kamagra paypal


முகப்பு » அனுபவம், தத்துவம்

விடுதலையுணர்வு

முழுமையான ஆரோக்கியத்துடன் இருப்பதாக உணர்ந்தாலும், என் உடல் நலம் மீதான அக்கறை மீண்டும் ஒரு முறை எனக்கு வந்தது. கடந்த சில வாரங்களில், எதிர் கொள்ள நேரிட்டத் தொடர் உடல் நலம் சார்ந்த விசாரிப்புகள் அதை எனக்கு அளித்தன. அந்த விசாரிப்புகள் எரிச்சலைத் தூண்டினாலும், ஒரு எச்சரிக்கையாகக் கொண்டு ஒரு எளிய மருத்துவ சோதனையைச் செய்து கொண்டேன். எல்லா உடல் நல அளவீடுகளும் அனுமதிக்கப்பட்ட அளவுகளுக்குள்ளாகவே இருந்தது. நானே ஆச்சரியப்படும் அளவுக்கு, உடல் கொழுப்பின் அளவும் அனுமதிக்கப்பட்ட அளவுக்குள்ளாகவே இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை தொழில் நிமித்தம் ஒவ்வொரு வருடமும் அடிப்படை மருத்துவ சோதனைகள் செய்து வந்திருந்தேன். இவ்வாறுச் செய்துகொண்ட சுமார் பத்து மருத்துவப் பரிசோதனைகளிலும் உடல் கொழுப்பின் அளவு, உணவுக் கட்டுப்பாடுகளையும் உடற்பயிற்சிகளையும் பொருட்படுத்தாமல், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாகவே இருந்து வந்துள்ளது. இப்போது உடல் ஆரோக்கியம் மிக நன்றாகவே இருக்கிறது. எனில், உடல் தோற்றம் என்னைப் பார்ப்பவர்களிடம் ஏன் அவ்வாறு கேட்கத்  தூண்டுகிறது?

என் தோற்றம் குறித்துப் பெரும்பாலும் நான் கவலைப்படுவதில்லை. அலங்கரித்துக்கொள்வதும் இல்லை. நடை உடை பாவனைகள் நெறிமுறைகளை (Protocol) பின்பற்றியாக வேண்டிய இடங்களையும் மனநிலைகளையும் கடந்து வந்துவிட்டேன். எனவே பெரும்பாலும் ஒரேஜீன்ஸ்மற்றும் ஒன்றிரண்டுடிஷர்ட்டுகள் மட்டும்தான் என் உடையலங்காரம். முகத்தில் கறுப்பு வெள்ளையாக வளர்ந்துள்ள, இரண்டு வாரம்வரை வயதாகும் குறுமயிர்தான் முக அலங்காரம்! மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ஒட்ட வெட்டப்படும் தலைமயிர், முதலில் முள் போலவும், பின் கறுப்பு வெள்ளை நிறங்களில் சுதந்திரமாக வளர்ந்து அலைந்து கிடப்பதும் தலையலங்காரம். அத்துடன் செழிப்பை வெளிக்காட்டாத உடல் அளவுகள். இந்தத் தோற்றம் நோயில் இருந்து தற்போதுதான் மீண்டதான மனமயக்கத்தை அளிக்கும்தான். ஆனால், அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்களே. அது பொய்யா? கண்களில் உயிரின் துள்ளல் தெரியவில்லையா? என் அகம் அழுக்குகளின் தொகுதியா? மனம் நோயுடன் உள்ளதா? ஊக்கத்துடன் மனம் உள்ளது என உணருவது, உண்மையில் கற்பனைதானா? உடல் என்னால் அறிந்து கொள்ள முடியாத நோயில் கிடக்கிறதா? என் முகத்தைப்பார்க்கும் பார்வைகளின் கோளாறா? இல்லை புற அலங்காரங்களால் தூண்டப்பட்ட வெறும் சம்பிரதாயக் கேள்வியா?

