- அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம்
- செயற்பாலது ஓரும் அறன்
- நுண்பொருள் காண்பது அறிவு
- வகையறச் சூழ்ந்தெழுதல்
- தூய்மணி சிந்திடும் தோய்ந்த நெருப்பு
- ஒருமையுள் ஆமைபோல்
- நெஞ்சம் நிமலமாய் நிலைபெறின்…
- எழுதாக்கிளவியும், ஏனைய நூற்களும்
- கர்மத்தின் வகையறிதல்
- செயல் என்னும் நிவேதனம்
- ஒன்றே நினைந்திருக்க உள்ளம் கனியும்
- ஞானம், ஞேயம், ஞானகம்யம்
- சத்யம், ஞானம், அனந்தம் பிரம்ம
- ஆனந்தம் பிரம்மனோ வித்வான்
- சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
- கீதா முகூர்த்தம்
- நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
- புத்தியில் நிலைத்தவன்
- இறை உறையும் இடம்
- மேலே வேருள்ள அஸ்வத்தம்
- அறங்களனைத்தையும் கைவிடுக!
- இணைபிரியாத இரு பறவைகள்
அத்வைத வேதாந்தக்கல்வியின் அடிப்படை நூல்களாக பிரஸ்தான திரயம் பயிலப்படுகிறது. பகவத் கீதை, உபநிஷதங்கள், மற்றும் பிரம்ம சூத்திரங்கள் ஆகிய மூன்று நூல்களின் தொகுப்பே பிரஸ்தான திரயம் எனப்படும். இந்நூலின் முற்பகுதிகளில் பகவத் கீதை கூறும் அத்வைத தத்துவம் பற்றி விரிவாகப் பார்த்தோம். இப்போது உபநிஷதங்கள் குறித்து பார்க்கவிருக்கிறோம். எண்ணற்ற உபநிஷதங்கள் இருந்தபோதிலும் அத்வைத நோக்கில் சங்கரர் உரை எழுதிய பத்து உபநிஷதங்களையும் கற்பது மரபாக இருந்து வருகிறது. வியாசரின் பிரம்மசூத்திரங்கள் இந்த பத்து உபநிஷத்துக்களைப் பற்றியும் பேசுவதால் சங்கரர் இவற்றுக்கு உரை எழுதி அத்வைத தத்துவத்தை நிறுவுகிறார். ஈச, கேன, கட, பிரஸ்ன, முண்டக, மாண்டூக்ய, தைத்திரீய, ஐதரேய, சாந்தோக்ய, மற்றும் பிருஹதாரண்யகம் ஆகியன அந்த பத்தும்.
முதலில் உபநிஷத் என்ற சொல்லுக்கான பொருளைப் பார்ப்போம். இச்சொல்லை உப+நி+ஷத் என்று மூன்று வேர்ச்சொற்களாகப் பிரிக்கலாம். உப என்றால் அருகில் என்று பொருள். இது ஆசிரியரின் அருகமர்ந்து கற்றலைக் குறிக்கிறது. மேலும் நமக்கு மிக, மிக அருகில் உள்ள ஒரு பொருளையும் இது குறிக்கிறது. நமக்கு மிக அருகில் உள்ள பொருள் எது? நம் உடலை விடவும், மனத்தை விடவும், அகங்காரத்தை விடவும் நமக்கு மிக அருகில் இருப்பது ஆத்மா எனப்படும் நாமேதான். எனவே உப என்ற வேர்ச்சொல் ஆத்மாவுக்கு அருகில் செல்லுதலைக் குறிக்கிறது. நி என்ற சொல் நிச்சயம் என்ற பொருளுடையது. ஐயமற்ற, ஒருமுகப்பட்ட மனதுடனும், அசையாத நம்பிக்கையுடனும் வேதாந்த விசாரணையில் ஈடுபடுதலைக் குறிக்கிறது இச்சொல். மேலும், உபநிஷத் கல்வியின் மூலம் பெறும் அறிவு நிச்சயமானது, அறுதியானது என்பதையும் இது குறிக்கிறது.
தனது உபநிஷத உரைகளில் சங்கரர் ஷத்(சத்) என்ற வேர்ச்சொல்லுக்கு மூன்று முக்கியமான பொருட்களை அளிக்கிறார். சத் என்றால் விசரணம், அவசாதனம், கமனம் என்று பொருள். விசரணம் என்பதற்கு வேரோடு பிடுங்குதல் என்று பொருள். அதாவது வேதாந்தக் கல்வி அறியாமையை வேரோடு பிடுங்கிவிடும் என்று இதற்கு அர்த்தம். அவசாதனம் என்பதற்கு அசைத்தல், தளர்த்துதல் என்று பொருள். இக்கல்வி ஒருவனை உலகியல் ஆசைகளிலும், முக்குணங்களின் பிடியிலும், கர்மவினைகளிலும் பிணைத்திருக்கும் கட்டுக்களை மெல்லத் தளர்த்தி, மனதின் விகாரங்களை செயலிழக்கச் செய்கிறது. கமனம் என்றால் கொண்டுசேர்த்தல் என்று பொருள். வேதாந்தக் கல்வி ஒருவனை அவனுடைய உண்மையான சொரூபமான ஆத்மாவில் அல்லது பிரம்மத்தில் கொண்டு சேர்க்கிறது. தான் வேறு, பிரம்மம் வேறு என்ற எண்ணத்தை நீக்கி நான் பிரம்மமே என்பதை உணரச்செய்கிறது. எனவே உபநிஷத் என்ற சொல்லுக்கு ஆசிரியரின் அருகிலமர்ந்து, அறியாமையை அழித்து, ஆத்மாவிடம் கொண்டு சேர்க்கும் நிச்சயமான அறிவை அடைதல் என்பதாகும்.
