- அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம்
- செயற்பாலது ஓரும் அறன்
- நுண்பொருள் காண்பது அறிவு
- வகையறச் சூழ்ந்தெழுதல்
- தூய்மணி சிந்திடும் தோய்ந்த நெருப்பு
- ஒருமையுள் ஆமைபோல்
- நெஞ்சம் நிமலமாய் நிலைபெறின்…
- எழுதாக்கிளவியும், ஏனைய நூற்களும்
- கர்மத்தின் வகையறிதல்
- செயல் என்னும் நிவேதனம்
- ஒன்றே நினைந்திருக்க உள்ளம் கனியும்
- ஞானம், ஞேயம், ஞானகம்யம்
- சத்யம், ஞானம், அனந்தம் பிரம்ம
- ஆனந்தம் பிரம்மனோ வித்வான்
- சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
- கீதா முகூர்த்தம்
- நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
- புத்தியில் நிலைத்தவன்
- இறை உறையும் இடம்
- மேலே வேருள்ள அஸ்வத்தம்
தைத்திரீய உபநிஷத்தில் வரும் சத்யம்-ஞானம்-அனந்தம் என்ற இந்த மூன்று சொற்களும் ஆத்மாவின் தனித்தனி குணங்கள் அல்ல; அவை மூன்றும் ஆத்மாவைக் குறிப்பதற்கான இலக்கணங்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும். பிரம்மம் சத்யம் (இருப்பு) என்று மட்டும் கூறினால், அது ஒரு உணர்வற்ற ஜடப்பொருளாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் வரும். எனவே அது ஞானம் (அறிவு அல்லது உணர்வு) என்று விளக்கப்படுகிறது. அது ஞானம் என்று மட்டும் கூறினால், ஒருவேளை அது நம் மனதிற்குள் தோன்றி மறையும் ‘தற்காலிக அறிவு’ போன்றதோ என்ற எண்ணம் வரும். எனவே, அந்த அறிவு எல்லையற்றது, எக்காலத்திலும் மாறாதது என்று உணர்த்த அனந்தம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இருப்பது ஒரே ஒரு சைதன்யம்தான் என்று நிலை நாட்டிவிடும்போது, அது எல்லைகளற்றது, வரம்பற்றது, அலகிலி என்பதும் நிலை நாட்டப்பட்டு விடுகிறது.
சத்-சித்-ஆனந்தம் என்ற வரையறையும் ஆத்மாவுக்குப் பொருந்தும் என்று பார்த்தோம். சத் என்பது சத்யம் என்பதையும், சித் என்பது சைதன்ய அம்சமான ஞானம் என்ற சொல்லையும் குறிக்கிறது. அதே போல் ஆனந்தம் என்ற சொல் அனந்தம் என்ற சொல்லையே குறிக்கிறது. ஆனந்தம் என்ற சொல்லை நாம் இதுவரை மகிழ்ச்சி, இன்பம் என்ற பொருளில் புரிந்து வைத்துள்ளோம். ஆனால் ஆனந்தம் என்பது லௌகீக உலகில் நாம் அனுபவிக்கும் ‘மகிழ்ச்சி’ அல்லது இன்பம் அல்ல. மனதில் ஏற்படும் மகிழ்ச்சி, சந்தோஷம், பூரிப்பு போன்றவை அனைத்தும் தற்காலிகமான உணர்ச்சிகள். அவை வந்து போகக்கூடியவை. அவற்றுக்கு விருத்தி ரூப ஆனந்தம் என்று பெயர். ஆனால், ஆத்மாவின் இயல்பான ஆனந்தம் என்பது மனதின் ஒரு குறிப்பிட்ட நிலை அல்ல; ஆனந்தம் என்பது ஆத்மாவின் உண்மையான தன்மை.
ஆனால் ஆனந்தம் என்ற சொல்லின் பொருள் எப்படி எல்லைகளற்றது என்ற பொருள் தரும்? அனந்தம் என்ற சொல்லுக்கு இணையாகும்? என்ற கேள்வி எழலாம். வேதாந்தத்தில் ஆனந்தம் என்பதற்கு இரண்டு முக்கிய அர்த்தங்கள் உண்டு. ஒன்று பூர்ணத்துவம், அல்லது நிறைவு. மற்றொன்று எல்லையற்றது அல்லது அனந்தத்துவம்.