உயிர் தங்கும் உடல், எண்ணிலடங்காத தனிப்பட்ட இயக்கங்களின் ஒத்திசைவு. அந்த இயக்கங்கள் தடைப்பட்டால் அல்லது கட்டுப்பாடின்றி அதீத இயக்கத்தை அடைந்தால் அது நோய். மன இயக்கங்கள் தடை அல்லது அதீத நிலையை அடைந்தால் அது மன நோய். மனம் உடலின் பகுதி. எனவே உடலின் நோய் மனதிலும், மனதின் நோய் உடலிலும் மாறிமாறி வெளிப்படலாம்.  நோயை உணர்வுகளின் மூலம் அறியலாம். அதாவது உடலில் அல்லது மனதில் உள்ள நோயை ஆரம்ப நிலையிலேயே அறியமுடியுமா அல்லது நோய் முற்றிக் கனிந்த பின்தான் அறியமுடியுமா என்பது நம் உணரும் திறனுக்கான (Sensitivity) சவால். உணரும் திறன் மனக்குவியத்தைப் பொறுத்தது. உடலை அல்லது மனதை எத்தனை தீவிரத்துடன், எத்தனை ஆழத்துடன் நோக்க முடியும் என்னும் சவால். எந்த ஒன்றையும், அது பொருளாகவோ அல்லது கருத்தாகவோ இருந்தாலும், அதை ஊன்றிக் கவனிக்கும் செயலில்தான் உணரும் திறன் உள்ளது.

அனைவராலும் மிகவும் கொண்டாடப்படும் அறிவியலுக்கு அளவீடுகள்தான் (Measurement) அடிப்படை. உணர்வுகளை எண்ணிக்கையாகவும் அதனுடன் சேர்ந்த அலகாகவும் தெரிவிக்கும் ஒரு உத்தியே அளவீடு. அறிவியல், பெரும்பாலும் ஒரு புறநிகழ்வை கருதுகோள்கள் மூலம் சூத்திரங்களாக (Theorem) மாற்றி, கருவிகள் மூலம் அதை அளவிட்டு அந்த சூத்திரத்தை நிறுவுவது ஆகும். புலன்களால் உணர முடியாத புறநிகழ்வை, புலன்களால் அறியப்படுபவையாக மாற்றும் உபகரணங்கள்தான் அறிவியலின் கருவிகள். உதாரணமாக, கம்பியில் பாயும் மின்சாரம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக இருந்தால், அதைத் தொடுவதன் மூலம் உடல் பெறும் அதிர்வைக் கொண்டு அங்கு மின்சாரம் இருப்பதாக அறியலாம்.  ஆனால் உடல் அதிர்வை பெறும் அளவுக்குக் குறைவாகவோ அல்லது உடலை அழிக்கும் அளவுக்கு அதிக அதிர்வை அளிக்கும் மின்சாரத்தையோ அறிவதற்கு மின் அளவீட்டுக் கருவிகள் தேவைப்படுகின்றன. அவை ஓடும் மின்சாரத்தை எண்களாக மாற்றி நமக்குத் தெரிவிக்கின்றன. அந்த எண்களை எவ்வாறு மின் அளவீடாகக் கொள்ளவேண்டும் என்பதை அறிவியல் சூத்திரங்கள் விளக்குகின்றன.

கருவிகளின்உணர்திறன்தான் அவற்றை அறிவியலின் தவிர்க்க முடியாத அங்கமாக மாற்றுகிறது. அளவிடும் கருவிகள் இல்லாத நாட்களில் அக உணர்வுகளே அறிவியலாக கொள்ளப்பட்டன. எனவே அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் அந்தக் காலகட்டத்தில் வேறுபாடு இருந்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது. இன்றும் இல்லைதான். ஆனாலும் அவற்றுக்கிடையே விரோதத்தை வளர்த்து விட்டிருக்கிறோம்! அளவிடப்படும் நிகழ்வில் ஏற்படும் எந்த குறைந்தபட்ச மாற்றத்தை ஒரு கருவியால் உணரமுடியுமோ, அது கருவியின் உணர்திறன் (Sensitivity) ஆகும். ஒவ்வொரு மனிதர்களும் வெவ்வேறு உணர்திறனுடன் இருப்பது போல, கருவிகளும் அவற்றின் உணர்திறனில் மாறுபடும். அளவிடும் கருவிகளை, புலன்களால் உணரமுடியாத புற நிகழ்வுகளை உணர்ந்து நம் அகம் அறிய வைப்பவை என்பதால் அவற்றை உடலுக்கு வெளியே உள்ள புலன்கள் எனக் கூறலாமா?

