- கொலம்பஸ்
- கடல் கடந்த முப்பத்தி மூன்று நாட்கள்
- பிழைகளும் கொலைமுயற்சியும்!
- டியரா டியரா!
- கன்னித்தீவு
- மாயமான நாட்குறிப்பு
- கொலம்பஸும் கொலம்பியாவும்!
- திரும்பும் பயணம்
- இரண்டாம் பயணம் – பயணத்திட்டமிடல்
- புதிய தீவுகளும் பெயரிடலும் படுகொலைகளும்
கானரி தீவுகளில் இருந்து புறப்பாடு
இரண்டாம் பயணத்தில் முதல் நிறுத்தமான கானரி தீவுகளில் இருந்து அக்டோபர் 13, 1493-ல் புறப்பட்ட கொலம்பஸ், தெற்கு நோக்கிப்பயணித்து அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்தார். இங்கிருந்துதான் கரும்பு, ஆடு-மாடுகள், கோதுமை, திராட்சை, எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற பல தாவர-விலங்கு வகைகளையும் அவர் ஏற்றிக் கொண்டார்
நவம்பர் 3, 1493 அன்று டொமினிக்கா என்று அவரால் பெயரிடப்பட்ட தீவை கொலம்பஸ் முதலில் கண்டார். தொடர்ந்து அன்டிகுவா, மொன்செராட், நெவிஸ், செயின்ட் கிட்ஸ், செயின்ட் மார்டின், கன்னித் தீவுகள் (Virgin Islands) உள்ளிட்ட பல தீவுகளை கண்டறிந்து, (இன்று வரை அதே பெயர்களில் அழைக்கப்படும்) அவற்றைப் பெயரிட்டார். *
கடல் பயணங்களில் ஸ்பானிய மாலுமிகளின் உணவுப் பட்டியலில், தண்ணீர், காடி (vinegar), திராட்சை மது, ஆலிவ் எண்ணெய், தேன்/மொலாசஸ், சீஸ், திராட்சை வத்தல், அரிசி, பூண்டு, பாதாம், கடல்-பிஸ்கட் (hardtack), காய்ந்த பயறு வகைகள் (கொண்டைக்கடலை, பருப்பு, பீன்ஸ்), உப்பிட்ட மீன் (sardines, cod), உப்பிட்ட மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி ஆகியவை இருந்தன. இவை மரப் பீப்பாய்களிலும் மட்பாண்டங்களிலும் பாதுகாக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன.
அனைத்துக் கப்பல்களிலும், 24 மணி நேரமென்பது “watch” எனப்படும் நான்கு/இரண்டுமணி நேரப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது ( 2 மணி நேர “dog watch” உட்பட). மணல் கடிகாரம் மூலம் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை மணி அடித்து நேரம் அறிவிக்கப்பட்டது. பாதிப் பணியாளர்கள் காவலில், மீதி ஓய்வில், இப்படி மாறி மாறி வேலை செய்தனர்.
பயணத்தில் அன்றாடப் பிரார்த்தனை என்பது தவறாமல் பின்பற்றப்பட்டது. ஒவ்வொரு நாளும் சூரிய அஸ்தமனத்தில் “சால்வே ரெஜீனா” என்ற *மரியன் பாடலை மாலுமிகள் அனைவரும் இணைந்து பாடுவது வழக்கம். இது கொலம்பஸின் அனைத்துப் பயணங்களிலும் தொடர்ந்த வழக்கமாக இருந்தது. அதிகாலையில் எழுந்திருக்கும்போதும் “வெளிச்சம் அருளப்பட்டதாகுக” என்னும் ஒரு சிறு பாடல் பாடப்பட்டது (“Bendita sea la luz…”).
கானரி தீவுகளிலிருந்து அட்லாண்டிக்கைக் கடந்து, முதலில் டொமினிகாவைக் கண்ட கொலம்பஸ், அதே நாளில் கிழக்கு கரீபியன் தீவுத்தொகுதியான லெஸ்ஸர் ஆண்டில்ஸில் (Lesser Antilles) அடுத்ததாகக் கண்டறிந்தது மேரி கலாந்த் தீவைத்தான். இன்று இது குவாடலூப் (Guadeloupe) தீவுக்கூட்டத்தின் ஒரு பகுதியாக, பிரான்சின் ஒரு கடலோரப் பிரதேசமாக உள்ளது.
