- தெய்வநல்லூர் கதைகள் – 1
- தெய்வநல்லூர் கதைகள் – 2
- தெய்வநல்லூர் கதைகள்- 3
- தெய்வநல்லூர் கதைகள் -4
- தெய்வநல்லூர் கதைகள் – 5
- தெய்வநல்லூர் கதைகள் – 6
- தெய்வநல்லூர் கதைகள் – 7
- தெய்வநல்லூர் கதைகள் -8
- தெய்வநல்லூர் கதைகள் – 9
- தெய்வநல்லூர் கதைகள் 10
- தெய்வநல்லூர் கதைகள் 11
- தெய்வநல்லூர் கதைகள் -12
- தெய்வநல்லூர் கதைகள் 13
- தெய்வநல்லூர் கதைகள் 14
- தெய்வநல்லூர் கதைகள்
- தெய்வநல்லூர் கதைகள் – 16
- தெய்வநல்லூர் கதைகள்
- சர்க்கரை கசக்குமா கசமாடா? தமிழ் வையுமா அடி மூடா?
- தெய்வநல்லூர் கதைகள் – 19
- தெய்வநல்லூர் கதைகள் – 20
- தெய்வநல்லூர் கதைகள் – 21
- தெய்வநல்லூர் கதைகள்
- தெய்வநல்லூர் கதைகள் 23
- எம்புட்டு நேரம்தான் குச்சிய வாய்க்குள்ளயே வச்சிருப்பீரு
- மொகரைல சவக்களை
- தெய்வநல்லூர் கதைகள் – 26
- தெய்வநல்லூர் கதைகள் -27
- தெய்வநல்லூர் கதைகள்- 28
- தெய்வநல்லூர் கதைகள்- 29
- தெய்வநல்லூர் கதைகள்- 30
- தெய்வநல்லூர் கதைகள்- 31
- தெய்வநல்லூர் கதைகள்- 32
- தெய்வநல்லூர் கதைகள்- 33
- தெய்வநல்லூர் கதைகள்-34
எட்டாம் வகுப்பு ஆசிரியை பாலகனி டீச்சர். ஏழாம் வகுப்பு ஆசிரியரான கணேசன் என்ற கஞ்சே சாரின் பெண்பாலாகவே இவர் விளங்கினார். ஆகவே எங்களுக்கு எந்த மாறுதலும் தெரியவில்லை. கூடுதலாக நாங்களே பள்ளியின் பெரியண்ணன்கள் என்பதால் சில விஷயங்களை பள்ளி முழுமைக்கும் நடைமுறைப்படுத்த முடிந்தது. சத்துணவு எனப்படும் மதியஉணவு வாங்கி உண்ணும் மாணாக்கர்களை வகுப்பு வாரியாக வரிசைப்படுத்தும் பணியினை மகாத்மா அணி மேற்கொண்டது. இரு மாதங்கள் மட்டும் மகாத்மா அணியினரின் தன்னார்வலர்கள் வரிசையை ஒழுங்குபடுத்துவதை ஒப்புக்கொண்ட பிரேம் ஒவ்வொரு வகுப்பிலும் இருந்து ஐவர் அணி ஒன்றை உருவாக்கி அவர்களே அவர்கள் வகுப்பை வரிசையில் (வகுப்பிலிருந்து உணவு வழங்குமிடம் – உண்ணும் இடம்- உண்ட இடத்திலிருந்து கை கழுவும் அடிபம்பு குழாயடி(ஒருவருக்கு இரு முறை மட்டுமே அடிபம்பு அடிக்கப்படும்) – அங்கிருந்து வகுப்பு வரை) கொண்டுவரும் பொறுப்பை அறிமுகப்படுத்தினார். ஒவ்வொரு வகுப்பிற்கும் உதவவும், கண்காணிக்கவும் மகாத்மா அணியின் இருவர் (ஒரு பையனும், ஒரு கேர்ளும்) நியமிக்கப்பட்டனர். தலைமை ஆசிரியராலும், சத்துணவு அண்ணன்சாராலும் இந்த ஏற்பாடுகள் வெகுவாக பாராட்டப்பட்டன. குறிப்பாக அன்று வகுப்புக்கு எவரெவர் வரவில்லை என பெயர்களை சிலேட்டில் எழுதி அவரவர் வகுப்பு வரிசைக்கு வரும்போது வகுப்புக்கான தன்னார்வலர்கள் அண்ணன்சாரிடம் காட்ட வேண்டும் என்ற ஏற்பாடு தலைமை ஆசிரியரையும், அண்ணன்சாரையும் பெரிதும் மகிழ்வித்தது. காரணம், ஒவ்வொரு தினமும் 3 மணிக்கு ஆரம்பித்து 4 மணி வரை இருவரும் சேர்ந்து சத்துணவு திட்ட வருகைப் பதிவேட்டை தயாரித்து பள்ளி வருகைப் பதிவேட்டுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை விவரங்களை அறிக்கையாகத் தயாரிப்பதற்கு தனியே சத்துணவு உண்ண வேண்டிய அவசியத்தை இந்த ஏற்பாடுகள் சரியாக்கின. மேலும் பற்பொடி, செருப்பு, சீருடை போன்றவற்றை மாணவர்களுக்கு வழங்கவும் இந்த ஏற்பாடுகள் உதவின.