அறிவுக்கு இன்றியமையாத தேவை உணரும் திறன். நம் உணரும் திறன் போதாமையை அடையும் இடங்களில் புற உலகக் கருவிகள் தேவையாகின்றன. இவை புற உணர்வுகளுக்கு மட்டுமே. அக உணர்வுகளை அடைய, திறனின் போதாமையுடன் இருந்தாலும், அதற்கான பொதீகக் கருவிகள் எதுவும் இல்லை. நம் மனதையும் ஆர்வத்தையும், தீவிரத்தையுமே கருவிகளாகக் கொண்டு, அந்தப் போதாமைகளை நிவர்த்தி செய்ய வேண்டியிருக்கிறது. எனினும் புற உலகக் கருவிகள் அவற்றின் தேவையைக்கடந்து மனித வாழ்க்கையில் ஊடுருவும்போது, மனிதனின் இயற்கையான புலன்கள் அவற்றின் உணரும் திறனை இழந்து விடுகின்றன.  இன்று மனிதர்கள், நம் உணரும் திறனை மெல்ல மெல்ல இழந்து வருகிறோம்! கருவிகள் நம்மை அடிமைப்படுத்தி வருகின்றன! இழக்கிறோம் என்பதைத் தெரியாமலே, கருவிகளிடம் சுதந்திரத்தை இழந்து வருகிறோம்.

ஒரு கருவி அளவிடும் அளவீட்டின் மாற்றத்திற்கு, கருவியின் அந்த அளவீட்டை உணரும் இயல்பு எவ்வாறு மாறுகிறது அல்லது தூண்டப்படுகிறது என்பதைப் பொறுத்து அதன் உணர்திறன் அமையும். கருவியின் இயல்பில் ஏற்படும் மாற்றமே அளவிடப்படும்  அளவீடு. மனிதர்களின் உணர்திறன் என்பது, குறுப்பிட்ட ஒரு உணர்விற்கு மூளை அல்லது மூளையின் நியூரான்கள் எவ்வாறு தூண்டப்படுகிறது என்பதைப் பொறுத்தது.

self-confidence

கருவியின் அளவிடும் திறன், காலத்திற்கேற்ப மாறுபடாதது. குறைந்த பட்சம், அவற்றின் உபயோக காலத்தில் மாறுபடாதது. அதன் அளவிடும் திறன் மாறுபடத் தொடங்கினால், கருவி என்னும் தகுதியை இழந்து விடும். ஆனால் மனித மூளையின் திறன், மிகக் குறுகிய காலத்தில்  கூட மாறும். மனித மூளை அதன் செயல்பாட்டளவில்(Functionality) கோடானுகோடி நியூரான்கள் ஒன்றின் மேல் ஒன்று அமர்ந்திருக்கும், ஒன்றை ஒன்று தூண்டும் அமைப்பை உடையது. அதன் உணர்திறனை இழப்பது, நியூரான்கள் செயல்படாமல் ஒரு குறிப்பிட்ட நிலையில் உறையும்போது என்று தோன்றுகிறது. உதாரணமாக மனித நம்பிக்கைகள். நாம் அடையும் ஒரு நம்பிக்கை, ஒரு நியூரான் கூட்டத்தை, குறிப்பிட்ட ஒரு நிலையில் உறைந்து இருக்கச் செய்கிறதாக இருக்கலாம். அந்த நம்பிக்கைகள் அல்லது அந்த நம்பிக்கைகளுக்கான நியூரான் கூட்டம் அல்லது மூளையின் பகுதி, மனதின் எந்தத்திசையிலிருந்து தூண்டப்பட்டாலும் ஒரே விதமான எண்ணங்களை அல்லது முடிவுகளையே வெளியிட முடியும். அவை அந்த நம்பிக்கையை நம் எண்ணங்களாக, முடிவுகளாக வெளிப்படுத்துகிறதாக இருக்கலாம். அங்கு நுண்ணிய உணர்திறனுக்கு இடம் இல்லை. உறைதல் என்பது, மனதின் ஒருபகுதி நிகழ்காலத்தின் அறியப்படாத நிகழ்வுகளை அவை நிகழும்போது உள்ளவாறே அறியாமல், கடந்தகால அறிவான நம்பிக்கை போன்றவற்றின் மேல் ஏற்றி, அதற்கேற்ப நிகழ்வுகளை திரித்து அறிந்து கொள்வது என்னும் பொருளில் கூறப்பட்டுள்ளது. அதாவது மனம் நிகழ்காலத்தை உள்ளவாறே அறிய முடியாமல், கடந்த கால அறிதல்களாகிய மனதின் உறைநிலைகளுக்கேற்ப மாற்றி அறிந்து கொள்வது.

