Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

ஆகாரசமிதை

This entry is part 23 of 72 in the series நூறு நூல்கள்

நெற்பொரி நிறையப் பெய்து நிழலுமிழ் செம்பொன் மூழிக்
கற்புரி கடவு ளான்பா லவியொடு கலப்ப வைத்து
மூற்பெரி யானை யாகத் தருப்பையான் முடிந்து மூன்று
பொற்புரி வரையும் பொய்தீர் சமிதைக ளிரண்டும் வைத்தார்.

பொருள்: தண்டிலார்த்தமாகக் கொண்டு வந்த மணலயும் தருப்பையும் நிறைந்த சமிதையும் ஆகிய மூன்றினாலும் மிகுதியான மலரணிந்த ஒப்பனையுடைய திருமணத் திண்ணையை அமைத்து; ஒரு மணி அகலிலே ஆவின் நெய்யை வார்த்து; பிரணீத பாத்திரமும் புரோட்சணீபாத்திரமும் – இரண்டு மணி அகலிலே நீரை வார்த்து; ஒரு பொன் அகலிலே அகில் நெய் முதலிய மணம் நிறைந்த தூபத்தைப் (பெய்து); வைக்கவேண்டிய இடங்களிலே வைத்தார்.

திருத்தக்க தேவர் இயற்றிய சீவகசிந்தாமணி

ஹரன் பிரசன்னாவின் மாயப் பெரு நதி நாவலை முன்வைத்து

நான் ஹரன் பிரசன்னாவின் கட்டுரைகளின் ரசிகன். அவரின் சிறுகதைகளை அவ்வப்போது வாசித்து இருக்கிறேன். ஆதிகாலத்து யாஹூ குழுமங்களில் இருந்து அறிமுகமானவராக இருந்தாலும் இன்றளவும் ஃபேஸ்புக்கில் நண்பர் ஆகத் தொடர்பவர். அவரின் பதிவுகளும் விமர்சனங்களும் ரசனைகளும் பரிந்துரைகளும் என்னைக் கவனம் கொள்ளவைக்கும். அவரின் முதல் நாவல் வெளிவந்திருக்கிறது. அமேசான் கிண்டில் நூலாக வாங்கிக் கடகடவென்று வாசித்துவிட்டேன்.

நீங்கள் முதன்முதலாகப் பிரவேசித்தது எங்கே? பேச்சுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக மேடையேறி இருக்கலாம். பிடித்த துணையை வசப்படுத்துவதற்காகக் காதலரைக் கவர நிஜ வாழ்க்கையில் அசல் நாடகம் போட்டிருக்கலாம். நேர்காணலில் பயத்துடன் உளறாமல் இருக்க ஒத்திகை பார்த்த சொற்றொடர்களை ஒப்பித்து இருக்கலாம். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்பைத் திட்டமிட்டு, பயத்தை வெளிக்காட்டாமல், சந்தேகங்களை மனதுக்குள் போட்டுப் புழுங்காமல் போட்டுடைத்து, ஆபத்துகளை நிவர்த்திசெய்து, சமர்த்தராக முடித்து வெற்றிக் கொடிநாட்டி இருக்கலாம். இங்கே ஹரன் பிரசன்னா, தன் நாவலை அவ்வாறு தன் தோற்றத்தை இலக்கியப் பதிவேட்டில் ஆஜர் ஆக்குகிறார்.

முதல் நாவல் ஒரு அகக் கொந்தளிப்பு இல்லையா? எல்லா நாவலுமே அகக் கொந்தளிப்புத்தான். ஒவ்வொரு நாளும் மனைவியுடன் கூடும்போதும் ஏதோ ஒரு கட்டத்தில் ஒரு வெறி வரத்தான் செய்கிறது. ஆனாலும் முதல் நாள் தொடுகையுடன் அதை ஒப்பிடமுடியுமா? முதல் நாவல் அப்படி இல்லையா? முதல் நாவலிலேயே ஒட்டுமொத்தத்தையும் யோசிக்கமுடியுமா? யோசிக்கத்தான் வேண்டுமா? நாவலுக்கு அழகு அகத்தில் இருந்து வரும் சொற்கள் இல்லையா? இங்கே எல்லாமே வெறும் சொற்களா? லே அவுட்டுக்குள் சிக்கி நிற்கும் சொற்களா நாவல்? ராகவனுக்குத் தலை சுற்றியது.

