- தெய்வநல்லூர் கதைகள் – 1
- தெய்வநல்லூர் கதைகள் – 2
- தெய்வநல்லூர் கதைகள்- 3
- தெய்வநல்லூர் கதைகள் -4
- தெய்வநல்லூர் கதைகள் – 5
- தெய்வநல்லூர் கதைகள் – 6
- தெய்வநல்லூர் கதைகள் – 7
- தெய்வநல்லூர் கதைகள் -8
- தெய்வநல்லூர் கதைகள் – 9
- தெய்வநல்லூர் கதைகள் 10
- தெய்வநல்லூர் கதைகள் 11
- தெய்வநல்லூர் கதைகள் -12
- தெய்வநல்லூர் கதைகள் 13
- தெய்வநல்லூர் கதைகள் 14
- தெய்வநல்லூர் கதைகள்
- தெய்வநல்லூர் கதைகள் – 16
- தெய்வநல்லூர் கதைகள்
- சர்க்கரை கசக்குமா கசமாடா? தமிழ் வையுமா அடி மூடா?
- தெய்வநல்லூர் கதைகள் – 19
- தெய்வநல்லூர் கதைகள் – 20
- தெய்வநல்லூர் கதைகள் – 21
- தெய்வநல்லூர் கதைகள்
- தெய்வநல்லூர் கதைகள் 23
- எம்புட்டு நேரம்தான் குச்சிய வாய்க்குள்ளயே வச்சிருப்பீரு
- மொகரைல சவக்களை
- தெய்வநல்லூர் கதைகள் – 26
- தெய்வநல்லூர் கதைகள் -27
- தெய்வநல்லூர் கதைகள்- 28
- தெய்வநல்லூர் கதைகள்- 29
- தெய்வநல்லூர் கதைகள்- 30
- தெய்வநல்லூர் கதைகள்- 31
- தெய்வநல்லூர் கதைகள்- 32
- தெய்வநல்லூர் கதைகள்- 33
- தெய்வநல்லூர் கதைகள்-34
பிரேம் – சங்கீதா கடிதப் போக்குவரத்து ஏற்படுத்திய அதிர்வுகள் பலமாக இருந்தன. ஆசிரியைகள் ஓய்வறையில் சங்கீதாவுக்கும் இதேபோல விசாரணை நடத்தப்பட மாரியம்மாள் டீச்சர், புதிதாகச் சேர்ந்திருந்த சாந்தினி டீச்சர் இருவரும் சங்கீதாவுக்கு ஆதரவாகக் களமிறங்க வெற்றி சங்கீதாவுக்கே கிடைத்தது. இரு டீச்சர்கள் உதவி இல்லாமலே கூட சங்கீதாவே வென்றிருப்பார் என்பதுதான் நேரில் கண்ட சாட்சிகளான செல்வியக்காக்கள் கூற்று. ( டீச்சர், பாடம் என்னென்ன எழுதணும்னு கேட்டு லெட்டர் எழுதுனது தப்பா? நீங்கல்லாம் கேக்கறதப்பாத்தா அந்தபுள்ள லவ்லெட்டர் எழுதாமப் போச்சேன்னு கவலப்படற மாதிரில்லா இருக்கு? – மாரியம்மாள் டீச்சர்). சங்கீதா பிற டீச்சர்களின் கேள்விகளை மிக வலுவாக எதிர்கொண்டு பணிவும், புன்னகையும் மாறாமல் பதிலளித்ததால் டீச்சர்கள் சங்கீதாவைக் கையாள்வதில் குழம்பிப் போனதாக செல்வியக்காக்கள் புகழ்ந்தனர். சங்கீதா அதன்பின்னர் டீச்சர் ட்ரெயினிங் வகுப்பு அக்காக்களுடன் நட்பாகி விட்டார். சங்கீதா வழியே பிரேமும், பிரேம் வழியே நாங்களும் கூட அந்த அக்காக்களுடன் நட்பாகி விட்டோம். அந்த நட்பு சங்கீதா கோஷ்டியார் மதிய உணவு அந்த அக்காக்களுடன்தான் என்பது வரை வளர்ந்த நட்பாகி விட்டிருந்தது.
மேல்நிலை (பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2) அண்ணன்மார்கள் பலரும் பிரேமுக்கு நட்பாகி விட்டிருந்தனர். சிலர் முறைத்தபடி திரிந்தாலும் பெரும்பான்மை ஆதரவு பிரேமுக்கு இருந்தது. அக்காமார்கள் எந்த மாற்றுக்கருத்தும் இன்றி பிரேமுக்கே ஆதரவு அளித்தனர். குறிப்பாக “அவ என் ஃப்ரெண்ட் சார்” என்ற பிரேமின் வசனம் அவர்கள் வகுப்பு அண்ணன்களால் அவர்களுக்கு சொல்லப்பட்டு அவர்களை மயிர்க்கூச்செறிய வைத்தது. பள்ளி மைதானம், மரத்தடி, வரும் வழி என பல இடங்களிலும் பலமுறை பிரேமை மடக்கி நிறுத்தி அந்த வசனத்தை மீண்டும் சொல்லச் சொல்லி கேட்ட அக்காக்கள் மீள மீள மயிர்க்கூச்செறிந்தனர். வார இறுதிகளில் இருவரும் ஒருவர் வீட்டுக்கு ஒருவர் வந்து விளையாடி, சேர்ந்து படிப்பது, திண்பண்டங்களைப் பகிர்ந்து கொள்வது ஆகிய சம்பவங்களை பிரேம், சங்கீதா மட்டுமன்றி எங்களிடமும் பலமுறை விபரமாகச் சொல்லச் சொல்லி கேட்டார்கள் அண்ணக்காக்கள் ( ஓ, கற்கடக மாச ராமாயணம் போல எத்தன தடவ சொன்னாலும் திருச்சி , திருச்சி கேக்கறாங்க – சங்கீதாவின் அலுப்பு). எங்களது வாரஇறுதி கோவில் சந்திப்புக்கு செல்வியக்காக்கள் வருகையும் வழக்கமானது. அவ்வப்போது சில அண்ணன்கள் வருகையும் நிகழும். அக்காக்கள் வருகையும் நிகழும்.