நம்பிக்கைகளும் முன்முடிவுகளும் மரபணுக்கள் மூலமாகவும் மூளைக்குள் ஏற்றப்பட்டிருக்கலாம். சுற்றுச்சூழலும் வளரும் பண்பாட்டுப் புலமும் அளிக்கப்படும் கல்வியும் நம் மூளையின் எல்லா பக்கங்களிலும் இத்தகைய உறைதல்களை ஏற்படுத்தியிருக்கலாம். பிரக்ஞையின்றி மனதுக்குள் நுழையும் அன்றாட நிகழ்வுகளும் மூளையின் நியூரான்கள் தொகுதியை உறையவைத்துக்கொண்டே இருந்திருக்கலாம். ஜே.,கிருஷ்ணமூர்த்தி அவர்கள்அறிந்ததிலிருந்து விடுதலைஎன்று கூறியபோது, இந்த உறைதல்களை மீண்டும் உருக வைப்பதையே கூறியிருக்க வேண்டும்!

உடலிலும் மனதிலும் உருவாகும் நோயை அறிய நமக்கு அதீத உணர்திறன் தேவை. அத்தகைய உணர்திறன் இல்லாத பட்சத்தில், நோய் முற்றிக் கனிந்து உடலிலும் மனதிலும் வெளிப்பட்டப் பின்னர்தான் அறிய முடியும். அதையும் அறியும் திறன் இல்லையெனில், உடல் உயிரைத் தாங்கும் தகுதியை இழந்து விடும். அறியாமலே, கிடைத்த இந்த அரிய வாழ்க்கையை தொலைத்துச் சென்றுவிடுவோம். அவ்வாறு செல்வதற்கு விதியோ வேறு ஒன்றுமோ காரணம் இல்லை. நாமே தான் காரணமாக இருப்போம். உணர்திறனை இழக்க அனுமதித்ததன் மூலம்!

மனிதன் அவன் உணர்திறனை இழக்க முக்கியமான காரணங்களில் ஒன்று அவனிடம் சேரும் பணம்! உண்மையில் பணம் உணர்திறனை அழிப்பதில்லை. பணம் நிலையில்லாதது. பணத்தின் இயல்பே ஓடிக்கொண்டிருப்பதுதான். ஓட்டத்தை நிறுத்தி விட்டால், பணம் என்னும் மதிப்பை இழந்து விடுகிறது. காரல் மார்க்ஸ் அவர்கள், பணத்தின் இந்த இயல்பை மூலதனம் நூலில் மிக அழகாக விவரித்திருப்பார். ஆக ஓடி வந்து சேரும் பணத்தை எந்த திசையில் திருப்பி ஓட விடவேண்டும் என்பதை அறியாதபட்சத்தில், நம் உணர்திறனை அழிக்கும் திசைக்கு அது செல்வது மிக இயல்பாக நிகழ்ந்து விடும்.

