- அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம்
- செயற்பாலது ஓரும் அறன்
- நுண்பொருள் காண்பது அறிவு
- வகையறச் சூழ்ந்தெழுதல்
- தூய்மணி சிந்திடும் தோய்ந்த நெருப்பு
- ஒருமையுள் ஆமைபோல்
- நெஞ்சம் நிமலமாய் நிலைபெறின்…
- எழுதாக்கிளவியும், ஏனைய நூற்களும்
- கர்மத்தின் வகையறிதல்
- செயல் என்னும் நிவேதனம்
- ஒன்றே நினைந்திருக்க உள்ளம் கனியும்
- ஞானம், ஞேயம், ஞானகம்யம்
- சத்யம், ஞானம், அனந்தம் பிரம்ம
- ஆனந்தம் பிரம்மனோ வித்வான்
- சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
- கீதா முகூர்த்தம்
- நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
- புத்தியில் நிலைத்தவன்
- இறை உறையும் இடம்
- மேலே வேருள்ள அஸ்வத்தம்
- அறங்களனைத்தையும் கைவிடுக!
- இணைபிரியாத இரு பறவைகள்
- இருப்பதனைத்தும் இறைவனே!
- சுத்த அறிவே சிவம் (current post)
சுக்லயஜூர் வேதத்தின் சதபத பிராமணத்தின் இறுதிப்பகுதியாக விளங்குகிறது பிருஹதாரண்யக உபநிஷத். பிருஹத் ஆரண்யகம் என்றால் மிகப்பெரிய அடர்ந்த காடு என்று பொருள். காடுகளில் ரிஷிகளால் சிந்திக்கப்பட்ட மறைபொருளைக் கொண்டுள்ளதால் இது அவ்வாறு அழைக்கப்படுகிறது. பிருஹதாரண்யகம் பிற அனைத்து உபநிஷதங்களையும் விட மிகப்பெரியது. சுக்லயஜூர் வேதத்தில் அமைந்துள்ள காரணத்தால் இந்த உபநிஷத்துக்கும் “பூர்ணமத: பூர்ணமிதம்” என்ற மந்திரமே சாந்திபாடமாக அமைந்துள்ளது. “அஹம் பிரம்மாஸ்மி” என்ற புகழ்பெற்ற மகாவாக்கியம் இந்த உபநிஷத்தில்தான் வருகிறது.
மூன்று காண்டங்களும், ஆறு அத்தியாயங்களும் கொண்டது பிருஹதாரண்யகம். ஒவ்வொரு காண்டமும் இரண்டு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மது காண்டம், முனி காண்டம், கில காண்டம் என்பது அந்தக் காண்டங்களின் பெயர்கள். மது காண்டம் உபதேச காண்டமாக அறியப்படுகிறது. இதில் பிரம்மதத்துவத்தின் அடிப்படைகள், படைப்பின் இயல்பு மற்றும் ஜீவனுடைய உண்மையான தன்மை ஆகியன விளக்கப்படுகின்றன. முனி காண்டம் உப்பத்தி காண்டம் அல்லது விசாரணை காண்டம் என்று அறியப்படுகிறது. யாக்ஞ்யவல்கிய மகரிஷியின் வேதாந்த விவாதங்கள் இப்பகுதியில் வருகிறது. கில காண்டத்தின் பெரும்பாலும் உபாசனைகளைப் பற்றிப் பேசப்படுகிறது. மனத்தூய்மைக்கான சாதனைகள், உபாசனைகள் ஆகியன வழங்கப்படுகின்றன.
மதுகாண்டத்தின் முதல் அத்தியாயத்தில் படைப்பு எவ்வாறு நிகழ்ந்தது என்பதைப் பேசுகிறது உபநிஷத். இவ்வாறு படைப்பு குறித்து உபநிஷத் பேசும்போதெல்லாம் அது அத்யாரோப அபவாத நியாயத்துக்காக என்பதை நினைவில் கொள்ள வேண்டும். படைப்பை உண்மை என்று எண்ணும் மாணவனுக்கு முதலில் படைப்பு குறித்து விளக்கமாகப் பேசிவிட்டு, பின்னர் படைப்பு என்பது நிகழவே இல்லை, இருப்பதெல்லாம் பிரம்மமே என்று நிறுவுவதுதான் வேதாந்தத்தின் முறை. மாலை வெளிச்சத்தில் பாம்பைக் கண்டு பயப்படுகிறவனிடம், “நீ பார்த்த அந்தப் பாம்புதான் இந்தக் கயிறு” என்று சொல்வது போன்றது இது. இந்தச் சொற்றொடரில் பாம்பு என்ற சொல் வருவதால் பாம்பின் இருப்பை சொல்பவரும் ஏற்றுக்கொள்கிறார் என்று அர்த்தமாகி விடாது.
