Site icon சொல்வனம் | இதழ் 379 | 22 நவ 2026

விக்ட்ரோலா

This entry is part 13 of 13 in the series காப்பிரைட் கதைகள்

1910, நியூயார்க் நகரம் மாலைக் குளிரில் இருந்தது.

கணப்பு அடுப்பில் சுள்ளிகள் மெல்லிய ஓசையுடன் வெடிக்கும்போதெல்லாம் சுவற்றில் அறைவாசிகளின் நிழல்கள் தோன்றி மறைந்தன. விருந்துக்கு வந்திருந்தவர்கள் உணவருந்தி முடித்து தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். அறையெங்கும் பேச்சொலி நிறைந்திருந்தது.

அறையின் மூலையில் இருந்த ஒரு மேஜை மீது ஒரு மரப்பெட்டி இருந்தது. அதற்கு ஒரு கதவும் இருந்தது, அந்தக் கதவு மூடப்பட்டிருந்தது. பெட்டியின் மூலைகளில்  பித்தளைப் பூண்கள் பொருத்தப்பட்டிருந்தன. பெட்டியின் முகப்பில் “விக்ட்ரோலா” என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.

அந்த இல்லத்தரசி விருந்தினர்களிடம் “நீங்கள் இதைக் கேட்க வேண்டும்” என்று சொல்லியபடி அந்த மரப்பெட்டியை நோக்கி நடந்தாள். “இது சென்ற வாரம்தான் வெளி வந்தது” என்றபடி அருகிலிருந்த இசைத்தட்டு அலமாரியின் கதவைத் திறந்து ஒரு இசைத்தட்டை எடுத்தாள். அதன் மீது “ரெட் ஸீல்” என்று எழுதப்பட்டு இருந்தது. விருந்தினர் அதனை அறிவார்கள். ‘ரெட் ஸீல்’ இசைத்தட்டுக்கள் விலையுயர்ந்தவை.  

 “கரூஸோவின் புதிய பாடல்” என்றாள் அந்தப் பெண்.

அவள் மரப்பெட்டியின் மேல் மூடியைத் திறந்து இசைத்தட்டைப் பொருத்தி, கைப்பிடியைச் சுழற்றி, ஊசி முனையைத் தட்டின் மேல் வைத்தாள். சில ‘க்ரீச்’ ஒலியும் ‘உஸ்’ என்ற ஓசையும் கலந்து சில வினாடிகள் ஒலித்தபின், ஆபரா கலைஞன் கரூஸோவின் ஓங்கி ஒலித்த குரல் அறையை நிறைத்தது. 

பாடகன் கரூஸோ அந்த அறையில் இருந்து பாடுவதாகவே தோன்றியது அவர்களுக்கு. அந்தக் குரல் வெளிப்படுத்திய ஏக்கமும், மேல் ஸ்தாயியில் வெளிப்படுத்திய உணர்வும், இத்தாலிய மொழி அறியாத அமெரிக்க விருந்தினர்களின் மனங்களையும்  தொட்டது. 

தனது தேநீர் கோப்பையை சத்தம் எழாதவாறு மேஜையில் வைத்தாள் ஒரு பெண். சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக்கொண்டார் ஒரு முதியவர். கணப்பு அடுப்பின் சுள்ளிகள் இப்போது நன்றாக வெடித்துக் கொண்டிருந்தன. ஆனால் அந்த ஒலியை யாரும் கேட்கவில்லை. கரூஸோவின் குரல் அவர்களை மூழ்கடித்திருந்தது. 

மூன்று நிமிடங்கள். யாரும் அசையவில்லை.

பாடல் முடிந்த பின் மெல்லிய பேச்சுக் குரல் அறையில் பரவ சில வினாடிகள் ஆனது.

வந்திருந்தவர்களில் பலரும் அந்த விக்ட்ரோலா பெட்டி ஒன்றை தங்களுக்கென்று வாங்கிக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருந்தனர். விக்ட்ரோலா வெறும் கிராமஃபோன் அல்ல. கிராமபோனின் ஒலிபெருக்கிக் குழாய் இப்போது அடக்கமாக மூடிய கதவுகளின் பின் இருந்தது. அது ஒரு அறைக்கலன். பாடகன் கரூஸோவிற்கு திருமணப் பரிசாக கொடுக்கப்படும் அளவு மதிப்பு வாய்ந்த அறைக்கலன்.

