல்லும் ஒரு குணம். அதை விஞ்ஞானமாக்குவது அதைப்பற்றிய விஞ்ஞானத்தை குறிக்கிறது. இலக்கியமும் மற்றும் எந்தக் கலையுருவமும் தன்னின் வெளிப்பாடுதான். தன்னோக்கு அல்லது சுயபாதிப்பு இல்லாத படைப்பு இலக்கியமாக இராது. சுயபாதிப்பு உள்ளது எதுவும் விஞ்ஞான உண்மை ஆவதுமில்லை. அதைப்பற்றிய விமர்சனமும் விஞ்ஞான ரீதியில் நடைபெறுவதில்லை.’
இந்த அடிப்படையான விஷயத்தை ஆழ்ந்து ஆராய்கிறார் இந்தக் கட்டுரையில் சாமிநாதன். ‘1947-64 கால இலக்கிய சாதனை’ பற்றி குறிப்பிடுகையில்:
‘இலக்கியத் துறையில், பாதை தவறி, குறுகிய மொழி வெறி, அரைவேக்காட்டு அரசியல் சிந்தனைகள், இனவெறி, தத்துவக் கிளர்ச்சியில்லாத சமூக சீர்திருத்த நோக்கங்கள், தவறாகப் புரிந்துகொண்ட அல்லது வேறு காரணங்களுக்காக முன் நிறுத்தும் முகமூடியாகப் பயன்பட்ட போலிமக்கள் கூட்ட அபிமானம், இவை இலக்கியத்துறையை வெவ்வேறு திசைகளில் இழுத்துச் சென்றுவிட்டன. எல்லாம் வேரற்ற ஆழமற்ற புறநிகழ்ச்சிகளாகக் கீழிறங்கிவிட்டன.’
இதைப் பொதுவாகச் சொல்லிவிட்டு தனி நிகழ்ச்சிகளாக ஒரு சிலர் இவற்றுக்கு மீறி கொஞ்சம் படைத்திருப்பதையும் குறிப்பிட்டிருக்க்றார். இவருக்கு முன் இம்மாதிரி கருத்துகளை போகிறபோக்கில் சொன்னவர்களைவிட நின்று ஆழ்ந்து தக்க ஆதாரங்களைச் சுட்டிக்காட்டிப் படும்படியாகச் சொல்கிறார். இந்த நிலை மாறவேண்டும் என்ற ஆதங்கத்தில், சாமிநாதன் விமர்சனம் பற்றி இவ்வளவு பேசுகிறாரே, ரசனை பற்றி இத்தனை காய்கிறாரே அவர் தன் ரசனா சக்தியை காட்டி இருக்கிறாரா, படைப்புகளை விமர்ச்சித்திருக்கிறாரா என்று கேட்கத் தோன்றும் நமக்கு. ஆமாம், இந்தப்புத்தகத்தில் மூன்று கவிதைத் தொகுப்புகளைப் பற்றிய கட்டுரைகளும் (‘கண்ணாடியுள்ளிலிருந்து’ ‘தரிசனமற்ற ஓர் பயணத்தின் அழியும் சுவடுகள்’ ‘வெளிச்சங்கள்’) ஒரு நாவலைப் பற்றிய (‘நினைவோட்ட நாவல்’) கட்டுரையும், புத்துக்கவிதை இயக்கத்தின் ஆரம்ப கட்டமான ‘எழுத்து’ சூழலைப் பற்றி நுட்பமாக ஆராய்ந்து பிற்காலத்தையும் இணைத்து எழிதிய ஒரு கட்டுரையும் (‘கலைஞனும், சூழலும்) காண்கின்றன. விஞ்ஞான விமர்சனமாக இல்லாமல் ரசனை விமர்சனமாக இலக்கியத்தரம், வாழ்க்கை மதிப்பு இரண்டின் அடிப்படையிலும் நிறைகுறைகளை ஆராய்ந்த கட்டுரைகள் அவை. அவருடைய மனப்பூர்வம் சந்தேகத்துக்கு இடமற்றது. அவரது ரசனையும் விதரணையானது. எனவே, ஆழந்த கருத்துக் கட்டுரைகளாக அவை இருக்கின்றன. முகவுரையில் ஏகப்பட்டதை நான் எடுத்துக்காட்ட முடியும். ஆனால் லேசாக கோடிகாட்டிவிடுக்கிறேன். மற்ற பெரும் அளவை வாசகர்கள் உணர்வுக்கு விட்டுவிடுகிறேன்.
