Site icon சொல்வனம் | இதழ் 378 | 08 நவ 2026

இருப்பதனைத்தும் இறைவனே!

வேதாந்தக் கல்வியின் முக்கியமான பகுதியான முதன்மையான பத்து உபநிஷதங்களில் இதுவரை மூன்றினுடைய சாரத்தைப் பார்த்து முடித்திருக்கிறோம். எல்லா உபநிஷத்துக்களும் ஒன்றைப் பற்றியே பேசுகின்றன. நீயே அது என்ற ஒற்றை வாசகத்தை மாணவனுக்கு உணர்த்தவே உபநிஷதங்கள் பல்வேறு கூறுமுறைகளைப் பின்பற்றி, அறுதியான உண்மையை விரித்தெடுக்கின்றன. முதன்மைப்பத்து அல்லாத பிற உபநிஷத்துக்களும் நீ பிரம்மமாகவே இருக்கிறாய் என்ற உண்மையைத்தான் கூறுகின்றன. அப்படி ஒரு உபநிஷத்தின் சாரத்தை இப்போது பார்க்கவிருக்கிறோம். அதன் பெயர் கைவல்ய உபநிஷத். சம்ஸ்கிருதத்தில் கேவலம் அல்லது கைவல்யம் என்றால் “அது மட்டுமேயான” என்று பொருள்படும். ஒன்று மட்டுமேயாக இருக்கும் ஒரு பொருளைக் குறித்த அறிவு புகட்டப்படுவதால் கைவல்யம் என்று இதற்குப் பெயர் வந்துள்ளது. அதர்வண வேதத்தில் அமைந்துள்ள இந்த உபநிஷத் இருபத்தைந்தே மந்திரங்களைக் கொண்டிருந்தாலும், அவற்றில் பல மிக முக்கியமானவை. 

ஆச்வலாயனர் என்ற ரிஷிதான் இந்த உபநிஷத்தின் மாணவர். அவர் படைப்பின் கடவுளான பிரம்மதேவரை அணுகி, “இறைவா! மிகவும் மேலானதும், பெரியோர்களால் எப்பொழுதும் நாடப்படுவதும், மறைபொருளாக உள்ளதுமான பிரம்மவித்யையை எனக்குப் புகட்டுங்கள்,” என்று வேண்டுகிறார். ஆசிரியரான பிரம்மதேவர் ஆச்வலாயனருக்கு பிரம்ம ஞானத்தைப் பெறுவதற்காக மூன்று உபாயங்களைத் தருகிறார். சிரத்தை, பக்தி, தியானம் ஆகியன அந்த மூன்றும். சிரத்தை என்ற சொல் முறைப்படி ஆசிரியரை அணுகி அவரிடம் கேட்டலான சிரவணத்தையும், பக்தி என்ற சொல் கற்ற கல்வியில் ஐயங்களைத் தீர்த்துக் கொள்ளும் மனனத்தையும், தியானம் என்ற சொல் பெற்றுக் கொண்ட அறிவில் நிலைநிற்பதற்காகச் செய்யப்படும் நிதித்யாசனம் என்ற சாதனையையும் குறிப்பிடுகிறது.

“ந கர்மணா நப்ரஜயா தனேன” என்ற ஆற்றல் வாய்ந்த மந்திரத்தைச் சொல்கிறார் பிரம்மதேவர். மரணமற்ற அந்தப் பெருநிலை செயல்களாலோ, சந்ததிகளை அடைவதாலோ, அல்லது செல்வத்தைப் பெருக்குவதாலோ அடையப்பட முடியாதது என்று கூறுகிறார். எது தானாகவே ஒளிர்ந்து கொண்டிருக்கிறதோ, எது ஒருவனது மனதுக்குள்ளேயே அறியப்படுகிறதோ அது தியாகத்தினால் மட்டுமே அடையப்படுகிறது என்று கூறுகிறார். இங்கு தியாகம் என்பது “நான்” என்ற ஒன்றைத் தவிர பிற அனைத்தும் மாயத்தோற்றமே என்ற அறிவினால் நம் உடல் உட்பட இவ்வுலகம் அனைத்தையும் விட்டு விடுதல் என்பதைக் குறிக்கிறது.

தூய்மையான மனதை உடைய சாதகர்கள் சன்னியாசம் என்ற சாதனையினால் வேதாந்தக் கல்விக்குப் பொருளாக இருக்கின்ற பிரம்மத்தில் உறுதி பெறுகிறார்கள் என்றுரைக்கப்படுகிறது. சன்னியாசம் என்பதும் இங்கு தியாகம் என்ற சொல்லையே குறிக்கிறது. இது கீதையில் கிருஷ்ணர் குறிப்பிட்ட ஞானகர்ம சன்யாசத்துக்கு ஒப்பானது. நம்முடைய தெளிவான அறிவினால் செயல்களையும், அவற்றின் பலன்களின் மீதுள்ள பற்றையும் துறந்து விடுதல் என்பது இதன் பொருள். அப்படி பிரம்மத்தில் நிலைநிற்பதற்கான சாதனையான நிதித்யாசனம் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதும் கூறப்படுகிறது. 

மீண்டும் கீதையை நினைவுபடுத்தும் இன்னொரு பகுதி வருகிறது. “தன்னில் எல்லா உயிரினங்களையும், எல்லா உயிரினங்களில் தன்னையும் தெளிவாக அறிபவனே மேலான பிரம்மத்தை அடைகிறான்.” இவ்விதமான அறிவைத் தவிர வேறொரு உபாயத்தினால் பிரம்மத்தை அடையவே முடியாது என்கிறது கைவல்யோபநிஷத். மேலும், “மனதைக் கீழ் அரணிக்கட்டையாகவும், ஓம்காரத்தை மேல்கட்டையாகவும் கொண்டு, விசாரம் என்ற பயிற்சியால் கடைந்து பண்டிதன் பந்தத்தை எரிக்கிறான்,” என்கிறது. இங்கு விசாரம் அல்லது சிரவணம் என்பதை ஞானநிர்மதன அப்யாசம் என்ற சொல்லால் குறிக்கிறது உபநிஷத்.

பின்னர் அந்த பிரம்மம்தான் எல்லாமாக இருக்கிறது என்று கூறுகிறது கைவல்யம். அந்த பிரம்மம்தான் மாயையினால் மோகத்தை அடைந்த மனதுடன், உடல் மீது அபிமானம் வைத்து அனைத்தையும் செய்கிறது. விதவிதமான நுகர்பொருட்களினால் இன்பத்தை அடைகிறது என்று கூறுகிறது. ஜீவனாக விளங்கி வரும் பிரம்மம், தன்னுடைய சொந்த மாயையினால் தோற்றுவிக்கப்பட்ட கனவுலகில் இன்பதுன்பத்தை அனுபவிக்கிறது. அனைத்தும் ஒடுங்கிய நிலையான உறக்கத்தில் அறியாமை மட்டுமே இருப்பதால் அந்த நிலையில் அது சுகத்தை மட்டுமே அனுபவிக்கிறது. எந்த ஜீவன் உறக்கம், கனவு, விழிப்பு என்ற மூன்று அவஸ்தைகளை அனுபவிக்கிறானோ, அவனிடமிருந்தே எல்லா வேற்றுமைகளும் தோன்றின. எவனிடத்தில் இந்த மூன்று அவஸ்தைகளும் ஒடுங்குகின்றனவோ அவனே பிளவுபடாத அறிவுசொரூபமாகவும், ஆனந்த சொரூபமாகவும், எல்லாவற்றுக்கும் ஆதாரமாகவும் உள்ளான் என்று கூறுகிறது உபநிஷத். ஸ்ருதியின் தன்மையே உண்மையை நேரடியாக உரைப்பது மட்டும்தான். அதைக் கற்கும் மாணவன் அந்த உண்மையைத் தனதாக்கிக்கொள்ள வேண்டும். அவன் செய்ய வேண்டியது அது மட்டுமே. எனவே ஒருவனது ஞானோதயத்துக்கு அவனைத் தவிர வேறு தடைகள் எதுவும் இருக்க முடியாது. 

