நிர்வாண நடிகன்

பால்சனுக்கு அன்று ஒரு துக்கதினம். இதே தினத்தில் தான், 10 வருடங்களுக்கு முன் அவரது தாயார் மறைந்தார். அவரும் அவரது மனைவி ஃபிலோமினாவும், அவரது தாயாரின் கல்லறைக்குச் சென்று, மலர் தூவிவிட்டு, பிறகு சர்ச்சுக்குச் சென்று பிரார்த்தனை செய்யவேண்டும். 7 மணிக்கு இருவரும் புறப்படத் தயாரானார்கள். கல்லூரியில் படிக்கும் அவரது மகள் மெர்ஸி, பால்சனிடம், “டாடி, நீங்கள் இன்று 11 மணிக்கு கோர்ட்டுக்குப் போக வேண்டும்” என்று நினைவு படுத்தினாள். “நோட்டிஸ் வந்து 15 நாட்கள் ஆகிவிட்டாலும், எனக்கு நினைவு நன்றாக இருக்கிறது கண்டிப்பாக 11 மணிக்கு கோர்ட்டில் இருப்பேன்.” என்றார்

மெர்ஸி சிரித்துக்கொண்டாள். அவரது மனைவி, தலையில் அடித்துக்கொண்டே, “என்ன மனுஷன் இவர்,” என்று நினைத்துக் கொண்டார். ஃபிலோமினா சலித்துக்கொண்டதிலும் நியாயம் இருந்தது. இந்த கேசுக்காக வக்கீல், போலீஸ் ஸ்டேஷன் என்று பல முறை பால்சன் அலைந்திருக்கிறார். அந்த சமயத்தில், அவர் லேசான ஹார்ட் அட்டாகிற்கும் ஆளாகியுள்ளார். தவறிக் கீழே விழுந்தததால், அவரது தோள் மூட்டு காயமடைந்து இடது கையை அவரால் எளிதாகத் தூக்க முடியாத நிலையும் எற்பட்டது. யாருடைய உதவியையும் ஏற்காமல், வீடு, ஹாஸ்பிடல் என்று பல நாட்கள் ஃபிலோமினாதான் அலைந்திருக்கிறார். இப்பொழுது சர்க்கரை நோய், மன அழுத்தம், ரத்தக் கொதிப்பு போன்றவைகளுக்கு, முறையாக நேரம் தவறாமல் மருந்துகளைக் கொடுக்கும் பொறுப்பைக் கருத்தாக ஃபிலோமினாதான் கவனித்து வருகிறார். வசதி படைத்தவர்களாக இருந்தாலும், பால்சனை கவனித்துக்கொள்ளும பொறுப்பை யாரிடமும் ஒப்படைத்ததில்லை. தான் பார்த்து வந்த வங்கிப்பணியை உதறிவிட்டு, வீட்டிலேயே ஓய்வு எடுத்துவரும் அவரை பார்க்கும் ஃபிலோமினா அத்தனை கவலையுறவில்லை என்றாலும், அவர் தோற்றத்தில் கடந்த ஐந்து வருடங்களில் எற்பட்ட மாற்றம், நிச்சயமாக வருத்தமடையச் செய்தது.

பால்சன், தனக்கு இப்படிப்பட்ட மனைவி அமைந்திருப்பது, தனது நல்லகாலம் என்று நினைத்தார். ஆனால், இந்த கோர்ட்-கேஸ் விஷயத்தில், ஃபிலோமினாவின் பேச்சை அவர் ஏற்க மறுத்தார். நோய் வாய்ப்பட்டிருந்த சமயத்திலும், வாய்தா வாங்கத்தான் செய்தாரே தவிர வழக்கைத் திரும்பப் பெறவில்லை. ட்ரைவர் பாலன் வந்து, காரைச் சுத்தம் செய்துவிட்டு, 7.30 மணிக்கு தயாராகிவிட்டார். பால்சனும், ஃபிலோமினாவும் காரில் அமர்ந்தனர்.

பால்சன் தனது தாய் மீது, மற்றவர்கள் கவனத்தை ஈர்க்கும அளவிற்கு, அன்பும், பாசமும்,  மரியாதையும், கொண்டவர். சிறு வயதில் தந்தை இறந்தபிறகு, அவரது ஒவ்வொரு செயலிலும் தாய்தான் பக்க பலமாக இருந்தாள். அவரது தாய்க்கு உடன் பிறந்தவர்கள், தந்தைக்கு உடன்பிறந்தவ்ர்கள் எனப் பலரிருநதார்கள். ஆனால் அவர்கள் ஆலோசனைதான் அளிப்பார்கள். தாய்தான் எந்த விஷயமானாலும் சரியான பல முடிவுகள் எடுத்து, அதில் பால்சனுக்கு எது மகிழ்ச்சி தருமோ அதைச் செய்வாள். கல்லூரிப் படிப்பு முடிந்ததும், அவர் விமானப்படையில் சேர விருப்பப்பட்டதை மற்றவர்கள் ஆதரிக்கவில்லை என்றாலும், பால்சனின் தாய், பிரிந்து இருக்கவேண்டிய கட்டாயத்தையும் பொருட்படுத்தாது அனுமதித்தாள்.

விமானப்படையில் சேர்ந்த பால்சன் பல பயிற்சிகளில் உற்சாகமாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அங்கே கலைப் பணிகளுக்கும் பால்சனுக்குச் சந்தர்ப்பம் கிடைத்த்து. குறிப்பாக, சிறு வயதிலிருந்தே கனவாக இருந்த நாடகங்களில் நடிப்பது என்ற ஆவல் கைகூடியது, அவருக்கு மிகவும் உற்சாகத்தைக் கொடுத்தது. முன்பே மொழி அவருக்கு ஒரு பிரச்சனையாக இல்லாததால், கேம்ப்-பிற்கு வெளியே விமானப்படையில் இல்லாதோருடனும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் நாடகத்தில் நடிப்பதை ஆர்வத்துடன் செய்துவந்தார். இதை, தாயிடமிருந்து பிரிந்து வந்த ஒரு மனக் கவலையை மாற்ற பயன்படுத்திக் கொண்டாலும், அது ஓரளவு தான் முடிந்தது. அவர் பலமுறை விடுப்பில் வந்து சென்றிருந்தாலும், கடந்தமுறை, விடுப்பில் வந்த போது, தாய் கூறாவிட்டாலும், தனது பிரிவு அவரைப் பாதித்திருப்பதை, அவரது செயல்பாடுகள் மற்றும் பேச்சுக்கள் மூலம் பால்சன் புரிந்து கொண்டார்.

