Site icon சொல்வனம் | இதழ் 376 | 11 அக் 2026

கஃபே-கான்ஸர்ட்

This entry is part 11 of 11 in the series காப்பிரைட் கதைகள்

பாடலுக்கு முதன் முதலாக ராயல்டி கேட்ட கலைஞன்

1847-ஆம் ஆண்டின் வசந்த காலம், பாரிஸ் நகரம்.

தெரு முனையில் இருந்த அந்த உணவகம் வாடிக்கையாளர்களால் நிரம்பியிருந்தது. உணவகத்தின் பெயர் பித்தளை எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருந்தது. “கஃபே மொரெல்” (Café Morel).

தெருவில் இருந்து ஜன்னல்கள் வழியே உணவருந்துபவர்களைப் பார்க்க முடிந்தது. பளிங்கு மேசைகள். நீண்ட அங்கி அணிந்த பணியாளர்கள் தட்டுகளையும் கண்ணாடிக் கோப்பைகளையும் சுமந்தபடி அங்குமிங்கும் சென்று பரிமாறிக் கொண்டிருந்தனர்.

இந்த வகை விடுதிகள் அப்போது பாரிஸில் பிரபலமாகியிருந்தன. இசை நிகழ்ச்சிகளை நடத்தும் உணவகங்கள் அவை. கஃபே-கான்ஸர்ட் (café-concert) என்று அழைக்கப்பட்டன.

உணவருந்துபவர்கள் இசையையும் சேர்த்து ரசிக்கலாம். இத்தகைய உணவகங்கள் பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின் உருவாகிப் பிரபலமடைந்தன. புரட்சிக்கு முன் மேல்தட்டு வர்க்கம் மட்டுமே சென்று வந்த உணவகங்களில் காணமுடியாத சமத்துவத்தை இந்தக் கஃபேக்களில் காணமுடிந்தது. உணவுப் பிரியர்கள் யார் வேண்டுமானாலும் அங்கு செல்லலாம். முன்போல் இல்லாமல் காலம் மாறியிருந்தது. கட்டணம் செலுத்தும் வசதியுள்ள எவருக்கும் அங்கு இடமுண்டு.

கஃபே மொரெலின் மூலையில் ஒரு சிறிய மேடை இருந்தது. அதில் ஒரு பியானோ கலைஞரும் ஒரு பாடகரும் இருந்தனர். பாடகர் அடுத்த பாடலை ஆரம்பித்தார். அதன் மெட்டு பரிச்சயமானதாக இருந்ததாலோ என்னவோ, பேச்சொலி குறைந்தது. அனைவரும் கவனிக்கத் தொடங்கினர். பாரிஸ் நகரின் இரவு நேரம் பற்றிய பாடல் அது. அனைவரும் ரசித்தனர். உணவருந்த மறந்து பாடலில் மூழ்கினர்.

அங்கிருந்த வாடிக்கையாளர்களில் இருந்த ஒருவர் இனம்புரியாத புன்னகையுடன் அமர்ந்திருந்தார். பாடப்பட்டுக் கொண்டிருந்த அந்தப் பாடலை எழுதிய கவிஞர்.  அவர் பெயர்  எர்னஸ்ட் பூர்ஷே (Ernest Bourget).

அந்தப் பாடல்,  அவர் எழுதிய பாடல்களில் மிகவும் புகழ்பெற்றது. சமீப காலமாக பாரிஸின் கஃபே-கான்ஸர்ட் நிகழ்ச்சிகளில் அதிகம் பாடப்பட்டு வந்தது. விருந்தினர்கள் அந்தப் பாடலைப் பாடச் சொல்லி விரும்பிக் கேட்டனர். அந்தப் பாடல் சில பாடகர்களின் புகழுக்கும் கூடக் காரணமானது.

பூர்ஷேவின் பாடல் அளவுக்கு அவர் முகம் புகழ்பெற்றிருக்கவில்லை. அவரை யாருக்கும் தெரியவில்லை.

“என்ன சாப்பிடுகிறீர்கள்?”

பூர்ஷே நிமிர்ந்து பார்த்தார். கஃபே மொரெலின் பணியாளர் புன்னகைத்தபடி நின்றிருந்தார்.

