Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

றெக்கை– அத்தியாயம் 5

This entry is part 5 of 18 in the series றெக்கை

ஜாஜா பெரிய குழப்பத்தில் இருந்தான். 

அவன் தீனி மேசையில் இருந்தான், உண்ண வேண்டுமா அல்லது வெறும் வயிற்றோடு இன்று ஆலையில் வேலைக்குப் போய் கரும்பு பிழிந்துவிட்டு அப்படியே காலி வயிற்றோடு ராத்திரி உறங்கப் போகலாமா? 

இன்று இரவு பூர்ண சந்திர உதயம். யொரூபா தெய்வத்துக்கு ரொம்ப அனக்கமான நாள். யொரூபா தெய்வத்தின் கருணையால் சகல சௌபாக்கியமும் பெற்று நீடூழி வாழ வெறும் வயிற்றோடு  இந்த தினத்தைக் கடந்து நாளை ஆகாரம் கழித்தால் போதும். நாளைக்கு தெம்போடு நடமாடலாம். 

நாளை பிற்பகல் நான்கு மணிக்குக் கால் பந்தாட்ட பந்தயம் இருக்கிறது. வlலனாடு அணி ஏழு கல் தொலைவில் அஜும  சிறுநகர அணியை வலநாடு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் சந்திக்கிறது. பொறி பறக்க நடக்கவிருக்கும் இந்த கால்பந்தாட்டத்தில் ஜாஜாவும் விளையாடுகிறான். அவன் வலனாட்டு அணிக்கு கோல் கீப்பர். 

இன்று ராத்திரி பட்டினி கிடந்தால்   நாளை  மேட்ச்சில் கோல் போஸ்ட் வலைக்கு முன்னால் சதா விழிப்போடு வலனாடு அணிக்கு ரட்சகனாக, பாயும் சிங்கமாக, எதிராளி கோல் போட முடியாமல் சேவ் செய்து  காத்து நல்ல பேரு வாங்குவது எப்படி? தேவையான தேக பலம் இருக்குமா?

பாயும் சிங்கம் என்ற பட்டம் யொரூபா தெய்வ ஆசியோடு ஒரு வருஷம் முன்பு ஜாஜாவுக்குக் கிடைத்தது. எட்டு கல் தொலைவில் உள்ள மாஸா  நகர கால்பந்து அணியோடு வலனாடு டீம் பொருதியபோது கிடைத்தது. மேட்ச் முடிந்து மைக் வைத்து பேசிய ஓய்வு பெற்ற கால்பந்தாட்ட வீரரான ஊர்ப் பெரியவர்   பாயும்  சிஙகம் என்று ஜாஜா ஆட்டத்தை வர்ணித்து சிலாகித்தார்.

அந்த மேட்சில் தான் ஜாஜா சம்ப்ரதாயமான கோல் கீப்பராக இல்லாமல் கோல் போஸ்ட்டை திறந்து போட்டுவிட்டு நன்றாக வெளியே வந்து, என்னை உதையேன் என்று வேண்டிக்கொண்டு  அருகே உருண்டு வந்த அடிபட்ட பந்தை  பக்கத்தில் ஓடிய வலனாடு அணியின் செண்டர் பார்வேட்க்கு கடத்தினான்.. 

அந்த முட்டாள் எங்கேயோ பராக்குப் பார்த்தபடி பந்தைத் தவறவிட அது உருண்டு விலகிப் போனது., எங்கேயோ என்ன, கேலரியில் அவன் கண் நிலைத்தது. அங்கே,, எண்ணெய் கசியப் பொறித்து, ஹெரால்ட் செய்தித்தாளில் பொதிந்த  ‘மீனும் வறுவலும் தின்றபடி கால் பரப்பி அமர்ந்து ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருந்தாள் ஒரு வடிவான பேரிளம் பெண்., ரூத் என்ற நல்ல கருப்பி அவள். கீழே விழுந்த வறுவலை முலைக் குவடு தெரிய் குனிந்து எடுத்த ரூத் மேல் அந்த கேடுகெட்ட செண்டர் பார்வர்ட்டின் பார்வை பட்டது. பியர்பெல்லி –தொப்பையன்- டேவுக்கு பெண்டாட்டி அவள்.. மாணப் பெரிய முலைச்சி என்று ஊரே சிலாகிக்கும் ரூத்தின்  அசாதாரணமான மார்பு வளத்தை  நோட்டமிட்டுக் கொண்டு பந்தைத் தவற விட்டான் செண்டர் பார்வர்ட் தாயோளி. . 

