Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

இடம்பெயரும் புள்ளினங்காள்!

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
淡路島
かよふ千鳥の
鳴く声に
幾夜ねざめぬ
須磨の関守

கனா எழுத்துருக்களில்
あはぢしま
かよふちどりの
なくこゑに
いくよねざめぬ
すまのせきもり

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: அரசவைப் புலவர் கனேமசா

காலம்: பிறப்பு தெரியவில்லை. இறப்பு கி.பி. 1112ம் ஆண்டு.

கி.பி. 12ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஜப்பானை ஆண்ட பேரரசர் ஹொரிகவாவின் அரசவையில் புலவராக இருந்ததும் பல்வேறு போட்டிகளில் பாடல் புனைந்து பரிசுகள் வென்றதும் தவிர இவரைப்பற்றி வேறெதுவும் குறிப்புகள் காணப்படவில்லை. ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 7 பாடல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

பாடுபொருள்: பறவைக் கூட்டத்தின் அழகு

பாடலின் பொருள்: இரைதேடிக் கிளம்பும் பறவைகளின் ஒலியைக்கேட்டுத் துயிலெழும் சுமா சுங்கச்சாவடியின் காவலர் பகலில் கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும் கடற்பறவைகள் அவாஜி நீரிணைப்பைக் கடப்பது இந்நள்ளிரவிலும் நிகழ்வதால் எத்தனைமுறை விழித்துப் பார்க்கிறாரோ!!

தலைநகர் கியோத்தோவுக்குத் தென்மேற்கே சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள அவாஜி எனும் தீவின் அழகையும் அது அமைந்திருக்கும் கான்சாய் விரிகுடாவின் அழகையும் அவ்வளைகுடாவின் ஊடே கடற்பறவைகள் பறந்து கடக்கும் அழகையும் கூறும் எளிமையான இப்பாடல் ஜப்பானின் புவியியல் அமைப்பைப் பதிவு செய்வதுடன் கென்ஜியின் கதை புதினத்தில் வரும் சுமா அத்தியாயத்தையும் தொடர்புபடுத்துகிறது. 

புதினத்தின் நாயகன் கென்ஜி, சுமா என்னும் ஊரில் தங்கியிருக்கும்போது கடற்பறவைகள் இரைதேடிக் கிளம்பும் ஒலியைக்கேட்டுத் துயிலெழுவார். இப்பாடலும் புதினமும் சமகாலத்தவை. 12ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இயற்றப்பட்ட பல இலக்கியங்களில் கென்ஜியின் கதையில் வரும் நிகழ்வுகள் தொடர்புபடுத்தப்பட்டு இருக்கின்றன. இன்றளவும் ஜப்பானியர்கள் ஒவ்வொரு தலைமுறையும் படித்து இன்புறும் புதினமாகக் கென்ஜியின் கதை திகழ்கிறது.

அவாஜி தீவின் வரைபடம்

வெண்பா:

திரைகடல் தாண்டல் இயல்பெனக் கொண்டு
தரைதொட லின்றிப் பறந்து – இரைக்கெனக்
கூட்டினை நீங்கிடும் புள்ளின் ஒலியினால்
நீடுதுயில் நீக்கும் விடிவு


முகிலிடை ஒளிக்கசிவு

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
秋風に
たなびく雲の
たえ間より
もれ出づる月の
かげのさやけさ

கனா எழுத்துருக்களில்
あきかぜに
たなびくくもの
たえまより
もれいづるつきの
かげのさやけさ

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: புலவர் அகிசுகே

காலம்: கி.பி 1090-1155.

இப்பாடலின் ஆசிரியர் கி.பி. 11ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த புகழ்பெற்ற புலவர் அகிசுவேவின் மகன். இவரும் மிகவும் புகழ்பெற்றவர். இத்தொடரின் 77வது பாடலை (பிரிவு என்பதே உறவுக்காகத்தான்!) இயற்றிய பேரரசர் சுதொகு கி.பி. 1144ல் ஆணையிட்டதற்கு இணங்க இவர் தொகுத்ததுதான் ஷிக்காஷூ பாடல் தொகுப்பு. 7 ஆண்டுகள் முயன்று 1151ல் நிறைவு செய்தார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 84 பாடல்கள் பல்வேறு தொகுப்புகளில் இடம்பெற்றிருக்கின்றன.

ஜப்பானில் புலவர் பரம்பரை என்னும் கருத்துரு தோன்றக் காரணமானவர்கள் இவரும் இவரது தந்தையாரும். பேரரசர் ஷிராகவாவின் அரண்மனையில் வானளாவிய அதிகாரம் பெற்றிருந்தவர் இவரது தந்தையார் அகிசுவே. அதன் காரணமாகவே பேரரசர் வைத்திருந்த ஓர் ஓவியத்தொகுப்பு இவர் பார்வைக்குத் தென்படுகிறது. அதில் இத்தொடரின் 3வது பாடலை (பீலியன்ன நீள் இரவு) இயற்றிய கவிஞர் ஹிதோமரோவின் ஓவியமும் இருக்கிறது. கி.பி. 7ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இணையற்ற புகழ் பெற்றிருந்தவர். அகிசுவே ஒரு சிறந்த ஓவியரும்கூட என்பதால் அத்தொகுப்பிலிருந்த கவிஞர் ஹிதோமரோவின் ஓவியத்தை வரைந்து படியெடுக்கிறார். அவர் இறக்கும் தருவாயில் அவ்வோவியத்தை அவரது மகன் அகிசுகேவுக்குப் பரிசாக அளிக்கிறார். பின்னர் அகிசுகே தனது மகனுக்கு அளிக்கிறார். இதிலிருந்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஏதாவது நினைவுப்பொருட்களை வழங்கிப் புலவர் பரம்பரையை வரலாற்றில் பதியச்செய்வது தொடங்கியது.

பாடுபொருள்: முகிலுள் மறைந்து வெளிப்படும் நிலவின் அழகு

பாடலின் பொருள்: இலையுதிர்காலக் காற்று வானத்து மேகங்களை அங்குமிங்கும் அலையச் செய்யும்போது அவ்வப்போது நிலவு வெளிப்பட்டுக் கசியவிடும் ஒளி எனது இதயத்துக்குள் நேராக இறங்குகிறது.

நிலவின் அழகை வியக்கும் இன்னோர் எளிய பாடல். பாடலின் முதல் சொல் இவரது பெயரின் முதல்பாதியைக் கொண்டு தொடங்கப்பட்டிருப்பதைப் பல உரையாசிரியர்கள் வியக்கிறார்கள். கி.பி. 16ம் நூற்றாண்டில் இத்தொகுப்புக்கு உரை எழுதிய சாமுராய் வீரர் ஷிமாசு பழமையான சீனமொழிப் பாடல் ஒன்றை மேற்கோள் காட்டி அதற்கு இணையான சிறப்புக் கொண்டதாக இப்பாடல் விளங்குகிறது எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

வெண்பா:

இலையுதிர் காலது வானளாவி ஓங்கி
மலையது மேவியே வந்து – நிலைஇல்
இதயமது சேரும் கலையும் முகில்கள்
இடையில் கசியும் நிலவு

கால் – காற்று

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)

ஜப்பானியப் பழங்குறுநூறு

துள்ளிவரும் வெள்ளலையே! மைக்குழற் செறிவன்ன காதல்
Exit mobile version