“ஓ சூக்ரே கொடுங்கள்,” என்றார்.

ஓ சூக்ரே (eau sucrée) என்பது அடிப்படையில் நமது ‘பானகம்’ போன்றது. சர்க்கரையும் தண்ணீரும். கஃபே மொரெலின் விலைப்பட்டியலின் கடைசியில், வால் போல இடம்பெறுவது.

இப்போது பணியாளரின் முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது.

மலிவான பானம் ஒன்றை மட்டும் அருந்த விரும்பும் வாடிக்கையாளரை அனுமதிப்பது கஃபே-கான்ஸர்ட்டுக்குக் கட்டுப்படியாகாது என்று அவரிடம் சொல்லப்பட்டது. அங்கே பாடப்பட்டுக் கொண்டிருந்தது அவர் எழுதிய பாடல்; ஆனால் அவர் முகம் அங்கு யாருக்கும் பரிச்சயமில்லை. இந்த முரண் பூர்ஷேவுக்குக் கலவையான உணர்வையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.

அவரது கோபத்தில் இருந்த நியாயத்தைப் பணியாளர் புரிந்துகொள்ளவில்லை. மேலாளரும் புரிந்துகொள்ளவில்லை. குறிப்பிட்ட குறைந்தபட்சத் தொகைக்கு உணவோ பானமோ வாங்காத ஒருவருக்குக் கஃபே-கான்ஸர்ட் நிகழ்ச்சியில் இடமில்லை என்று அவரிடம் கூறினர்.

முகம் சிவக்க, கஃபே மொரெலில் இருந்து வெளியேறினார் பூர்ஷே. அவர் வெளியேறும்போது, அவர் இயற்றிய பாடல் பாடி முடிக்கப்பட்டு, விருந்தினர்கள் கைதட்டிக் கொண்டிருந்தனர்.

~oOo~

இரவு சரியாக உறங்காத பூர்ஷே, மறுநாள் எழுந்ததும் செய்த முதல் வேலை, கஃபே மொரெல் உரிமையாளருக்குப் புகார்க் கடிதம் எழுதியதுதான்.

கஃபே பணியாளர் தன்னை நடத்திய விதம் குறித்தும், தன்னைத்  தூங்க விடாமல் துரத்திய கேள்வி குறித்தும் அவர் அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார். தான் எழுதிய பாடல்களை இசைத்து லாபம் ஈட்டும் கஃபே, அதே நேரத்தில் தன்னை உள்ளே அனுமதிக்க மறுக்கிறது. அந்தப் பாடல்களை இசைக்க ஏன் தன்னிடம் அனுமதி பெறவில்லை என்று பூர்ஷே கேட்டிருந்தார். இனி தனக்கு ராயல்டி செலுத்தாமல் தனது பாடல்களை இசைக்கக் கூடாது என்றும் கடிதத்தில் குறிப்பிட்டார்.

“என் பாடலை என்னைக் கேட்காமல் நீங்கள் எப்படிப் பாடலாம்?” இந்தக் கேள்வியை முதன்முதலில் எழுப்பியவர் பூர்ஷே.  பின்னாட்களில் உலகெங்கும் இருந்த அமைப்புகளில் முக்கிய மாற்றங்களைக் கொண்டுவந்த இந்தக் கேள்வியை, கஃபே உரிமையாளர் புறக்கணித்தார். அவர் பதில் எழுதவில்லை.

பூர்ஷே கஃபே மீது வழக்குத் தொடுத்தார்.

~oOo~

1847-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், பூர்ஷே தொடுத்த வழக்கைப் பாரிஸ் வணிக நீதிமன்றம் (Commercial Tribunal of Paris) விசாரித்தது.

கஃபே மொரெல் வாடிக்கையாளர்களைக் கவரத் தனது பாடல்களைப் பயன்படுத்துகிறது என்றும், அதற்குத் தன்னிடம் அனுமதி பெறவில்லை என்றும், அப்படிப் பயன்படுத்திய பாடல்களுக்குக் கட்டணம் செலுத்தவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

கஃபே மொரெல் தனது படைப்புரிமையை மதிக்கவில்லை; எனவே இனி தனது பாடல்களைப் பயன்படுத்த முன் அனுமதி பெறவேண்டும், இல்லையென்றால் ஒவ்வொரு பாடலுக்கும் பத்து ஃபிராங்க் செலுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.

