சிட்டியின் நூற்றாண்டு விழா – அன்பர் வீரராகவனின் முயற்சி

பெ.கோ.சுந்தரராஜன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் சிட்டி நவீனத்தமிழ் இலக்கியத்தின் ஆரம்பகால கட்டங்களை செழுமைப்படுத்தியவர். 1910-ஆம் ஆண்டு பிறந்த இவர், தன்னுடைய இருபதாம் வயதிலிருந்தே சிறுகதை, கவிதை, வரலாற்று நூல்கள், விமர்சனக்கட்டுரைகள் என்று இலக்கியப்பங்களிப்பைத் தந்தார். ‘அரங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். தமிழில் மட்டுமில்லாமல் ஆங்கிலத்திலும் தீவிரமான கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இவர் கு.ப.ராஜகோபாலனுடன் இணைந்து ‘கண்ணன் என் கவி’, தி.ஜானகிராமனுடன் இணைந்து ‘நடந்தாய் வாழி காவேரி’ என்ற பயண நூல், பெ.சு.மணியுடன் இணைந்து எழுதிய ‘அதிசயப் பிறவி வ.ரா வரலாறு’, சோ.சிவபாதசுந்தரத்துடன் இணைந்து ‘தமிழ் நாவல்: நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும்’ ஆகிய நூல்களை எழுதியிருக்கிறார். ‘தாமரை பூத்தது’, ‘அந்தி மந்தாரை’ ஆகிய சிறுகதைத்தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. இவர் 97-ஆம் வயதில் 2006-ஆம் ஆண்டு மறைந்தார்.

இந்த வருடம் சிட்டியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. திரு.நரசய்யா எழுதிய நிகழ்ச்சிக்குறிப்புகளின் கீழே சிட்டி, தன் நெருங்கிய நண்பரான எழுத்தாளர் தி.ஜானகிராமனோடு இணைந்து எழுதிய ‘நடந்தாய் வாழி காவேரி’ என்ற பயணநூலிலிருந்து ஒரு சிறு பகுதியைப் படிக்கலாம்.

சிட்டி சுந்தரராஜனின் நூற்றாண்டு விழா முறையாகக் கொண்டாடப்பட்டிருந்தாலும், தனது சொந்த முயற்சியாக அதைச் செய்யவேண்டுமெனத் துடித்தவர் திருவாளர் வீரராகவன். இதை அவர் ஒரு தனிப்பட்ட முறையில் செய்ய முனைந்து, பலரிடம் சிட்டியைப் பற்றிய கட்டுரைகளை வாங்கி அவற்றைத்தொகுத்து, ஒரு கையெழுத்துப் பிரதியாக வெளியிட்டது, முற்றிலும், இதுவரை எவரும் எவருக்கும் செய்திராத ஒரு தனிப் பெரும் பணி! ஆத்மார்த்தமாக அவர் அதைச் செய்து முடித்திருப்பது மிகவும் போற்றுதலுக்குரியது. அது ஒரு வேள்வி!

சிட்டி காலமான போது வீரராகவன் சில நாட்கள் கழிந்தே சிட்டியின் குடும்பத்தினரைச் சந்தித்தார். அப்போதே அவர் ஏதோ செய்யவேண்டுமென உத்வேகத்துடன் இருந்தார்.  திரு.வீரராகவனுக்கும் சிட்டிக்கும் என்ன சம்பந்தம்?

எழுத்தாளர் சிட்டி. (புகைப்படம் நன்றி: காலச்சுவடு)
எழுத்தாளர் சிட்டி. (புகைப்படம் நன்றி: காலச்சுவடு)

1940-களில் சிட்டி வானொலி ஆசிரியராகத் திருச்சியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, அவர் குடியிருந்த ஸ்டோரின் (யானை கட்டி மைதானத்தின் வேதமாணிக்கம் பிள்ளை ஸ்டோர் – பஞ்சுக்கிடங்கு அருகில்) இருந்த ஐந்தாறு வீடுகளில், சிட்டியின் அடுத்த வீட்டில் வீரராகவன் வசித்துவந்தார். அப்போது திரு.கிருஷ்ணமூர்த்தி (எனது தமையனார் ராஜாமணி என்றறியப்பட்டவர், திரு.சீனிவாசராகவன், திரு.நாராயணஸ்வாமி முதலானோர்,  அவர்களெல்லோரும் இருபது வயதுக்குட்பட்டவர்கள்) சிட்டி அவர்கள் ஆசிகளுடன் ஒரு கையெழுத்துப் பத்திரிகை ஆரம்பித்தனர். விநாயகா என்ற நாமகரணத்துடன் ஆரம்பிக்கப்பட்ட அப்பத்திரிகை மாதமொருமுறை மலரும். திரு.நாராயணஸ்வாமி படம் வரைவார். அன்றைய பிரபல எழுத்தாளர்களெல்லாம் இப்பத்திரிகையில் எழுதியுள்ளனர்.