டேவ் வலனாடு டீமின் நிர்வாகி.. பத்து இருபது குடியிருப்பு உரிமை அவனுக்கு உண்டு. அதையெல்லாம் வாடகைக்கு விட்டு சுக ஜீவனம் நடத்துகிறான். ஜாஜாவின் வசிப்பிடத்துக்கும் அவனே சொந்தக்காரன்.

வலனாடுக்கு தோல்வியில் முடிந்த மேட்ச் அது., வந்தவர்கள் ஐந்து கோல் போட,  வலனாடு அணி கேவலமாக ஒரு கோல் போட்டது. ஜாஜாவுக்கு பாயும் சிங்கம் பட்டம்  கொடுக்கப்பட்ட அந்த தினத்துக்கு அடுத்த நாள் தோல்விக்கு என்ன காரணமென்று வலனாடு குழு ஆராய்ந்த போது ஜாஜா கோல் போஸ்டை விட்டு விட்டு காற்று வாங்கிக்கொண்டு வெளியே உலவியது காரணமா என்று ஆராயப் பட்டது. அவனை  விலக்கினால் வேறு நல்ல கோல்கீப்பர் கிடைக்க மாட்டான் என்று பொதுபுத்தியில் பட, பந்தை வாங்கிக் கடத்தாமல் போன  செண்டர் பார்வர்ட் மேல் பழி விழுந்தது. அவனுக்கு சபையில் பேச வாயிருந்தால் ரூக்கின் ஸ்தனங்களை  ஒன்றுக்கு  இரண்டாக  குற்றப்படுத்தி இருப்பான். 

படம் ஷங்கரா

அடுத்த நாள் டேவ் முகம் வீங்கி குழு அலுவலகத்துக்கு வந்தான். ஆப்தர்களிடம் அவன் அரைகுறையாக சொன்ன காரணம் இப்படி இருந்தது..

என் சர்க்கரையே, கூட்டம் நெரிகிற வேளையில், இருப்பதிலேயே குட்டையான ஜிப்ஸி பாவாடையும்  முழுக்க மார் மறைக்காத மேல் சட்டையுமாக நீ புறப்பட்டு மேட்ச் கண்டு களிக்க வந்ததென்ன? வந்தது தான் வந்தே. ஒனெல்லி கிழவி ஜீவனோபாயமாக மைதானத்தை ஒட்டி எண்ணெய்ச் சட்டி வைத்து பொறிக்கிற பிஷ் யண்ட் சிப்ஸ் வாங்கி காலரியில் கால் பரப்பி இருந்து தின்றதென்ன? ஒன்றும் சரியில்லை.

ரூத்திடம் அவள் புருஷனான டேவ் பிரலாபித்தாக ஊர்ஜிதம் செய்யப்படாத தகவல்.. அவள் தன் பங்கு நியாயத்தை அடித்துப் பேசியதாகத் தெரிகிறது . 

வரை கடந்து பிதுங்கி வழிய விடாமல் மெத்தென்று நிரம்பி இறுக்கி உயர்த்தும் மார்க்கச்சும் பூப்போட்ட சில்க் அடிவஸ்திரமும்.  புதுசாக வாங்கித் தரச் சொனனால் செய்ய மாட்டே. பட்டுப் பாவாடைக்கு நாடா நுழச்சு தான்னா மாட்டே. பட்டு உருமால் சுருக்கம் போக நீவித்தர மாட்டே நாக்குக்கு ருசியா புலால் வஸ்துக்களை வாங்கிட்டு வா சமைச்சு தரேன்னா மாட்டே. நீ பாட்டுக்கு பியரும் லாகரும் மாந்தி கர்ப்பிணி போல உன் தொப்பையை போஷிச்சிட்டு இருக்கே என்றும் இன்னும் பல விதத்திலும் ரூத் புருஷனிடம் புகார் சொன்னாளாம்..