ஒரு உதாரணத்தின் மூலம் இதைப் புரிந்து கொள்ள முயலலாம். உங்களுக்குப் பிடித்தமான ஒரு பொருளை (உதாரணமாக ஒரு இனிப்பு அல்லது ஒரு கார்) நீங்கள் அடையும்போது உங்களுக்குள் ஒரு மகிழ்ச்சி உண்டாகிறது அல்லவா? அந்த மகிழ்ச்சி உங்களுக்குள் இருந்து வருகிறதா? அல்லது அந்தப் பொருளுக்குள் இருந்து வருகிறதா? நீங்கள் ஆசைப்பட்ட பொருளை அடையும்வரை உங்கள் மனம் “அது எனக்கு வேண்டும்” என்றும், “அது என்னிடம் இல்லையே” என்ற குறையினாலும், ஏக்கத்தினாலும் சலனப்பட்டுக் கொண்டே இருக்கும். எப்போது அந்தப் பொருள் உங்கள் கைக்குக் கிடைத்ததோ, அந்த வினாடியில் உங்களுடைய மனதுக்குள் இருந்த ஆசை என்னும் உணர்வு அடங்குகிறது. மனம் முற்றிலும் அமைதியாகி சலனமற்ற நிலையில் இருக்கின்றது. அந்தச் சலனமற்ற, அமைதியான மனக்கண்ணாடியில், உங்களுடைய ஆத்மாவின் உண்மையான தன்மையான ஆனந்த சொரூபம் அப்படியே பிரதிபலிக்கிறது. இந்த ஆனந்தத்தைத்தான் நீங்கள் தற்காலிகமாகவேனும் அனுபவிக்கிறீர்கள். இந்த ஆனந்தம் அந்தப் பொருளை அடைந்ததால்தான் வந்தது என்ற முடிவுக்கு வருகிறீர்கள். ஆனால் எந்த ஒரு பொருளை அடைவதாலும் நமக்கு மகிழ்ச்சி ஏற்படுவதில்லை. அந்தப் பொருளை அடைந்த கணத்தில், “இனி என்னை நிறைப்பதற்கு எந்தப் பொருளும் தேவையில்லை” என்று உங்கள் மனம் உணர்கிறது. இது தற்காலிகமான நிலைதான். ஆனால் புறப்பொருள்கள் எதிலும் மனம் ஈடுபடாமலிருக்கும் இந்தச் சில கணங்களில்தான் நாம் ஆத்மாவின் உண்மையான ஆனந்த நிலையை அனுபவிக்கிறோம்.
ஆத்மாவின் ஆனந்தம் என்னும் இயல்பை இன்னொரு விதமாகவும் விளக்கலாம். “த்விதீயாத்வை பயம் பவதி” என்று உபநிஷத் கூறுகிறது. இரண்டாவதாக ஒரு பொருள் இருக்கும்போதுதான் பயம் உண்டாகிறது என்று பொருள். நமக்கு வரும் துக்கமும், பயமும், நான் அல்லாத இன்னொன்று எனக்கு மாறாக இருக்கிறது என்று நினைப்பதால்தான். என்னுடைய இருப்பால் மட்டும் எனக்கு எப்போதும் துக்கமோ, அச்சமோ எப்போதும் வருவதில்லை. உறக்கத்தில் நாம் மட்டுமே இருக்கிறோம். ஆனால் அங்கு துக்கமோ, அச்சமோ இல்லை. விழிப்பு நிலையில் நம் மனம் எண்ணி துக்கப்படுவதோ, அச்சமுறுவதோ இன்னொரு பொருளையோ, மனிதரையோ எண்ணித்தான். எனவேதான் த்விதீயாத்வை பயம் பவதி என்று உபநிஷத் கூறுகிறது. ஆனால் ஆத்மாவைத் தவிர இரண்டாவதாக ஒரு பொருளே இல்லை என்பதைப் பார்த்தோம். ஆத்மா அனந்தம் என்றால் அது அல்லாத இன்னொரு பொருள் இருக்க வாய்ப்பே இல்லை. அப்படி இருந்தால் ஆத்மா எல்லைகளற்றது என்ற கூற்று பொய்யாகி விடும். ஆனால் ஆத்ம சைதன்ய வடிவாக இருப்பதால் அது எல்லைகளற்றது என்ற கூற்று மட்டுமே உண்மை. ஒரு பொருளை விளக்குவது சைதன்யம் மட்டுமே. ஆனால் அந்த சைதன்யத்தை