தலைமை ஆசிரியராக இருந்த ஜெயசீலன் சார் மாற்றலுக்கு கடுமையாக முயற்சித்துக் கொண்டிருந்த காலத்தில் இவை நடந்தன. அடிக்கடி விடுப்பு எடுத்துக் கொண்டு “திருனவேலி”க்கும், சொந்த ஊரான திங்கள்சந்தைக்கும் அலைந்து கொண்டிருந்த அவரால் பள்ளியை முழுக்கவனத்துடன் கவனித்து நிர்வகிக்க முடியவில்லை. ஆனால் இயல்பிலேயே நேர்மையானவராகவும், விடுதலைப் போராட்ட குடும்பப் பிண்ணனியும் கொண்டவராக இருந்ததால் அவர் கவனத்துக்கு வரும் விஷயங்களில் நேர்மையுடனே இருந்தார். மீசை சாரால் இந்த சம்பவம் ஜெயசீலன் சார் கவனத்துக்கு ஒரு தகவலாக மட்டுமே கொண்டு செல்லப்பட்டது. ஜெயசீலன் சார் அனைத்து வகுப்புகளுக்கும் வாரம் ஒருமுறையாவது வந்து கேள்விகள் கேட்டு மாணவர்களின் கல்வித்திறனை பரிசோதித்து போவது வழக்கம் என்பதால் சங்கீதாவின் வகுப்புக்குள் அவர் நுழைந்த ஐந்தாம் நொடியிலேயே சங்கீதாவை மோளே என உச்சரிக்க மொத்த வகுப்பும் முதலில் கிலி கொண்டு, பின் சிரிக்கத் தயாராகி, அதன் பின் தயங்கி நின்ற நொடியில் தாமிருப்பது திருனவேலி என உணர்ந்த ஜெயசீலன் சார் பிறரிடம் கேள்விகளைக் கேட்டு சூழ்நிலையை கடினமாக்கி தான் தப்பினார். இவ்வாறாக சங்கீதா குறித்து ஏற்கனவே அறிந்திருந்த ஜெயசீலன் சார் பிரேமின் படிப்பாற்றலையும் அறிந்திருந்தமையால் அவர் கடித விவகாரத்தை தேநீரில் சர்க்கரை அளவு குறைவு எனும் அளவிலான குறையாகக் கூட கருதவில்லை.
அரையாண்டுத் தேர்வுகள் நெருங்கி வந்தபோதும் எங்கள் வகுப்புக்கு கணித ஆசிரியர் எவரும் வரவில்லை. பெரும்பாலும் அந்த வகுப்பு நேரத்தின்போது வகுப்பு மரத்தடிகளில் குழுக்களாகப் பிரிந்து அமர்ந்து ரஜினியா, கமலா யார் நடிப்பில் சிறந்தவர்- விஜயகாந்தா , அர்ஜுனா யார் சண்டையில் வல்லவர், பாக்யராஜ் படங்களில் ஏன் பெண்கள் அடிக்கடி சிரிக்கிறார்கள் (ஜோக் நடிகரே இல்லாமல்) , சத்யராஜ் நிஜமாகவே கொலைகளும், கற்பழிப்புகளும் செய்யக் கூடியவரா என்பன போன்ற ஆக்கப்பூர்வ அறிவுஜீவி விவாதங்களில் ஈடுபட்டிருந்தது. மீசை சாரும், மாரியம்மாள் டீச்சரும் ஜெயசீலன் சாரிடம் இப்பிரச்சினையைக் கொண்டு சென்றபோது தனது வழக்கமான இடமாறுதல் வேண்டுதலுக்காக நெல்லைக்குச் சென்ற அவர் இந்த விஷயத்தையும் சேர்த்து விசாரித்தார். இரு வடைகள் (உளுந்த வடை, ஆமவடை) மற்றும் ஒரு டீ செலவில் மாவட்ட கல்வி அதிகாரி அலுவலக உதவியாளர் கூறிய செய்தியின் சாராம்சம் இதுவே – தெய்வநல்லூர் மேல்நிலைப் பள்ளியின் கணித ஆசிரியர் பணிக்கு மூத்த ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டு அவரும் பணியை ஏற்றுக் கொண்டதாக ஒப்புதல் அனுப்பினார். அவருக்கு பணி மாறுதலுக்கான ஒரு வார விடுமுறையும் அளிக்கப்பட்டு விட்டது. ஆனால் புளியங்குடியைச் சேர்ந்த இன்னொரு இளைஞர் அதே பணியிடத்தைக் கேட்டு கடிதம் அனுப்பியிருக்கிறார். மூத்த ஆசிரியரின் ஒப்புதல் கடிதம் முதல் நாள் வந்து விட்டாலும் அலுவலகக் கோப்பில் மறுநாளே வரவு வைக்கப்பட்டது. அந்த நேரத்திற்கு முன்பாகவே புளியங்குடி ஆசிரியரின் கோரிக்கைக் கடிதம்/ங்கள் வரவு வைக்கப்பட்டன. புளியங்குடி ஆசிரியரின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு மாவட்ட கழக தலைவர், அமைச்சரின் பரிந்துரை ஆகிய கடிதங்களும் இருந்தன. அதே நேரம் சிவப்பு கட்சியின் ஆசிரிய சங்க மாவட்டத் தலைவராக இருந்த மூத்த ஆசிரியரின் கடிதமும் தன் ஒப்புதலை தெரிவித்ததோடு மட்டுமன்றி தனது பணியிடத்திற்கு வேறொரு ஆசிரியர் வந்து விட்டதையும் குறிப்பிட்டிருந்ததால் மாவட்ட கல்வி அலுவலர் கட்சியா, அரசாங்கமா என்ற அறக்குழப்பத்திற்கு ஆளாகி நிற்கும் நிலைமை ஆனது. ஒப்புதல் கடிதத் தேதியை மூத்த ஆசிரியரும், வரவு வைக்கப்பட்ட தேதியின் நேரத்தால் முதன்மை பெறும் கணக்கை புதிய ஆசிரியரும் விடாமல் வலியுறுத்த விவகாரம் இழுபறியாக கிடந்தது. விஷயம் தன் எல்லையைத் தாண்டியது என புரிந்து கொண்ட ஜெயசீலன் சார் மாற்று ஏற்பாடுகளைச் செய்யும் நோக்குடன் தெய்வநல்லூர் திரும்பினார்.