கொலம்பஸ் இத்தீவுக்கு தன் கப்பற்படையின் கொடிக்கப்பலான (flagship) “María Galanda” (“கம்பீரமான மரியா”) என்ற கப்பலின் பெயரையே சூட்டினார். இது வழக்கமாக கொலம்பஸ் தன் பயணங்களில் கண்டறியும் இடங்களுக்கு புனிதர்களின் பெயர்களையோ, மத ரீதியான குறிப்புகளையோ சூட்டும் வழக்கத்திற்கு இணையாக, இங்கு அவரது சொந்தக் கப்பலின் பெயரையே நினைவுகூர்ந்தார், இதுவும் மரியாளின் பெயரைத் தாங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கிருந்து கப்பற் படை லெ சேந்த் “Todos los Santos” (அல்லது “Los Santos / Les Saintes) என்று கொலம்பஸால் பெயரிடப்பட்ட ஒரு சிறிய தீவுக் கூட்டத்திற்கு வந்தது (archipelago). கொலம்பஸ் தன் இரண்டாம் பயணத்தில், நவம்பர் 4, 1493 அன்று மேரி-கலாந்தையும் குவாதலூப்பையும் நோக்கிச் செல்லும் வழியில் இந்தச் சிறு தீவுக் கூட்டத்தையும் கண்டார்.
அவர் இதற்கு “Todos los Santos” -அனைத்துப் புனிதர்கள் என்று பெயரிட்டார். ஏனெனில் அந்த தீவுகூட்டதை அவர் கண்டறிந்த நாள் “அனைத்துப் புனிதர்கள் தினத்திற்கு” (All Saints’ Day — நவம்பர் 1) உடனடியாகப் பின்னர் வந்த நாள் என்பதால், அந்த திருநாளின் நினைவாகவே இப்பெயரைச் சூட்டினார்.இது மொத்தம் சுமார் 12.8 சதுர கிமீ பரப்பளவுள்ள மிகச் சிறிய தீவுத்தொகுதி. இந்தத் தீவுகளில் நன்னீர் ஊற்றுகள் இல்லாததால், ஸ்பானியர்கள் இங்கு நிரந்தரமாகக் குடியேறவில்லை.
டொமினிகா தீவிலிருந்து இந்தத்தீவுகளை கடந்து கொலம்பஸின் கடற்படை சென்றடைந்த தீவுக்கு கொலம்பஸ் “சான்தா மரியா தெ குவாடலூப்” (Santa María de Guadalupe). சுருக்கமாக குவாடலூப் என்று பெயரிட்டார். குவாடலூப் தீவை அடைந்தது, அங்கு அவர்கள் ஒரு கிராமத்தினுள் நுழைந்தபோது அங்கிருந்த இனக்குழுவினர் அனைவரும் கொலம்பஸின் மாபெரும் கப்பற்படையைக் கண்டு பயந்து, காட்டுக்குள் ஓடி மறைந்திருந்தனர். காலியாயிருந்த வீடுகளுக்குள் மனித எலும்புகள், மண்டையோடுகள், சமீபத்தில் வெட்டப்பட்ட உடல் உறுப்புகள் ஆகியவற்றைக் கொலம்பஸ் குழுவினர் கண்டனர். எனவே அந்தத்தீவு வாசிகள் நரமாமிசம் உண்பவர்களென அவர்கள் நினைத்தார்கள்..
சில பெண்கள் அங்கே கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர்; தாங்கள் அங்கே பாலியல் அடிமைகளாக இருப்பதாகவும், தங்களை அந்தத் தீவுவாசிகளான “கரீப்” (Carib) எனும் நரமாமிச கூட்டத்தினர் தங்கள் சொந்த ஊர்களிலிருந்து கடத்திவந்ததாகவும் கூறினர். இந்தச் சந்திப்புதான் “கரீப்” என்பவர்கள் நரமாமிசம் உண்பவர்கள் என்ற ஐரோப்பியக் கருத்தை உருவாக்கியது. (ஆங்கில வார்த்தையான “cannibal” என்பதே “Caniba / Carib” என்பதிலிருந்து பிறந்தது.*)
பிற்பாடு நடந்த தொல்லியல் ஆய்வுகள் அங்கு கிடைத்த எலும்புகள் மத சடங்குகளுக்காகவும் இருந்திருக்கலாம், இந்த “நரமாமிசம் உண்பவர்கள்” என்ற வகைப்பாடு மிகைப்படுத்தப்பட்டதாகவோ அல்லது கரீப் மக்களை அடிமைப்படுத்த ஸ்பானியர்கள் பயன்படுத்திய அரசியல் காரணமாகவோ இருந்திருக்கலாம் என்று கூறுகின்றன.
நரமாமிசம் உண்ணப்பட்ட எலும்புகள் என்பதற்கும், இறுதிச் சடங்கிற்காக பாதுகாக்கப்பட்ட எலும்புகள் என்பதற்கும் இடையில் தெளிவான வேறுபாடுகள் உள்ளன. உணவுக்காகச் தயாராக்கப்பட்ட எலும்புகளில் வெட்டுக் குறிகள், நெருப்பில் காயப்பட்ட, எலும்பை உடைத்து மூளையை/எலும்பு மஜ்ஜையை எடுத்த தடயங்கள் இருக்கும்.
