Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

குமார சம்பவம் மஹா காவ்யம்- 8

அத்யாயம்-8

(விவாகத்திற்கு பிறகு தனிமையில் தம்பதிகளின் இடையே நடக்கும் சம்பவங்களையும் விவரிக்க விரும்பி காளிதாச கவி,  தொடருகிறார்)

இளம் பிராயத்தினளான பார்வதி முதல் நாள் அனுபவங்களை பயத்துடனே எதிர் கொண்டாள்.  சங்கரன் கேட்ட கேள்விகளுக்கும் சரியான பதில் சொல்ல முடியாத தயக்கமே மேலோங்கியது, முகத்தை மூடிக் கொண்டு படுத்தாள்.  மெள்ள மெள்ள இருவரும் ஒருவரையொருவர் நெருங்கி அமரவும், நேருக்கு நேர் பார்க்கவும் துணிவு பெற்றாள்.  

சகிகள் சொன்னபடி பணிவிடை செய்ய துணிந்தாலும், நேர் எதிரே கணவனைக் கண்டால் பதற்றமே மிகுந்தவளாக சகிகள் சொன்னதெல்லாம் மறந்து போனது. 

அவளை அவள் போக்கிலேயே விட்டுப் பிடிக்கலாம் என எண்ணியவராக அவரும் அனாவசிய விஷயங்களையும் கூட ஹாஸ்யமாக பேசி சகஜநிலைக்கு கொண்டு வந்தார். 

புது மண தம்பதிகளின் ஒவ்வொரு செயலையும் விவரமாக   காளிதாசர் எழுதியது.  அதரங்களில் முத்தமிடும் பொழுது பற்கள் பட்டாலோ,  மார்பில் விரல் நகங்கள் பட்டாலோ அவளால் ஏற்றுக் கொள்ள முடியாமல் பயந்தாள்.  விடிந்ததும் சகிகள் வந்து விசாரித்தனர்.  அவர்களுடன் தாயாரும் வந்து விசாரித்தாள். புது மணப் பெண் கணவனுடன் முதல் நாள் அனுபவம் என்பதால் அந்தரங்கமாக  விசாரித்தார்கள்.  

சில நாட்கள் இவ்வாறு சென்றன.  அவளும் மெள்ள மெள்ள கூடலை ரசிக்கத் தெரிந்து கொண்டு விட்டாள். எதிர்பார்ப்பும்,  பலமாக கட்டி அணைத்தாலும், தன் சரீரத்தில் அதன் தாக்கமாக அயர்வு, வலிப்பதாக இருந்தாலும்  தானும் முழு  ஈடுபாட்டோடு மண வாழ்க்கையை சுகமாக உணரலானாள்.   உடன் இருக்கும் சமயங்களில் முழு ஆதரவுடன் தன் உடலை அனுபவிக்க இடம் கொடுத்தாள்.  மண வாழ்க்கை இருவருக்குமே பிடித்தமாகவும், ஒவ்வொரு நொடியும் அருகிலேயே இருக்கும் ஆவலையும் உண்டாக்கியது. இயல்பாக அணு அணுவாக ரசிக்கத் தொடங்கிய பின் பிரிவு என்பது சில நொடிகளே ஆனாலும் தாங்க 

முடியாததாக ஆயிற்று. கங்கை சாகரத்தை அடைவதே குறிக் கோளாக ப்ரவஹித்து ஓடி சாகரத்தில் கலந்து விடுகிறாள்.  சாகரம் அவளை தன்னுள் அரவணத்து கொண்டு விடுகிறது போல  பரஸ்பரம் அவர்களின் அனுராகமும் அதே போல ஆழ்ந்ததாக இருந்தது.