இப்போது இந்த வழக்கு பூர்ஷேவுக்கும் கஃபே மொரெலுக்கும் இடையிலானதாக இல்லாமல், படைப்பாளிகளுக்கும் பாரிஸின் கஃபேக்களுக்கும் இடையிலான பொதுப் பிரச்சினையாக மாறியது.

நீதிமன்றம், பூர்ஷேவின் பாடல்களை அவரது அனுமதியின்றிப் பாடத் தடை விதித்தது. ஒவ்வொரு பாடலுக்கும் பத்து ஃபிராங்க் ராயல்டி கொடுக்கவும் உத்தரவிட்டது.

~oOo~

புதிய தீர்ப்பு, இசைக்குறிப்புப் பதிப்புக்கு மட்டுமல்லாமல், பாடல்கள் இடம்பெறும் பொது நிகழ்ச்சிகளுக்கும் காப்பிரைட் உரிமையை விரிவுபடுத்தியது.

ஆனால், இந்த வழக்கின் வெற்றி பெரிய அளவில் பலனளிக்காது என்பது பூர்ஷேவுக்குப் புரிந்தது. ஒவ்வொரு கஃபே மீதும் வழக்குத் தொடுப்பதும், கஃபேக்கள் தனது பாடல்களைப் பாடுகின்றனவா என்று கண்காணிப்பதும் பெரும் சவால்கள் என்பதை அவர் உணர்ந்தார்.

எனவே பூர்ஷே இசைத்துறை நண்பர்கள் சிலரைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டார். அவர்கள் பாரிஸின் கஃபே-கான்ஸர்ட் நிகழ்ச்சிகளைக் கண்காணிக்கத் தொடங்கினர்.

ஒரு நாள் மாலை, கஃபே மொரெல் போலவே புகழ்பெற்ற மற்றொரு விடுதியான கஃபே தே அம்பஸாதேருக்கு (Café des Ambassadeurs) பூர்ஷே தன் நண்பர்களுடன் சென்றார். அந்த விடுதி தங்கள் பாடல்களை அனுமதியின்றிப் பயன்படுத்துவதால், தாங்கள் அருந்திய மதுவுக்குப் பணம் செலுத்த முடியாது என்று அவர்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

அம்பஸாதேர் மட்டுமல்ல; கஃபே மொரெலும் தடையை மீறி அவரது பாடல்களைத் தொடர்ந்து பாடி வந்தது.

Café-Concert at Les Ambassadeurs by Edgar Degas, 1876–77 – Degas, Public domain, via Wikimedia Commons

1848 ஆகஸ்ட் 3 அன்று பூர்ஷே மீண்டும் வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்றம் இரு விடுதிகளுக்கும் தலா முந்நூறு ஃபிராங்க் அபராதம் விதித்தது.

கஃபே மொரெல் மேல்முறையீடு செய்தது. வழக்கு 1849 ஏப்ரல் 26 வரை நீண்டது. மேல்முறையீட்டு நீதிமன்றம் முந்தைய தீர்ப்பை உறுதி செய்ததோடு, மேல்முறையீடு செய்ததைக் கண்டித்துக் கூடுதலாக ஐந்நூறு ஃபிராங்க் சேர்த்து, மொத்தம் எண்ணூறு ஃபிராங்க் அபராதத்தைக் கஃபே மொரெலுக்கு விதித்தது.

இந்தத் தீர்ப்பு சொன்ன செய்தி கஃபே-கான்ஸர்ட் தொழில் துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பூர்ஷே ஏற்படுத்தியிருந்த நண்பர்கள் குழு இப்போது நிரந்தர அமைப்பாக மாறியது. தங்கள் பாடல்களைப் பாட எவ்வளவு ராயல்டி செலுத்த வேண்டும் என்று அவர்கள் பட்டியலிட்டனர். நிகழ்ச்சிகளில் பாடல்களைப் பாட அனுமதி வழங்கவும், ராயல்டி தொகையை வசூலிக்கவும், அதைத் தங்களுக்குள் பகிர்ந்துகொள்ளவும் வழிமுறைகளை உருவாக்கினர். 1850-இல் தற்காலிகக் கூட்டமைப்பாகத் தொடங்கி, 1851-இல் முழு அமைப்பாக அது பிறந்தது. ஸாஸெம் (SACEM — Société des Auteurs, Compositeurs et Éditeurs de Musique).