இது போல மேலும் சில ஏற்பாடுகளை முயன்றாலும் மகாத்மா அணியினரால் எண்ணிய எண்ணியாங்கு எண்ணியவாறே எய்துதலை நிகழ்த்த இயலவில்லை. பள்ளிக்குள் சிறு பாத்தி கட்டி காய்கறி பயிர் செய்தல், பூச்செடிகள் வளர்த்தல், ஒவ்வொரு வகுப்பிலும் மெல்ல கற்போர்க்கு விரைவாய் கற்போர் பொறுப்பேற்று கற்பதில் உதவுதல் போன்ற பல திட்டங்கள் தேர்தல் கால சாலை அமைப்பு போல விரைந்து செயலிழந்ததை நாங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருந்தது. குறிப்பிட்டுச் சொல்லும்படியான நிகழ்வுகள் எவையும் எட்டாம் வகுப்பில் நிகழவில்லை எனினும் எங்கள் குழுவின் நட்பு பலப்பட்டு இறுகிய நிகழ்வுகள் அநேகம். குறிப்பாக பிரேம், சிவாஜி, அமுக்குடப்பா, பாட்ஷா, டொம்ப்ளி, சேமியா,நான் ஆகியோர் மிக நெருக்கமான நட்பு வட்டமாக அமைந்தோம். பிரேமுக்கும், சங்கீதாவுக்குமான நட்பு எங்கள் குழுவில் ஒவ்வொருவரும் அடைய வேண்டிய நட்பு இலக்காக, ஏற்கனவே அமைந்த நட்புகளுக்கு ஒப்பீட்டு அளவுகோலாக பார்க்கப்பட்டது. குறிப்பாக, படிக்கும் விஷயத்தில் இருவருமே ஒருவருக்கொருவர் போட்டியிட்டாலும், சேர்ந்து படிப்பதையும், பரஸ்பரம் ஐயம் தீர்த்துக் கொள்ளுவதையும் மதிப்பெண்களில் மாறி மாறி முன்பின்னாக வந்தாலும் நட்பிற்குள் அதை ஒரு இடைஞ்சலாக கருதாத் தன்மை எங்களை வியப்பிலாழ்த்தியது.
சுனா கானா வின் எலுமிச்சைத் தோட்ட பயணத்திற்குப் பின் எங்களுடன் சற்று இளக்கமாகவே பழக ஆரம்பித்தார் பிரேம். பண்டப் பரிமாற்றங்களில் அவர் முன்பு காட்டிய நாசூக்கான நனி நாகரிகத்தன்மை குறைந்து இயல்பான போக்கு தென்பட ஆரம்பித்தது. சில பண்டங்களை அவரே கேட்டு வாங்கி உண்டு மகிழ்ந்தார் ( டொம்ப்ளீ, கருவடாம்ல வெங்காயம் சேர்க்க மாட்டா எங்க ஆத்துல, நீ அன்னைக்கு எடுத்துண்டு வந்த வடாத்துல வெங்காயம்லாம் போட்டு நல்லாருந்தது. நாளைக்கு எடுத்துண்டு வர்றியா? – பிரேம்). நோன்பு காலங்களில் மாலை நேரம் பெரிய பள்ளிவாசல் போனால் பாட்ஷா எங்களுக்காக போணி ஒன்றில் நோன்பு கஞ்சியுடன் காத்திருப்பார். அங்கிருந்து எங்கள் தலைமையகமான செண்பக விநாயகர் கோவில் பக்கம்தான் என்பதால் நான்கைந்து டம்ளர்களுடன் அங்கே சென்று விநாயகருக்கு ஒரு துளி அரசிலையில் வைத்து படைத்து விட்டு நாங்கள் கூடி உண்பதும் ஓரிரு ஆண்டுகள் நடந்தது. இன்றும் பாட்ஷா வீட்டிலிருந்து அமுக்குடப்பா, டொம்ப்ளீ போன்ற நண்பர்களின் வீட்டிற்கு நோன்பு கஞ்சி போய்க்கொண்டிருக்கிறது. எங்கள் தெய்வநல்லூர் பள்ளிவாசலில் பெரும்பாலும் சைவகஞ்சிதான் என்றாலும் ஒருசில நாட்களில் பெரிய மனிதர்கள் தயவில் ஆட்டுக்கறி இட்ட அசைவ கஞ்சியும் கிடைக்கும். சைவகஞ்சிக்கு மட்டுமே பிரேம் பகிர்ந்துண்ண வருவார் என்றாலும் அசைவ கஞ்சியன்றும் எங்களுடன் வந்து கஞ்சி அருந்தாமல் உடன் தரப்படும் தேங்காய் பர்பியை உண்ணும் அளவுக்கு எங்களுடன் இணக்கமாகியிருந்தார்.