இரவும் பகலும் இணை பிரியாமல் இருந்தாலும் பேசிக் கொள்ள விஷயங்கள் இருந்தன.  ஒருவருக்கொருவர் தவிர உலகில்  எதுவே இல்லை என்பது போல.  மகளை பிரிய தயங்கிய இமவானுக்காக  ஒரு மாதம் அங்கு தங்கியிருந்தார்.  மாத  முடிவில் இமவானின்  மாளிகையில் பார்வதியுடன் இருந்த சங்கரர் புறப்பட்டார்.  நந்தி வாகனத்தில் இமாலய பர்வதத்தைச் சுற்றிவந்து, பார்வதியுடன் மந்தராசலம் என்ற இடம் வந்தார். பாற்கடலைக் கடைந்த சமயம் இந்த மந்தராசலம் தான் மத்தாக நின்றிருந்தது. அதனால் அவ்வப்பொழுது தெறித்த அம்ருதத்தின் சுவையை பருகியிருந்தது என்பர்.  மலயுச்சியில் நின்று மனைவியின் கமலம் போன்ற முகத்தை ரசித்தார்.  வண்டாக அந்த கமலத்தை அவர் கண்கள் வட்டமடித்தன.

அங்கிருந்து கிளம்பி குபேர பவனம் சென்றனர்.  குபேர பவனம் அலகாபுரி என்ற இடம். அங்கு வந்து சேர்ந்தனர். அங்கு திடுமென ஒருநாள் ராவணன் மலையை அசைத்து பயங்கரமாக கர்ஜித்ததில் பயந்து அவர் கழுத்தை இறுக கட்டிக் கொண்டவள், உடலோடு உடலாக ஒன்றி விட்டாள்.  குபேர பவனத்தில்  சந்திரன் மிக அருகில் இருப்பது போல உதயமாயிற்று.  அதன் குளுமையான கிரணங்களில் அதிக ப்ரகாசத்தையும், அதன் குளிர்ந்த அனுபவத்தையும் வெகுவாக ரசித்தனர். ( சந்திரனின் அருகாமையால் அந்த இடம் பொன் நிறம் பெற்றது. அதனால் குபேர புரியே பொன்னால் ஆனது என்று பெயர் பெற்றது) 

(குபேரன் அதை அருகில் இருந்து கண்டான். சற்றே பொறாமை கொண்டான் என்று அவன் கண்கள் பார்வையை இழந்தன. பின்னர் பகவான் சங்கரரின் அருளால்  பார்வையை திரும்ப பெற்றான் ஆனால் ஒரு கண் மஞ்சள் நிறமாயிற்று என்பது வரலாறு. அதனால் குபேரன் பெயரே ஏகபிங்களன் என்றாயிற்று. அதனால் குபேர பவனம் ஏகபிங்கள கிரி என்றே அறியலாயிற்று) 

தென் திசையில் இருந்து காற்று லவங்க வாசனையையும், சில சமயம் கேஸர வாசனையையும் சுமந்து வந்தது.  அந்த காற்றில் எந்த வித உடல் அலுப்பையும், சோர்வையும்  நீக்கும் தன்மை இருக்கவே அங்கு சில நாட்கள் தங்கினர். ஆகாய கங்கையில் மூழ்கி நீராடினர்.  மனோ ரஞ்சக மான சூழ்நிலையும் ஏகாந்தமான இடம். எனவே அவர்கள் எந்த வித கவலையுமின்றி  நீரில் விளையாடி மகிழ்ந்தனர். செந்தாமரை தண்டுகளால் ஒருவரையொருவர் சீண்டியும், நீரை வாரியடித்தும், விளையாடி மகிழ்ந்தனர்.  நந்தன வனத்தில் இருந்து பாரிஜாத புஷ்பங்களை பறித்துக் கொண்டு வந்தனர்.  தேவ லோக பெண்கள், இந்திராணி போன்றோர்  அங்கு வந்து இவைகளை பயன் படுத்துவார்கள்.  இவ்வாறு கணவனின் பரி பூர்ண அன்புக்கு பாத்திரமான பார்வதி அதற்கு சற்றும் குறையாத அன்புடன் பிரிய சகியாக, மனைவியாக இருந்து பல இடங்களுக்கும் சென்று திரும்பி கந்தமாதன பர்வத வனத்தில் நுழைந்தனர்.  அங்கு பொன் மயமான பாறையில் அமர்ந்து அஸ்தமன ஸூரியனின் பொற் கிரணங்களைக் காண, தர்ம பத்னியான பார்வதியை அணைத்தபடி அமர்ந்திருந்தவர்  அவளிடம் சொன்னார்:

ஹே ப்ரியே! இந்த ஆதவன் என்ன செய்கிறான் தெரியுமா?  கமலத்தின் இதழ்கள் விரிந்து இருப்பதை  தோற்கடிக்கும் உன் கண்களைப் பார்த்து அவசரமாக பகல் பொழுதை முடித்துக் கொண்டு திரும்புகிறான். அது எப்படி இருக்கிறது என்றால், ப்ரஜாபதியான பகவான் ப்ரளய காலத்தில் மூவுலகையும் சுருட்டி தூக்கிக் கொண்டு போவது போல இருக்கிறது.  பின் குறிப்பு -பார்க்கவும்

ஹே! பார்வதி, கொடி போன்ற  உன் சரீரத்துடன் போட்டி போடுவது போல  இந்த  வான வில், வளைந்து நிற்கிறது பார். இதை இந்திரனின் வில் என்பர்.  எப்படி வந்தது தெரியுமா ? சூரியனுடைய கிரணங்கள்  நீர் துளிகளில் வழியே நுழைந்து வெளி வந்தது.  ஸுரியனின் ப்ரகாசம் அதிகமானதும் கலைந்து விட்டது பார்.  இதோ உன் தந்தை இமவானின் மலையில் இறங்கி வரும் அருவிகள் அந்த வான வில்லின் ஒளியை ப்ரதி பலித்தன. அது மறைந்தவுடன்,ஏன் வந்தது. எப்படி மறைந்தது என்று  எதுவும் புரியாமல் அமைதியாக இருக்கின்றன போலும்.

இதோ பார், சக்ரவாக பக்ஷிகள் தாமரையின் தண்டில் முகத்தை வைத்து எம்பி மகரந்தத்தை உண்கின்றன. திரும்பி பார்த்தால் அதன் இணையான மற்றொரு சக்ரவாகம் சற்று தூரத்தில் இருக்கிறது. அதை அழைக்க கடுமையான அதன் குரலில் சத்தமாக அழைக்கிறது பார்.  அதிக தூரம் கூட இல்லை. கத்துவானேன்.

யானைகள் தாகத்துடன் வேகமாக வந்து நீரை பருகுகின்றன. இவ்வளவு தூரம் வருவானேன்.  சல்லகி என்ற நீர் அல்லி தாமரை போலவே யானைகளுக்கு பிடிக்குமாம். सल्लकी स्याद् गजप्रिया- ஸல்லகி ஸ்யாத் கஜ ப்ரிய: – என்பது ஒரு செய்தி. இந்த மலர்களின் மணம் அவைகளை எங்கு இருந்தாலும் இழுக்கும் போலும். யானைகள் ஒரு முறை மாலையில்  ஒரே முறையில் வேண்டிய அளவு நீரை பருகி விடும் என்பது ப்ரசித்தம். 

மித பாஷிணீ!  அளவாக பேசத் தெரிந்தவள் நீ.  மேற்கு திசையில் ஸுரியன் மறையத் தயங்கிக் கொண்டு இருக்கிறான். ஏன் தெரியுமா? இந்த குளத்தில் பார். அவனுடைய வண்ண மயமான கிரணங்களின் ப்ரதி பிம்பம்  குளத்து நீரில் பல விதமான  கோலங்களை போட்டிருக்கிறது. அதை ரசித்துக் கொண்டிருக்கிறான் போலும்.

