Site icon சொல்வனம் | இதழ் 378 | 08 நவ 2026

மூன்றாம் பயணமும் தலைகுனிவும்!

This entry is part 13 of 13 in the series கொலம்பஸ்

கொலம்பஸ் தனது இரண்டாம் பயணத்தை முடித்துவிட்டுப் பெரும் சிரமங்களுக்கும் சதிகளுக்கும் இடையில் ஸ்பெயின் அரசர்களிடம் போராடி, தனது மூன்றாம் பயணத்திற்கான (1498) அனுமதியைப் பெற்ற பிறகு அரங்கேறிய வரலாற்று நிகழ்வுகள் மிகவும் சுவாரஸ்யமானவை மட்டுமல்ல, பெருமளவு வியப்பும் துயரமும் நிறைந்தவை.

கொலம்பஸின் கடற்பயணங்களுக்கு  அரசர்களுடன் அதிகாரப்பூர்வமான எழுத்துபூர்வமான  சாண்டா ஃபெ ஒப்பந்தம்’  முன்பே போடப்பட்டிருந்தது.  

ஒப்பந்தம் முன்கூட்டியே போடப்பட்டிருந்தாலும், கொலம்பஸின் இரண்டாம்  பயணத்தின் போது நிலைமை வெகுவாக மாறிவிட்டது: ஹிஸ்பானியோலா தீவில் கொலம்பஸ் ஒரு நல்ல நிர்வாகியாக இருக்கவில்லை; அங்கு பஞ்சம், கலகங்கள் மற்றும் ஸ்பானியர்களின் மரணம் அதிகரித்தது. அவர் சொன்ன அளவுக்குத் தங்கம் கிடைக்கவில்லை என்பதால் ஸ்பெயின் அரச குடும்பத்திற்குப் பெரும் பொருளாதார நஷ்டம் ஏற்பட்டது.

ஒப்பந்தம் இருப்பதால் சட்டப்பூர்வமாக அவரது பயணத்துக்கு அனுமதி மறுக்க முடியாவிட்டாலும், அரசர்கள் அவரது அதிகாரத்தைக் குறைக்கவும், புதிய பயணத்திற்குத் தேவையான கப்பல்களையும் நிதியையும் உடனே வழங்காமல் இழுத்தடிக்கவும் இந்த நிர்வாகக் குழப்பங்களே காரணமாக இருந்தன. பல மாதங்கள் போராடித்தான் அவர் மூன்றாம் பயணத்திற்கான அனுமதியைப் பெற வேண்டியிருந்தது.

அனுமதி கிடைத்த தருணம் முதல், அவர் அமெரிக்கக் கண்டங்களை அடைந்து சந்தித்த திருப்பங்கள் வரை நிகழ்ந்தவற்றைப் பார்க்கலாம்.

பயண ஏற்பாடுகளும் நிர்வாகச் சிக்கல்களும்

மூன்றாவது பயணத்தின் போது கொலம்பஸின் மீது  அரசு முழுமையான நம்பிக்கை இழந்திருந்தது. ஆனாலும் ஒப்பந்தத்தின்படி அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

எனினும், அவருக்கு வழங்கப்பட்ட நிதியுதவியும் ஆதரவும் முன்புபோல் இல்லை. கடற்படையைத் திரட்டுவதிலும், மாலுமிகளை நியமிப்பதிலும் கடும் சிக்கல்கள் எழுந்தன. சிறைவாசிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி அவர்களைக் கடற்படையில் கட்டாயமாகச் சேர்த்துக்கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது. பலரும் கொலம்பஸின் கீழ் பயணிக்கத் தயங்கினர்.