வாழ்வின் ஒருகட்டத்தில் இந்த உண்மை (என நான் கருதுவது) எனக்கு உறைத்ததுஇது என் மூளையின் ஒரு நியூரான் கூட்டம் உறைநிலைக்கு சென்றதனாலும் இருக்கலாம், அல்லது உருகியதனாலும் இருக்கலாம்! எனக்கு தொழில்நுட்பப் படிப்பு படிக்கவும் அதன் பின், தேவைக்குப் பணம் சம்பாதிக்கும் தொழிலில் (கூலித் தொழில்தான்) ஈடுபடவும் வாய்ப்புகள் அமைந்தன. இதன் காரணமாக, ஒப்பு நோக்கையில், மிக வேகமாகவே என் மொத்த வாழ்க்கைக்கும் தேவையான பொருளாதார ஆதாரங்களை நெருங்கி விட்டதாகத் தோன்றியது. கிட்டத்தட்ட 15 வருட தொழில் வாழ்க்கையிலேயே இந்த எண்ணத்தை அடைந்து விட்டேன்.

அரசாங்க நிர்வாக வேலைகளைத் தவிர, எல்லாத் தொழில்களும், நுகர்வாளர்களுக்கு தேவையானதை அளிப்பற்காகவே செய்யப்படுகின்றன. இன்றைய சந்தைப் பொருளாதார இயக்கத்தில், அரசாங்க நிர்வாக வேலைகளில் பெரும்பாலானவையும் நுகர்வுப் பெருட்களை நோக்கியே மாறிக்கொண்டிருக்கின்றன. எனவே தொடர்ந்து தொழிலில் ஈடுபட்டிருப்பது, மறைமுகமாக நுகர்வைத் தூண்டும் செயலே. இந்தப் பின்னணியில், நாட்டின் (அல்லது சார்ந்திருக்கும் சமூகத்தின்) பொருளாதார சுபிட்சத்திற்காக, சுய தேவையை அடைந்த பின்னும், வேலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. இன்றைய சந்தைப்பொருளாதாரத்தில் உண்மையில் யாரும் சமூகத்தில் தேவைப்படுபவர்களுக்காக உழைக்கவில்லை. பெருமுதலாளிகளுக்காக மட்டுமே உழைக்கிறோம். அந்த முதலாளிகள் அளிக்கும் ஒரு சிறிய வரித்தொகை, சமூகத்தின் நலிந்தவர்களுக்காக, அரசாங்க நிர்வாகங்களின் எல்லாச் சுரண்டல்களையும் கடந்து, இன்னும் சிறியதாகிச் செல்கிறது. என் உழைப்பையும் பூமியின் இயற்கை ஆதாரங்களையும் சுரண்டும், என் கண் முன் இல்லாத முதலாளிகளுக்காக உழைப்பதை விட்டு விட்டு, என் சுபிட்சத்திற்காக எவரையும் சுரண்டாமல் ஏன் உழைக்கக் கூடாது என்னும் கேள்வியும் என்னுள் எழுந்தது. இதுவும் இன்றைய நிலைக்கு என்னை திசை திருப்ப உதவியது.

மூன்று வருடங்களுக்கு முன், சாதாரணமாக வேலை ஒன்றும் செய்யத் தேவை இல்லாத, ஆனால் நல்ல வருமானத்தை அளித்த நிரந்தரத் தொழிலை விட்டு விட்டு, வாய்ப்பு கிடைத்தால் Freelancer – ஆக கொஞ்ச நாட்கள் வேலை செய்யலாம் என முடிவெடுத்தேன். தங்கள் நட்பு வட்டத்திற்குள் என்னை சேர்த்துக்கொள்ள பெருந்தன்மையுடன் அனுமதித்ததன்  காரணமாக, என் இயல்பை சற்று அறிந்த சிலரின் மூலம் அந்த வாய்ப்பும் கிடைத்தது. மூன்றாண்டுகள் அவ்வாறு ஓடியும் முடிந்து விட்டது. இந்த காலகட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தொழில் செய்வதை குறைத்துக்கொள்ளவும் தொடங்கினேன். (அல்லது அதுவாகவே குறைந்தது). தற்போது கிட்டத்தட்ட முழுவதும் நின்று விட்டது. ஒருவேளை மீண்டும் வாய்ப்புகள் வந்தால், இன்னும் குறைவாகவே, கொஞ்சநாட்கள் கூட அவற்றை நான் ஏற்றுக்கொள்ளவும் செய்யலாம்!

