Site icon சொல்வனம் | இதழ் 371 | 26 ஜூலை 2026

கீதா முகூர்த்தம்

அத்வைத வேதாந்தத்தின் அடிப்படை நூல்களாக பிரஸ்தானத் திரயம் என்றழைக்கப்படும் பகவத் கீதை, உபநிஷத்துக்கள், மற்றும் பிரம்ம சூத்திரங்கள் ஆகியன அழைக்கப்படுகின்றன. இவற்றில் உபநிஷத்துக்கள் வேதங்களிலிருந்து வருவதால் ஸ்ருதிப் பிரஸ்தானம் எனப்படுகின்றன. வேதங்களை அடிப்படையாகக் கொண்டு மனித மனத்தால் படைக்கப்படும் படைப்புகள் ஸ்மிருதி என்றழைக்கப்படுகின்றன. அந்த வகையில் பகவத் கீதை வியாசர் இயற்றிய மகாபாரதத்தில் கண்ணன் அர்ஜூனனுக்கு உரைப்பதாக வந்துள்ளதால் அந்நூலை ஸ்ம்ருதிப் பிரஸ்தானம் என்றழைக்கலாம். பிரம்ம சூத்திரங்களும் வியாசராலேயே இயற்றப்பட்டவை. அவற்றில் தர்க்கம் முக்கியமான இடத்தை வகிப்பதால் அந்த நூல் நியாயப் பிரஸ்தானம் எனப்படுகின்றது.

வேதாந்தக் கல்வியில் பகவத் கீதை ஏன் முக்கிய இடத்தை வகிக்கிறது?  அத்வைத வேதாந்தம் குறித்த ஒரு விரிவான அறிமுகத்தை ஏற்படுத்திக் கொண்டபிறகு, தன் வேதாந்தக் கல்வியைத் தொடர்வதற்கு ஒரு மாணவன் கற்க வேண்டிய முதல் பிரஸ்தானமாக பகவத் கீதையே இருக்கின்றது. பிறகுதான் அவன் உபநிஷத்துக்களுக்கும், பிரம்ம சூத்திரங்களுக்கும் வருகின்றான். கீதையின் ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியாக ஒரு ஸ்லோகம் வருகின்றது. அது இவ்வாறு முடியும்: “இதி ஶ்ரீ பகவத் கீதாசு உபநிஷத்சு பிரம்ம வித்யாயாம் யோகஷாஸ்த்ரே…” அதாவது கீதை என்பது இன்னொரு உபநிஷத் என்று சொல்லத்தக்க ஒரு வேதாந்த நூல். அது ஒரே நேரத்தில் பிரம்ம வித்யாவாகவும், யோக சாஸ்திரமாகவும் செயல்படுகின்றது. கீதை தன்னை அறிதலான ஆத்ம ஞானத்தை அளிக்கும் பிரம்ம வித்யாவாகவும் இருக்கின்றது, அதே நேரத்தில் ஓர் ஆன்மசாதகன் தன்னை வேதாந்தக் கல்விக்கு ஆயத்தப்படுத்திக் கொள்கின்ற சாதனைகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்று வகுத்தளிக்கின்ற யோக நூலாகவும் செயல்படுகின்றது. எனவேதான் வேதாந்தக் கல்வியில் கீதை முதலாவதாகக் கற்கப்படுகின்றது. உபநிஷத்துக்கள் கானகத்தில் மலர்ந்துள்ள காட்டுப்பூக்கள் போன்றவை. அவற்றை சிரமமான பயணம் மேற்கொண்டு நாம்தான் ஒவ்வொன்றாகக் கொய்து நமக்கானதாக்கிக் கொள்ள வேண்டும். ஆனால் பகவத் கீதை கிருஷ்ணனால் அழகாகக் கோற்கப்பட்டுள்ள ஒரு மலர்மாலையைப் போன்றது. ஒரு சாதகன் சிரமமின்றி கீதைக்குள் பயணம் செய்து இறுதி உண்மையை அறிந்து கொள்ள இயலும். உபநிஷத்துக்கள் என்ற பசுக்களிலிருந்து கிருஷ்ணன் என்னும் கோபாலனால் கறக்கப்பட்டு இந்த உலகிற்கு வழங்கப்பட்ட பாலைப் போன்றது கீதை என்று ஒரு சுலோகம் குறிப்பிடுகின்றது (சர்வோபநிஷதோ காவ: தோக்தா கோபால நந்தன:) மேலும் மனத்தூய்மையை அடையாமல் உபநிஷத்துக்களைக் கற்கப் புகுந்தால் அக்கல்வி வெறும் அறிவுசார்ந்த தகவல் குவியலாக மட்டுமே தங்கிவிடுமே தவிர உபநிஷத்துக்கள் அளிக்கும் ஞானத்தில் நின்று அனுபவிக்க இயலாது. எனவே மனதைப் பண்படுத்தும், பக்குவப்படுத்தும் பயிற்சிக் களமாக கீதை செயல்படுகிறது.