கொலம்பஸின் முதலிரண்டு பயணங்களில் கலந்துகொண்டு திரும்பிய பலர், அங்கே நிலவிய கொடிய நோய்கள், பஞ்சம் மற்றும் கடுமையான வாழ்க்கை முறை பற்றிக் கதைகளாகச் சொல்லிவிட்டனர். இதனால், புதிதாக யாரும் தாமாக முன்வந்து கொலம்பஸின் கடற்படையில் சேர விரும்பவில்லை. கப்பல்களை இயக்கவும், புதிய நிலங்களில் குடியேறவும் ஆட்கள் தேவைப்பட்டனர். ஆனால் ஸ்பெயின் துறைமுகங்களில் மாலுமிகளோ பணியாளர்களோ கிடைக்கவில்லை. இந்தச் சிக்கலைத் தீர்க்க, ஸ்பெயின் அரசர்கள் (பெர்டினாண்ட் மற்றும் இஸபெல்லா) ஒரு சிறப்பு அரச ஆணை பிறப்பித்தனர். இதன் படி: 

ஸ்பெயின் அரசர்களின் ஒப்புதலுடன் சிறைவாசிகள் பெரும்பளவில் கட்டாயமாகத் திரட்டப்பட்டு ஒருவழியாகப் பயணம் உறுதியானது. பல தடைகளைத் தாண்டி, 1498 மே 30, அன்று கொலம்பஸ் ஆறு கப்பல்களுடன் ஸ்பெயினின் சான்லூகர் டி பராமடா (Sanlúcar de Barrameda) துறைமுகத்திலிருந்து ஆறு கப்பல்களில் புறப்பட்டார்.

கொலம்பஸ் தனது மூன்றாம் பயணத்திற்காக புறப்பட்ட கப்பல்களில், புதிய நிலங்களைக் குடியேற்றத்திற்காகவும், வர்த்தகத்திற்காகவும் பல்வேறு வகையான பொருட்கள் மற்றும் ஆட்கள் ஏற்றிச் செல்லப்பட்டனர்.

நீண்ட கடல் பயணத்திற்கும், ஹிஸ்பானியோலா தீவில் ஏற்கனவே பசியால் வாடிக்கொண்டிருந்த ஸ்பானியக் குடியேறிகளுக்கும் தேவையான மாவு மூட்டைகள், உப்புக்கறி, ஒயின், மற்றும் பீப்பாய்களில் அடைக்கப்பட்ட குடிநீர் ஆகியவை ஏற்றப்பட்டன.

ஸ்பெயினிலிருந்து  கோதுமை விதைகள், திராட்சைக் கன்றுகள் மற்றும் பல்வேறு ஐரோப்பியப் பயிர்களின் விதைகள் கண்டறியப்படும் புதிய நிலத்தில்  விளைவிப்பதற்காகக் கொண்டுசெல்லப்பட்டன. புதிய நிலத்தில் வளர்ப்பதற்காகவும் விவசாயப் பணிகளுக்காகவும் குதிரைகள், கழுதைகள் மற்றும் சில கால்நடைகள் கப்பல்களில் ஏற்றப்பட்டன.

முந்தைய பயணத்தைப்போலவே உள்ளூர் மக்களுடன்  வியாபாரம் செய்வதற்காகவும், அவர்களைக் கவர்வதற்காகவும் கண்ணாடி மணிகள், பித்தளை நகைகள், சிறுமணிகள் மற்றும் சிறிய உலோகப் பொருட்களும் கொண்டு செல்லப்பட்டன. பாதுகாப்புக்காகவும், அப்பகுதிகளைக் கட்டுப்படுத்தவும் துப்பாக்கிகள், குறுவாள்கள், கவச உடைகள் மற்றும் வெடிமருந்துகளும்  கப்பல்களில் இருந்தன

கப்பலில் மாலுமிகள், கப்பல் மாஸ்டர்கள், நில அளவையாளர்கள் மற்றும் மருத்துவர்கள்,பொதுமன்னிப்பு வழங்கி அழைத்து வரப்பட்ட குற்றப்பின்னணி கொண்ட சிறைக்கைதிகள் உள்ளிட்ட சுமார் 220 பேர் இருந்தனர். இந்த விசித்திரமான குழுவில் திருடர்கள், கொலைக் குற்றவாளிகள் மற்றும் பல்வேறு வழக்குகளில் சிக்கிய சிறைக்கைதிகளும் இருந்தனர்.

கொலம்பஸ் தனது பயணத்தின் முக்கியக் கப்பலான ‘நாவ்’ என்கிற பெரிய வகை தலைமைத் கப்பலில் பயணம் செய்தார். தனது பிரதான கப்பலிலிருந்து  கொண்டே ஒட்டுமொத்தக் கடற்படையையும் வழி நடத்தினார்.