அவருக்கு நிறைய விருப்புகள் இருக்கின்றன. விருப்பு இருந்தால் வெறுப்பும் கூடவே இருக்கும் என்பதும் உண்மை. அதுவும் தெரிகிறது. அந்த வெறுப்புகள் ‘பெர்ஸனல்’ தனிநபர் பற்றியதாக இல்லை. ‘இஸம்’கள் பற்றியது. ‘இஸம்’களில் தவிர, ‘ஃபெனடிகல்’ நம்பிக்கை வைத்து அந்த வழிபாட்டிலேயே படைப்பதும், பார்ப்பதும் அவருக்குப் பிடிக்கவில்லை. அதோடு தாங்கள் ஐக்யப்படுத்திக் கொண்டுள்ள கொள்கைகள், சித்தாந்தங்கள் இவற்றைக் கூடச் சரியாகத் தெரிந்து கொள்ளாமல், ஜீரணிக்காமல், போலியாகப் படைப்பதையும் அவர் வெறுக்கிறார். நியாயம்தானே? அதோடு, பழைய படைப்பாளிகள், புதிய படைப்பாளிகள் பலரை தற்போதையை (1947 – 64) காலத்திய இக்கால அனுபவங்கள் தொடுவதில்லை அல்லது இவற்றில் இவர்கள் மனம் தரிப்பதில்லை’ என்றும் அதோடு, ‘1947 – 64 காலத்திய தமிழன், வாழ்வு இவர்கள் எழுத்துகளில் கருவளிக்கவில்லை, தூண்டுதலாக இல்லை’ என்றும் கூறுகிறார். க.நா.சுவையும் என்னையும் பற்றி, ‘பாரம்பரியமான மரபு வழி வந்த ஒரு நோக்கு; பழமையான வாழ்முறை வலியுறுத்தப்பட்டிருக்கிறதே அல்லது 45க்குப் பின்னைய வாழ்வை எதிர்நோக்குவதாயில்லை. இதே மனநிலைதான் சி.சு.செல்லப்பாவின் எழுத்துகள் பூராவிலும் காணப்படுகிறது. நாம் காணும், வாழும் காலத்தில் கால் வைக்காமலேயே பழம் மதிப்புகள் திரும்பத் திரும்ப உரைக்கப்படுகின்றன’ என்கிறார். இன்னும் ந.சிதம்பர சுப்ரமணியன், லா.ச.ராமாம்ருதம், தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி ஆகியோரையும் கூட இன்றைய தமிழனின் வாழ்வின் அனுபவத் தாக்குதலுக்கு உட்படாது போய்விட்டதாகக் கருதுகிறார். எங்களுக்குப் பின் வந்த தலைமுறை வாசகர் ஒருவர் இப்படி கருத்துகள் வெளியிடுவது ஆட்சேபிக்கத் தக்கது இல்லை. Cyril Connolly என்பவர் எழுதிய ‘Enemies of Promise’ என்ற புத்தகம் என் நினைவுக்கு வருகிறது. சில முதல் உலகதர இலக்கிய படைப்பாளிகளை எடுத்துக்கொண்டு, சிறந்த திறமை காட்டிய அவர்கள் முழுத்திறமையை அல்லது அதிகபட்ச திறமையை வெளிக்காட்டத் தவறிய துரோகிகள் என்று அவர்கள் படைப்பைக் கொண்டே விவரமாக ஆராய்ந்து கூறி இருக்கிறார். அது மாதிரி சாமிநாதன் கூறியிருப்பது சிந்திக்கவேண்டியதாகும்.
இந்த முகவுரையை முடிக்குமுன் சில வார்த்தைகள். சாமிநாதன் ஒரு ‘புரொவகேடிவ்’ விமர்சகர். ஆரம்பத்தில் சொன்னேனே, இந்தக் கட்டுரைகளில் பாலையின் உஷ்ணம் இருக்கிறது. நம்மைச் சுடவும் செய்கிறது. கசப்பான உண்மைகளை நாம் விழுங்க வேண்டி இருக்கிறது. தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் இரண்டிலும் மற்ற கலைத்துறைகளிலும் ஆழ்ந்த அக்கறை எடுத்து அவற்றின் போக்கு, நிலை, சாதனை பற்றி சுய விமர்சனம் செய்து, உரிமையுடன் குந்தகமானவற்றை கடுமையாகச் சாடும் சாமிநாதனது பேனா வரிகள். ‘புலிக்கு தன் காடு பிறகாடு வித்யாசம் கிடையாது’ என்றபடி சகலத்தையும் பதம் பார்க்கும் கூர்மையிலே யார் யாருக்கோ, எங்கெங்கெல்லாமோ சுடக்கூடும். அவர் மொழியை கொஞ்சம் சாத்வீகப்படுத்தி (soften) இருக்கலாம் என்று எனக்கு சொல்லத் தோன்றுகிறது. ஆனால் அவர் எழுதிவிட்டார். அதைப் பற்றி பேச்சு இல்லை. பெரும் அளவு அவர் கருத்துகளோடு உடன்பாடு கொண்ட என்னையும் குத்தி இருக்கிறது. அவை என்னை ஆத்திரமூட்டவில்லை. சிந்திக்கவைக்கின்றன. அவருக்கு பதில் சொல்ல எனக்கும் விஷயங்கள் இருப்பது போல் தோன்றுகிறது. உரிய இடத்தில் பேசிக்கொள்ளலாம்.. என்போல் மற்றவர்களுக்கும் இருக்கக்கூடும். இலக்கியப்படைப்பும், ரசனாசக்தியும் இம்மாதிரி கருத்து வெளியீடுகளால் கருத்துப் பரிமாறுதல்களால்தான் வளருகிறது என்பது நமக்குத் தெரிந்த விஷயம்.
எனவே, இந்த நூலைப் படிப்பவர்கள், படைப்பாளர்களோ, ரசிகர்களோ, கலைஞர்களோ யாரானாலும் சரி, பாரதி பாடினானே ‘தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா, நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா’ என்றபடி, இலக்கிய இன்ப உணர்வுக்கு தூண்டுதலாக இந்தக் கருத்துச்சூடு இருப்பதாகக் கொண்டு, நம் உளுத்த முறைகளை உதறிவிட்டு சிருஷ்டிக்கும் ரசனைக்கும் ஒரு புதுத்திருப்பம் ஏற்பட வழி காண முற்பட்டோமானால் இந்த நூலைப் படித்த பயன் நமக்கு லாபமாக இருக்கும்.
27.02.1976
2 Replies to “பாலையும், வாழையும் – முகப்புரை”
Comments are closed.