ஃபிலோமினாவின் பரிச்சயமும் அப்பொழுதான் அவருக்குக் கிடைத்தது. கூடிய சீக்கிரத்தில், விமானப் படையிலெருந்து விடுவித்துக் கொள்ளவெண்டும் என்று முடிவு செய்து கொண்டார். அதற்காகவே கிடைத்ததாகத் தோன்றிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, “மாஜி-இராணுவ வீரர்” என்ற பட்டத்துடன் 12 வருடங்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு பால்சன் நிரந்தரமாகத் திரும்பினார். 35 வயதில் ஃபிலோமினாவிற்கு மோதிரம் அணிவித்து, மனைவி ஆக்கிக்கொண்டார்.

காரை பாலன் நிறுத்தியதும், பால்சன் தானே வண்டியிலிருந்து ஃபிலோமினா கூறியதையும் பொருட்படுத்தாமல், இறங்கி மலர் வளையம் வாங்கச் சென்றார். ஃபிலோமினாவும், அவருக்கு பாதுகாப்பாக முணுமுணுத்தபடியே பின்னே சென்றார். திரும்பக் காரில் ஏறும் வரை இது நின்றபாடில்லை. பாலனுக்கு, இந்த கணவன்-மனைவி உறவு, தன் வீட்டில் நிலவுவதிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருப்பது சிரிப்பை வரவழித்தது. காரைக் கிளப்பினார்.

மாஜி ராணுவவீரன் பட்டம், பால்சனுக்கு ஒரு வங்கியில், ஒரு க்ளார்க் பணி பெறுவதை எளிதாக்கியது. அந்த காலகட்டங்களில் வங்கிப் பணியில் இருந்த தொழில் ரீதியான பண்பாடு, விமானப்படையில் இருந்த சூழலிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது. இப்பண்பாட்டின் ஆரோக்கியமில்லாத தன்மையை, பல ஊழியர்களும் தங்கள் தனிப்பட்ட ஆரோக்கியத்திற்காகப் பயன்படுத்திக்கொண்டதில் பால்சனுக்கு உடன்பாடில்லை. தன்னை அலுவலக விஷயங்களில் ராணுவக் கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொண்டார். மற்றவர்களும் அதேபோல் நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். மற்ற ஊழியர்களுடனும், வங்கி மேலாளருடனும், செய்த வாக்குவாதங்கள் அவருக்கு எதிர்ப்பாளர்களைத்தான் உருவாக்கியது. வங்கியில் நண்பர்களை பெருக்கிக் கொள்ளாதது, அவருக்கு நாடக ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள உதவியது. அவரது தாயும், மனைவியும் அந்த ஆர்வத்திற்குத் தடை எற்படுத்தாதது மட்டுமல்ல, மிகவும் ஊக்கமும் அளித்தனர். மாலை 5 மணிக்குப் பிறகு அவருக்கு, ஒத்திகைகளுக்குச் செல்வது எளிதாக இருந்தது. விடுமுறை நாட்களில், உள்ளூரிலும், வெளியூரிலும் நடிக்கச் செல்வதில் எந்த சிரமமும் இருந்ததில்லை. மற்ற நாட்களில், அவர் தேவைப்பட்டால், விடுப்பு எடுத்துக் கொண்டு, நடிக்கச் சென்றுவிடுவார். அதே சமயம், அவர் வங்கியில் நடைபெறும் தேர்வுகளிலும் கலந்துகொண்டு, தன்னைப் பதவி உயர்வுக்கும் தயார் செய்து கொண்டார்.

அப்போதுதான் அவருக்கு, இது கடவுள் தந்த வரம், என்று தோன்ற வைத்த ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அவரது நாடக நண்பர் ஒருவருடன் எதேச்சயாக சன்னி என்ற ஒரு உதவி டைரெக்டரைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது சன்னி மிகுந்த அழுத்தத்தில் இருந்தது நன்றாகத் தெரிந்தது.

சன்னி, பணி புரிந்து வந்த ஒரு படத்தின் கதாநாயகன், திரை உலகத்திற்கு அறிமுகமாகி இரண்டு வருடங்களே ஆகியிருக்கும். துடிப்புள்ள இளைஞரான அவர் ஆபத்தான சண்டைக்காட்சிகளை தானே செய்ய வேண்டும் என்று நினைப்பவர். படப்பிடிப்பில், சில தினங்களுக்கு முன் நடந்த ஒரு விபத்தில் உயிர் இழந்து விட்டார். அப்படத்தில் ஓரிரு காட்சிகளை இன்னும் படமாக்க வேண்டும். அதற்காக ஒரு, அனுபவம் உள்ள, இறந்தவரின் முகச்சாயலில், ஒரு நடிகரை தேடும் முயற்சியில் சன்னி இறங்கியிருந்தார். சில க்ளொஸப்-காட்சிகளும் உள்ளதால், முகம் கனகச்சிதமாக அமைய வேண்டும் என்று டைரெக்டர் சொல்லி விட்டார். சன்னியின் தேடுதல் முயற்சி இதுவரை பயனளிக்கவில்லை.

பால்சனைப் பார்த்ததும், சன்னிக்கு பொறி தட்டியது. அவர் தேடியமுகம் பால்சன் முகம்தான் என்று பட்டது. ஆனால் பால்சனின் முன்புறத் தலை, சிறிது வழுக்கையாக இருந்தது. அது ஒரு பிரச்சனை என்று சன்னிக்குப் படவில்லை. சிகை அலங்கார வல்லுனர் மூலம், ஒரு “விக்” தயார் செய்து கொள்ளலாம் என்று முடிவுசெய்துகொண்டார். பிறகு முழு விவரங்களையும் பால்சனிடம் சொல்லி, மாற்று நடிகராக மாற சம்மதம் கேட்டார்.

பால்சன் இது தனக்குக் கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு என்றே நினைதார். தனது நடிப்பு ஆர்வத்திற்கு, இப்படி ஒரு பரிசா என்றும் வியந்தார். சன்னியுடன் பேசும் போது, பால்சனின் பேச்சு நடிப்புப் பற்றிதான் இருந்தது. சன்னிக்கும் சரி, பால்சனின் நண்பருக்கும் சரி, பால்சனின் நடிப்பு ஆர்வம் ஆச்சரியத்தைக் கொடுத்தது. முகத்தில் நடிக்க வாய்ப்பு என்ற மகிழ்ச்சியைத் தவிர, பணம், புகழ் என்ற எதுவும் பிரதிபலிக்கப்படவில்லை என்றே தோன்றியது.