உபநிஷத்துக்கள் அறுதி உண்மை குறித்த தத்துவங்களை சுருக்கமாகவும், ஆழமாகவும் கூறுகின்றன. ஆனால் பகவத் கீதை ஒரு மனிதனின் குடும்ப மற்றும் சமூகக் கடமைகள் போன்றவற்றை எவ்வாறு கையாள வேண்டும் என்பதையும், தன் உணர்ச்சிப் போராட்டங்களையும், அற விஷயங்களில் ஏற்படும் குழப்பங்களையும் ஒரு சாதகன் நேர்கொள்ள வேண்டும் என்று போதிக்கிறது. உபநிஷத்துக்கள் நேரடியான, அருவமான, குணங்களற்ற பிரம்மத்தைப் பற்றிப் பேசுகின்றன. துவக்க நிலையில் உள்ள சாதகன் ஒருவனுக்கு எல்லையற்ற அந்தப் பிரம்மத்தை அறிந்து கொள்வதில், புரிந்து கொள்வதில், மனதில் கிரகித்துக் கொள்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. ஆனால் கண்ணன் உரைத்த கீதை ஒரு சாதகனுக்கு ஓர் அன்பான வழிகாட்டியாகவும், நண்பனாகவும் இருந்து முதலில் உருவத்தோடு கூடிய சகுணப் பிரம்மத்தை அறிமுகம் செய்து, பின்னர் படிப்படியாக குணங்களற்ற பிரம்மத்துக்கு வருகிறது. வேதாந்தக் கல்வியில் இறுதியாகப் பயிலப்படும் பிரம்ம சூத்திரங்களைப் புரிந்து கொள்வதற்கான தர்க்க அடித்தளத்தையும் கீதை அமைத்துக் கொடுக்கிறது. ஏனெனில் பிரம்ம சூத்திரங்கள் நேரடியாகவே வேதாந்தக் கலைச்சொற்களை பயன்படுத்த ஆரம்பித்து எவ்வாறு பிரம்மம்தான் அறுதி உண்மை என்பதை நிலை நாட்டுகிறது. கீதையையும், உப நிஷத்துக்களையும் நன்கு பயின்று, வேதாந்தக் கலைச்சொற்கள் மற்றும் அடிப்படையான வேதாந்தத் தத்துவத்தைப் புரிந்து கொள்ள இயலாத ஒருவனால் பிரம்ம சூத்திரத்துக்குள் அடியெடுத்து வைக்கவே முடியாது.  எனவே பிரஸ்தான திரயத்தில் கீதை முதலாவதாகக் கற்கப்படுகிறது.

