- அச்சு இயந்திரத்திற்கு முன் ஒரு புத்தகம்
- இங்கிலாந்திற்கு வந்த அச்சகம் – வில்லியம் காக்ஸ்டன்
- ஸ்டேஷனர்ஸ் கம்பெனி
- தங்கக் கூண்டு
- புதிய லண்டன்
- பைரஸி
- காபிரைட் சட்டத்தைச் செதுக்கிய வழக்குகள்
- எழுத்தின் விலை – அமெரிக்காவின் பைரஸி வரலாறு
- அமெரிக்க பாப் இசையின் தந்தை
- பாட்டுத் தொழிற்சாலை
- கஃபே-கான்ஸர்ட்
- தானாக இசைக்கும் பியானோ ராயல்டி கேட்குமா
மெக்கானிக்கல் ராயல்டி என்பது என்ன?
1890. நியூயார்க் நகரம். வெயில் சுட்டெரிக்கும் கோடைகால மதியம்.
அந்தத் தெருவில் ஒரு தள்ளுவண்டி நுழைவதற்கு முன்பே அதிலிருந்து வந்த இசை நுழைந்தது. அது ஒரு இத்தாலியப் பாடல். அந்தப் பாடலைச் சுமந்து வந்த வண்டியைத் தள்ளிக்கொண்டு வந்தவர் வெயிலில் களைத்துக் காணப்பட்டார்.
அந்த வண்டியில் இருந்தது ‘பேரல் ஆர்கன்’. அந்தக் கருவியில் இருந்து இசை வந்து கொண்டிருந்தது. முதலில் வண்டியை நோக்கி ஓடியவர்கள் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர் சிறுமியர். வண்டி தெருமுனையைத் தாண்டுவதற்குமுன் நல்ல கூட்டம் கூடிவிட்டது.
வாரத்தில் ஆறு நாட்கள் அந்த ‘பேரல் ஆர்கன்’ வண்டி அந்தத் தெருவிற்கு வரும். வண்ணங்கள் மங்கிப்போயிருந்த ஒரு மரப்பெட்டி. அதன் ஒரு பக்கத்தில் சுழற்றக் கூடிய ஒரு கைப்பிடி. வண்டிக்காரர் அந்தக் கைப்பிடியைச் சுழற்றிக் கொண்டிருந்தார். சுழற்றும் வரை அந்தப் பெட்டி இசைக்கும். அந்தத் தெருவில் கூடியிருந்தவர்கள் அனைவரும் இத்தாலியர்கள். அவர்களுக்கு அந்த வடியின் பாடல்கள் சலித்ததில்லை. முதியவர்கள் பாடலில் மூழ்கிப் புன்னகை செய்வார்கள். அவர்களுக்கு இத்தாலியத் திருவிழாக்களை அந்தப் பாடல் நினைவுபடுத்தும். மறுநாள், ஒரு காதல் பாடல் ஒரு இத்தாலியப் பெண்ணின் கண்களை ஈரமாக்கும். அவளுக்கு இத்தாலியில் நடைபெற்ற தனது திருமணம் நினைவுக்கு வந்திருக்கும்.
குழந்தைகளின் கவனம் முழுதும் அந்தப் பெட்டியின் மீதே இருக்கும். மரப்பெட்டியில் இருந்து இசை கேட்பது அவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். சிலநேரம் பெட்டிக்குள் எட்டிப்பார்க்க வண்டிக்காரர் குழந்தைகளை அனுமதிப்பார்.
காற்றுக்கு ஒரு துருத்தி, சிறு ஆணிகள் அடிக்கப்பட்ட ஒரு மர உருளை, சில குழாய்கள். ஒரு இசைக்கலைஞன் தேவையில்லை. கைப்பிடியைப் பற்றிச் சுழற்றும் வண்டிக்காரருக்கும் இசை பற்றி எதுவும் தெரியாது. தெரியவேண்டியதில்லை. புலம் பெயர்ந்து வந்திருந்த இத்தாலியர்களுக்கு, ஒரு சில நிமிடங்கள் கண்களை மூடி இத்தாலிக்குச் சென்று வரும் வாய்ப்பைக் கொடுக்கும் அளவு உண்மையாக இருந்தது அந்தப் பெட்டியின் இசை.
இசையே தெரியாத ஒரு மனிதன் ஒரு கைப்பிடியைச் சுழற்றி இசைக்க முடியும் என்றால், தங்கள் வாழ்நாளின் ஒரு பகுதியை, இசைக்கக் கற்றுக் கொள்வதற்கென்றே செலவிட்ட இசைக்கலைஞர்களின் நிலை என்னவாகும்? ஒரு சாதாரண ‘பேரல் ஆர்கன்’ தெருமுனையில் நின்று நாட்டுப்புற மெட்டுகளை இசைக்க முடியுமென்றால், அதைவிட நுட்பமான ஓர் இயந்திரம் பிறந்தால், அது இசை அரங்குகளில் என்னவெல்லாம் செய்யக்கூடும்?