வீட்டில் இருந்தவர்களுக்கும் பால்சனின் முடிவில் சம்மதமே. இருந்தாலும், தாய், பால்சனிடம், தான் தன் மகனை ஒரு நாடக நடிகனாகத்தான் பார்க்க விரும்புவதாகக் கூறினாள். சன்னி பால்சனை மும்பை அழைத்துச்சென்று, பல ஆயிரங்கள் கொட்டி , விக்-கை தயார் செய்வித்தார். சிறப்பாக அமைந்த அந்த விக் பால்சனுக்கு, உண்மையிலேயே, மறைந்த நடிகனின், முகத்தை வரவழித்தது. பால்சன் சில தினங்கள் வங்கியிலெருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு, நடிக்கச் சென்றார். மறைந்த நடிகரின் சாயலிலேயே இருக்க வேண்டும் என்ற கண்டிஷனால், வீட்டில் இரவில் தூங்கும் நேரம் தவிர , பால்சன் “விக்”கில்தான் காணப்பட்டார். அந்தப் பழக்கம் படபிடிப்பு முடிந்த பின்னரும் தொடர்ந்தது. வங்கி, பதவி உயர்வுக்கான பரீட்சை மற்றும் நேர்காணல், நாடக மேடை, உறவினர்கள் வீடு, சர்ச், ஒத்திகை, ரயில், பஸ் என்று எங்கும் அவர் விக்-குடன் தான் காணப்பட்டார். பலர் அவர் காதில் விழும்படி மறைந்த நடிகரை நினைவு கூர்ந்தது ஒரு புகழ்ச்சியாகக் கூடப் பட்டது. படத்தை முடித்துக் கொடுத்ததற்காக, பல ஆயிரங்கள் சம்பளமாகவும் பால்சனுக்குக் கிடைத்தது. ஆனால் அதை ஒரு பொருட்டாக அவர் கருதவில்லை.

அப்படம் அரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பத்திரிகைகள், சஞ்சிகைகள், மறைந்த நடிகரின் நடிப்பை வெகுவாக புகழ்ந்தன. தன் பங்குபற்றி ஏதாவது செய்தி உண்டா என்று பார்த்தவருக்கு, ஏமாற்றமே. தான் தோன்றிய காட்சிகள் வெகுவாக ரசிக்கப்பட்டாலும், அதன் புகழ் மறைந்தவருக்கே சென்றது. படத்துறையில், மாற்று நடிகனுக்கு உள்ள இடம் பற்றிப் படப்பிடிப்பின்போதே ஓரளவு தெரிந்துகொண்டாலும், அதன் முழுப் பரிமாணத்தை பால்சன் அப்பொழுது அறிந்து கொண்டார். ஆனால் அதிலும் ஒரு ஒளிக்கீற்று. தன்னாலும் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை, உண்மை நிலை அறியாது, பத்திரிகைகள் வெளிச்சம் போட்டுக் காட்டியது, பால்சனுக்கு நடிப்பினை மேலும் செரிவூட்ட உந்துகோலாக அமையும் என்ற நம்பிக்கையை உண்டாக்கியது.

கார், மயானத்தின் வாயிலில் நின்றதும், பால்சனும், ஃபிலொமினாவும் கீழே இறங்கினார்கள். மலர்வளையத்தை எடுத்துவர நினைத்த பாலனைத் தடுத்துவிட்டு, பால்சன் தானே மலர்வளையத்தை எடுத்துக் கொண்டு, கல்லறைக்குச் சென்றார். அவர் கண்கள் பனித்திருந்தன. ஃபிலோமினா, தூய வெண்ணிறப் புடவையின் தலைப்பை தலைக்கு மேலாக போர்த்திக்கொண்டு, கையில் சிறிய புத்தகத்தையும், ஜபமாலையும் வைத்துக்கொண்டு, கணவர் அருகில் நின்று கொண்டு ஜபம் செய்ய ஆரம்பித்தார். தாயின் மரணம் செயற்கையானது என்றுதான் பால்சன் நினைத்தார். சில சமயம், தவிர்க்கப்பட்டிருக்கலாமோ என்று கூட நினைத்ததுண்டு. தான் மிகவும் நேசித்த இல்லத்தில், தனக்குப் பிறந்த குழந்தைகள் மற்றும் உறவினர்கள் சூழ்ந்து நிற்க, யாவரும் ஜபத்தின் இனிமையை உதடுகளில் மென்மையாக வெளிப்படுத்த, கொஞ்சம், கொஞ்சமாக, மெல்ல மெல்ல, அமைதி அடைகிறார்களே அவர்கள் மரணம் தான் இயற்கை ஆனது என்பது பால்சனின் கருத்து. தாய் மரணம் அடைந்த சூழ் நிலையை நினைத்துப் பார்த்தார்.மிகவும் கலங்கினார்.

திரை உலகின் உண்மை நிலை அறிந்த பின், பால்சன் நாடக மேடையில் வழக்கம்போல் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அச்சமயத்தில், அவருக்கு வங்கியில் பதவி உயர்வும் கிடைத்தது. இரண்டு பணிகளும், ஒன்றை ஒன்று பாதிக்காத வண்ணம், லாவகமாகக் கையாண்டார். தான் க்ளார்க்காக எப்படி இருந்தாரோ, அதே கட்டுப்பாட்டினை, தன் கீழ் பணியாற்றும் ஊழியர்களிடம் கிளை மேனேஜர் மாற்று கருத்து கொண்டிருந்தாலும், முழுமையாகச் செயல்படுத்த முயன்றார். அதேபோல், ஒத்திகைகளிலும் சரி, மேடையிலும் சரி இயக்குனர் மாற்று கருத்து கொண்டிருந்தாலும், தனது கருத்தை வெளிப்படுத்த தயங்கியதில்லை. பால்சன், ஒரு நாடகத்திற்காக தன் ஊரிலிருந்து 300 கி.மீ தொலைவில் இருந்த ஒரு நகரத்திற்கு சென்றிருந்தார். இது போன்று வெளியூர்களில் நடக்கும் பல நாடகங்களுக்கு, அவரது தாயும் வந்திருக்கிறார். இம்முறை, தான் வரவில்லை என்று, கூறியதால் பால்சன் மட்டும் சென்றிருந்தார்.அந்த ஊரில், வழக்கமாகத் தங்கும் விடுதியில் அறை எடுத்து, ஓய்வெடுக்க, கட்டிலில் அமர்ந்தார். வரவேற்பிலிருந்து போன் இணைப்பு கொடுக்கப்பட்டது. ஃபிலோமினாதான் பேசினார். தாய் கட்டிலிலிருந்து கீழே விழுந்துவிட்டதாகவும், ஆபத்தான நிலையில் ஹாஸ்பிடலில் சேர்த்து இருப்பதாகவும், உடனே திரும்பி வரும்படியும் கூறினார். அதிர்ந்துபோன பால்சனுக்கு ஊருக்குத் திரும்ப 10 மணி நேரம் ஆனது. வீட்டிற்குச் செல்லாமல், நேரே ஹாஸ்பிடலுக்குச் சென்ற பால்சனை அவரது மாமா எதிர் கொண்டார். எல்லாம், முடிந்து வீட்டிற்கும் எடுத்துக்கொண்டு போயாகிவிட்டது என்று கூறி முடிப்பதற்குள், பொது இடம் என்ற உணர்வு இல்லாமல் ஓவென்று பால்சன் அலறினார். அவரது மாமா அவரை கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு, காரில் ஏற்றி வீட்டுக்கு விரைந்தார். தாயின் கோலத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தலையில் கட்டு போடப்பட்ட இடத்தில் ரத்தம் கசிந்திருக்க வேண்டும். துணியில் ரத்தக்கறை இருந்தது. மூக்கில் பஞ்சை அடைத்து வைத்திருந்தார்கள். மனைவி, மகள், மற்ற உறவினர்கள், தெரிந்த அக்கம்பக்கத்தினர் , நண்பர்கள் யாவரும் அமைதியாக இருக்க துக்கம் தங்காமல் பால்சன் உரத்தக் குரலில், “அய்யோ” என்று அலறியது அனைவரையும் அவரைக் கவனிக்கவைத்தது. பெரியவர் ஒருவர், பால்சனை அணைத்தபடி, “என்ன இது, கட்டுப்படுத்திக்கொள்” என்று கூறினார். பால்சன் சட்டென்று தன் சுய நிலைக்கு வந்தார். பால்சனே தான் நாடகங்களில் இதுபோன்ற சோகக்காட்சிகளில் நடித்ததின் விளைவோ என்றுகூட எண்ணி வேதனை அடைந்தார். அடக்கம் செய்த இடத்தில், பால்சன் வெகு நேரத்திற்கு நின்று கொண்டிருந்தார்’