“எந்த மேலான பரப்பிரம்மம் என்றுமுள்ளதோ, எல்லாருடைய ஆத்மாகவும் உள்ளதோ, உலகிற்கு ஆதாரமாக உள்ளதோ, சூட்சுமத்தைக் காட்டிலும் சூட்சுமமாக உள்ளதோ அதுவே நீ. நீயே அது,” என்கிறது உபநிஷத். “உறக்கம், விழிப்பு, கனவு ஆகிய மூன்று அவஸ்தைகளையும் அதுவாகிய நானே விளக்குகிறேன். மூன்று அவஸ்தைகளில் அனுபவிப்பவனாகவும், அனுபவிக்கப்படுவதாயும், அனுபவிக்கும் கருவியாகவும் எவை உள்ளதோ அவற்றிலிருந்து “நான்” வேறுபட்டவன். நான் எப்போதும் எல்லாவற்றுக்கும் சாட்சியாகவும், தூய்மையான அறிவு சொரூபமாகவும், மங்கல சொரூபமாகவும் இருக்கின்றேன்,” என்று உணர வேண்டும். என்னிடத்திலிருந்தே அனைத்தும் தோன்றின; என்னையே அனைத்தும் சார்ந்திருக்கின்றன; என்னிடத்திலேயே அனைத்தும் ஒடுங்குகின்றன. நானே அந்த அத்வைத பிரம்மாக இருக்கிறேன் என்று ஞானியின் குரலாகப் பேசுகிறது உபநிஷத்.

மேலும் அதே தொனியில் தொடர்கிறது: “சிறியதைக் காட்டிலும் சிறியவன் நானே. பெரியதைக் காட்டிலும் பெரியவன் நான். விதவிதமான உலகங்கள் நான். நான் என்றுமுள்ளவன். அனைத்தையும் வியாபித்துள்ளவன். நான் ஒளிர்கின்றவன். நானே ஆள்பவன். நான் மங்கல சொரூபமாக இருக்கின்றேன்.

“அனைத்து வேதங்களாலும் அறியப்பட வேண்டியவன் நானே. வேதாந்தத்தைத் தோற்றுவித்தவனும், வேதத்தை அறிபவனும் நானே. எனக்குப் புண்ணிய பாபங்கள் கிடையாது. எனக்கு அழிவு கிடையாது. பிறப்பு, உடல், புலன்கள், புத்தி ஆகியன எனக்குக் கிடையாது. பூமி, நீர், நெருப்பு, ஆகாசம், காற்று எதுவும் எனக்குக் கிடையாது.”

இந்த உபநிஷத்தில் விளக்கியபடி, மனதில் வெளிப்படுகின்ற அந்தப் பிளவுபடாத, இரண்டற்ற, எல்லாவற்றுக்கும் சாட்சியாக விளங்குகின்ற, காரிய, காரணமற்ற, தூய்மையான மேலான ஆத்மசொரூபத்தை ஒருவன் அறிந்து அந்த மேலான ஆத்மசொரூபத்தை அடைகிறான் என்று கூறுகிறது கைவல்யோபநிஷத். எல்லா உபநிஷத்துக்களும், பகவத் கீதையும், பிரம்ம சூத்திரங்களும் இதையே குறிப்பிடுகின்றன: ஆத்மசொரூபத்தை அறிபவன் ஆத்மசொரூபத்தை அடைகிறான்.

~oOo~

கிருஷ்ண யஜூர் வேதத்தின் தைத்திரீய சாகையில் அமைந்துள்ளது தைத்திரீய உபநிஷத். இதில் மூன்று அத்தியாயங்கள் உள்ளன. ஒவ்வொரு அத்தியாயமும் வல்லி என்றும், அதன் உட்பகுதிகள் அனுவாகம் என்றும் அழைக்கப்படுகின்றன. சிக்ஷா வல்லி, பிரம்மானந்த வல்லி, பிருகு வல்லி ஆகியன அந்த மூன்று வல்லிகளும்.

இந்த உபநிஷத்தின் பிண்ணணி குறித்து பாகவத புராணத்திலும், விஷ்ணுபுராணத்திலும் சுவாரஸ்யமான கதையொன்று சொல்லப்படுகிறது. வைசம்பாயன மகரிஷியிடம் பயின்ற முதன்மைச் சீடர்களில் ஒருவரான யாக்ஞ்யவல்கியர் ஒருமுறை தன் ஆசிரியரிடம் கடும் விவாதத்தில் ஈடுபடுகிறார். இதனால் கடும்கோபமடைந்த வைசம்பாயனர் தன்னிடம் கற்ற வேதமந்திரங்களை திரும்ப உமிழ்ந்து விடுமாறு சொல்கிறார். தனது யோக ஆற்றலின் மூலம் யாக்ஞ்யவல்கியர் தான் கற்ற மந்திரங்களை உமிழ்கிறார். அப்போது அங்கிருந்த பிற மாணவர்கள் தித்திரி (காடை) பறவைகளின் வடிவமெடுத்து அந்த மந்திரங்களை உண்டு பாதுகாக்கின்றனர். தித்திரிப் பறவைகளால் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட அந்த வேதக் கிளையே ‘தைத்திரீய சாகை’ என்றும், அதில் உள்ள உபநிஷத் ‘தைத்திரீய உபநிஷத்’ என்றும் பெயர் பெற்றது.

தைத்திரீய உபநிஷத்தின் முதல் வல்லியில் “ஷன்னோ மித்ர ஷம் வருண:” என்ற சாந்தி பாடம் பிரார்த்தனையாகப் பாடப்படுகிறது. பல்வேறு தேவதைகளை அழைத்து அவர்களிடம் மங்களத்தை வேண்டுவதாக இந்த மந்திரம் துவங்குகிறது. பின் அந்த தேவதைகள் அனைவருமே பிரம்மமாக இருக்கிறார்கள் என்று கூறுகிறது. அவர்களே அறிவுசொரூபமாகவும், இருப்பாகவும் இருப்பதாகவும் இந்த மந்திரம் புகழ்கிறது. பின்னர் அந்த ஹிரண்யகர்பன் மாணவர்களையும், ஆசிரியரையும் காப்பாற்றட்டும் என்று வேண்டுவதோடு நிறைவடைகிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது வல்லிகள் “சஹனாவவது” என்ற மந்திரத்தை சாந்தி பாடமாகக் கொண்டுள்ளன.