பிளேயர் பியானோ
1900. நியூயார்க் நகரின் மற்றொரு பகுதி, மற்றொரு கோடைக்காலம்.
வரிசையாக மரங்கள் அணிவகுத்து நின்ற அந்தத் தெருவில் இருந்த ஒரு வீட்டிலிருந்து ஒரு இசை கேட்டது. அது வேறு ஒரு இயந்திரத்தின் இசை. அந்த வீடு செல்வத்தைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது. கற்சுவர் முகப்பு, ஜன்னல்களில் விலையுயர்ந்த திரைச் சீலைகள். உள்ளறையில் பளிங்காலான கணப்பு அடுப்பு. வேலைப்பாடுகள் கொண்ட மர மேசை, நாற்காலிகள்.அறையின் ஒருபுறம் ஒரு பியானோ.
அந்தப் பியானோ பீதோவன் இசையை வாசித்துக் கொண்டிருந்தது. தானாகவே வாசித்துக் கொண்டிருந்தது. கண்களால் காணமுடியாத விரல்கள் பியானோக் கட்டைகளை இசைத்தது போலத் தோன்றியது. இந்தப் பியானோ, நாம் பார்த்த பேரல் ஆர்கன் போன்றதல்ல. இதன் அமைப்பு மிகவும் நுட்பமானது.
இந்தப் பியானோ காற்றடிக்கக் கூடியது. ஒரு பையில் இப்படி அடைக்கப்பட்ட காற்று, சில துளைகள் மூலம் வெளிவரும். அவற்றுள் எந்தத் துளையைத் திறக்கவேண்டும், எந்தத் துளையை மூட வேண்டும் என்பதை, துளைகள் கொண்ட ஒரு காகிதச் சுருள் முடிவு செய்யும். இந்தச் சுருள் பழைய திரைப்படச் சுருள் போலச் சுழலும். இந்தச் சுழலும் காகிதம், ஒரு புல்லாங்குழல் கலைஞன் போல காற்று வெளிவரும் துளைகளைத் திறந்து மூடும். திறக்கப்பட்ட துளைகளுக்கேற்ற பியானோ கட்டைகள் இயங்கும்.
இந்தப் பியானோ இயங்கும் விதத்தை விளக்கினால் இது ஒரு பொறியியல் கட்டுரை போலாகிவிடும். எனவே இந்த அடிப்படை விவரங்களுடன் நிறுத்திக் கொள்வோம். ஆர்வமுள்ளவர்கள் இந்தக் காணொளியைக் காணலாம்.
<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/gd-_dlRFr_0?si=TER0SHlnZfQUfSwB” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>
இதன் பெயர் பிளேயர் பியானோ. இருபதாம் நூற்றாண்டின் தொடக்ககாலத் தொழில்நுட்பம். விருந்து விழாக்களில் பீதோவனை இசைக்கத் தேர்ந்த பியானோ கலைஞர் ஒருவரைத் தேடவேண்டியதில்லை. போட்டிருக்கும் சட்டை கசங்காமல் விருந்து ஒன்றில் இசை நிகழ்ச்சி நடத்த விரும்பும் மக்கள் இந்தப் பியானோவை விரும்பி வாங்கிக் கொண்டனர்.
நகரின் மதுக் கூடங்களிலோ தினமும் பியானோ வாசிக்க வேண்டும். அப்படி வாசிப்பவருக்குச் சம்பளம் கொடுக்க வேண்டும். பிளேயர் பியானோ இந்தப் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்த்தது.
தானே வாசிக்கும் இந்தப் பியானோ பல ஐரோப்பிய, அமெரிக்க பொறியியல் நிபுணர்களால் மேலும் மேலும் மெருகேற்றப்பட்டது. துளையிடப்பட்ட காகிதச் சுருள் ஒன்று இந்தப் பியானோ இயங்கத் தேவை என்று பார்த்தோம் அல்லவா, அந்தச் சுருள் ‘பியானோ ரோல்’ என்று அழைக்கப்பட்டது. இது ஏறத்தாழ டேப் ரெக்கார்டர் ஒன்றுக்கு கேஸட் போன்றது. ஒரு பாடலை இசைக்க, ஒருவர் அதற்கென்று பியானோ ரோல் வைத்திருக்க வேண்டும்.
எனவே பியானோ நிறுவனங்கள் பியானோவுடன் ‘பியானோ ரோல்’ தயாரிப்பிலும் ஈடுபட வேண்டியிருந்தது.
பியானோ ரோல்
பிளேயர் பியானோ ஒரு புதிய உற்பத்தித் துறையைத் தனக்கென்று துணைக்கு உருவாக்கிக் கொண்டது. அது, பியானோ ரோல் உற்பத்தி மற்றும் விற்பனை . புதிய தொழில்நுட்பங்கள் மனிதர்களிடமிருந்து ஒரு வேலைவாய்ப்பைப் பறித்துக் கொள்வதும், புதிய சந்தை மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும் நமக்குத் புதியதல்ல.