கார் ட்ரைவர் பாலன், “ நேரமாகிறது அம்மா,” என்று நினைவூட்டினான். ஃபலோமினா, பால்சனிடம் ” மணி 8.30 ஆகிறது. உங்களுக்கு கோர்ட்டுக்குகூட போகவேண்டும்” என்றார். பால்சன் மலர்வளையத்தை, கல்லறையில் வைத்தபின், முடியற்ற முன் தலை, முகம் ஆகியவற்றில் வழிந்த வேர்வையை கைகுட்டையால் துடைத்துக்கொண்டார். பிறகு இருவருமாக சேர்ந்து சர்ச்சுக்குப் போனார்கள். பிரார்த்தனை முடிந்ததும், வீடு திரும்ப மணி 9.30 ஆகி விட்டது. காலைச் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு, பால்சன் காரை நோக்கிச் சென்றார். ஃபிலோமினா பாலனிடம், அவர் மீது கவனம் இருக்கட்டும் என்று சைகை செய்தாள். அதை கவனித்த பால்சன் “ஒன்றும் பயப்படாதே. எனக்கு ஒன்றும் ஆகாது. மேலும், குறுக்கு விசாரணையில் எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று வக்கீல் நேற்றே சொல்லிக்கொடுத்திருக்கிறார்,” என்றார். கார் கோர்ட்டுக்குப் புறப்பட்டது.

தாயின் ஈமச்சடங்கிற்காகச் சில தினங்கள் விடுப்பில் இருந்த பால்சன், மீண்டும் பணிக்குத் திரும்பினார். வழக்கமான, விக் சகிதம் கூடிய உடை அலங்காரத்துடன்தான் அவர் வங்கிக்குச் சென்றார். பணியில் அசுரத் தனமான் திறமை, ஊழியர்கள் மீதிருந்த கட்டுப்பாடு, ஆகியவை வழக்கம் போல் தொடர்ந்தன. மேலும், தாய் விட்டுச் சென்ற சிறு சிறு ஆன்மீகப் பணிகளை வீட்டிலும், சர்ச்சிலும் செய்துவந்தார். அதனால், மேடை நாடகங்களில் நடிப்பதை சிறிது குறைத்துக் கொண்டார். அவரது திறமைகளைக் கருத்தில் கொண்டு, வங்கி அவரை அடுத்த ஊரிலிருந்த கிளைக்கு மேனேஜராக மாற்றம் செய்தது. அங்கு இருந்த 10 ஊழியர்களில் 2 பேர் அதிகாரிகள். மற்றவர்கள், க்ளார்க்குகள் மற்றும் கடை நிலை ஊழியர்கள். அக்கிளையின் பொறுப்பேற்பது, ஒரு சவாலான செயல் என்று வங்கியில், அவ்வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்ட ஒன்று. அதை மெய்யாக்கும் வண்ணம் தினந்தோறும், வேண்டுமென்றே, பிரச்சனைகளை உருவாக்கினார்கள். இந்த நிலையில். இக்கிளையில் இருந்து கொண்டு, மேடை நாடகங்களுக்கு, நேரம் ஒதுக்குவது என்பது பால்சனுக்கு கடினமாக இருந்தது. பால்சன் மேடையில் தோன்றுவதை படிப்படியாக குறைத்துக்கொண்டு, ஒருசில மாதங்களில் முற்றிலுமே விட்டுவிட்டார். ஒரு சில ஆண்டுகள் போனபின் மீண்டும் நடிக்கச் செல்லலாம் என்றும் முடிவு செய்து கொண்டார்.

ஒரு நாள், காலை நேரத்தில், வங்கி ஹாலில், பலரும் கூச்சலிட்டுக் கொண்டு வாய் சண்டை நடத்திக் கொண்டிருந்தார்கள். அதிகாரிகள் இல்லாத ஊழியர் சங்கத்தின், அவ்வட்டாரச் செயலர், கேசவன், அதிகாரிகளிடம் கடும் வார்த்தைகளினால் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார். அக்கிளையின் செயலர், சில ஆபாச வார்த்தைகளை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தார். பிறகு அனைவரும் பால்சனின் அறைக்கு வந்து, அதே காட்சியை மீண்டும் அரங்கேற்றினார்கள். பால்சன் அதிகாரிகளின் செயலை ஆதரித்து, மற்றவர்களுடன் வழக்காடிக் கொண்டிருந்தார். அப்போது, கேசவன், பால்சனை நோக்கி, அவரது தாயை இழிவுபடுத்தும் விதமாக வார்த்தையை வீசினார். பால்சனால் அதை தாங்கமுடியவில்லை. அவனை தாக்க தன் சேரிலிருந்து எழுந்தவரை, கேசவன் தடுக்க, அம்முயற்சியில், பால்சனின் விக்-கில் கை பட்டு, அது கீழே விழுந்தது. மேலும் கையில் காயம் பட்டு, ரத்தம் கசிந்த்து.