இதுவே உலகின் முதல் ராயல்டி அமைப்பு.

இதைத் தொடர்ந்து ஐரோப்பா முழுவதும் ராயல்டி அமைப்புகள் பிறந்தன. பொது நிகழ்ச்சிகளில் ஒரு கலைஞனின் பாடல்கள் பாடப்பட்டால், அதற்கு ராயல்டி வழங்கப்பட வேண்டும் என்ற கோட்பாடு நிலைபெற்றது.

~oOo~

1914, நியூயார்க் நகரம்.

அமெரிக்க இசையமைப்பாளர் விக்டர் ஹெர்பர்ட் ஓர் ஐரிஷ் அமெரிக்கர். மேற்கத்திய இசையை முறையாகக் கற்றுக்கொண்டவர். வெற்றிகரமாகத் தொழில் செய்து வந்தவர். புகழ்பெற்ற இசைக்குழுக்கள் பல அவரது இசையை மேடையேற்றி வந்தன. மிக முக்கியமாக, தனது இசைத் தொழில் குறித்த பொருளாதார, சட்டப் பார்வையும் கொண்டவர். இது இசைக்கலைஞர்களிடையே அரிதினும் அரிது.

ஹெர்பர்ட், பாரிஸில் பிறந்த ராயல்டி அமைப்பான ஸாஸெம் பற்றி அறிந்தவர். ஐரோப்பியக் காப்பிரைட் சட்டங்கள் எப்படி உருவாகி வந்தன என்பதையும், அமெரிக்கச் சட்டத்தின் போதாமையையும் அறிந்தவர்.

ஐரோப்பாவில் பாரிஸின் கஃபேக்கள், வியன்னா நகரின் உணவகங்கள், மியூனிக் நகரின் மதுக்கூடங்கள் ஆகியவை தாங்கள் இசைக்கும் இசைக்கு ராயல்டி செலுத்தி வந்தன. அது குறைகளற்ற அமைப்பல்ல. ஆனாலும், அமெரிக்காவைப் போல் அல்லாமல், அங்கெல்லாம்  அமைப்பு என்று ஒன்று இருந்தது.

அமெரிக்காவிலும் உணவகங்களும் மதுக்கூடங்களும் இசைக்குழுக்களை அமர்த்தின. பல இசையமைப்பாளர்களின் இசையை இசைத்தன. வாடிக்கையாளர்கள் மகிழ்ந்தனர். ஆனாலும், “ராயல்டியா? இதென்ன புதிதாக இருக்கிறது!” என்று கேட்கும் நிலையிலேயே அமெரிக்கா இயங்கி வந்தது. அதுவே ஹெர்பர்ட்டின் அனுபவமாகவும் இருந்தது.

நகரின் முக்கிய உணவகங்களில் ஒன்று, பிராட்வேயில் இருந்த ஷான்லீஸ் (Shanley’s). அன்றும் அது விறுவிறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. உணவு மேசைகள் மேல் விரிக்கப்பட்டிருந்த வெள்ளைத் துணிகள், மேலே தொங்கிய சரவிளக்கொளியால் பொன்னிறமாகின. நகரின் செல்வந்தர்கள் அங்கே கூடியிருந்தனர். உணவருந்தியபடியே இசைக்குழுவின் இசையை ரசித்தனர். ஷான்லீஸ் இசைக்குழு என்ன பாடல்களை இசைக்கிறது என்று தெரிந்துகொள்வதற்காகவே ஹெர்பர்ட் அங்கே அடிக்கடி சென்று உணவருந்தினார். அன்றைய முக்கிய அமெரிக்க இசையமைப்பாளர்கள் ஒவ்வொருவரின் இசையும், ஷான்லீஸ் மட்டுமல்லாமல் பல உணவகங்களில் அனுமதி பெறாமல் இசைக்கப்பட்டது. இது இசைக்கலைஞர்கள், உணவக உரிமையாளர்கள் என அனைவருக்கும் வருவாய் கொடுத்தது. அந்த இசையை உருவாக்கிய இசையமைப்பாளர்களைத் தவிர அனைவரும் பலன் பெற்றனர்.

