Site icon சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

தெய்வநல்லூர் கதைகள்-34

This entry is part 34 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்

 ஒரு காலை விடிகையில் அன்றைய தினம் எப்படி இருக்கும், எப்படி முடியும் என்பதைக் கூட தீர்மானிக்க முடியாத மானுட வாழ்க்கை குறித்து யாரேனும் “வாழ்க்கங்கறது என்னன்னா…“ என ஆரம்பித்தால் அவர்களை கெட்ட வார்த்தையில் வையத் தோன்றுகிறதா? வாழ்க்கை உங்களுக்கு அனுபவ பாடத்தைக் கற்றுக் கொடுத்து விட்டது என உறுதியாகச் சொல்லலாம். 

அன்றைய நாளின் மாலையில் பிரேம் தள்ளாட ஆரம்பித்ததும் நாங்கள் சற்று பயந்தோம். ஆனால் பிரேம் சமாளித்துக் கொண்டார். என்னை அழைத்து ஜெயராஜ் சார் மேசையில் இருக்கும் குறிப்பேட்டை கொண்டுவர முடியுமா எனக் கேட்டார். காளிமுத்து அண்ணன் கேட் அருகே வருகையில் நான் பாய்ந்தோடி என் பை உள்ளே இருப்பதாகவும், அதில்தான் வீட்டின் ‘தாக்கோல்’ இருப்பதாகவும் கெஞ்ச, ஒரே நிமிசத்துல ஓடி வந்துரணும் என அனுமதித்து வேறு எவரும் உள்ளே வராமல் நின்று கொண்டார். நான் பாய்ந்து ஓடி ஆசிரியர் ஓய்வறைக்கு சென்றபோது அங்கு அந்த குறிப்பேடும் இல்லை, ஜெயராஜ் சாரும் இல்லை. எங்கடே பையி எனக்கேட்ட காளி அண்ணனிடம் அங்க இல்ல, சேமியா எடுத்துட்டுப் போயிருப்பாண்ணே எனச் சொல்லி வெளியே பாய்ந்தேன். குறிப்பேடு அங்கே இல்லை என்றதும் பிரேம் அப்படியே அமர்ந்து விட்டார். அக்குறிப்பேட்டில் அப்படி என்னதான் இருக்கிறது என சிவாஜி பொறுமை இழந்து கேட்கும் நேரம் பள்ளியின் வாசலில் சிறு சலசலப்பு ஏற்பட்டது. 