ஆனால் மதச் சடங்குகளுக்காக வைக்கப்பட்ட எலும்புகளில் இத்தகைய “உணவுக்கான” தயாரிப்புத் தடயங்கள் இருக்காது: மாறாக, கவனமாகப் பாதுகாக்கப்பட்ட, முழுமையான எலும்புக்கூடுகளாகவோ, குறிப்பிட்ட வகையில் அடுக்கி வைக்கப்பட்டோ காணப்படும். எலும்புகள் ஒரு வீட்டிற்குள் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருப்பது, இறந்த உறவினர்களின் எலும்புகளை வீட்டிலேயே வைத்திருக்கும் கரீபிய தீவுகளில் பல பழங்குடி இனங்களிடையே அறியப்பட்ட ஒரு மத நடைமுறை என்பதால் எலும்புகள் இருந்ததே அவர்கள் நரமாமிசம் உண்பவர்கள் என்பதை காட்டுகிறது என்று சொல்லமுடியாது.
கொலம்பஸ் மொழி தெரியாத பஹாமாஸ் மக்களுடன் பேசி, “கரீப்” என்பவர்கள் ஆபத்தானவர்கள் என்று புரிந்துகொண்டார். இது தவறான மொழிபெயர்ப்பாகவோ, அல்லது அரவாக் மக்கள் தங்கள் எதிரிகளைப் பயமுறுத்தும் நோக்கில் மிகைப்படுத்திச் சொன்ன கதையாகவோ இருந்திருக்கலாம் என்பது வரலாற்றாய்வாளர்களின் கருத்து.
1503-ல் ராணி இஸபெல்லா பூர்வகுடி மக்களைச் சுதந்திரமான, பாதுகாக்கப்பட வேண்டிய குடிமக்களாகக் கருதும் சட்டத்தை இயற்றினார். ஆனால் “நரமாமிசம் உண்பவர்கள்” எனக் கருதப்பட்டவர்களை அடிமையாக்குவது சட்டப்படி அனுமதிக்கப்பட்டது. இதனால், கரீப் மக்களை அடிமைப்படுத்த விரும்பிய காலனியாதிக்க அதிகாரிகளுக்கு “நரமாமிசம் உண்பவர்கள்” என்ற முத்திரை ஒரு வசதியான, சட்டப்பூர்வமான சாக்காக அமைந்தது என்பதையும் வரலாற்றுப் பதிவுகள் குறிப்பிடுகின்றன.
குவாடலூப்பில் இருந்து பயணித்த வழியில் கண்ட தீவுகளுக்கு அவர் வரிசையாக இப்படி பெயர்களிட்டார்.
மாண்ட்செராட்- ஸ்பெயினின் பிரபலமான மலை மடாலயமான மான்ட்செராட்டை (Montserrat) நினைவுகூர்ந்து, அத்தீவின் கரடுமுரடான மலைத் தோற்றம் அதை ஒத்திருந்ததால் அந்தப் பெயரிட்டார்;
ரெடோண்டா – தீவின் வட்டமான வடிவத்தைப் பார்த்தே “வட்டமானது” எனப் பொருள்படும் “Redonda” எனப் பெயரிட்டார்; தூரத்திலிருந்தே பெயர் மட்டும் சூட்டிச் சென்றார்,தீவில் அவரோ குழுவினரோ இறங்கவில்லை.
ஆண்டிகுவா- செவில்லேயில் (Seville) உள்ள “Santa María la Antigua” தேவாலயத்தின் நினைவாகப் பெயரிட்டார். இங்கும் அவர் நேரடியாக இறங்காமல் வடபகுதியிலிருந்து தூரத்தில் அதைக் கண்டு, காற்றுத் திசைக்கு எதிராகப் பயணிக்க விரும்பாமல் பெயர் மட்டும் சூட்டிச் சென்றார்.
நேவிஸ் — தீவின் உச்சியில் எப்போதும் மூடியிருந்த மேகங்களைப் பனி எனத் தவறாக நினைத்து, “பனி” எனப் பொருள்படும் “Nieves” சேர்த்து “Santa María de las Nieves” என கொலம்பஸ் பெயரிட்டார்.
சான் ஜார்ஜ் — புனிதர் ஜார்ஜின் பெயரால் கொலம்பஸ் இந்தத்தீவை அழைத்தார்; இதுவே பின்னாளில் ஆங்கிலேயரால் கொலம்பஸின் சொந்தப் பெயரான கிறிஸ்டோஃபருடன் தொடர்புபடுத்தி “செயின்ட் கிட்ஸ்” எனப் பெயர் மாற்றப்பட்டது.