முதல் வல்லியான சிக்ஷா வல்லியில் ஆத்ம ஞானத்துக்குத் தகுதிப்படுத்துவதற்கான சில தியானங்கள், சில கர்மங்கள், சில பண்புகள் குறித்து விளக்கப்படுகின்றன. வேதமந்திரங்களை உச்சரிக்கும் முறை குறித்து விளக்கப்படுகிறது. சம்ஹிதா உபாசனம் என்ற ஒருவகை தியானம் விளக்கப்படுகிறது. ஒரு சொல் இன்னொரு சொல்லுடன் இணையும்போது இருக்கின்ற இடைவெளிகளில் இருபத்து நான்கு விதமான தேவதைகளை மனதில் தியானித்தல் சம்ஹிதா உபாசனம் ஆகும். பிறகு இறைவனை ஓம்கார ரூபமாக தியானித்து உடல் நலம், பிறரைத் துன்புறுத்தாத வாக்கு, கற்ற வேதாந்தக் கல்வியில் நினைவில் நிறுத்துவதற்கான நினைவாற்றல் ஆகியன வேண்டப்படுகின்றன. பிறகு வியாஹ்ருதி உபாசனம் எனப்படும் பூ: புவ: சுவ: மஹ: என்ற நான்கு மந்திரங்களின் மீது இயற்கையிலுள்ள பதினாறு தேவதைகளை நிறுத்திச் செய்யப்படும் தியானம் விளக்கப்படுகிறது. இந்த தியானத்தின் அடுத்த படியாக சூட்சும பிரபஞ்சத்துக்கு அதிபதியாக இருக்கின்ற ஹிரண்யகர்பன் என்ற தத்துவத்தை மனதில் தியானிக்க வேண்டும். இதைச் செய்யும் உபாசகன் உடலை விட்டபின் அக்னி, வாயு போன்ற தேவதைகளுடன் ஒன்றாகி, இறுதியாக ஹிரண்யகர்பனுடனே ஐக்கியமாகி விடுகிறான்.

அடுத்த உபாசனைக்கு பாங்க்த்த பிரம்ம உபாசனம் என்று பெயர். இவ்வுலகம் ஆறு கூறுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் ஐந்து தத்துவங்கள் அடக்கப்படுகின்றன. ஆறு கூறுகளில் மூன்று நமக்கு வெளியிலும், மூன்று நமக்கு உள்ளும் அமைந்துள்ளது. வெளியிலிருக்கும் தத்துவங்களோடு, உள்ளிருக்கும் தத்துவங்களை ஐக்கியப்படுத்தி தியானிப்பதே இந்த தியானம். அண்டத்திலுள்ளதை பிண்டத்தில் தியானம் செய்வதைப் போன்றது இது.

பின்னர் சிக்ஷாவல்லியில் மாணவனுக்கு சில அறிவுரைகள் கூறப்படுகின்றன. உண்மை பேசுதல், அறப்படி வாழ்தல், பெற்றோரை மதித்தல், தானம் செய்தல், சாஸ்திரம் படித்தல் போன்ற நற்பண்புகளை ஆசிரியர் மாணவனுக்கு போதிக்கிறார். தன்னிடம் ஏதேனும் பலவீனங்கள் தென்பட்டால் அவற்றைப் புறக்கணித்து, தன்னிடமுள்ள நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார். அற விஷயங்களில் குழப்பங்கள் ஏற்பட்டால் அப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் சான்றோர்கள் கூறுவதையே ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.

இரண்டாவது வல்லியான பிரம்மானந்த வல்லியின் துவக்கத்தில் பிரம்ம தத்துவம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இவ்வல்லி முழுவதும் பிரம்ம தத்துவத்தின் விளக்கமும், அதை அடைவதன் பலனும் கூறப்படுகிறது. முதல் அனுவாகத்தின் முதல் மந்திரமே சூத்திர வாக்கியமாக அமைந்துள்ளது. சொல்ல வந்த கருத்தை மிகவும் சுருக்கமாகக் கூறுவது சூத்திர வாக்கியம் எனப்படும். சூத்திர வாக்கியத்தைச் சுருக்கமாக விளக்குவது விருத்தி வாக்கியம் எனவும், அதையே விளக்கமாக எடுத்துரைப்பது வியாக்கியான வாக்கியம் எனவும் அறியப்படுகிறது. பிரம்மத்தை அறிபவன் பரத்தை அடைகிறான் என்று சூத்திர வாக்கியம் கூறுகிறது. இதனுடைய சுருக்கமான விளக்கமாக எது பிரம்மம்? எப்படி அறிதல்? பரத்தை அடைதல் என்றால் என்ன? என்ற கேள்விகளுக்கான பதில்கள் விருத்தி வாக்கியத்தில் வருகின்றது. எது சத்யமாகவும் (இருப்பாகவும்), ஞானமாகவும் (அறியும் தன்மையுடையதாகவும்) இருக்கிறதோ அது பிரம்மம். அந்த பிரம்மத்தை மனதுக்குள் அறிய வேண்டும். பிரம்மத்தை அறிந்தவன் தான் பிரம்மமாக இருக்கிறோம் என்பதை உணர்ந்ததால் அனைத்தையும் அடைகிறான். பின்வரும் அனுவாகங்களில் இந்த மூன்று கருத்துக்களும் விரிவாக விளக்கப்படுகின்றன. அத்யாரோப அபவாத நியாயத்தைப் பயன்படுத்தி பிரம்ம தத்துவம் விளக்கப்படுகிறது. அத்யாரோபம் என்பதற்கு பிரம்மத்தின்மீது இந்த உலகத்தை ஏற்றி வைத்தல் என்று பொருள். நாம் அனுபவிக்கிற இந்த உலகம் பிரம்மத்திலிருந்து தோன்றியிருக்கிறது என்று பிரம்மத்தை காரணமாகவும், இந்தப் படைப்பை அதன் காரியமாகவும் காட்டுதல் அத்யாரோபம் எனப்படும். பின்னர் காரியமான இந்த உலகம் காரியத்தினின்றும் வேறாக இல்லை என்று காரியத்தை நீக்குதல் அபவாதம் ஆகும். இவ்விதம் நீக்குதல் ஐந்து படிகளிலாக நடக்கிறது. ஒரு ஜீவனது அனாத்மாவான உடல் ஐந்து கோசங்களாகப் பிரிக்கப்படுகிறது. அவை அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், மற்றும் ஆனந்தமயம் ஆகியன. ஒவ்வொரு கோசம் நீக்கப்படும்போதும் அந்த கோசத்துடன் சேர்ந்து அதனுடன் தொடர்புடைய உலகமும் நீக்கப்படுகிறது. அனைத்து கோசங்களும் நீக்கப்படும்போது, அனைத்துப்படைப்புகளும் நீக்கபட்டு, இருப்பது ஒரே ஆத்மதத்துவம் மட்டுமே என்று விளக்கப்படுகிறது. இந்த முறைக்கு பஞ்சகோச விவேகம் என்று பெயர்.