உண்மையில், பிளேயர் பியானோவைவிட, பியானோ ரோல் சந்தை பெரியது என்பதை நிறுவனங்கள் விரைவில் புரிந்து கொண்டன. புதிய புதிய பாடல்கள் பியானோ ரோல்களாகத் தயாராக வேண்டும். தொடர்ந்து பயன்படுத்தப்படும் ரோல்கள் நைந்து, கிழிந்து போகும். பியானோ உரிமையாளர் புதிய ரோல் ஒன்றை வாங்க வேண்டும். எனவே பியானோ ரோல் சந்தை தொடர்ந்து நிறுவனங்களுக்கு லாபம் கொடுக்கக் கூடியதாக இருந்தது. (ஜில்லெட் நிறுவனம் குறைவான விலைக்கு ரேசரை விற்றுப் பின் பிளேடுகள் விற்பதில் லாபம் ஈட்டியது போல).
இந்தப் பியானோ ரோல் உற்பத்தி காப்பிரைட் தொடர்பான புதிய கேள்விகளை எழுப்பியது. ஒரு பாடலை பியானோ ரோலாகத் தயாரிக்க இசையமைப்பாளரிடம் அனுமதி பெறவேண்டுமா? இசைக்கலைஞருக்கு ராயல்டி கொடுக்க வேண்டுமா? முன் அனுமதி பெற வேண்டுமா?
பியானோ ரோல்: சில காட்சிகள்
அமெரிக்காவில் மதுவிலக்கு அமலில் இருந்த காலம். சிகாகோவில் இயங்கிவந்தது அந்த சட்டவிரோத மதுக் கூடம். மாடிப்படிக்குக் கீழே ஒரு ஆளில்லாத பியானோ ஏதோ ஒரு பாடலை வாசித்துக் கொண்டிருந்தது. மது அருந்திக் கொண்டிருந்தவர்கள் அதனைக் கேட்டபடி அமர்ந்திருந்தனர். ஒருவேளை போலீஸ் வந்தால் கூட, இந்தப் பியானோ சாராயம் காய்ச்சியது பற்றி சாட்சி சொல்லாது. பியானோ கலைஞர்கள் வந்து போவது சட்ட விரோதமான தொழிலுக்கு உகந்தது அல்ல.
கேன்சஸ் நகரம். அந்த தேவாலயத்தின் ஆர்கன் கருவிகள் வேலை செய்வதை நிறுத்திப் பல வருடங்கள் ஆகியிருந்தன. ஒரு பக்தர் நன்கொடையாகக் கொடுத்திருந்த பிளேயர் பியானோ, வழிபாட்டுப் பாடல்களை வாசித்துக் கொண்டிருந்தது.
பிலடெல்பியாவில் இருந்த அந்த நாட்டியப் பள்ளியில் அந்த மாணவிகள் மீண்டும் மீண்டும் ஆடிக் கொண்டிருந்தனர். ஆட்டம் சரியாக வரவில்லை. பியானோவின் இசைக்கேற்ப அவர்கள் ஆடிப் பழகுவதற்குள் மாலை நேரம் ஆகிவிட்டிருந்தது. அவர்கள் கால்கள் பயிற்சி செய்து களைத்திருந்தன. ஒரு பியானோ கலைஞர் இவ்வளவு நேரம் தொடர்ந்து வாசித்து இருக்க மாட்டார். அந்த நாட்டியக் கூடத்தின் ஓரத்தில் இருந்த பிளேயர் பியானோவின் அருகில் பியானோ ரோல்கள் அடுக்கப்பட்டு இருந்தன.
ஆளில்லாமல் வாசிக்கும் இந்தப் பியானோக்களை அனைவரும் விரும்பினார்கள். பலவிதமான பாடல்கள். ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு பியானோ ரோல் தேவைப்பட்டது. பியானோ ரோல்களை பதிப்பித்து விற்பனை செய்வது லாபம் கொழிக்கும் தொழில் ஆனது. தொடர்ந்து புதிய பாடல்களுக்கான ரோல்கள் கிடைக்கும்படி செய்வது பியானோ விற்பனைக்கு அவசியமானது.
இப்போது நிலைமை இங்கிலாந்தில் அச்சு இயந்திரம் கண்டுபிடித்த காலம் போன்று ஆனது. பியானோ நிறுவனங்கள், தங்களிடம் உரிமை இல்லாத பாடல்களையும் பியானோ ரோல்களாகப் பதிப்பிக்கத் தொடங்கினர். கலை, இலக்கியம் போன்று வியாபாரமும் காலத்தைக் கடந்தது என்றே தோன்றுகிறது.