அப்போது, நிலைமையை அறியாத, அங்கு கூடியிருந்த சிலர் சிரித்தனர் பால்சன், கலவரத்தை ஒரு சில நிமிடங்கள் மறந்து, சேரின் பின் புறத்தில் போடப்பட்டிருந்த டவலினால் தலையை மறைத்துக்கொண்டு, விக்-கை எடுத்து, ஒரு பிளாஸ்டிக் பையில் கவனமாக வைத்துக்கொண்டு, வீட்டிற்கு விரைந்தார். ஃபிலோமினா, பால்சனின் கோபத்தைப் பார்த்து அதிர்ந்து போனாள். அவர் பேச்சிலிருந்து, யாரோ கேசவன் என்பவரை, துடி துடிக்க வைக்கவேண்டும் என்ற வெறித்தனம் பிடித்துக்கொண்டதைக் கண்டு அஞ்சினாள். பிறகு சில தினங்கள் போலீஸ், வக்கீல் என்று தன்னை மிகவும் பிஸியாக பால்சன் வைத்துகொண்டார்,

ஈ.பீ.கோ 323, 355, 504 என்று வக்கீல் நீட்டி முழக்கியதை ஒதுக்கி வைத்துவிட்டு, கேசவன் மற்றும் அவரது நண்பர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு பற்றி பால்சன் தெரிந்துகொண்டார். . கேசவன், பால்சனின் கெளரவத்தை பாதிக்கும் வண்ணம், அவர் தலையில் அணிந்திருந்தவற்றை களைந்து, ஒருவகையாக நிர்வாணப்படுத்தினார் என்பது தான் வழக்கின் தன்மை. இது கோர்ட்டின் முன் செலாவணி ஆகுமா என்று பால்சன் அவ்வளவாக கவலை கொள்ளவில்லை. கேசவனுக்கு பாடம் கற்பிக்கவேண்டும் என்பதில் மிக தீவிரமாக இருந்தார். கோர்டில் வழக்கு பதிவு செய்தபின், பால்சன் அதன் மீதான நடவடிக்கைகளை, தினம்தோறும் வக்கீலிடம் நச்சரிக்க ஆரம்பித்தார். அவருக்கு பால்சன் மீது கடும் கோபம் வந்தாலும் அடக்கிக்கொண்டார். இதுபோல் 3 மாதங்கள் சென்ற பின், ஒரு நாள் திடீரென ஹார்ட் அட்டாக் எற்பட்டு கீழே விழுந்து, தோள்பட்டையில் காயத்தோடு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். 3 மாதங்கள் ஓய்வுக்காக என்று விடுப்பில் சென்றவர், அப்படியே பணியிலிருந்து நிரந்தரமாக ஓய்வு எடுத்துக்கொண்டார். வசதி உள்ளவராக இருந்ததால் பணியிலிருந்து ஓய்வு பெற்றது, அவருக்கு பொருள் ரீதியில் எந்த பாதிப்பையையும் எற்படுத்தவில்லை. படிப்படியாக தனது பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்ட அவர், சர்ச், வீட்டிற்கு அருகிலேயே சில சிறு சமூக சேவைகள் என்று செல்லும் போது, சாதாரண உடையில், விக் அணியாமல் சென்று வரத் தொடங்கினார். கை தோள்பட்டையில் எற்பட்ட காயத்தினால் அவரால் கையை தூக்குவதில் சிறிது சிரமம் எற்பட்டதும், பழக்கங்களில் எற்பட்ட மாறுதல்களுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

கேசவன், அவரது குடும்பத்தினர், மற்றும் பலர் அவரை வழக்கை திரும்பப் பெற பலமுறை வேண்டியும், பால்சன் அதற்கு மறுத்துவிட்டார். 5 ஆண்டுகள் சாட்சிகள் விசாரணை, வாய்தா என்று சென்று விட்டது. கேசவனது வக்கீல், பால்சனை விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருந்தார். அதை கோர்ட் ஏற்றுக் கொண்டதால், பால்சன் கோர்ட்டுக்கு மீண்டும் செல்ல வேண்டியதாயிற்று.

கார் கோர்ட் வாயிலில் நின்றது. பாலன் “ஸார், நான் வண்டியை பார்க் செய்துவிட்டு வருகிறேன். இங்கேயே இருங்கள்,” என்றான். பால்சன் சரி என்று சொல்லிவிட்டு நின்று கொண்டிருந்தார். அங்கிருந்து சற்று தொலைவில் ஒரு சிறிய சலசலப்பு காணப்பட்டது. அச்சலனத்தில் இருந்து விடுபட்ட சிலர், மன நிலை, ஆடை இல்லாதவர் என்று தொடர்ச்சி அற்றதாகக் கூறியதை காதில் வாங்கிக் கொண்டவர், முழுவிவரங்களைத் தெரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை.

கோர்ட் ரூமிற்கு 11 மணிக்குச் சென்றார். தனது வக்கீலைப் பார்த்து கை அசைத்தார். பின்னால் போடப்பட்டிருந்த பெஞ்சில் உட்கார்ந்துகொண்டார். தான் இருந்த இடத்திலிருந்து, இரண்டு பேரைத்தாண்டி கேசவன் வந்தமர்ந்ததை பால்சன் பார்த்தார். கேசவனும் பார்த்தார் என்று பால்சனுக்குத் தோன்றியது. அப்பொழுது, கேசவன் அனிச்சையாக தன் பார்வையை வேறு திசைக்கு மாற்றினாலும் பால்சனுக்கு அவர், தன்னைத் தவிர்த்ததாகத் தோன்றவில்லை. அன்று சில குற்றவியல் வழக்குகள் வந்திருந்தன.

நீதியரசர் வந்ததும், அனைவரும் எழுந்து நின்று வணக்கம் செய்தனர். ஒருவர் ஏதோ எண்ணையும் பெயரையும் கூவினார். போலீஸ், சங்கிலி கொண்டு ஒரு கை மட்டும் கட்டப்பட்டிருந்த ஒரு ஆளை கூண்டில் ஏற்றினர். சங்கிலியின் மறு முனை போலீசின் கையில் இருந்தது. பால்சன் அருகில் அவருடைய வக்கீல் வந்தார்.