தாமரைத் தண்டின் ம்ருதுவான பாகங்களை கடித்து குதறும் இந்த வன – நீர் வராகங்களைப் பார். (வனம்-காடு,நீர்  இரு பொருள் உடையது) இவைகள் கூட்டமாக வந்து நிறைந்துள்ளன. இரவில் நிலத்தில் வாழ்பவை. அதன் தலைவன் கரையேறியதும் மற்றவை அனைத்தும் உடன் வந்து விட்டன. 

ஹே! அழகியே! இந்த மரத்தின் நுனியில் பார்.  மஞ்சள் நிறத்தில் மயில்கள் வந்துள்ளன. இவைகளின் தோகை எப்படி பொன் வண்ணம் பெற்றன? அவைகளும்  மாலை வெய்யிலில் இளைப்பாறிக்  கொண்டிருக்கின்றன. 

வானமும் சில இடங்களில் தெளிவாக அதன் நீல நிறத்திலும், சில இடங்களில் மேகம் மறைக்க சாம்பல் நிறமாகவும் இருட்டு மெள்ள மெள்ள நுழைவது போல இருக்கிறது.  சிறிதளவே நீர் அதுவும் சேறாகி கிடக்கும் குளம் போல காணப் படுகிறது.

பர்ண சாலைகளில் அக்னி மூட்டப் பட்டுள்ளது பார்.  பசுக்கள் வந்து சேர்ந்து விட்டன. கிழங்குகளை சுடும் வாசனை வருகிறது.   இந்த பசுக்கள் தான் ஆசிரமங்களில் அக்னி ஹோத்ரம் செய்யத் தேவையான பொருட்களைத் தருபவை. பால், நெய் போன்றவை, அதனாலே அவை இருக்குமிடம் லக்ஷ்மி கடாக்ஷம் பெறுகின்றன. 

இரவு நெருங்குகிறது. தாமரை மலர்கள் இதழ்களை மூடிக் கொண்டிருக்கின்றன. உள்ளே நுழைந்து விட்ட வண்டு வெளி வர சிறிது இடைவெளி விட்டிருக்கிறதா? சிறிதே திறந்த வாசல் போல அந்த இடைவெளி தெரிகிறது.  ஆதவனும் அனேகமாக மறைந்து விட்டான். தூரத்தில் பெண்ணின் நெற்றியில் உள்ள திலகம் போல ஒரு ஒளி கோடு போல தெரிகிறது.  அவனுடைய சஹ சரர்கள் வாலகில்யர்கள் எனப் படுபவர். இவர்களும் மகரிஷிகளே. அக்னி ஸ்வரூபம்- அக்னிக்கு சமமான தேஜஸ் இவர்களுடையது. இரவில் ஆதித்யனின் தேஜஸ் அக்னியில் ப்ரவேசிக்கிறது என்பது மறை என்ற வேதம்.  இரவில் அக்னி ஆதவனின் பொறுப்பை ஏற்று வெப்பமும், ஒளியும் தருகிறது.  ஆதவன் அக்னியிடம் பொறுப்பை ஒப்படைக்கும் மாலை நேரத்தில் இவர்கள் சாம கானம் செய்கிறார்கள்.  மந்திரங்கள் முழங்க பொறுப்பு கை மாறுகிறது என்று வேத வாக்கியம்.  அந்த இதயத்தை தொடும் இனிய கானம்.  ஆதவனின் குதிரைகள் கனைப்பது போல ஒலிக்கும் மந்திரங்கள், ஆயிரக் கணக்கான இந்த வாலகில்ய ரிஷிகள் பாடுகிறார்கள். 