இந்த முறை அவர் முந்தைய பாதையை விடச் சற்றுத் தெற்கே உள்ள வழியைத் தேர்ந்தெடுத்தார். கேப் வர்டே (Cape Verde) தீவுகளைத் தாண்டி, கொடிய வெப்பமும் காற்றற்ற அமைதியான கடல் பகுதியையும் (Doldrums) கடந்து மேற்கு நோக்கிப் பயணித்தார். 

கொலம்பஸ் தனது முதல் மற்றும் இரண்டாம் பயணங்களின்போது, கேனரி தீவுகளில் இருந்து நேராக மேற்கு நோக்கித்தான் (பஹமாஸ் மற்றும் கியூபா நோக்கி) பயணித்தார்.

 ஆனால், பூமத்திய ரேகைக்கு மிக அருகில் உள்ள வெப்ப மண்டலப் பகுதியில் ஒரு பெரிய நிலப்பரப்பு இருக்கக்கூடும் என்று அவர் நம்பினார். மேலும், அப்பகுதியில் ஸ்பெயினுக்குப் போட்டியாகப் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த மாலுமிகள் செல்வதைத் தவிர்க்கவும், புதிய மார்க்கத்தைக் கண்டறியவும் அவர் விரும்பினார். எனவே, வழக்கமான பாதையை விடுத்து மேற்கு நோக்கிப்புறப்பட்டு பயண வழியில் சற்றுத் தெற்கே  பூமத்திய ரேகையை நோக்கி தனது கப்பல்களைத் திருப்பினார்.

ஆனால் அவர் தேர்ந்தெடுத்த பாதை அவரை உலகின் மிக மோசமான கடல் தட்பவெப்பப் பகுதிக்கு அழைத்துச் சென்றது. அதுவே ‘டால்டிரம்ஸ்’ (Doldrums) என்று அழைக்கப்படும் காற்றற்ற அமைதியான பகுதி (Intertropical Convergence Zone).

 பாய்மரக் கப்பல்களை  இயக்கும் பிரதான சக்தியே காற்றோட்டம் தான். ஆனால் டால்டிரம்ஸ் பகுதியில் பல வாரங்களுக்குக் காற்றே வீசாமல் கடல் பரப்பு ஒரு கண்ணாடிப் பாத்திரம் போல முற்றிலும் அமைதியாக இருந்தது. இதனால் கொலம்பஸின் கப்பல்கள் அந்த இடத்திலேயே நகராமல் ஸ்தம்பித்து நின்றன.

பூமத்திய ரேகைக்கு அருகில் இருந்ததால், சூரியனின் வெயில் நேரடியாகக் கப்பலின் மீது இறங்கியது. வானம் மேகமூட்டமின்றித் தகித்தது. வெப்பத்தின் தாக்கம் எந்த அளவுக்கு இருந்தது என்றால், கப்பல்களின் இணைப்புகளைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்பட்ட தார்  உருகி வழியத் தொடங்கி, மரப் பலகைகள் வெடித்துச் சிதறின.

இந்தக் காற்றற்ற வெளியில் கப்பல்கள் மாதக்கணக்கில் நகராமல் நின்றதால், கப்பலில்  பதுங்குப் பெட்டிகளில் இருந்த நன்னீர் கடும் வெப்பத்தால் ஆவியாகி, சீக்கிரம் தீர்ந்துபோயின. மாலுமிகள் ஒவ்வொருவருக்கும் மிகக் குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே ரேஷன் முறையில் வழங்கப்பட்டது. இறுதியில் குடிப்பதற்கு ஒரு சொட்டு  நல்ல நீர்கூட இல்லாத நிலை உருவானது. 

 வெப்பத்தின் காரணமாகக் கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்ட மாவு, இறைச்சி மற்றும் இதர உணவுப் பொருட்கள் புழுத்து வீணாயின. கடுமையான வெப்பம், சுத்தமான குடிநீரின்மை, உளுத்துப்போன உணவு மற்றும் வியர்வை காரணமாக மாலுமிகளிடையே கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டது. காய்ச்சல், வாந்தி மற்றும் தோல் நோய்களால் மாலுமிகள் அவதிப்பட்டனர். சிலருக்குக் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அவதிப்பட்டனர். பலர் உடல் பலவீனமடைந்து படுக்கையில் வீழ்ந்தனர்.