“நம்ம கேஸ் வர 3.00 மணி ஆகும்” என்றார். அவர் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என்று அமர்திருந்தார். நாடகங்களில் வருவது போல, வக்கீல் தனது அங்கியை சரிசெய்து கொள்ளவில்லை. யுவர் ஹானர் என்று நீட்டிமுழங்கவில்லை. கையில் கேஸ் கட்டு எதுவும் காணவில்லை. கூண்டில் நிற்பவர் “உண்மை சொல்கிறேன்,” என்று சொல்லி முடித்ததும், அரசு வக்கீல் அவனருகே சென்று மெல்லிய குரலில் கேள்விகேட்டார். பிறகு கேள்வியை கோர்ட் உதவியாளர் பதிவு செய்து கொள்வதற்காகச் சிறிது நேரம் மெளனமாக இருந்தார். கூண்டிலிருப்பவன் ஏதோ சொன்னான். அதை அரசு வக்கீல், கோர்ட் உதவியாளர் பதிவு செய்வதற்காகச் சிறிது சத்தமாகக் கூறினார். மற்ற வக்கீல்கள் தங்கள் கேஸுக்காகக் காத்திருந்தார்களே தவிர, நடக்கும் கேஸில் எவரும் கவனம் செலுத்தவில்லை. நீண்ட வாக்கியங்கள் இல்லாமல் விசாரணை நடந்துகொண்டிருந்தது. 30 நிமிடங்களில், பலர் தூங்குவது போல கண்களை மூடிக்கொண்டிருந்தனர். சில வக்கீல்கள் தங்கள் கேஸ் கட்டுகளை அப்பொழுதுதான் படித்துக்கொண்டிருந்தார்கள். அறையின் வெளியே சன்னலின் கம்பிகளை பிடித்துக்கொண்டு, சில பெண்கள், கண்ணீருடன் கூண்டிலிருப்பவரையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

பால்சன் டீ அருந்தலாம் என்ற எண்ணத்துடன் எழுந்தார். அப்போது, கேசவனையும் பார்த்தார். தான் எழுந்ததை கவனித்தாலும், கேசவன் எந்த சலனமும் இல்லாமல் இருந்தது, பால்சனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒருவேளை, தன் மீது கோபத்தில் இருக்கிறார் போலிருக்கிறது என்று நினைத்தார். வெளியில் வந்த பால்சனை, பாலனும் தொடர்ந்து வந்தார்.

திறந்த வெளி டீக்கடையில், சிலர் கூட்டமாக அரசியல் பேசிக் கொண்டிருந்தனர். பால்சன் ஒரு பெஞ்சில் உட்கார்ந்துகொண்டார். பாலன் அவருக்காக டீ வாங்கி வந்து அவரிடம் கொடுத்து விட்டு, சற்று தள்ளி நின்றுகொண்டார். பால்சன் திடீரென தனது பெஞ்சின் முன்னே இருந்த பெஞ்சில் இருந்தவரின் பக்கவாட்டு தோற்றத்தைப் பார்த்து, முகமலர்ச்சியுடன் அவரது தோளைத்தொட்டார். அவர் திரும்பியதும், பால்சன் அவரிடம், “என்னைத் தெரிகிறதா,” என்றார். அவர் “இல்லையே” என்றார்.

சிரித்துக்கொண்டே, பால்சன் அவரிடம் “நீங்கள் அசோகன் தானே. நான் தான் பால்சன், விமானப்படை,” என்றார்.

உடனே அசோகனுக்கு மகிழ்ச்சி பீறிட்டு எழ, கைகளைப் பற்றிக்கொண்டு, “என்ன பால்சன், ஆளே மாறிவிட்டேங்களே,” என்றவர் குடும்ப நலங்களை விசாரித்தார்.

பால்சனும் தனது மனைவி, மகள், வீடு, கார், ட்ரைவர் என்று, தனது குடும்பத்தின் அங்கமாக நினைத்தவைகளைப் பற்றிக் கூறினார். குறிப்பாக மனைவியைப் பற்றி மிக பெருமையாக் கூறினார்.

அசோகன், பதிலுக்கு “நான் திருமணமே செய்துகொள்ளவில்லை. நான் இந்த ஊருக்கு வராமல் அங்கேயே உன்னைப் போல் ஒரு வங்கிப்பணியில் சேர்ந்தேன். விரும்பிய பெண்ணை மணக்கமுடியாத சூழ் நிலை…….ஆகையால் இப்படியே இருந்துவிட்டேன் 3 வருடங்களுக்கு முன் தான் மாற்றல் வாங்கிக்கொண்டு இங்கே வந்துவிட்டேன், ” என்றவர், திடீரென, “ஆமாம், உன் நாடக உலகம் என்னவாயிற்று?” என்று கேட்டார். பால்சனும் அசோகனும் ஒன்றாக கேம்ப் கலை நிகழ்ச்சிகள், கேம்ப்க்கு வெளியே மேடைகள் என்று தோன்றி நடித்து இருக்கிறார்கள்.

“நான் மேடையேறி 6 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. நடிப்பை விட்டுவிட்டேன்.”

“நான் நடிப்பதை விடவில்லை. பழைய இடத்தில், பல முறை மேடையில் தோன்றியிருக்கிறேன். இங்கு வந்த பிறகும் தொடர்கிறேன். இப்போதெல்லாம், மேடை நாடகங்கள் குறைந்துவிட்டன. டி,வி தொடர்களை நீங்கள் பார்ப்பதில்லையா. பல தொடர்களில் சிறு சிறு பாத்திரங்களின் வந்திருக்கிறேன். என் நடிப்பை என் நண்பர்கள் பாராட்டியிருக்கிறார்கள். கண்டிப்பாக ஒரு பெரிய ப்ரேக் கிடைக்கும்,” என்று தன் வயதையும் மறந்தவராக அசோகன் சொன்னது பால்சனுக்கு வியப்பாக இருந்தது.

“இந்த வயதில் இது தேவைதானா,” என்று பால்சன் கேட்டார்.

பதிலுக்கு அசோகன், “நிச்சயமாக எனக்குத்தேவை. ஒரு உண்மை நடிகன் எப்பொழுதும் நடிகன் தான். சின்னச் சின்ன அங்கீகாரம் கூட ஒரு உந்துவிசையாக மாறி, அவனை நடிப்புத்துறையிலேயே இருக்கச்செய்துவிடும். எனக்கு அந்த அனுபவம் இருப்பதால், நடிப்பை தொடர்கிறேன்,” என்றார்.

பால்சன், “சின்னச் சின்ன அங்கீகாரமா? அப்படி என்றால்? “ என்று கேட்டார்.

சிறிது யோசித்தவராக , அசோகன் தொடர்ந்தார்.

“உனக்கு ரேகாவை நினைவிருக்கு இல்லையா?” என்று கேட்டார். பால்சனும், அசோகனும் ஒன்றாக நடித்துக் கொண்டிருக்கும் போது, கதாநாயகியாக ரேகா என்ற பெண் நடித்து வந்தார்.. பால்சன் அப்பெண்ணுடன் பழகி வந்தார். அந்தப் பெண் கடைசியில் வெறொருவரை மணந்து கொண்டு பால்சனோடு நடிப்பிடமும் விடை பெற்றுக் கொண்டார். அதை நினைவுபடுத்துவதாக நினைத்துக்கொண்டு, பால்சன் மெல்லியதாகச் சிரித்தார். உடனே, அசோகன் அதை புரிந்துகொண்டு, “சே சே அந்த ரேகா இல்லை. நான் சொல்வது பாலிவுட் நடிகை ரேகா. அவர் என்ன சொன்னார் என்று தெரியுமா?” என்றார்.