இருமுறை சங்கீதாவும், மெஜூராவும் எங்களுடன் வந்திருந்து நோன்புகஞ்சி அருந்தியிருக்கிறார்கள். பாட்ஷாவின் அப்பா கல்வத் பாய் ஈராண்டுக்கொருமுறை கிடைக்கும் ஒரு மாத விடுப்பில் ஊர் வந்திருந்தபோது தன் மகன் அடைந்துள்ள மாற்றங்களைக் கண்டு மனமகிழ்ந்து எங்கள் அனைவரையும் அவர் வீட்டிற்கு அழைத்தார். ரமலான் அன்று உறவினர், நண்பர் வருகை இருக்கும் என்பதாலும், பிரேமை அழைத்தால் அசைவம் உண்ண முடியாது என்பதாலும் ரமலான் முடிந்த இரண்டாம் நாள் நாங்கள் மட்டும் அழைக்கப்பட்டோம். சைவ உணவு என்றாலும் எவ்வித குறையும் இல்லாமல் மிகச்சுவையாக பாட்ஷாவின் அக்காக்கள் சமைத்திருந்தார்கள். நாங்கள் அனைவருமே பாட்ஷாவின் அக்காக்களை அப்போதுதான் பார்த்தோம். ஆனால் அக்காக்கள் அனைவருக்குமே எங்கள் ஒவ்வொருவரையும் தெரிந்திருந்தது. பிரேமை பாராட்டிய அவர்கள் டொம்ப்ளீயை தொடர்ந்து பேசச் சொல்லி புரிந்து கொள்ள குழப்பமாகி, எங்களிடம் விளக்கம் கேட்டு மகிழவும் தவறவில்லை. சங்கீதா வரவில்லை என்ற ஏமாற்றத்தை அக்காக்கள் வெளிப்படையாகவே தெரிவித்தார்கள். கல்வத் பாய்சார் எங்கள் அனைவருக்கும் வெளிநாட்டு பால்பாயிண்ட் பேனா ஒன்றும், பேரீச்சை, சாக்லெட்கள் அடங்கிய பை ஒன்றையும் பரிசளித்தார். எங்கள் வயதினரை இப்படி வீட்டிற்கு அழைத்து விருந்தளித்தது தெய்வநல்லூர் வரலாற்றில் முதல்முறை என்பது உங்களுக்கு சொல்லாமலேயே புரிந்திருக்கும்.
பாட்ஷாவின் இல்லவிருந்து தூண்டுதலால் சிவாஜி அவர் இல்லத்தில் தைப்பொங்கலை ஒட்டி எங்களை விருந்துண்ண அழைத்தார். விருந்து முடிந்ததும் சிவாஜி அப்பா சாத்தையா அவர்களால் எங்களுக்கு துண்டு கரும்பு, பனங்கிழங்கு, வேர்கடலை, சீப்பு பழம் ஆகியவை பரிசாக அளிக்கப்பட்டன. அதுபோலவே தீபாவளியை ஒட்டி பிரேம் வீட்டில் நாங்கள் விருந்துண்ண அழைக்கப்பட்டோம். இந்த விருந்தில் சங்கீதாவும், மெஜூராவும் கலந்து கொண்டதால் கூடுதல் மகிழ்வுடன் விருந்துண்டோம். பிரேம் வீட்டிற்கு அடுத்த வீடு வெங்கடகிருஷ்ணன் வீடு. (திருநெல்வேலி செயிண்ட் சேவியர்ஸ் பள்ளியில் படிக்கும் அன்னார் எங்கள் வயதுடையவரே ஆனாலும் எங்களுடன் பேசுவதில்லை என்பதாலும், அவர் வீட்டு திண்ணையில் அமர்ந்தால் டர்ட்டி பாய்ஸ் என்று சொல்லி துரத்துவதாலும், அவர் பாட்டி சொல்படி நாங்கள் உட்கார்ந்த இடத்தை தண்ணீர் தெளித்து துடைப்பதாலும் நாங்கள் அவரை வெங்கடகிறுக்கன் என்றே அழைப்போம்) வெங்கடகிறுக்கன் பாட்டி மட்டும் அவ்வப்போது நாங்கள் பிரேம் வீட்டுத் திண்ணையில் கூடி பேசும்போது வந்து சம்பந்தமில்லாமல் திட்டுவது வழக்கம் என்றாலும் பிரேம் அம்மா ஒரு வெற்று தம்ளரோடு வந்து அவரை விசாரித்ததும் அவர் ஓசையின்றி நழுவுவதும் வழக்கம். நாங்கள் விருந்துண்ட அன்று வெங்கடகிறுக்கன் பாட்டி வந்து வழக்கம்போல ஆரம்பிக்க பிரேம் அம்மா வந்து மிக நிதானமாக ஆனால் அழுத்தமாக பேசி அனுப்பினார் ( ஆமா மாமி, நம்மாவா இல்லங்கறதுனால கொழந்தேளுக்கு பசிக்காதா? நம்ம மடிஆச்சாரம் நம்மளோட. இன்னைக்கு நானும் விரதம்தான் அரைமணிக்கொருதரம் ரெண்டு பூவன் பழமும், ஒரு லோட்டா பாலும் முழுங்கற