Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

உள்ளும் புறத்தும் தனிமையே!

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
さびしさに
宿をたち出でて
ながむれば
いづこも同じ
秋の夕暮れ

கனா எழுத்துருக்களில்
さびしさに
やどをたちいでて
ながむれば
いづこもおなじ
あきのゆふぐれ

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: மதகுரு ரியோஜென்

காலம்: தெரியவில்லை.

யமாஷிரோ மாகாணத்தில் ஒதாகினோகொரி எனுமிடத்தில் பிறந்த இவரது தந்தையார் யாரெனத் தெரியாதபோதும் தாயார் ஃபுஜிவாரா வம்சத்தின் சனேகதா வழியில் வந்தவர் எனக் கூறுகிறார்கள். ஹியெய் மலையில் அமைந்திருந்த ஆலயத்தில் கியோன் எனும் புத்தமதப் பிரிவின் தலைவராக இருந்து பின்னர் வாழ்வின் இறுதிப்பகுதியில் ஓஹரா மலையில் இருந்த உன்ரின் கோயிலில் தனிமையில் வாழ்ந்து வந்தார். அப்போது இயற்றப்பட்டதுதான் இப்பாடல். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 31 பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

பாடுபொருள்: தனிமையின் வெறுமை.

பாடலின் பொருள்: என் குடிலுக்கு வெளியே வந்து பார்த்தால் இந்த இலையுதிர்கால அந்தி நேரத்தின் என் மனதைப் போலவே வெளியெங்கும் தனிமையாகவே காட்சி தருகிறது.

தனிமையின் வெறுமையை விளக்கும் இன்னோர் எளிய பாடல். இத்தொடரில் பல பாடல்கள் தனிமை குறித்தனவாக இருக்கின்றன. பல பாடல்கள் துணையைப் பிரிந்த காதல்வலியையும் சில பாடல்கள் காதல் குறித்த சுட்டலின்றித் தனிமையை மட்டும் குறிக்கின்றன. இப்பாடலும் முதுமையில் வரும் தனிமையைக் குறித்தே பாடப்பட்டுள்ளது.

வெண்பா:

அகத்தின் துயரமும் தோன்றும் வெளியில்
பகலவன் சாயும் பொழுதில் – முகவியர்
இல்லா இலையுதிர் கூதிரின் காட்சியின்
பிம்பமாய் ஆகும் மனது

முகவியர் இல்லா – இன்முகம் காட்டுவோர் இல்லாத

SH RAZA

நெல்வழிசெல் இசை!

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
夕されば
門田の稲葉
おとづれて
葦のまろやに
秋風ぞ吹く

கனா எழுத்துருக்களில்
ゆふされば
かどたのいなば
おとづれて
あしのまろやに
あきかぜぞふく

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: ஆளுநர் ட்சுனேனொபு

காலம்: கி.பி. 1016-1097.

அரண்மனையில் உயர்பொறுப்பில் இருந்த மிச்சிகதா என்பவரின் மகன். இவரும் பல உயர்பொறுப்புகளை வகித்து 80ம் அகவையில் தசாய்ஃபு மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். தலைநகர் கியோத்தோவிலிருந்து தொலைவிலிருக்கும் இம்மாகாணத்துக்குப் பணிமாற்றம் செய்வது என்பது ஏறத்தாழ நாடுகடத்தும் தண்டனைக்கு ஒப்பானது என்கிறார்கள். அதுவும் இவரை 80ம் வயதில் பணிமாற்றம் செய்ததற்கு என்ன காரணம் என்ற குறிப்புகள் ஏதும் வரலாற்றில் காணப்படவில்லை. இப்பணிமாற்றம் நிகழ்ந்த அடுத்த ஆண்டே முதுமையால் இறந்துவிடுகிறார். 

இவர் கவிதை இயற்றுவதிலும் இசை அமைப்பதிலும் இசைக்கருவிகளை வாசிப்பதிலும் வல்லமை பெற்றவர். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 86 பாடல்களும் ஒரு தனிப்பாடல் திரட்டும் இடம்பெற்றிருக்கின்றன. காலத்தால் அழியாத 36 பிற்காலப் புலவர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

பாடுபொருள்: இலையுதிர்கால வயல்வெளிக் குடிலின் சிறப்பு.

பாடலின் பொருள்: என் குடிலுக்கு வெளியே வந்து பார்த்தால் இந்த இலையுதிர்கால அந்தி நேரத்தில் மிதந்து வரும் காற்று நெற்கதிர்களினூடே கொண்டுவரும் தேனிசையைக் குடிலின் கூரைவழியே என்னிடத்தில் சேர்க்கிறது.

நேரடிப் பொருள் தந்து இயற்கையை வர்ணிக்கும் இன்னோர் எளிய பாடல். முந்தைய பாடலும் அதே இலையுதிர்காலம், அதே அந்திநேரத்தில் புனையப்பட்டதுதான். ஆனால் இவ்விரு பாடல்களும் முற்றிலும் நேரெதிரான மனநிலைகளை வெளிப்படுத்துகின்றன. உமேசு என்ற மலைமீதிருந்த அரங்கில் நடத்தப்பட்ட பாடல் போட்டி ஒன்றில் “இலையுதிர்கால அந்திநேரக் காற்று” என்ற தலைப்பு தரப்பட்டது. அதில் பாடப்பட்டுப் பரிசு வென்றது இப்பாடல்.

நம் ஊரில் விவசாயநிலம் வைத்திருப்பவர்கள் வசிப்பதற்காக அதிலேயே வீட்டையும் கட்டி வீட்டைச் சுற்றிலும் உள்ள வயலில் வேலை பார்த்துவருவதுபோல் ஜப்பானிலும் விவசாயிகள் வயல்களுக்குள் வீடுகளைக் கட்டி வசித்து வந்திருக்கிறார்கள். தலைநகர் கியோத்தோவுக்கு அருகில் ஆற்றோரங்களிலும் மலைப்பகுதிகளிலும் அரசகுடும்பத்தினரும் உயரதிகாரிகளும் தங்கள் ஓய்வு இல்லங்களை அமைத்துத் தங்கி வந்ததுண்டு. அதுபோல் விவசாயப் பின்னணியிலிருந்து வந்த அதிகாரிகள் வயல்வெளிகளில் ஓய்வு இல்லங்களை அமைத்து ஓய்வு நேரத்தைக் கழித்து வந்தனர். இப்பாடலின் ஆசிரியர் அத்தகைய வீட்டில் வசிக்கவில்லை என்றாலும் தரப்பட்ட தலைப்புக்கேற்றவாறு பாடல் புனைய இத்தகையதொரு காட்சியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

வெண்பா:

முயற்றிசை ஏகிடும் தென்றல் தவழ்ந்து
வயல்வெளி ஊடே இசையாய் – நயந்து
குடிலதன் உள்ளே மகிழவே யாத்துக்
கொணருமே அந்திநேரக் காற்று

முயற்றிசை – வடகிழக்குத்திசை

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)

ஜப்பானியப் பழங்குறுநூறு

விழியிலிருந்து நினைவுக்கு காதல்மொழிகள் கடலலை போலே!
Exit mobile version