“அஹம் பிரம்மாஸ்மி” என்ற மகாவாக்கியம் இந்தப்பகுதியில்தான் வருகிறது. “துவக்கத்தில் பிரம்மமே இருந்தது. அது தன்னையே அறியும்போது பிரம்மமாகவே ஆகிறது,” என்கிறது உபநிஷத். மகாவாக்கியம் என்றால் அளவில் பெரிய வாக்கியம் என்று பொருளல்ல. பெரிய உண்மையைப் பேசும் வாக்கியம் என்று பொருள். ஜீவனுக்கும், பிரம்மத்துக்கும் இடையில் உள்ள ஒற்றுமையைப் பேசும் உபநிஷத வாக்கியங்கள் மகாவாக்கியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. பொதுவாக ஒவ்வொரு வேதத்துக்கும் உரித்தான ஒரு மகாவாக்கியம் உண்டு. ரிக் வேதத்தின் மகாவாக்கியமாக ஐதரேய உபநிஷத்தில் வரும் “பிரக்ஞானம் பிரம்ம” என்ற வாக்கியம் விளங்குகிறது. இது பிரம்மத்தின் இயல்பை வரையறுக்கும் லட்சண வாக்கியம் ஆகும். தூய அறிவே பிரம்மம் என்பது இதன் பொருள். நமது உடல், மனம், மற்றும் புலன்களுக்கு அப்பாற்பட்டு, அனைத்தையும் அறிந்து கொண்டிருக்கும் சாட்சி உணர்வே பிரம்மத்தின் உண்மையான இயல்பு என்பதை இவ்வாக்கியம் குறிக்கிறது. சுக்ல ய்ஜூர் வேதத்தின் பிருஹதாரண்யகத்தில் வருவது “அஹம் பிரம்மாஸ்மி.” பிரம்மத்தைத் தானாகவே உணர்ந்த சாதகனின் அனுபூதி நிலை அல்லது அவனது அனுபவத்தை வெளிப்படுத்தும் வாக்கியமாக இது அமைந்திருக்கிறது. நான் பிரம்மமாகவே இருக்கிறேன் என்பது பொருள். ஆசிரியரின் உபதேசத்தைக் கேட்ட சாதகன் “நான் எல்லைகளுக்குட்பட்ட உடலோ, மனமோ அல்ல. இந்த முழுப்படைப்புக்கும் ஆதாரமாக இருக்கும் பிரம்மம் நானே” என்று அகத்தில் உணரும் சாட்சாத்கார நிலை இது. சாமவேதத்தின் சாந்தோக்யத்தில் வருவது “தத் த்வம் அஸி” என்னும் மகாவாக்கியம். இது உபதேசவாக்கியமாக விளங்குகிறது. தத் (அது- பிரம்மம், ஈஸ்வரன்) மற்றும் த்வம் (நீ-ஜீவன்) ஆகிய இரண்டின் உபாதி நீங்கிய தூய அறிவு சொரூபம் ஒன்றே என்பதை இவ்வாக்கியம் உணர்த்துகிறது. அதர்வண வேதத்தின் மாண்டூக்ய உபநிஷத்தில் “அயம் ஆத்மா பிரம்ம” இந்த ஆத்மாவே பிரம்மம் என்ற மகாவாக்கியம் வருகிறது. மாணவன் தன் நெஞ்சைத் தொட்டுக்காட்டி “இந்த” ஆத்மாவே, என் உள்ளே சாட்சியாக ஒளிரும் இந்த ஆத்மாவே, இந்தப் படைப்பை நிகழ்த்தும் பரம்பொருள் என்று அறிவிப்பதை இந்த வாக்கியம் கூறுகிறது.
பிருஹதாரண்யகத்தின் முதல் அத்தியாயத்தில் புகழ்பெற்ற சாந்திமந்திரமான “அஸதோமா சத்கமய” வருகிறது. அழிவிலிருந்து அழிவின்மைக்கும், அறியாமை என்ற இருளிலிருந்து ஞானம் என்ற ஒளிக்கும், மரணத்திலிருந்து மரணமின்மைக்கும் என்னை அழைத்துச் செல்வாயாக என்று இந்த மந்திரம் வேண்டுகிறது.
இரண்டாவது அத்தியாயத்தில் கார்க்கிய-அஜாத சத்ரு உரையாடலாக ஆத்மதத்துவம் விளக்கப்படுகிறது. தனக்கு இறைதத்துவம் குறித்து அனைத்தும் தெரியும் என்ற அகந்தையுடன் வாழ்ந்து வரும் கார்க்கிய பாலாகி என்ற பிராமணருக்கும், காசி நாட்டின் அரசரும், ஆத்மஞானியுமான அஜாதசத்ருவுக்கும் இடையில் நிகழும் உரையாடல் இது. கார்க்கிய பாலாகி இயற்கையில் இருக்கும் ஆற்றல்களையே பிரம்மமாகப் புரிந்து கொண்டு அஜாதசத்ருவுக்கு ஆத்மதத்துவத்தைத் தவறாக உபதேசிக்கிறார். அவை பிரம்மத்தின் வெளிப்பாடுகளே தவிர அவையே பிரம்மமல்ல என்று அஜாதசத்ரு மறுத்துவிடுகிறார். தன் அறிவு போதாது என்று உணர்ந்த கார்க்கியர் அஜாத சத்ருவைத் தனக்கு உபதேசிக்குமாறு வேண்டுகிறார். அஜாதசத்ரு உறங்கும் மனிதன் ஒருவனைக் காட்டி, “இந்த மனிதன் உறங்குகையில் அவனது அறிவு எங்கிருந்தது? விழித்தவுடன் அது எங்கிருந்து திரும்பி வந்தது?” என்று கேட்கிறார். கார்க்கியருக்கு விடை தெரியவில்லை. “சூரியனோ, சந்திரனோ, மனமோ, புத்தியோ இல்லாத ஆழ்உறக்க நிலையிலும் ஒருவன் ‘நான் சுகமாகத் தூங்கினேன்’ என்ற ஆனந்தத்தை உணர்கிறான். அங்கே மனமும் புத்தியும் வேலை செய்யாத போதும், எதன் ஒளியால் அந்த இருளும் ஆனந்தமும் அறியப்படுகிறதோ, அதுவே ஆத்மாவின் ஒளி ஆகும். ஆழ்ந்த உறக்கத்தில் ஆத்மா தன் சுய வடிவில் தனித்து, எதன் துணையும் இன்றி பிரகாசிக்கிறது. விழித்தெழும் போது, சிலந்தி எப்படித் தன் நூலைத் தன் உள்ளிருந்து வெளிப்படுத்துகிறதோ, அதுபோல ஆத்மாவிலிருந்து மனம், பிராணன், இந்திரியங்கள் மற்றும் உலக அறிவு அனைத்தும் மீண்டும் வெளிப்படுகின்றன,” என்று ஆத்மதத்துவத்தை விளக்குகிறார் அஜாதசத்ரு.