Haran prasanna, ஹரன் பிரசன்னா. மாயப் பெரு நதி (நாவல்) (Tamil Edition). தடம் பதிப்பகம் | Thadam pathippagam. Kindle Edition.

நாவலின் களம், கதை, அதன் கருத்து என்று எண்ணிப் பார்ப்பதற்குமுன் சில சுருக்கமான எண்ணங்கள்:

நாவலில் நேரடித்தன்மை எளிதாகப் புரிகிறது. ராகவன் கீழ்-நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன். பதிப்பகத் துறையில் பல்லாண்டு காலமாகப் பணியாற்றுபவன். நாவல் எழுதுகிறான். அதைச் சொந்தமாக வெளியிடுகிறான். தான் வேலைபார்க்கும் நிறுவனம் மூலம் வெளியிடக் கூச்சமோ தன்னடக்கமோ தடுக்கிறது. அதன்கூட புத்தகக் கண்காட்சியில் நடக்கும் குளறுபடிகளும் வருகின்றன. சற்றே ஊறுகாயாகப் புத்தக எழுத்தாளர்களின் உள்ளடி வேலைகளும் தூவப்படுகிறது. அவனின் குழந்தையும் மனைவியும் ரஜினி படத்தில் த்ரிஷாபோல் எட்டிப் பார்க்கிறார்கள்.

அவளைக் கூர்ந்து பார்த்தான். மூக்கு குத்தி இருக்கிறாள். அதனால்தான் முகத்தில் மாற்றம் வந்திருக்கிறது. தாவணி அணிந்திருக்கிறாள். பெரியவளானதால் உடலில் செழுமை வந்திருக்கிறதா அல்லது தாவணி உடுத்தி இருப்பதால் அப்படித் தெரிகிறதா? மார்புகள் லேசாக மேடாகி இருக்கின்றன. அவற்றின் மேல் இரட்டை ஜடை படுத்திருக்கிறது. தாவணியில் அவளது இடுப்பு கொஞ்சம் தெரிந்தது. அந்த வெண்ணிறம் அவனைப் பித்துக்கொள்ளச் செய்தது. பூப் போட்ட பாவாடை அணிந்திருந்தாள். கால் பாதங்கள் பளிச்சென இருந்தன. மஞ்சள் பூசிக் குளித்திருப்பாள் போல. அவன் இன்னும் கொஞ்சம் நெருங்கி அவளருகில் வந்தாள்.

ஹரன் பிரசன்னாவின் மாயப் பெரு நதி

இதன் முற்பிறவி அசல் நாவலுக்கான சகல சாமுத்ரிகா லட்சணங்களையும் கொண்டிருக்கிறது. அதில் கதாபாத்திரங்களுக்கு அஸ்திவாரம் இருக்கிறது. அவர்களின் காரியங்களுக்குக் காரணம் சொல்லப்பட்டிருக்கிறது. தானே பதிப்பித்த நூல்போல் சுயம்பு உருவாகும் தருணங்கள் கோர்க்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பகுதி இன்னும் விரிவாகத் தத்துவச் சிக்கல்களுடன் வந்திருக்க வேண்டும். பாரத தேசம் முழுக்கப் பயணம் செய்திருக்க வேண்டும். பட்டியல்களைப் படையலாக ஆக்காமல் அந்தப் புத்தகங்களின் உள்ளார்ந்த கிரகிப்புகளைப் பகிர்தலாக ஆக்கியிருக்க வேண்டும்.