எல்லா உபநிஷத்துக்களும் ஒரு சாந்தி பாடம் அல்லது சாந்தி மந்திரத்துடன் துவங்கும். சாந்தி என்பதற்கு நிவிருத்தி அல்லது தடை நீங்குதல் என்று பொருள். உபநிஷதக் கல்வியைத் துவங்குமுன் ஆசிரியர், மாணவன், மற்றும் அவர்களுக்கிடையில் நிகழப்போகும் கல்வி ஆகியவற்றுக்குத் தடையாக அமையக்கூடும் விஷயங்களிலிருந்து அவர்களை விடுவித்து, கல்வி தடையின்றி அமைவதற்காகச் செய்யப்படும் பிரார்த்தனையாகும் இது. ஒவ்வொரு சாந்தி மந்திரத்தின் இறுதியிலும் சாந்தி, சாந்தி, சாந்தி என்று மூன்று முறை கூறப்படும். தாபத்ரயம் எனப்படும் மூன்று விதமான தடைகளிலிருந்தும் இந்த வேதாந்தக் கல்வி விடுதலை அடைய வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வாறு மூன்று முறை கூறப்படுகிறது. தாபம் என்றால் தகிக்கும் துன்பம் அல்லது மனஉளைச்சல் என்பது பொருள். ஆதி தைவிகம், ஆதி பௌதிகம், ஆத்யாத்மிகம் ஆகியன மூன்று தடைகளும் தாபத்ரயம் எனப்படுகின்றன. இவை ஒரு மனிதனுடைய கல்விக்குத் தடைகளாகக் கருதப்படுகின்றன. ஆத்யாத்மிகம் என்பது ஒருவனுக்குத் தன்னாலேயே வரக்கூடிய தடைகள். அவனுடைய உடல் மூலமாக வரக்கூடிய நோய் முதலிய உபாதைகள் மற்றும் மனத்தின் மூலமாக வரக்கூடிய அச்சம், சினம், பொறாமை, மனச்சோர்வு போன்றவைகளும் ஆத்யாத்மிகம் என்ற வகைக்குள் வரும். ஆதிபௌதிகம் எனப்படுவது நமக்கு வெளியில் உள்ள பிற மனிதர்கள், விலங்குகள், பூச்சிகள், மற்றும் உயிரற்ற பொருட்களால் நமக்கு நேரும் துன்பத்தைக் குறிக்கிறது. ஆதிதைவிகம் என்பது இயற்கைச் சீற்றங்களாலும், நமது கட்டுப்பாட்டில் இல்லாத பிரபஞ்சக் காரணிகளாலும் நமக்கு ஏற்படும் துன்பங்களைக் குறிக்கிறது. இம்மூன்று துன்பங்களாலும் நமது கல்விக்குத் தடை ஏதும் நேரக்கூடாது என்பதற்காகவே மூன்று முறை சாந்தி, சாந்தி, சாந்தி என்று கூறப்படுகிறது.
ஒரு உபநிஷதத்துக்கு எந்த சாந்தி பாடம் அமைகிறது என்பது அது எந்த வேதத்தில் அமைந்துள்ளது என்பதைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. ரிக் வேதத்தில் வரும் ஐதரேய உபநிஷதத்துக்கு “வாங்க்மே மனசி ப்ரதிஷ்டிதம்” என்ற சாந்தி மந்திரமும், சுக்ல யஜூர்வேதத்தில் வரும் ஈச, பிருஹதாரண்யக உபநிஷதங்களுக்கு “பூர்ணமத: பூர்ணமிதம்” என்று துவங்கும் சாந்தி மந்திரமும் (வேதாந்த மரபில் இந்த மந்திரம் எல்லா வேதாந்த வகுப்புகளுக்கு இறுதியிலும் பாடப்படுகிறது), கிருஷ்ண யஜூர் வேதத்திலுள்ள கட, தைத்திரீய உபநிஷதங்களுக்கு “சஹனாவவது” என்று துவங்கும் சாந்தி மந்திரமும், சாம வேதத்திலுள்ள கேன, சாந்தோக்ய உபநிஷதங்களுக்கு “ஆப்யாயந்து மமாங்கானி” என்று துவங்கும் சாந்தி மந்திரமும், அதர்வண வேதத்திலுள்ள பிரஸ்ன, முண்டக, மாண்டூக்ய உபநிஷதங்களுக்கு “பத்ரம் கர்ணேபி ஸ்ருணுயாம தேவா:” என்ற சாந்தி மந்திரமும் பாடப்படுகின்றது.
பத்து உபநிஷத்துக்களில் முதலில் முண்டக உபநிஷத் எவ்வாறு அமைக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காண்போம். இது அதர்வண வேதத்தின் இறுதியில் அமைந்துள்ள உபநிஷத். முண்டகம் என்பதற்கு “முக்கியமான” மற்றும் “தலை” என்று இரு பொருட்கள் உண்டு. சிரோ விரதம் எனப்படும் தலையில் நெருப்புச் சட்டியைச் சுமந்தபடி புரியும் ஒருவித யாகம் செய்து முடித்தவுடன் இந்த உபநிஷத் கற்கப்படுவதாலும், அல்லது தலைமுடியை நீக்கியபின், அதாவது உலகியல் வாழ்வின் மீது வைராக்யத்தை அடைந்தபின்னர் இந்த உபநிஷத் கற்கப்படுவதாலும் இதற்கு முண்டக உபநிஷத் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. வைராக்யம் என்ற தகுதியை உடைய ஒருவன் தகுதியுடைய ஆசிரியரின் அருகில் சென்று உறுதியான அறிவைப் பெற்று அதனால் தன் துயரத்தைக் களைதலே இந்த முண்டக உபநிஷத்தைக் கற்பதன் நோக்கமாகும்.
இந்த உபநிஷத்தின் சாந்தி பாடம் “பத்ரம் கர்ணேபி ஸ்ருணுயாம தேவா:” என்று துவங்கும். வைராக்யத்தை அடைந்து உபநிஷதக் கல்விக்குள் வந்த மாணவனானவன் தேவர்களை நோக்கிப் பிரார்த்தனை செய்கிறான். முதலில் தனக்கு நீண்ட ஆயுளும், நல்ல உடல் நலமும் வேண்டுமென்று பிரார்த்திக்கிறான். இங்கு நீண்ட ஆயுள் வேண்டுமென்ற கோரிக்கையானது வாழ்வின் மீதுள்ள ஆசையினால் அல்ல, தன்னுடைய கல்வி நிறைவடைந்து அதன் பலனான முக்தியை அடைவதற்குமுன் தனக்கு அபமிருத்யு தோஷம் எனப்படும் குறை ஆயுளில் மரணம் சம்பவிக்கக்கூடாது என்பதற்காகவே அவ்வாறு வேண்டுகிறான். மேலும் தனக்கு தூய்மையான, உறுதியான மனம், தூய்மையான புலன்கள், கூர்மையான, உறுதியான புத்தி முதலியன வேண்டுமென்று பிரார்த்திக்கின்றான்.