இதே அத்தியாயத்தில் மகரிஷியான யாக்ஞ்யவல்கியர் தன் மனைவி மைத்ரேயியிடம் இவ்வாறு கூறுகிறார்: “நான் இல்லறத்தை விடுத்து நான்காவது ஆசிரமமான சன்யாச தர்மத்துக்குள் நுழைய எண்ணங் கொண்டுள்ளேன். எனவே என் உடமைகளனைத்தையும் உனக்கும், என் இன்னொரு மனைவியான காத்யாயனிக்கும் சரிசமமாகப் பிரித்துக் கொடுத்து விடுகிறேன்.”
மைத்ரேயி கேட்கிறாள்: “அனைத்தையும் துறந்து வெளியேறுவதைப் பற்றிப் பேசுகிறீர்கள். நாங்கள் மகிழ்வோடு வாழ்வதற்காக உங்கள் உடைமைகளை எங்களுக்கு அளிப்பதாகக் கூறுகிறீர்கள். சொல்லுங்கள், நீங்கள் தரும் செல்வத்தால் எனக்கு நிரந்தரமான அமைதியும், மகிழ்ச்சியும் கிட்டுமா? இவ்வுலகின் அனைத்து செல்வங்களும் எனக்கே சொந்தமானதாக இருந்தாலும் என்னால் நிலைத்த மகிழ்வுடன் இருக்க முடியுமா? அல்லது அனைத்து உலகையும் அடைந்த பின்னும், நிலைத்த மகிழ்வுக்காகவும், அமைதிக்காகவும், நான் தேடக்கூடிய ஏதோ ஒன்று இருக்கிறதா? செல்வத்தால் அழிவற்ற நிலையை அடைய முடியுமா?”
“இல்லை. செல்வத்தால் மட்டும் உன்னால் மகிழ்வோடு இருக்க முடியாது. செல்வம் சௌகரியங்களை மட்டுமே அளிக்கிறது. அழிவற்ற நிலை என்பது செல்வத்தால் சாத்தியமில்லை.”
“எனில் இந்தச் செல்வத்தால் எனக்கு என்ன பயன்? எது அழியாமையைக் கொடுக்குமோ அதை மட்டும் எனக்குக் கொடுங்கள்,” என்று கேட்கிறாள் மைத்ரேயி.
மைத்ரேயியின் இந்தக் கேள்வியால் மகிழ்வடைந்த மகரிஷி யாக்ஞ்யவல்கியர், “இப்போது உனக்கு எல்லாவற்றினுடைய ரகசியமாக இருக்கும் ஒரு பொருளைப் பற்றி உபதேசிக்கிறேன்,” என்று துவங்குகிறார். “ஆத்மனஸ்து காமாய சர்வம் பிரியம் பவதி” என்ற பிரகடனம் இங்குதான் செய்யப்படுகிறது. ஒருவர் ஏதாவது ஒரு பொருளையோ, மனிதரையோ விரும்புகிறார் என்றால் அது அந்தப் பொருளின் மீதான, மனிதரின் மீதான பிரியத்தினால் அல்ல. தன் மீதான பிரியத்தால்தான் என்கிறார் யாக்ஞ்யவல்கியர். இந்த உண்மையை அறிந்தபின் தன்னுடைய உண்மையான தன்மையை அறிந்து கொள்வதில் ஒருவருக்கு இயல்பாகவே நாட்டம் தோன்றிவிடும். ஏனெனில் எல்லாவற்றையும்விட ஒருவருக்குப் பிரியமானதாக ஆத்மாவே இருக்கிறது.
அந்த ஆத்மாவை அடைவது எவ்வாறு? யாக்ஞ்யவல்கியர் கூறுகிறார்: “ஆத்மாவா அரே த்ரஷ்டவ்ய: ஷ்ரோதவ்ய: மந்தவ்ய: நிதித்யாசிதவ்ய:” இந்த ஆத்மா ஒன்றுதான் காணப்பட வேண்டியது (த்ரஷ்டவ்ய:). இந்த ஆத்மாவைக் குறித்த விளக்கங்களைக் கேட்கவேண்டும் (ஷ்ரோதவ்ய:); கேட்டதை ஆழமாகச் சிந்திக்க வேண்டும் (மந்தவ்ய:); பின்னர் அதையே தியானித்து அது மயமாகி விடவேண்டும் (நிதித்யாசிதவ்ய:) எப்போது ஆத்மாவை ஒருவன் தரிசித்து, கேட்டு, சிந்தித்து, முழுமையாக அறிந்து கொள்கிறானோ, அப்போது இந்த பிரபஞ்சத்திலுள்ள எல்லாமே அவனுக்கு அறியப்பட்டதாகி விடுகிறது.