பகவத் கீதை மகாபாரதத்தின் பீஷ்ம பர்வத்தில் 25 முதல் 42 வரை உள்ள 18 அத்தியாயங்களைக் கொண்டதாகும். இவற்றில் மொத்தம் எழுநூறு ஸ்லோகங்கள் உள்ளன (ஸ்ருதியின் வாக்கியங்களை மந்திரங்கள் என்றும், ஸ்ம்ருதியின் வாக்கியங்களை ஸ்லோகங்கள் என்றும் கூறுவது மரபு). பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையிலான போர் துவங்கவிருக்கும் தருணத்தில் பாண்டவர்களின் பக்கமிருந்து போரிட வந்த அர்ஜூனனுக்கும், அவனுக்கு தேரோட்டியாக வந்த கிருஷ்ணருக்கும் இடையில் நடக்கும் ஆழமான தத்துவ உரையாடலே முழு பகவத் கீதையாகும். கௌரவர்களின் அரசனான திருதராஷ்டிரன் பார்வையற்றவன். அவன் அரண்மனையில் வீற்றிருந்தபடி தன் அமைச்சனான சஞ்சயனிடம் போரின் நிகழ்வுகளை வர்ணிக்குமாறு கேட்கிறான். சஞ்சயனுக்கு போர்க்காட்சிகளை இருந்த இடத்திலிருந்து பார்க்கும் வல்லமை அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த சக்தியைக் கொண்டு அவன் திருதராஷ்டிரனுக்கு போரின் நிகழ்வுகளை உள்ளபடி எடுத்துக் கூறுவதாக கீதை துவங்குகிறது.

கண்ணன் ஏன் அர்ஜூனனுக்குத் தேரோட்டியானார் என்பதை விளக்குவதற்கு ஓர் அழகிய கதை உண்டு. பாண்டவர்கள் வனவாசம் முடித்துத் திரும்பிய நிலையில் கௌரவர்கள் அவர்களுக்கு உரிமையான ராஜ்ஜியத்தில் எள்முனையளவு நிலம் கூடத் திருப்பித் தரமுடியாது என்று மறுத்து விடுகிறார்கள். கிருஷ்ணர் இரண்டு தரப்புகளுக்கிடையிலும் சமரசம் பேசி பிரச்சினையைத் தீர்த்து வைக்க முயலுகிறார். பாண்டவர்கள்தாம் அரியணைக்கு உரியவர்கள் என்றும், அவர்களது உரிமையான நிலத்தைத் திருப்பித் தர மறுப்பதன் விளைவாக எல்லாருக்கும் அழிவைக் கொடுக்கும் கொடிய போரை அவர்கள் வலிந்து வரவழைத்துக் கொள்கிறார்கள் என்றும் கௌரவர்களுக்கு அறிவுரை சொல்லிப் பார்க்கிறார் கிருஷ்ணர். நேரம் எடுத்து சிந்தித்து ஒரு நல்ல முடிவை எடுக்குமாறு அவர்களுக்கு உரைத்துவிட்டு தன்னுடைய அரசின் தலைநகரான துவாரகைக்குத் திரும்பி விடுகிறார் கிருஷ்ணர். ஆனால் இருதரப்புக்கும் சமாதானம் செய்ய அவர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இருதரப்பும் மும்முரமாக போருக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபடுகின்றன. கிருஷ்ணர் அரசனாகவும், பாண்டவர், கௌரவர் இருவருக்கும் பொதுவானவராகவும் இருப்பதால், தன்னுடைய உதவியைத் தேடி இருவருமே வருவார்கள் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அர்ஜூனனும், கௌரவர்களின் தலைவனான துரியோதனனும் அவரது உதவிகேட்டு வரும் நாளன்று கிருஷ்ணர் தனது படுக்கையறையில் உறங்குவதுபோல பாசாங்கு காட்டியபடியிருந்தார். அவரது தலைமாட்டருகில் ஒரே ஒரு இருக்கை மட்டும் போடப்பட்டிருந்தது. முதலில் அர்ஜூனன்தான் வருகிறான். கிருஷ்ணனின் தலைமாட்டருகில் இருந்த இருக்கையில் அமராமல், அவரது காலடிகளுக்கருகில் சென்று பணிவோடு நின்றபடியிருக்கிறான். சிறிது நேரம் கழித்து துரியோதனன் வருகின்றான். நேரடியாகச் சென்று இருக்கையில் இறுமாப்புடன் அமர்ந்து கொள்கின்றான். இருவரும் கிருஷ்ணர் விழிப்பதற்காகக் காத்திருக்கிறார்கள். கிருஷ்ணர் விழிப்பு நிலைக்கு வருகிறார். இயல்பாகவே அவரது கண்கள் தன் கால்மாட்டிலருகில் பணிவுடன் நின்றிருக்கும் அர்ஜூனனின் மீது