 எல்லாம் செஞ்சுடலாம் என் அவிச்ச கோழிமுட்டையே. அடுத்த மாசம் உலகம்  முழுக்க விக்டோரியா மகாராணிக்கு கருமாதி செய்யப் போறாங்க. வலனாடுவிலும் விக்டோரியா மகராணி மார்பளவு சிலை திறக்கப் போறோம். நாலு காசு பார்கலாம். 

டேவ் ஆறுதலாக நாலு வார்த்தை சொல்ல அவள் எகிறினாளாம் –

விக்டோரியா மகாராணி மாருக்கும் என் அடிவஸ்திரத்துக்கும் என்ன சம்பந்தம்னு கேக்கறேன். 

அவள் கால் பேச, அரையில் பொத்திக் கொண்டு மன்னிப்பு மன்னிப்பு என்று மன்றாடி, அது போதாமல், அவளது காலெடுத்து தன் சிரத்தில் வைத்துத் துதித்தானாம் அவன். எப்படி முடியும்? ரெண்டு காலையும் சேர்த்துத் தூக்கினால் விழுந்துவிட மாட்டாளா?

அலாரம் கடியாரம் ஒலிக்க ஜாஜா தனக்குத்தானே சிரித்துக் கொண்டு அதை அமர்த்தினான். இன்றைக்கு மூலாதாரமான பிரச்சனை இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பது நினைவு வந்தது.

இன்னிக்கு சாப்பாடா, முழுக்க விரதமா?

போகும் வழியெல்லாம் சின்னஞ்சிறு கோழிக்கூண்டுகள் போல் நாட்டில் எங்கும் மரக்கூண்டு நாட்டி வழிபட வேண்டிய ‘மரக் கோபுர  வாசி’ என்ற அடைமொழி  யொரூபாவுக்கு மட்டும் தான் பொருந்தும். சாமான்யர்களின் தெய்வம் அதுவென்று சொல்வார்கள். நாலு கோக்கோ கொட்டையும் ஒரூ குவளை பாலும் படைத்து வேண்டினால் கேட்டதையெல்லாம் தருமாம். வருடம் ஒரு தினத்தில் உண்ணாவிரதம் இருந்தால் போதும். சகலமும் கிட்டும்.

 இன்று ஏன்  சாப்பிட் வேண்டாமென்று  ஆயிரம் காரண்ம்  அடுக்கலாம்.  எனில் பாயும் சிங்கமாக  ஓடிச்சாட பலம் வேணாமோ. தீனி அவசியமாச்சே.அதுக்கு. அதைத் தெய்வமும் ஆமோதிக்குமே..

தேவரடியாள் வீட்டுக்குள் தோலனும் துருத்தியுமாக சுவாதீனமாக  நுழைந்து சேவைக் கட்டண விவரம் விசாரிக்க,  வாசல் ஓரமாக சொங்கியாக, சும்மா நிற்கிற மாமா மாதிரி இன்று பட்டினி கிடந்து நாளை அதனால் வந்த பெலகீனத்தால் கோல் போஸ்ட்டை திறந்து போட்டுவிட்டு நிற்க வேண்டி  வரலாம்.  அது சம்பவித்தால்  எதிரணி தெருப்பொறுக்கி யாராவது கோல் லைனைக் கடந்து நெட்டை ஒட்டி  நுழைஞ்சு கோல் போடுவான்.   

யொரூபா தெய்வம் கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை இன்றைக்கு சாப்பிட்டு நாளைக்கு நல்ல பலத்தோடு விளையாடணும்.