Enrico Caruso with a customized Victrola given to him as a wedding gift by the Victor Company in 1918 

இசைத்தட்டு 

தாமஸ் எடிஸனின் போனோகிராஃப் ஒலியை மெல்லிய தகரத் தகடு  கொண்ட உருளைகளில் பதிவு செய்தது. அந்தத் தகடுகள் எளிதில் சேதமடைந்தன. அதனால் பாடல் பதிவுகள் இரைச்சல் நிறைந்ததாயின. போனோகிராஃப் எளிதில் சந்தைப்படுத்தப்படக்கூடிய  பொருளாக இருக்கவில்லை. பலரும் அதனை மேம்படுத்த முயற்சி செய்தனர். 

தொலைபேசியைக்  கண்டறிந்தவர் என நாம் அறியும் கிரகாம் பெல், எடிஸனின் போனோகிராஃப்  உருளைகளை ஓரளவு மேம்படுத்தினார்.  அதற்கு கிராஃபோஃபோன் என்று பெயரும் வைத்தார். அது எடிஸனின் போனோகிராஃபைவிட மேம்பட்டிருந்தது.  ஆனால் ஜெர்மானிய அமெரிக்கர்  எமீல் பெர்லினர் உருளைகளுக்குப் பதிலாக, வட்ட வடிவத் தட்டுகளைப் பயன்படுத்தினார். அதற்கு கிராமஃபோன் என்று பெயர் வைத்தார். இந்தத் தட்டுக்கள், எடிஸனின் உருளைகள்  சந்தையில் பெறாத வெற்றியைப் பெற்றன.

ஒலிப்பதிவு செய்ய ஒரு தட்டு. இசையைக் கேட்க மற்றொரு தட்டு. ஒலிப்பதிவு செய்யும் மூலத் தட்டுக்களுக்குக் கண்ணாடி, துத்தநாகம் என்று பல பொருட்களையும் முயற்சி செய்தனர். அதிலிருந்து பிரதி எடுக்கும் தட்டுக்களுக்கு செல்லுலாய்டு, கெட்டியான ரப்பர் என்று பல பொருட்களையும் முயற்சி செய்த பின், ஷெல்லாக் ஒன்றே ஏற்றது என்று கண்டுகொண்டனர். ஷெல்லாக் நமது இந்தியக் காடுகளில் ஒருவகைப் பூச்சிகள் சுரக்கும் அரக்கு. இதனை இந்தியாவிலிருந்து கொண்டு சென்று, அத்துடன் பருத்தி இழைகள் மற்றும் சில கனிமத் துகள்களைக் கலந்து ஒரு கலவையை உருவாக்கி, அதைக் கொண்டு இசைத்தட்டுகளைச் செய்தனர். இந்த ஷெல்லாக் கலவை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. ஷெல்லாக் தட்டுக்கள் மலிவானவை, அதற்கு முன் வழக்கத்தில் இருந்தவற்றைக் காட்டிலும் அதிக நாட்கள் உழைக்கக்கூடியவை, மேம்பட்ட ஒலித்தரம் கொண்டவை. மிக முக்கியமாக, ஒலிப்பதிவு செய்யப்பட்ட மூலத்தட்டு (Master) ஒன்றிலிருந்து பல பிரதிகளை உருவாக்குவது எளிதாக இருந்தது. 

இந்த மூலத்தட்டு (மாஸ்டர் தட்டு)  யார் வசம் இருக்கிறதோ, அவர்கள் மட்டுமே பிரதிகள் எடுக்க முடியும். அவர்களே அந்த “மாஸ்டர்” தட்டின் உரிமையாளர்களாகக் கருதப்பட்டனர். அவர்கள் கையில் இருந்த இந்த உடைமையே பின்னாளில், “மாஸ்டர் ரைட்ஸ்” என்று அழைக்கப்படும் சட்டபூர்வ உரிமையானது. இதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். “என் இனிய பொன் நிலாவே” பாடலின் ஒலிப்பதிவு சரிகம நிறுவனத்திற்கே சொந்தம் என்று, 2025-இல் தொடங்கி 2026-இல் உச்ச நீதிமன்றம் வரை சென்ற வழக்கின் தீர்ப்பு எந்தப் பின்புலத்தில் இருந்து வருகிறது என்று புரிந்து கொள்ள அது அவசியம். 