இப்போது நாம் கேள்விக்கு வருவோம். ஒரு ஆளில்லாத பியானோ ஒரு மேடை நிகழ்ச்சியில் வாசித்தால் அந்த இசை நிகழ்ச்சிக்கு ராயல்டி கொடுக்க வேண்டுமா?
ஒரு வழக்கின் மூலம் இந்தக் கேள்வி நீதி மன்றம் முன் வந்தது.
வைட்-ஸ்மித்- அப்போலோ வழக்கு
வைட் ஸ்மித் என்ற பதிப்பு நிறுவனம், அப்போலோ என்ற பியானோ ரோல் நிறுவனம் மீது நீதி மன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்தது. தங்கள் வசம் பதிப்புரிமை இருந்த பாடல்களைத் தங்கள் அனுமதி இல்லாமல் அப்போலோ நிறுவனம் பியானோ ரோல் ஆகப் பதிப்பித்து விட்டது என்பதே குற்றச்சாட்டு.
தங்க வேட்டைக் காலத்தில், ஃபாஸ்டரின் ‘ஓ சுசானா’ பாடலைச் சொற்ப விலைக்கு வாங்கிப் பதிப்பாளர்கள் பதிப்பித்தார்களே, அதுபோல வைட் ஸ்மித் நிறுவனம் சில இசைக் கலைஞர்களிடம் இருந்து பதிப்பு உரிமையை வாங்கி வைத்திருந்தது. அப்போலோ நிறுவனம் அந்தப் பாடல்களை வைட் ஸ்மித் நிறுவனத்தின் அனுமதி பெறாமல் பியானோ ரோல் ஆக வெளியிட்டு இருந்தனர்.
வழக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது.
“எங்கள் வசம் உரிமை இருக்கும் பாடல்களை அப்போலோ நிறுவனம் பியானோ ரோல் பதிப்பாக வெளியிட்டுள்ளது. பியானோ ரோல்கள் இசைப்பதிப்பு போன்றதே. எனவே அப்போலோ நிறுவனம் காப்பிரைட் விதிகளை மீறி உள்ளது” என்று வாதம் செய்தது வைட் ஸ்மித் நிறுவனம்.
“பியானோ ரோல் என்பது மனிதர்கள் படித்து உணரும் இசைக்குறிப்புகள் அல்ல. இது வெறும் இயந்திரம் ஒன்றிற்கான இயக்கக் குறியீடே. எனவே காப்பிரைட் விதிமுறைகள் பியானோ ரோல்களுக்கு செல்லாது” என்றது அப்போலோ.
நீதி மன்றம் அப்போலோ நிறுவனத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது.
White-Smith Music Publishing Co. v. Apollo Co., 209 U.S. 1 (1908)
இந்தத் தானாக வாசிக்கும் பியானோ ஏற்கனவே இசைக்கலைஞர்கள் மத்தியில் ஒரு பதட்டத்தை உருவாக்கி இருந்தது. வைட் ஸ்மித் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அந்தப் பதட்டத்தை மேலும் அதிகரித்தது. அதே நேரத்தில் உருவாகி வளர்ந்து வந்து கொண்டு வந்த போனோகிராஃப், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது.
போனோகிராஃப்
நியூ ஜெர்சியின் அந்த அரங்கில் கூடியிருந்த பார்வையாளர்கள் ஆர்வத்துடன் அமர்ந்திருந்தனர். தங்களுக்குள், மெல்லிய குரலில் பேசிக்கொண்டு இருந்தனர். அவர்கள் முன் தாமஸ் எடிஸன் நின்று கொண்டிருந்தார். அவர் முன் புதிய கண்டுபிடிப்பான போனோகிராஃப் கருவி வைக்கப்பட்டிருந்தது. எடிசனின் முகத்தில் இருந்த புன்னகை, ஒரு அதிசயத்தைக் காட்டப்போகும் மாஜிக் கலைஞனின் புன்னகை போலிருந்தது.
பார்வையாளர்கள் எடிசனையும், போனோகிராஃப் கருவியையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருந்தனர். போனோகிராஃப் கருவியின் குழாயின் அருகில் குனிந்த எடிஸன், ஒரு நாடக நடிகனின் லாவகத்துடன், “மேரி ஹாட் எ லிட்டில் லாம்ப்” என்ற பாடலைப் பாடினார். போனோகிராஃப் தனது குழாய் வழியே அதே பாடலைத் திருப்பிப் பாடியது. அதுவும் எடிசனின் குரலிலேயே பாடியது. அதுவரை பிடித்து வைத்துக் கொண்டிருந்த மூச்சை அப்போதுதான் வெளியே விட்டனர் பார்வையாளர்கள்.