முகம் சிவந்து கண்கள் வெளிறி  லேசான நடுக்கத்தோடு இருந்த எம் எஸ் சி சாரை பூசை சார் வாசலுக்கு அழைத்து வந்தார். அதற்கு முன் வீதியின் இருபுறங்களிலும் சோதித்து விட்டு வந்த காளியண்ணன் வரலாமென சைகை காட்டினார். வாசலுக்கு வந்த எம் எஸ் சி சார் பள்ளி வாசல்கேட்டின் மீதிருக்கும் சிறு மேட்டைத் தாண்டி இறங்க அடிவைக்கையில் பார்வையை சுழற்றியபோது மரத்தடியில் அமர்ந்திருந்த பிரேம் கண்ணில் பட்டார். கேட் முன்னுள்ள மேட்டைத் தாண்டி பூசை சார் பைக் வருவதற்காக நடந்து வந்த எம் எஸ் சி சார் பிரேமின் கண்களை சந்தித்த நொடியில் தீப்பட்டது போல விதிர்த்து சிறு மேட்டின் சரிவில் வழுக்கி பின்னால் சரிந்தார். காளியண்ணன் ஓடி வந்து தாங்கிப் பிடித்தார்- “சார்வாள், இதுக்கெல்லாம் நீங்க பதறிக்கிட்டு? பூசை சார், சீக்கிரமா கூப்டுட்டு போங்க. வந்துரப் போறானுவ” என்றார். பிரேமின் முகம் விசித்திர இளிப்புடன் விஷத்தின் இனிப்பை ருசிப்பவன் போல இருந்தது. கண்களில் இரை  விலங்கை  கணிக்கும் வேட்டை விலங்கின் உணர்வற்ற பளிங்குத் தன்மை துலங்கியது. உதடுகள் விசித்திரமாக வளைய கீழுதடுகள் மேலுதடை மூடி மூக்கைத் தொடுவதுபோல ஏற பிரேம் தடுமாறாமல் எழுந்து அதீத விறைப்புடன் உடலை இறுக்கிக் கொண்டு “எம் எஸ் சி சார், வணக்கம்” என்று கத்தினார். அவரது உள்ளங்கை சல்யூட் போலவும், அபய முத்திரை போலவும் ஒரே நேரத்தில் தெரிந்தது. மயான வேட்டைக்கு செல்லும் மருளாளியை ஒற்றையடிப்பாதையில் நேராகச் சந்தித்தவன் முகம் போல ஆனது எம் எஸ் சி சாருக்கு. பூசை சார் முகத்தில் கோபம் தெறித்தது. “வீட்டுக்குப் போங்கல. ஸ்கூல் விட்டப்பறம் இங்க என்னல சோலி? வணக்கஞ் சொல்லுத நேரத்தப் பாரு, நீங்க ஏறுங்க சூரி” என்றார் பூசை சார். எம் எஸ் சி சார் நம்பவே முடியாத பார்வையோடு பிரேமைப் பார்த்தவாறே பைக்கில் ஏறி அமர பைக் ராஜபாளையம் சாலை நோக்கி பறந்தது. வீதி திரும்பும்வரை நெருப்பினாலான கூரிய அம்பு முதுகில் துளைப்பது போல பிரேமின் பார்வையை எம் எஸ் சி சார் உணர்ந்தார். திரும்பி பிரேமைப் பார்க்க பலதடவை முயற்சித்தும் இயலாமலாகி பூசை சார் முதுகில் நெற்றியை வைத்து தலை துவளாமல் சமாளித்துக் கொண்டார். அன்றுதான் எம் எஸ் சி சாரை நாங்கள் தெய்வநல்லூரில் கடைசியாகப் பார்த்தது. 