வாய் மூடா பட்டினி வெரதம்லாம் இல்லை. பச்சத்தண்ணி பல்லுலபடாது. அவர் கண்காணாத தேசத்துல இருக்கார். நான் இங்கே கொழந்தை இருக்கற தைரியத்துல, நீங்கல்லாம் இருக்கற தைரியத்துல இருக்கேன். அவர் இருந்தா கொழந்தைகளுக்கு இன்னும் நன்னா பண்ணச் சொல்லிருப்பார். அவன் வாடாம பார்த்துக்கற பேர் இவால்லாமும்தான். அக்கம், பக்கம் இருக்கற பேர் அவனாண்ட உன் தோப்பனார் எவ்ளோ பணம் அனுப்பினார், எவ்ளோ தங்கம் கொண்டு வரப்போறார்னு கேக்கறது கூட பரவால்ல. சும்மாவாவது பூணுலால முதுகச் சொறிஞ்சிகிண்டு உங்கம்மா என்னடா பண்றா ஆத்துல சும்மான்னு கேக்கறா. கேக்கற கொழந்தைக்கு வெஷமமா கேக்கறாங்கறது தெரியறது, ஆனா என்னன்னு அர்த்தம் புரியலை. ரெண்டுங்கெட்டான் வயசோன்னோ. வேதனைய மனசுல வச்சிண்டு என்கிட்ட கூட சொல்லாம முழுங்கிண்டு நிக்கறது. அவாளையெல்லாம் கேக்கறதுக்கு யாருமில்லாம போயிடுத்து இந்த வீதில. இவாளோட இருக்கற நேரம்தான் அவன் சித்த சந்தோஷமா இருக்கான். அந்த கொழந்தேளும் அவனை ஒடப்பொறந்தானாத்தான் வச்சிருக்கா. யாரும் எல்லாத்தையும் கட்டிண்டு போப்போறதில்லை மாமி, ஆத்திர அவசரத்துக்கு சமையல் சாமான் கேக்கறவாளுக்கு கொடுக்கற அளவுக்கு நன்னாத்தான் பகவான் வச்சிருக்கான். யாரையும் உபத்திரவம் பண்றா மாதிரி வைக்கலை. இந்த பசங்களால ஒங்களுக்கு ஒரு உபத்திரவமும் இல்லையோன்னோ. பெரியவா உங்களுக்கு தெரியாதா? பணம், படிப்பு சம்பாதிச்சுக்கலாம் மாமி, மனுஷாளை சம்பாதிச்சுக்கறது தான் ரொம்ப கஷ்டம். ஏதோ, அவர் போல இவனுக்கும் மனுஷாள் பந்தம் ஜாஸ்தி. அவர் கூட வேலை பாக்கறவா, அவர் கூட படிச்சவான்னு தெனோம் ஒருத்தராவது வாசத் திண்ணையோட வந்து நின்னு செளக்கியமான்னு கேட்டுட்டு அப்டியே போறா. வர்றவா யாரும் சாமானியமில்லை. பெரிய உத்யோகத்துல இருக்கப்பட்டவாதான். போன மாசம் நீங்க சங்கரங்கோயில் போயிருந்தேளே, அப்ப இங்க வந்தது அவரோட சிநேகிதர். தென்காசில டி எஸ் பி யா இருக்கார். திண்ணைல ஓரமா ஓக்காந்து எங்காத்துக்காரரோட காலேஜ்ல படிச்ச கதையை சொல்லிட்டு போனார். அவர் படிக்கறதுக்கு இவன் அப்பா நெறைய சொல்லிக் கொடுத்து உபகாரம் பண்ணாராம். சச் எ ட்ரூ ஃப்ரெண்ட்னு சொல்லி சிலாகிச்சுண்டார். ஒரு வாய் காப்பி கூட குடிக்கலை. நாகரீகம், நாசூக்கு தெரிஞ்ச மனுஷர், அடுத்த மாசம் குடும்பத்தோட வர்ரேன்னுட்டு கெளம்பிட்டார். இப்பவும் வாரம் ஒரு தரம் நம்மூர் போலீஸ்காரா வேட்டி சட்டைல வந்து அம்மா, டி எஸ் பி ஐயா விசாரிச்சுட்டு வரச் சொன்னார்னு கேட்டுட்டு சலாம் சொல்லிட்டுதான் போறா. அவர் எங்கியோ இருந்தாலும் அவர் பேர் எனக்கு ரட்ஷையாய் இருந்து காபந்து பண்ணின்டுருக்கு. இவனுக்கும் அதுபோல இவாள்லாம் அனுசரணையா, இவனும் அவாளுக்கு அனுசரணையா இருக்கட்டுமே. தப்பா ஏதாவது நடந்தா கண்டிக்கறதுக்கு பெரியவா நீங்கல்லாம் இருக்கேளே, கண்ணுக்கு முன்னாடிதான இருக்கான். தப்பு பண்றானா இல்லையான்னு தெரியாதைக்கு எங்கியோ நாம காணாத எடத்துல இருக்கல்லையே? என்ன மாமி, நாஞ்சொல்றது ). பாட்டி வெங்கடகிறுக்கனை ஓரக்கண்ணால் பார்த்தபடிக்கே நகர்வது தெரியாமல் நகர்ந்து போனார்.