அவர்கள் தங்கள் கண்களை மட்டுமல்லாமல், காதுகளையும் நம்ப முடியாதவர்களாக இருந்தனர். அவர்கள் ஒரு “பேசும் கருவியை” முதன்முதலில் பார்த்துக் கொண்டிருந்தனர். சில வினாடிகளில் அவர்கள் அந்த இன்ப அதிர்ச்சியில் இருந்து மீண்டபோது, கைதட்டலால் அரங்கம் அதிர்ந்தது. போனோகிராஃப் பொது மக்களுக்கு எடிசனால் அறிமுகப்படுத்தப் பட்ட ஆண்டு அதுவே. 1878.
போனோகிராஃப் பதிவு செய்த ஒலி அவ்வளவு துல்லியமானதாக இருக்கவில்லை. பலரும் அதனை ஒரு விளையாட்டுப் பொருள் போன்றே கருதினர். எடிஸனே கூட, அலுவலக உபயோகம், குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தருதல் போன்றவற்றில் தனது போனோகிராஃப் உதவும் என்றே விளம்பரம் செய்தார். பதிப்பாளர்கள் போனோகிராஃப்பை நகைப்புடனே பார்த்தனர். அவர்கள் ஆரம்பத்தில், போனோகிராபின் எதிர்காலத்தைத் தவறாகக் கணித்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
ஒரு நாணயத்தைப் போட்டுப் பயன்படுத்தக் கூடிய போனோகிராஃப் பெட்டிகள் அமெரிக்க நகரங்களின் பொது இடங்களில் முளைத்தன. பொது மக்கள் போனோகிராஃப் பெட்டிகளில் காசு போட்டு, பதிவுசெய்யப்பட்ட பேச்சு அல்லது இசையைக் கேட்டு ரசித்தனர். ஒரு சிறு இசைத் துணுக்கு, மார்க் ட்வெயினின் குரல், ஒரு நகைச்சுவைத் துணுக்கு அல்லது ஓடும் ரயிலின் ஒலி என்று கற்பனை செய்யக்கூடிய அனைத்தும் பதிவு செய்யப்பட்டு மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டன. ஒலியை நிரந்தரமாகப் பதிவு செய்துவைப்பதும், அதனை விரும்பியபோதெல்லாம் கேட்பதும், அதற்கு முன் ஒருவர் கற்பனை கூடச் செய்ததில்லை. எடிஸனின் நினைத்ததற்கு மாறாக, போனோகிராஃப், இசையைப் பதிவு செய்யும் கருவியாக மாறிப்போனது.
வழக்கு
பலரும் போனோகிராஃப் இசையை பதிவு செய்தனர். அப்போது இசை அமைப்பாளரும் பதிப்பாளருமாக இருந்த ரோஸீ என்பவர் ஜோசப் என்ற பதிப்பாளர் வசம் உரிமம் இருந்த சில பாடல்களைப் போனோகிராஃபில் பதிவு செய்து வெளியிட்டார். இது காப்பிரைட் உரிமை மீறல் என்று சொல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் ஜோசப்.
“என் வசம் உரிமை இருக்கும் பாடல்களை ரோஸீ போனோகிராஃப் பதிப்பாக வெளியிட்டுள்ளார். இது காப்பிரைட் விதிகளை மீறிய செயல் ” என்று வாதாடினார் ஜோசப்.
“போனோகிராஃப் பதிவு இசைக்குறிப்புக்களின் பிரதி அல்ல. எனவே காப்பிரைட் விதிமுறைகள் போனோகிராஃப் பதிவுகளுக்குச் செல்லாது ” என்றார் ரோஸீ. அதே வழக்கமான வரலாற்று வாதம்.
நீதி மன்றம் ஒரு போனோகிராஃப் பதிவு இசையைக் குறிப்பின் பிரதி அல்ல என்றும் அதனால் காப்பிரைட் விதிமுறை மீறப்படவில்லை என்றும் கருதியது.
வழக்கில் ரோஸீக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது.
Stern v. Rosey, 17 App. D.C. 562 (1901)
இந்த வழக்கு வைட்-ஸ்மித் பியானோ ரோல் வழக்கிற்கு முன்பே நடந்து இருந்தது. இரண்டு வழக்குகளின் தீர்ப்பும் சொன்ன செய்தி ஒன்றே. ஒரு இசைக்குறிப்பில் இருந்து உருவாகும் பியானோ ரோல் அல்லது ஒரு போனோகிராஃப் பதிவு, அந்த இசைக்குறிப்பின் பிரதி அல்ல. இதுவே நீதிமன்றங்களின் பார்வை.
இந்த இரன்டு வழக்குகளும் அன்றைய அமெரிக்க காப்பிரைட் சட்டம் பற்றிய ஒரு விஷயத்தை இசைக்கலைஞர்களுக்கு உணர்த்தியது. புதிய தொழில் நுட்பங்களைக் கையாளும் வரையறைகள் அன்றைய சட்டத்தில் இல்லை.