இதன்பின் நடந்தவை வெறும் தகவல்கள்தான். ஒரு விஷயம் சொல்ல வேண்டுமென்றால் கலையக்கா உடல் ஏன் அவ்வளவு விரைவாக எடுத்துச் செல்லப்பட்டது என்ற ஐயம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். உடற் கூராய்வுக்கு உடல் உட்படுத்தப்பட்டால் உடலின் பாகங்கள் வெளியே தங்கி விடும், ஈமச் சடங்குகள் முழுமையடையாது என்ற விசித்திர நம்பிக்கை அன்று தெய்வநல்லூரில் இருந்தது. கூடவே பெண்கள், அதுவும் இளம்பெண்கள், உடற்கூறு ஆய்வு மேடையில் ஆடையின்றி கிடத்தப்பட்டிருப்பது அவர்கள் கற்புக்கு கேடு எனவும் ஆய்வு முடிவுகள் தெய்வநல்லூரில் நோ பல் பரிசு பெற்ற கிழவர்களால் பரப்பப்பட்டு வந்ததும் தான் இப்பதட்டத்துக்கு காரணம். தகவல் கிடைத்து வந்த காவல்துறை வந்து தமிழக்கா உடலை கைப்பற்றியது. விரைந்து சென்றுமே கலையக்கா உடலை எரிசிதையில்தான் பார்க்க முடிந்தது காவல்துறையால். தொடர்ந்து கலையக்கா ஆட்களால் விசாரிக்கப்பட்டு எம் எஸ் சி சார் சந்தேக வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டாலும் அவர்களுக்கு எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை.  எம் எஸ் சி சாரை கலையக்கா ஆட்கள் தேடுவார்கள் என கணித்த பூசை சார் வழக்கமாக எம் எஸ் சி சார் செல்லும் புளியங்குடி சாலையில் செல்லாமல்   ராஜபாளையம் சாலையில் பைக்கை விட்டு ராஜபாளையம் போய் அங்கிருந்து மதுரைக்கு எம் எஸ் சி சாரை பேருந்தில் ஏற்றி விட்டார். மதுரையிலிருந்து நெல்லை வந்து சங்கரன்கோவில் மார்க்கமாக புளியங்குடி போய் சேர்ந்தார் எம் எஸ் சி சார். ஒரு மாத மருத்துவ விடுப்புக்கு எழுதி அளித்த பின்பே கிளம்பியிருந்தார் அவர்.  டிரிப்பிள் எஸ் சார், கலையக்கா உறவினர்கள், தோழரண்ணன், பாலாஜி அண்ணன் ஆகியோர் மிக முயற்சித்தும் எம் எஸ் சி சார்  மேல் எவ்வித ஆதாரமும் இல்லை என்பதால் நடவடிக்கை எதுவும் எடுக்க முடியவில்லை. எம் எஸ் சி சார் மருத்துவ விடுப்பில் இருக்கும்போதே மாவட்ட கல்வி அதிகாரி மூலம் வேறு ஊருக்கு மாறுதல் வாங்கிக் கொண்டார். அடுத்த ஆறு மாதங்கள் கழித்து அவருக்கு தென்காசியில் அமர்க்களமாக திருமணம் நடந்தது. அரசியல் அழுத்தம் காரணமாக காவல்துறையும் இந்த வழக்கை மெத்தனமாகவே கையாண்டது. தோழரண்ணன் தலைமையில் தெய்வல்லூர் பொதுப்பணித்துறை ஆய்வுமாளிகை முன்பு “இரட்டைக் தற்கொலைகளுக்கான நீதி “ கேட்டு நடந்த போராட்டம் கூட காவல்துறையை அசைக்கவில்லை. தற்கொலைக்கான குறிப்புகள் எதுவும் இல்லாததால் தமிழக்கா அடையாளம் தெரியாத இளைஞருடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் தற்கொலை முடிவெடுத்ததாகவும், இணை பிரியா தோழி எனும் முறையில் தோழிக்காக கலையக்கா தானும் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் வழக்கு முடிக்கப்பட்டது. மெலிந்து, தாடி அடர்ந்திருந்த சிக்கனம் பிள்ளை மட்டும் காவல் நிலைய வாசலில் “எம் புள்ள மேல அநியாய பழி போட்டா கேஸை முடிக்கணும். உங்களல்லாம் அந்த அலங்காரி ஒருநா கேப்பா” என கண்ணீர் மல்கி திரும்பினார். 

பின்மதிய வேளைகளில் யாருமற்ற தனிமையில் கீழச் சந்தில் சிக்கனம் பிள்ளை வீட்டு வாயிலில் தமிழக்கா தென்பட்டு மறைவதாக சிலர் சொல்ல ஆரம்பித்தார்கள். எவருமே மதியப்பொழுதுகளில் அந்தச் சந்தில் செல்லாமலானார்கள். ஒருசில நாட்களில் பின்மதியப்பொழுதுகளில்  சிக்கனம் பிள்ளை வீட்டு தெரு வாசலில் வாரப்படாத பரட்டைத் தலை, வெறுமே உடலில் சுற்றிய சேலை, பேசுவதை நிறுத்தி விட்ட, எவரையும் அடையாளம் காணாத வெறித்த பார்வையுடன் கையில் சொம்பு நிறைய தண்ணீருடன் சந்தினை வெறித்து நிற்கும் தமிழக்காவின் அம்மா அதிகமாக பயமுறுத்தினார். அடுத்த ஐந்தாண்டுகள் அப்படியே இருந்த அவர் ஒரு நாளில் தெருவாயிலில் சொம்புத்தண்ணீருடன் சரிந்து விழுந்து இறந்து போனபின் சிக்கனம் பிள்ளை திருவண்ணாமலை செல்வதாகச் சொல்லி கிளம்பியவர் இன்றுவரை தெய்வநல்லூர் திரும்பவில்லை. இந்தச் சூழலை மாற்றியிருக்கக்கூடிய அந்தக் கடிதம் என்ன ஆனதென்று தெரியவில்லை. அப்படி ஒன்று கிடைத்தது போல ஜெயராஜ் சார் நடவடிக்கைகளும் இல்லை. இன்றுவரை அக்கடிதம் இருந்த குறிப்பேடு என்ன ஆனது என்பதை எங்களால் கண்டறிய முடியவில்லை. ஆனால் எங்கள் மூவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக அக்கடிதம் எங்கள் நினைவிலும், கனவிலும் பத்திரமாக இருக்கிறது. 