பிரம்மம் அறியப்படாதபோது பயத்துக்குக் காரணமாகவும், அறியப்பட்டபின்னர் அபயத்துக்குக் காரணமாகவும் இருக்கிறது. இங்கு மாணவன் சில கேள்விகளைக் கேட்கிறான். ஞானி பிரம்மத்தை அடைகிறானா, இல்லையா? அஞ்ஞானி பிரம்மத்தை அடைகிறானா, இல்லையா? இறுதியில் பிரம்மம் என்ற ஒன்று இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. உபநிஷத் தான் இதற்குமுன் பேசிய கருத்துக்களைச் சுட்டிக்காட்டி பிரம்மம் இருக்கிறது என்பதை நிறுவி, பிரம்மத்தினுடைய தன்மையை விளக்குகிறது. எனவே பிரம்மத்தை அறிந்த ஞானி மட்டுமே பிரம்மத்தை அடைகிறான், அதை அறியாத அஞ்ஞானி அல்ல என்று கூறப்படுகிறது.

பின்னர் தைத்திரீயம் ஆனந்த மீமாம்சா என்ற விசாரணையை மேற்கொள்கிறது. இங்கு பிரம்மத்தினுடைய ஆனந்த சொரூபம் விளக்கப்படுகிறது. இயல்பாகவே இவ்வுலக வாழ்வில் ஆனந்தத்தை அடைய அதிகமான பொருட்களை அடைய வேண்டும் என்று எல்லாரும் நினைக்கிறார்கள். ஆனால் உபநிஷத் ஒருவனுக்கு வைராக்யம் அதிகரிக்க அதிகரிக்க ஆனந்தமும் அதிகரிக்கிறது என்று கூறுகிறது.  மானிடலோகத்தில் எவ்வளவு இன்பத்தை அனுபவிக்க முடியுமோ அதைவிட நூறு மடங்கு இன்பத்தை மனித கந்தர்வ லோகத்தில் இருப்பவர்கள் அனுபவிக்கிறார்கள். ஆனால் எந்த தேவலோகங்களையும் அடையாமலேயே, வைராக்யம் என்ற பண்பை அடைவதன் மூலம் ஒருவன் மானிடலோக இன்பத்தைக் காட்டிலும் நூறுமடங்கு இன்பத்தை இங்கேயே அனுபவிக்கிறான் என்று உபநிஷத் கூறுகிறது. இவ்விதம் ஆனந்தம் பற்றிய விசாரத்தை மேற்கொண்டு பிரம்மத்தினுடைய சொரூபம் ஆனந்தமே என்று நிறுவுகிறது. ஜீவனும், பிரம்மமும் வேறுவேறு அல்ல ஆதலால் ஜீவனும் பிரம்ம சொரூபமாகவே இருக்கிறான் என்று மகாவாக்கியத்தை அளிக்கிறது. பின்னர் ஒருவன் தன்னை அறிவதன் பலன் கூறப்படுகிறது. “நான் ஏன் இதைச் செய்தேன்? நான் ஏன் இதைச் செய்யவில்லை?” போன்ற எண்ணங்களின் தாக்குதலிலிருந்து ஒருவன் முழுமையாக விடுதலை அடைந்து மனநிறைவுடன் இருப்பதே ஆத்ம ஞானத்தின் பலனாகும் என்று கூறப்பட்டு இந்த வல்லி முடிவடைகிறது. 

மூன்றாவது வல்லி பிருகு வல்லி எனப்படுகிறது. பிருகு முனிவர் தனது தந்தையான வருணரை அணுகி பிரம்மதத்துவத்தை உபதேசிக்கும்படி வேண்டுகிறார். தந்தையானவர் பிரம்மத்தைப் பற்றிய சில குறிப்புகளைக் கொடுத்து, “இந்தக் குறிப்புகளைக் கொண்டு விசாரம் செய்து பிரம்மத்தை அறிவாயாக,” என்று கூறுகிறார். அதில் அவர் கொடுக்கும் மிகமுக்கியமான குறிப்பானது: “இந்த உயிர்த்திரள்கள் எதனின்றும் தோன்றியனவோ, எதனால் காக்கப்படுகின்றனவோ, எதில் சென்று ஒடுங்குகின்றனவோ அதுவே பிரம்ம தத்துவம்.” இதைக்கேட்ட பிருகு முனிவர் முதலில் அன்னத்தை பிரம்மமாகக் கருதி விசாரம் செய்கிறார். பின்னர் பிராணன், மனம், விஞ்ஞானம், ஆனந்தம் என்று ஒவ்வொரு கோசமாகச் சென்று இறுதியில் ஆனந்த சொரூபமாகவே பிரம்மத்தை உணர்கிறார். இந்த வல்லியில் மேலும் சில தியானங்கள் கூறப்பட்டு, இறுதியாக ஜீவ-பிரம்ம ஐக்கியம் மீண்டும் கூறப்பட்டு, இந்த ஞானத்தை அடைந்தவன் ஆனந்தத்தில் களித்திருக்கிறான் என்று கூறுவதோடு இந்த உபநிஷத் நிறைவடைகிறது.

~oOo~

சுக்லயஜூர் வேதத்தில் அமைந்துள்ள ஈஸாவாஸ்ய உபநிஷத், “ஈஸாவாஸ்யம் இதம் சர்வம் (இவ்வுலகம் இறைவனால் வியாபிக்கப்பட்டுள்ளது)” என்று துவங்கும் மந்திரத்தைக் கொண்டதனால் அப்பெயர் பெற்றது. சாஸ்திரத்தினுடைய விளக்கத்தின்படி இவ்வுலகுக்கு ஈஸ்வரனாகிய இறைவனே நிமித்தகாரணமாகவும், உபாதான காரணமாகவும் இருக்கின்றான். இருப்பினும் இவ்வுலகம் ஈஸ்வரனால் வியாபிக்கப்பட்டுள்ளது என்று கருத்துக்கு, இவ்வுலகம் ஈஸ்வரனைப் பற்றிய அறிவினால் மறைக்கப்பட வேண்டும், அதாவது இவ்வுலகம் பருப்பொருட்களினால் ஆனது என்ற எண்ணத்தை விடுத்து, ஈஸ்வரனே இவ்வுலகமாகத் தோன்றியிருக்கிறார் என்ற எண்ணத்தை வைக்க வேண்டும் என்று இந்த உபநிஷத் கூறுகிறது.