பால்சன் இந்தியாவில் தலை சிறந்த நடிகை ரேகாதான் என்று நினைப்பவர். பலதரப்பட்ட குணாதிசயங்களை நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியவர் , மற்றும் அறிவார்த்தமாகப் பேசக்கூடியவர் என்றால் ரேகா ஒருவர் தான் என்பார். அவர் கூறுவது ஒரு ஆழ்ந்த கருத்தாகத்தான் இருக்கமுடியும் என்ற எதிர்பார்ப்புடன், “என்ன சொன்னார்” என்று கேட்டார்.


அசோகன், “இரண்டு-மூன்று ஆண்டுகளுக்கு முன் ஃபிலிம்ஃபேர் அவார்ட் ஒன்று வாங்கினார். அப்பொழுது நிருபர் ஒருத்தர் கேட்டார்-நீங்க தான் ரொம்ப அவார்ட்ஸ் முன்னாலே வாங்கியிருக்கீங்களே. இப்ப எப்பிடி ஃபீல் பண்றீங்க. அதற்கு ரேகா பதில்-எங்களைப் போன்ற நடிகர்கள் எப்போதுமே அங்கீகாரத்திற்காக ஏங்குவோம். பெரிய அவார்ட்ஸ் வாங்கும் போது எவ்வளவு, மகிழ்ச்சியோ அதே அளவு மகிழ்ச்சி எனக்கு இப்பவும் உண்டாகிறது. இதுதான் எங்களுக்கு மேலும் மேலும் நடிக்க மோடிவேட் செய்கிறது. ரேகா போன்ற பெரிய நடிகைகளுக்கு பெரிய அளவில் அங்கீகாரம். என்னை மாதிரி சின்னச் சின்ன நடிகர்களுக்கு சிறிய அளவில் அங்கீகாரம். சிலர் கடைகளில் பார்த்து-ஸார் நீங்க தானே அந்த டிவி தொடரில் வந்தீர்கள், என்று கேட்பார்கள். சிலர் என்னைப் பார்த்து சிரிப்பார்கள், சிலர் வெறுமனே பார்ப்பார்கள். இதுதான் நான் சொன்ன அங்கீகாரம். இவ்வளவு ஏன். வீட்டில், மனைவி, தாய், பிள்ளைகள், நண்பர்கள் என்று யார் பாராட்டினாலும் அது அங்கீகாரமே. இப்ப நீங்களே பாருங்கள், நம்மை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்று,” பால்சன் சுற்றிமுற்றிலும் பார்த்தார். அசோகன் சொல்வது சரிதான். பலர் கடந்துசெல்லும் போது, அசோகன் மீது சிறிய பார்வையை செலுத்தினர். அசோகன் தொடர்ந்தார்.

“அதனால்தான் சொல்கிறேன்-ஒரு நடிகன், அங்கீகாரம் என்று ஏதோ ஒன்றைத் தொடர்ந்து பெறுவதால், எப்பொழுதும் நடிகனாகத்தான் இருப்பான்.. நீ நடிப்பை விட்டுவிட்டேன் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.”

பேச்சை மாற்ற பால்சன், “அது சரி, நீ எப்பிடி கோர்ட் பக்கம்” என்று கேட்டார். அசோகன் “அது ஒன்றும் இல்லை. எனது நண்பர் ஒருவர். நல்லவர். அவர்தான் போன 3 வருடத்தில், நான் டிவி, மேடை போன்றவற்றில் நடிகனாகத் தோன்ற பலவழிகளில் உதவி வருகிறார். ஒரு சிக்கலான சம்பவத்தில் மாட்டிக் கொண்டுவிட்டார். சம்பவம் நடந்த சமயத்தில், அவர் என்னுடன் வேறு ஊரில் இருந்தார் என்று சாட்சி சொல்லி, அதற்காக சில ஆவணங்களைக் காட்டவேண்டும். இதுவும் ஒரு வகையில் நடிப்புத்தான். நான் நடிகன்தானே,” என்று சொல்லிவிட்டு சிரித்தார்.

பால்சன் உடனே வேடிக்கைக்காக “அதாவது போலி நடிகன்,” என்றார். அசோகனுக்கு தான் சொன்னது கோபத்தை வரவழைத்திருக்கிறது என்று பால்சன் அவர் முகத்தைப் பார்த்துப் புரிந்துகொண்டார். அசோகனும், பெரிதாக பாதிக்கப்படாததைப் போல் முக பாவத்தைச் சட்டென்று மாற்றிக்கொண்டு, பால்சனிடம் “ஆமாம். நீ எதற்காகக் கோர்டிற்கு வந்தாய்?” என்று கேட்டார்.

பால்சன் சிறிது நேரம் தயங்கினார். அசோகன், தான் கேட்டவுடன், ஒளிவுமறைவு இல்லாமல் தான் வந்த காரியத்தைப் பற்றி கூறினாரே, தானும் கூறவேண்டும் என்று நினைத்து கூற ஆரம்பித்தார்.

பால்சன் கூறி முடித்தவுடன், அசோகன் உரத்த குரலில், மற்றவர்கள் கவனத்தை ஈர்க்கும் படி, உடல் குலுங்கக் குலுங்க சிரித்தார். பால்சனுக்கு இவர் ஏன் இப்படி சிரிக்கிறார் என்று புரியவில்லை. ஒருவேளை விக் கீழே விழுந்தபோது, கிளையில் சிரித்தார்களே, அதுபோலத்தானா என்று குழம்பினார். அசோகன் தனது, சிரிப்பை அடக்கிக் கொண்டு, மனதளவில் பால்சனுடன் ஒரு நெருக்கத்தை எற்படுத்திக்கொண்டு, “பால்சன், நீ வெறும் நடிகன் அல்ல. மிக சிறந்த உண்மை நடிகன். அதிலும் மிகச் சிறந்த உண்மை நிர்வாண நடிகன்” என்றார். பால்சனுக்கு அசோகன் கூறியது புரியவில்லை. அசோகன் தொடர்ந்தார்.