ஜான் பிலிப் சூசா
இந்த வழக்குகளின் தீர்ப்புகள் எழுப்பிய கேள்விகளுக்கு விடை காணவேண்டும் என்று களமிறங்கியவர்களில் முக்கியமானவர் ஜான் பிலிப் சூசா. இவர் அமெரிக்காவின் மிகப் புகழ்பெற்ற இசைக்குழுத் தலைவர். ‘மார்ச் கிங்’ என்று அழைக்கப்பட்டவர்.
வைட்-ஸ்மித் தீர்ப்புக்குப் பல ஆண்டுகள் முன்பிருந்தே சூசா “இயந்திர இசை” பற்றி எச்சரித்து வந்தார். இன்றைய எழுத்தாளர்கள் AI குறித்துக் கவலை கொள்வது போல. அமெரிக்கக் காங்கிரஸ் முன் தனது வாதங்களை வைத்தார். சட்டத்தில் மாற்றம் தேவை என்று கருதிக் கட்டுரைகள் எழுதினார், தனது பேச்சைக் கேட்ட நான்கு பேர் இருக்கிறார்கள் என்றால் அங்கே சென்று உரையாற்றினார். அவரது பிரச்சாரத்தின் செய்தி இதுவே : மனிதர்களுக்கென்று தனித்துவமான இசையை இயந்திரங்கள் அழித்துக்கொண்டிருக்கின்றன.
“இந்தப் பேசும் இயந்திரங்கள் இந்த நாட்டின் இசைக்கலை வளர்ச்சியையே நாசமாக்கப் போகின்றன,” என்றார். வேறொரு சமயத்தில் “நான் சிறுவனாக இருந்தபோது, கோடை மாலைகளில் ஒவ்வொரு வீட்டின் முன்பும் இளைஞர்கள் கூடி அந்தக் காலத்துப் பாடல்களையோ பழைய பாடல்களையோ பாடிக்கொண்டிருப்பார்கள். இன்று இரவும் பகலும் இந்த நாசமாய்ப்போன இயந்திரங்கள்தாம் ஓடிக் கொண்டிருக்கின்றன” என்றார்.
சூசாவின் கவலை இசைக்கலைஞர்களின் வருமானம் குறித்தது அல்ல. பொருளாதார அச்சுறுத்தல் உண்மை என்றாலும் கூட, சூசாவின் கவலை ஆழமானது. இசை வெறும் நுகர்வுப் பொருளாவதைக் கண்டு கவலை கொண்டார். பிளேயர் பியானோக்களும் போனோகிராஃப்களும் இசை உருவாவதில் மனிதப் பங்கு தேவை என்ற கருத்தை மாற்றியிருந்தன.
“இசை கற்றுக்கொள்ளத் தேவையான கடின உழைப்புக்கு யாருமே தயாராக இருந்திராத ஒரு காலம் வரப்போகிறது,” என்று எச்சரித்தார். “எல்லோரும் தங்கள் வீட்டின் குளிர் சாதனப் பெட்டியில் உணவுப் பொட்டலங்கள் வைத்திருப்பது போல, இசையையும் வைத்திருப்பார்கள்.” என்றார். //Canned music
வைட்-ஸ்மித் வழக்கின் தீர்ப்பு அமெரிக்கக் காப்பிரைட் சட்டத்தின் போதாமையை வெளிப்படுத்தியது. பாராளுமன்றம் அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியது.
இசையமைப்பாளர்களும் பதிப்பாளர்களும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தனர். இவற்றின் விளைவாக 1909 ஆம் ஆண்டு சட்டத்திருத்தம் உருவானது.
மெக்கானிக்கல் ராயல்டி
புதிய சட்டம், இயந்திரங்கள் மூலம் ஒரு பாடலை பிரதி எடுப்பதை மையமாகக் கொண்டு வடிவமைக்கப் பட்டது. பியானோ ரோல், போனோகிராஃப் தட்டுக்கள், போன்ற வடிவங்களில் பாடல்கள் வெளியானால், அவை “இயந்திரங்கள் மூலம் மீட்டுருவாக்கம்” செய்வதாக கருதப்படும் என்று சொன்னது புதிய சட்ட விதிமுறை. அப்படி மீட்டுருவாக்கம் செய்வதை அனுமதிக்க இசையமைப்பாளர்களுக்குத் உரிமை வழங்கியது. காப்பிரைட் பெற்ற ஓர் இசைப்படைப்பை இப்படி இயந்திரங்கள் மூலம் மீட்டுருவாக்கம் செய்ய விரும்பும் எவரும் காப்பிரைட் உரிமை கொண்டவரிடம் அனுமதி பெறலாம். அதற்கு பாடலுக்கு இரண்டு சென்ட் ராயல்டி செலுத்த வேண்டும். அந்த ராயல்டி “மெக்கானிக்கல் ராயல்டி” என்று வரையறை செய்யப்பட்டது.
