- ஜப்பானியப் பழங்குறுநூறு
- துயரிலும் குன்றா அன்பு
- உனக்காக உறைபனியில்
- நீ காத்திருக்கப் பொறுக்கிலேன்
- கடவுளும் காணா அதிசயம்
- கனவிலேனும் வாராயோ?
- எத்தனை காலம்தான் தனித்திருப்பேனோ?
- உயிரையும் தருவேன் உனைக்காண
- நீ வருவாயென!
- மலைவளி வீழ்த்து தருக்கள்!
- துயர் கூட்டும் நிலவு
- செவ்விழையினும் உயர்ந்த செவ்விலை
- ஊற்றுநீர் அன்ன தூய இதயம்
- குளிரில் தனிமை கொடிது
- வெண்பனியா வெண்மலரா?
- பிரிவினும் உளதோ பிரிதொன்று?
- நிலவு ஒரு பனியாகி
- மலையாற்றின் இலையணை
- சக்குராவின் சலனம்
- நீண்ட வாழ்வே சாபமோ?
- மனித மனமும் மலர் மணமும்
- கோடைநிலா எங்கே?
- புல்நுனியில் பனிமுத்து
- கொடிவழிச் செய்தி
- இறை நின்று கொல்லுமோ?
- காணும் பேறைத் தாரீரோ?
- சொல்லாத காதல் எல்லாம்
- காதல் மறைத்தாலும் மறையாதது
- காற்றினும் கடியது அலர்
- மறவேன் பிரியேன் என்றவளே!
- காதல்வலி விதைக்கும் வெறுப்பு
- தேடலும் மறத்தலும்
- ஜப்பானிய பழங்குறுநூறு 47-50
- வலிவிடு தூது
- வாள்போல் வைகறை
- நெஞ்சம் மறப்பதில்லை
- நிலவினும் நெடிது!
- இடம் மாறினும் மணம் மாறுமா?
- காவலும் தாண்டுவது காதல்
- பனிவிலகலில் அக்கரை வெண்மை
- எனக்கெனவே மலர்ந்தாயோ?
- விழியிலிருந்து நினைவுக்கு
- உள்ளும் புறத்தும் தனிமையே!
- காதல்மொழிகள் கடலலை போலே!
- கேட்டதும் கிடைத்ததும்
- துள்ளிவரும் வெள்ளலையே!
- இடம்பெயரும் புள்ளினங்காள்!
- மைக்குழற் செறிவன்ன காதல்
- துயரறுத்தலே துயரமோ?
- உள்ளத்தில் உள்ளேனா?
- தூவானமும் வெண்வானமும்
- ரகசியமானது காதல்
- உடைகளும் சுமையடி தனிமையிலே!
- காலமென்ற தேரே, ஓடிடாமல் நில்லு!
- துன்பம் போக்குவதே தூயப்பணி
- எரிதழல் உள்ளம்
- துயர்சூழ் உலகில் தனிமை
மூலப்பாடம்:
கான்ஜி எழுத்துருக்களில்
憂かりける
人を初瀬の
山おろしよ
はげしかれとは
祈らぬものを
கனா எழுத்துருக்களில்
うかりける
ひとをはつせの
やまおろしよ
はげしかれとは
いのらぬものを
ஆசிரியர் குறிப்பு:
பெயர்: புலவர் தொஷியோரி
காலம்: கி.பி 1055-1129.
இத்தொடரின் 71வது பாடலை இயற்றிய ட்சுனேனொபுவின் மகன். கவிதைகளை நேசித்த பேரரசர் ஹொரிகவாவின் அரண்மனையில் அரசவைப் புலவராக இருந்தார். இவரது புலமையைக் கண்டு ஹொரிகவாவின் தந்தை பேரரசர் ஷிராகவா சமகாலத்திய பாடல்களைத் தொகுக்குமாறு கூறினார். அதற்கேற்ப இவர் தொகுத்ததுதான் கின்யோஷு தொகுப்பு. இது தவிரத் தன்னார்வத்தால் தொஷியோரி ஜுய்னோ என்றொரு தனிப்பாடல் திரட்டையும் தொகுத்தார். அதுவரை இயற்றப்பட்டு வந்த பாவகைகளிலிருந்து மாறிப் புதிய பாவகையை இவர் அறிமுகப்படுத்தியபோது சமகாலத்திய புலவரான மொத்தோதொஷியால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு அறிஞர்களிடையே விவாதப் பொருளானது. இருப்பினும் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பல பாடல்கள் அவ்வகையில் இயற்றப்பட்டன. ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 210 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
பாடுபொருள்: கேட்ட வரம் கிடைக்காமல் வருந்துதல்.
பாடலின் பொருள்: என் காதலி என்னிடம் அன்பாக இருக்க உன்னிடம் வேண்டினேன். ஆனால் இந்த ஹட்சுசே மலையில் வீசும் குளிர்காற்று அதிகரித்துக்கொண்டே வருவதுபோல் அவளது வெறுப்புதான் அதிகரித்து வருகிறது.
இன்றைய நரா மாகாணத்தில் ஹசேதெரா என்றொரு புகழ்பெற்ற கோயில் உள்ளது. இதில் புத்த மதத்தின் ஒரு பிரிவான ஷிங்கோன் பிரிவின் தலைவரான போதிசத்துவரின் 11தலைச் சிற்பம் உள்ளது. ஜப்பானில் போதிசத்துவர் இடுக்கண் வருங்கால் காக்கும் கடவுளாக நம்பப்பட்டவர். அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த பிற கோயில்களைவிட இக்கோயில் அற்புதங்களை நிகழ்த்தவல்லது என ஜப்பானியர்கள் நம்பினர். இப்பாடலின் ஆசிரியர் முன்பு தனது காதலியின் வெறுப்பைக் குறைக்கப் போதிசத்துவரிடம் வேண்டியிருக்கிறார். ஆனால் அது குறையாமல் வளர்ந்துகொண்டே வருவதைக்கண்டு அடுத்தமுறை இக்கோயிலுக்கு வந்தபோது இப்பாடலை இயற்றினார். வளர்ந்துகொண்டே வரும் காதலியின் கோபத்தை அதிகரித்துவரும் மலைக்காற்றுடன் ஒப்பிட்டுள்ளார்.