எங்களுக்கு எதுவுமே அன்று புரியவில்லை. ஆனால் வெங்கடகிறுக்கன் பாட்டி பதில் பேசாமல் போனதில் மகிழ்ச்சி. இதற்குப் பின்பு நாங்கள் நண்பர்கள் இல்லத்தில் சகஜமாக பழக ஆரம்பித்தோம். இரண்டாம் நிலை நட்பு வட்டங்களான மு மாரி, ஈத்தக்குச்சி, கு கணேசன், முட்ட ராமர்,நியூஸ் சந்திரன் போன்றோர் எங்களுடன் இல்லாத நேரங்களில் உரிமையுடன் கேட்டு வாங்கி சாப்பிடும் அளவுக்கு இயல்பாக ஆனது எங்கள் நட்பு. தொடர்ந்து வாசித்து வருவோர்க்கு ஒரு ஐயம் வந்திருக்கக் கூடும். பிரேம் அம்மாவைப் பற்றி பேசிய அளவுக்கு அவர் அப்பாவைப் பற்றி நாங்கள் பேசியதில்லை என்பதால் நீங்கள் சற்று குழப்பமாகியிருக்கலாம். பிரேம் அப்பா மத்திய அரசின் தபால் தந்தி மற்றும் தொலைபேசி நிறுவனத்தில் ஊழியர். கீழ்நிலை அதிகாரி. இப்போதைய பி எஸ் என் எல் அப்போது இப்படி ஒருங்கிணைந்த துறையாகத்தான் இருந்தது. அன்று அணிசேரா நாடுகள் அமைப்பில் தீவிரமாக இந்தியா இயங்கி வந்ததால் அதன் ஒரு பகுதியாக அணி சேரா ஆப்பிரிக்க நாடுகளில் தொலைதொடர்பு கட்டமைப்புக்களை உருவாக்குவதில் இந்தியா உதவி செய்தது. அத்திட்டத்தின் பகுதியாக நாடு முழுவதும் உள்ள தொலைதொடர்பு வட்டங்களில் இருந்து தன்னார்வமாக ஆப்பிரிக்க நாடுகளில் பணியாற்ற முன்வருவோரை கேட்டதும் பிரேமின் அப்பா தமிழ்நாடு வட்டத்திலிருந்து இரண்டாவது ஆளாக விண்ணப்பித்தார் (முதல் ஆள் யாரென தெரியவில்லை). பணியில் 10 வருடங்களுக்குப் பிறகு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு 4 ஆண்டுகளில் கிடைக்கும் என்பது மட்டுமல்லாது அதி உயர்நிலை அதிகாரியாக ஓய்வு பெறும் வாய்ப்பும் உண்டு என்பதால் பிரேம் அப்பா ஆப்பிரிக்கா நாடான தான்சானியா செல்ல முன்வந்தார். ஒரே நிபந்தனை 4 ஆண்டுகள் தொடர்ந்து அங்கே பணியாற்ற வேண்டும். இடையில் இந்தியா வருவதானால் சொந்த செலவில்தான் வர வேண்டும். இந்திய தொலைதொடர்புத் துறை பயணச் செலவினை ஏற்காது. பயணச் செலவு என்பது 3 ஆண்டு மொத்த சம்பளத்தை விடவும் சற்று அதிகம். இருப்பினும் வருங்கால வாய்ப்பை முன்னுணர்ந்த பிரேமின் அப்பா திருநெல்வேலியிலிருந்து திருவனந்தபுரம் வழியே ஆப்பிரிக்கா பயணமானார். உள்ளூர் அலுவலக இருப்புக்காக பணியாளர் பட்டியலில் வைக்கவேண்டியிருந்ததால் புதிதாக உருவான சங்கரன்கோவில் தொலைபேசி நிலையத்திற்கு அவருக்கு மாற்றம் கொடுக்கப்பட்டது. அதாவது அவர் பெயர் மட்டும் அலுவலகப் பணியாளர் பட்டியலில் அயல்பணி எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆகவே பணியாளர் குடும்ப நலன்கள் தொடர்பான விஷயங்களில் பிரேம் குடும்பத்தார் சங்கரன்கோவில் அலுவலகத்தை அணுகினாலே போதும் என்ற வசதி ஏற்படுத்தித் தரப்பட்டது. ஆகவே பிரேமும், அவர் அம்மாவும் சங்கரன்கோவிலுக்கு அருகில் உள்ள சொந்த ஊரான தெய்வநல்லூர் நோக்கி வந்தனர். இங்கு பிரேமின் பாட்டி மட்டுமே ஊரை விட்டு வரமாட்டேன் எனவும், தன் சிதைச்சாம்பல் மாடநதியில்தான் கரைக்கப்பட வேண்டுமென்றும் பிடிவாதமாக இருந்தார். பிரேமின் அப்பாவை நாங்கள் ஃபோட்டோவில் (போட்டா ன்னு சொல்லக்கூடாது, ஃப், ஃப் , ஃபோட்டோ ன்னு சொல்லணும் ; டொம்ப்ளீ, நீ மட்டும் எப்டி சொன்னாலும் சரிதாண்டா – பிரேம்) பார்த்தோம். கண்ணாடி போடாத, சற்று மஞ்சள் பழுப்பான சரத்பாபு போல பிரேம் அப்பா இருப்பதாக சேமியா சொல்ல நாங்கள் அனைவரும் ஆமோதித்து ஏற்றுக்கொண்டோம். கூடுதல் தகவல் சேமியாவின் அப்பா, சிவாஜியின் அப்பா இருவரும் பிரேம் அப்பாவுடன் பள்ளிப் படிப்பில் நண்பர்கள். பிரேமுடன் பழகியதும்தான் அவர் அப்பாவை ஊரில் நிறைய பேருக்கு தெரிந்திருந்தது எங்களுக்குத் தெரிய வந்தது. (எடே, சீச்சு (என்கிற சீதாராமன்) புள்ளையாடே நீ, சைக்கிள எடுத்துட்டு போ. காசுல்லாம் நான் ஆச்சியம்மாட்ட வாங்கிக்கறேன். நம்ம பயலாயிட்டாயே – முன்பணம் இன்றி எவருக்கும் வாடகை சைக்கிள் கொடுக்காத முத்து வாடகை சைக்கிள் மார்ட் உரிமையாளர் முத்துக்குமரன் பிரேமிடம்).