முண்டக உபநிஷத் மொத்தம் மூன்று அத்தியாயங்கள் கொண்டது. முண்டகம் என்றழைக்கப்படும் ஒவ்வொரு அத்தியாயமும் இரண்டிரண்டு கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் ஆறு கண்டங்களைக் கொண்டது முண்டக உபநிஷத். முதல் முண்டகத்தில் 22 மந்திரங்களும், இரண்டாம் முண்டகத்தில் 21 மந்திரங்களும், மூன்றாம் முண்டகத்தில் 21 மந்திரங்களும் உள்ளன.
உபநிஷதத்தின் துவக்கத்தில் குரு-சிஷ்ய அறிமுகம் செய்யப்படுகிறது. பெரிய யாகசாலைக்கு உரிமையாளரான சௌனகர் என்பவர் அங்கிரஸ் மகரிஷி என்னும் ஆசிரியரை முறைப்படி அணுகி, சிரத்தையுடனும், பணிவுடனும், அவருக்கு சேவை புரியும் எண்ணத்துடனும் ஒரு கேள்வியைக் கேட்கிறார். “இறைவனே! எந்த ஒன்றை அறிந்தால் அது அனைத்தையும் அறிந்ததாகின்றது? அந்த ஒன்றை எனக்குக் கொடுங்கள்,” என்று கேட்கிறார். இங்கு சௌனகர் கேட்பது எல்லாவற்றுக்கும் மூலமான ஒன்றின் அறிவை. காரணத்தின் அறிவை அடைந்தால் அது அந்தக் காரணத்திலிருந்து தோன்றிய அனைத்துக் காரியங்களின் அறிவையும் அடைந்ததாகின்றது. எனவே அவரது கேள்வியின் சாரம் இதுதான்: நாம் பார்த்து அனுபவிக்கும் இந்த அனைத்துக்கும் எது மூலமாக உள்ளது?
சௌனகருடைய இந்தக் கேள்விக்கு பதிலாக அங்கிரஸ் இரண்டு விதமான அறிவுகளைப்பற்றிக் கூறுகிறார். ஒன்று அபராவித்யா மற்றொன்று பராவித்யா. அபராவித்யா என்பதன் பொருள் கீழான அறிவு. இந்த உலகத்தைப் பற்றிய, படைக்கப்பட்டிருக்கின்ற இந்தப் பொருட்கள் குறித்த, பரம்பொருளைத் தவிர்த்த மற்றனைத்தையும் பற்றிய அறிவுக்கு அபராவித்யா என்று பெயர். பரம் என்றால் மேலான என்று பொருள். அழியாத பொருளான,எல்லாவற்றின் படைப்புக்கும் காரணமான அந்தப் பரம்பொருளைப் பற்றிய அறிவுக்கு பராவித்யா என்று பெயர். பராவித்யாவை பிரம்மவித்யா என்றும் அழைக்கலாம்.
இங்கு ஒரு கேள்வி எழுவதற்கு வாய்ப்பு உண்டு. அபராவித்யா கீழான அறிவாயினும் அது அறிவியல் பூர்வமாகவும், தர்க்கரீதியான நிரூபணங்களுடனும் கூடியிருக்கிறது. ஆனால் பிரம்மவித்யாவை ஒரு அறிவியல் என்று வகைப்படுத்த முடியுமா? அறிவியல் பூர்வமானது என்று ஒரு துறையை வகைப்படுத்துவதற்கு இரண்டு காரணங்கள் சொல்லலாம். ஒன்று புலன்களுக்குத் தென்படும் பொருட்களைப் பற்றிய முறையானதொரு ஆய்வு முறை. மற்றொன்று எடுத்துக்கொண்ட விஷயத்தினுடைய உண்மைத்தன்மையை இறுதிவரை ஆராய்ந்து நிலை நிறுத்துதல். பிரம்மவித்யாவைப் பொறுத்தவரை அது புலன்களுக்கு எட்டாத ஒரு பொருளைப் பற்றிய ஆய்வினை மேற்கொள்கிறது. எனவே முதல் காரணத்தின் அடிப்படையில் அது ஒரு அறிவியல் அல்ல என்று முடிவு செய்யலாம். ஆனால் தான் எடுத்துக்கொண்ட விஷயத்தை இறுதிவரை ஆராய்ந்து நிலைநிறுத்துவதால் அது ஒரு அறிவியலே என்றும் முடிவு செய்யலாம்.
பிரம்மவித்யாவைத் தவிர மற்றனைத்தும் கீழான அறிவே என்று உபநிஷத் கூறுகிறது. பிரம்மவித்யாவை அளிக்காத வேதத்தின் மற்ற எல்லா பாகங்களும், விசாரணைக்காகவன்றி வெறும் மனப்பாடத்துக்காகப் பயிலப்படும் உபநிஷத் மந்திரங்கள், வேதங்களை முறையாகப் புரிந்துகொள்ளப் பயன்படும் ஆறுவிதமான வேத அங்கங்களான சிக்ஷா (உச்சாடன சாஸ்திரம்), கல்பம் (யாகங்களைப் பற்றிய அறிவு), வியாகரணம் (இலக்கணம்), நிருக்தம் (சொற்களின் மூலம் பற்றிய ஆய்வு), சந்தஸ் (செய்யுள் அமைப்பு), ஜ்யோதிஷம் (எந்த காலத்தில் எந்த யாகம் செய்ய வேண்டும், எந்த கர்மம் எந்த நேரத்தில் செய்யப்படவேண்டும் என்பது பற்றிய அறிவு) இவை அனைத்தும் ஒட்டுமொத்தமாக அபராவித்யாதான் என்று நிராகரிக்கிறது உபநிஷத்.