பள்ளிக்குத் திரும்பிய ஜெயசீலன் சார் விஷயத்தை விளக்க புதிதாக வந்த சாந்தினி டீச்சர் தாம் கூடுதலாக 9 ஆம், 10 ஆம் வகுப்பின் இரு பிரிவுகளுக்கு கணிதப் பாடம் எடுப்பதாக ஒப்புக் கொள்ள டி சி எனப்படும் டி தங்கச்சாமி சாரின் ஆலோசனைப்படி 10 ஆம் வகுப்பின் இரு பிரிவுகளுக்கு அவர் கணிதம் எடுப்பதாகவும், டீச்சர் ட்ரைனிங் மாணவியரை (குறிப்பாக செல்வியக்காக்களை) தற்காலிகமாக 9 ஆம் வகுப்பின் மற்ற இரு பிரிவுகளுக்கும் கணித பாடம் நடத்தவும் சொல்ல அவ்வாறே முடிவு செய்யப்பட்டது. எம் ஏ ஏன் சார் கோஷ்டிகளால் இம்முடிவு விமரிசிக்கப்பட்டது. புதிதாக வந்த சாந்தினி டீச்சருக்கு எப்படி தங்களைக் கேட்காமல் கூடுதல் பொறுப்பினைக் கொடுக்கலாம் என ஜெயசீலன் சாரிடம் கேட்கப்பட அவர் வெகு எளிதாக இரு நிமிடங்களில் எம் ஏ ஏன் கோஷ்டியாரை வெறும் கையுடன் திரும்பிப் போகச் செய்தார் ( சரி சார், ஆனா சாந்தினி டீச்சர் பி எஸ்ஸி மேத்ஸ் படிச்சிட்டுதான எம் ஏ இங்க்லீஷ் படிச்சிருக்காங்க. இங்க்லீஷ் டீச்சர்தான். ஆனா மேத்ஸ் தெரியும்ங்கறதாலதான டெம்ப்ரவரியா கிளாஸ் எடுக்கச் சொல்லிருக்கேன். அவங்களையேவா மேத்ஸ் டீச்சரா ஆக்கிட்டேன்? தினமும் மூணு பீரியட் பாடம் எடுக்கற எடத்துல நாலோ, அஞ்சோ எடுக்கணும், அதே சம்பளத்துக்கு. வேற யாரு மேத்ஸ் எடுக்க ரெடின்னு சொல்லுங்க, அவங்களையே எக்ஸ்ட்ரா கிளாஸா எடுக்கச் சொல்லிடறேன். (இன்றைய கணினி வேர்ட் முறையின்படி சொல்வதானால் அதே சம்பளத்துக்கு என்ற இடத்தில் கண்ட்ரோல் பி யை குரலால் செய்திருந்தார் ஜெயசீலன் சார்).
இவ்வாறாக அரையாண்டுத் தேர்வுக்கு பதினைந்து நாட்களே இருந்த நிலையில் எங்களுக்கு கணித வகுப்புகள் மீண்டும் தொடங்கின. சாந்தினி டீச்சர் இவ்வாறாகத்தான் எங்களுக்கு அறிமுகமானார். அவ்வப்போது செல்வியக்காக்களும் வந்து சாந்தினி டீச்சர் முன்னிலையில் பாடம் எடுத்து அவரிடம் ஆலோசனை கேட்டுப் போவதும் நடைபெற்றது. கிட்டத்தட்ட 27 பேர் இருந்த வகுப்பில் 21 பேர் அந்த அரையாண்டுத் தேர்வில் தேர்ச்சி பெற்றது சாந்தினி டீச்சரின் சாதனையேதான். அவரது புன்னகையைக் கண்டு நாங்கள் ஏமாந்தது இரண்டாவது நாளே தெரிந்து போனது. வீட்டுக் கணக்கு எழுதாமல் வந்தவர்களை நின்றவாறே எழுதி முடிக்குமாறு சொல்லி தானும் சென்று அருகில் நின்றார். வேறு வழியின்றி செய்ய ஆரம்பித்து திணறி நின்றவர்கள் அன்று மாலையே செல்வி அக்காக்கள் ஏற்பாடு செய்த தனி வகுப்பில் இணைக்கப்பட்டனர். நாங்கள் பள்ளி விட்டு வெளியே செல்கையில் ஏக்கப்பார்வையோடு சன்னல் வழியே எங்களைப் பார்க்கும் அவர்களை நாங்களும் பரிதாபப் பார்வை பார்ப்போம். ஆனால் அந்த வகுப்பு எடுக்கும் அக்காக்களுக்கு தனது வகுப்பு குறிப்பேட்டையும், வீட்டுப்பாடக் குறிப்பேட்டையும் கொடுத்து உதவும் பணியை பிரேம் மேற்கொண்டிருந்தார். சாந்தினி டீச்சரின் புன்னகைக்கும் கண்டிப்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்ற உண்மை சிவாஜியால்தான் முதலில் உணரப்பட்டது. ஆனால் பிரேம் மீது டீச்சருக்கு தனிப் பிரியம் இருந்தது.