பின்னர் ஆத்மஞானத்தை அடைந்த ஞானியைப் புகழ்கிறார். “எங்கு இருமை இருக்கிறதோ, அங்கே ஒருவன் இன்னொன்றைப் பார்க்கிறான், கேட்கிறான், அறிகிறான். ஆனால், எப்போது ஒரு ஞானிக்கு அனைத்துமே ஆத்மாவாக மாறிவிடுகிறதோ, அங்கே எதைக்கொண்டு யார் எதைப் பார்ப்பது? எதன் ஒளியால் இந்த உலகம் முழுவதையும் நாம் அறிகிறோமோ அந்த ஆத்மாவை வேறு எந்தக் கருவியைக் கொண்டு அறிய முடியும்? மைத்ரேயி! அறிந்து கொள்ளும் அறிபவனை வேறு யாரால், எதைக் கொண்டு அறிய முடியும்?” எவ்வாறு முரசு, வீணை, சங்கு போன்ற இசைக்கருவிகளிலிருந்து வெளிப்படுகின்ற தனித்தனி ஒலிகளை அறிந்து கொள்வதற்கு பதிலாக அவ்வொலிகள் எந்த மூலத்திலிருந்து வருகின்றன என்று அறிந்து கொள்வது அவ்வொலிகளனைத்தையும் அறிந்ததாகுமோ அதுபோலவே ஆத்மாவை அறிந்தால் அது அனைத்தையும் அறிந்ததாகிவிடும் என்கிறார் யாக்ஞ்யவல்கியர்.
பிரம்மத்தை அறிய ஒரு முக்கியமான வழியைப் பரிந்துரைக்கிறார் யாக்ஞ்யவல்கியர். “நேதி நேதி” என்பதுதான் அது. இது நானல்ல, இது நானல்ல என்று உடல் தொடங்கி மனம், எண்ணங்கள், மற்றும் இந்த உலகமனைத்தையும் நிராகரித்தபின்னர் எஞ்சி நிற்பது எதுவோ, தூய பேரறிவான அந்த சாட்சி உணர்வுதான் பிரம்மம் என்று விளக்குகிறார்.
ததீசி என்ற மகரிஷி அஸ்வினி தேவர்களுக்கு மது(தேன்) என்ற தத்துவத்தை இந்த அத்தியாயத்தில் உபதேசிக்கிறார். ஒரு துளித்தேன் முழுத்தேனின் சுவையைத் தருவது போல, இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துகளிலும் அந்தப் பரமாத்மாவின் அதே ஆனந்தமும் அறிவும் நிறைந்திருக்கிறது என்பதையும், ஆத்மாவை உணர்ந்த பின்னர் இந்த உலகம் முழுவதையும் ஆத்மாவின் சொரூபமாகவே பார்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது மது வித்யா.
முனிகாண்டமும் ஒரு சுவாரசியமான கதையுடன் துவங்குகிறது. விதேக நாட்டு மன்னர் ஜனகர் பஹூதக்ஷிண யாகம் ஒன்றை நடத்துகிறார். அவர் யாகத்துக்கு வந்துள்ளவர்களில் யார் சிறந்த பிரம்மஞானி என்பதை அறிய விரும்பினார். ஆயிரம் பசுக்களை அவர்கள் முன் நிறுத்தி, அவற்றின் கொம்புகளில் தலா பத்துபாதங்கள் எடையுள்ள தங்கத்தைக் கட்டச்செய்து, “உங்களில் யார் சிறந்த பிரம்ம ஞானியோ அவர்கள் இந்தப் பசுக்களை தன் இல்லத்திற்கு ஓட்டிச் செல்லலாம்,” என்று சவால் விடுத்தார். அறிஞர்கள் அனைவரும் வாதம் செய்ய அஞ்சி அமைதியாக இருந்தனர். அங்கிருந்த மகரிஷி யாக்ஞ்யவல்கியர் எழுந்து தன் சீடன் சாமச்ரவஸை நோக்கி, “மகனே, இந்தப் பசுக்களை நம் இல்லத்திற்குக் கூட்டிச் செல்,” என்றார். இதனால் சினமுற்ற பிற அறிஞர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு கடினமான தத்துவக் கேள்விகளைத் தொடுக்கின்றனர். அஸ்வலர், ஆர்த்தபாதர், புஜ்யு, உஷஸ்தர், கஹோளர், கார்கி வாசக்ணவி, உத்தாலக ஆருணி, விதாக்த சாக்கல்யர் ஆகியோரே அந்த அறிஞர்கள். மரணத்தைக் கடக்கும் வழி குறித்தும், செயலின் ரகசியம் குறித்தும், யாகங்களைச் செய்பவர்கள் மரணத்தின் பின் அடையும் உலகங்கள் குறித்தும், ஆத்மாவின் உண்மையான இயல்பு குறித்தும், ஆத்மஞானி எவ்வாறு வாழ்வான் என்பது குறித்தும், பிரபஞ்சத்தையும், மனித உடலையும் உள்ளிருந்து இயக்குவது யார் என்பது குறித்துமான கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் யாக்ஞ்யவல்கியர். இவற்றில் கார்கி வாசக்னவி என்ற பெண் அறிஞர் கேட்கும் கேள்விகள் முக்கியமானவை. இவ்வுலகம் எதனால் பின்னப்பட்டுள்ளது என்று துவங்கி கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகிறார். இறுதியாக, “கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என அனைத்தும் எதில் நெய்யப்பட்டுள்ளது?” என்று கார்கி கேட்கும்போது யாக்ஞ்யவல்கியர் “அக்ஷரம்” – அழியாத பேரறிவு என்று பதிலிறுக்கிறார்.