பின்னர் பராவித்யாவின் மூலம் அறியப்படக்கூடிய பிரம்மத்தின் இலக்கணம் விளக்கப்படுகிறது. எனவே எதிர்மறைச் சொற்களாலும், நேர்மறைச் சொற்களாலும் உபநிஷத் பிரம்மத்துடைய இலக்கணத்தை அளிக்கிறது. “யத்தத் அத்ரேஷ்யம் அக்ராஹ்யம் அகோத்ரம் அவர்ணம் அசக்ஷூஸ்ரோத்ரம் தத் அபாணிபாதம்” என்று எதிர்மறைச் சொற்களால் பிரம்மத்தைச் சுட்டி, பின், “நித்யம் விபும் சர்வகதம் சூக்ஷ்மம் தத் அவ்யயம் யத் பூதயோனிம்” என்று நேர்நிலைச் சொற்களாலும் விளக்குகிறது. பிரம்மம் புலன்களால் அனுபவிக்கப்பட இயலாதது; பிடிக்க இயலாதது; பிறப்பற்றது; எந்தக் குணமும், தன்மையுமற்றது; காட்சியற்றது; என்றும் உள்ளது; எங்கும் உள்ளது; சூட்சுமமானது (புரிந்து கொள்ளக் கடினமானது); மாற்றத்துக்கு உட்படாதது. இப்படிப்பட்ட அழியாத பிரம்மம் மாயையைத் தன்வசம் வைத்துக்கொண்டு இந்த உலகிற்குக் காரணமாக இருந்து, இந்த உலகைத் தோற்றுவிக்கிறது. எப்படி சிலந்திப்பூச்சியானது தன்னுடைய வலையைத் தன்னிடமிருந்தே உற்பத்தி செய்துகொள்கிறதோ அதுபோலவே பிரம்மமும் இந்த உலகை தன்னிடமிருந்தே படைத்திருக்கிறது. எனவே அந்த பிரம்மத்தை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகின்றது.
இந்த பிரம்மத்தை அறிபவர்களே தீரர்கள் என்று கூறுகிறது உபநிஷத். ஆனால் செயல்களின் மீதும், அவற்றின் பலன்கள் மீதும் பற்று வைத்து எப்போதும் செயலிலேயே ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் அறியாமை என்னும் இருளிலேயே மூழ்கியிருப்பார்கள். தங்களை ஞானியராகவும், புத்திசாலிகளெனவும் நினைத்துக் கொண்டு பிறரையும் தாங்கள் நினைத்த வழியிலே நடத்த முனைவர். அவர்கள், “குருடனால் வழிநடத்தப்படும் குருடனைப்போல” சம்சாரம் என்னும் படுகுழியிலேயே உழன்று கொண்டிருப்பார்கள்.
பின்னர் யார் பராவித்யாவுக்குத் தகுதியானவர்கள் என்று பேசப்படுகிறது. சத்வ குணத்தை உடையவர்கள், இந்த உலகை ஆராய்ச்சி செய்து வைராக்யத்தை அடைந்தவர்கள் ஆகியோர் பராவித்யாவுக்குத் தகுதி அடைகிறார்கள். உலகத்தையும் அது கொடுக்கும் அனுபவங்களையும் ஆராய்ச்சி செய்பவர்கள் இந்த உலகம் என்னை நிறைக்காது என்ற முடிவுக்கு வருகின்றார்கள். செயலால் அடையப்படும் எதுவும் ஒரு காலத்தில் இழக்கப்பட்டே தீரும். எனவே எது தன்னை நிறைக்குமோ அதைத்தேடித்தான் பராவித்யாவுக்குள் வருகிறார்கள். எனவே பராவித்யாவுக்குள் வருவதற்கான தகுதி சத்வகுணமும், வைராக்யமும்தான். இத்தகுதிகள் கொண்ட சாதகன் ஒருவன் முதலில் ஒரு ஆசிரியரை முறைப்படி நாடி பராவித்யாவை போதிக்கும்படிக் கேட்டுக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட தகுதியான மாணவனை அடையும் ஆசிரியர் எந்த அறிவால் அழியாத, மேலான அறிவை தான் அடைந்துள்ளாரோ அதை முறையாகவும், தெளிவாகவும் அவனுக்கு உபதேசிக்க வேண்டும்.
புகழ்பெற்ற வாக்கியமான “வாய்மையே வெல்லும்” என்ற மந்திரம் முண்டக உபநிஷத்தில்தான் வருகிறது. “சத்யமேவ ஜயதே, நானுருதம்” (வாய்மையே வெல்லும், பொய் அல்ல) என்று உபநிஷத் கூறுகிறது. பராவித்யாவை அடைவதற்கான தகுதிகளை அடைய ஒருவன் செய்ய வேண்டிய சாதனைகளைப் பட்டியலிடும்போது உபநிஷத் வாய்மையின் பெருமையைப் பாடுகிறது.
முண்டக உபநிஷத் இந்தப் படைப்பை போக்த்ரு (அனுபவிப்பவன்) பிரபஞ்சம், போக்ய (அனுபவிக்கப்படுவது) பிரபஞ்சம் என்று இரண்டாகப் பிரிக்கிறது. நெருப்பிலிருந்து நெருப்புப்பொறிகள் தோன்றுவதைப்போல பிரம்மனிடமிருந்து ஜீவர்கள் தோன்றுகிறார்கள் என்கிறது. நெருப்பின் தன்மை நெருப்புப் பொறிகளுக்கு இருப்பதுபோல, பிரம்மனுடைய அறிவு சொரூபமே ஜீவர்களுக்கும் உள்ளது. நமது மனம் என்பது உயிரற்ற ஜடப்பொருள். ஆனால் அது ஆத்மாவின் உணர்வு சொரூபத்தை பிரதிபலிப்பதால் அதுவும் உணர்வைக் கடன்பெற்று அனுபவிப்பவனாக மாறிவிடுகிறது. ஆனால் ஆத்மா உண்மையில் எதையும் அனுபவிப்பதில்லை. மனம்தான் சுகதுக்கங்களை அனுபவிக்கிறது. எனவே மனத்துக்குத்தான் மோட்சம். எனவேதான் மோட்சம் என்பது அகவிடுதலை என்று குறிப்பிடப்படுகிறது.
இந்த அகவிடுதலையை அடைய ஓம்கார விசாரம் பரிந்துரைக்கப்படுகிறது. ஓம் என்ற சொல் வேதாந்தத்தில் பிரம்மத்தையே குறிக்கிறது. முண்டக உபநிஷத் ஓம்கார விசாரத்தை ஒரு வில்லாக உருவகப்படுத்துகிறது. ஓம்கார விசாரம் என்ற வில்லே இங்கு இலக்கை அடையத் தகுந்த கருவி. அதில் அம்பாகிய ஜீவாத்மாவை நன்கு பொருத்த வேண்டும். பின் கவனச்சிதறலின்றி அந்த அம்பை இலக்காகிய பிரம்மத்தின் மீது செலுத்தி ஐக்கியப்படுத்த வேண்டும் என்று கூறுகிறது முண்டக உபநிஷத்.