தெய்வநல்லூரிலிருந்து ஒன்றரை மணி நேர பேருந்து பயணத்தில் இருந்த ஊர் சுரண்டை. அவ்வூரின் அருகிலிருந்த பரங்குன்றாபுரம் என்ற ஊரிலிருந்துதான் டீச்சர் தினமும் வந்து போவது. காலையில் ஏழரை மணிக்கே பேருந்தைப் பிடித்து வருவதால் மாலை நாலே முக்கால் பேருந்தைப் பிடிக்கும் அவசரம் அவருக்கு இருந்தது. சில நாட்களில் மதிய உணவு கொண்டுவர இயலாதபோது மாரியம்மாள் டீச்சர், கனகவல்லி டீச்சர் ஆகியோருடன் மதிய உணவைப் பகிர்ந்து கொள்வார். அன்று சாப்பாட்டுப் பார்சல் எனும் டேக் அவே கலாசாரம் பரவாத நாட்கள். மேலும் பாத்திரங்களை நாம் கொடுத்து விட்டால்தான் உணவை சாப்பாட்டுக் கடைகளில் நிரப்பித் தருவார்கள். தெய்வநல்லூரில் கிடைக்கும் மேற்சொன்ன இவையும் ஆண்களுக்கு மட்டுமாக இயல்பானவையே தவிர பெண்கள் கடைகளில் வாங்கி சாப்பிடுவது என்பது நடுவீட்டில் இடி இறங்கியது போலவே தெய்வநல்லூரில் கையாளப்பட்டு வந்த மரபு (சங்கரன்கோவில், திருனவேலி என போகும்போது ஹோட்டல்களில் சாப்பிடுவது ஏற்றுக்கொள்ளப்பட்டதே என்றாலும் உடன் ஒரு ஆண் இருக்க வேண்டியது அவசியமாகும்). இவ்வாறாக சாந்தினி டீச்சர் தன் மதிய உணவை கொண்டு வராத ஒரு நாளில் மதியம் இடைவேளைக்கு பள்ளி விட்டதும் மின்னலென ஓடிய பிரேம் தன் வீட்டிலிருந்து ஒரு டிபன் கேரியரில் டீச்சருக்கு உணவு கொண்டு வந்து கொடுத்தார் ( சிவாஜி ஆலோசனைப்படி பிரேம் நேரில் சென்று கொடுக்காமல் செல்வியக்காக்கள் மூலமாக உணவு டீச்சரிடம் கொடுக்கப்பட்டு வற்புறுத்தி உண்ண வைக்கப்பட்டது ).
மதிய வகுப்புக்கு வந்த சாந்தினி டீச்சர் பிரேமை அழைத்து நன்றி சொன்னார் ( இதென்னல, சினிமாலா வாற மாதிரி தேங்க்ஸ்லாம் சொல்லுது டீச்சர்- நயினார்). கூடவே பிரேமின் அம்மாவிற்கும் டீச்சர் தன் அன்பைத் தெரிவித்தார். உணவின் சுவையைப் புகழ்ந்தார். மறுநாள் நாங்களெல்லாம் வியக்கும் வண்ணம் சுரண்டை ஸ்பெசல் பால்கோவா வாழையிலையில் பொதியப்பட்டு வாழைச்சருகில் கட்டப்பட்டு டீச்சரால் பிரேமிடம் கொடுக்கப்பட்டது (அம்மாட்ட கொடுத்துரு என்ன ?). அதன் பின் மாலை நேரங்களில் டீச்சரை பள்ளியிலிருந்து பஸ் ஸ்டாப் வரை கொண்டு விட்டு திரும்பும் வழக்கம் எங்கள் நால்வருக்கும் உருவானது. அந்த இருபது நிமிடங்களில் டீச்சர் பேசியவை எங்களால் இன்றும் பேசிக்கொள்ளப்படுகிறது. அவ்வப்போது யக்கா, தெண்டில், மு மா., அமுக்கு டப்பா, சேமியா, சங்கீதா, மெஜூரா போன்ற பழைய மகாத்மா அணியினரும் சேர்ந்து கொண்டாலும் நாங்கள் நால்வரும்தான் (பிரேம், சிவாஜி, நயினார், நான்) எப்போதும் வழியனுப்பு கமிட்டியின் நிரந்தர உறுப்பினர்கள். உங்களுக்கு அந்த டீச்சரை அன்றைய தோற்றத்திலேயே பார்க்க வேண்டுமென்றால் ஒரு வழி உண்டு. கடலோரக் கவிதைகள் படத்தில் நடிகை ரேகா அவர்கள் தோற்றத்தில் முக்காலடி உயரம் குறைவாக கற்பனை செய்யுங்கள். இரு அன்னப்பறவைகள் எதிரெதிரே இருக்கும் பதக்கம் மார்பில் படிந்த நீண்ட சங்கிலி, முழங்கையைத் தொடுவது போன்ற ரவிக்கையின் கைகள், பேருந்தில் ஏறியதும் குனிந்து எங்களுக்கு கையசைப்பும், புன்னகையும் காட்டிப் போகும் முகம் என எங்கள் நினைவில் இன்னும் அப்படியே நீடிக்கும் சாந்தினி டீச்சரை நீங்களும் பார்த்து விடலாம். பிரேமும் அவரும்தான் நிறைய பேசியபடி வருவார்கள். அவர்கள் இருவரும் பேசுவதில் அவ்வப்போது சிவாஜியும் பத்துக்கு ஆறு எனும் கணக்கில் பங்கு பெறுவார் என்றாலும் எங்களுக்கு முக்கால்வாசி புரியாது என்பதால் நாங்கள் குறைவாகவே உரையாடல்களில் பங்கு பெறுவோம். ஆனால் டீச்சரோ, பிரேமோ எங்களை ஒதுக்கிப் பேசியதில்லை. இயன்ற அளவு எங்களையும் உரையாடல்களில் பங்கு பெற வைக்கவே முயற்சித்தார்கள்.