அடுத்த பதினைந்து நாட்களில் பொதுத்தேர்வு எனும் சூழலில்தான் இவை அனைத்தும் நடந்தன. பிரேமுக்கு அன்று  இரவே கடும் காய்ச்சல் கண்டது. “அவ என் ஃப்ரண்ட்டு இல்லையாக்கா”, “வணக்கம் சார்”, “க்கா..கா…” என்றெல்லாம் பிரேம் காய்ச்சலில் பிதற்ற அவர் பாட்டியின் மந்திர ஜபம் ஓரளவே உதவியது. மறுநாள் உள்ளூர் தங்கமணி டாக்டர் ஆலோசனையின் பேரில் தென்காசி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் பிரேம். இரண்டு நாட்கள் அரைகுறை நினைவுகளோடு பிதற்றிக்கொண்டிருந்த பிரேம் நான்கு நாட்களில் வீடு திரும்பினார். பிரேம் வீடு திரும்பிய இரண்டாம் நாளில் பிரேம் அப்பாவும் ஊருக்குத் திரும்பினார். எங்களையெல்லாம் சந்தித்த அவருக்கு யார் பெயர் எது எனத் தெரியவில்லையே தவிர நாங்கள் செய்ததெல்லாம் தெரிந்திருந்தது. பிரேம் இல்லாதபோது எங்களை உட்கார வைத்து பாலாஜி அண்ணனுடன் சேர்ந்து நடந்த விவரங்கள் அனைத்தையும் கேட்டுத் தெரிந்து கொண்டார். கடித விவகாரம் மட்டும் எங்களால் சொல்லப்படவில்லை. சங்கீதாவை தான் பார்க்க முடியாமல் போனது குறித்து பிரேம் அப்பா மிக வருந்தினார்.

குளிரில் நடுங்கும் பறவை போல அமர்ந்திருந்த பிரேமுடன் நாங்கள் தொடர்ந்து பேசி, சேர்ந்து படித்து வருவதை அவர் உற்சாகப்படுத்தினார். அவரே எங்களுக்கு டீ எல்லாம் போட்டுக்   கொண்டுவந்தார். வெளிநாட்டு சாக்லேட்டுகளை வாழ்நாளில் இரண்டாம் முறையாக நாங்கள் ருசித்தது  அப்போதுதான் (யக்கா அப்பா வரும்போது கொண்டுவருவதில் எங்களுக்கும் சிறு பங்கு உண்டு). தேர்வு நெருங்குகையில் எங்கள் அனைவருக்கும் பேனா, பென்சில், ஜாமெட்ரி பாக்ஸ் புதிதாக வாங்கிக் கொடுத்தார். பிரேம் காய்ச்சலிலிருந்து மீண்டு விட்டாலும் மிகச் சோர்வாக இருந்தார். அந்தச் சோர்வோடுதான் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதி முடித்தார். தேர்வு முடிந்து ஒரு வாரம் ஆனதும்தான் எங்களுக்கு அந்த இடி போன்ற செய்தி வந்தது.  