 ஜாஜா, வாழ்க்கையின் அடிப்படை ஆதாரத்தையே அசைத்துப் பார்க்கும் யுகப்புரட்சி எழுப்பும் நோக்கம் எதுவும் இல்லாமல் சும்மா சாப்பிடலாம் என்று முடிவெடுத்தான். 

 தீனி மேசையில்  வழுக்கு மரத்தட்டில் நான்கு கோழி முட்டைகள்  ஜாஜாவை வரவேற்கக் குறுகுறுப்போடு காத்திருக்கின்றன.  கூடவே வேகவைத்த மொச்சை, ஒரு பெரிய துண்டு ரொட்டி. பெயர் விளங்காத, கோழிக் கழிசல் போல் ஏதோ ஒரு வஸ்து.. ஒரு  வாழைப்பழம். ஐரிஷ் ப்ரேக்ஃபாஸ்ட் என்று ஓநெல்லி கிழவியம்மா உண்டாக்கி அனுப்பியது. கிழவியம்மாவின் உதவியாளினி கொண்டு வந்து வைத்துவிட்டுப் போயிருக்கிறாள். 

ஒநெல்லி அவள் பிறப்பால் ஐரிஷ்காரி, ஐம்பது வருடம் முன்பாக அயர்லாந்தில் இருந்து, புதுசாகக் கல்யாணம் ஆகித் தன் கணவனோடு வலனாடு வந்தவள். பெரிய  கரும்புத் தோட்ட நிர்வாகியாக வந்தவனை ஒரே வருடத்தில் மலேரியா கொண்டு போனது. அந்த ஐரிஷ்காரனின் பெயர் தான் ஓநெல்லி.  அவன் மனைவி அயர்லாந்து திரும்ப வாய்க்காமல் வலனாட்டிலேயே தங்கிவிட்டாள். அவளுக்கு என்று இருக்கும் பெயரை விசாரிக்க யாருக்கும் தோன்றவில்லை.ஓநெல்லியம்மா என்ற விளிப்பெயர் ஓநெல்லி கிழவியாக, ஓநெல்லி பாட்டியாக உத்தியோக உயர்வு பெற்றது நாலைந்து வருடமாகத்தான்.

ஜீவனோபாயமாக சமையல் தொழிலை மேற்கொண்டாள் ஓநெல்லி பாட்டி. ஆப்பிரிக்க சமையலும் ஐரீஷ் குசினியும் அவளுக்கு கைவந்த கலையானது. முக்கியமாக ஐரீஷ் சமையல். அயர்லாந்துக்குப் போனவராரும் வலனாட்டில் இல்லை.. ஐரீஷ் சமையலும் சாப்பிட யாருக்கும் சந்தர்ப்பம் கிட்டியதுமில்லை. எனவே கிழ்வியம்மா ஐரிஷ் உணவு என்று எதையாவது சமைத்து இறக்கி சொன்னால் அது ஐரீஷ் ஆகாரம்தான்.

ஓநெல்லி வீடு காரைக் கட்டிடமாக இருந்தாலும், இடம் போதாமையால் அங்கே உணவு விடுதி நடத்த இயலாமல் போனது. அப்போதுதான் அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது – கரும்பு ஆலைகளில் காரியம் நிர்வகிக்கிற, குடும்பத்தை சொந்த ஊரில் விட்டுவிட்டு வந்த ஒற்றையர்கள் வலனாட்டிலும் சுற்று வட்டாரத்திலும் கணிசமாகத் தேறுவார்கள். அவர்களுக்கு காலையில் நாஷ்தா, ராத்திரி சோறும் மீனும் மதராஸ் மிளக்டண்ணியும் சமைத்தெடுத்து அவரவர் வசிப்பிடத்தில் கொண்டு போய்த் தரவும், இந்த சேவைக்காக ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் முன்கூட்டியே நாலு ரிண்ட் ஓநெல்லிப் பாட்டிக்கு செலுத்த வேண்டும் என்றும் முடிவானது.