செயின்ட் யூஸ்டேஷியஸ் — “Santa Anastasia” எனகொலம்பஸால் பெயரிடப்பட்டு, பின்னாளில் டச்சுக்காரர் குடியேறியபோது “செயின்ட் யூஸ்டேஷியஸ்” என மாற்றி, டச்சு உச்சரிப்பில் “Sint Eustatius” ஆனது.
சான் கிறிஸ்டோபல் (சாபா என்று இப்போது அழைக்கப்படுகிறது) — அடுத்த தீவுக்கு கொலம்பஸ்”San Cristóbal” (புனிதர் கிறிஸ்டோபர்) எனப் பெயரிட்டார்.
செயின்ட் மார்ட்டின் — நவம்பர் 11, 1493 அன்று புனிதர் மார்ட்டினின் விழா நாள். அந்தத்தேதியில் தீவைக் கண்டதால், அந்த நாளின் புனிதரின் பெயரையே சூட்டினார். இது கொலம்பஸின் வழக்கமான முறை: மத நாட்காட்டியில் அன்றைய தின புனிதரின் பெயரை அப்படியே சூட்டுவது.
இதற்குப் பிறகே சாண்டா குரூஸ் தீவை வந்தடைந்தார் (Santa Cruz / Saint Croix). அங்குதான் அவரது ஆட்கள் உள்ளூர் பழங்குடி மக்களுடன் மோதலில் ஈடுபட்டனர். இது இந்தப் பயணத்தில் நடந்த முதல் வன்முறை மோதலாக பதிவாகியுள்ளது.
செயின்ட் க்ரோயிக்ஸ் * என்று இப்போது அழைக்காப்டும் “சாந்தா க்ரூஸ் என்று கொலம்பஸினால் அப்போது பெயரிடப்பட்ட தீவில் முதலில் அரவாக் (தைனோ) இனத்தவர் வாழ்ந்து வந்தனர். 1400-களின் தொடக்கத்தில், தென் அமெரிக்காவின் கயானா பகுதியில் இருந்து வந்த கரீப் (Carib) இனத்தவர் அவர்களை விரட்டி அந்தத் தீவை கைப்பற்றிக் கொண்டனர். அரவாக் மக்களை விட போர்க்குணம் மிக்க இனமாக கரீப் இனத்தவர் கருதப்பட்டனர், கொலம்பஸ் வந்தபோது தீவில் இருந்தது இந்த கரீப் இனத்தவர்கள் தான்.
நவம்பர் 14, 1493 அன்று, கொலம்பஸின் கப்பற்படை இந்தத் தீவை அடைந்து, கரையோரத்தில் நங்கூரமிட்டது. பச்சைப்பசேலென்று இருந்த தீவில் விவசாயம் நன்கு நடைபெறுவதாக கொலம்பஸின் குழுவினருக்குத் தோன்றியது. கொலம்பஸ் உடனே கரையில் இறங்கவில்லை மாறாக, தீவுவாசிகளைச் சந்தித்து, அந்த இடத்தை கையகப்படுத்த 25 பேர் கொண்ட ஒரு குழுவை ஒரு சிறு படகில் தீவுக்கிராமத்துக்கு அனுப்பினார்.
கரையில் இறங்கிய ஸ்பானியர்கள், அங்கிருந்த கைவிடப்பட்ட ஒரு கிராமத்தில் நுழைந்தபோது, கரீப் இனத்தவரால் சிறைபிடிக்கப்பட்டிருந்த சில தைனோ பெண்களையும் சிறுவர்களையும் கண்டனர். அவர்களை மீட்டு படகில் ஏற்றிக் கொண்டு கப்பலுக்குத் திரும்பும் வழியில், நான்கு கரீப் ஆண்களும் இரண்டு பெண்களும் அமர்ந்திருந்த ஒரு சிறிய தோணி எதிரில் வந்தது..
17 பெரிய கப்பல்களைக் கண்டதும் தோணியிலிருந்த கரீப் மக்கள் திகைப்படைந்து சிறிது நேரம் அசையாமல் நின்றுவிட்டனர் என்று மருத்துவர்* டியேகோ சான்கா பதிவு செய்துள்ளார். ஸ்பானியப் படகு அவர்களை நோக்கி நெருங்கியபோது, தப்பிக்க முடியாத நிலையில், எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருந்தும் கரீப் மக்கள் தங்கள் வில் அம்புகளை எடுத்து துணிச்சலுடன் எதிர்த்துப் போரிட்டனர்.