அப்பத்திரிகை நடத்துவதில் வீரராகவனும் ஒரு தூணாக இருந்தவர்.

ஆகையால் வீரராகவன் சிட்டியை மற்றவர்கள் நினைத்தது போல ஒரு ஆசானாகவே மதித்து வந்தார். பின்னர் காலம் சென்ற வல்லிக்கண்ணனுடன் இவர்களெல்லோரும் சேர்ந்துதான் கையெழுத்துப் பத்திரிகை மாநாட்டைத் திருச்சியில் நடத்தினர்.

ஆகையால், சிட்டி காலமான பின்னர் நடந்த முதல் நினைவுக்கூட்டத்தில் கலந்து கொண்ட வீரராகவன், தனது சொந்த முயற்சியாக, ஒரு கையெழுத்துப் பிரதியாக சிட்டி அன்பர்கள் எழுதிய கட்டுரைகளைத்தொகுத்து வெளியிட வேண்டும் என்ற தனது ஆவலை வெளியிட்டார். அங்கேயே அதைக் குறித்துச் சொல்லிய அவர், அங்கு வந்திருந்த அனவரையும் சிட்டியப் பற்றி எழுதித் தர வேண்டினார். ஒப்புக் கொண்டவர்கள் எவரும் உடனே எதையும் தந்து விடவில்லை. வருடங்கள் ஓடின!

ஆனால், தான் எடுத்துக் கொண்ட முயற்சியை நிலைநாட்ட வீரராகவன் தளைக்காது தனது சொந்த வேலையான, கேடரிங்க் தொழிலின் நடுவில், ஒவ்வொருவர் வீட்டிற்கும் சென்று, அவர்களை வேண்டத் தொடங்கினார். இதை ஒரு வேள்வியாகவே நினைத்து அவர் செயல்பட்ட விதம் சொல்லால் வருணிக்க இயலாதது. சிலர் கட்டுரை கொடுப்பதாகச் சொல்வார்கள். ஆனால் கொஞ்சத்தில் தர மாட்டார்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டால், இன்று போய் நாளை வா கதையாகத்தான் முடியும். ஒன்றும் நடக்காது ஆகையால், தனது இரண்டு கைகளிலும் தனது தொழில் சம்பந்தப்பட்ட பக்ஷ்ணப் பைகளுடன், கட்டுரை தருவதாகச் சொன்னவர் வீடுகளுக்கெல்லாம் சென்று கேட்பார்! சற்றும் தளராமல் அவர் செயல்பட்டது அவரை ஒரு உதாரண புருஷராகவே நினைக்க வைக்கின்றது.

அவர் அவ்வாறு மிகுந்த முயற்சியுடன் தயாரித்த அந்தக் கையெழுத்துப் பிரதி ஞாயிறு மாலை (18 ஜூலை 2010) சுமார் 6 மணியளவில் வெளியிடப்பட்டது. சிறந்த படங்களுடன், அழகான கையெழுத்தில் தயாரிக்கப்பட்டிருந்த அந்த நூல் சாதாரண நூலல்ல! ஒரு தாயார் பெற்றெடுத்த சிசு போன்றது! உள்ள உணர்வுடன், பக்தியுடன் தயாரிக்கப்பட்டது! அதைக் கண்டு எல்லோரும் அதிசயம் அடைந்தனர்.

அங்கு வந்திருந்தவர்கள், எல்லோருமே சிட்டியைக் குறித்தும் வீரராகவனனைக் குறித்தும் சிறப்பாகப் பேசினர். திரு.சீனிவாசராகவன், வீரராகவன் ஆரம்பத்தில், பொருளாதார ரீதியாக மிக்க சிரமப்பட்டிருந்தாலும் மனம் தளராது, பழைய பத்திரிககைளை விற்பனை செய்து கொண்டு, சென்னையில் வாழ்ந்த விதத்தையும் அப்போதும் அவர் மனம் தளராது மனைவியுடன் கடுமையாக உழைத்து முன்னேறியதையும் விவரித்தார்.