மகான் இந்த ஆதித்யன். நாள் முழுவதும் ஒளியைத் தந்தவன். அவன் குதிரைகளும் களைத்தவை போல முகத்தை கவிழ்த்துக் கொண்டு காதுகள் காற்றில் விசிறி போல விரிந்து நிற்க, அன்றைய செயல்களை முடித்து திரும்பும் இல்லறத்தார்கள் போல அஸ்தமன பர்வதத்தில் இறங்குகின்றன.   இரவு முழுவதும் வானமும் ஓய்ந்து தூங்கும்.  ஓளியின் இயல்பே அது தானே. தான் இருக்கும் இடத்தை பிரகாசமாக ஆக்கும், தன்னுடனே அந்த ஒளியை எடுத்துச் சென்று விடும். மீதி அந்த காரம்- இருட்டே.  இந்த இருட்டும் சாயங்காலத்தில் ஆதித்யனை- ஓளியை  வழி அனுப்புவது போல கூடவே சென்று அஸ்தமனம் ஆன பின் காத்திருந்து சூரியோதயம் ஆகும் சமயம் முன்னால் வழி காட்டுவது போல, அணுக்க சேவகர்கள் போல உடன் வரும்.

மெள்ள  மேற்கு மலையின் பின்னால் இறங்கிக் கொண்டிருக்கும் ஆதவனின் கிரணங்கள் வானில் வண்ணங்களை வாரி இறைத்தது போல் இருக்கிறது பார்.  மீதி இருக்கும் மேகங்கள், சுருள் சுருளான உன் கேசங்களைப் பார்த்து தானும் வானத்தில் தூரிகைகளைக் கொண்டு வண்ணமயமாக சித்திரங்களை வரைந்து விட்டது போலும். அதுவும் உன்னை மகிழ்விக்கவே முயலுகிறது.  சிங்கத்தின் கேஸரி- பிடரி மயிரின் நிறம், சுத்தமான அருவி நீரின் வெண்மை, துளிர்களின் சிவந்த வண்ணம், மரங்கள், மலைகளின் சரிவில் தாதுக்களின் பெயர் அறியாத பல வண்ணங்கள், இவைகளுடன்  சாயங்காலமே அழகாக ரசிக்கும் படி இருக்கிறது பார். 

நதிக் கரைகளில் தபஸ்விகள், சந்த்யா வந்தனம் செய்கிறார்கள். காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பது ரஹஸ்யமாக ஏதோ சொல்வது போல கேட்கிறது பார்.  வா, கிளம்பலாம். எனக்கும் என் நியமங்களை செய்ய வேண்டும். நீ அழகாக பேசி இந்த இடங்களை வர்ணித்துச் சொல்வதைக் கேட்க உன் சகிகளும் காத்திருப்பார்கள். போகலாம் என்றபடி, எழுந்தார்.  சகி விஜயாவும் அருகில் வந்தாள். அனைவருமாக கிளம்பினர். மந்திரங்கள் சொல்லி  தினாவசானம்- தினம் முடிந்த சாயங்கால நியமங்களை அவர் செய்து முடிக்கும் வரை காத்திருந்த அவ்விருவரும் வந்து சேர்ந்து கொண்டனர். 

பேசாமலே சற்று தூரம் நடந்தனர். சஹ தர்ம சாரிணீ, நீ. நான் சாயங்கால வந்தனம் செய்யும் நேரம் நீ பேசாமல் இருந்த வரை சரி. இனி எதற்கு மௌன விரதம்.  சுதனு! அழகிய உடலுடையவளே!  காலையும் மாலையும் பகலுக்கும் இரவுக்கும் இடைப்பட்ட காலம் என்ற காரணத்தால் நாம் அதற்கான மந்திரங்கள் சொல்லி நம்மை படைத்தவர்களுக்கு, ப்ரும்மா முதல், நம் முன்னோர்கள் இவர்களை நினைத்து வணங்குகிறோம்.     பித்ருக்களுக்கு –(பூலோகத்தில் வாழ்ந்து மறைந்த குல மூத்தவர்கள்- அவர்கள் இருக்கும் இடம் பிதுர்லோகம் எனப்படும். )   அவர்களுக்கு உயிரினங்களை  படைப்பவரான ப்ரும்மா ‘அவர்கள் தியாகம் செய்த சரீர ரூபியாக  இந்த பிரும்ம சரீரத்தை வகிக்கிறேன்.’ என்று வாக்கு கொடுத்தார்.   அதன் பின்   உலகில்  அவர்களின் சந்ததிகளான  ஜீவன்களுக்கும்  பிரும்மா ஒரு வாக்கு கொடுத்தார்.  ‘ பகல்-இரவின் இடைப்பட்ட சந்தி கால நியமங்களை அனுசரிப்பவர்கள், தீர்காயுளும், வியாதி இன்றி உடல் நலமும் பெறுவார்கள்’ என்பது. 