மாசற்ற, பிரிவுகளற்ற பிரம்மம் தூய்மையான தங்கமயமான ஆனந்தமய கோசத்தில் ஒளிர்கின்றது. அது ஒளிகளுக்கெல்லாம் ஒளியானது. ஆத்மாவை அறிந்த ஞானியர் மட்டுமே அதை அறிவார்கள் என்கிறது முண்டக உபநிஷத். நம் மனதில் ஒவ்வொரு எண்ணம் தோன்றி அதன் மூலம் நமக்கு அறிவு கிடைக்கும்போது அந்த அறிவு சொரூபமாக பிரம்மமே உள்ளது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். “எல்லாமுமாக இருக்கும் அந்தப் பிரம்மத்தை தரிசித்தவனுடைய இருதய முடிச்சு அவிழ்கிறது; அவனது எல்லா ஐயங்களும் அறுக்கப்படுகின்றன; அவனுடைய சஞ்சிதம், ஆகாமி முதலிய கர்மவினைகள் முற்றிலுமாக அழிந்து போகின்றன- பித்யதே ஹ்ருதயக்ரந்தி; சித்யந்தே சர்வசம்சயா:; க்ஷீயந்தே சர்வகர்மாணி” என்று பிரகடனப்படுத்துகிறது முண்டக உபநிஷத்.
மூன்றாவது முண்டகத்தில் ஜீவாத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் உள்ள ஒற்றுமையைக் குறிக்கும் ஒரு மந்திரம் வருகின்றது. “த்வா சுபர்ணா சயுஜா சகாயா” என்று துவங்கும் இந்த மந்திரம் ஒரு மகத்தான கவிதையும் கூட. “ஒன்றோடொன்று எப்போதும் பிரியாத இணைபிரியாத் தோழர்களான இரண்டு அழகிய பறவைகள் ஒரே மரத்தில் அமர்ந்திருக்கின்றன. அவற்றில் ஒரு பறவை மரத்தின் இனிப்பும் கசப்பும் கலந்த பழங்களை சுவைத்து உண்கிறது; மற்றொரு பறவையோ எதையும் உண்ணாமல் சாட்சியாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறது,” என்கிறது அந்த மந்திரம். பழங்களைச் சுவைக்கும் பறவை ஜீவாத்மா என்றும், சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் பறவை பிரம்மம் என்றும் புரிந்து கொள்ளலாம். இனிப்பும், கசப்பும் கலந்த பழங்கள் என்பது ஒருவனது செயலின் விளைவாக விளையும் சுகதுக்க பலன்களைக் குறிக்கிறது. சாட்சியாகப் பார்த்துக்கொண்டிருப்பதுதான் நான்; செயல்களை செய்வதோ, அதன் பலன்களை அனுபவிப்பதோ நானில்லை என்ற அறிவு ஒருவனுக்கு உதித்துவிட்டால் அவன் பிரம்மமாகவே ஆகிவிடுகிறான். ஏனெனில் அவன் உண்மையில் பிரம்மமேதான்.
உபநிஷத் இரு பறவைகள் இருப்பதாகக் குறிப்பிடுவதனால் ஜீவாத்மா, பரமாத்மா என்று இருவிஷயங்கள் இருப்பதாக எடுத்துக்கொள்ளலாமா? எனில் இது துவைதத்தைத்தானே குறிக்கிறது என்று தோன்றலாம். இங்கு எப்போதும் இணைபிரியாத என்று உபநிஷத் குறிப்பிடுவதைக் கவனிக்க வேண்டும். இரு பொருட்கள் எப்போதும் சேர்ந்திருக்கும் வாய்ப்பு ஒன்று உண்மையான பொருளாகவும், மற்றொன்று அதனுடைய பிரதிபிம்பமாகவும் இருக்கும்போது மட்டுமே சாத்தியம். இங்கு சாட்சியாகப் பார்த்துக்கொண்டிருக்கும் பறவை மட்டுமே உண்மை; பழங்களைச் சுவைத்தபடி இருக்கும் பறவை அதனுடைய பிரதிபிம்பம் மட்டுமே.
அனைத்து உயிரினங்களிலும் ஒளிரும் ஒரே ஆத்ம உணர்வே தான்தான் என்பதை ஞானி உணர்கிறான். இவ்வாறு உணர்ந்த ஞானியின் இலக்கணங்களைப் பட்டியலிடுகின்றது முண்டக உபநிஷத். அவன் நாதிவாதியாகி விடுகிறான்; அதாவது அதிவாதி என்பவன் தன் கருத்தே உயர்ந்தது என மற்றவர்களுடன் வீணாக வாதாடுபவன். ‘நாதிவாதீ’ என்பவன் வாதப்பிரதிவாதங்களைக் கடந்த அமைதி வடிவமானவன். அவன் ஆத்மக்ரீடன். அவனது விளையாட்டுகள் அனைத்தும் ஆத்மாவிற்குள்ளேயே நடக்கின்றன. வெளிப்புறப் புலன் இன்பங்கள் அவனுக்குத் தேவையில்லை. அவன் ஆத்மரதி: அவன் அகத்தினுள்ளேயே பேரானந்தத்தைக் கண்டடைபவன். உலகியல் பொருள்கள் தரும் தற்காலிகச் சிற்றின்பங்களை நாடி அவன் ஓடுவதில்லை. அவன் கிரியாவான். வெளிப்புறப் பார்வைக்கு அவன் ஈஸ்வர அர்ப்பணமாக அல்லது உலக நலனுக்காக கடமைகளைச் செய்பவனாகத் தோன்றினாலும், அகத்தில் தான் கர்த்தா அல்ல என்ற தெளிவோடு இருப்பான். மேலும் ஞானியரை ஞானதிருப்தா: (தன் ஞானத்தினால் திருப்திஅடைந்தவன்), கிருதாத்மன: (தன்னை பிரம்மமாகவே மாற்றியமைத்தவர்கள்), வீதராகா: (தங்களது அந்தக்கரணத்தை எரித்துக்கொண்டிருந்த எண்ணங்களிலிருந்து விடுபட்டவர்கள்); பிரசாந்தா: (புலன்களில் அமைதியை அடைந்தவர்கள்), யுக்தாத்மன: (மனசஞ்சலங்களிலிருந்து விடுபட்டவர்கள்) என்றெல்லாம் வர்ணிக்கின்றது உபநிஷத். அப்படிப்பட்ட ஞானி தன்னை நாடி வருபவர்களையும் ஞானியாக்கி விடுகிறான். அவர்களது ஆத்ம ஞானம் அனைத்து பாவங்களையும், சோகங்களையும் நீக்கி, இருதயத்திலுள்ள முடிச்சு நிரந்தரமாக அவிழ்க்கப்படுகிறது என்று நிறைவு செய்கிறது முண்டக உபநிஷத்.