விளக்குவதற்கு இன்னொரு சைதன்யம் தேவைப்பட்டால் அது Infinite Regression அல்லது அனவஸ்தா தோஷம் என்ற குறையை உருவாக்கி விடும். அதாவது, ஒரு பொருளை விளக்குவது உணர்வு. அந்த உணர்வை விளக்குதற்கு இன்னொரு உணர்வு இருக்கும் என்று கொண்டால் முதற்சொன்ன உணர்வு பின்வரும் உணர்வுக்குப் பொருளாகி விடும். இப்படியே ஒரு உணர்வை விளக்க இன்னொரு உணர்வு, அதை விளக்க இன்னொரு உணர்வு என்று போய்க்கொண்டே இருப்பதைத்தான் அனவஸ்தா தோஷம் என்று வேதாந்தம் கூறுகிறது. எனவே ஒரே ஒரு சைதன்யம்தான் இருக்க முடியும் என்பது இதிலிருந்து விளங்குகிறது.
இரண்டாவதாக இன்னொரு பொருள் இருப்பதற்கு வாய்ப்பே இல்லாததால், ஆத்மாவின் ஸ்வரூபம் ஆனந்தமாக இருக்கிறது. எந்த இடத்தில் குறையோ, துக்கமோ, பயமோ இல்லையோ அந்த முழுமையான நிறைவு நிலைக்குத்தான் ஆனந்தம் என்று பெயர். எண்ணங்கள் அற்ற ஆழ்ந்த உறக்க நிலையில் நமக்கு எந்தப் பொருளும் இல்லை, உலகமும் இல்லை. ஆனாலும் நாம் அங்கு மிகுந்த அமைதியை, சுகத்தை அனுபவிக்கிறோம். அந்தச் சுகம் தான் ‘ஆனந்தம்’. “நான் ஏதோ ஒரு பொருளைச் சார்ந்துதான் மகிழ்ச்சியாக இருக்க முடியும்” என்ற அறியாமையை உடைத்து, “நானே இயல்பாக இன்ப வடிவமானவன், என்னைத் தவிர வேறு எதற்கும் என்னை துக்கப்படுத்தும் அதிகாரம் இல்லை” என்று உணர்வதே சத்-சித்-ஆனந்தம் என்ற கூற்றின் உண்மைத்தன்மையை அறிவதாகும். “ஆனந்தம் பிரம்மனோ வித்வான் நபிபேதி குதஸ்சன இதி” என்று தைத்திரீய உபநிஷத்தின் ஆனந்த வல்லி கூறுகிறது. பிரம்மத்தின் ஆனந்த வடிவத்தை அறிந்த ஞானி (வித்வான்), எதைக் கண்டும் பயப்படுவதில்லை. என்று பொருள். இருமைதான் அச்சத்தைக் கொடுக்கிறது (த்விதீயாத்வை பயம் பவதி). ஆனால் பிரம்மத்திற்கு வெளியில் வேறொரு பொருளே இல்லை என்ற இரண்டற்ற நிலை அல்லது அத்வைத நிலை பிரம்மத்திற்கு இருப்பதால் அதை அறிந்தவன் அச்சமுறுவதில்லை. எங்கு குறை இல்லையோ, எங்கு ஏக்கம் இல்லையோ, அந்த முழுமையான நிறைவுதான் ஆனந்தம். ஒரு மனிதன் தன் கனவில் ஒரு புலியைக் கண்டு பயந்து நடுங்கி ஓடுகிறான். அவனது பயமும் நடுக்கமும் உண்மையாக இருக்கிறது. ஆனால், அவன் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்ததும் (வித்வான் ஆனதும்) அந்தப் புலியைக் கண்டு பயப்பட மாட்டான் அல்லவா? ஏனெனில், அந்தப் புலி தனக்கு வெளியே இருக்கும் ஒரு விலங்கு அல்ல, அது தன் மனதின் கற்பனைதான் என்பதை அவன் விழிப்பு நிலையில் உணர்ந்து கொள்கிறான். அதேபோல, ஞானிக்கு இந்த உலகப் பந்தங்களும், பயங்களும் கனவு போலப் பொய்த்துப் போகின்றன. பிரம்மமாகிய தண்ணீரே அலைகளாகவும் கடலாகவும் இருக்கிறது என்பதை அறிந்த மீன், கடலைக் கண்டு பயப்படாது.