இந்த உபநிஷத்தின் சாந்தி பாடம் “பூர்ணமத: பூர்ணமிதம்” என்று துவங்கும் மந்திரமாகும். இந்தச் சிறுமந்திரத்தில் வேதாந்தத்தின் சாரமே அடங்கியுள்ளது. இந்த மந்திரம் ஒரு குறிப்பிட்ட தேவதையிடம் வேண்டப்படும் பிரார்த்தனையாக இல்லாமல், நேரடியாகவே பிரம்மத்துக்கும், ஆத்மாவுக்கும் இடையிலுள்ள ஒற்றுமையைப் பிரகடனப்படுத்துகிறது. இருப்பது அனைத்தும் பூர்ணமே என்று இந்த மந்திரம் சொல்கிறது. பூர்ணம் என்ற சொல்லுக்கு நிறைவானது, முழுமையானது என்று பொருள். இடத்தாலும், காலத்தாலும், குணத்தாலும் வரையறுக்கப்படாததாக இருப்பது எதுவோ அதுவே பூர்ணம். அப்படிப்பட்ட தன்மை கொண்ட ஒரே பொருள் பிரம்மம் மட்டும்தான். இந்த மந்திரம், “அதுவும் பூர்ணம்; இதுவும் பூர்ணம்; பூர்ணத்திலிருந்து பூர்ணமே தோன்றியுள்ளது; பூர்ணத்திலிருந்து பூர்ணத்தை நீக்கி விட்டால் எஞ்சியுள்ளதும் பூர்ணமே” என்று கூறுகிறது. இங்கு அது என்று பிரம்மமும், இது என்று ஜீவனாகிய ஆத்மாவும் குறிப்பிடப்படுகிறது. பூர்ணமாகிய பிரம்மத்திலிருந்து பூர்ணமான ஆத்மாவே தோன்றியிருக்கிறது. எனவே பிரம்மமும், ஆத்மாவும் உண்மையில் ஒன்றுதான் என்பது இங்கு நிலை நாட்டப்படுகிறது. பிரம்மமாகிய காரணத்திலிருந்து, ஜீவனாகிய காரியம் பிறந்திருக்கிறது. இரண்டுமே பூர்ணம் என்றால் உண்மையில் தோன்றியது என்ன? கடலிலிருந்து அலைகள் தோன்றுகின்றன என்று சொல்கிறோம். ஆனால் உண்மையில் இருப்பது நீர் மட்டும்தான். எனவே தோன்றியிருப்பது வெறும் நாமரூபங்கள் (பெயர்களும், உருவங்களும்) மட்டுமே. பூர்ணத்திலிருந்து பூர்ணத்தை நீக்கி விட்டால் பூர்ணம் மட்டுமே எஞ்சியுள்ளது. அதாவது அலைகளிலிருந்து அவற்றின் நாமரூபத்தை நீக்கிவிட்டுப்பார்த்தால் எஞ்சியிருப்பது நீர் மட்டும்தான். எனவே நாமரூபம் என்பது மித்யா, வெறும் தோற்றம். நாமரூபத்துக்குக் காரணமாக இருக்கும் காரணம் என்ற தன்மையும் பொய். காரியம் பொய் எனில் அதன் காரணமும் பொய்தான். இருப்பது ஒன்றுதான். அது பூர்ணம். அதுவே பிரம்மம்.

இருப்பதனைத்தும் ஈஸ்வரனே என்ற அறிவால் இவ்வுலகை மூடவேண்டும் என்று துவங்குகிறது உபநிஷத். இருப்பதனைத்தும் வெறும் நாமரூபங்கள்தாம். அந்த மித்யாவைத் தியாகம் செய்தபின் எஞ்சியிருப்பது பிரம்மம் மட்டும்தான். பொதுவாக இவ்வுலகின் நாமரூபங்கள் புலன்கள் வழி நம் அனைவரையும் வந்தடைகிறது. ஆனால் அவற்றை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பது நம் மனது அவற்றை எவ்வாறு பொருட்படுத்துகிறது என்பதைப் பொருத்தது, அதாவது அந்த நாமரூபத்தில் நாம் எப்படிப்பட்ட பாவனை வைக்கிறோம் என்பதைப் பொறுத்தது. ஆகவே ஒரே மனிதன் ஒருவனுக்கு நண்பனாக, மற்றொருவனுக்குப் பகைவனாக, இனியொருவனுக்குக் கடவுளாகத் தெரிகிறான். ஆகவே இவ்வுலம் ஒருவித படைப்பு என்றால், அதில் நம்முடைய மனதைக் கொண்டு இன்னொரு படைப்பை உருவாக்கிக் கொள்கிறோம். புலன்களால் உள்வாங்கப்பட்டும், மனதினால் அனுபவிக்கப்பட்டும் உணரப்படுகின்ற இந்த உலகம் அனைத்தும் இறைவனே என்ற பாவனையில் மூடப்பட வேண்டும் என்று சொல்கிறது உபநிஷத்.

பின்னர் தியாகத்தால் உன்னைக் காப்பாற்றிக்கொள் என்கிறது. இங்கு தியாகம் செய்ய வேண்டியது எதை? இவ்வுலகம் இறைவனிலிருந்து வேறாக இருக்கிறது என்று கொண்டிருக்கிற அந்த எண்ணத்தைத்தான் தியாகம் செய்ய வேண்டும். இருப்பதெல்லாம் இறைவனே, அந்த இறைவனும் நானும் ஒன்றுதான் என்பது உண்மையானால் இவ்வுலகில் தனியாக நாம் எதையும் அடைந்து விட முடியுமா என்ன? எனவே தவறான அறிவால் ஏற்பட்டுள்ள எண்ணமான “இந்த உலகத்தை என்னால் அனுபவிக்க முடியும்” என்ற எண்ணத்தைத்தான் தியாகம் செய்துவிடச் சொல்கிறது ஈஸாவாஸ்யம். அந்தத் தியாகமே உன்னைக் காப்பாற்றும் என்கிறது. அறியாமை என்ற இருளிலிருந்து காப்பாற்றப்படுவதையே அது இங்கு குறிப்பிடுகிறது. இவ்வாறு தியாகம் செய்வதன் மூலம் நானும், இறைவனும் உண்மையில் ஒன்றுதான் என்ற அறிவில் தொடர்ந்து நிலை நிற்க முடியும்.  இந்த உலகத்தை நாம் பிடித்துக்கொண்டு இருக்கும்வரையில்தான் அது நமக்கு சம்சாரத்தைக் கொடுக்கிறது. இந்த உலகத்தை விட்டுவிட்டால் அவ்வாறு தியாகம் செய்யப்பட்ட உலகிலிருந்து நாம் நம்மைக் காப்பாற்றிக் கொள்கிறோம். 

பின்னர் ஒரு நியம விதியை உபநிஷத் கூறுகிறது. “யாருடைய பொருளையும் அபகரிக்காதே.” என்கிறது ஈஸாவாஸ்யம். “இவ்வுலகம் ஈஸ்வரனால் வியாபிக்கப்பட்டுள்ளது” என்ற மேலான உண்மையில் துவங்கிய உபநிஷத், யாருடைய பொருளையும் திருடாதே என்ற எளிய உபதேசத்தைக் கூறுவது எதனால்? இங்கு சாதகனானவன் தன்னைப்பற்றிய அறிவை அடைந்து உலகத்தை விட்டுவிட்ட போதிலும், தான் பெற்ற அறிவில் தொடர்ந்து நீண்டகாலம் நிற்காததனால், அவனுடைய சம்ஸ்காரங்கள் (நீண்டகால பழக்கங்கள்) மூலமாக மனதிற்குள் ஆசை வந்துவிடலாம். அந்த மாதிரியான வேளைகளில் ஒரு சாதகன் கவனமாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையையே இங்கு உபநிஷத் விடுக்கிறது.