“ரேகா கூட, அங்கீகாரம்தான் ஒரு நடிகனை நடிகனாக தொடரச் செய்கிறது என்றார். ஆனால் நீயோ எந்த அங்கீகாரமும் இல்லாமல், நடிப்பதை விட்டுவிட்டதாக நினைத்துக் கொண்ட பின்னும், தொடர்ந்து நடிக்கிறாயே, நீதான் உண்மை நடிகன்” என்றார். பால்சன் விழித்தார். அசோகன் “5 வருடங்களுக்கு முன் விக்-கை தட்டிவிட்டு நிர்வாணப்படுத்தினார்கள் என்றாயே, அப்புறம் என்ன ஆயிற்று. விக்-கை அகற்றிவிட்டு நீ நிர்வாணமாகத்தானே சுற்றி வருகிறாய். இப்போ கூட உன் கேஸ்படி பார்த்தால் நீ நிர்வாணமாகத்தானே வந்திருக்கிறாய்? கொஞ்ச நேரம் முன்னால் காலை இங்கு நடந்ததைப் பார்த்தாய் இல்லையா? ஒரு ஆளை, தன்னுடைய ஆடையை எடுத்துவிட்டு சுற்றித் திரிந்தவனை, மன நிலை சரி இல்லாதவன் என்றுதானே போலீஸார் பிடித்து வண்டியில் எற்றிச் சென்றனர். ஆனால் நீயோ நிர்வாணமாக இருந்துகொண்டு முழு ஆடையுடன்தான் இருக்கிறோம், நல்ல மன நிலையுடன் தான் இருக்கிறோம் என்று சுற்றி வந்து மற்றவர்களையும் நம்பவைக்கிறாயே நீ உண்மையிலேயே சிறந்த நடிகன், அதுவும். . .” என்று சொல்லி நிறுத்திக்கொண்டார். பால்சன் விக்கித்துப்போனார்.

“நான் சொல்வதை மறுத்தால் நீ போட்டது பொய்க் கேஸ். நானாவது பொய் சாட்சி சொல்லும் போலி நடிகன்தான், நீ ஒன்று நிர்வாண நடிகன் இல்லாவிட்டால் பொய்க் கேஸ் போடுபவன்” நிலையைச் சமன் செய்து விட்ட திருப்தி அசோகனிடம் தெரிந்தது. பால்சன் அதைப் பொருட்படுத்தவில்லை. அவர் சொன்னது மட்டுமே அவர் மனதை நிறைத்தது.

சிறிது நேரம் மெளனமாக இருந்தார். தனது தாய், தன்னை நடிகனாகப் பார்க்கவே விரும்பினார் என்பது உண்மையானாலும் இது மாதிரி நிச்சயமாக இல்லை என்று பால்சன் நினைத்தார். நிர்வாண நடிகனாகத் தான் திரிந்தது தாயைப் பற்றி கேசவன் சொன்ன இழிச்சொற்களைவிட கேவலமானதாக பால்சனுக்குப் பட்டது.

பிறகு, “அசோகன், நீ உன் கேஸ் முடிந்தபின், எனக்காக இதே டீக்கடையில் காத்திரு. நான் என் கேஸை முடித்துக் கொண்டு வருகிறேன். சேர்ந்து போவோம்” என்றார். பால்சன் உண்ர்ச்சி வசப்பட்டதாக அசோகனுக்குத் தெரிந்தது. “சரி” என்று சொல்லிவிட்டு, கொஞ்சம் புண்படுத்தி விட்டோமோ என்கிற வருத்தத்துடன் அசோகன் தனது வக்கீலைப் பார்க்கப் போனார்.

பால்சன், இங்கிருந்த ஸ்டாம்ப் வெண்டாரிடம் சென்று, பச்சை நிற பாண்ட் காகிதத்தையும், ஒரு பேனாவையும் வாங்கிக்கொண்டு, டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு, தான் வழக்கை தொடர விரும்பவில்லை என்று பொருள்பட ஒரு கடிதத்தை எழுதினார். கோர்ட் அறைக்கு வந்தபோது, மதிய இடைவேளைக்குபின் பலர் கூடியிருந்தனர். கேசவனும் உட்கார்ந்திருந்தார். பால்சன் கேசவனுக்கு பின்புறம் அமர்ந்தார். பிறகு அவனது தோளைத் தொட்டார்.

“எப்படி இருக்கிறாய் கேசவன்” என்று கேட்டதும் கேசவனுக்கு தூக்கிவாரிப் போட்டது.

“ஸார். எப்பிடி இருக்கீங்க. உங்களை காலையிலேயே பார்த்தேன். ஆனால், நீங்கள்தான் என்று நினைக்கவில்லை. உங்களை எனக்கு அடையாளம் தெரியவில்லை” என்று கூறினான். தனது உண்மையான அடையாளம் இதுதான் என்று எண்ணிக்கொண்டு பால்சன் அமைதியாக உட்கார்ந்திருந்தார். அவரது பெயர் அழைக்கப்பட்டவுடன், நேராக , கூண்டின் அருகில் இருந்த தனது வக்கீலிடம் கடிதத்தைக் கொடுத்தார். பிறகு, நீதியரசரைப் பார்த்து கும்பிட்டுவிட்டு, “நான் வழக்கை வாபஸ் பெறுகிறேன். அதற்கான கடிதத்தைக் கொடுத்திருக்கிறேன்” என்றார். பிறகு, வழக்கு தள்ளுபடி செய்வதற்கான நடைமுறைகள வக்கீல்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று கோர்ட் அறையை விட்டு வெளியே வந்தார்.

முழு சூட்டும்-கோட்டும் அணிந்து கொண்டு, கையுறைகளுடனும், காலுறை அணிந்து ஷூ போட்டுக்கொண்டும், தலையில் தொப்பியுடனும் வெளியே வந்தது போல பால்சனுக்கு இருந்தது.

பின்னால் வந்த கேசவனிடம் “இப்ப எந்த கிளையில் இருக்கிறாய்?” என்று கேட்டார். அவர் “ ஸார், நான் பதவி உயர்வு பெற்று, இளநிலை அதிகாரியாக இருக்கிறேன்,” என்று கூறிவிட்டு, கிளையின் பெயரையும் சொன்னார். “ ஊழியர்களிடம் கண்டிப்பாக இரு. வாழ்த்துகள்” என்று சொல்லிவிட்டு, அசோகனைத்தேடி, டீக்கடைக்குச் சென்றார். அசோகனும் தனது சாட்சியத்தை முடித்துக்கொண்டு அங்கு வந்தார்.

இருவரும் காரில் ஏறிக்கொண்டனர். பால்சன் அசோகனிடம் ”உனக்குத் தெரியும் இல்லையா, நான் மிகவும் மகிழ்ச்சியில் இருந்தால் பார்-க்குப் போவேன் என்று” என்றார். அசோகனும் தனக்கு அதில் பங்குபெறுவதில் மகிழ்ச்சியே என்றார். பால்சன் “ஆனால் 5 வருடம் கழித்து வந்த மகிழ்ச்சியை வீட்டிலேயே கொண்டாடுவோம்,” என்றவர், “உனக்கு டிவி நாடகங்களில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தவரை எனக்கு அறிமுகம் செய்வாயா?” என்றார்.