பிரேமின் பாட்டி சுவாரசியமான அம்மணி. எங்களிடம் இயல்பாகப் பேசுவார். பல கதைகள் சொல்லுவார். ஆனால் அவர் மேல் நாங்கள் படக்கூடாது. முறுக்கைக் கடிக்கக்கூடாது, கைகளால் உடைத்து கையிலிருந்து வாய்க்குள் எறிந்து சாப்பிடச் சொல்லுவார். அதுகூட பரவாயில்லை, அப்பளத்தையும் அவ்வாறே சாப்பிடச் சொன்னபோதுதான் அமுக்குடப்பா அழுகை நிலைக்குப் போனது. மூக்கில் கை வைக்கக் கூடாது, வாயில் விரல் வைக்கக் கூடாது என பல கூடாதுகள் அவரால் அடிக்கடி சொல்லப்படும். அதே நேரம் எங்களில் யாருக்காவது அடிபட்டு வீங்கியிருந்தால் அந்த இடத்தை வருடி திருநீறு (விபூதி) பூசி ஜபம் செய்வார். இறுக அழுந்திய உதடுகளிலிருந்து முணுமுணுவென அவ்வப்போது வெளிப்பட்டு மறையும் மந்திர ஒலியோடு, மூடிய அவர் கண்களிலிருந்து நீர் வடியும். (அடேய் கோணக்கால் ஆறுமுகம் பையந்தானடா நீ, அப்பனாட்டமே குசும்பு, நான் அழலைடா. அது மந்த்ரஜபம் பண்றதுனால வர்றது. உனக்கு வலியா வரவேண்டியது என் கண்ணுல ஜலமா போறது. இப்ப புரியாதுடா இதெல்லாம் – சேமியா கீழே விழுந்து சுளுக்கி பாட்டி பார்வை பார்த்தபோது தன் காலில் அடிபட்டதால்தான் பாட்டி அழுவதாக சொன்ன சேமியாவை நோக்கி பிரேம் பாட்டி சொன்னது).
எட்டாம் வகுப்பில் நாங்கள் அனைவருமே நன்றாகப் படித்தோம் என்பது இப்போதும் நினைவில் இருக்கிறது. ஆர்க்கிடிமீஸ் தத்துவம் என பாலகனி டீச்சர் பாடம் எடுத்ததை பிரேம் வீட்டு கிணற்றடியில் உயரமான பாண்ட்ஸ் பவுடர் காலி டப்பா வழியே பரிசோதித்துப் பார்த்தோம். பிரேம் வீட்டில் இருந்த காந்தத்தை வைத்து பல பரிசோதனைகளை செய்து பார்த்தோம். மண்ணில் காந்தத்தைப் புரட்டி அதில் ஒட்டியுள்ள இரும்புத் துகள்களை சேர்த்து காகிதத்தில் உதிர்த்து காகிதத்தின் கீழே காந்தத்தை உரசினால் நடனமாடும் இரும்புத் துகள்கள் எங்களுக்கெல்லாம் விளையாட்டாக இருந்தாலும் மெஜூராவுக்கு மட்டும் அருவெறுப்பாக இருந்தது. அதை அருகில் கொண்டுவந்தாலே மெஜூரா கண்கள் பிதுங்க தோள் இரண்டும் குறுக உவ்வாக் என்ற ஓசையுடன் பிதுங்கிய கண்களை இறுக மூடுவதும் எங்களுக்கு மற்றொரு விளையாட்டாக இருந்தது.