மேலும் இந்த உலகில் உனக்குரிய கர்மங்களைச் செய்து கொண்டு நூறு ஆண்டுகள் வாழ விரும்பு என்று இரண்டாவது மந்திரத்தில் சொல்கிறது. முதல் மந்திரத்தில் கூறப்பட்ட உயரிய உண்மையான இறைவனைப் பற்றிய ரகசியத்தைப் புரிந்து கொள்ள இயலாதவர்களுக்காகவே இந்த அறிவுரை அளிக்கப்படுகிறது. தன் உடல் மீதும், இந்த உலகப்பொருட்கள் மீதும் அபிமானம் வைத்திருக்கும் மனிதனுக்கு செயல் புரிந்து வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறுகிறது உபநிஷத். ஆத்மாவைப் பற்றிய அறியாமையில் இருக்கும் ஒருவனுக்கு மனதில் பற்றும், ஆசையும் அடர்ந்து இருக்கும். அத்தகைய இயல்பு கொண்ட மனிதன் தன்னுடைய கடமைகளை கர்மயோகமாகச் செய்து வருவானேயாகில் மெல்ல, மெல்ல அவனது பற்று குறைந்து அவனிடத்தில் விவேக சக்தி தோன்றும். அந்த  விவேகமானது அவனுக்கு இவ்வுலகம் நிலையானதல்ல என்ற வைராக்கியத்தையும், நிலையான ஒன்றை அடையவேண்டும் என்ற ஆவலான முமுக்ஷூத்துவத்தையும் கொண்டு வரும். எனவேதான் “உனக்குரிய செயல்களைச் செய்துகொண்டு வாழ்வதால் அந்தச் செயல்கள் உனக்கு எந்த பந்தத்தையும் உண்டுபண்ணாது,” என்று உறுதியளிக்கிறது உபநிஷத்.

மாறாக போகத்தில் வீழ்ந்து கிடப்பவர்களை ஆத்மஹன: (தங்களையே அழித்துக் கொள்பவர்கள்) என்று சொல்கிறது. தங்களுடைய உண்மையான இயல்பை மறந்து தங்கள் மேல் அழியும் இயல்புடைய அனாத்மாவை ஏற்றிவைப்பதைத்தான் உபநிஷத் தற்கொலைக்குச் சமமானது என்று கூறுகிறது. அவர்கள் அஸூர்யா என்ற பெயருடைய அடர்ந்த இருளால் மூடப்பட்ட உலகங்களை மரணத்துக்குப்பின் அடைகிறார்கள் என்று சொல்கிறது. இங்கு உலகங்கள் என்று பல்வேறு வகையான உடல்களை அவர்கள் எடுப்பார்கள் என்பதைக் குறிக்கிறது.

பின்னர் நான் எனப்படும் ஆத்மதத்துவத்தின் இலக்கணங்களைக் கூறுகிறது. ஆத்மதத்துவம் சலனமற்றது; அனைவருக்குள்ளும் ஒன்றாக இருக்கிறது; மனதைக்காட்டிலும் வேகமாகப் பயணிக்கக்கூடியது (ஏனெனில் மனம் பயணிப்பதே ஆத்மாவுக்குள்தான்); புலன்களால் இதை அடையமுடியாது; தனக்கு வேறாக உள்ள ஓடும் புலன்களையும், மனதையும் இது ஏற்கனவே கடந்து விட்டது; ஆனாலும் இது அசைவற்றது. ஹிரண்யகர்பரே இதனுடைய இருப்பின் முன்னிலையில்தான் அனைவருக்கும் கர்மபலன்களை வகுத்துக் கொடுக்கிறார்.

மேலும் ஒரு கவித்துவமான மந்திரத்தில் ஆத்மாவைப் புகழ்கிறது: “அது அசைகிறது; அது அசையவில்லை; அது தொலைவில் உள்ளது; அது அருகில் உள்ளது; அது இவை அனைத்துக்கும் வெளியே உள்ளது; அது இவை அனைத்துக்கும் உள்ளே உள்ளது.” விளக்கவே முடியாத ஆத்மாவை இவ்வாறு எதிரெதிர் இயல்புகள் கொண்டதாக வர்ணித்து விளக்க முற்படுகிறது உபநிஷத்.

இத்தகைய இயல்புகள் கொண்ட ஆத்மாவை அறிந்த ஞானியை அடுத்த மந்திரத்தில் புகழ்கிறது. “யார் அனைத்து உயிரினங்களையும் தன்னிடத்திலேயே பார்க்கிறாரோ, அனைத்து உயிரினங்களிலும் தன்னைப் பார்க்கிறாரோ, அவர் அவ்விதமான அறிவை அடைந்தால் யாரையும் நிந்தனை செய்யமாட்டார்.” ஒருமையைப் பார்க்கிறவனாகவும், உண்மையை அறிகிறவனாகவும் உள்ளவனுக்கு எப்பொழுது எல்லா உயிரினங்களும் ஆத்மாவாகவே ஆனதோ, அப்பொழுது அவனுக்கு சோகம் ஏது? மோகம் ஏது?

இத்தகைய ஞானத்தை அடையாமல் யார் செயலை மட்டுமே செய்து வருகிறார்களோ அவர்கள் அடர்ந்த இருளை அடைவார்கள் என்கிறது ஈஸாவாஸ்யம். செயலை விட்டு விட்டு உபாசனையில் ஈடுபடுபவர்கள் அதைவிட அடர்ந்த இருளை அடைவார்கள் என்றும் கூறுகிறது. போகங்கள் ஒருவனை மோக்ஷத்திலிருந்து விலக்கித் தொலைவில் வைத்திருக்கும். செயல் செய்வதால் அடையும் போகத்தை விட, உபாசனையால் அடையும் போகம் அதிகம். எனவேதான் உபாசனையில் ஈடுபடுபவர்கள் செயல் செய்பவர்களைக் காட்டிலும் அதிக இருளில் தள்ளப்படுவார்கள் என்று ஈஸாவாஸ்ய உபநிஷத் கூறுகிறது.

~oOo~

ஓம்கார தத்துவத்தின் துணை கொண்டும், ஒரு ஜீவன் அனுபவிக்கிற மூன்று அவஸ்தைகளின் துணை கொண்டும் ஆத்ம தத்துவத்தை விளக்குவதாக மாண்டூக்யம் விளங்குகிறது. நேரடியாகவே ஓம்கார தத்துவத்தைக் குறித்த விளக்கத்துடன் துவங்குகிறது. ஓம் என்கிற எழுத்தே இவை அனைத்துமாக உள்ளது. கடந்தது, இருப்பது, வரப்போவது அனைத்தும் ஓம்காரம்தான். எந்த ஒன்று மூன்று காலத்தையும் கடந்துள்ளதோ அதுவும் ஓம்காரமே. ஓம்காரத்தின் அகாரம், உகாரம், மற்றும் மகார ஸ்வரூபங்கள் மூன்றும் தோன்றியுள்ள இந்த உலகத்தையும், அதற்குக் காரணமான மாயையையும் குறிக்கின்றன. நான்காவது அம்சமான அசப்த ஸ்வரூபம் துரீய ஆத்மாவைக் குறிக்கிறது. எட்டாவது மந்திரத்திலிருந்து பனிரெண்டாவது மந்திரம் வரை ஓம்காரத்தைக் குறித்த விசாரம் செய்யப்படுகிறது.

இரண்டாவது மந்திரம் பிரம்மத்தைப் பற்றிய விளக்கத்துடன் துவங்குகிறது. இவை அனைத்தும் பிரம்மம்தான். இந்த ஆத்மா பிரம்மமே. பிரம்மமாகிய அந்த ஆத்மா நான்கு பாதங்களை உடையது என்று ஆத்ம விளக்கம் துவங்குகிறது. இந்த ஆத்ம விசாரம், அதாவது, நான் என்ற சொல்லின் உண்மையான பொருளைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் முயற்சி, ஏழாவது மந்திரம் வரை தொடரும்.