சரி. இப்போது விக்ட்ரோலாவுக்கு வருவோம். விக்டர் டாக்கிங் மெஷின் கம்பெனி என்ற நிறுவனம் பெர்லினரின் கிராமஃபோனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. அந்த நியூயார்க் விருந்தில் இசைத்த “விக்ட்ரோலா” இப்படித்தான் பிறந்தது. 

பாடல்கள் இல்லாமல் விக்ட்ரோலாவை விற்பனை செய்ய இயலாது என்று புரிந்து கொண்ட விக்டர் நிறுவனம், கரூஸோ போன்ற பிரபலமான பாடகர்களைப் பெருந்தொகை கொடுத்து ஒப்பந்தம் செய்து கொண்டது. இசைத்தட்டுக்களை வெளியிட்டது. நேர்த்தியான விக்ட்ரோலா, ‘ரெட் ஸீல்’ போன்ற விலையுயர்ந்த இசைத் தட்டு ஆகியவை வசதி படைத்தவர்களின் சமூக அடையாளம் ஆனது.

விலை அதிகம் கொண்ட ரெட் ஸீல் இசைத்தட்டுகளை விரும்பி வாங்குபவர்கள் ரசனை மிகுந்தவர்களாகக் கருதப்பட்டனர். விக்டர் நிறுவனம் அமெரிக்க இசைத்தட்டுச் சந்தையைப் பிடித்தது. 


புதிய சவால்கள் 

1902.  இத்தாலியின் மிலான் நகரில், ஒரு ஹோட்டலின் சிறிய அறையில், பெரிய குழாய் கொண்ட கிராமஃபோன் முன் நின்றுகொண்டிருந்தார் கரூஸோ. மேடை நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான ரசிகர்களைப் பரவசப்படுத்தும் அவர், அன்று முதல் முறையாக மேடையேறும் ஒரு கலைஞனின் மனநிலையில் இருந்தார்.

“மேஸ்ட்ரோ! தலையை அசைக்காமல், குழாயை நேருக்கு நேர் பார்த்துப் பாட வேண்டும். உச்ச ஸ்தாயியில் பாடும்போது மட்டும் சற்றுப் பின்னால் நகர வேண்டும்” என்றார் ஒலிப்பதிவுப் பொறியாளர் கய்ஸ்பர்க். 

இது கரூஸோவிற்குப் புதிய சிக்கலாக இருந்தது. முதலில், ரசிகர்கள் இல்லாமல் ஒரு குழாயின் முன் நின்று பாடுவதே அவருக்கு விசித்திரமானதாக இருந்தது. அசைவது, தலையைத் திருப்புவது என்று அனைத்தும் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டி வந்தது. இவையெல்லாம் கூட சமாளிக்கக் கூடியவை. ஆனால் ஒரு பாடலை மூன்று அல்லது நான்கு நிமிடங்களுக்குள் பாடி முடிப்பது ஒரு ஆபரா கலைஞனுக்குப்  பெரும் சவால்.

பாடல்களை வெட்டிச் சுருக்க வேண்டும். பலமுறை பயிற்சி செய்யவேண்டும். கரூஸோ செய்யும் ஒரு சிறு பிழையும், அவர் புகழுக்குக் களங்கமாக, வரலாற்றில் நிரந்தரமாகப் பதிவு செய்யப்படும். கரூஸோவின் சுர நிர்ணயமும் நேர்த்தியும் இந்த ஒலிப்பதிவுகளைச் சமாளிக்க அவருக்கு உதவியது.

அன்று கரூஸோவின் குரலைப்  பதிவு செய்த கய்ஸ்பர்க், இங்கிலாந்தின் “கிராமஃபோன் அண்ட் டைப்ரைட்டர் கம்பெனி”யின் பொறியாளர். இதே ஆண்டு, கல்கத்தாவின் மற்றொரு ஹோட்டல் அறையில், இந்தியாவின் முதல் வணிக நோக்க ஒலிப்பதிவுகளை இவரே செய்யப்போகிறார். அதே கம்பெனிக்காக. இந்தக் கம்பெனியின் இந்தியக் கிளையிலிருந்து பிறந்ததே இன்றைய சரிகம இந்தியா லிமிடெட்.