எட்டாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் சங்கீதாவின் அப்பாவும், முட்ட ராமர் அண்ணன் முருகனும் துணை வர நாங்கள் (சங்கீதா, மெஜூரா உடன் வந்தனர்- உப்புக்காரி, ஊதா, மூக்குறிஞ்சி ஆகியோர் அவரவர் குடும்பத்தாருடன் வழிபட வந்தனர்) அனைவரும் ராமர் கோவில் விழாவிற்கு (தெய்வநல்லூரிலிருந்து 7 கி மீ தொலைவில் மேற்குமலைத்தொடரின் மடிக்குழந்தையென இருக்கும் அடிவாரக் குன்றின் மீது அமைந்த ஒற்றை அறைக் கட்டிடக் கோவில்) சென்று வந்தோம். சங்கீதா அப்பா அங்கு எங்கள் அனைவருக்கும் பால் ஐஸ், கரும்புச்சாறு வாங்கித் தந்தார். அருகிலுள்ள தாமரைக் குளத்திற்கெலாம் சென்று வந்தோம். ராமர் கோவிலின் காவல் தெய்வமென சரிந்து வழியும் பெரும்பாறை மீது ஓங்கி நின்றிருக்கும் கருப்பசாமிக்கான கிடாவெட்டை பிரேம் அன்றுதான் முதன்முறையாக நேரில் கண்டது. (டேய், டேய், என்னடா பண்ணப் போறாங்க அத? பாவம்டா அது, அய்யோ, அய்யோ, பாருடா, இன்னும் நடக்கறது, ரொம்ப பாவம்டா , பாரு எவ்ளோ ரத்தம்டா – கைகால்கள் நடுங்க சட்டென அமர்ந்து கண்களை மூடாமலேயே வெள்ளிமை தெரிய சரிந்த பிரேம் – அய்யர்புள்ளைய இங்கல்லாமா கூப்டுவர்றது என்று எங்களுக்கான வசவுடன் வந்த ஊதா சுகுமாரியின் அம்மாவால் தண்ணீர் தெளித்து எழுப்பப்பட்ட பிரேமுக்கு ரத்த பயம் போக கருப்பனின் திருநீறே பூசி விடப்பட்டது). வெகுநாட்கள் வரை பிரேமுக்கு கனவில் அக்காட்சி வந்து பயமுறுத்தியபடியே இருந்தது. நாங்கள் அனைவரும் வியக்கும்படி சங்கீதா இக்காட்சியால் எவ்விதத்திலும் அச்சமடையவில்லை. மெஜூரா கிடாவின் தலைக்கு மேல் அரிவாள் உயர்த்தப்பட்ட தருணத்தில் கண்களை மூடிக்கொண்டும், பத்து நொடிகள் கழித்து மறுபுறம் திரும்பி கண்களைத் திறந்தும் சூழலை எதிர்கொண்டார். எங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பழக்கமான காட்சி என்பதால் நாங்கள் வெறுமே பார்த்துக் கொண்டிருந்தோம். எதிலும் கவனமாக இருக்கும் சிவாஜி கூட கிடாவெட்டை பிரேம் பார்க்க நேரிடும் என்ற சாத்தியக்கூறை அனுமானிக்கவில்லை. வீட்டிற்கு திரும்பியதும் தயங்கி தயங்கி பிரேம் அம்மாவிடமும், பாட்டியிடமும் சங்கீதா அப்பா விவரத்தை சொன்னபோது அவர்கள் எளிதாகவே எடுத்துக் கொண்டார்கள் ( காலங்காலமா அவா சம்ப்ரதாயம் அப்டியா இருக்கு. வழக்கமா ராமர் பூஜை முடிச்சு திரை போட்டுட்டுதான கருப்பனுக்கு இதெல்லாம் பண்ணுவா? அந்த வேளைக்கு நீங்க திரும்பிடுவேள்னு நெனச்சேன். போட்டும் விடுங்கோ, லோகத்துல உள்ளதுதான, அவனும் தெரிஞ்சிண்டாகணும் இல்லையா? அவனுக்கு கருப்பன் விபூதி வச்சிட்டேள்லயா , பின்ன பயப்படறதுக்கு ஒண்ணும் இல்லை. நானும் ஜபம் பண்ணி விபூதி ஸ்புடம் போடறேன். சரியாயிடும். நீங்க இதுக்கெல்லாம் யோஜனை பண்ணவே வேண்டாம். கொழந்தேள பத்திரமா அழச்சிண்டு போயிட்டு வந்தேளே, அதுக்கே நன்றி சொல்லணும் – பிரேம் பாட்டி சற்று தயக்கத்திலிருந்த சங்கீதா அப்பாவிடம்).