நீ  ஏன் உத்சாகமின்றி இருக்கிறாய்? நாம் என்ன சக்ரவாக பறவைகளா ?   ஒன்று சற்று அகன்றால் மற்றொன்று கூக்குரல் போடும்.  

(படைக்கும் தொழிலைச் செய்யும் பிரும்மா, அடுத்தடுத்து புது உடல்கள் தோன்றச் செய்வார் என்பது தெரியும்.ஜீவன்களின் மறு பிறவி அவரிடமே இருந்து வருவதாக பொருள். அதனால் பழைய உடல்களை தன்னிடமே வைத்து பாதுகாப்பதாக பித்ருக்களுக்கு உறுதி அளிக்கிறார்.  வம்சம் வளரச் செய்ய பித்ருக்கள் எனப் படும் நமது முன்னோர்கள் ஆசீர்வதிப்பார்கள் என்பது நம்பிக்கை) 

ஹே மானினீ,  பிரும்மா வழியாக, நமது முன்னோர்கள் உடலின்றி சூக்ஷ்ம ரூபமாக  காலை மாலை சந்த்யா ஜபங்களை செய்து வருவதால், எனக்கும் இங்கு விசேஷமான கௌரவம் உள்ளது.  சரி, வா, போகலாம். இரவு நேரம். தமால மரங்கள்  அடர்த்தியாக இருந்தால் அதிக இருளாகத் தெரியும். மேற்கு திசையில் ஸூரிய அஸ்தமனம் ஆன பின் இந்த சந்தி காலத்தின்  வண்ண மயமான வானமும் தற்சமயம் கண்ணுக்கு புலனாகாமல் இருளில் மூழ்கி விட்டது.  திசைகள் தோறும் பரவிக் கொண்டு செல்லும் இருள், மேரு மலையையே மறைத்து விட்டது பார்.  தாயின் கர்பத்தில் இருக்கும் சிசு போல எதுவும் அறியாத நிலைக்கு உலகமே சென்று விட்டது போலும். 

இந்த இருளின் சக்தியைப் பார். உருவங்களா, அசையும் அசையா பொருளா, நேரான வழியா, குறுக்குத் தெருவா, அனைத்தையும் ஒன்றாக்கி விட்டது.  துஷ்டர்கள் அனைவரையும் அடக்கி ஆள்வதைப் போல.

புண்டரீகம் என்ற கமலம் போன்ற முகத்தையுடையவளே,  யாகம் செய்யும் அந்தணர்களின் தலைவன் சந்திரன், இந்த இருட்டிலிருந்து பாதுகாக்க தன் கிரணங்களுடன்  தலை எடுத்து விட்டான்.  கீழ் திசையில் பார். தாழம்பூ நிறத்தில், ப்ரகாசமாக ஒளி வீசிக் கொண்டு வந்து விட்டான்.  

உன் சகியும், நாம் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டே சந்திரன் பின்னாலேயே வந்து விட்டான் பார். இரு மலைகளுக்கிடையில் அவன் தாரகைகளுடன் சேர்ந்து கொண்டு  நம்மை நோக்கியே வருவது போல தெரிகிறது பார்.  ரஹஸ்யமாக திசைகளுடன் வேடிக்கையாக பேசிக்  கொண்டு வருகிறான் போலும். திசைகளின் முகம் பிரகாசமாகிறது பார். ( ராத்ரியும், திசைகளும் சம்ஸ்க்ருதத்தில் பெண் பால். அதை வைத்து அந்த பெண்களுடன் பேசுவதாக கவியின் அலங்காரம் என்ற வர்ணனை)

இந்த குளத்தில் முழு சந்திரனின் உருவம் தெரிகிறது பார். இரண்டும் ஒன்றே போல தோற்றம் அளிப்பதால் குளத்தில் பிம்பம் தான் என்று அறியாமல் பழம் என்று நினைத்து சக்ரவாகங்கள் பிடிக்க முயலுகின்றன.