இந்த நரக வேதனையிலிருந்து கொலம்பஸும் தப்பவில்லை; அவருக்கும் கடுமையான கண் எரிச்சலும் உடல்நலக் குறைவும் ஏற்பட்டது. கப்பலின் நிலைமை கைமீறிப் போகும் தருவாயில், இயற்கையின் அருளால் திடீரென வானில் காற்று வீசத் தொடங்கியது.

அந்தச் சிறிய காற்றோட்டத்தைப் பயன்படுத்திக் கொலம்பஸ் தனது கப்பல்களை மேற்கு நோக்கித் திருப்பினார்.

பயணத்தின் நடுவே (கேப் வர்டே தீவுகள் அருகில் இருந்தபோது) கொலம்பஸ் தனது 6 கப்பல்களையும் ஒரே குழுவாக வைத்திருப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்தார். அதனால் தனது கடற்படையை இரண்டாகப் பிரித்தார்.

ஏற்கனவே ஹிஸ்பானியோலா தீவில் உணவின்றிக் கஷ்டப்படும் ஸ்பானியர்களுக்கு அவசரமாகத் தேவைப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் தளவாடங்களை வைத்திருந்த 3 கப்பல்களை நேராக ஹிஸ்பானியோலா செல்லும்படி ஆணையிட்டு முன்கூட்டியே அனுப்பி வைத்தார்.

மீதமுள்ள 3 கப்பல்களில் இருந்த ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன்  தெற்கு நோக்கிப் பயணித்தார்.

மாதக் கணக்கில் நடுகடலில் வீசிய கொடூரமான வெயில், நாவறண்டு போன தொண்டை, கொதிக்கும் தார் வழிய மரப்பலகைகள் வெடித்த நரக வேதனை, கையில் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட இல்லாமல் மரணத்தின் விளிம்பில் பயணித்தன அந்த மூன்று படகுகள். அந்தப் பயங்கரமான இரவுகளிலும், விடியும் வேளையிலும் ஒவ்வொரு மாலுமியும் தன் உயிர் பிரியும் என்ற பயத்தோடுதான் விடியலை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அப்பொழுதுதான், மூன்று கப்பல்களில் ஒன்றான ‘ல காப்ரா’ (La Capra) கப்பலின் பாய்மர உச்சி மீதிருந்து ஒரு “நிலம்!… நிலம் தெரிகிறது!…”  என்னும் குரல் திடீரெனக் கேட்டது!

அங்கு நின்றுகொண்டிருந்த எளிய மாலுமியான அலான்சோ பெரஸ் (Alonso Pérez), அடிவானத்தின் எல்லையில் தொலைவில் கம்பீரமாகத் தலைதூக்கி நின்ற அந்த மூன்று பச்சை மலைச்சிகரங்களை முதன்முதலில்  பார்த்தார்!

“நிலம் தெரிகிறது!…” என்று அவர் எழுப்பிய அந்த மகிழ்ச்சிக் குரல், மரணபயத்தில் உறைந்துபோயிருந்த ஒட்டுமொத்தக் குழுவினரின் இதயங்களிலும் ஒரு புதிய நம்பிக்கையைப் பாய்ச்சியது.

மாதக் கணக்கில் கடலே கதியென்று அலைந்து, செத்துப்பிழைத்து, நம்பிக்கையை இழந்துவிட்டிருந்த பயணிகள் அனைவரும் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க  “இறைவா, எங்களைக் காப்பாற்றிவிட்டாய்” என்று அரற்றியபடி அந்த முக்கூட்டு மலைகளை நோக்கித் தங்களின் கைகளைக் கூப்பினர்.  