விழுகின்றன. அவன் வந்த காரியத்தைக் குறித்துக் கேட்டறிந்தபின் போரில் அவனுக்கு உதவுவதாக வாக்களிக்கிறார் கிருஷ்ணர். பின்னர்தான் தன் தலைமாட்டருகில் இருக்கையில் அமர்ந்திருக்கும் துரியோதனின் இருப்பை அறிகிறார் கிருஷ்ணர். மெல்ல எழுந்து அமர்ந்து அவனை வரவேற்கிறார். துரியோதனன் கிருஷ்ணரின் உதவியைக் கோருகின்றான். அவனுக்கும் உதவுவதாக கிருஷ்ணர் வாக்களிக்கின்றார். அதாவது, தனது யாதவப் படையான நாராயணீ சேனை ஒரு புறமும், போரில் எந்தச் செயலில் ஈடுபடாது தான் இன்னொரு புறமும் நிற்கப்போவதாக அறிவிக்கிறார் கிருஷ்ணர். எழுந்தவுடன் தன் கண்கள் முதலில் அர்ஜூனன் மீதே விழுந்தபடியால் இந்த இரண்டில் ஒன்றை முதலில் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் அர்ஜூனனுக்கே உண்டு என்று கிருஷ்ணர் கூறுகிறார். வல்லமை மிக்க நாராயணீ சேனையைத் தன் பக்கம் சேர்த்துக் கொண்டு தன் படைவலிமையைப் பெரிதாக்கும் வாய்ப்பு இருந்தும் கூட, இறையுருவமாகவே இருக்கின்ற கிருஷ்ணரின் ஆசியும், துணையும் தன் பக்கம் இருப்பதே தனக்கு உண்மையான வலிமை என்றுணர்ந்த அர்ஜூனன் அவரையே தேர்ந்தெடுக்கின்றான். போரில் அவர் நேரடியாக ஈடுபடப்போவதில்லையாயினும், அவர் தனக்கு சாரதியாக இருந்து தேரோட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறான் அர்ஜீனன். இவ்வாறுதான் கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு சாரதியாக மாறுகின்றார்.

போர் துவங்குவதற்கு முந்தைய கணத்தில், இரு தரப்புச் சேனைகளும் போர் நிகழும் களமான குருக்ஷேத்திரத்தில் அணிவகுத்து நிற்கின்றன. அர்ஜூனன் தன் சாரதியான கிருஷ்ணனிடம் இரண்டு சேனைகளுக்கும் மத்தியில் தன் தேரைக் கொண்டுபோய் நிறுத்தும்படி கட்டளையிடுகிறான். யாருடனெல்லாம் தான் போரிட்டு வெல்லப்போகிறோம் என்ற ஆவல் அவன் மனதில் எழுந்தபடியிருக்கின்றது.  கிருஷ்ணர் அவன் ஆணையிட்டதுபோலவே ரதத்தை கௌரவப்படைகளின் முன்னிலையில் கொண்டுபோய் நிறுத்துகிறார். இப்போது திடீரென்று அர்ஜூனனுடைய பார்வையில் ஒரு மாற்றம் ஏற்படுகின்றது. இதுவரையில் அவன் பார்த்துக் கொண்டிருந்தது அவனது நிலத்தைக் களவாடிக் கொண்ட எதிரிகளை. ஆனால் இப்போது அவனுக்குத் தெரிவதோ அவனுடைய பாட்டனார் பீஷ்மர், அவனுக்கு வில்வித்தைக் கற்றுக் கொடுத்த ஆசிரியர் துரோணர், அவனுடைய சகோரர்களான கௌரவர்கள், அவனுடைய மாமா, சித்தப்பா, பெரியப்பா போன்ற உறவினர்கள், மற்றும் அவன் குழந்தைப் பருவம் முதல் விளையாடி வளர்ந்த அவனது நண்பர்கள். இந்தக் காட்சி அர்ஜூனனுடைய மனதில் மிகப்பெரிய கலக்கத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. எனக்குச் சொந்தமான நிலத்தை அடைவதற்காக இவ்வளவு பெரிய போரில் நான் ஈடுபட வேண்டுமா? இவ்வளவு ரத்தம் சிந்தப்பட வேண்டுமா? என் வாழ்நாளெல்லாம் என்னுடன் இருந்த என் பாட்டனார், சகோதரர், உறவினர், ஆசிரியர்கள், நண்பர்கள் ஆகியோரின் உயிர்கள் பலியாகித்தான் நான் இந்த ராஜ்ஜியத்தை அடைய வேண்டுமா? என்றெல்லாம் அவனுள் எண்ணற்ற கேள்விகள் எழுகின்றன. இவற்றை அவன் கிருஷ்ணரிடம் கேட்டு போரிலிருந்து தான் விலகி விடுவதாக மன்றாடுகிறார். இங்குதான் கீதைக்கான தருணம் துவங்குகிறது.