ஆனால், இந்த மெக்கானிக்கல் ராயல்டியில் ஒரு சிக்கல் இருந்தது. ஒரு பாடலை பியானோ ரோலில் பதிவு செய்ய, ஒரு பிரதிக்கு 2 சென்ட் மெக்கானிக்கல் ராயல்டி இசைக் கலைஞனுக்குக் கொடுத்தால் போதும். இசையமைப்பாளர் அதிகத் தொகைக்குப் பேரம் பேச முடியாது. தன் படைப்பை யார் மீட்டுருவாக்குகிறார்கள், எப்படி மீட்டுருவாக்குகிறார்கள் என்பதைக் கட்டுப்படுத்த முடியாது.
ஒரு முறை வெளிவந்த ஒரு பாடலை, பிறர் மறு வெளியீடு செய்வதை மறுக்கவோ, கட்டுப் படுத்தவோ முடியாது. அந்த மறு வெளியீட்டுக்கும், ஒரு பிரதிக்கு இரண்டு சென்ட் ராயல்டி கொடுத்தால் போதுமானது. மெக்கானிக்கல் ராயல்டி ஒரு சிக்கலை ஏதோ ஒரு வழியில் தீர்த்தால் போதும் என்று கருதியது. அந்தச் சட்டம் கலைஞர்களின் தார்மீக உரிமையைக் கருத்தில் கொள்ளவில்லை.
இப்போது நாம் கேள்விக்கு வருவோம். ஆளில்லாமல் தானாகவே வாசித்துக் கொள்ளும் பியானோவிற்கு ராயல்டி உண்டா?
அடிப்படையில் ஒரு போனோகிராஃப் அல்லது பிளேயர் பியானோ ஒரு பாடலை இசைக்கும் போதும் அதற்கான பெர்ஃபார்மன்ஸ் ராயல்டி வழங்கப் படாது. “பெர்ஃபார்மன்ஸ் ராயல்டி” என்பது ஒரு பாடலை ஒவ்வொரு முறை இசைக்கும்போதும் வழங்கப்படுவது. மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம். இந்த ராயல்டி பிரெஞ்சு கஃபே ஒன்றில் உருவான பிரச்சினையால் சட்டமானது. ஆனால், இப்போது ஒரு கஃபே உரிமையாளர் தானாக வாசிக்கும் பியானோ அல்லது போனோகிராஃப் ஒன்றை வாங்கி வைத்தால் போதும். ஒவ்வொரு நாள் இசை நிகழ்ச்சிக்கும் இசையமைப்பாளருக்கு ராயல்டி கொடுக்க வேண்டியதில்லை.
ஒவ்வொரு உணவகத்தில், வீடுகளின் வரவேற்பறையிலும் உள்ள ஒவ்வொரு பிளேயர் பியானோவையும் கண்காணிப்பதும், ராயல்டி வசூல் செய்வதும் சாத்தியமற்றதும் கூட. இதற்கு மெக்கானிக்கல் ராயல்டி ஒரு நடைமுறைத் தீர்வாக அமைந்தது. முதல் பிரதிக்கு ஒருமுறை இரண்டு சென்ட் ராயல்டி செலுத்திப் பின் தடையின்றிப் பயன்படுத்தலாம்.
ஆனால் தொழில்நுட்பம் தொடர்ந்து வளர வளர, மெக்கானிக்கல் ராயல்டிக்கும் பெர்ஃபார்மன்ஸ் ராயல்டிக்கும் இடையிலான இந்தச் சிக்கல் அதிகரித்தே வந்தது. சரி. “இயந்திர மீட்டுருவாக்கமும்”, பொது இசை நிகழ்ச்சியும் (நிகழ்த்துதலும்) ஒன்றிணைந்தால் என்ன ஆகும்?
வானொலி கண்டுபிடிக்கப் படும்போது என்ன ஆகும்?
ராயல்டி : ஒரு குறிப்பு
நாம் இதுவரை இரண்டு வகையான ராயல்டிகள் குறித்துப் பார்த்திருக்கிறோம். ஒன்று இளையராஜா எஸ்.பி.பி.யிடம் கேட்டதாகச் சொல்லப்படுவது. இசை நிகழ்த்தப் பெறும்போது வழங்கப்பட வேண்டியது. Performance Royalty
மற்றொன்று மெக்கானிக்கல் ராயல்டி. ஒரு பாடலை ஒரு இயந்திரத்திற்கென்று படியெடுக்கும்போது கொடுக்கப்படவேண்டியது. Mechanical Royalty. இவை ஒரு புரிதலுக்காகவே. ஒரு ராயல்டி, ஒரு குறிப்பிட்ட அம்சத்திற்கென்று கொடுக்கப்படுவது என்பதைச் சுட்டிக் காட்டவே. அனைத்தும் டிஜிட்டல் ஆகிவிட்ட இந்தக்காலத்தில் மெக்கானிக்கல் ராயல்டி உண்டா?