பெரிய மனிதர்களிடம் சொல்வதைப் போல எங்களை உட்கார வைத்து பிரேமின் உடல்நலம், மனநலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தாம் குடும்பத்துடன் திருநெல்வேலிக்கு போகப்போவதாக சொன்னார் பிரேம் அப்பா. தன்னுடைய பணிக்கான இடமும் அங்குதான் இருப்பதாகத் தெரிவித்த அவர் பாட்டியும் அங்கு வர ஒப்புக் கொண்டு விட்டதாக சொன்னார் (சீச்சு, இங்கேயே, உங்கப்பா போன எடத்துலயே நானும் பஸ்மமாயிடணும்னுதான் பிடிவாதமா இருந்தேன். இவனப் பாக்க பாக்க மனசு ஒழண்டு போறதேடா… போனவா நெனப்புல, இருக்கறவாள உபத்திரவம் செய்யலாமோ? போறது போ… நானும் வந்துடறேன் உன்னோட. ஆனாக்க ஒண்ணு மட்டும் செய்வியா? நீ செய்வேன்னு நேக்கு தெரியும். என் த்ருப்திக்கு சொல்லிக்கறேன். நான் போயிட்டா எங்க வேணா காரியம் பண்ணு. ஆனா என்னோட பூத பஸ்மத்தை மட்டும் நம்ம மாடநதில கரைச்சிடு. கல்யாணம் ஆகி வந்து புதுசுல உங்கப்பா என்னைக் கூட்டிக்கிண்டு போன முதல் இடம் மாடநதி படித்துறைதான்… யக்ஞம், என்னடா முழங்கால் தண்ணி கூட ஓடலையேன்னு யோசன பண்ணாதடி. எங்கப்பா இதுலதான் கரைஞ்சு நிக்கறார். எங்கம்மா அவரோட கரஞ்சு இங்கேயே இருக்கா. எறங்கி உக்காந்தா அவா மடில ஒக்காந்துண்டாபோல இருக்கும்… நான் போனாலும் இங்கேயே கரைச்சிடுடி யக்ஞம், நானும் இங்கேயே அவாளோட இருந்துப்பேன்னார். முடியாம ஆனப்புறம் அப்பா சொல்லுவார், இங்கே கரைச்சிட்டா போறும், சீச்சு நேக்கு தெவசம் கூட பண்ண வேண்டாம்டின்னு. அவர் ஆசப்படி நீதான் அவரைக் கரைச்சிட்டு வந்த. அவரோடயே நானும் போய்சேரணுமில்லையா? காத்துண்ட்ருப்பர்.  இங்கேயே என்னைக் கரைச்சிடு சீச்சு! கங்கைல கூட கரைக்க வேண்டாம்டா சீச்சு!   – பிரேமின் பாட்டி யக்ஞலக்ஷ்மி).

பிரேம் கிளம்பும் தேதி முடிவாகியது. பிரேம் எங்களுடன் நாங்கள் சென்ற, விளையாடிய எல்லா இடங்களுக்கும் செல்ல வேண்டுமென ஆசைப்பட நாங்கள் அவரை எல்லா இடங்களுக்கும் அழைத்துச் சென்றோம். பெரிய கோவில் சபேச குருக்கள் சொன்னதுதான் பொருத்தமாக இருந்தது – “பிரேம், பகவான் சின்ன வயசுல சோதிச்சுட்டான்னா நல்லது. பின்னால நன்னா வச்சிப்பான். ஒனக்கு சோதனைகள் ரொம்பவே பண்ணிபிட்டான். இருக்கட்டும், அவ்வளவுக்கவ்வளவு இனி நீ க்ஷேமமா இருப்ப. நீங்க எல்லாருமே அவன விடாதைக்கு அவன் கூடவே இருந்து அவன தைரியமா பாத்துண்டீங்களேடா, கெட்டிக்கார பயலுகடா நீங்கல்லாம். பகவான் உங்களையும் எந்த குறையும் இல்லாம வச்சிப்பான்”. யக்கா பாட்ஷா இன்றுவரை பெரியகோவில் சென்று வருகிறார். பிரேம் கடைசியாக போக வேண்டும் எனக் கேட்ட இடம் திருமால் கோனார் கிணறு. சிவாஜி கடுமையாக மறுத்தார். ஆனால் பிரேம் மிக வற்புறுத்தவே வீட்டிற்குத் தெரியாமல் அவரை அழைத்துச் சென்றோம். எவ்வித மனிதச் சலனமும் இல்லாத முன்காலைப் பொழுதில் அக்கிணறு முன்பு வந்த பிரேம், அக்காக்கள் கிடத்தப்பட்டிருந்த சால் மேட்டையே உற்றுப் பார்த்த வண்ணம் நின்றார். கண்களில் நீர் வழிய “ஸாரி அக்கா, ஸாரி அக்கா” என இருமுறை முணுமுணுத்தார். “வேணும்னு அப்டி யோசிக்கலைக்கா. ப்ளீஸ்க்கா , ஸாரிக்கா” என்றவர் நீர் வழியும் கண்களை மூடியபடியே நின்றார். இலங்குளக் கரையிலிருந்து ஒரு குளிர்காற்று சட்டென எங்களைத் தழுவிச் செல்ல கிணற்றுக்கரை வேப்பமரத்தின் பூக்கள் பிரேம் மீது பரபரவென உதிர்ந்தன. 