நான்காவது அத்தியாயத்தில் யாக்ஞ்யவல்கியர் ஜனகருக்கு ஆத்மதத்துவத்தை உபதேசிக்கிறார். “மனிதனுக்கு வழிகாட்டும் ஒளியாக இருப்பது எது?” என்ற கேள்விக்கு படிப்படியாக பதில் கூறப்படுகிறது. பகலில் சூரியனும், இரவில் சந்திரனும், இரண்டும் இல்லாதவிடத்து நெருப்பும், கும்மிருட்டில் சப்தமும் ஒளியைத் தருகின்றன. அனைத்தும் ஒடுங்கிவிட்ட நிலையில் எந்த ஒளியைக் கொண்டு ஒரு மனிதன் வாழ்கிறானோ, நகர்கிறானோ, வேலை செய்கிறானோ அந்த ஒளி அவனது ஆத்மஜோதியேயாகும்,” என்கிறார் யாக்ஞ்யவல்கியர். புறக்கருவிகள் அனைத்தும் செயலிழந்த பின்னரும் நமக்குள் அறிவு ஒளி பிரகாசித்துக் கொண்டே இருக்கிறது. அதுவே ஆத்மா. அதற்குப் புறக்கருவிகள் எதுவும் தேவையில்லை. அது தன் ஒளியால் தானாகவே ஒளிர்வது.
பின்னர் உறக்கம், விழிப்பு, கனவு ஆகிய மூன்று நிலைகளிலும் ஆதாரமாக இருப்பது துரீயம் எனப்படும் ஆத்மாவே ஆகும் என்று விளக்குகிறார். மரணத்தின்போது என்ன நடக்கிறது என்பது குறித்து விளக்குகிறார். ஒரு கம்பளிப்பூச்சி ஒரு இலையின் நுனிக்குச் சென்று அடுத்த இலையைப் பற்றியபின் முந்தைய இலையை விடுவிப்பதுபோல ஜீவன் தன் கர்மவினைகளுக்கேற்ப அடுத்த உடலைப் பற்றியபின் பழைய உடலை விட்டுப் பிரிகிறது. மனத்தில் பற்றுள்ள மனிதன் மீண்டும், மீண்டும் பிறக்கிறான். பற்றை ஒழித்து ஆத்மாவை மட்டுமே விரும்பும் ஆப்தகாமனுக்கு அவனுடைய பிராணன் உடலைவிட்டு எங்கும் செல்வதில்லை. ஒரு பாம்பு தன் சட்டையை உரித்துத் தள்ளுவதுபோல, அவன் உடலைத் தன் வடிவமாகப் பார்ப்பதை நிறுத்தி விடுகிறான். அவன் வாழும்போதே பிரம்மமாக மாறிவிடுகிறான் என்கிறான் யாக்ஞ்யவல்கியர்.
கிலகாண்டம் ஐந்தாவது அத்தியாயத்தில் துவங்குகிறது. “ஆத்ம ஞானமே முக்திக்கு நேரடியான வழி என்றபோதிலும், நுட்பமான அந்த ஞானத்தை அடைவதற்கு சித்த சுத்தியும் (மனத்தூய்மை), சித்த ஏகாக்ரதாவும் (மனஒருமுகப்பாடு) அவசியம். அவற்றை அடைய உபாசனைகள் மிக முக்கியமான கருவிகளாகும்,” என்று சங்கரர் கூறுகிறார். மது மற்றும் முனி காண்டங்களில் கூறப்பட்ட பிரம்ம ஞானத்தை அடைவதற்கும், அடைந்த ஞானத்தில் நிலை நிற்பதற்கும் தேவையான அக மற்றும் புறத் தயாரிப்புகளைப் பற்றி இந்தக் காண்டம் பேசுகிறது.
கிலகாண்டத்தில் புகழ்பெற்ற சாந்தி பாடமான “பூர்ணமத: பூர்ணமிதம்” என்ற மந்திரம் வருகிறது. இந்த மந்திரத்தின் விளக்கத்தை ஏற்கனவே விரிவாகப் பார்த்திருக்கிறோம். “இதுவும் பூர்ணம்; அதுவும் பூர்ணம்; பூர்ணத்திலிருந்து பூர்ணமே வெளிப்படுகின்றது. பூர்ணத்திலிருந்து பூர்ணத்தை எடுத்தபின்னும் எஞ்சியிருப்பது பூர்ணமே,” என்ற பொருளில் வரும் மந்திரம். இருப்பதெல்லாம் பிரம்மமே என்பதை கவித்துவமான வெளிப்பாட்டில் விளக்குகிறது. அத்வைத வேதாந்த வகுப்புகள் அனைத்திலும் இறுதி மந்திரமாக இந்த சாந்தி பாடமே பாடப்படுகிறது.
பிரஜாபதியான பிரம்மதேவனிடம் அவனது பிள்ளைகளான தேவர்கள், மனிதர்கள், அசுரர்கள் மூவரும் உபதேசம் கோரிச் செல்கின்றனர். பிரம்மதேவர் “த” என்ற ஒலியை மட்டும் உபதேசமாக அளிக்கிறார். காமத்திலும், போகத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட தேவர்கள் “த” என்ற ஒலியை “தமயத” (புலனடக்கம்) என்று புரிந்து கொள்கின்றனர். பேராசையும், பொருள் சேர்க்கும் குணமும் கொண்ட மனிதர்கள் அதை “தத்த” (தானம் செய்தல்) என்று புரிந்து கொள்கின்றனர். சினமும், வன்முறைக் குணமும் நிறைந்த அசுரர்கள் அதை “தயத்வம்” (கருணை) என்று புரிந்து கொள்கின்றனர். இவ்வாறு ஒரே உபதேசத்தை ஒவ்வொருவரும் தங்களது மனப்பக்குவத்துக்கு ஏற்றாற்போல் புரிந்து கொள்கின்றனர். இதிலிருந்து மனத்தின் தயார் நிலை என்பது உபதேசத்தைப் பெற்றுக் கொள்வதற்கு எவ்வளவு முக்கியமானது என்று விளக்கப்படுகிறது. மனிதர்களுக்குள்ளும் தேவ, மனித, அசுர இயல்புகள் மூன்றும் உள்ளன. எனவே புலனடக்கம், கருணை, தானம் ஆகிய மூன்று அவர்களது மனத்தூய்மைக்கு இன்றியமையாத அறநெறிகள் என்பதும் இங்கு உணர்த்தப்படுகிறது.