கீதா உபதேசத்தின் முதன்மை நோக்கம் என்ன? இருவகையாக இதற்கு பதிலளிக்கலாம். துக்க நிவிருத்தி மற்றும் ஆனந்தப் பிராப்தி. அதாவது மனிதன் தன்னிடமுள்ள துக்கத்திலிருந்து நிரந்தரமாக விடுதலையடைதலும், முழுமையான ஆனந்தத்தை அடைதலுமே கீதையைக் கற்பதன் நோக்கமாகும். இதை ஒரே வகையாக சம்சார நிவிருத்தி என்று சொல்லலாம். சம்சாரம் என்பது ஒரு மனிதனை இவ்வாழ்வில் பிணைக்கும் தளைகளையும், அதனால் அவனுக்கு ஏற்படும் துக்கத்தையும் குறிக்கிறது. சம்சாரத்தின் மூன்று முகங்களாக ராகம், சோகம், மற்றும் மோகம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். ராகம் என்றால் ஒரு பொருளின் அல்லது உயிரின் மீதுள்ள பற்று, சோகம் என்றால் துக்கம் அல்லது மனச்சோர்வு, மோகம் என்றால் பற்று, துக்கம் இவற்றின் காரணமாக ஏற்படும் மயக்கம் அல்லது குழப்பம் என்று கூறலாம். போர்முனையில் நின்றபடி தன் ஆசிரியர்களையும், உறவினர்களையும், நண்பர்களையும் பார்க்கும் அர்ஜூனனின் நடவடிக்கைகளில் மேற்குறிப்பிட்ட ராகம், சோகம், மோகம் மூன்றும் வெளிப்படுகின்றன. “போர்க்களத்தில் நான் கொல்லப்போகிறவர்கள் என்னுடையவர்கள். இவர்கள் அழிந்தால் என்னால் எவ்வாறு நிம்மதியாக வாழ்வேன்? இவர்களைக் கொன்றுவிட்டு அடையும் அரசபதவி எனக்குத் தேவையில்லை,” என்று அர்ஜூனன் நினைக்கிறான். இது அவனது உறவினர், ஆசிரியர் மீது அவன் கொண்டுள்ள பற்றைக் குறிக்கின்றது. தான் நேசிக்கும் மனிதர்களுக்கு தன்னாலேயே தீங்கு விளையப்போகிறது, தன்னாலேயே அவர்கள் கொல்லப்படப்போகிறார்கள் என்ற அச்சம் துக்கமாக மாறுகிறது. அவனது உடல் நடுங்குகிறது. வாய் உலர்ந்து போகிறது. அவன் ஏந்தியிருந்த அவனது வில்லான காண்டீவம் அவன் தோளிலிருந்து நழுவி விழுகிறது. அவனது பற்று சோகமாக மாறி, வில்லாளனான அர்ஜூனன் துக்கத்தினால் உடலளவில் முற்றிலும் செயலிழந்து போகிறான். சோகம் அதன் உச்ச நிலையில் மோகமாக மாறுகின்றது. அதாவது தான் என்ன செய்ய வேண்டும் என்ற விஷயத்தில் ஏற்படும் மயக்கம் மற்றும் குழப்பம். அர்ஜூனன் கிருஷ்ணனிடம் வாதாடத் துவங்குகின்றான். அவன் எடுத்துரைக்கும் வாதங்கள் அவனது குழப்பத்திலிருந்து விளைந்தவையாக இருக்கின்றன. “இந்தப் போரை நிகழ்த்தினால் வீரர்களான ஆண்கள் கொல்லப்படுவதன் மூலம் குலநாசம் ஏற்படும், அறம் காக்கும் ஆன்றோர் சமுதாயத்தில் இல்லாததால் அதர்மம் தலைதூக்கி