சந்திரனின் ஒளியே நாயகன். ராத்ரி தான் நாயிகா. இவர்களை வைத்து ஸ்ருங்கார பரமாக வர்ணிக்கிறார். 

ஹே! பார்வதி, திடுமென அந்தகாரம் மறைந்து வானம் சந்திரனின் ஒளி நிரம்பி நிர்மலமாகத் தெரிவதைப் பார். யானைகள் குளித்து குளத்தை சேறாக்கி விட்டு சென்ற பின் சற்று நேரத்தில் குளத்து ஜலம் சுத்தமாக ஆவது போல இருள் சேறு போல வானத்தை மறைத்திருந்தது.  சந்திரனின் வரவால் தூய்மையாகி விட்டது. தூய்மையான எண்ணங்கள் கொண்ட நல்லவர்கள் கால வசத்தால் கஷ்டங்கள் அனுபவிப்பதும், பின் நன்மை அடைவதும் போல இருக்கிறது.  அதிலும் செக்கச் சிவக்க வந்தவன் இப்பொழுது பொன் நிறமாக குளுமையாக ஆகி விட்டான். இதுவும் நல்லவர்களின் குணமே. கால வசத்தால் நியமங்களை விடும் படி சோதனைகள் வந்தாலும் அவர்கள் அதையும் தாண்டி தன் இயல்பு நிலைக்கு வந்து விடுவார்கள் என்பதற்கு இது ஒரு சான்று. பிரும்மாவின் படைப்பிலேயே நல்ல குணங்கள் மேலாகவும், மற்ற தீய குணங்கள் படிப் படியாக குறைந்து கொண்டே வந்து அடியில் வந்து விடும்.  

சந்திர காந்த கல் தெரியுமா? சந்திரனின் ஒளி பட்டால் அதில் நீர் வரும். இந்த மயில்கள் பாவம், அதையறியாமல் மரத்தடியில் தூங்கின. சந்திரகாந்த கற்கள் உள்ள பாறையிருந்து நீர் மரத்தில் விழுந்து கிளைகள் அசைய, நீர் வழிந்து இவைகளின் மேல் பட்டு எழுப்பி விட்டு விட்டன.  

கற்பக மரங்களும்  இந்த மலையில் நிரம்ப காணப் படுகின்றன.  அதன் புஷ்பங்கள் இறைந்து கிடக்கின்றன.  யானைகள் படுத்துக் கிடப்பது போல இன்னமும் அடி வாரம் இருண்டே தெரிகிறது. வண்டுகள் ரீங்காரம் செய்வது கேட்கிறதா? இவைகளுக்காக குமுத மலர்கள் மலர்ந்திருக்கின்றவா? சந்திரன் ஒளியில் குமுதம் மலரும் என்று வண்டுகளுக்கு தெரியும் போலும்.

சற்று நேரத்தில் சந்திரனின் பவனி வானத்தை வியாபித்து காணும் இடமெல்லாம் மங்கிய அதன் ஒளி நிறைந்து  கண்ணுக்கு குளிர்ச்சியாகவும், வெண் நிறமாகவும் பரவியது. அவர்களின் உத்சாகம் அதைக் கண்டு மேலும் அதிகரிக்க அங்கிருந்து செல்ல மனமின்றி சுற்றிக் கொண்டே இருந்தனர். பூக்கள் குவியலாக விழுந்த இடங்களில் வித்தியாசம் தெரியாமல், ஒளியா, மலரா என்பது கூட கூர்ந்து கவனித்தால் தான் புரிந்தது. உன் சகிகளிடம் இந்த பூக்களை பறித்து மாலையாக கட்டி  தலையில் ஸூடிக் கொள்.   உன் கண்களின் வழியே கன்னங்களில் ப்ரதி பலிக்கும் சந்திரனின் ஒளிக்கு அவை ஈடாக இருக்கும் என்றார்.