ஜாஜா இந்த ஏற்பாட்டில் இருக்கிறான் என்பதால் காலையில் பசியாறவும், ராத்திரி சோறும் மீனும் திருப்தியாகச் சாப்பிடவும், வாரக் கடைசியில் கால்பந்தாட்டத்தில் பயிற்சி எடுக்கவுமாக போன வருடத்திலிருந்து தடையின்றி நடக்கிறது. பகல் சாப்பாடு  கரும்பாலையிலேயே கிடைக்கிறது.

எட்டு மணி சைரன் ஒலிக்கும் சத்தம். 

 யொரூபா தெய்வ உத்தரவை மீறி விரத தினத்தில் காலை  உணவு கழித்து பேய் போல் நாளை ஆடப் போகும் கால் பந்து பந்தயத்தில் அவனைப் போல ஆடும் இன்னொரு பத்துப் பேருண்டு. வலநாடு டெவில்ஸ் என்ற அந்தப் பேய்க்கூட்டத்தின் பெயர் . அவர்கள்   அத்தனை பேரும் யொரூபாவை ப்ரார்த்திக்கும் வகுப்பில் இல்லை. இல்லாதவர்கள் ஹீப்ரு விவிலியமான தோரா ஓதி யூத வேதத்தில் கால் வைத்தவர்கள். ஆப்ரிக்காவில் இருக்கபட்ட மொத்த கருப்பு யூதர்களில் கால்வாசிபேர் இந்தப் பிரதேசத்தில் இருக்கிறதாக இங்கத்திய  யூத பூசாரி –  ரப்பய்  மார் தட்டுகிறார்.  தன் மாரை.

யூதமா யொரூபமா?

 ஜாஜா ரெண்டும் கெட்டான். மாதத்தில் பதினைந்து நாள் யெரூப வேதக்காரன், அடுத்த பதினைந்து தினம் யூதன். 

யொரூபா தெய்வமே என்னை மன்னியும்.

ஜாஜா சாப்பாட்டுத் தட்டை அருகில் இழுத்துக்கொண்டு தீன் மேசை அருகே நாற்காலியில் அமர்ந்து உண்ணத் தொடங்கினான். வாசலில் ஏதோ சத்தம். 

மகா உயரமான ஒரு சிறுவனும் சிறுமியும் தெருவில் நிற்க, எதிரே பாதி இடிந்த மண் சுவரை ஒட்டி நின்று யாரோ சில  விஷமிகள் பொத்துபொத்தென்று சாணகத்தை உருட்டி அவர்கள் மேல் எறிந்து கொண்டிருக்கிறார்கள். ஒட்டகச் சிவிங்கி ஓடு ஓடு என்று வேறு சகிக்க முடியாமல் பாடுகிறார்கள்.

ஜாஜா வெளியே ஓடினான். உரக்க fout ou vajen என்று வசவு உதிர்த்தவன் சிறுமிக்கு. க்ரியோல் தெரிந்திருக்குமோ என்று தோன்ற சத்தமின்றி ஓடி இடிந்த மண்சுவரைக் கையூன்றித் தாண்டிக் குதித்துக் காலூன்றினான். 

அந்த குழந்தைப் பெண் காதில் படாத தூரம் இது. அதுவும் எட்டு அடி உயரமான சிறுமி.

சாணம் எறிந்த விஷமிகளை நோக்கி பாயும் சிங்கமாக ஓடினான். fout ou vajen என்று நிதானமாக வைது அவர்கள் இடுப்புக்குக் கீழே கால்பந்தாட்ட கோல் கீப்பராக உதைத்து விரை  பொத்தி  ஓட வைத்தான்.  

விசி குறுநகை மின்னி மறைய நன்றி சொன்னாள் ஹெய்ட்டிய க்ரியோல் மொழியில். 

அந்தப் பெரிய வீட்டிலே இருக்கீங்களா? 