ஏழாம் வகுப்பு இறுதியில் நடைபெற்ற ஆண்டுவிழா போன்றே இம்முறையும் ஆண்டுவிழா நடைபெறும் என ஆவலுடன் இருந்தோம். சே சார்வாள்கள் கூட புதிய நாடகம் யோசிக்க ஆரம்பித்தார்கள். தேதியும் குறிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகவிருந்த நாளுக்கு முந்தைய தினம் பஞ்சாயத்து உதவித் தலைவரான பாய்சார் மெளத் ஆனார். தன் செருப்புக் கடை மூலம் சம்பாதித்ததில் சரிபாதியை பொதுப்பணிகளுக்கு எழுதி வைத்த, எவ்வித வேறுபாடுமின்றி மக்களுக்கு உதவியவருமான ஜனாப் அப்துல் மஜீத் லெப்பை அவர்கள் மறைவு தெய்வநல்லூரையே வருத்தத்தில் ஆழ்த்தியது. மக்ரிப் தொழுகையில் மூன்றாவது றக்கத் வரை முழுநினைவுடன் இயல்பாக இருந்த பாய்சார் அனைவரும் தொழுகை முடித்து கைகளால் முகம் வருடி எழும்போதும் அப்படியே இருந்தார். அருகிலிருந்தோர் அவர் துஆ செய்வதாகக் கருதி எழுப்பவில்லை. பதினைந்து நிமிடங்களாக அவரிடம் அசைவில்லாதது கண்ட மோதினார் ஹசன் அருகில் வந்து கூர்ந்து கவனித்தார். தொழுகையில் இருப்பவரை இடையூறு செய்வது பெரும்பாவம் என்பதால் அவரை அழைக்காமல் அல்லாஹு அக்பார் என மெல்ல செவியில் சொல்லியும் பாய்சாரிடம் அசைவில்லாததால் மோதினார் தோளில் மெல்ல தொட பாய்சார் தொழுத வண்ணமே சரிந்தார். தொழுத கையுடன் இறைவனின் திருவடிகளை நாடிச் சென்ற பாய்சாரை கடைசி முறையாகப் பார்க்க ஊரே திரண்டது. இரு மாதங்கள் ஊரில் அவர் மரணமே பேச்சாக இருந்தது. இறைவனின் கருணையை தெய்வநல்லூர் உணர்ந்த தருணமாக அவர் மரணம் அமைந்தாலும் எங்களுக்கு வழக்கமான வருத்தமாக மட்டுமன்றி அந்த ஆண்டுக்கான பள்ளிவிழா ஒத்திவைக்கப்பட்டது கூடுதல் வருத்தமாகவும் அமைந்து விட்டது.
இவை தவிர இன்னும் பல சுவாரசிய சம்பவங்கள் நடைபெற்றன என்றாலும் அனைத்தையும் இங்கே பட்டியலிட்டுச் சொல்ல இடம் போதாது என்பதால் சுருக்கமாக சொல்கிறேன். எட்டாம் வகுப்பில் நாங்கள் மிக மகிழ்ச்சியாக இருந்தோம். தெண்டில் கூட எங்களிடம் சகஜமாகப் பேசும் அளவுக்கு உள்ளரசியல்கள் ஏதுமற்ற ஆண்டாக எட்டாம் வகுப்பின் ஆண்டு நிறைந்திருந்தது. அந்த ஆண்டு ஆய்வுக்கு வந்த கல்வித் துறை அதிகாரி மிக ஆவலுடன் வந்து எங்கள் செயல்பாடுகளை நிதானமாகக் கேட்டறிந்து வழக்கம்போல ஆசிரியர்களையும், தலைமை ஆசிரியரையும் பாராட்டிச் சென்றார். குறிப்பாக சத்துணவு வரிசை முறைகள் அவருக்கு வியப்பை ஏற்படுத்தின. ஒவ்வொரு தினமும் மகிழ்வுடனும், உற்சாகத்துடனும் கடந்தது. ஞானப்பழம் ஸ்டோர்ஸ் உதவியுடன் செல்வராஜ் சார் வலை, பந்து வாங்கி வாலிபால் அணி தொடங்கினார். சிவாஜி, மு மாரி, சேமியா, ஹக்கிம், பாட்ஷா ஆகியோர் முக்கிய வீரர்களாக விளங்கும் அணி உருவானது.
முழு ஆண்டுத் தேர்வுகள் அறிவிக்கப்பட்ட அன்றுதான் எங்கள் கால்கள் தரையிறங்கின. இந்தத் தேர்வோடு இப்பள்ளியை விட்டு நாங்கள் வெளியேற வேண்டிய உண்மை முகத்தில் அறைந்தது. அதை விட இந்த நட்பு வட்டம் இனி இவ்வாறே தொடர இயலாது என்பதுதான் எங்களுக்கு கடும் துயரை அளித்தது. இனி அரசு மேல்நிலைப் பள்ளிக்குத்தான் நாங்கள் 9ஆம் வகுப்புக்கு செல்ல வேண்டும். இளஞ்சூரியனின் ஒளியில் சிறகடித்துத் திரிந்த நாங்கள் வாழ்வின் இருண்ட குகைகளுக்குள் திணிக்கப்படுவதன் நுழைவாயிலாக அமைந்த மேல்நிலைப் பள்ளி வாழ்க்கை எங்களுக்குக் காத்திருந்தது வஞ்சத்தின் இளிப்புடன். பிஞ்சுகள் முற்றத் துவங்கி காயாகிக் கனிய எவ்வளவு வாய்ப்போ அதே அளவு வாய்ப்புதான் பிஞ்சுகள் வெம்பிப் போவதற்கும் இருக்கிறது. நாங்கள் வெம்பி விடாமலும், கனிய முடியாமலும்