அமெரிக்காவுக்கென்று ஒரு ராயல்டி அமைப்பு தேவை என்று கருதிவந்த ஹெர்பர்ட், அப்படி ஓர் அமைப்பை உருவாக்க முடிவெடுத்தார்.

Victor Herbert in 1906 Public domain, via Wikimedia Commons

1914-ஆம் ஆண்டு, ஹெர்பர்ட்டும் வேறு சில இசையமைப்பாளர்களும் நியூயார்க்கில் கூடி, ஆஸ்கேப் (ASCAP — American Society of Composers, Authors and Publishers) என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கினர். இந்த அமைப்பு பிரான்ஸின் ஸாஸெம் அமைப்பை அடியொற்றி அமைக்கப்பட்டது. உறுப்பினர்களின் பாடல்களைப் பயன்படுத்த உரிமம் வழங்குவதும், உறுப்பினர்களின் இசை பயன்படுத்தப்படுவதைக் கண்காணிப்பதும், பாடல்களுக்கான ராயல்டியைக் கணக்கிட்டு வசூலிப்பதும் இந்த அமைப்பின் பணிகள் என்று நிர்ணயிக்கப்பட்டன.

ஆனால், பிரான்ஸைப் போல அமெரிக்காவில் ஒரு ராயல்டி அமைப்பு அங்கீகாரம் பெறுவது எளிதாக இருக்கவில்லை. பிரெஞ்சுச் சட்டம் ஆங்கிலோ-சாக்ஸன் சட்ட மரபுகளிலிருந்து வேறுபட்டது. அது ராயல்டி குறித்த தெளிவான வரையறைகளைக் கொண்டிருந்தது.

ஆஸ்கேப் அமைப்பிடம் உரிமம் பெறத் தேவையில்லை என்று உணவகங்கள் கருதின. ஆஸ்கேப்புக்கு ஒரு முன்மாதிரி நீதிமன்ற வழக்கு தேவைப்பட்டது. ஹெர்பர்ட் ஷான்லீஸ் உணவகத்தைத் தேர்ந்தெடுத்தார்.

தனது பாடல்களை ஷான்லீஸ் அனுமதியின்றிப் பயன்படுத்துவதாக ஹெர்பர்ட் வழக்குத் தொடுத்தார்.

ஷான்லீஸ் உரிமையாளர் தாமஸ் ஷான்லீ அந்த வழக்கை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. இசை நிகழ்ச்சிக்கென்று தாங்கள் தனிக் கட்டணம் வசூலிப்பதில்லை என்றும், வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணம் உணவுக்கே, இசைக்கு அல்ல என்றும், எனவே ராயல்டி கொடுக்க வேண்டியதில்லை என்றும் அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

நீதிமன்றம் ஷான்லீ தரப்புக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது.

ஹெர்பர்ட் மேல்முறையீடு செய்தார். அதிலும் அவர் தோற்றார்.

கடைசி வாய்ப்பாக இருந்தது உச்ச நீதிமன்றம் மட்டுமே. ஹெர்பர்ட் வழக்கை உச்ச நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றார்.

~oOo~

1917 ஜனவரி 10. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

இசை நிகழ்ச்சிக்கென்று தனிக் கட்டணம் வசூலிக்காவிட்டாலும், ஒரு பாடலை இசைக்க அதன் காப்பிரைட் உரிமையாளரிடம் அனுமதி பெறவேண்டும் என்று ஹெர்பர்ட்டின் வழக்கறிஞர் நேதன் பர்கன் (Nathan Burkan) வாதிட்டார்.

ஒவ்வொரு பாடலுக்கும் ராயல்டி கொடுப்பது சிறு உணவகங்களுக்குச் சாத்தியமற்றது என்றும், ஒரு பாடலின் காப்பிரைட் உரிமை யாரிடம் இருக்கிறது என்று ஓர் உணவக உரிமையாளர் கண்டறிந்து அவருக்கு ராயல்டி வழங்குவது நடைமுறையில் சாத்தியமற்றது என்றும் ஷான்லீஸ் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

வாதங்களைக் கேட்டுக்கொண்ட நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.