 அலான்சோ ,ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற துறைமுகப் பகுதிகளுள் ஒன்றான ஹுவேல்வா (Huelva) மாகாணத்தைச் சேர்ந்தவர். ஸ்பெயினின் கடல்சார் பாரம்பரியம் மிக்க குடும்பங்களில் இருந்து வந்த சாதாரண மாலுமி. மூன்று மலைகள் தனித்துவமாக எழுந்து நிற்பதை முதன்முதலில் கண்டு “நிலம்!” என்று உற்சாகக் குரல் எழுப்பியதன் மூலம், ஐரோப்பிய வரலாற்றில் தென் அமெரிக்கக் கண்டத்தின் முதன்மை நிலப்பரப்பும் டிரினிடாட் தீவும் கண்டுபிடிக்கப்பட்ட அந்த வரலாற்று நிகழ்வுக்குச் சொந்தக்காரரானார்.  *

கொலம்பஸ் மற்றும் அவரது குழுவினர் கடலில் பல வாரங்களாகக் கடுமையான வெப்பம், காற்றற்ற பகுதி, குடிநீர்த் தட்டுப்பாடு ஆகியவற்றால் மனதாலும் உடலாலும் சோர்ந்து போய் நின்றிருந்த வேளையில், அந்தப் புதிய நிலப்பரப்பு ஒரு சோலைவனம் போலக் காட்சியளித்தது.

புவியியல் ரீதியாக டிரினிடாட் தீவுக்கும் தென் அமெரிக்கக் கண்டத்தின் வெனிசுலா பிரதான நிலப்பரப்புக்கும் இடையே உள்ள இடைவெளி மிகக் குறைவு என்பதால், சில கிலோமீட்டர்கள் அகலம் கொண்ட பிற்பாடு ‘கொலம்பஸ் நீரிணை’ எனப்பட்ட அந்தக் குறுகிய கடல் பகுதியைக் கப்பல்கள்  கடந்தபோது இரண்டும் மிக அருகருகே காட்சியளித்தன. 

மகிழ்ச்சியுடன் கப்பல்களை அப்படியே கரையை ஒட்டி நங்கூரமிட்டனர். கொலம்பஸும் அவரது குழுவினரும் சிறிய படகுகள் மூலம் டிரினிடாட் தீவிலும், அதன் அருகில் இருந்த வெனிசுலா பிரதான நிலப்பரப்பின் (Mainland) கடற்கரையிலும் கால் பதித்தனர்.

அனைத்துக் கப்பல் பயணிகளும் ஒரே நேரத்தில் கரையில் இறங்கி அலையவில்லை என்றாலும், கொலம்பஸும் அவரது முக்கிய அதிகாரிகளும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட மாலுமிகளுமே பாதுகாப்பின் பொருட்டு சிறிய படகுகள் மூலம் முதலில் டிரினிடாட் தீவின் கடற்கரையிலும், பின்னர் பிரதான நிலப்பரப்பின் கடற்கரையிலும் முதலில் இறங்கினர்.  பிறகு அப்பகுதியில் இருந்த நன்னீரைச் சேகரிக்கவும், புதிய பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களைப் பெறவும் மற்ற மாலுமிகளும் மற்றவர்களும்  சிறிய படகுகள் மூலமாகத் வரிசையாகக் கரைக்குச் சென்றனர்.

1498 ஜூலை மாத இறுதியில் அவர்கள் கண்ட அந்த நிலபப்ரப்புக்கு ‘டிரினிட்டி’  என்று கொலம்பஸ்  பெயரிட்டார்.

 கடலின் அடிவானத்தில் கம்பீரமாக உயர்ந்து நின்ற மூன்று தனித்துவமான பசுமை மாறா மலைகள், ஒரே நிலப்பரப்பில் இணைந்து காட்சியளித்தன. இதனால்தான் கொலம்பஸ் அதை ‘திருச்சம்பவம்’ (Holy Trinity) நினைவாக ‘டிரினிட்டி’ என்று அழைத்தார். கரீபியன் தீவுகளில் கண்டதை விட அங்கே அடர்ந்த பசுமையான காடுகள், வானளாவிய மரங்கள் மற்றும் கண்ணைக் கவரும் இயற்கை அழகு நிறைந்திருந்தது.

அப்பகுதியில் நன்னீர் ஓடைகளும் ஆறுகளும் கடலில் கலப்பதைக் கண்ட மாலுமிகள், நீண்ட நாட்களுக்குப் பிறகு தாராளமாகத் தூய நன்னீரைப் பருகித் தங்கள் தாகத்தைத் தணித்துக் கொண்டனர்.