ஒரு நாள் பேச்சுவாக்கில் கொடுக்காப்புளி மரத்தைக் காட்டி தனக்கு அப்பழம் மிகவும் பிடிக்கும் என்று டீச்சர் சொன்னதிலிருந்து சிவாஜி தினமும் தன் வீட்டிலிருந்த கொடுக்காப்புளி மரத்திலிருந்து டீச்சருக்கு பழங்களைக் கொண்டுவந்து வைத்தார். அதில் ஒரு சிக்கல் உருவானது. ஆசிரியர் ஓய்வறைக்குள் சாந்தினி டீச்சர் நுழையுமுன்பே பிற ஆசிரியைகள் வந்து விடுவதால் டீச்சர் மேஜை மேலுள்ள கொடுக்காபுளி பழங்கள் காணாமலாகின. பிரேம் சொன்ன யோசனைப்படி சாந்தினி டீச்சர் நம்பர் லாக் கொண்ட பூட்டு ஒன்றை வாங்கி வந்தார். பச்சை வண்ணமும், தங்க வண்ணமும் கலந்த சிறிய அந்த பூட்டு எங்களுக்கெல்லாம் பெரும் ஆச்சரியமாக இருந்தது. தங்க நிறத்தில் மூன்று அடுக்கு வரிசைகளாக எண்கள் இருக்க மேலும் கீழும் பச்சை வண்ணத்தில் பூட்டின் வளைவில் ஒரு இடத்தில் சிறு அம்பு நுனி ஒன்று புடைப்பாக இருந்தது. அந்த புடைப்புக்கு நேராக மூன்று ரகசிய எண்களையும் வரிசையாக ஒன்றாக வைத்தால் பூட்டு திறக்கும். அதே எண்களின் வரிசையில் வைத்து அமுக்கி விட்டு எண் வரிசையைக் கலைத்து விட்டால் பூட்டு மூடிக் கொள்ளும். எங்களுக்கு அன்றெல்லாம் அது ஒரு மேஜிக் போல இருந்தது. பிரேமுக்கு மட்டுமே அந்த எண் வரிசைகளைச் சொல்லியிருந்தார் டீச்சர். காலையில் வந்ததும் பிரேம் மேஜிக் பூட்டால் பூட்டப்பட்டிருக்கும் இழுப்பறையைத் திறந்து அதனுள் பண்டங்களை வைத்து மீண்டும் பூட்டிவிட்டு சென்று விடுவார். டீச்சர் வந்ததும் திறந்து எடுத்துக் கொள்வார்.அவ்வப்போது மாரியம்மாள் டீச்சருடன் கொடுக்காபுளியை பகிர்ந்து கொண்டாலும் ஒரு பருப்புக்கு மேல் மாரியம்மாள் டீச்சர் எடுத்துக் கொள்ள மாட்டார் ( எப்படிட்டி இம்புட்டுகானம் இதத் தின்னுட்டு போயி க்ளாஸ் வேற எடுக்க? எனக்கு ரெண்டுக்கு மேல தின்னாலே தொண்ட கட்டிருது – மாரியம்மாள் டீச்சர்). கொடுக்காப்புளி மட்டுமன்றி பிரேம் வீட்டில் செய்த சில பலகாரங்களும் கூட சில நாட்களில் மேஜையின் இழுப்பறையில் வைக்கப்படும். சிவாஜி கூட அந்த எண்ணைத் தெரிந்து கொள்ளவில்லை. பிரேம் மட்டுமே இந்த வேலையை இறுதி வரை செய்து வந்தார்.
சாந்தினி டீச்சர், செல்வியக்காக்கள், மீசை சார் ஆகியோர் வழியே நாங்கள் நேரு பள்ளியின் பொற்காலங்களை சிறிதளவாவது மீட்டுக் கொண்டோம் என்றே சொல்லவேண்டும். அதே நேரம் கணிதப் பாடங்களில் டீச்சர் காட்டும் கண்டிப்பு வகுப்பின் கடைசி வரிசை குழுக்களை அதிருப்தி கொள்ள வைத்தது. ஏழு பேர் அடங்கிய அதிருப்திக் குழு உருவானது எங்கள் கவனத்திற்கு வரவேயில்லை. உளவுப் பணிகளில், எதிர் உளவுப் பணிகளில் எங்கள் பழைய ஆசியஜோதி குழு கொண்டிருந்த அனுபவமும், நுட்பமும் உங்களுக்குத் தெரிந்ததே. அப்படியிருக்க நாங்கள் இந்த விஷயத்தில் எப்படி கோட்டை விட்டோம் என உங்களுக்கு ஐயம் எழுவது இயல்பானதுதான். அதை விளக்க எங்கள் ஒன்பதாம் வகுப்பைக் குறித்த விரிவான சித்திரம் ஒன்றை சொன்னால்தான் சரியாக இருக்கும்.