இந்த முடிவை எடுப்பதற்கு முன், சில பொருளாதார முடிவுகளை எடுக்க வேண்டி இருந்தது. அடிப்படையில் நான் கொஞ்சம் கஞ்சத்தனம் உடையவன். (உண்மையில் அது கஞ்சத்தனம் இல்லை என்றாலும், இன்றைய வாழ்க்கை முறையில் அவ்வாறே கருதப்படும்) எனவே இந்த முடிவுகளை எடுப்பது அத்தனை கடினமாக இல்லை.

முதலாவதாக, சேர்க்க வேண்டிய செல்வம் என் மற்றும் என் சகதர்மிணியின் வாழ்வின் இறுதிவரைக்கும் தேவையானதும், வாரிசுகள் அவர்கள் வாழ்க்கைக்கு பொறுப்பேற்றுக் கொள்வதுவரையுமான தேவைகளுக்கானதும் மட்டுமே. அதற்கு மேல் எதுவும் சேர்த்து வைக்க வேண்டும் என்றோ, தலைமுறைகளுக்கு சேர்த்து வைக்க வேண்டும் என்றோ சற்றும் ஆர்வம் இல்லை. இரண்டாவதாக வாரிசுகளின் கல்விச் செலவு. அவர்களுக்கு ஆர்வமுடைய கல்வியில், திறமையிருக்கும் அளவிற்கு அவர்களுக்கு கல்வி அளிக்க வேண்டிய சேமிப்பு. திறமை இருந்தால், இந்தியாவில் மேற்கல்வி ஒன்றும் அத்தனை செலவைக் கேட்பதில்லை. நம் ஆசைக்கு அவர்களை படிக்க வைக்க விரும்பினால்தான் கல்விக்கு இந்தியாவில் அதிகச் செலவாகும் (தற்போதைய நிலவரப்படி. சந்தைப்பொருளாதாரத்தின் ஓட்டத்தில் இது மாறலாம்). அவர்கள் ஏதேனும் கல்வியில் ஆர்வமுடன் இருந்தால் அதற்கான தகுதியை அவர்களே அடைந்து விடுவார்கள். அவர்கள் வாழ்க்கை அவர்களுடையது. அவர்கள் இங்கு அவதரிக்க நானும் காரணமாக இருந்ததுடன், அவர்களே அவர்களுக்கான பொறுப்பேற்பதுவரைக்கும் போஷிப்பது மட்டுமே என்னால் செய்ய முடிந்தவை. இவற்றை என் எல்லைக்குட்பட்டு முழுமையாக செய்ய முடிந்தால், அதன் பின் அவர்களைப்பற்றி, அவர்கள் எவ்வாறு வாழ்ந்தாலும், கவலைப்படுவதற்கான தேவையும் இல்லை. கவலைப்படுவதால் ஆகக்கூடியதும் இல்லை.

இந்த முடிவுகள் எனக்கு அளவிட முடியாத பொருளாதார சுதந்திரத்தை அளித்தன. இன்றைய சந்தைப்பொருளாதாரம், எனக்குத் தேவையான செல்வத்தை அளித்தது. நான் அதிர்ஷ்டம் கொண்டவனாக இருந்திருக்கக் கூடும். சமூகத்தில் பெரும்பான்மையினர் வாழ்க்கைத் தேவைகளுக்காக மரணிக்கும்வரைக்கும் உழைத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், தேவைகளின், எனவே உழைப்பின் எடையால் வாழ்க்கையை அதன் உண்மையான அர்த்தத்தில் வாழ முடியாத நிலையில் இருக்கிறார்கள். உழைப்புக்கான பொருளாதாரத் தேவை என்னை விட்டு அகன்ற பின்னும், அதிலிருந்து வெளிவர முடியாமல் அங்கே உழன்று வாழ்க்கையை வீணடிப்பது எனக்கு ஏற்புடையதாக இல்லை.