சிட்டியின் குடும்பத்தினர் (திருப்பூர் கிருஷ்ணன் சிட்டியின் குமாரர்களைச் சிடிசன்ஸ் என்பார் சிறப்பாக), குமாரர்கள் விசு, வேணுகோபாலன், ஷங்கர் பேசினர். வீரராகவன் சம்பந்தப்பட்ட விவரங்களைக் கூறினர். சிட்டியின் பேரன் கார்த்திக் வரை எல்லோரும் பேசினர். அங்கு வந்திருந்த விஸ்வநாதன் என்பவர் (நாராயண அய்யரின் பேரன்) பேசும்போது வீரராகவனைப் பற்றித் தமக்குத் தெரிந்த சில புதிய விஷயங்களைக் கூறினார். சிட்டியின் மருமகனான, பல வருடங்கள் மத்திய கிழக்கிலேயே வாழ்ந்து வந்த ராமசுப்பு, தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டபோது, சிட்டி தம்மை ஒரு மகனாகவே நடத்தியதாகக் குறிப்பிட்டார்

தீபம் என்.திருமலை என்பவர் நா.பார்த்தசாரதியுடன் பணி புரிந்தவர். ‘நான் பார்க்காத சிட்டி’ என்றதலைப்பில் எழுதியளித்துள்ளார். அவர் பேசுகையில், சிட்டியின் நூல்களைத் தாம் விமரிசத்ததைக் குறித்துக் கூறினார். நா.பா மூலமாகத் தாம் தெரிந்துகொண்ட பல விஷயங்களைச் சொன்னார். ஆனால் ஒரு முறை கூட சிட்டியை சந்தித்தது இல்லை என்றும் சொன்னார்! மதுரை ஹிந்தி பண்டிட் வெங்கலக்ஷ்மி (சிட்டியின் சகோதரியின் புதல்வி) தமது சொந்த அனுபவங்களைக் கூறினார்.

இறுதியாக நான் சிட்டியைப் பற்றிச் சில வார்த்தைகள் கூறினேன். அதில் சிட்டியின் அபாரமான நினைவாற்றலை நினைவு கூர்ந்தேன். விநாயகா பத்திரிகையில் நான் எழுதிய விவரத்தையும் கூறினேன்.

திரு.வீரராகவன் ஏற்புரையின்போது, கண்கலங்கப் பேசக் கூட இயலாது இருந்தது, மற்றவர் கண்களிலும் நீரை வரவழைத்தது! அவர் திருமதி சிட்டியைக் (ஞானகி அம்மாள்) குறித்துப் பேசினார். திரு.கொத்தமங்கலம் விசு (கொத்தமங்கலம் சுப்புவின் புதல்வர்) நிறைவாக திருமலையான் மீது பாட கூட்டம் முடிந்தது.

tblgeneralnews_53894770146நரசய்யா தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்.  கடல்வழிவாணிகம்,  கடலோடி, துறைமுக வெற்றிச் சாதனை ஆகிய நூல்களுடன்,   பல  சிறுகதைகளும், சென்னையின் வரலாறு குறித்து மதராசபட்டினம் என்ற நூலும்,  மதுரை வரலாறு குறித்து ஆலவாய் என்ற நூலும் எழுதியுள்ளார்.  இவர் எழுத்தாளர் சிட்டியின் சகோதரி மகன் ஆவார். எழுத்தாளர் சிட்டியைக் குறித்து ‘சாதாரண மனிதன்’ என்ற நூலையும் எழுதியுள்ளார்.

thiruvaiyaaru

சிட்டியும், எழுத்தாளர் தி.ஜானகிராமனும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் காவிரி நதியின் தோற்றுவாயான குடகுமலையிலிருந்து, பூம்புகாரில் கடலில் கலக்கும் இடம் வரை முழுக்கப் பயணம் செய்து, காவிரி நதியின் செழுமையையும், நதிக்கரையின் கலாசாரச் செழுமையையும் விளக்கும் ‘நடந்தாய் வாழி காவேரி’ என்ற ஒரு அற்புதமான பயண நூலை எழுதியிருக்கிறார்கள். அந்த நூலிலிருந்து திருவையாறு, தியாகராஜர், காவேரி ஆகியவற்றைக் குறித்து உணர்ச்சிபூர்வமாக எழுதப்பட்டதொரு சிறுபகுதி கீழே.