பன்னிரண்டு நாட்களுக்குப் பின், 1917 ஜனவரி 22 அன்று, நீதிபதி ஆலிவர் வெண்டெல் ஹோம்ஸ் தீர்ப்பை வாசித்தார்,  “இசை லாபம் தராவிட்டால் அது கைவிடப்பட்டிருக்கும். லாபம் தருகிறதோ இல்லையோ, அதைப் பயன்படுத்துவதன் நோக்கம் லாபமே.” தீர்ப்பு ஹெர்பர்ட் தரப்புக்குச் சாதகமாக அமைந்தது.

இந்தத் தீர்ப்பின் அடிப்படை எளிமையானது. இசை நேரடியாகவோ மறைமுகமாகவோ லாபம் கொடுக்கும் எனில், அதில் இசையமைப்பாளர்களின் பங்கு அவர்களுக்கு வழங்கப்படவேண்டும்.

இந்தத் தீர்ப்பு, 1909 அமெரிக்கக் காப்பிரைட் சட்டத்தில் இருந்த ‘லாப நோக்கிலான பொது நிகழ்ச்சி’ என்ற சொற்றொடருக்குத் தெளிவான விளக்கம் அளித்தது. பொது நிகழ்ச்சிகளில் இசைக்கப்படும் இசைக்கு ராயல்டி வழங்குவது அவசியம் என்ற கருத்து பரவலானது.

~oOo~

கவிஞர் பூர்ஷே கஃபே மொரெல் மீது வழக்குத் தொடுத்து எழுபது ஆண்டுகள் ஆகியிருந்தன. ஸாஸெம் போன்ற ஓர் அமைப்பு அமெரிக்காவில் உருவாகி, சட்ட அங்கீகாரம் பெற எழுபது ஆண்டுகள் தேவைப்பட்டன.

1926-இல், பிரான்ஸின் SACEM, அமெரிக்காவின் ASCAP, ஜெர்மனியின் GEMA, இங்கிலாந்தின் PRS உள்ளிட்ட ராயல்டி அமைப்புகள் பாரிஸில் கூடி, CISAC என்ற சர்வதேசக் கூட்டமைப்பை உருவாக்கின.

ஒரு ஜப்பானிய இசையமைப்பாளரின் இசை பெர்லின் நகரில் இசைக்கப்படலாம். அதன் ராயல்டியை ஜெர்மனியில் வசூலித்து ஜப்பானுக்குக் கொண்டு சேர்க்க இத்தகைய சர்வதேச அமைப்பு தேவை.

இந்தச் சர்வதேசக் கூட்டமைப்பில் இன்று 227 அமைப்புகள் உறுப்பினர்களாக இருக்கின்றன. (பின்னாட்களில் இந்த அமைப்பு, இந்தியாவின் ராயல்டி அமைப்பான IPRS-ஐ இடைநீக்கம் செய்யும் நிலை ஏன் ஏற்பட்டது என்பதைப் பின்வரும் அத்தியாயம் ஒன்றில் பார்க்கும்போது, இந்த அடிப்படைத் தகவல்கள் தேவைப்படும்.)

சரி. ஒரு பாடகர் ஒரு பாடலைப் பாடினாலும், ஒரு பியானோ கலைஞர் ஒரு படைப்பை வாசித்தாலும், அதனால் லாபம் பெறுபவரிடம் இசையமைப்பாளர் ராயல்டி கேட்கலாம். இது திட்டவட்டமாக முடிவானது.

ஆனால், ஆளே இல்லாமல் ஒரு பியானோ தானாகவே ஓர் இசைப் படைப்பை வாசித்தால், யாரிடம் ராயல்டி கேட்பது? அப்படி நடந்தால் என்ன செய்வது என்று யாரும் யோசிக்கவில்லை. அப்படி நடக்கும் வரை.


வழக்குகள்

காப்பிரைட் கதைகள்

பாட்டுத் தொழிற்சாலை
Exit mobile version