அதற்கடுத்த நாள் கிளம்பிய பிரேமை நாங்கள் வழியனுப்பி வைத்த போது பிரேம் எங்கள் ஒவ்வொருவரையும் அணைத்துக் கொண்டார்.  புளியங்குடியிலிருந்து வந்திருந்த வாடகைக் காரின் பின்கண்ணாடி வழியே கண்ணீர் வழிய கையாட்டியபடியே  சென்ற பிரேம் அதன்பின் இன்றுவரை தெய்வநல்லூர் திரும்பி வரவேயில்லை. அவரை வழியனுப்பி விட்டு திரும்பியபோது பூட்டிக் கிடந்த பிரேம் வீட்டின் வெறுமையைப் பார்க்கவும் எங்கள் அனைவருக்குமே அழுகை வந்தது. ஒரு மாதம் வரை எங்களால் இயல்பாகவே இருக்க முடியவில்லை. ஒவ்வொரு மாலையும், வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் பிரேம் வீட்டில் கூடி அன்றைய தினத்தை திட்டமிட்டு கொண்டாடி நான்காண்டுகளைக் கழித்த எங்களுக்கு இப்போது என்ன செய்வதேன்றே தெரியவில்லை. சிவாஜிதான் சற்று தாக்குப் பிடித்து பிரேம் சொல்லியபடி கிளை நூலகம் செல்லும் யோசனையைச் சொல்ல எங்கள் விடுமுறை நூலகத்தில் கழிந்தது. பத்தாம் வகுப்பு முடிவுகள் வந்தபோது பிரேம் சிவாஜியை விட குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தார். என்னை விட 6 மதிப்பெண்கள் மட்டுமே அதிகம். பள்ளியின் முதல் மதிப்பெண் பெற்றவராக சிவாஜி தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டப்பட்டார் (அந்த சான்றிதழை பள்ளியிலேயே விட்டுவிட்டு வந்தார் சிவாஜி).

எங்களுடன் தொடர்ந்து கடிதப்போக்குவரத்தில் இருந்தார் பிரேம். சட்டக் கல்லூரி படிப்பு முடிக்கும் வரை அமுக்கு டப்பாவுக்கு (சிவாஜி அப்பாவும், பிரேம் அப்பாவின் பால்ய நண்பருமான சாத்தையாவின் வங்கிக் கணக்கு வழியே) பிரேம் அப்பா உதவி வந்தார். பள்ளிப் படிப்பை விட்டுச்சென்ற எங்கள் பழைய நேரு அணியினரும் எங்களுடன் நட்பில் இருப்பதால் அவர்கள் தொழிலில், வாழ்க்கையில்  அடையும் ஒவ்வொரு மாற்றத்தையும் எங்களிடம் சொல்ல நாங்கள் எழுதும் கடிதம் வழியே  பிரேமுக்கு அவற்றை தெரியப்படுத்தி வந்தோம். பிரேமிடமிருந்து தகுந்த ஆலோசனைகளும், உதவிகளும் அவர்களுக்கும் கிடைத்து வந்தன, வருகின்றன. நாங்கள் கல்லூரிப் படிப்புக்கு நுழைகையில் எந்தப் பிரிவை தேர்ந்தெடுக்கலாம் என்பது போன்ற விஷயங்களில் பிரேம்தான் வழிகாட்டினார். +2 வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற பிரேம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசு ஒதுக்கீட்டில் இருக்கையைப் பெற்று படித்தார். அவர் விடுதியில் இல்லாமல் தனியே இன்னொரு நண்பருடன் வெளியே அறை எடுத்து தங்கியிருந்தபோதுதான் அவர் அழைப்பின்பேரில் எங்களது முதல் சென்னை பயணம் நிகழ்ந்தது. இப்போதும் பிரேமின் கல்லூரி நண்பர்கள் அனைவருமே எங்கள் நட்பு வட்டத்தில் உண்டு (ஆனா சிவாஜி மாப்ள, ஒங்க ஸ்கூல் லைஃப்ல நான் கூட இல்லையேன்னு செம ஃபீல் ஆகுது. நாலு வருஷ கதைய 40 வருஷம் ஆனாலும் புதுசா பேசுவீங்க போல… லைட்டா காண்டாகுது மச்சி என் ஸ்கூல் லைஃப்ப நெனச்சா – பிரேமின் அறைத்தோழரும், தற்போது புகழ் பெற்ற நிறுவனத்தின் ஆசியா பஸிபிக் பிராந்திய தலைவராகவும் இருக்கும் அரவிந்த் சிவக்குமார்).