இன்று இருப்பதுபோல தேர்வானாலும் ஆகாவிட்டாலும் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு அனுப்பும் முறை அன்று இல்லை. ஆகவே சில வகுப்புகளில் இருமுறை (சிலர் மூன்று முறை) அமர்ந்து வந்த தகை சால் மாணவர்கள் சிலர் எல்லா வகுப்பிலும் உண்டு. அவ்வாறே உடலால் இளமையும், மனதால் முதுமையும் எய்திய மாண்பமை மாணாக்கரும் உண்டு. இவர்கள் இருவரும் இணைவதால் உருவாகும் அணியே வகுப்புகளில் அதிருப்தி அணி என ஆனது. சரியாக மீசை வளராத வாழைத்தண்டு கால்களோடு எங்கள் குழு போன்ற “நல்மாணாக்கர்” முதல் வரிசைகளில் அமைய முருங்கைக் கம்பளியின் முதுகுமயிர் வரிசையென அமைந்த மீசையும், மயிரடர்ந்த கால்களுமாய் இன்னொரு குழுவும் வகுப்புகளில் அமைந்தன. இக்குழுக்களில் இரு குழுக்கள் உண்டு என்பதை முன்பே அறிந்திருந்தோம். வழக்கமாக எப்போதும் இவ்விரு குழுக்களும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டிருந்தாலும் வீட்டுப் பாடம் எழுதாமல் வருவது, பெஞ்சில் தாளம் போட்டபடி திரைப்பாடல்களைப் பாடுவது, பாலியல் சொற்களை இயல்பாகப் பயன்படுத்துவது, நடிகையரின் அங்க வர்ணனை ஆகியவற்றை செய்வதில் ஒற்றுமையாகவே இருந்து வந்தனர். இவ்விரு குறுங்குழுவினரிடமும் எவ்வித வேறுபாட்டையும் சாந்தினி டீச்சர் கண்டிப்பு கடைப்பிடிக்கவில்லை. இங்குதான் எங்களது முக்கிய எதிரியான மேற்றாணித் துரை என்ற துரை உருவாகி வந்தார். அவர் தொடர்ந்து கணித வீட்டு பாடங்களைச் செய்யாமல் வர தொடர்ந்து சாந்தினி டீச்சர் அவரை நின்றவாறே பாடங்களைச் செய்ய வைக்க முயல ஒரு கட்டத்தில் அன்னார் நோட்டை வீசி எறிந்து தம் எதிர்ப்பை பதிவு செய்தார். மீசை சார் முன்னிலையில் விஷயம் சென்றபோது துரை மீசை சார் முகத்தையே நோக்காமல் ஓரிரு வார்த்தைகளை முனகி மட்டுமே எதிர்ப்பை பதிவு செய்தார். விளைவாக ஜெயசீலன் சார் தலையீடு நிகழ்ந்தது. அந்த விசாரணையில் சாந்தினி டீச்சருக்கு ஒழுங்காகப் பாடம் எடுக்கத் தெரியவில்லை என்றும், புரியும்படியாக சொல்லித்தரச் சொல்லவே டீச்சர் தன்மேல் வம்மம் (வன்மம்) கொண்டு இவ்வாறாக பழி வாங்குவதாகவும் அபாண்டம் உரைத்தார். மீசை சார் உடனே எங்கள் நால்வரின் நோட்டுகளையும் கொண்டுவரச் செய்து ஜெயசீலன் சார் பார்வைக்கு வைத்தார். பிரேமின் குறிப்பேட்டைப் பார்த்த ஜெயசீலன் சார் மகிழ்ந்து துரையை நோக்கி இக்குறிப்பேட்டை கண்களில் ஒற்றிக் கொண்டாலாவது அறிவு உண்டாகுமா என துரையை பரிசோதித்துக் கொள்ளச் சொன்னார். கூடவே துரையை விட சிறியவர்களான எங்களுக்கு இருக்கும் ஆர்வத்தையும், அர்ப்பணிப்பையும் துரை எங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டுமெனவும் பரிந்துரைத்தார். எரியும் கொள்ளியில் எண்ணெயை ஊற்றும் விதமாக ஒரு முத்தாய்ப்பும் வைத்தார் (சாந்தினி டீச்சரை அனுப்பி விட்டு)– “ஒரே சினிமாவ நாலு மட்டம் பாத்துட்டு வந்து எவளுக்கு எது எப்புடின்னு பேச உங்களுக்கெல்லாம் யாருடே சொல்லிக் கொடுத்தா? அது மட்டும் எப்படிடே சொல்லாமலே புரியுது? குஞ்சு வெடச்சவன்லாம் கொழந்தயப் பெக்கணும்னு அலஞ்சா நாடு வெளங்குமாடே? உருப்படியா படிச்சு பாஸ் ஆனா நல்ல வேல கெடைக்கும். அப்ப சம்பளத்தக் கொண்டாந்து எங்களுக்காடே தரப்போறீக? ஒழுங்குமொறையா சொல்பேச்சு கேட்டு படிச்சு வெளில போற வழியப் பாரு. இல்ல, டி சியக் கிழிச்சு அனுப்பிருவேன் பாத்துக்க. பொறவு எதுக்க கருத்தபாண்டி கடையில க்ளாஸ் கழுவத்தான் போவணும், பாத்துக்கோ”.