மேலும் மனதை உலகப்பொருட்களிலிருந்து விலக்கி சூட்சுமமான பரம்பொருளில் வைப்பதற்கு உபாயமாக பல்வேறு உபாசனைகள் பேசப்படுகின்றன. இதயத்தில் பிரம்மத்தைத் தியானிக்கும் “ஹிருதய பிரம்ம உபாசனை”, பிரம்மத்தை இருப்பின் வடிவமாக பாவித்து தியானிக்கும் “சத்திய பிரம்ம உபாசனை,” உணவருந்துகையில் வயிற்றில் உணவைச் செரிக்கும் நெருப்பை இறைவடிவமாக தியானிக்கும் “வைஸ்வாநர அக்னி உபாசனை,” காயத்ரி மந்திரத்தின் நான்கு பாதங்களையும் அதன் தத்துவார்த்தப் பொருளையும் தியானிக்கும் “காயத்ரி உபாசனை,” மரணகாலத்தில் சூரியதேவனிடம் தடையற்ற ஆத்ம தரிசனம் வேண்டி பிரார்த்திக்கும் மரணகாலப் பிரார்த்தனை ஆகியன இப்பகுதியில் பேசப்படுகின்றன.
ஆறாவது அத்தியாயம் உலகியல் வாழ்வை ஆன்மிகமாக மாற்றிக்கொள்வது குறித்தும், ஜீவனுடைய பிறவிச்சுழற்சி குறித்தும், உபநிஷத ஞானத்தைத் தலைமுறை தலைமுறையாகக் கொண்டுவந்த ஆசாரிய பரம்பரை குறித்தும் பேசுகிறது.
ஜனகரின் அவையிலிருந்த பிரவாகண ஜைபலி என்னும் அரசன் அங்கிருந்த சுவேதகேது என்ற முனிகுமாரனிடம் ஐந்து நுட்பமான கேள்விகளைக் கேட்கிறான். அவற்றுக்குப் பதிலளிக்க முடியாமல் நாணி முனிகுமாரன் தன் தந்தையான உத்தாலக ஆருணியிடம் சென்று முறையிடுகிறான். உத்தாலக ஆருணி மாபெரும் ஞானி. ஆனால் அவருக்கும் அக்கேள்விகளுக்கான பதில் தெரியவில்லை. தன் அறியாமையை ஒப்புக்கொள்ளும் அவர் நேரடியாக பிரவாகண ஜைபலியிடம் சென்று அவனுக்கு சீடனாக அமர்ந்து அந்தக் கேள்விகளுக்கான பதில்களை அறிந்து கொள்கிறார். இதுவே “பஞ்சாக்னி வித்யை” எனப்படுகிறது. இங்கு ஒரு ஜீவனின் மறுபிறவிச் சுழற்சி ஐந்து அக்னிகளில் செய்யும் வேள்வியாக உருவகிக்கப்படுகிறது. சொர்க்கம் முதல் அக்னியாகவும், மழைப்பொழிவு இரண்டாம் அக்னியாகவும், உணவு தானியங்கள் விளையும் பூமி மூன்றாம் அக்னியாகவும், விந்து சக்தி உருவாகும் இடமான ஆண் நான்காம் அக்னியாகவும், கரு உருவாகும் இடமான பெண் ஐந்தாம் அக்னியாகவும் உருவகிக்கப்படுகிறது.
மரணத்தின் பின் மனிதர்கள் செல்லும் இரண்டு விதமான பாதைகள் வர்ணிக்கப்படுகின்றன. வேதாந்தக் கல்வியையும், உபாசனையையும் பயின்றவர்கள் சூரியமண்டலம் வழியாக பிரம்மலோகம் சென்று படிப்படியாக முக்தியை அடைகிறார்கள். இதற்குக் கிரமமுக்தி என்று பெயர். இந்தப் பாதை தேவயானம் என்று வழங்கப்படுகின்றது. இன்னொரு பாதை பித்ருயானம். சுயநலமான செயல்களையும், சடங்குகளையும் மட்டும் செய்தவர்கள் சந்திரலோகம் வழியாக பித்ருலோகம் சென்று புண்ணியம் தீர்ந்ததும் பூமிக்குத் திரும்பி வந்து பிறக்கிறார்கள் என்கிறது உபநிஷத். மேலும் உலகியல் வாழ்வில் செல்வம், புகழ் மற்றும் குடும்ப மேன்மை பெற விரும்பும் இல்லறத்தார்களுக்கான சில ரகசிய உபாசனைகளும் மந்திரங்களும் ஸ்ரீமந்த கர்மம் என்ற தலைப்பில் இப்பகுதியில் விவரிக்கப்படுகின்றன. இறுதியாக இந்த அத்வைத ஞானத்தை பிரம்மதேவனிடமிருந்து தொடங்கித் தலைமுறை தலைமுறையாகத் தந்தையிடமிருந்து மகனுக்கும், ஆசிரியரிடமிருந்து மாணவருக்கும் கற்பித்து வந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆசாரியர்களின் பரம்பரைப் பட்டியல் நன்றியுடன் நினைவுகூரப்பட்டு பிருஹதாரண்யகம் பூர்த்தியடைகிறது.