கந்த மாதன மலையின் தேவதை உன்னை வரவேற்க காத்திருக்கிறாள்.  தேடுகிறாள் போலும். உன் இயல்பான சௌந்தர்யமே இந்த மலையின் கேசர மணத்தையும், அருண நிறத்தை கண்களிலும் காண விழைகிறாள்.  இதற்குள் சகிகள் மதுவைக் கொண்டு வந்து கொடுத்தனர். இந்த மனோகரமான சூழ் நிலைக்கு ஏற்ற பானமே இது. இதை ஏற்றுக் கொள். உத்சாகமும், கிளர்ச்சியும் வரும் என்று சொல்லி தானே வாங்கி அவளை குடிக்க வைத்தார்.   வசந்த காலம் வந்ததுமே மாமரத்தில் தோன்றும் வித விதமான மாறுதல்கள், இனிமையான மாம்பூ வாசனையும் கொண்டு மன்மதனுக்கு ஊழியம் செய்வது போல இருந்தாலும் அதன் பலன் அனைவருக்குமே.    

உடல் அயர்வும் மதுவை குடித்து உண்டான ராகமும், வெட்கமும் சயனத்தை நாடின.  அவரும்  அதே உணர்ச்சியுடன் இருப்பது தெரிந்து, இருவரும் ஏகாந்தமான மணி சிலா என்பதைக் கொண்டு நிர்மாணிக்கப் பட்ட குடிலுக்குள் நுழைந்தனர்.  எப்படி சந்திரனின் கிரணங்கள், முன் பனிக் காலமான அந்த இரவில் மேகங்களின் இடையில் ரோஹிணியைத் தேடிக் கண்டு ஓய்வு கொள்கிறானோ, அது போல, ஹம்ஸம் போன்ற வெண் நிற விரிப்புகளுடன் இருந்த கட்டிலில் தன் பிரியமான பார்வதியுடன் படுத்தார். 

 இருவரும் மனம் ஒருமித்து கொண்ட உடல் உறவு.  திடமான தேகமும், உள்ளத்தில் அன்பும் நிறைந்த இருவரும் பரஸ்பரம் அறிந்து விழைந்த செயல் ஆனதால் ரசித்து மகிழ்ந்தனர்.  இரவு நகர்வதே தெரியாமல் நகர்ந்தது. பின் களைத்து உறங்கினர்.  துதி பாடல்களும், கந்தர்வர்களின் வீணா கானமும், கமலங்கள் மலர்ந்து வீசிய மணமும் அவர்களை எழுப்பியது.  கந்தமாதன மலையின் சுகந்தமான மென் காற்றும் சுகமாக வீசியது.

பக்த ஜனங்கள் தரிசனம் செய்ய வந்து விட்டார்கள்.  அவர்களை வரவேற்க தயாராக ஆனார். இவ்வாறு நூறு சரத் ருதுக்கள் ஒரு இரவு போல கடந்தது. அவர்களிடையே தாம்பத்ய உணர்வு சற்றும் குறையவில்லை.  தீயின் நாக்குகள்  போல வளருவது தானே காமனின் இயல்பு. 

(இது வரை ஸ்ரீ காளிதாசனின் குமார சம்பவம் மகா காவியத்தில்  उमा सुरत वर्णणम् – உமா சுரத வர்ணனம் என்ற எட்டாவது அத்யாயம்) 

(தொடரும்) 

குமார சம்பவம் - மஹா காவ்யம்

குமார சம்பவம் மஹா காவ்யம்- 7 குமார சம்பவம் மஹா காவ்யம்- 9
Exit mobile version