அறம் அழியும், குடும்பத்துப் பெண்கள் நெறிதவறும் சூழ்நிலை உருவாகும், பெண்கள் நெறிதவறுவதால் குலக்கலப்பு உருவாகி  முறைசாரா வழித்தோன்றல்கள் உருவாக வழிவகுக்கும், சரியான வழித்தோன்றல்கள் இல்லாததால் முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய சிரார்த்தம் மற்றும் பித்ரு கடன்கள் நின்றுவிடும், இதனால் நம் முன்னோர்களின் ஆன்மாக்கள் நரகத்தில் உழலும், தாயாதிகளைக் கொன்ற பாவம் நமக்கு வந்து சேரும்,” என்றெல்லாம் வாதிடுகிறான். அர்ஜூனனின் பற்று, சோகம், மோகம் ஆகிய மூன்றும் அவனுடைய எண்ணம், செயல், வாதம் இவை மூன்றிலும் நன்கு வெளிப்படுகின்றன. இதிலிருந்து அர்ஜூனன் சம்சாரம் என்ற பந்தத்தின் தளைகளுக்கு ஆட்பட்டிருக்கிறான் என்பது புலனாகிறது. மேலும் தன் துக்கத்துக்கான தீர்வாக பல்வேறு உலகியல் தீர்வுகளையும் அர்ஜூனன் சிந்திக்கிறான். “இந்தப்போரில் வென்று நாட்டை அனுபவிப்பதைவிட காடுகளுக்குள் சென்று பிச்சை எடுத்து வாழ்வது மேல்,” என்கிறான். இந்த முடிவும் அவனுக்கு மோகத்தின் காரணமாக அவனுள் ஏற்படும் முடிவுதான். சிந்தித்துப் பார்த்தால் நாமும் நம் வாழ்வின் பிரச்னைகளை, துயரங்களை நிரந்தரமாக நீக்குவதற்குப் பல்வேறு உலகியல் தீர்வுகளை முயன்று பார்க்கிறோம். செல்வத்தைச் சேர்ப்பதன் மூலம், உறவுகளைப் பேணுவதின் மூலம், பிரச்னைகளை விட்டு ஓடி விடுவதன் மூலம் என்று பல்வேறு உத்திகளை முயன்று நமது துயரத்தை நீக்கப் போராடுகிறோம். ஆனால் இங்கு உண்மையான பிரச்னை எங்குள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். அர்ஜூனனின் பிரச்னை போர்க்களத்தில் இல்லை. நமது பிரச்னையும் நமது வாழ்வியல் சூழலில் உண்மையாக இல்லை. உண்மையான பிரச்னை மனதில், மனதின் நிறைவின்மையில் இருக்கின்றது. நம்மைச் சுற்றிலுமுள்ள பிரச்னைகளுக்கு அஞ்சி காடுகளுக்குள் ஓடி ஒளிந்தாலும் நம்முடைய பற்றும், துயரமும், குழப்பமும் நம்முடனேயே வரத்தான் போகின்றன. கயிற்றைப் பார்த்து பாம்பு என்று நடுங்குபவன் அந்த இடத்தை விட்டு ஓடிவிடுவதால் மட்டும் அந்த அச்சம் நீங்கி விடாது. அவன் எங்கு ஓடினாலும் பாம்பு என்னைத் துரத்துகிறது என்ற அச்சம் அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். அச்சம் நீங்க ஒரே வழி, இருப்பது கயிறு மட்டும்தான் என்ற உண்மையை அங்கேயே, அந்த வினாடியிலேயே அறிவது மட்டும்தான்.