***
ரிக்வேதத்தின் இரண்டாவது பகுதியான ஐதரேய ஆரண்யகத்தில் இடம்பெற்றுள்ளது ஐதரேய உபநிஷதம். ரிஷி மகிதாஸ ஐதரேயரால் வெளிப்படுத்தப்பட்டது (அவரது தாயாரின் பெயர் இதரா என்பதால் அவருக்கு அந்தப் பெயர் வந்திருக்கிறது). “பிரக்ஞானம் பிரம்ம” என்ற மகாவாக்கியம் இந்த உபநிஷத்தில்தான் வருகிறது. மூன்று அத்தியாயங்கள் ஐந்து பிராம்மணங்களாகப் பிரிக்கப்பட்டு முப்பத்து மூன்று மந்திரங்களைக் கொண்டிருக்கிறது.
ஐதரேய உபநிஷத் “வாங்மே மனசிப்ரதிஷ்டிதா மனோ மே வாசி” எனத்துவங்கும் ரிக்வேத மந்திரத்தை சாந்திபாடமாகக் கொண்டிருக்கிறது. “என்னுடைய வாக்கு என் மனதில் நிலை பெறட்டும்; என் மனம் என் வாக்கில் நிலை பெறட்டும்; சுயமாக ஒளிரும் பரம்பொருளே, எனக்குள் உன்னை வெளிப்படுத்திக் கொள்வாய்; என் மனமும், வாக்கும் வேதத்தின் உண்மைகளைத் தாங்கிப் பிடிக்கும் அச்சாணிகளாக மாறட்டும். நான் என் ஆசிரியரிடம் கேட்டு உணர்ந்த இந்த மேலான அறிவு என்னை விட்டு நீங்காமல் இருக்கட்டும்; இரவும் பகலுமாக நான் கற்கும் இந்தக் கல்வியின் மூலமாக அந்த மேலான அறிவோடு நான் எப்போதும் இணைந்திருப்பேனாக; நான் எப்போதும் பிரபஞ்சத்தின் மாறாத நியதியையே பேசுவேன்; சத்தியத்தை மட்டுமே பேசுவேன்; அந்தப் பரம்பொருளானது மாணவனான என்னையும், உண்மையை உரைக்கும் என் ஆசிரியரையும் காக்கட்டும், ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி:!” என்கிறது இந்த மந்திரம்.
முதல் அத்தியாயம் மட்டுமே மூன்று பிராம்மணங்களைக் கொண்டிருக்கிறது. இந்த அத்தியாயத்தில் பிரபஞ்சத்தினுடைய படைப்பும், தேவதைகளுடைய தோற்றமும், மனித உடலின் படைப்பும் பேசப்படுகிறது.
“படைப்புக்கு முன் இங்கு ஆத்மா மட்டுமே இருந்தது; வேறு எதுவும் இயங்கவில்லை (ஓம் ஆத்மாவா இதமேக ஏவாக்ர ஆசீத்); நான் உலகங்களைப் படைப்பேனாக என்று அது சங்கல்பம் செய்து கொண்டது,” என்று துவங்குகிறது முதல் அத்தியாயம். பின்னர் படைப்பினுடைய கிரமம் கூறப்படுகிறது. சொர்க்கத்துக்கு மேலேயும் மேகங்களுக்கு அப்பாலும் ஒளியைத் தாங்கியபடி நீர்ப்பெருக்காக உள்ள அம்ப: என்ற உலகம், பூமிக்கும், சொர்க்கத்துக்கும் இடைப்பட்ட, சூரியக்கதிர்களையும், நட்சத்திரங்களையும் காற்று மண்டலத்தையும் உள்ளடக்கிய மரீசி: என்ற உலகம், மர: (மரணத்துக்கு உரியது) எனப்படும் நாம் வாழும் இந்த பூவுலகம், பூமிக்குக் கீழே உள்ள நீர் உலகமான ஆப: என்ற உலகம் ஆகிய நான்கு உலகங்களை ஆத்மா முதலில் படைக்கிறது. பின்னர் அவ்வுலகங்களைப் பரிபாலனம் செய்ய “அம்பஸ் புருஷனை” நீரிலிருந்து திரட்டி உருவாக்குகிறது. அப்புருஷனின் உறுப்புகளிலிருந்து வாக்கு, பிராணன், சக்ஷூ(பார்வை) ஸ்ரோத்ரம் (கேட்டல்), தொடுகை, மனம், அபானன், மற்றும் ரேதஸ் எனப்படும் விந்து ஆகியனவும், அவற்றுக்குரிய தேவதைகளும் தோன்றுகின்றன.
இவ்வாறு வெளிப்பட்ட தேவதைகளுக்குப் பசியும், தாகமும் உண்டாக தமக்கான உறைவிடத்தை அவை வேண்டி நின்றன. விலங்குகளுடைய எந்த உடலும் அவற்றுக்குத் திருப்தி அளிக்காமல், இறுதியாக மனித உடலைக் கண்டு மகிழ்ந்து அதனுள் புகுந்து அவரவர் தமக்குரிய இடங்களைப் பிடித்துக் கொண்டனர். “புலன்களும், தேவதைகளும் மட்டும் இயங்கினால் போதுமா? நான் யார் என்ற உணர்வு யாருக்கு வரும்? ஆகையால் நானே இதனுள் பிரவேசிக்கிறேன்,” என்றபடி பிரம்மமே மனித உடலுக்குள் நுழைந்து கொண்டது. அது மனிதனின் தலைஉச்சியிலுள்ள பிரம்மரந்திரத்தைப் பிளந்து கொண்டு உடலுக்குள் பிரவேசித்தது. இந்த நுழைவு வாயிலுக்கு வித்ருதி என்று பெயர். உள்ளே நுழைந்து உடலை ஆராய்ந்து பார்த்து “இதமத்ரசம் (இதை நான் கண்டுவிட்டேன்),” என்று உரைத்தது. எனவே இறைவனுக்கு இதந்த்ரன் அல்லது இந்திரன் என்ற பெயர் வந்தது.