இசைக்கலைஞர்களில் பொதுவில் இரண்டு வகையினர் உண்டு. நேர்த்தியாகப் பாடுபவர்கள் (technical) ஒரு வகையினர், உணர்வுப் பூர்வமாய்ப் பாடுபவர்கள் மற்றொரு வகை. உணர்வுப் பூர்வமாய் பாடும் பல பாடகர்களும், ஒலிப்பதிவின்போது கிராமஃபோன் முன் தடுமாறினர். விலகி நின்றால் குரல் பதிவாகவில்லை. நெருங்கி வந்தால் கிராமஃபோன் அதிர்ந்தது. குழப்பம். மன உளைச்சல். ஒலிப்பதிவின்போது ஏற்படும் இந்தப் புதிய மனப் பதட்டத்திற்கு ‘போனோகிராஃப் பதட்டம்’ (Phonograph Fright) என்று பெயர் கூட வைத்தனர். 



புதிய கலாச்சாரம் 

இசை நிகழ்ச்சிகளில், கூட்டத்துடன் சேர்ந்து இசையை ரசித்து வந்த ரசிகன், தனியாக அமர்ந்து போனோகிராஃப் இசையை ரசிக்கத் தொடங்கினான். அடுத்த பத்தாண்டுகளில் இசை வகைகளுக்கு (genre) முக்கியத்துவம் பிறந்தது.  ஒரு இசைத்தட்டை விலை கொடுத்து வாங்குவதன் மூலம், ஒரு குறிப்பிட்ட வகை இசையை கவனமுடன்  ரசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. விளம்பரங்கள் தனிப்பட்ட இசை விருப்பத்தை மையப்படுத்தின. ரசிகர்கள் தங்களை ஆபரா, ப்ளூஸ், ஜாஸ் ரசிகர்களாக வெளிப்படுத்திக் கொண்டனர். 

ஒரு பாடல் மூன்று நிமிடங்கள் என வரையறை உருவானது. இசைத்தட்டின் ஒரு பக்கத்தில் ஏறத்தாழ மூன்று நிமிடங்களே பதிவாகும். அந்த மூன்று நிமிடமே பாடலின் அளவானது. பாடல்கள் சுருக்கப்பட்டன. சில சமயம், இசையே சுருக்கமாக அமைக்கப்பட்டது. உதாரணமாக, புகழ்பெற்ற ரஷ்ய இசைக்கலைஞர் ஈகோர்  ஸ்ட்ரவின்ஸ்கி (Igor Stravinsky) இயற்றிய  Serenade in A   நான்கு அங்கங்கள்  (movements) கொண்டது. ஒவ்வொரு அங்கமும் இசைத்தட்டின் ஒரு பக்கத்தில் அடங்குமாறே இயற்றப்பட்டது.  

இசைத்தட்டுக்கள் பாடல்களைச்  சுருக்கியது மட்டுமல்லாமல், இசைக் கருவிகளையும் தேர்வு செய்தது. எந்தக் கருவி தெளிவாக ஒலிப்பதிவாகுமோ, அந்தக் கருவி மட்டுமே ஸ்டுடியோக்களில் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஜாஸ் கலைஞர்கள், ட்ரம்ஸுக்குப் பதிலாக, மணி மற்றும் மரத்தாலான தாளக்கருவி (cowbells & woodblocks) ஆகியவற்றை பயன்படுத்தினர். டபுள் பாஸ் (அளவில் பெரிய வயலின் போன்ற கருவி)  கைவிடப்பட்டு, டூபா (tuba) பயன்படுத்தப்பட்டது.

க்லெஸ்மர் (Klezmer) என்பது கிழக்கு ஐரோப்பிய யூதர்களின் பாரம்பரிய இசை. இதில் சிம்பலம் (cimbalom) என்ற பாரம்பரிய இசைக்கருவி உண்டு.  இந்தக் கருவி காஷ்மீரின் சந்தூர் போன்று இருக்கும். இது போன்ற பாரம்பரிய இசைக்கருவிகளும் கூட  ஒலிப்பதிவுகளில் கைவிடப்பட்டது.

1948-இல், வைனல் (vinyl) கொண்டு செய்யப்பட்ட, நாற்பத்தைந்து நிமிடங்கள் இசைக்கக் கூடிய எல்பி (LP – Long Playing) தட்டுக்கள் வந்தபோது, அந்த மூன்று நிமிட எல்லை தொழில்நுட்ப ரீதியாக மறைந்தது. ஆனால் பாடல் என்றாலே மூன்று நிமிடம் என்ற அளவு நிலைத்துவிட்டது.