கீதையின் முதல் அத்தியாயம் முழுக்க அர்ஜூனன் தனக்கு ஏற்பட்ட துக்கத்தை கிருஷ்ணனிடம் சொல்லிப் புலம்பியபடியே இருக்கிறான். முதல் அத்தியாயத்துக்கு அர்ஜூன விஷாத யோகம் என்றே பெயர். விஷாதம் என்றால் கவலை என்று பொருள். கிருஷ்ணர் அமைதியாக அவனது வாதங்கள் அனைத்தையும் கேட்டுக் கொண்டே இருக்கிறார். இங்கு நாம் கிருஷ்ணரிமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பண்பு ஒன்று உள்ளது. வேதாந்த பாரம்பரியத்தில் ஆசிரியர் ஒருவர் முற்றிலும் தகுதியற்ற ஒருவனுக்கு, ஆத்ம ஞானத்துக்கு ஆயத்தமாகாத ஒருவனுக்கு உபதேசம் செய்வதில்லை. எப்போது ஒருவன் தன் அறியாமையையும், தன்னால் தன் பிரச்னைக்குத் தீர்வு காண இயலாது என்கிற இயலாமையையும் உணர்ந்து, தன்னுடைய அகங்காரத்தை விடுத்து ஆசிரியரிடம் சரணடைந்து, தன்னுடைய துக்கத்தைத் தீர்க்கவல்ல கல்வியை தனக்கு அளிக்குமாறு வேண்டிக் கொள்கிறானோ அப்போதுதான் ஆசிரியர் அவனுக்குத் தன் உபதேசத்தைத் துவங்குவார்.

அந்த உன்னதமான சரணாகதி நிலையை அர்ஜூனன் இரண்டாம் அத்தியாயம் ஏழாம் சுலோகத்தில் அடைகிறான். “குழப்பம் மற்றும் பலவீனத்தால் எனது இயல்பு கெட்டு விட்டது. அறத்தைக் குறித்த விஷயத்தில் என் மனம் குழம்பி உள்ளது. என்னை உங்களது மாணவனாக ஏற்றுக் கொள்ளுங்கள். நான் உங்களிடம் சரணடைகின்றேன். எது மேன்மையானதோ, எது எனக்கு நன்மையானதோ அதை எனக்குக் கூறுங்கள்.” என்று கேட்டுக்கொள்கிறான். இந்தக் கணத்தில்தான் அர்ஜூனன் மாணவனாக மாறுகின்றான். இங்கு அர்ஜூனன் மூன்று விஷயங்களைச் செய்கிறான். ஒன்று தன் அறியாமையை ஒப்புக்கொள்ளுதல்: நான் அறம் பற்றிய விஷயத்தில் குழம்பியிருக்கிறேன் என்பதை ஒப்புக்கொள்கிறான். இரண்டு: தனக்கு பிரியமான(பிரேயஸ்) உலகியல் இன்பங்களைக் கேட்பதை விடுத்து, தனக்கு எது நன்மையோ (சிரேயஸ்) அதை உரைக்கும்படிக் கேட்டுக்கொள்கிறான். மூன்று: கிருஷ்ணர் தன்னுடைய நண்பன், தன் ரதத்தின் சாரதி என்ற நிலையைக் கடந்து, “நான் உங்களது மாணவன். என்னைக் காப்பாற்றுங்கள்,” என்று அவரிடம் சரணடைகிறான். அர்ஜீனன் ஓர் அரசனாகவும், போர்முனையில் நின்றிருக்கும் வீரனாகவும் இருந்தவரையில் கிருஷ்ணர் மௌனமாக இருந்தார். எப்போது அவன் தன் அகந்தையை உடைத்து, கிருஷ்ணரின் பாதங்களில் வீழ்ந்து “நான் உங்கள் மாணவன்,” என்பதைப் பிரகடனப்படுத்தினாரோ, அந்தக் கணத்திலேயே தேரோட்டியாக இருந்த கண்ணன் ஆசிரியனாக மாறுகிறார். கீதா உபதேசம் துவங்குகிறது.

அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம்

சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
Exit mobile version