இப்போது புதிதாக ஒரு கேள்வி எழக்கூடும். ஆத்மாவின் இலக்கணங்களைப் பார்த்தோம். அதிலிருந்து என்னுடைய உண்மையான இயல்பு சத்-சித்-ஆனந்தம் என்றும் பார்த்தோம். ஆனால் இந்த பிரம்மம் என்று சொல்லப்படுகிறதே அது என்ன? அதனுடைய இயல்புகள் என்ன என்ற கேள்விகள் எழலாம். அதெப்படி பிரம்மத்தின் இயல்பு ஆனந்தம் என்று அறிந்த ஒருவன் எல்லா அச்சங்களிலிருந்தும் விடுதலை அடைய முடியும்? காரணம் அத்வைதம் ஆத்மா, பிரம்மம் இரண்டும் ஒன்றே என்று கூறுகிறது. நமது இந்த தனித்த பிறப்பை ஜீவன் என்றும், இந்தப் பிரபஞ்சத்திற்குக் காரணமான அந்தப் பரம்பொருளை பிரம்மம் என்றும் பொதுவாக வரையறுக்கிறோம். நாம் நம்மைப் பார்க்கும்போது நமது திறன்களும், எல்லைகளும், ஆற்றல்களும் மிகுந்த எல்லைக்குட்பட்டதாக இருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் எல்லாவற்றையும் படைத்த, எல்லாவற்றுக்கும் காரணமான அந்த பிரம்மமோ அளவற்ற ஆற்றல் வாய்ந்தது, எங்கும் நிறைந்தது என்று கருதப்படுகிறது. அதெப்படி சர்வ வல்லமை கொண்ட பிரம்மமும், குறுகிய ஆற்றல் கொண்ட நானும் ஒன்றாக இருக்க முடியும் என்ற ஐயம் இயல்பாகவே எழக்கூடும். சத்-சித்-ஆனந்தம் என்ற கூற்றின் விளக்கத்தைச் சரியாகப் புரிந்து கொண்டால் இந்த ஐயம் எழுவதற்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில் இருப்பது ஒரே சைதன்யம்தான் என்ற நிறுவப்பட்டபிறகு, ஆத்மா, பிரம்மம் என்ற இரண்டும் ஒன்றாகத்தான் இருக்க முடியும். இருப்பினும் இப்படி ஒரு ஐயம் எழுவதாகக் கருதிக்கொண்டு, அல்லது சத்-சித்-ஆனந்தம் என்ற கூற்றின் விளக்கத்தை இன்னும் பார்க்கவில்லை என்பதாகக் கருதிக்கொண்டு ஆத்மா மற்றும் பிரம்மம் ஆகிய இரண்டையும் எவ்வாறு ஒன்றாக இணைக்க முடியும் என்று பார்க்கலாம்.
ஆத்மா, பிரம்மம் இரண்டும் ஒன்றே என்ற கருத்தை உபநிஷத்துக்கள் “அஹம் பிரம்மாஸ்மி” (நானே பிரம்மம்) மற்றும் “தத் த்வமஸி”(அது நீயாக இருக்கிறாய்) போன்ற மகா வாக்கியங்கள் மூலம் பிரகடனப்படுத்துகின்றன. மேலோட்டமாகப் பார்த்தால், “சிறிய, வரம்பிற்குட்பட்ட நான் (ஆத்மா) எப்படி இந்தப் பிரபஞ்சத்தையே தாங்கி நிற்கும் எல்லையற்ற பேராற்றலுடன் (பிரம்மம்) ஒன்றாக முடியும்?” என்ற சந்தேகம் எழுவது இயல்பே. ஆனால் இந்த உண்மையை “பாக-த்யாக-லக்ஷணா” (பொருந்தாத பகுதிகளை நீக்கி, சாரத்தை மட்டும் ஏற்கும் தர்க்க முறை) மற்றும் சில எளிய உதாரணங்கள் மூலம் விளக்க முடியும்.