உண்டு. அமெரிக்காவில், ஒரு பாடலை ஸ்ட்ரீம் செய்யும்போதே அதில் பெர்ஃபார்மன்ஸ் ராயல்டியும் மெக்கானிக்கல் ராயல்டியும் சேர்ந்தே இருக்கின்றன. ஐட்யூன்ஸ் போன்ற தளங்களில் ஒரு பாடலை விலைகொடுத்து வாங்கித் தரவிறக்கம் செய்தால், அதற்கு மெக்கானிக்கல் ராயல்டி கொடுக்கப்பட வேண்டும். பழைய ராயல்டிகள் புதிய சூழலிலும் தொடர சட்டம் அனுமதிக்கிறதா என்ற கேள்விக்கான பதில் எளிதானதல்ல. சில நேரங்களில் சட்டம் இயல்பாகவே புதிய தொழில்நுட்பத்திற்கும் பொருந்தும். சில நேரங்களில், அதனால் யார் பலன் பெறுகிறார்கள், அவர்களால் லாபி செய்ய முடியுமா என்பதே பதிலைத் தீர்மானிக்கிறது. இந்தக் கிளைக் கேள்விகளை நாம் ஆழமாக விவாதிக்கப் போவதில்லை. ஆனால், இவரைத் தெரிந்து கொள்வது நமது அமைப்பில் இருக்கும் முரண்பாடுகளைப் புரிந்துகொள்ள உதவும். அப்போதுதான், பல பாடகர்களின் கோரிக்கையாலும், பாடகி லதா மங்கேஷ்கரின் முயற்சியாலும் உருவான, பாடகர்களுக்கென்ற ராயல்டி அமைப்பைப் பற்றியும், காப்பிரைட் சட்டத்தின் வரையறையில் ‘பாடகருக்கு ராயல்டி’ என்ற கருத்தே எவ்வளவு விசித்திரமானது என்பதையும் புரிந்து கொள்ள முடியும். இளையராஜாவின் ராயல்டி விவகாரமும் நாம் பார்த்த ஆளில்லாத பியானோ போன்ற தொழில்நுட்பம் உருவாக்கிய சிக்கல் அல்ல என்றும், இந்தியாவின் சூழல், ஊழல் (விதிமீறல்), லாபநோக்கம், அலட்சியமாகக் கட்டமைக்கப்படும் நிர்வாகம் போன்ற பல காரணிகள் இளையராஜாவின் சர்ச்சைகளுக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் புரிந்து கொள்ள முடியும்..
நிர்வாக அலட்சியமோ, ஊழலோ இளையராஜா சர்ச்சைகளுக்கு எப்படிக் காரணமாக இருக்க முடியும்? இது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போன்று இருக்கிறதே என்று கூட நம்மில் சிலர் கருதலாம்.
ஒரு பத்திரிகைச் செய்தி இளையராஜா காப்பிரைட் குறித்து நமக்குத் தகவல் தரும் என்று நம்புகிறோம். ஒரு
பிரபலமான இசைக் கலைஞர் அல்லது திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர் இளையராஜா ராயல்டி குறித்து ஒரு கருத்தைச் சொல்லிவிட முடியும் என்று நினைக்கிறோம். உண்மையில் அத்தகைய தகவல் ஒன்று நமக்குக் கிடைக்கிறதா என்று கேட்டால், இல்லை என்பதே என் பதிலாக இருக்கும்.
“என்ன இருந்தாலும் எஸ்.பி.பி.யிடமே இளையராஜா கெடுபிடி காட்டலாமா?”
“இசையமைப்பாளர் தேவா ராயல்டி கேட்டாரா?”
“ரஹ்மான் கெட்டிக்காரர். சரியாக ஒப்பந்தம் செய்து கொள்கிறார்”
இவை கிசுகிசுக்கள். காப்பிரைட் குறித்த தகவல்கள் அல்ல.
சரி. மெக்கானிக்கல் ராயல்டி கொடுத்து புதிய “இயந்திர”ப் பிரதிகளை உருவாக்கலாம் என்று சட்டம் வழிவகை செய்துவிட்டது. இப்போது இந்தப் பிரதிகளின் உரிமையைக் கட்டுப்படுத்தப் போவது யார்?
எடிசனின் போனோகிராஃப்பிற்குப் போட்டியாக வேறு சிலரும் களமிறங்கினர். அவர்களுக்கு இடையேயான போட்டி, ஒரு புதிய தொழிலுக்கு விதை போட்டது. அந்தத் தொழில் – ரெகார்ட் நிறுவனங்கள். இசைத்தட்டுத் தொழில்.
அமெரிக்காவின் டின் பான் ஆலி, இசையை ஒரு வர்த்தகப் பொருளாக்கியிருந்தது. ரெகார்ட் நிறுவனங்கள் அதனை அடுத்த கட்டத்திறகு எடுத்துச் சென்றன. அவற்றை வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்.