இந்த மோதலில் இருபுறமும் சிலர் காயமடைந்தனர், கரீப் தரப்பில் சிலர் கொல்லப்பட்டனர். கொலம்பஸ் குழுவில் ஒருவர் அம்பினால் காயமடைந்து, சில நாட்களுக்குப் பிறகு இறந்தார். மீதமிருந்த கரீப் மக்கள் சிறைபிடிக்கப்பட்டு அடிமைகளாக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் இன்றைய செயின்ட் க்ரோயில் உள்ள சால்ட் ரிவர் பே (Salt River Bay) என்ற இடத்தில் நடந்தது. அமெரிக்காவில் ஐரோப்பியர்களுக்கும் பூர்வகுடி மக்களுக்கும் இடையே நடந்த முதல் எதிர்ப்புச் சம்பவமாக இது வரலாற்றில் குறிக்கப்படுகிறது.
பியூர்ட்டோ ரிக்கோவை நோக்கி
செயின்ட் க்ரோயிக்ஸ் சம்பவத்திற்குப் பிறகு, கொலம்பஸின் கப்பற்படை மேற்கு நோக்கி பயணத்தைத் தொடர்ந்து, கன்னித் தீவுகள் (Virgin Islands) வழியாக இன்று பியூர்ட்டோ ரிக்கோ என்று அழைக்கப்படும் பெரிய தீவை அடைந்தது.
அதாவது கொலம்பஸ் முதலில் சிறு தீவுக்கூட்டங்களைக் கண்டார். இது ஒரு தனித்த, கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள சிறு தீவுகளின் தொகுப்பு. கொலம்பஸ் இதற்கு “Santa Úrsula y las Once Mil Vírgenes” (புனிதர் உர்சுலாவும் பதினொராயிரம் கன்னியரும்) என்று ஒரு கிறிஸ்தவக் கட்டுக்கதையிலிருந்து பெயரிட்டார். இன்று இது அமெரிக்க கன்னித் தீவுகள் மற்றும் பிரிட்டிஷ் கன்னித் தீவுகள் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கன்னித் தீவுகளைக் கடந்து சென்று, பின்னர் பெரிய தீவை அடைந்தார், அதற்கு “சான் ஜுவான் பாட்டிஸ்டா” எனப் பெயரிட்டார், அதுவே இன்று “பியூர்ட்டோ ரிக்கோ” என அழைக்கப்படுகிறது.
கொலம்பஸ் இந்தத் தீவில் நீண்ட நேரம் தங்காமல், முதல் பயணத்தில் தான் விட்டுச் சென்ற குடியேறிகளைச் சந்திக்கும் ஆவலுடன் மேலும் மேற்கு நோக்கி ஹிஸ்பானியோலாவை நோக்கிச் சென்றார்.
லா நவிடாட் கோட்டையின் அழிவு
பியூர்ட்டோ ரிக்கோ வழியாக ஹிஸ்பானியோலா தீவை அடைந்த கொலம்பஸ், முதல் பயணத்தில் தான் விட்டுச் சென்ற சுமார் 40 ஸ்பானியக் குடியேறிகளைச் சந்திக்க நினைத்தார். ஆனால், கப்பற்படை நவம்பர் 22, 1493 அன்று ஹிஸ்பானியோலா அடைந்தபோது, லா நவிடாட் கோட்டை முற்றிலும் அழிக்கப்பட்டிருந்தது.
முதல் பயணத்தில், 1492 கிறிஸ்துமஸ் தினத்தன்று சாண்டா மரியா கப்பல் ஹிஸ்பானியோலா வடகரையில் மோதி சேதமடைந்ததும், உள்ளூர்த் தலைவர் குவாகனகாரி இதற்கு உதவி செய்து, தீவில் தங்கம் ஏராளமாக இருப்பதாக கொலம்பஸிடம் தெரிவித்ததால், கொலம்பஸ், சேதமடைந்த கப்பலின் மரக்கட்டைகளைக் கொண்டு ஒரு சிறிய கோட்டையைக் கட்ட முடிவு செய்ததையும், கிறிஸ்துமஸ் தினத்தன்று கரையிறங்கியதால், அந்த இடத்திற்கு “லா நவிடாட்” கிறிஸ்துமஸ் துறைமுகம் என்னும் பொருளில் பெயரிட்டதையுமெல்லாம் நாம் முன்பே பார்த்திருந்தோம்.
இந்தக் கோட்டையை பாதுகாக்க டியேகோ டி அரானா,(கடற்படைத் தலைமை போலீஸ் அதிகாரி) பெட்ரோ குட்டியேரெஸ்,(அரண்மனையின் பணியாளர் தலைவர்), ரோட்ரிகோ டி எஸ்கோபெடோ (கப்பற்படையின் ஆவணப் பதிவாளர்/நோட்டரி) ஆகியோரின் தலைமையில் 39 பேரை கொலம்பஸ் விட்டுச் சென்றார். பூர்வகுடி மக்களை மதித்து நடக்குமாறும், சண்டைக்குச் செல்லாமல் இருக்குமாறும் கடுமையாக அறிவுறுத்தினார். ஆனால் கொலம்பஸ் சென்ற பின்னர் இவர்களுக்கிடையே யார் அதிகாரம் செலுத்துவது என்பதில் உடன்பாடு இல்லாமல் அதிகாரப் போட்டி ஏற்பட்டது.