ஜீவன் விழிப்பு நிலையில் இருக்கும்போது பரு உடல் மீது அபிமானம் வைத்து இந்த உலகத்தை அனுபவிக்கிறது. விழிப்பு நிலையில், வெளி விஷயங்களை அறிகின்ற, ஏழு அங்கங்களையும், பத்தொன்பது வாய்களையும் உடைய, இந்தப் பருப்பொருட்களை அனுபவிப்பது முதல் பாதம். விழிப்பு நிலையில் வாழும் ஜீவனின் பிரபஞ்ச வடிவத்துக்கு வைஷ்வாநரன் என்று பெயர் கொடுக்கப்படுகின்றது. ஜீவனின் ஏழு அங்கங்கள் என்பது தலை, கண், பிராணன், உடலின் நடுப்பகுதி, வயிறு, பாதங்கள், வாய் என்றும், அவையே பிரபஞ்ச வடிவில் முறையே சுமூர்த்தா (அல்லது சுஜேதா). விஸ்வரூபன், பிருதக்வர்மா, பஹூலன், ரயி, பத்மஜம் (அல்லது பிருத்வி), மற்றும் கார்ஹபத்ய அக்னி என்று அறியப்படுகின்றன. பத்தொன்பது வாய்கள் என்பது வெளி உலகிலிருந்து அறிவைச் சேகரிக்கும் கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகிய ஞானேந்திரியங்கள் எனப்படும் ஐந்து புலன்களையும், செயலாற்றும் ஐந்து உறுப்புகளான வாக்கு (பேசுதல்), கை (செய்தல்), பாதம் (நடத்தல்), பாயு (எருவாய்) எனப்படும் கழிவு நீக்க உறுப்பு, உபஸ்தம் (கருவாய்) எனப்படும் இனப்பெருக்க உறுப்பு (ஆனந்தித்தல்), ஆகியனவற்றையும், பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் எனப்படும் ஐந்துவகைப் பிராணன்களும், மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய நான்கு அந்தக்கரணக் கருவிகளையும் குறிக்கும். இவற்றைக் கொண்டுதான் ஒரு ஜீவன் வெளிஉலகையும், உள் உலகையும் அறிகிறது. 

கனவு நிலையில் ஜீவன் தன் சூட்சும உடல் மீது அபிமானம் வைத்து கனவுலகத்தை அனுபவிக்கின்றது. கனவுநிலையில் உள்விஷயங்களை அறிகிற, ஏழு அங்கங்கள் கொண்ட, பத்தொன்பது வாய்களை உடைய, சூட்சும விஷயங்களை அனுபவிக்கின்ற தைஜஸன் இரண்டாவது பாதமாக அறியப்படுகின்றது. ஆழ்உறக்க நிலையில் ஜீவன் தனது காரண உடலின் மீது அபிமானம் வைத்து எந்தப் பொருட்களையும் அனுபவிக்காமல் அறியாமையையும், சுகத்தையும் மட்டுமே அனுபவிக்கிறது. எந்நிலையில் ஒருவன் தன்னை அறியாது இருக்கிறானோ, எப்பொருளையும் ஆசைப்படுவதில்லையோ, எக்கனவையும் காண்பதில்லையோ அது உறக்கநிலை. அந்த உறக்க நிலையை உடைய, எப்போதும் ஒன்றாகவே இருக்கின்ற, வேறுபாடற்ற அறிவுக்குவியலாக மட்டுமே உள்ள, ஆனந்தமே உருவான, ஆனந்தத்தை மட்டுமே அனுபவிக்கின்ற, விழிப்புக்கும், கனவுக்கும் வழியாக இருக்கின்ற பிராஞன் என்றறியப்படுவது மூன்றாவது பாதம். ஜீவன் விழிப்பு நிலையில் பருஉடல் பிரதானமாகவும், கனவு நிலையில் சூட்சும உடல் பிரதானமாகவும் இருக்கின்றான். ஆழ்உறக்க நிலையில் காரண உடல் மட்டுமே இருக்கின்றது.

இவ்விதம் ஆத்மதத்துவத்தில் மூன்று உடல்களும் ஏற்றி வைக்கப்பட்டு, இவ்வுலகம் அனைத்தும் அதே ஆத்மாவில் ஏற்றி வைக்கப்படுகிறது. அத்யாரோப அபவாதம் என்ற நியாயப்படி முதலில் ஆத்மாவின் மீது மித்யாவான உடல்களும், உலகமும் ஏற்றிவைக்கப்பட்டு (அத்யாரோபம்), பின்னர் அவை நீக்கப்பட்டு (அபவாதம்) இருப்பதனைத்தும் பிரம்மமே என்று நிறுவப்படும்.

ஆத்மாவுக்கு நான்கு பாதங்கள் உண்டு என்று சொல்லப்பட்டது. நான்காவது பாதம் ஏழாவது மந்திரத்தில் விளக்கப்படுகிறது. நான்காவது என்பது சம்ஸ்கிருதத்தில் துரீயம் என்றழைக்கப்படுகிறது. விழிப்பு, கனவு, உறக்கம் ஆகிய அவஸ்தைகளைப்போல துரீயம் என்பது ஆத்மாவின் ஒரு குறிப்பிட்ட அவஸ்தை அல்ல. எந்த ஒரு அறிவுசொரூபமான ஆத்மா மூன்று அவஸ்தைகளிலும் மாறாது ஒன்றாகவே இருந்து கொண்டிருக்கிறதோ அந்த ஆத்மாவே துரீயம் என்றழைக்கப்படுகிறது. தூய்மையான ஆத்மாவுக்கு விஸ்வன், தைஜஸன், பிராஞன் என்ற தன்மைகள் பொய்யான உடல்கள் நிமித்தமாகவே வந்துள்ளன. ஆத்மாவின் துரீய சொரூபம் சத்யமாகவும், முதல் மூன்று அம்சங்கள் மித்யாவாகவும் இருக்கின்றன. அந்த துரீய சொரூப ஆத்மா விரிவாக விளக்கப்படுகின்றது.

“இவர் அனைத்தையும் ஆள்பவர். இவர் அனைத்தையும் அறிபவர். இவர் அனைத்திலும் ஊடுருவி நிற்பவர். இவர் அனைத்துக்கும் உபாதான காரணமாக இருக்கிறார். எல்லா உயிரினங்களின் தோற்றத்துக்கும், லயத்துக்கும் இருப்பிடமாக இவரே இருக்கிறார்.”