ஜாஜா ஜாக்கிரதையாக சிறுபெண்ணை விட்டுவிட்டு, பையனை விசாரித்தான். அவன் வெறுமனே  தலையசைத்தான். 

விசி, கிட்டா.  காலம்பற பசியாற வேணாமா? வாங்கோடா

நிர்மலா வாசலுக்கு வந்து குரல் உயர்த்தி அழைக்கிறாள். குரல் உயர்த்துவது சகஜமான கிராமப் பகுதியில் நிர்மலா சுவாசிக்கப் பழகி விட்டதாக நினைக்க அவளுக்கு நிம்மதியாக இருந்தது. 

‘And you, dear young man’

அவள் பார்வை  ஜாஜா மேல் துளைத்தது. 

ஜாஜா டாக்டர்

என்னது ஜாஜா டாக்டரா?

ஊஹும் ஜாஜா மட்டும் தான். 

 ஜாஜா தன் பெயரை திரும்பவும் சொல்லி மகிழ்ச்சி பாராட்டினான். நிர்மலா புன்னகையோடு நகர்ந்தாள்.

 தேவதைக் குடும்பத் தலைவியை இவ்வளவு அருகே பார்க்க மனதுக்கு ரம்யமாக இருந்தது அவனுக்கு..உதடு மட்டும் அசைய  அவன் சொல்லியது நல்ல வார்த்தை என்று புரிந்து நிர்மலா காலை வைத்தது பிடிப்பிடியாக எறிந்து பாதையில் அப்பிய சாணத்தின் மேல். 

நொண்டிக்கொண்டே, இரண்டு பசங்களும் தோளில் கைவைத்துத் தாங்க வீட்டு வாசலுக்கு வந்துவிட்டாள் அவள். தோட்டத்தில் இருந்து ஒரு பெரிய இரும்பு வாளியை அடுத்து இழுத்து வந்தான் கிட்டா. பாதி நிறைந்த அதற்குள் கால் கழுவத் தேவையான அளவு நீர் இருந்தது. 

பாருங்க பசங்களா என் பெயர் நிர்-மலா மலம்னா அசுத்தம். சுத்தமானவ நிர்மலா.. இங்கே கால்லே சாணி அப்பிண்டு நிக்கறேன் ‘ 

அவள் சொல்லும்போது கையில் ஈட்டியும் அரைக்கு உடுத்த வெள்ளையாக ஒரு காலத்தில் இருந்த துணியுமாக, தலைமுடி தாழத்தாழ ஆடி வந்த ஒருத்தர் ஜாஜா வீட்டுப் படி ஏறியதைக் கவனித்தபடி உள்ளே போனாள். 

ஜாஜா வேலைக்கு போகலியா?

பூசாரி குரல் இது. யொரூபா தெய்வத்தின் உள்ளூர் பிரதிநிதி. இன்று விரத நாள் என்று ஞாபகப்படுத்த வந்தவராக இருக்கும்

இன்றைக்கு AWOL absence without leave மட்டம் போட்டுடலாம்னு பார்க்கறேன்

இன்று ஜாஜா உண்ணாவிரதம் இருப்பான், வேலைக்குப் போவான் என்று உலகமே எதிர்பார்க்கிறது.  ரெண்டும் செய்யப் போவதில்லை அவன்,

திடுதிப்பென்று மட்டம் போட என்ன காரணம் சொல்லலாம் என்று ஜாஜா யோசித்துக் கொண்டிருந்த போது, பூசாரியின் பார்வை தீனி மேசைக்கு மேல்  விழுந்தது. 

ஏன்’பா, நீ குடும்பத்தை  மெல்லிசி பட்டணத்திலே விட்டுட்டு இங்கே சர்க்கரை ஆலையிலே உத்தியோகம் பார்க்க வந்தவன். ஜரூராக தினம் வேலைக்குப் போயிட்டு வரே. ஒரு நாள் லீவு போட்டா என்ன குறஞ்சு போகும்?