அங்கே பவளப்பாறைகளும், அழகிய கடற்கரைகளும் இருந்தன. சிறிது தூரம் சென்றபோது உள்ளூர் பழங்குடி மக்களைக் (அராவாக் / கரீப் இன மக்கள்) கண்டனர். அவர்கள் கொலம்பஸின் கப்பல்களைத் தொலைவிலிருந்து வியப்புடன் பார்த்தனர். கிறிஸ்தவ முறைப்படி அந்த நிலத்தில் ஸ்பெயின் நாட்டின் கொடியை நாட்டி, கத்தோலிக்கத் திருச்சபையின் பெயரால் அந்தப் புதிய பூமியைச் ஸ்பெயின் அரசர்களுக்குச் சொந்தமாக்கினர் கொலம்பஸ்.

 அங்கே வாழ்ந்த மக்களுடன் கொலம்பஸ் குழுவினர் நட்பு ரீதியாகப் பேச முயன்றனர். உள்ளூர் மக்கள் இவர்களைப் பயத்துடன் பார்த்தாலும், தங்களின் விலைமதிப்பற்ற முத்துக்கள் மற்றும் தங்க நகைகளைக் காட்டி, ஐரோப்பியர்கள் கொண்டுவந்த கண்ணாடி மணிகள் மற்றும் சில்லறைப் பொருட்களுக்குப் பதிலாக அவற்றை மாற்றிக் கொண்டனர்.

அங்கே வாழ்ந்த பழங்குடி மக்கள்  கடல்களில் ஆழமாக மூழ்கி இயற்கையான முத்துக்களைச் சேகரிப்பதில் கைதேர்ந்தவர்களாகவும்,  அவற்றை ஆபரணங்களாகவும் அணிந்தவர்களாகவும் இருந்தனர். ஐரோப்பியர்களுக்குப் பண்டைய காலம் தொட்டே மத்திய தரைக்கடல் மற்றும் பாரசீக வளைகுடாப் பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட முத்துக்கள் பரிச்சயமானவை என்றாலும், அங்கே அவை ராட்சத விலைக்கு விற்கப்படும் அரிதான பொக்கிஷங்கள்.

ஆனால் தீவுவாசிகள், தங்கள் கழுத்திலும் கைகளிலும் சாதாரண மணிகளைப் போல  முத்துக்களை வாரி அணிந்திருந்தனர். இதைக் கண்டு பெருமளவு வியப்படைந்த கொலம்பஸின் ஆட்கள், ஐரோப்பாவிலிருந்து கொண்டுவந்திருந்த மலிவான பொருட்களுக்குப் பதிலாக அந்த விலைமதிப்பற்ற முத்துக்களைத் தாராளமாகப் பரிமாறிக்கொண்டனர்; இது கொலம்பஸுக்கு மீண்டும் ஒரு பொக்கிஷக் கனவைத் தூண்டியது.

கொலம்பஸ் டிரினிடாட் தீவைக் கண்டறிந்துவிட்டு, அதனைத் தொடர்ந்து வெனிசுலா பிரதான நிலப்பரப்பில் கால் பதித்த வரலாற்று நிகழ்வு சரியாக 1498 ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில், அதாவது சுமார் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 5-க்கு இடைப்பட்ட நாட்களில் நிகழ்ந்தது. 

ஜூலை 31, 1498 அன்று டிரினிடாட் தீவின் மூன்று மலைச்சிகரங்களை முதன்முதலில் கண்டடைந்த அவர்கள், அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1 மற்றும் 2 தேதிகளில் டிரினிடாட்டின் தென்கிழக்குப் பகுதியில் கப்பலை நங்கூரமிட்டுச் சிறிய படகுகள் மூலம்  தரை இறங்கினர். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் டிரினிடாட்டில் இருந்து சற்று வடமேற்கே உள்ள வெனிசுலா பிரதான நிலப்பரப்பின் (பாரியா தீபகற்பம்) கடற்கரைக்குச் சென்றனர். 