கொலம்பஸ் புறப்பட்டவுடன், அவரது அறிவுரைகள் அனைத்தும் மறக்கப்பட்டன. கொலம்பஸின் ஒழுங்கு நிறைந்த அன்றாடக் கடமைகளிலிருந்து விலகி, கோட்டையில் இருந்த ஆண்கள் பூர்வகுடி மக்களை மோசமாகவும் கடுமையாகவும் நடத்தினர். பூர்வகுடிப் பெண்களை பலவந்தமாக அபகரித்தல், தங்கத்திற்காக அச்சுறுத்துதல் ஆகியவையும் நடந்தன. ஸ்பானியர்களுக்கு இடையேயும் பிரிவினைகள் ஏற்பட்டு, சிலர் காட்டுக்குள் தனியாகச் சென்று வாழத் தொடங்கினர். ஒரு குழு தங்கச் சுரங்கங்களைத் தேடி தலைவர்களிடம் இருந்து பிரிந்து சென்றது.
ஸ்பானியர்கள் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்தளவு பெண்களையும் தங்கத்தையும் கைப்பற்ற போட்டியிட்டனர். உள்ளூர் தலைவர் குவாகனகாரியின் மனைவியரையும் கூட ஸ்பானியர் அபகரித்துக் கொண்டதாக பதிவுகள் கூறுகின்றன. இது குவாகனகாரிக்கு அவமானமாக இருந்தாலும், அவர் பலவீனமானவராக இருந்ததால் ஸ்பானியரிடம் சமரசம் செய்துகொள்ளவே முயன்றார்.
மோதலின் தொடக்கம்
அந்தத்தீவின் மத்தியப் பகுதியான மகுவானா-வின் சக்திவாய்ந்த தலைவரான கவோனபோ, ஸ்பானியரின் கொடுமைகளால் கோபமடைந்திருந்தார்.
குட்டியேரெஸும் எஸ்கோபெடோவும், தாங்கள் அபகரித்த பெண்களுடன், இன்னும் ஒன்பது ஸ்பானியர்களைச் சேர்த்துக் கொண்டு, தங்கச் சுரங்கங்கள் இருக்கும் இடத்தைத் தேடி கோட்டையை விட்டு கிளம்பினர். இது கொலம்பஸின் கட்டளையை மீறி, கோட்டையின் பாதுகாப்பையும் கைவிட்டுச் செய்த செயலாக இருந்தது. அதிலும் குறிப்பாக “சிபாவோ” (Cibao) எனப்படும் தங்கம் கிடைக்கும் மலைப்பகுதிக்குள் நுழைந்தனர். இப்பகுதி கவானபோவின் மகுவானா என்ற தலைமைப் பிரதேசத்தில் அமைந்திருந்தது. இந்த ஸ்பானியக் குழுவினர் கவானபோவின் பிரதேசத்திற்குள் அனுமதியின்றி நுழைந்ததோடு, உள்ளூர் பெண்களையும் தாக்கினர். இதனால் கோபமுற்ற கவானபோ, முதலில் இந்தத் தங்கம் தேடிச் சென்ற சிறு குழுவினரைக் கொன்றார்.
அதன் பிறகு, அவர் நேரடியாக ஒரு பெரிய படையுடன் மலைகள் வழியாக இரவோடிரவாக லா நவிடாட்டை நோக்கி அணிவகுத்துச் சென்றார். அவரது மனைவி அனகவோனா, பூர்வகுடி மக்கள் மீதான ஸ்பானிய கொடுமையால் கொதித்தெழுந்து இந்தத் தாக்குதலுக்கு அவரைத் தூண்டியதாகவும் கூறப்படுகிறது.
தாக்குதலும் அழிவும்
இரவில் தூங்கிக் கொண்டிருந்த அரானா உள்ளிட்ட ஸ்பானியர்களை கவோனபோவின் படை திடீரெனத் தாக்கியது. 11 பேர் உறக்கத்திலேயே வெட்டி வீழ்த்தப்பட்டனர் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதால், சிலர் கடலில் குதித்து மூழ்கி இறந்தனர், சிலர் கரையிலேயே கொல்லப்பட்டனர். குவாகனகாரியும் அவரது ஆட்களும் விருந்தினர்களைக் காக்க முயன்றும் தோற்றுப்போனார்கள். இறுதியில் 39 பேரில் ஒருவர் கூட உயிருடன் மீளவில்லை.
உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றிய முழு விவரம் இன்றும் தெளிவாகத் தெரியவில்லை. ஏனெனில் இது முழுக்க முழுக்க பூர்வகுடி மக்களின் வாக்குமூலங்கள் மற்றும் ஸ்பானிய பதிவுகள் வழியாகவே நமக்குக் கிடைத்துள்ளது, குறிப்பாக குவாகனகாரி தயக்கத்துடன் மட்டுமே தகவல் தந்தார் என்று பதிவுகள் தெரிவிக்கின்றன.
நவம்பர் 22, 1493 அன்று ஹிஸ்பானியோலாவின் வடகரையை நெருங்கிய கொலம்பஸின் கப்பற்படை, மோன்தே கிறிஸ்தி என்ற மலையை அடையாளம் கண்டு, அங்கு இரண்டு நாட்கள் நங்கூரமிட்டது. கரையில் இறங்கிய குழு ஆற்றங்கரையில் இரண்டு மனித உடல்களைக் கண்டது, உடல்கள் மிகவும் அழுகிப்போயிருந்ததால் அவை உள்ளூர் மக்களா ஸ்பானியரா என்று கூட அடையாளம் காண முடியவில்லை. அவற்றில் ஒரு உடலின் கழுத்தில் ஸ்பானிய புல்லினால் ஆன கயிறு ஒன்று முடிச்சு போட்டு கட்டப்பட்டிருந்தது. மறுநாள் இன்னும் இரண்டு பிணங்கள் கிடைத்தன, அதிலொரு உடலுக்கு தாடி இருந்ததால், அது ஒரு ஐரோப்பியரின் உடல் என்பது தெளிவாகத் தெரிந்தது.
உடல்களில் வன்முறையின் அடையாளங்களும் காணப்பட்டதால் ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று மருத்துவர் சான்கா சந்தேகப்பட்டார்.
நவம்பர் 27 அன்று லா நவிடாட் துறைமுகத்தை நெருங்கிய 17 கப்பல்களும், அன்று இரவு உள்ளே நுழையாமல் வெளியே நங்கூரமிட்டு காத்திருந்தன. கரையில் எந்த சமையல் நெருப்போ, மனித நடமாட்டமோ தெரியவில்லை. இரண்டு பீரங்கிகளை சுட்டு தங்கள் வருகையை அறிவித்தும், எந்தப் பதிலும் வரவில்லை. கப்பலில் இருந்தவர்கள் மனச்சோர்வுடன் மிக மோசமான எதையோ எதிர்பார்த்தனர்.
படுகொலையின் உண்மைகள், கொலம்பஸின் உடல்நலக்குறைவு அவரைப்பற்றி ஸ்பெயினுக்கு தெரிய வந்த எதிர்மறையான செய்திகள், கொலம்பஸை விசாரிக்க மற்றுமோர் அதிகாரி அங்கே அனுப்பப்பட்டது, முதல் பயணத்துக்கு முற்றிலும் எதிராக கொலம்பஸ் நாடு திரும்பியது ஆகியவற்றை அடுத்த அத்தியாயத்தில் பார்ககலாம்…
தொடரும்…….
*கொலம்பஸ் தனது இரண்டாம் பயணத்தில் கண்டுபிடித்துப் பெயரிட்ட தீவுகள் — வரிசையாக:
I. நவம்பர் 1493 — Lesser Antilles தொடர்-டொமினிகா முதல் பியூர்ட்டோ ரிக்கோ வரை — 15 தீவுகள்
- டொமினிகா (Dominica) — நவம்பர் 3, 1493
பெயர்: Dominica - மேரி-கலாந்த் (Marie-Galante) — நவம்பர் 3, 1493
பெயர்: Santa María la Galante - லெ சேந்த் (Les Saintes) — நவம்பர் 4, 1493
பெயர்: Todos los Santos - குவாதலூப் (Guadeloupe) — நவம்பர் 4–10, 1493
பெயர்: Santa María de Guadalupe - மாண்ட்செராட் (Montserrat) — நவம்பர் 10, 1493
பெயர்: Santa María de Montserrate - ஆண்டிகுவா (Antigua) — நவம்பர் 10–11, 1493
பெயர்: Santa María la Antigua - ரெடோண்டா (Redonda) — நவம்பர் 11, 1493
பெயர்: Santa María la Redonda - செயிண்ட் கிட்ஸ் (Saint Kitts) — நவம்பர் 11, 1493
பெயர்: San Jorge / San Cristóbal - செயிண்ட் மார்ட்டின் (Saint Martin) — நவம்பர் 11, 1493
பெயர்: San Martín - சின்ட் யூஸ்டேஷியஸ் (Sint Eustatius) — நவம்பர் 11–13, 1493
பெயர்: Santa Anastasia
- சாபா (Saba) — நவம்பர் 13, 1493
பெயர்: San Cristóbal - நேவிஸ் (Nevis) — நவம்பர் 13, 1493
பெயர்: Santa María de las Nieves - சாந்தா க்ரூஸ் / செயிண்ட் க்ரோயிக்ஸ் (Saint Croix) — நவம்பர் 1493
பெயர்: Santa Cruz
- கன்னித் தீவுகள் (Virgin Islands) — நவம்பர் 14, 1493-க்குப் பின்
பெயர்: Santa Úrsula y las Once Mil Vírgenes - பியூர்ட்டோ ரிக்கோ (Puerto Rico) — நவம்பர் 19, 1493
பெயர்: San Juan Bautista
II. மே–ஜூன் 1494 — கியூபா மற்றும் ஜமைக்கா ஆய்வுப் பயணம்
- ஜமைக்கா (Jamaica) — மே 3, 1494
இன்றைய St. Ann’s Bay பகுதியில் இறங்கினார்.