***
“கேன?” (யாரால்?) என்ற சொல்லில் துவங்கி அடிப்படையான தத்துவக்கேள்விகளுக்கான பதில்களை ஆராயும் கேன உபநிஷத் சாம வேதத்தின் தலவகார சாகாவை சார்ந்தது. நான்கு கண்டங்களாகப் பிரிக்கப்பட்டு 34 மந்திரங்களைக் கொண்டது. முதலிரண்டு கண்டங்களில் ஆத்ம ஞானமும், கடைசி இரண்டு கண்டங்களில் ஒரு கதையும், உபாசனைகள் குறித்தும், சாதகனுக்குத் தேவையான பண்புகள் குறித்தும் பேசப்படுகிறது. “ஆப்யாயந்து மமாங்கானி” என்று துவங்கும் சாந்தி பாடத்தைக் கொண்டது. இந்த மந்திரத்தில் உடல் மற்றும் புலன்களின் நலமும், ஆற்றலும் வேண்டப்படுகிறது. பிரம்மத்தை நானும், நான் பிரம்மத்தையும் நிராகரிக்காமலிருப்போமாக என்று இறைஞ்சுகிறது. அதாவது பிரம்மத்தை அடையும் என் இந்த முயற்சி ஒருபோதும் தடைபடாமலிருக்க வேண்டும் என்பதே பிரார்த்தனை.
மாணவன் ஆசிரியரைப் பார்த்துக் கேட்கிறான்: “யாரால் ஏவப்பட்டு மனம் தனது இலக்கை நோக்கி ஓடுகிறது? யாரால் தூண்டப்பட்டு முதன்மைப் பிராணன் இயங்குகிறது? யார் முகமாகப் பேச வைக்கிறார்கள்? கண்கள், காதுகளை இயக்கும் அந்தத் தெய்வம் யார்?”
அதற்கு ஆசிரியரின் பதில் “அது காதுக்குக் காதாகவும், மனத்துக்கு மனமாகவும், வாக்குக்கு வாக்காகவும், பிராணனுக்குப் பிராணனாகவும், கண்ணுக்குக் கண்ணாகவும் இருக்கிறது,” என்பதுதான். புலன்களின் மீதுள்ள பற்றிலிருந்து விடுபட்ட ஞானிகள் அதை அறிந்து மரணமற்ற அம்ருத நிலையை அடைகிறார்கள் என்று கூறுகிறார் ஆசிரியர். ஒவ்வொரு புலன்களின் பின்னும் இருப்பது அது என்று கூறுவதன் மூலம் அது புலன்களுக்கு மூலமாகவும், அதே நேரம் புலன்களால் சென்று அடையப்படமுடியாததாகவும் இருக்கிறது என்று காட்டுகிறார் ஆசிரியர்.
“நான் பிரம்மத்தை நன்றாக அறிவேன்” என்று ஒருவன் நினைத்தால், அவன் அதை அறியவில்லை; ஏனெனில் அவன் பிரம்மத்தை அறிவுக்கு எட்டிய ஒரு ‘பொருளாக’ச் சுருக்கிவிடுகிறான் என்று கேனோபநிஷத் கூறுகிறது. “எவனுக்கு பிரம்மம் அறியப்படாததோ (அறிவுக்கு எட்டாததோ) அவனுக்கே அது அறியப்பட்டது; எவன் அதை அறிந்ததாக நினைக்கிறானோ அவன் அதை அறியவில்லை” என்று முரண்பட்ட வாக்கியங்களால் (paradoxical statements) விளக்கமுடியாத பிரம்மத்தை விளக்க முயல்கிறது இந்த உபநிஷத்.
பின்னர் பிரபஞ்சத்தின் அனைத்து ஆற்றல்களும் பிரம்மத்திற்கே உரியது என்பதை விளக்க ஒரு கதை கூறப்படுகிறது. தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடந்த போரில் அசுரர்களை வென்ற பின், தேவர்களாகிய அக்னி, வாயு, இந்திரன் ஆகியோர் தங்களது சொந்த ஆற்றலால்தான் வெற்றி பெற்றதாக கர்வமும், பெருமிதமும் கொள்கின்றனர். அவர்களுக்கு உண்மையை உணர்த்த நினைத்த பிரம்மம் அவர்கள் முன் ஒரு பிரம்மாண்டமான யக்ஷனாகத் தோன்றுகிறது. அக்னியால் ஒரு புல்லைக்கூட எரிக்க முடியவிலலை; வாயுவால் அந்தப் புல்லை அசைக்கக்கூட முடியவில்லை. இறுதியில் இந்திரன் பணிவோடு அணுகியபோது, ஞானத்தின் வடிவமான உமாதேவி அவர்கள் முன் தோன்றி, அது பிரம்மம் என்றும், அனைத்து ஆற்றலின் மூலமும் அதுவே என்றும் உணர்த்துகிறாள்.
இறுதியாக கேனோபநிஷத் பிரம்மத்துக்கு “தத்வனம்” என்ற அழகிய பெயரை அளிக்கிறது. தத்வனம் என்றால் எல்லாராலும் விரும்பப்படும் ஒரு பொருள் என்று பொருள். “தத்த தத்வனம் நாம தத்வனமித்யுபாஸிதவ்யம் ஸ ய ஏததேவம் வேதாபி ஹைனம் ஸர்வாணி பூதானி ஸம்வாஞ்சந்தி.” பிரம்மத்தை ‘தத்வனம்’ என அறிந்து தியானிப்பவனை, உலகில் உள்ள அனைத்து உயிர்களும் அவரிடம் மிகுந்த அன்புகொண்டு, அவரை நாடி ஓடிவரும் என்று நிறைவு செய்கிறது கேனோபநிஷத்.