கரீபியன் தீவுகளையே இதுவரை கண்டுகொண்டிருந்த கொலம்பஸ், இன்றைய வெனிசுலா நாட்டின் ஒரினோக்கோ நதி பாயும் பகுதிக்கு அருகில் அமைந்திருந்த அந்தத் தென்னக அமெரிக்கக் கண்டத்தின் முதன்மை நிலப்பரப்பைத் தொட்டபோது, இது ஒரு சாதாரண தீவாக இருக்க முடியாது என்றும், இது ஒரு மிகப்பெரிய கண்டம் என்பதை உணர்ந்தார். 

கொலம்பஸ் தொட்டது இன்றைய தென் அமெரிக்காக் கண்டத்தின் (South America) பிரதான நிலப்பரப்புதான்.

ஒரினோக்கோ நதியிலிருந்து கடலில் பாய்ந்தோடிய அபரிமிதமான நன்னீரின் அளவைக் கண்ட கொலம்பஸ் வியந்துபோனார். ஒரு சிறிய தீவிலிருந்து இவ்வளவு பிரம்மாண்டமான நன்னீர் நதி பாய்ந்து வர முடியாது என்றும், இவ்வளவு பெரிய நன்னீரைத் தரவேண்டுமானால் அங்கே ஒரு மாபெரும் நிலப்பரப்பு (Continent) இருக்க வேண்டும் என்றும் அவர் தனது குறிப்பேட்டில் எழுதினார்.

 ஐரோப்பியர் ஒருவர் வரலாற்றில் முதன்முறையாகத் தென் அமெரிக்கக் கண்டத்தின் முதன்மை நிலப்பரப்பில் காலடி வைத்து, அது ஒரு புதிய உலகம் என்பதை உணர்ந்த பெருமைமிக்கத் தருணம் அது.

தென் அமெரிக்கக் கடற்கரையோர ஆய்வை முடித்துக்கொண்டு, குடியேற்றப் பகுதியான ஹிஸ்பானியோலா தீவின் ‘சாண்டோ டொமிங்கோ’ (Santo Domingo) நகருக்குக் கொலம்பஸ் திரும்ப வந்து சேர்ந்தார். ஆனால் அங்கே அவருக்குப் பெரும் அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.

-தொடரும்…

பின்குறிப்பு: 

* கொலம்பஸ் தனது கடல் பயணக் குறிப்பேட்டில் , “ஜூலை 31 அன்று அலான்சோ பெரெஸ் என்ற மாலுமிதான் முதலில் மூன்று மலைச்சிகரங்களைக் கண்டறிந்து சத்தமிட்டான்” என்று அவனது பெயரை  தனது குறிப்பில் தெளிவாகப் பதிவுசெய்தார்.

கொலம்பஸ் தனது குறிப்பேட்டில் அவரைப்பற்றி ஆவணப்படுத்தியது  ஒரு வரலாற்றுப் பதிவு. ஆனால், ஸ்பெயின் அரசர்கள் அறிவித்திருந்த நிலத்தை முதலில் பார்ப்பவர்களுக்கான பணப் பரிசு அல்லது வருடாந்திர ஓய்வூதியம் நேரிடையாக அரசகட்டளையின் மூலமாகவும், அதற்கென ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்தும் வழங்கப்பட வேண்டும்.

கொலம்பஸ் தன் குறிப்பேட்டில் பெயரைப் பதிவு செய்திருந்தாலும், அதை ஸ்பெயின் அரசர்களின் அதிகாரப்பூர்வ நிதித்துறைக்கு முறையாகப் பரிந்துரைத்து, அவனுக்குரிய பணப் பரிசைப் பெற்றுக்கொடுப்பதில் கொலம்பஸ் ஆர்வம் காட்டவில்லை. அதுமட்டுமின்றி, கொலம்பஸ் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டு, அவரது அதிகாரங்கள் பறிக்கப்பட்டு, அவரே சிறைப்பிடிக்கப்பட்ட குழப்பமான சூழ்நிலையில்… அந்தச் சாதாரண மாலுமிக்கு யார் பணம் தருவது? எனவே முதல் பயணத்தில் ’டியரா டியரா’ என்று கூவிய ரொட்ரிகோ டி ட்ரானா ஏமாந்தது போலவே அலான்சோ-வும் பல முறை போரடியும் எந்தப்பலனுமில்லாமல் ஏமாந்தார்.

கொலம்பஸ்

கொலம்பஸின் வீழ்ச்சி!
Exit mobile version