கிட்டத்தட்ட அங்கிருந்து வெளியே வந்து விட்டேன். இன்னும் சில அடிகள்தான். முழுவதும் வந்து விடுவேன். மனித உடல் உழைப்புக்காகவே அதன் வடிவத்தை, இயல்பை, பரிணாம வளர்ச்சியின் மூலம் அடைந்திருக்கிறது. எனவே பொருளாதாரத் தேவை இல்லாவிட்டாலும் உடலுக்கு உழைப்பு மிக அவசியம். ஆனால் எப்போது எவ்வாறு உழைக்க வேண்டும் என்பது முழுக்க முழுக்க என் கையில் வந்துவிட்டது! உடல், உழைப்பை வேண்டும்போது அதை உடலுக்கு அளிக்க எனக்கு காணி நிலமும்(?!) உள்ளது. அங்கு வியர்வை சிந்த உடல் கேட்கும் உழைப்பை அளிப்பதிலும் மனத்தடைகள் இல்லை. அந்த உழைப்பால் எந்த பொருளாதார குறிக்கோள்களும் இல்லை என்றாலும். கர்ம யோகி! உடல் ஓய்வைக் கேட்டால், எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல், தேவையான ஓய்வை அளிக்க முடிகிறது. பொழுது போக்கு என்னும் கருதுகோளுக்கே இடம் இல்லை. உடலும் மனமும் கேட்பவற்றை அளிக்க முடியாமல் அவற்றை திசைதிருப்பி விடுவதால்தானே அவை சோம்பல் (Boredom) என்னும் எதிர்வினையை அளிக்கிறது. எனவே பொழுதுபோக்கையும் கேட்கிறது. எனக்குத்தேவையானது, தேவையான போது நிகழ்கிறது, நிகழ்த்த முடிகிறதுஒரு எல்லைக்குள்! வாழ்க்கையில் இதைவிட என்ன வேண்டும்?

இத்தனை சுதந்திரமாக இருந்தாலும், என் முகத்தில் நோயிலிருந்து மீண்ட களைப்பு தெரிகிறதா? அகத்தின் துள்ளல் முகத்தில் தெரியவில்லையா? மனதுக்கும் உடலுக்கும் இடையில் உணரமுடியாத திரை உள்ளதா? அவ்வாறு இருக்கும் எனில், என் உணர்திறன் இன்னும் தேவையான குறைந்தபட்ச அளவைக்கூட   எட்டவில்லையோ? நான் உழைத்தாக வேண்டும். உணர்திறனை கூர்மைப்படுத்த வேண்டும். அல்லது அந்தக் கேள்வியை கேட்பவர்களுக்கு, முகத்தில் தெரியும் அக அழகைக் காண முடியவில்லையா? அவர்களை குறைகூற எனக்குத் தகுதியில்லை. தேவையும் இல்லை.

எனக்குத் தேவையான உழைப்பை அளித்தாக வேண்டும். அந்த உழைப்பு, இன்று என் முகம் நோக்கி கரிசனத்துடன் உடல் நலத்தை விசாரிப்பவர்கள், நாளை என் முகத்துக்குப் பின்னால்கிறுக்கன்என்று விளிக்கவும் வைக்கலாம். அதைக் கேள்விப்பட நேர்ந்தால், அகம் நிறைந்த புன்னகையுடன் எதிர்கொள்ளும் மன நிலையை அடைந்தாக வேண்டும். அதற்கு இன்னும் உழைத்தாக வேண்டும். முதலாளிகளுக்காக உழைக்காமல் இருந்தாலும், எனக்கே அளித்தாக வேண்டிய பெரும் உழைப்பு காத்திருக்கிறது! வாழ்க்கையும்!

One Comment »

 • Chandrasekar said:

  Akialn
  Agian a nice one from you, many things I think and desire , you are doing it now. Proud of you.

  Regards
  TC

  # 30 June 2015 at 9:16 pm

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.