திருவையாறு சப்தஸ்தானம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. காவிரியில் இந்தப்பருவத்தில் நீர் அதிகமாயிராது. அரித்து ஓடும். பல்லக்குகளைப் பின்தொடரும் ஜன வெள்ளம் ஆற்று மணலில் படுத்தும் பாடியும் ஆடியும் இரவைக் கழிக்கும். சங்கீதமேதையான தியாகையரும் இவற்றையெல்லாம் பார்த்திருப்பார். நிலவில் பார்த்திருப்பார். அந்த நிலவு, மக்கள், அவர்கள் பேச்சு, காவிரியைச் சுற்றிய கொள்ளைப் பசுமை, பேச்சு வழக்கு எல்லாம் பக்தியோடு பக்தியாக அவருடைய பாடல்களில் இழைந்திருக்கின்றன.

ta023626திருவையாறே வந்துவிட்டது. ஊருக்குள் புகும்பொழுதே இடது புறமாகத் திரும்பி சிறிது நடந்தால் தியாகையரின் சமாதி. காவிரி ஓரமாக, மந்தமாகச் செல்லும் நீரின் சலசலப்பையும் ஆற்று வெளியின் அமைதியையும் புள்ளரவங்களையும் கேட்டுக் கொண்டு தியாகையரின் ஆத்மா மெளனமாக நாதக் கடலில் ஆழ்ந்து கிடக்கிறது. தென்னிந்திய இசையின் சிகரம் என்பதைத் தவிர வேறு ஒன்றும் தியாகையரைப் பற்றிச் சொல்லத் தோன்றவில்லை. விஞ்ஞானத்தில் ஒரு கண்டுபிடிப்பால் வாழ்வையே மாற்றும் முன்னேற்றம் ஏற்படுவது போல, தென்னிந்திய இசையும், தியாகையரின் கையைப் பற்றிக் கொண்டு ஒரு தாவு தாவிற்று. சங்கீதத்தில் உருக்கத்தையும், தவத்தையும் சங்கதி முறையில் இணைத்தார் அவர். அதை விட, யாருக்கும் இன்ன வடிவம் என்று தெரியாமல் வெறும் ஸ்வர இலக்கணத்தோடு ஏட்டில் கிடந்த அபூர்வ ராகங்களை எடுத்து, தன் கற்பனையாலும், தியானத்தாலும், கலைநுட்பத்தாலும் அவற்றுக்கு ஒரு வடிவம் கொடுத்து கீர்த்தனைகளில் உருவம் தந்து நிலைப்படுத்தி விட்டார். ஹிந்தோள வஸந்தம், ரஞ்சனி, ஜயந்தஸ்ரீ, ஜயந்தசேனா, பின்னஷட்ஜம், தேனுக, ஷட்வித மார்க்கினி, காபி நாராயணி, கல்யாண வஸந்தம், வஸந்த பைரவி, மஞ்சரி, உதயரவிசந்திரிகா இன்னும் எத்தனையோ – ஆபூர்வ ராகங்கள் அவருடைய கீர்த்தனைகளில் வடிவம் பெற்றன. வடிவம் என்றால் யாரும் பாடக்கூடிய எளிமையும், இனிமையும் கலந்த வடிவம். சொல்லும் பொருளுக்கேற்ற வடிவம். தென்னிந்திய இசையில் இன்னும் பலர் அரிய பெரிய படைப்புகள் செய்திருக்கிறார்கள். ஆனால் அவை கடின உழைப்பாலும் நுண்ணிய அறிவாலுமே கைவசமாகக் கூடிய படைப்புகள். ஆனால் தியாகையரின் கீர்த்தனைகள் உச்சி முதல் உள்ளங்கால் வரை அணு அணுவாக வெறும் கலைஞனாகவே வாழ்ந்த ஒரு மனிதரின் படைப்புகள். தானாகப் பொங்கி வந்த படைப்புகள். நாமும் பாடிவிடலாம் என்று யாருக்கும் பிரம்மையையும் நம்பிக்கையையும் அதனால் ஒரு உவகையையும் தரக்கூடிய படைப்புகள். இந்தக் காரணங்களால் தென்னிந்திய இசை சம்பந்தப்பட்டவரை மற்ற எல்லாக் கீர்த்தனை கர்த்தாக்களைக் காட்டிலும் ஓங்கி தனித்த உயர்வுடன் நிற்கிறார் தியாகையர். பல நூற்றாண்டுகளுக்கிடையே ஏற்படும் நிகழ்ச்சி அவர்.