பாகத்யாக லக்ஷணாவை புரிந்துகொள்ள ஒரு லௌகீக உதாரணத்தைப் பார்ப்போம்: நீங்கள் பத்து வருடங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு மனிதரைப் பார்க்கிறீர்கள். அவர் அப்போது ஏழையாக, சாதாரண உடையில், மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். பத்து வருடங்கள் கழித்து, அதே மனிதரை நியூயார்க் நகரில் மிக உயர்தரமான உடையில், பெரும் கோடீஸ்வரராகப் பார்க்கிறீர்கள். இப்போது அவரைச் சுட்டிக்காட்டி, “அன்று சென்னையில் பார்த்த அதே தேவதத்தன் தான் இவன்” என்று கூறுகிறீர்கள். (தேவதத்தன் என்ற பெயர் வேதாந்தத்தில் இந்த மாதிரியான எடுத்துக்காட்டுகளுக்கு அடிக்கடிப் பயன்படுத்தப்படும் பெயர்.) இங்கு, காலம் , இடம் , உடை ஆகிய அனைத்தும் முற்றிலும் மாறுபட்டவை. ஆனால், இந்த முரண்பட்ட காரணிகளை நாம் நீக்கிவிட்டு (த்யாகம்), அவற்றுக்கு நடுவில் மாறாமல் இருக்கும் அந்த ‘மனிதன்’ என்ற சாரத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் (பாகம்), இரண்டுமே ஒருவர்தான் என்பது நிரூபணமாகிறது.
இதே தர்க்கத்தை ஆத்மா மற்றும் பிரம்மத்திற்கும் பொருத்த வேண்டும். பிரம்மம் என்ற சொல்லின் வெளிப்படையான பொருள் என்பதை பிரபஞ்சத்தின் படைப்புக்குக் காரணமாக இருப்பது, இந்தப் பிரபஞ்ச விதிகளை ஆக்கி நடத்துவது, எல்லாவற்றையும் அறிவது, எல்லா சக்திகளையும் கொண்டது என்றெல்லாம் புரிந்து கொள்ளலாம். இந்த எல்லாத் திறன்களையும் கொண்ட பிரம்மத்தை ஈஸ்வரன் என்ற சொல்லால் வேதாந்தம் குறிக்கிறது. பிரம்மம் என்ற தூய உணர்வு வடிவான சைதன்ய அம்சம், இந்த ஆற்றல்களோடு கூடியிருக்கும் நிலையைத்தான் ஈஸ்வரன் என்று வேதாந்தம் குறிப்பிடுகிறது.
ஆத்மா என்ற சொல்லின் வெளிப்படைப் பொருள் என்பது ஒரு குறிப்பிட்ட உடல், மனம், மற்றும் சிறிய அகந்தையைக் கொண்ட ஜீவன் என்று புரிந்து கொள்ளலாம். அதாவது ஆத்மா என்ற தூய உணர்வு வடிவான சைதன்ய அம்சம் உடல், மனம், புலன்கள் ஆகியவற்றுடன் கூடி இருக்கும் நிலைதான் ஜீவன் எனப்படுகிறது. நான் என்று இந்த வரம்புகளுக்குட்பட்ட ஜீவனைத்தான் புரிந்து வைத்திருக்கிறோம். நாம் நம்மை மாறுகின்ற, அழிவுக்குட்பட்ட, எல்லைகள் கொண்ட இந்த உடல், மனம், புலன்களோடு நம்மை அடையாளப்படுத்திக் கொள்வதால்தான் அவற்றின் குணங்களை நம் மீது ஏற்றி வைத்துக் கொள்கிறோம். இந்த ஏற்றி வைத்தலாலேயே நமக்கு துயரம் நிகழ்கிறது. நமது துயரத்துக்குக் காரணம் அறியாமை என்று இதனால்தான் வேதாந்தம் கூறுகிறது. நம்முடைய உண்மையான தன்மையைப் பற்றிய அறியாமையைத்தான் அது குறிப்பிடுகிறது.