முதல் பாகத்தை மின்சார ரயில் பகுதி எனலாம். தெரிந்த விஷயங்கள். அதே குப்பை நாற்றங்கள். பழகிய முகங்கள். இருப்பிடம் வந்தாலும் நாளையும் இதே பயணம் என்னும் எதிர்பார்ப்பில்லாத திக்கில் முடிவு. அடுத்த பகுதி சென்னை முதல் டெல்லி செல்லும் ராஜதானி வண்டி. அவசரகதியில் எக்ஸ்பிரெஸ் ரயிலாகச் சேரிடத்தில் முடிந்தாலும், அந்தப் பயணம் சுவாரசியம் மிக்கது. தெரியாத, புதிய விஷயங்களை உணர்த்துவது. தூங்கி எழுந்தவுடன் கடைசி ஸ்டேஷன் வந்துவிடுவதுபோல் சடாரென்று முடிவுக்கு வருவது மட்டுமே குறை.

மீதம் இருக்கும் குழம்பையும் சாதத்தையும் எண்ணெய்யும் உப்பும் போட்டுப் பிசைந்து உருட்டிக் கொடுக்கச் சொல்லி உண்டால் எத்தனை சந்தோஷமாக இருக்கும் என்று தோன்றியது.

புத்தகக் கண்காட்சியில் சாப்பிடச் செல்கிறான் நாயகன் ராகவன். ஆத்துச் சாப்பாட்டில் திளைக்கிறவன் ராகவன். வெறும் பொரியலிலும் வத்தக் குழம்பிலும் ஜமாய்க்கிற மனைவின் கைப்பக்குவத்தை நினைத்துப் பார்க்கிறான். அதே சமயம் கூடை சோற்றைப்போட்டு அதை அவக்கு அவக்கென்று விழுங்கும் கூட்டத்தைச் சமபந்தியில் பார்க்கிறான். இது நாலே பக்கக் கதையில்கூட நளபாகத்தைப்போடும் இலக்கியக் கர்த்தாவையும், நாலு ஃபாரம் கொடுத்தாலும் கூறியதையே கூறும் அ-புனைவு விற்பனை எழுத்தாளனையும் ஒப்பிட்டதுபோல் அமைந்துள்ளது.

இதுவே பின்பகுதியான இரண்டாம் பாக நாவலில் ஆனந்தனையும் மாதவனையும் உணர்த்த இன்னொரு வழியில் சொல்லப்படுகிறது. ஆனந்தனுக்கு லௌகீக உணவே கொண்டாட்டம். வாசனையை வைத்தே என்ன சமையல் என்பதைக் கண்டுபிடிக்கிறான். அதில் லயிக்கிறான். தத்துவமும் துறவும் எண்ணமாகக்கொண்ட மாதவனுக்கு உணவு என்பது அத்தியாவசியம். ஏதோ கொஞ்சமாய் உண்ண வேண்டும். ருசிக்கும் பசிக்கும் அல்ல. கவளம் கிடைத்த சிந்தைக்காகச் சற்றே உட்கொள்கிறான்.

இந்த நாவலை வாசித்து முடித்தவுடன் சடந்தாங்கோ நாவல் நினைவிற்கு வந்தது. இது கிராஸ்நஹோர்காய் எழுதிய முதல் நாவல். ஏழு மணி நேரத் திரைப்படமாகக் க்ரைடீரியன் சேனல் மூலமாகப் பார்த்தது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு பல விருதுகளைப் பெற்றது. இந்த நாவலுக்கும் இரு பகுதிகள். நேர வர்த்தமானத்திற்கு அப்பாற்பட்ட கதை என்பது தவிர கீழே காணும் பத்தி எனக்கு அந்தப் புத்தகத்தை நினைவூட்டியது. இந்தப் பத்தி நாவலின் முதலிலும் இறுதியிலும் இடம்பெறுகிறது:

He gazed sadly at the threatening sky, at the burned-out remnants of a locust-plagued summer, and suddenly saw on the twig of an acacia, as in a vision, the progress of spring, summer, fall and winter, as if the whole of time were a frivolous interlude in the much greater spaces of eternity, a brilliant conjuring trick to produce something apparently orderly out of chaos, to establish a vantage point from which chance might begin to look like necessity …and he saw himself nailed to the cross of his own cradle and coffin, painfully trying to tear his body away, only, eventually, to deliver himself—utterly naked, without identifying mark, stripped down to essentials—into the care of the people whose duty it was to wash the corpses, people obeying an order snapped out in the dry air against a background loud with torturers and flayers of skin, where he was obliged to regard the human condition without a trace of pity, without a single possibility of anyway back to life, because by then he would know for certain that all his life he had been playing with cheaters who had marked the cards and who would, in the end, strip him even of his last means of defense, of that hope of someday finding his way back home.

An excerpt from the beginning (and end) of László Krasznahorkai’s novel Satantango. English translation by George Szirtes.
Title (ஆங்கிலத்தில்)Maaya Peru Nadhi
Authorஹரன்பிரசன்னா
FormatPaperback
Year Published2020
Pages360
Imprintதடம் பதிப்பகம்

இந்நாவலைப் பற்றி:

இரண்டு காலகட்டங்களுக்குள் விரியும் நாவல். ஒன்று இன்றைய காலகட்டம். இன்னொன்று நூறு ஆண்டுகளுக்கும் முன்பான ஒரு காலகட்டம். பழங்காலத்தில் மாத்வ பிரமாணர்களின் அன்றைய வாழ்க்கையைத் தொட்டுச் செல்லும் நாவல், இன்றைய காலத்தில் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குள் விரிகிறது. இரண்டையும் பிணைக்கும் ஒரு சரடென எப்போதும் கூடவே ஓடிவரும் ஒரு மாயப் பெரு நதி. திருநெல்வேலியில் பிறந்து இளமையைக் கழித்த எந்த ஒருவனுக்கும் தாமிரபரணியே மாயப் பெரு நதி. எங்கே எதன் நிமித்தமாக எப்படி வாழ்ந்தாலும் உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு கனவு நதி.

ஹரன் பிரசன்னாவின் முதல் நாவல் இது. அவரது தீவிரமான மொழி இந்நாவலுக்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது. எப்போதும் கனவுலகத்துக்குள்ளே சுழன்றபடி இருக்கும் இந்நாவல் ஒரு கனவைப் போலவே நமக்குள் நிகழ்கிறது.

தலைப்பைக் குறித்து

ஆகாரசமிதை: வேள்வி செய்வதற்குக் குறித்துள்ள இடத்தின் தென்கிழக்கிலும் வடகிழக்கிலும் வைக்கப்படும் சுள்ளி (ஓமவிறகின் பெயர்)

தண்டிலத்தை மேற்கே தொடங்கிக் கிழக்கே முடியத் தெற்கில் விளிம்பிலும் நடுவிலும், வடக்கில் விளிம்பிலும் தெற்கே தொடங்கி வடக்கேமுடிய மேற்கே விளிம்பிலும் நடுவிலும், கிழக்கில் விளிம்பிலும் கீறின கீற்றுக்கள். தீயை எழுப்புவதற்கு முன்பே கீறுகின்றவற்றை ஈண்டுக் கூறினாரென்றுணர்க. முதன்மூன்று கீறிக் குறுக்கு மூன்று கீறுதல் தோன்ற முன்றென்றொழியாது பின்னரும் பொலிவு பெறப் புரிந்தவரை என்றார். பொய்தீர் சமிதைகள் இரணடாவன : தென்கீழைக் கோடியிலும் வடகீறைக் கோடியிலும் வைக்கும் ஆகார சமிதைகள் இரண்டும்.

நூறு நூல்கள்

இமையம் எழுதிய ‘எங் கதெ’ நாவல் பற்றி உயர்ந்த உள்ளம்
Exit mobile version