பெயர்: Santa Gloria; பின்னர் Santiago என்ற பெயரும் பயன்பாட்டில் இருந்தது. - எவாஞ்சலிஸ்டா (Evangelista) — மே–ஜூன் 1494
கியூபாவின் தெற்குக் கரையோர ஆய்வின்போது கண்டறிந்த சிறு தீவு.
பின்னாளில் இது Isla de la Juventud (Isle of Youth) என அடையாளப்படுத்தப்பட்டது.
*மரியன் (Marian) என்றால் இயேசுவின் தாயாரான மேரி (Virgin Mary, கன்னி மரியாள்) தொடர்பான என்று பொருள். கத்தோலிக்க திருச்சபையில் மரியாளைப் போற்றி, அவரைக் குறித்து பாடப்படும் பாடல்கள், பிரார்த்தனைகள், விழாக்கள், சிலைகள் என அனைத்தையும் “Marian” (மரியன்) எனக் குறிப்பிடுவார்கள். எடுத்துக்காட்டாக “Marian hymn” என்றால் மரியாளைப் புகழும் பாடல் என்று பொருள்
*Cannibal என்ற ஆங்கில வார்த்தையின் மூலம் “Caniba” என்பதே. இது கொலம்பஸ் தன் பயண நாட்குறிப்புகளில் கரீபியன் தீவுகளில் வாழ்ந்த “Carib” (அல்லது “Caribe”) இன மக்களைக் குறிக்கப் பயன்படுத்திய பெயர். “Carib” என்பதன் ஸ்பானிஷ்/அரவாக் உச்சரிப்பு மாற்றமே “Caniba” ஆனது (n மற்றும் r ஒலிகள் பல அரவாக்-கரீப் மொழிகளில் மாறிமாறி வரக்கூடியவை).
கொலம்பஸும் பிற ஐரோப்பியப் பயணிகளும், இந்த “Caniba” இனத்தவர் மனித மாமிசம் உண்பதாகக் (பெரும்பாலும் மிகைப்படுத்தப்பட்ட அல்லது தவறான) அறிக்கை அளித்தனர். இதனால் “Caniba” என்ற பெயர் படிப்படியாக “cannibal” என்ற பொதுப் பெயர்ச்சொல்லாக (மனித மாமிசம் உண்பவர் என்ற பொருளில்) மாறியது, ஸ்பானிஷ் மொழி வழியாக ஆங்கிலத்திற்கும் பிற ஐரோப்பிய மொழிகளுக்கும் சென்றது.
சுவாரசியமான தொடர்பு: “Caribbean” (கரீபியன் கடல்/பகுதி) என்ற பெயரும் இதே “Carib” இனப்பெயரிலிருந்தே வந்தது — எனவே ஒரே இனப்பெயரிலிருந்து இரு வெவ்வேறு வார்த்தைகள் (ஒன்று இடப்பெயராக, மற்றொன்று “மனிதமாமிசம் உண்பவர்” என்ற பொருளில்) உருவானது.
*கொலம்பஸ் இந்தத் தீவைக் கண்டபோது வைத்த ஸ்பானியப் பெயரான சாந்தா க்ரூஸ் என்பதின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு செயிண்ட் க்ரோய் (St. Croix). “Croix” என்றால் பிரெஞ்சில் “சிலுவை” என்று பொருள் (ஸ்பானிய “Cruz”க்கு இணையானது). 17ம் நூற்றாண்டில் பிரெஞ்சுக்காரர்கள் இந்தத் தீவைக் கைப்பற்றி க் காலனியாக்கியபோது, ஸ்பானியப் பெயரை நேரடியாக பிரெஞ்சில் மொழிபெயர்த்து “Sainte Croix” என்று அழைத்தனர். பின்னர் இந்தப்பெயர் ஆங்கிலமயமாக்கப்பட்டு “St. Croix” ஆனது.