அவருடைய கீர்த்தனைகள் வெறும் தெய்வ முகமன்களல்ல. அவ்வப்போது தோன்றும் உணர்ச்சிகளின் கலை வடிவங்கள். தம்மைச் சுற்றிலுமுள்ள மக்களின் வாழ்வு, பேச்சு, செயல், போக்கு – எல்லாவற்றையும் பார்த்து, பாடல்களில் குறிக்கிறார்.

காவிரியின் கரையில் உட்கார்ந்து அதன் அமைதியையும் அடக்கத்தையும், வீர்யத்தையும் பல பல காலம் பார்த்துப் பார்த்து அவருடைய மனம் லயித்திருக்க வேண்டும்.

டெல்டாக் காவிரியையும், அதன் கிளைகளையும் போல தியாகையரின் பாடல்கள் வீடு வீடாகப் புகுந்திருக்கின்றன. லட்சக்கணக்கான மக்களுக்கு ரசானுபவம். நூற்றுக் கணக்கான சங்கீத வித்வான்களுக்குப் பிழைப்பு. தியாகையரின் தூய்மை, பக்தி, நியாயமான கோபங்கள், அலுப்பு, ஏக்கம், ஏராளமான அளவுக்குக் கீர்த்தனைகள் இயற்றியது, அவருடைய சுதந்திரப்போக்கு, வேண்டுமென்றே வரித்த எளிமை, ஏழ்மை – ஒவ்வொன்றையும் சிந்திக்கும்பொழுது மிக மிக அசாதரண புருஷர் அவர் என்று தோன்றுகிறது. சாதாரணமாக வாழ மிகவும் பாடுபட்டிருக்கிறார் என்றும் தோன்றுகிறது. ஆனால் அவர் புகழ் அவர் காலத்திலேயே பரவிற்று. அதற்கும் தெய்வத்தையே அவர் காரணம் சொல்கிறார். “தூர தூர தேசங்களில் எல்லாம் என் இசையைப் பரப்பினாயே – நீ பரம ரசிக சிகாமணியாக இருக்க வேண்டும், நான் எப்படி இந்தக் கடனைத் தீர்ப்பேன்?” என்று ஒரு பாடலில் உருகுகிறார். இறைவனுக்கே ரசிகன் என்று நற்சாட்சி அளிக்கிற தன்னம்பிக்கையும், நட்புரிமையும் வேறு எந்தக் கலைஞரிடம் கண்டிருக்கிறோம்?

சாப்பிட்டு வந்து மீண்டும் படித்துறையில் கடைசிப்படியில் உட்காருகிறோம். காவேரி நீர் கணுக்கால்வரை நனைக்கிறது. எதிரே இரவு. நட்சத்திரங்கள். ரகசியம் பேசும் நீர் சலசலப்பு, சுழிப்பு. அக்கரையிலிருந்து வரும் ஓசைகள். நட்சத்திரங்கள், பஞ்சு மேகங்கள் எல்லாம் காவிரியின் அழகைக்காணக் கூடியிருப்பது போலிருக்கிறது.  “க்ளக், க்ளக்” என்று நடு நடுவே நீரின் ஓசை. காவிரி எதை நினைத்துச் சிரித்துக் கொண்டே போகிறாள்? யார் செவியில் எந்த ரகசியத்தைச் சொல்லப் போகிறாள்?

இந்த இடத்தைவிட்டு கோடிப்பணம் கொடுத்தாலும் தியாகையர் நகர்ந்திருக்க மாட்டார். அவர் நகரவில்லை. அரச தர்பார், அரசவைத் தலைமை, அந்தக்கால அக்காடமிகள், பட்டங்கள், பணங்கள் – எதையும் நாடவில்லை அவர். வலிய வந்து இழுத்தவைகளையும் பின் தொடர்ந்து போகவில்லை. காவிரி தன் அருகிலேயே அவரை வைத்திருந்தாள்.

(1971-ஆம் ஆண்டு Bookventure என்ற நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. பல வருடங்களாக பதிப்பில்லாமல் இருந்து டிசம்பர் 2007-இல் காலச்சுவடால் மறுபதிப்பு செய்யப்பட்டது.

288 பக்கங்கள், விலை. ரூ.225. புத்தகத்தைப் பெற: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி சாலை, நாகர்கோயில் 629001, 04652-278525 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

புத்தகத்தை இணையத்தில் இங்கே வாங்கலாம்.)

One Reply to “சிட்டியின் நூற்றாண்டு விழா – அன்பர் வீரராகவனின் முயற்சி”

Comments are closed.