***
கடோபநிஷத் கிருஷ்ண யஜூர் வேதத்தில் அமைந்துள்ளது. இந்த உபநிஷத் இரண்டு அத்தியாயங்களாகவும், ஒவ்வொரு அத்தியாயமும் மூன்று பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் வல்லி என்றழைக்கப்படுகிறது. மரணத்தின் கடவுளான யமன்தான் இந்த உபநிஷத்துக்கு ஆசிரியர். ஒரு அழகிய கதையுடன் துவங்குகிறது கடோபநிஷத். வாஜஸ்ரவஸ் என்ற முனிவர் விஸ்வஜித் என்ற யாகத்தை நிகழ்த்துகிறார். யாகத்தின் முடிவில் அந்தணர்களுக்கு தன்னிடமுள்ள பயனில்லாத, கிழட்டுப்பசுக்களை தானமாக அளிக்கிறார். தன் தந்தை அறத்தை மீறிச்செய்யும் இந்தச் செயலைக்கண்டு வேதனையுறும் சிறுவனான நசிகேதன், “என்னை யாருக்கு தானமாகக் கொடுப்பீர்கள்?” என்று அவரிடம் வினவுகின்றான். தந்தை சினத்தோடு, “உன்னை யமனுக்குக் கொடுப்பேன்,” என்று கூறுகிறார். தந்தை சொல்லை அப்படியே ஏற்றுக்கொண்டு யமலோகத்துக்குப் பயணமாகின்றான் நசிகேதன். அங்கு யமன் இல்லாததால் அவன் மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டியதாகி விடுகிறது.
மூன்று நாட்கள் காத்திருக்க வைத்ததற்காக யமன் நசிகேதனுக்கு மூன்று வரங்களை அளிக்கிறார். தன்னை சினவசப்பட்டு யமனிடம் அனுப்பி வைத்ததற்காக மனவேதனையடைந்திருக்கும் தன் தந்தையின் மன அமைதிக்காக முதல் வரத்தைப் பயன்படுத்திக் கொள்கிறான் நசிகேதன். பொதுமக்களின் நலன்பொருட்டு, எந்த யாகத்தைச் செய்தால் சுவர்க்க லோகத்தை அடையமுடியுமோ அந்த யாகத்துக்கான விளக்கத்தை இரண்டாவது வரமாகப் பெற்றுக் கொள்கிறான். மூன்றாவது வரத்தைத் தனக்காக உபயோகித்துக் கொள்கிறான். “இந்த உடல் அழிந்த பின்னரும் அழியாதிருக்கிற அந்த தத்துவம் என்ன?” என்ற கேள்விக்கான விடையை யமனிடம் கேட்கிறான். உடனே யமன், “இந்த அறிவை அடைவது மிக்கடினம். எனவே நீ வேறு ஒரு வரத்தைக் கேள்,” என்கிறார். நசிகேதனுக்கு மேலான இந்த உண்மையை அறியும் முக்கியமான தகுதியான முமுக்ஷூத்துவம் (உண்மையை அறிவதில் நாட்டம்) இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்கவே அவர் இவ்வாறு சொல்கிறார். நசிகேதனோ, “இது மிகக்கடினமானது என்பதால்தான் அதை நாடுகின்றேன்,” என்று தன் ஊக்கத்தில் உறுதியாக நிற்கின்றான். இப்போது யமன் பூமியில், மேலுலகத்தில் உள்ள போகப்பொருட்களையெல்லாம் சுட்டிக்காட்டி அவற்றை உனக்குத் தருகிறேன், அதை நீ மூன்றாவது வரமாக வைத்துக்கொள் என்று கூறுகிறார். நசிகேதனுக்கு போகப்பொருட்களின் மீது வைராக்யம் வந்து விட்டதா என்பதைப் பரிசோதிப்பதற்காகவே அவர் இவ்வாறு சொல்கிறார். நசிகேதன் போகப்பொருட்களினால் வருகின்ற குறைகளைச் சுட்டிக்காட்டி, மேலான உண்மையை அடைவதற்கான வைராக்யம் தன்னுடைய விவேகத்திலிருந்து உதித்தது என்பதை நிலை நாட்டுகின்றான். ஆத்ம ஞானம் தவிர தனக்கு எதுவும் வேண்டாம் என்பதில் நசிகேதன் உறுதியாகவும், அதை அடையத் தகுதி உடையவனாகவும் இருப்பதை யமன் உணர்கிறார். தன் உபதேசத்தைத் துவங்குகிறார்.
மனிதர்கள் இருவிதமான இலக்குகளைத் தேடிப்போகிறார்கள். அவ்விலக்குகள் பிரேயஸ், சிரேயஸ் எனப்படும். பிரேயஸ் என்பது எது நன்மையைத் தருமோ அது. சிரேயஸ் என்பது இன்பத்தைத் தருவது. பெரும்பாலான மனிதர்கள் தமக்கு எது இன்பத்தைத் தருமோ அதைத்தேடித்தான் செல்கிறார்கள். மிகச்சிலரே தனக்கு நன்மை தருவதைத் தேர்ந்தெடுக்கிறார்கள். சிரேயஸைத் தேர்ந்தெடுத்தற்காக நசிகேதனைப் புகழ்ந்து, பிரேயஸைத் தேர்ந்தெடுப்பவர்கள் மீண்டும், மீண்டும் என் வசம் வீழ்கிறார்கள் என்கிறார் யமதேவர். சூட்சுமமான இந்த ஆத்ம தத்துவத்தை அறிந்து, அந்த அறிவில் நிலைபெற்றவன் தன்னுள் அமைதி அடைகிறான். அந்த அறிவைத் தேர்ந்தெடுத்ததாலேயே நசிகேதனுக்கு மோட்சத்தின் வாயில் திறக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.