இரண்டாம் அத்தியாயத்தில் ஒரு ஜீவனுக்கு நிகழும் மூன்று பிறவிகள் குறித்துச் சொல்லப்படுகிறது. தந்தையின் உடலில் விந்துவாக உருவாகி தாயின் கருப்பையில் விதைக்கப்படுவது முதல் பிறவி என்றும், தாயின் வயிற்றிலிருந்து குழந்தையாகப் பூமியில் பிறப்பது இரண்டாம் பிறவி என்றும், தன் கடமைகளை முடித்து, உடலைத் துறந்து, தன் கர்மவினைகளுக்கேற்ப அடுத்த உடலை எடுப்பது மூன்றாம் பிறவி என்றும் கூறப்படுகிறது. பிறவிச்சுழற்சியைக் குறிப்பதற்காகவே இந்தக் கருத்து இங்கு கூறப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உபநிஷத்துக்களின் மெய்யான நோக்கம் பிறவியே இல்லை என்பதை நிறுவுவதுதான். இவ்வாறு படைப்புக் கிரமம் கூறப்படும்போதெல்லாம் அது அத்யாரோப அபவாத நியாயத்தின் முதற்படி என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
இப்படிப்பட்ட பிறவிச்சுழலிலிருந்து எவ்வாறு விடுபடலாம் என்பதை இரண்டாவது அத்தியாயத்தில் வரும் வாமதேவருடைய கதையின் மூலம் விளக்கப்படுகிறது. தாயின் கருவில் இருக்கும்போதே வாமதேவர் ஆத்மஞானத்தை அடைந்திருந்தார். மனித உடலும், கர்மவினைகளும், அறியாமையும் பிறவிச்சுழலுக்குள் தன்னைப் பூட்டிவைத்திருக்கும் இரும்புக் கயிறுகளாக இருக்கின்றன என்று கண்டுகொண்ட வாமதேவர், ஒரு பலமிக்க பருந்து வலையைத் தன் பலத்தால் அறுத்துக்கொண்டு வானில் சுதந்திரமாகப் பறப்பதுபோல, தனக்குக் கிடைத்த பிரம்மஞானத்தின் துணைகொண்டு தன் கர்மவினைகளையும், உடல் மீதான பற்றுக்களையும் முற்றிலும் உடைத்தெறிகிறார். “நான் இந்த உடல் அல்ல; நானே முற்காலத்தில் மனுவாக இருந்தேன்; சூரியனாகவும் நானே இருந்தேன்; பிரபஞ்சத்தின் அனைத்து தெய்வங்களின் பிறப்பு ரகசியங்களையும், படைப்பின் உண்மையையும் அறிந்து கொண்டேன்,” என்று கூறுகிறார்.
மூன்றாவது அத்தியாயத்தில் “நாம் எதன் மூலம் கேட்கிறோமோ, எதன் மூலமாக சுவைகளையும், மனங்களையும் அறிகிறோமோ அந்த உணர்வு எது?” என்ற கேள்வி கேட்கப்படுகிறது. மனத்திற்குப் பலவகையான செயல்பாடுகள் இருக்கின்றன. ஸஞ்ஞானம் (அறிவு), ஆஞ்ஞானம் (ஆணை), விஞ்ஞானம் (பகுத்தறிதல்), பிரக்ஞானம் (விழிப்புணர்வு), மேதா (நினைவாற்றல்), திருஷ்டி (காட்சி), திருதி (மன உறுதி), மதி (சிந்தனை), காமம் (ஆசை) ஆகிய இவை அனைத்தும் தூய உணர்வான பிரக்ஞானத்தின் பலவகைத் தோற்றங்களே என்கிறது உபநிஷத்.
இந்த அத்தியாயத்தில்தான் “பிரக்ஞானம் பிரம்ம” என்ற மகாவாக்கியம் வருகின்றது. தூய அறிவே பிரம்மம் என்பது பொருள். அறிவு என்று ஒன்றைக் குறிப்பிட்டால் அங்கு அறியப்படும் பொருள் என்ற ஒன்று உள்ளது என்று பொருள். ஆனால் தூய அறிவு என்னும்போது அறியப்படுவதற்கு எந்தப்பொருளும் இல்லாதபோதும் அந்த அறிவு தானாக விளங்கி வருகிறது என்று பொருள். தானாக விளங்கி வரும் அந்த தூய அறிவே பிரம்மம் எனப்படுகிறது. அதுவே ஆத்மாவும் ஆகும். “இந்த பிரம்மதேவன், இந்திரன், பிரஜாபதி, அனைத்து தேவதைகள், நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் ஆகிய ஐந்து பூதங்கள், சிறிய மற்றும் பெரிய உயிரினங்கள் அனைத்துமே தூய அறிவையே ஆதாரமாகக் கொண்டவை. தூய அறிவிலேயே அவை நிலைத்திருக்கின்றன. தூய அறிவே பிரம்மம்,” என்று பிரகடனம் செய்கிறது ஐதரேயம். இருப்பதெல்லாம் வெறும் நாமரூபங்கள் மட்டுமே. அனைத்து நாமரூபங்களையும் நீக்கிவிட்டுப் பார்த்தால் எஞ்சியிருப்பது தூய அறிவொன்றே. ஜீவனுக்குள்ளே இருக்கும் அறிவும், பிரபஞ்சத்துக்கே ஆதாரமான பிரம்மமும் (அதுவும் தூய அறிவாகவே இருப்பதால்) ஒன்றுதான் என்பதை நிறுவி நிறைவு செய்கிறது ஐதரேய உபநிஷதம்.