வெண்பா:
மலையினில் வீசும் வளியின் எதிராய்ச்
சிலையவள் சீற்றம் தணிய – நிலையுதல்
வேண்டியே வந்தனன் உன்னிடம் ஆயினும்
மாறிற்றே கேட்ட வரம்
நிலையுதல் – நிலைமை சீரடைதல்
பனித்துளியன்ன உறுதிமொழி
மூலப்பாடம்:
கான்ஜி எழுத்துருக்களில்
契りおきし
させもが露を
いのちにて
あはれ今年の
秋もいぬめり
கனா எழுத்துருக்களில்
ちぎりおきし
させもがつゆを
いのちにて
あはれことしの
あきもいぬめり
ஆசிரியர் குறிப்பு:
பெயர்: புலவர் மொத்தோதொஷி
காலம்: கி.பி 1060-1142.
முந்தைய பாடலின் ஆசிரியர் அறிமுகப்படுத்திய புதிய பாவகையை விமர்சித்தார் என்று பார்த்தோமல்லவா? அவர்தான் இப்பாடலின் ஆசிரியர். சமகாலத்தில் சிறந்த புலவராக மதிக்கப்பட்டுப் பல்வேறு கவிதைப்போட்டிகளுக்கு நடுவராகவும் இருந்திருக்கிறார். அரண்மனையில் அமைச்சராக இருந்த தொஷிய்யே என்பவரின் மகனாகவும் அரசுப்பணியிலும் இருந்தாலும் தனது கவிதை ஆர்வத்தாலோ என்னவோ உயரிய பொறுப்புகளுக்குச் செல்லும் விருப்பின்றி இருந்தார். கி.பி. 1138ல் தனது 80வது வயதில் கக்குஷின் என்ற பெயரில் புத்தத்துறவியானார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக இவரது தனிப்பாடல் திரட்டு ஒன்றும் 105 பாடல்களும் இடம்பெற்றுள்ளன. காலத்தால் பிற்பட்ட சிறந்த 36 புலவர்களில் ஒருவராக இடம்பெற்றுள்ளார்.
பாடுபொருள்: அளிக்கப்பட்ட உறுதிமொழி நிறைவேறாமல் வருந்துதல்.
பாடலின் பொருள்: என்னை நம்பு; நிறைவேற்றுகிறேன் என்றீர்கள். ஆனால் ஒவ்வோர் ஆண்டும் பனிகாலத்தில் புற்களின்மேல் அமரும் பனித்துளிகள் விரைவில் மறைவதுபோல் மறைந்து இவ்வாண்டும் இலையுதிர்காலம் வந்துவிட்டது.
இப்பாடலுக்கு ஒரு சுவையான பின்புலம் உள்ளது. இப்பாடலாசிரியரின் சமகாலத்தில் அரண்மனையில் மிகவும் வலிமைவாய்ந்த அமைச்சராக இருந்தவர் ததாமிச்சி என்பவர். அவரிடம் இவர் ஒரு வேண்டுகோள் வைக்கிறார். நரா என்னுமிடத்திலிருந்த கொஃபுகுஜி என்ற கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் இலையுதிர்காலத்தில் யூய்மா என்றொரு திருவிழா நடைபெறும். இது மகாயான புத்தமதத்தின் விமலகீர்த்தி எனும் திருவிழாவாகும். இதில் எல்லா நாட்களும் மாலையில் கதாகாலட்சேபம் நடத்தப்படும். அதில் கதைசொல்லியாக வாய்ப்புப்பெற அறிஞர்களுக்குள் மிகப்பெரிய போட்டியே நடக்கும். அந்த ஆண்டு நடைபெறும் விழாவில் தனது மகனைக் கதைசொல்லியாக நியமிக்க அமைச்சர் ததாமிச்சியிடம் இப்பாடலாசிரியர் வேண்டுகோள் வைக்கிறார். ததாமிச்சியும் தன்னை நம்பினோர் கைவிடப்படார் என்ற தொனியில் உறுதியளிக்கிறார். ஆனால் நிறைவேற்றவில்லை. அந்த வருத்தத்தால் இப்பாடலை இயற்றினார். நினைவூட்டல் என்றும் கூறுகிறார்கள்.
நீர்மேல் எழுதிய எழுத்துபோல் உறுதிமொழி பொய்யானதைப் பகலவன் வரும்வரை புல்லின் நுனியில் பனித்துளிகள் அமர்ந்திருந்து பின்னர் மறைவதை ஒப்பிடுகிறார். இங்கு புல் என்பதற்கு ஆர்ட்டெமிசியா என்ற வகையைச் சேர்ந்த தாவரத்தைக் குறிப்பிடுகிறார். இத்தாவரம் ஏற்கனவே இத்தொடரின் 51வது பாடலிலும் (வலிவிடு தூது) இடம்பெற்றிருக்கிறது.
வெண்பா:
நம்புவாய் என்றதும் நம்பினேன் ஆயினும்
வெம்புதல் மட்டுமே மீதமாய்ச் – செம்பரிதி
கண்டிடில் மாயமாய் மாய்ந்திடும் புல்மேல்
பனித்துளி ஒத்ததும் வாக்கு
(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)