பூசாரி சொன்னால் யொரூபா சொன்ன மாதிரி.. ஒரு நாள் லீவ் அடிச்சா ஆகாசம் விழாது

யொரூபா இதில் எங்கே வந்தது? பூசாரி சொன்னா சரிதான்.

. ஜாஜா எந்த குழப்பமும் இல்லாமால் இப்படி முடிவெடுப்பான்.- வேலைக்கு போக மாட்டான். வயிறூ நிறைய சாப்பிடுவான்..

பூசாரி நிறுத்தாமல் பாடியபடி தீனி மேசை மேல் கள்ளக்கண் ஓட்டிக் கொண்டிருந்தார்.

அது வேணுமா? ஜாஜா சிரித்தபடி பூசாரியை கேட்டான். அவர் பார்வை தீனி மேசையை விட்டு அகலவே இல்லை. 

உங்களுக்கும் இது விரத நாளேச்சே. அதான் கேட்க்லே –ஜாஜா புன்னகைத்தான்

எனக்கு உட்கார்ற இடத்தில் சிரங்கு வந்திருக்கு சிரங்கு யொரூபா சொரூபம் ஆச்சே.  படைச்சுட்டு இதிலே பாதி தரேன் எடுத்துக்குங்க. சரியா?

நமுட்டுச் சிரிப்போடு ஜாஜா நிற்க, பூசாரி சம்மதத்தை உடல்மொழியில் மொழிந்தார். பூசாரிக்கு இன்று பண்டிகை தினம் வெற்று வயறு அல்லது பிறர் ஆசனம் பூசி வரும் சுவையான உணவு என்று விதித்திருக்கிறது.  

ஜாஜா அவரை வாசலில் இருக்கச் சொல்லியபடி வேகமாகச் சாப்பிட்டான். பிறகு உள்ளே போய் மூன்று சுரைக்குடுக்குகளை எடுத்து வந்து தீன்மேசையில் மிச்ச உணவை அவற்றில் பெய்தான். 

வாங்கிக்குங்க பூசாரி. 

பூசாரி அவன் கழித்தது போக மீதி உணவை பண்டிகையன்று உண்ண விதித்த யொரூபா பெயர் சொல்லி கையில் வைத்திருந்த குத்தீட்டியை தீன் மேசை ஓரமாக வைத்து வார்த்தைகள் இல்லாத பிரார்த்தனைப் பாடல் ஒன்றை. குத்தீட்டியை ஆயுதம் போல் உயர்த்தி லுலுலுலு என்று பாடியபடி ஆடி முடித்தார். பாடினார். ஜாஜா கணக்கில் அரைச் சாப்பாட்டு அளவு புண்ணியம் ஏறி இருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது. .

ஜாஜா பூசாரியைக் கேட்டான் – 

என் ஃபுட்பால் டீமிலே இருக்கற பதினெட்டு ப்ளேயர்களுக்கு எப்போ ஆளுக்கொரு தாயத்து தரப் போறிங்க? நாளை ஒரு முக்கியமான மேட்ச் இருக்கு. தாயத்து எல்லாரும் கட்டி இருந்தா எவ்வவு நல்லா இருக்கும். நீங்க விரசுபடுத்தினா செய்யமாட்டீங்க. உங்க வேகத்திலேயே செய்யுங்க. ஆனால் இறுதிச் சுற்று மேட்ச்சுக்கு முன்னே கொடுக்கணும் சரியா 

உத்தரவு, வேண்டல் என்ற இரண்டு பாவத்தோடு கேட்டான் ஜாஜா. 

நாளைக்கு நாள் யெரூபா தெய்வத்தோடது. அவரும் கால்பந்து ரசிகர்தானே.  உங்களுக்கும், வலனாடு டீம்லே மத்த எல்லோருக்கும் நாளைக்கு ஜெயம் ஜெயம்.

பூசாரி பூடகமாகச் சிரித்தார்.      

(தொடரும்)

றெக்கை

றெக்கை – அத்தியாயம் 4 றெக்கை– அத்தியாயம் 6
Exit mobile version