ஜீவனுடைய உடல், மனம், புலன்கள் ஆகியவற்றை உபாதி என்ற ஒற்றைச் சொல்லால் குறிப்பிடலாம். அதேபோல பிரம்மத்தினுடைய படைக்கும் திறன், பிரபஞ்ச விதிகளை ஆக்கி நடத்தும் திறன், எல்லாவற்றையும் அறியும் திறன் ஆகியவற்றை பிரம்மத்தினுடைய உபாதி என்று கூறலாம். இங்கு ஒரு பொருளின் உபாதி எனப்படுவது நீக்கப்படும் தன்மை உடையது. உபாதியை நீக்கினாலும் அந்தப் பொருளுக்கு எந்தக் குறைபாடும் ஏற்படாது. ஒரு பொருளிலிருந்து எது நீக்கப்படக்கூடியதோ அதைத்தான் உபாதி என்று குறிப்பிடுவோம். ஆபரணம் என்பது தங்கத்தின் உபாதி. ஆபரணம் என்ற உபாதியை நீக்கினாலும் தங்கம் என்ற பொருள் அப்படியேதான் இருக்கும். தங்கத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதுபோலத்தான் பிரம்மம், மற்றும் ஆத்மாவின் உபாதிகளும். இவ்விரண்டு உபாதிகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. பிரம்மம் சர்வ வல்லமை படைத்தது. ஜீவனோ மிகக்குறுகிய வலிமை கொண்டது. பிரம்மம் பிரபஞ்சத்திற்கே காரணமானது. அதை நடத்துவது. ஜீவனோ தன் வாழ்க்கையை நடத்துவதற்கே தடுமாறிக் கொண்டிருப்பவன். ஆத்மா மற்றும் பிரம்மத்தின் கூறுகளை கீழ்க்கண்டவாறு விளக்கலாம்.
ஜீவன் = ஆத்மா (தூய உணர்வான சைதன்யம்) + உபாதி (உடல், மனம், புலன்கள்)
ஈஸ்வரன் = பிரம்மம் (தூய உணர்வான சைதன்யம்) + உபாதி (பிரபஞ்ச படைப்பு, சர்வ வல்லமை, மற்றும் பல)
பாகத்யாக லக்ஷணத்தைக் கொண்டு இந்த முரண்பட்ட உபாதிகளை நீக்குவோம். பிரம்மத்திடம் உள்ள “பிரபஞ்சப் படைப்பு, சர்வ வல்லமை” என்ற உலகியல் கூறுகளை நீக்கினால் எஞ்சுவது: தூய உணர்வு நிலை (Pure Consciousness ) அல்லது சித் அம்சம். ஆத்மாவிடம் உள்ள “அழியும் உடல், மாறும் மனம், சிறிய அகந்தை” ஆகியவற்றை நீக்கினால் எஞ்சுவது: நம் எண்ணங்களைக் கவனிக்கும் தூய உணர்வு நிலை (Pure Consciousness) அல்லது சித். முரண்பாடுகள் நீங்கிய பின், இரண்டு பக்கமும் எஞ்சுவது ஒரே ஒரு ‘தூய உணர்வு’ மட்டும்தான். எனவேதான், ஆத்மா = பிரம்மம் என்பது நிலைநாட்டப்படுகிறது. இதைத்தான் ஜீவ, ஈஸ்வர ஐக்கியம் என்று வேதாந்தம் குறிப்பிடுகிறது. நானும், பிரம்மமும் ஒன்று என்று ஒருவன் அறிந்தபின் அவனுக்கு துயரங்கள் எப்படி இருக்க முடியும்? அவன் எந்தத் தளைகளால் கட்டுண்டு இருப்பான்?