ஆத்ம ஞானத்தை அடைவதற்கு மனதைத் தகுதிப்படுத்துவதற்காக ஓம்கார தியானத்தை முதலில் உபதேசிக்கிறார் யமதேவர். “ பிறப்பும், இறப்பும் அற்ற, எதிலிருந்தும் தோன்றாத என்றுமுள்ள ஆத்மா, உடல் அழிந்தபோதும் அழிவதில்லை. இந்த ஆத்மா எந்த ஒரு செயலையும் செய்பவனாகவோ, எந்தச் செயலின் பலனை அனுபவிப்பவனாகவோ இல்லை” என்கிறார். இந்தக்கூற்றை அப்படியே கீதையில் கிருஷ்ணர் எடுத்தாள்கிறார். இந்த ஆத்மதத்துவம் சிறியது, பெரியது எல்லாவற்றுக்கும் அப்பால் இருப்பதால் சிறிதினும் சிறியது, பெரிதினும் பெரியது என்றெல்லாம் வர்ணிக்கப்படுகிறது. எல்லாருடைய இருதயத்திலும் விளங்கும் இந்த ஆத்மா தகுதியுடையவர்களால் அடையப்பட்டு, அந்த அறிவின் பலனாக அவர்கள் துயரத்தைக் கடக்கிறார்கள் என்று கூறுகிறார். ஆத்மாவை அடையும் தகுதிகளாக முமுக்ஷூத்துவம், புலனடக்கம், மனவடக்கம் ஆகியவற்றைக் கூறி, இவை இல்லையென்றால் இந்த தத்துவத்தை உள்வாங்க முடியாது என்று கூறுகிறார்.
பரமாத்மா ஒளிக்கு நிகரானது; ஜீவாத்மா நிழலுக்கு நிகரானது. எனவே பரமாத்மாவே மெய்ப்பொருள் என்பதை கடோபநிஷத் நிலைநாட்டுகின்றது. பின்னர் மனித வாழ்க்கையை ஒரு பயணமாக உருவகப்படுத்தி சில சாதனைகளைப்பற்றிக் கூறுகிறார் யமதேவர். உடலைத் தேராகவும், புலன்களைக் குதிரைகளாகவும் கொண்டு நாம் அனுபவிக்கும் பொருட்கள் என்னும் பாதையில் செல்கிறோம். புத்திதான் தேரோட்டி. மனம் கடிவாளம். தேரிலமர்ந்துள்ள யஜமானன் ஜீவாத்மா. எவ்வாறு ஒரு தேரோட்டி கடிவாளத்தையும், குதிரைகளையும் தன் வசம் வைத்தவனாக சரியான பாதையில் தேரைச்செலுத்தி, சேர வேண்டிய இலக்கில் கொண்டுபோய் தன் யஜமானனைச் சேர்க்கிறானோ, அதுபோலவே அறிவை உடைய புத்தியானது மனதையும், புலன்களையும் தன் வசம் வைத்து, சரியான பாதையில் சென்று ஜீவாத்மாவை பரமாத்மாவிடம் சேர்க்கின்றது. மிகவும் சூக்ஷ்மமான, கூர்மையான புத்தியால் மட்டுமே இந்த ஆத்ம தத்துவம் அறியப்பட முடியும்.
இந்தப்பயணம் வெளியில் நடப்பதல்ல. நமக்குள்ளேயே நடப்பதாகும். வெளியில் உள்ள பொருட்கள் உண்மையற்றன என்று உணர்ந்து பரமாத்மாவே உண்மையான இலக்கு என்று அறிய வேண்டும். ஒருவன் ஒவ்வொரு கோசத்திலும் உள்ள அபிமானத்தை விட்டு விட்டு, இறுதியில் ஆத்மாவில் நிலைபெறச்செய்ய வேண்டும். புலன்கள் வெளிமுகமாகச் செல்லும்படியே படைக்கப்பட்டிருக்கின்றன. எனவே அதன் வழியாகச் சென்றால் ஆத்மாவை தரிசிக்க முடியாது. சில தீரர்கள் மட்டுமே புலன்களின் ஆதிக்கத்திலிருந்து தங்களை விலக்கிக்கொண்டு உள்முகமாகத் திரும்பி தங்கள் உண்மையான சொரூபத்தைக் காண்கிறார்கள்.
ஜீவாத்மா, பரமாத்மா ஆகிய இரண்டும் உண்மையில் வேறுபடாத அறிவு சொரூபமாகவே இருந்து எல்லாப் பொருட்களுக்கும், அவஸ்தைகளுக்கும் சாட்சியாக விளங்குகிறது. மாயைக்கு அதிபதியாக விளங்கும் ஈஸ்வரனும், மாயைக்குட்பட்டுழலும் ஜீவனும் ஒரே தத்துவம்தான். சூட்சும உலகிற்கு அதிபதியாக இருக்கும் ஹிரண்யகர்பனும் ஜீவனும் ஒன்றுதான். ஸ்தூல உலகிற்கு அதிபதியாக இருக்கும் விராட்டும், ஜீவனும் ஒன்றுதான் என்று ஜீவபிரம்ம ஐக்கியம் மீண்டும், மீண்டும் கூறப்படுகிறது.
பிரம்மத்தை அறிபவன் துயருவதில்லை. பிரம்மத்தை அறிய சூட்சுமமான தூய்மையான மனது அவசியம். அந்த மனதை அடைய தியானம் போன்ற பயிற்சிகளைப் பற்றி கடோபநிஷத் பேசுகிறது. அதேபோன்று சிரத்தை போன்ற குணங்களின் அவசியம் பற்றியும் பேசுகிறது. சூட்சுமமான, தூய்மையான மனதை அடைந்து பிரம்மத்தை அறிந்து துயரத்திலிருந்து விடுபடுங்கள்! “எழுமின்! விழிமின்! அறிஞர்களை அடைந்து ஞானத்தைப் பெறுமின்! கத்தியின் கூர்மையான விளிம்பில் நடப்பதுபோல இந்தப் பாதை கடினமானது என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள்” என்கிறது கடோபநிஷத். சுவாமி விவேகானந்தர் எடுத்தாண்டது இந்த மந்திரம்.
பிரம்மம் எதனுடைய சார்புமின்றி தானாகவே விளங்கிக் கொண்டிருக்கும் பரம்பொருள் என்பதை ஒரு மந்திரம் விளக்குகிறது. “ந தத்ர சூர்யோ பாதி” என்று அந்த மந்திரம் துவங்குகிறது. “அங்கே சூரியன் பிரகாசிப்பத்தில்லை; சந்திரனோ நட்சத்திரங்களோ பிரகாசிப்பதில்லை; மின்னல்களும் ஒளி தருவதில்லை. இந்த அக்னி எவ்வாறு ஒளிர முடியும்? அது பிரகாசிப்பதால் மட்டுமே மற்ற அனைத்தும் பிரகாசிக்கின்றன. அதன் ஒளியினாலேயே இங்குள்ள அனைத்து ஒளிர்கிறது” என்று பிரம்மத்தின் இயல்புகளை விவரிக்கிறது கடோபநிஷத்.