புதிய சந்தை 

தொடக்கத்தில் விக்டர், கொலம்பியா மற்றும் எடிஸன் என மூன்று ரெகார்ட் நிறுவனங்கள் அமெரிக்க இசைத்தட்டுச் சந்தைக்குயைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. எந்தப் பாடகரைப் பதிவு செய்ய வேண்டும், இசைத்தட்டுக்கு என்ன விலை வைக்க வேண்டும் என்பவற்றை அவர்களே முடிவு செய்தனர். கலைஞர்கள் கொடுக்கப்பட்டதைப் பெற்றுக் கொண்டனர். கரூஸோ போன்றவர்கள் விதிவிலக்கு. ஒவ்வொரு கலைஞனும் கரூஸோ போன்று பெருந்தொகை கொடுத்து ஒப்பந்தம் செய்து கொள்ளப்படவில்லை.

பாடலை இயற்றியவர்களுக்கு, அதாவது இசையமைப்பாளர், பாடலாசிரியர் அல்லது அவர்களின் பதிப்பாளர்களுக்கு, நாம் சென்ற அத்தியாயத்தில் பார்த்தபடி, ஒவ்வொரு பிரதிக்கும் இரண்டு சென்ட் மெக்கானிக்கல் ராயல்டி கொடுக்கப்பட்டது. பாடியவர்களுக்கும் இசைத்தவர்களுக்கும் அதுவும் இல்லை. மற்றபடி லாபம் பெற்றவை, இசைத்தட்டுக்களைப் பிரதி எடுக்கும் தொழில்நுட்பத்தைக் கையில் வைத்திருந்த ரெகார்ட் நிறுவனங்களே. 

ஒரு காலத்தில் பாடல்களைத் தயாரித்து வந்த ‘டின் பான் ஆலி’ இப்போது ரெகார்ட்  நிறுவனங்களுடன் ஒத்துழைத்துப் பழகியிருந்தது. 

குட்டென்பெர்கின் அச்சு இயந்திரம் புத்தகங்களுக்கு என்ன செய்ததோ, அதை பாடல்களுக்குச் செய்தன இசைத்தட்டுக்கள்.


His Master’s Voice (1898) by Francis Barraud, amended in 1899 to display a gramophone. Image: Public Domain

நீங்கள் சில இசைத்தட்டுகளில், ஒரு கிராமஃபோன் அருகில் அமர்ந்து அதனை உற்றுக் கேட்கும் நாய் ஒன்றைப் பார்த்திருக்கலாம். இந்த நாயின் பெயர் நிப்பர். இந்த ஓவியத்தை வரைந்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஓவியர் பிரான்சிஸ் பரோ (Francis Barraud). நிப்பர் பிரான்சிஸின் மறைந்த சகோதரர் மார்க் வளர்த்து வந்திருந்த நாய். இறந்து போன தனது எஜமானரின் குரலை ஒலிப்பதிவுக் கருவியில் கேட்டபடி நாய் அமர்ந்திருப்பதாக வரையப்பட்ட அந்த முதல் ஓவியத்தில் இருந்தது கிராமஃபோன் அல்ல, எடிஸன்-பெல் நிறுவனத்தின் உருளை போனோகிராஃப். எனவே அந்த ஓவியத்தை லண்டனில் இருந்த எடிஸன்-பெல் நிறுவனத்திடம் விற்க முயன்றார் பிரான்சிஸ்.

“நாய்கள் போனோகிராஃப் கேட்பதில்லை” என்று மறுத்துவிட்டார் அந்நிறுவனத்தின் மேலாளர். பிறகு இங்கிலாந்தின் கிராமஃபோன் நிறுவனத்தை நடத்தி வந்த வில்லியம் பேரி ஓவனிடம் சென்றார் பிரான்சிஸ். போனோகிராஃபை அழித்துவிட்டு அவர்களது கிராமஃபோனை வரைந்து தந்தால் வாங்கிக் கொள்வதாகச் சொன்னார் ஓவன். நூறு பவுண்டுகள் கைமாறின. அதில் பாதி ஓவியத்திற்கு. மீதிப் பாதி அதன் காப்பிரைட்டுக்கு.

பிரான்சிஸ் தனது ஓவியத்திற்கு வைத்திருந்த  தலைப்பு “ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்”. கிராமஃபோன் நிறுவனம் அதனைத் தனது இசைத்தட்டுகளின் சின்னமாக்கியது. அந்த நாய்ச் சின்னத்தால் அழியாப் புகழ்பெற்றன HMV (His Master’s Voice) இசைத்தட்டுகள். இந்தியாவில் நாம் அறிந்த HMV தான் இன்றைய சரிகம. 

Exit mobile version