ஜீவ, ஈஸ்வர ஐக்கியத்தை விளக்க வேதாந்த மேற்கொள்ளும் இன்னொரு புகழ்பெற்ற எடுத்துக்காட்டு உண்டு. ஒரு கடலில் அலைகள் தோன்றித் தோன்றி மறைகின்றன. அதில் ஒரு அலை நினைக்கிறதாம். “நான் மிகச் சிறியவன், நான் இப்போதுதான் தோன்றினேன், சற்று நேரத்தில் கரையில் மோதி அழிந்துவிடுவேன்.” இந்த எண்ணத்தில் அது துயருற்று இருக்கிறதாம். அதே நேரத்தில் அந்தக் கடல், நான் மிகுந்த சக்தி வாய்ந்தவன், இந்த அலைகளை ஆக்கி, அழிப்பதே நான்தான் என்று நினைக்கிறதாம். ஆனால், அலையின் உண்மைத் தன்மை என்ன? கடலின் உண்மைத் தன்மை என்ன? என்று ஆராய்ந்து பார்த்தால், இரண்டிற்குமே ஆதாரமாக இருப்பது “தண்ணீர்” மட்டும்தான். அலை என்பதும் தண்ணீர்தான், கடல் என்பதும் தண்ணீர்தான். வடிவத்தை (நாம-ரூபம்) வைத்துப் பார்த்தால் அலை வேறு, கடல் வேறு. ஆனால், சாராம்சமாகப் பார்த்தால் இரண்டும் ஒன்றுதான். அலை தன் வடிவத்தை மறந்து, “நான் தண்ணீர்” என்று உணரும்போது, அது கடலோடு ஐக்கியமாகிறது.
ஒரு சிறிய மண் குடத்திற்குள் இருக்கும் ஆகாயத்தை (Space) ‘கடாகாசம்’ என்கிறோம். வெளியே இருக்கும் எல்லையற்ற ஆகாயத்தை ‘மகாகாசம்’ என்கிறோம். குடத்திற்குள் இருக்கும் ஆகாயம் சிறியதா? இல்லை, குடம் என்ற எல்லை (உபாதி) அதற்குள் இருக்கும் ஆகாயத்தைச் சிறியதாகக் காட்டுகிறது. குடத்தை உடைத்துவிட்டால், உள்ளே இருந்த ஆகாயமும் வெளியே இருந்த ஆகாயமும் என்றுமே ஒன்றுதான் என்பது விளங்கும். அதுபோலத்தான் தனிப்பட்ட இந்த ஜீவனும், எல்லாவற்றுக்கும் காரணமான அந்த பிரம்மமும் ஒன்றே என்று வேதாந்தம் கூறுகிறது.
இதன் பொருள் உங்கள் மனித உடலோ அல்லது உங்கள் அகந்தையோ (Ego) கடவுள் என்பதல்ல. மாறாக, இப்போது உங்கள் மனதில் எழும் எண்ணங்களை எந்த ஒரு ‘அறிவு ஒளி’ (Consciousness) பிரகாசிக்கச் செய்கிறதோ, அதே அறிவு ஒளிதான் ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் இயக்கும் பேரொளி என்று வேதாந்தம் கூறுகிறது. எனவே நாம் புதிதாகப் பிரம்மமாக மாறத் தேவையில்லை; நாம் ஏற்கனவே பிரம்மமாகத்தான் இருக்கிறோம், ஆனால் “நான் இந்த உடல்-மனம்” என்ற அறியாமையில் நாம் இருக்கிறோம். இந்த அறியாமை நீங்குவதே ஜீவ-பிரம்ம ஐக்கிய ஞானம் ஆகும்.
அது சரி, நானும், பிரம்மமும் தூய உணர்வு என்கிற வகையில் ஒன்றுதான் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் உபாதிகளைக் கருத்தில் கொள்ளும்போது, நான் மிகுந்த வரம்புகுட்பட்ட ஆற்றல்கள் கொண்டவன். பிரம்மமோ எல்லையற்ற ஆற்றல் கொண்டது. இந்தப் பிரபஞ்சத்தையே ஆக்கி நடத்துவது. இப்படி இருக்கையில் என்னால் எவ்வாறு ஆனந்தமாக இருக்க முடியும்? த்விதீயாத்வை பயம் பவதி என்று வேதாந்தம்தானே கூறுகிறது? என்னுடைய உபாதியும், பிரம்மத்தினுடைய உபாதியும் வேறுவேறாக இருக்கும்போது நான் எவ்வாறு அச்சத்திலிருந்து நிரந்தரமாக விடுதலை அடைய முடியும்? இதுபோன்ற கேள்விகள் எழுவது இயல்பு. இதற்குச் சுருக்கமான பதில் ஆத்மா மற்றும் பிரம்மத்தினுடைய உபாதிகள் வெறும் தோற்றமே என்பதுதான். விளக்கமான பதிலை அடுத்த பகுதியில் காணலாம்.