இந்த சம்பவத்தின் அவமானத்தை துரை எங்கள் குழு மேல் வன்மமாக மாற்றிக் கொண்டார். குறிப்பாக பிரேம் மீது. பிரேம் தான் படித்து விட்டு வந்து பிறரை படிக்க விடாமல் மட்டம் தட்டுவதாகவும், ஆசிரியர்களை அடிவருடி கள்ளநற்பெயர் பெறுவதாகவும் சொல்ல ஆரம்பித்தார். கூடவே துரை அபாண்டமான இன்னுமொரு குற்றச்சாட்டை ரகசியமாக பரப்ப ஆரம்பித்தார். மீசை சார் ஜாதி அடிப்படையில் தன்னை பழி வாங்கிவிட்டதாகவும், தான் ஒரு ஜாதிய மோதலின் பாதிப்பாளி என்றும் கண்ணீர் மல்கினார். முதல் குற்றச்சாட்டை மாணவர்கள் மத்தியிலும், இரண்டாம் குற்றமுறையீட்டை ஆசிரியர்கள் நடுவேயும் அரங்கேற்றினார் ( இடம் கருத்த பாண்டியார் கடை ஓய்வறை – சார்வாள் எல்லாரும் கேக்கணும்னுதான் இவன இங்க கூப்ட்டு விட்டேன். எடே! அந்த ஆளு மீச … உன்ன என்னென்ன செஞ்சாம்னு பதறாம, பயப்படாம சொல்லுடே! எல்லா சார்வாள்களும் உண்மைய தெரிஞ்சிக்கிடணும்லா! – தெய்வநல்லூர் உண்மை அறியும் குழுவின் முன்னோடியான எம் ஏ என் சார் துரையை அரங்கேற்றிய காதை).
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து அரையாண்டுத் தேர்வுகளும் வந்துவிட்டதால் இந்த விவகாரம் அப்படியே ஆறிப்போனது. ஆனால் பழங்கஞ்சி ஆகிவிடவில்லை. அரையாண்டுத் தேர்வு முடிவடைந்து விடுமுறைக்குப் பின் பள்ளி திறந்தபோது துரை வேறோர் உத்தியைக் கையாண்டார். இம்முறை அவருடன் அவர் ஊரைச் சேர்ந்த சிலரும், அவர் கையில் கட்டியிருக்கும் நிறத்திலேயே மணிக்கட்டுக் கயிறு கட்டியிருக்கும் சிலரும் சேர்ந்து கொண்டனர். வீட்டுப்பாடம் எழுதாமல் வருவோர் எண்ணிக்கை எட்டாக மாறியது. நின்றுகொண்டே எழுதச் சொன்னாலும் எழுத மறுத்து வீம்பாக நின்றுகொண்டே இருக்கும் காந்திய வழிமுறைக்கு மாறினர் அதிருப்திக் குழுவினர். மீண்டும் இவ்விஷயத்தை பெரிதுபடுத்த விரும்பாத சாந்தினி டீச்சர் அவர்களை அழைத்து புன்னகை மாறாமல் பேசினார். தான் அவர்களது எதிர்கால நலனை முன்னிட்டே இவ்வாறு செய்வதாகவும், இவ்வாண்டு கணிதப் பாடத்தை சரியாகப் படிக்காமல் போனால் அடுத்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கணிதப் பாடம் மிகக் கடினமாக இருக்கும் என்றும் எடுத்துரைத்தார். மேலும் குறைந்த பட்ச அரசுப் பணிக்குச் செல்ல குறைந்த பட்சத் தகுதியே பத்தாம் வகுப்பு தேர்ச்சி என்பதால் மாணவர்களுக்கு இப்போதே படிப்பது எவ்வளவு அவசியம் என்றும் தன்மையாகச் சொன்னார். தனது நோக்கம் அவர்களைப் படிக்குமாறு செய்ய வேண்டும் என்பதுதானே தவிர தண்டிக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை என தன்னிலை விளக்கம் அளித்தார். ஆனால் துரை டீச்சரின் பெருந்தன்மையை தனது போராட்டத்தின் வெற்றியாகக் கருதினார். தன் குழுவினரின் எண்ணிக்கை பலம் டீச்சரை அசைத்து விட்டதாக எண்ணினார். வீட்டுப் பாடம் எழுதாமல் வரும் ஒவ்வொரு முறையும் தான் வெளியே நிறுத்தப்படுவதால் அதைப் பார்க்கும் தன் ஊர் மாணவர்கள் ஊரில் சென்று சொல்வதாகவும், அதனால் ஊரில் தன் சுயமரியாதை பாதிக்கப்படுவதாகவும், தனது ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரையிலான 12 வருட பள்ளி வாழ்க்கையில் இவ்வாறான அவமானத்தை தான் சந்தித்ததே இல்லை எனவும் குமுறினார். தனது சுயகவுரவுத்துக்கு இழுக்கு என்றும் அதற்கு காரணம் டீச்சர்தான் என்றும் குற்றம் சாட்டினார். ஆனாலும் அவர் டீச்சரின் பேச்சுக்காக சற்று பரிதாபப்பட்டு ஒரு சலுகையை டீச்சருக்கு வழங்க முன்வந்தார். அதன்படி துரை குழுவினர் வீட்டுப்பாடம் எழுதி வருவதை யாரும் சோதிக்கக்கூடாது என்றும், பதிலுக்கு அவர்கள் எவ்வித இடையூறும் செய்யாமல் வகுப்பை கவனிக்க மட்டும் செய்வார்கள் என்றும் சொன்னார். மொத்த வகுப்பின் முன்னிலையில் நடைபெற்ற உரையாடல் இது என்பதால் அனைவரும் துரையின் பேச்சைக் கேட்டு உறைந்திருந்தோம். எவரும் எதிர்பாரா வண்ணம் வெடித்தெழுந்தார் பிரேம். அதுவரை துரை அவரை நோக்கி ஜாடைபேச்சு பேசும்போது கூட அமைதி காத்த பிரேம் இந்த நிகழ்வில் கொதித்து எழுந்தார்.