“இந்தத் துரீயன் வெளிவிஷயங்களை அறிபவன் அல்ல. உள்விஷயங்களை அறிபவன் அல்ல. இடைப்பட்ட நிலையில் இருப்பவனும் அல்ல. மொத்தமாக உள்ள சாமான்ய அறிவும் அல்ல. அனைத்தையும் சேர்ந்து அறிபவனும் அல்ல. அது ஜடம் அல்ல. அது ஞானேந்திரியங்களால் அறியப்படாதது. செயல்களுக்குள் வராதது. கிரகிக்கப்படாதது. யூகங்களுக்கு அப்பாற்பட்டது. சிந்தனைக்கு எட்டாதது. வாக்கால் விளக்க முடியாது. நான் என்ற எண்ணத்தொடர்ச்சியால் அறியப்படக்கூடியது. உலகங்களற்றது. அமைதி வடிவானது. மங்கள வடிவானது. இரண்டற்றது. இதுவே நான்காவது பாதமாகக் கருதப்படுகிறது. இதுவே ஆத்மா. இதுவே அறியத்தக்கது.”

இவ்வாறு ஆத்மதத்துவத்தின் இலக்கணங்களைக் கூறியபின்னர் ஓம் என்ற எழுத்து நான்கு அம்சங்களாகப் பிரிக்கப்படுகின்றது. அகாரம், உகாரம், மகாரம் என்ற ஒலிவடிவில் உள்ள மூன்று அம்சங்களும் ஆத்மாவின் முதல் மூன்று பாதங்களாகக் கொள்ளப்படுகின்றன. ஓம்காரத்தின் ஒலியற்ற பாதம் துரீயத்துடன் இணைக்கப்படுகின்றது. துரீயத்தின் இலக்கணம் மீண்டும் கூறப்படுகிறது. “துரீயன் சப்தமற்றவன். செயல்களுக்கு அப்பாற்பட்டவன். உலகமற்றவன். மங்களமானவன். இவ்விதம் ஓம்காரம் என்பது ஆத்மாவேதான். யார் இவ்விதம் அறிகிறானோ, அவன் தன்னை தன்னால் அடைகிறான்,” என்று நிறைவு செய்கிறது மாண்டூக்ய உபநிஷத்.

பனிரெண்டே மந்திரங்கள் கொண்ட மிகச்சிறிய உபநிஷத் மாண்டூக்யம். ஆனால் மிக ஆற்றல் வாய்ந்த வெளிப்பாடுகளைக் கொண்டது. எனவேதான் இச்சிறு உபநிஷத்துக்கு சங்கரரின் பரமகுரு (ஆசிரியரின் ஆசிரியர்) கௌடபாதர் மாண்டூக்ய காரிகை என்ற பெயரில் 215 காரிகைகள் கொண்ட விளக்கவுரை ஒன்றை எழுதியுள்ளார். இது கௌடபாத காரிகை என்றும் அழைக்கப்படுகிறது. இவை நான்கு பிரகரணங்களாகப் பிரிக்கப்படுகின்றன. மாண்டூக்யத்தின் பனிரெண்டு மூலமந்திரங்களையும் சேர்த்து அவற்றுக்கான தத்துவ விளக்கங்களை முதலில் ஆகமப்ரகரணம் அளிக்கிறது. இரண்டாவதாக விழிப்பு நிலையின் உலகியல் அனுபவங்கள் அனைத்தும் கனவுலகைப்போலவே பொய்யானவை என்று தர்க்கரீதியாக வைதத்யப்ரகரணம் நிறுவுகிறது. இரண்டற்ற பிரம்ம தத்துவத்தையும், அஜாதவாதம் எனப்படும் தோற்றமின்மைக் கோட்பாடு மூலம் ஜீவ பிரம்ம ஐக்கியத்தையும் நிறுவுகிறது அத்வைதப்ரகரணம். நான்காவதான அலாதசாந்திப்ரகரணம் சுழலும் கொள்ளிக்கட்டை ஒன்றின் உருவகம் மூலம் பிறமதப்பார்வைகளின், தர்க்கங்களின் முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி அத்வைதத்தை நிலைநிறுத்துகிறது.

சங்கரர் தனது மாண்டூக்ய பாஷ்யத்தில், மாண்டூக்ய உபநிஷத்தையும், கௌடபாதரின் காரிகையையும் தனித்தனி நூல்களாகப் பார்க்காமல் இரண்டையும் ஒருங்கிணைந்த ஒரே பிரமாண நூலாகக் கருதி இரண்டுக்குமே விளக்கவுரை எழுதியுள்ளார். தனது உரையின் துவக்கத்திலேயே மாண்டூக்ய காரிகையை “வேதாந்தார்த்த சார சங்க்ரஹம் – அத்வைத தத்துவத்தின் ஒட்டுமொத்த சாரத்தையும், மிகச்சுருக்கமாகவும், மிக ஆழமாகவும் உள்ளடக்கிய நூல் இது” என்று புகழ்கிறார். கௌடபாதரின் காரிகை உபநிஷத் எனப்படும் வேதாந்தப் பிரமாணத்துக்கு உறுதியான தர்க்க அடிப்படையை வழங்குகின்றது. ஸ்ருதி கூறும் அத்வைத உண்மையை அனுபவம் மற்றும் தர்க்க முறைகளைக் கொண்டு நிரூபிப்பதற்கு சங்கரர் காரிகைகளைப் பயன்படுத்திக் கொள்கிறார். சங்கரரின் அத்வைதத்திற்கு அடிப்படையான ‘அஜாத வாதம்’ (உண்மையில் எதுவும் பிறக்கவோ, உருவாக்கப்படவோ இல்லை; பிரம்மம் மட்டுமே உள்ளது, இவ்வுலகம் வெறும் தோற்ற மாயையே) என்னும் கோணத்தை கௌடபாதரின் காரிகைகளில் இருந்தே சங்கரர் விரிவுபடுத்துகிறார். கனவு நிலையும், விழிப்பு நிலையும், உறக்க நிலையும் அந்த நிலைகளுக்கு அப்பாற்பட்ட பிரம்மத்தை ஆதாரமாகக் கொண்டவையே. பிரம்மம் அல்லாது அவற்றுக்குத் தனித்த இருப்பு இல்லை என்பதை வைதத்யக் கோட்பாட்டின் அடிப்படையில் விளக்குகிறார்.

மிகச்சிறிய உபநிஷத்தாக இருந்த போதிலும் மாண்டூக்யம் மனிதனின் மூன்று அவஸ்தைகளைக் கொண்டும், ஓம்காரத்தின் விசாரணை மூலமும் ஆத்ம தத்துவத்தை தெளிவாக விளக்குவதால் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அத்வைத மரபில் மாண்டூக்யத்தைக் கற்கும் ஒருவர் அதனுடன் கௌடபாதரின் காரிகையையும் இணைத்தே கற்பார். முக்திகோபநிஷத்தில் இராமன் அனுமனுக்கு உபதேசிக்கிறான்: “மாண்டூக்யமேகமேவாலம் முமுக்ஷூனாம் விமுக்தயே” – மோட்சம் என்ற அகவிடுதலையை விரும்பும் ஒரு சாதகனுக்கு மாண்டூக்யம் ஒன்று மட்டுமே போதுமானது. “ததாப்யஸித்தம் சேஜ்ஞானம் தசோபநிஷதம் பட” – அப்படிப் படித்தும் ஒருவருக்கு ஆத்மஞானம் கிட்டவில்லையெனில் அவர் முதன்மையான பத்து உபநிஷதங்களையும் கற்கவேண்டும் என்கிறது முக்திகோபநிஷத்.

அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம்

இணைபிரியாத இரு பறவைகள்
Exit mobile version