எங்களுக்கெல்லாம் முதன்முதலாக ஈமெயில் ஐடி உருவாக்கிக் கொடுத்ததும் பிரேம்தான். இன்று வாட்ஸப் வரை நாங்கள் தொடர்ந்து சேர்ந்திருப்பதன் காரணமும் அவர்தான். சிவாஜி, அமுக்கு டப்பா, யக்கா, சேமியா, ஜெபமணி, தெண்டிலு, டும்ரீக்கோல், முட்ட ராமர், நான் ஆகியோர் வேலைகளில் சேர்ந்து நாட்டின் ஒவ்வொரு மூலைகளில் இருந்தாலும் இன்னும் ஆண்டிற்கொருமுறை தெய்வநல்லூரில் நேரில் சந்தித்து கொண்டாடுகிறோம். ஈத்தக்குச்சி, கிடா, ஊளப்பால், டொம்ப்ளி, நியூஸ், மு மா போல தெய்வநல்லூரிலேயே வசிக்கும் நண்பர்களும் எங்களுடன் உண்டு. அவர்கள் பிள்ளைகள் படிப்பிலிருந்து பல உதவிகளும் எங்களால் செய்யப்படுகின்றன. (ஹெல்ப்னு சொல்ல வேண்டாம் சிவாஜி, நம்ம ரெஸ்பான்ஸிபிலிட்டின்னு எடுத்துப்போம், அப்டியே சொல்லுவோம் – பிரேம்) பிரேம் தெய்வநல்லூர் வருவதில்லை என்பதால் அவர் அமெரிக்காவிலிருந்து இந்தியா வரும்போது ஏதாவது ஒரு இடத்தில் சந்தித்து இரு நாட்கள் தங்கி கொண்டாடுகிறோம். எல்லோருக்கும் திருமணமாகி விட்டது. எல்லோர் குடும்பங்களுக்கும் பிற அனைத்து குடும்பங்களையும் நெருக்கமாக தெரியும். இப்போதும் எங்கள் மனைவியர் தனி வாட்ஸப் குழுமம் வைத்து பேசிக்கொள்கிறார்கள். எங்கள் தெய்வநல்லூர் பற்றி நாங்கள் பேச ஆரம்பித்தாலே கிண்டல் செய்கிறார்கள். அதற்காக தெய்வநல்லூரை பேசாமல் இருக்க முடியுமா? சேமியா சொல்வதைப் போல “சொர்க்கமே என்றாலும் நம்மூரப்  போல வருமா?” என்ற இளையராஜாவின் ஆத்மராகப் பாடலை “சொர்க்கமே என்றாலும் தெய்வ நல்லூரப் போல வருமா?” என மாற்றினாலும் ஸ்ருதி பிசகாதுதானே? 

(முற்றும்)

தெய்வநல்லூர் கதைகள்

தெய்வநல்லூர் கதைகள்- 33
Exit mobile version