படிக்காமல் வருவதில் வெட்கமடையாமல் வெளியில் நிற்பதற்கு வெட்கமடைய என்ன இருக்கிறது, இன்று படிக்காமல் வெளியே நிற்பதை விட நாளை பொதுத்தேர்வில் தோல்வியுற்று ஊருக்குள் சுற்றும் அவமானம் தான் பெரியது, கூடுதல் பொறுப்பாக தானே முன்வந்து டீச்சர் செய்யும் இந்த சேவையை குறை சொல்வோர் நாளை வரும் ஒவ்வொரு நாளிலும் இதை நினைத்து வருந்திப் புழுங்கும் நாள் வரும், இன்று இவர்களுக்கு சலுகை வழங்கப்பட்டால் நாளை படிக்க சோம்பல் படும் பல மாணவர்களுக்கும் அது தவறான முன்னுதாரணமாகும், தன் எதிர்காலத்தை ஒருவர் அழித்துக் கொள்ள உரிமை இருக்கலாம், ஆனால் தன்னுடன் பிறரையும் சேர்த்துக் கொண்டு அவர்கள் எதிர்காலத்தையும் சேர்த்து நாசமாக்க ஒருவனுக்கு (துரையை நோக்கி சுட்டு விரலை நீட்டி) உரிமை இல்லை – இவை போன்ற பல சொல்வீச்சுகள் பிரேமின் ஆவேச உரையில் வெளிப்பட்டன. இம்முறை பிரேமின் இந்த அவதாரத்தை நாங்களே எதிர்பார்க்கவில்லை. மொத்த வகுப்பும் உறைந்து போனது மீண்டும், துரை, டீச்சர் உட்பட. பிரேம் பேசியதில் கடைசி வரி, டீச்சர் பேசியவை மொத்தமாக வீணாகவில்லை. அவை சில மாற்றங்களைக் கொண்டு வந்தன. அதிருப்தி அணியின் எண்ணிக்கை மூன்றாகச் சுருங்கியது. ஆனால் பிரேம் மீது துரையின் வன்மம் அதிகமானது. டீச்சர் மேலும் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக மீசை சாரிடம் பேசி அதிருப்திக் குழுவினர் மூவரையும் கணிதப் பாடத்திற்கு மட்டும் டி சி சார் வகுப்பெடுக்கும் பிரிவிற்கு போகுமாறு செய்தார். வகுப்பில் தற்காலிக அமைதி வந்தது.
இந்த நிகழ்வால் இன்னுமொரு மாற்றம் நடந்தது. வகுப்பில் இரண்டு வண்ணக் கயிறுகள் அணிந்த இரண்டு குழுவினர் உண்டு என்பது முன்பே சொல்லப்பட்டது. இதில் ஒரு குழுவின் தலைவராக இருந்தவர் துரை. எம் ஏ என் சார், எஸ் பி பி சார் ஆகியோர் ஆதரவு பெற்ற குழு என்பதால் அதிகாரப் பின்புலம் கொண்ட செல்வாக்கான குழு இது. மற்றொரு குழு ஜெயராஜ் சார், டி சி சார் ஆதரவு பெற்ற குழு. முறைப்பாகவும், சட்டென கலந்து பழகாமலும், அதே நேரம் வம்பு வளர்க்காமலும் இருக்கும் குழு. கவர்மெண்ட் புள்ளைக (ஸ்காலர்ஷிப், இலவச நோட்டுப் புத்தகங்கள், இலவச சீருடைகள், தேர்வுக் கட்டண சலுகை என இக்குழுவினருக்கு அரசு தரும் ஆதரவினால் அமைந்த வன்கொடுமைப் பெயர் என அறிக) என முதல் குழுவினரால் நக்கலடிக்கப்படும் இக்குழு தம்மை எவர் நெருங்கி வந்தாலும் ஐயப்பட்டு விலகியே இருக்கும். இரண்டாம் குழு பிரேமின் நேரடியான எதிர்ப்பைக் கண்டு வியந்து அவர்களாகவே முன்வந்து எங்களுடன் பேச ஆரம்பித்தனர். சங்கரலிங்கம் என்ற சங்கர் என்ற டச்சிங் சங்கர் அவ்வாறாகத்தான் எங்களுடன் இணைந்தார். (திரைப்பாடல்களை வாயால் பாடி கையால் பெஞ்சில் தாளம் போட்டு பாடுகையில் பெஞ்சில் கொண்டுவர முடியாத தாளங்களை ஆ… டச்சிங்கு, டச்சங்கு, டசங்கு, டசங்கு என்ற குரலோசையால் இட்டு நிரப்பும் திறன் காரணமாகவே சங்கர் டச்சிங் சங்கர் எனப் பெயர் பெற்றார்; இந்த டச்சிங்கில் வரும் ட வை ஆங்கில சொல்லான டோர் (கதவு) என்பதில் வரும் அழுத்தமான ட வாகவே உச்சரிக்க வேண்டும்; ஆங்கில சொல்லான தொடுகை எனும் பொருளில் உச்சரிக்கக் கூடாது).
இரண்டாம் குழுவில் தலைவர் போல டச்சிங் தான் செயல்பட்டு வந்தார். அவர் எங்களுடன் இணைந்ததும் வகுப்பின் நிறம் சற்று மாறியது. டச்சிங் குழுவினரும் படிப்பதில் ஆர்வமாகினர். வழியனுப்பச் செல்லும்போதே வகுப்பின் நிலவரங்களை, ஒவ்வொரு தனி மாணவனின் நிலையை நாங்கள் டீச்சருக்கு சொன்னோம். அதற்கு ஏற்றவாறு அவர்களுக்கு கூடுதல் கவனம் கொடுக்கப்பட்டது. மீசை சார் இவ்விஷயத்தில் மிக மகிழ்ச்சி அடைந்தார். இவ்வாறாக தற்காலிக அமைதி நிலவும் காலத்தில் முழுஆண்டுத் தேர்வும் நெருங்கியது.
(தொடரும்)
