Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

காட்டுப்பன்றி இலச்சினையை நாட்டுப் பன்றியெனத் தவறாகப் புரிந்துகொண்டு…

This entry is part 34 of 48 in the series அதிரியன் நினைவுகள்

மூலம் : மார்கெரித் யூர்செனார்

தமிழாக்கம் : நா. கிருஷ்ணா

யூதமக்களின் பிரச்சினைகள் அதிகரித்தனவேயன்றிச் சீரடைவதாக இல்லை, யூதமக்களிடையே அந்நியர்கள் எவராயினும் அவர்களைப் பகைவர்களாகக் காண்கிற வெறியர்கள் இருந்தனர் ; அவர்களே ஸேலட்ஸ்(Zealots). இக்கூட்டத்தின் கடுமையான எதிர்ப்பையும் மீறி ஜெருசலேமில் தொடங்கிய வேலைகள் முடியும் தறுவாயிலிருந்தன. சில தவறுகள் இழைக்கப்பட்டிருந்தன; அவற்றைத் திருத்திக்கொண்டிருக்க முடியும் ; ஆனால் இதுதான தருணமென, பிரச்சினைக்காக காத்திருந்த மனிதர்கள், நடந்ததவற்றைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். நகரில் நிறுத்தப்பட்டிருந்த பத்தாவது லீஜன் படைப்பிரிவுக்குக் காட்டுப்பன்றி சின்னமாகத் தரப்பட்டிருந்தது; நம்முடைய உரோமானியர் மரப்புப்படி நகரின் வாயிற்கதவுகளில் அந்த இலச்சினைக்கொடி வைக்கப்பட்டது. ஜெருசலேம் மக்கள் ஓவியம் அல்லது படிமம் போன்றவற்றை உபயோகித்துப் பழகியவர்களில்லை; காரணம், பல நூற்றாண்டுகாலம் அவர்களுடைய மூடநம்பிக்கை, கலை வளர்ச்சிக்கு ஆதாரவானதாக இல்லை, எனவே காட்டுப்பன்றி இலச்சினையை நாட்டுப் பன்றியெனத் தவறாகப் புரிந்துகொண்டு இஸ்ரேலியர் நெறிமுறையை நாம் அவமதித்ததாக நினைத்தனர். எக்காளங்கள், ஆட்டுக்கடாவின் கொம்புகள் ஆகியவற்றோடு  பெரும் அளவில் கொண்டாடப்பட்ட யூதப் புத்தாண்டு கொண்டாட்டங்கள், ஒவ்வொரு ஆண்டும் இரத்தக்களரி  சண்டைகளில் முடிந்தது; தம்மக்களை மிகவும் வெறுத்ததோடு, கொடூரமாகவும் நடத்திய எதிரிகளைக் கொன்றொழிக்க முடிவெடுத்து யூதப்பெண்ணொருத்திப் பொய்யான பெயருடன் பாரசீக மன்னன் ஒருவனுடைய காதற்கிழத்தியாக மாறி, அதில் வெற்றியும் பெற்றாள் என்பதொரு புராணக்கதை ; அப்பெண்ணின்  தீரச்செயல்களைப் பற்றிய கதையைப் பொதுவெளிகளில் படிக்கப்போக, அதுவே புத்தாண்டு விழா போர்க்களமாக மாறக் காரணமாயிற்று, எனவே இப்புராணக் கதையை பொதுவிடங்களில் வாசிப்பதை நமது அதிகாரிகள் தடைவிதிக்கவேண்டியிருந்தது. கவர்னர் டீனஸ் ரூபஸ்(Tineus Rufus) பகற்பொழுதில் வாசிக்கக்கூடாதென தடைசெய்ததை, யூத சமயக் குருமார்களான ரபீக்கள்(Rabbins) இரவில் வாசிப்பதற்கு எப்படியோ ஏற்பாடு செய்திருந்தனர்; இப்புராணக்கதையில் யூதர்களும், பார்சிகளும் ஒருவரையொருவர் மூர்க்கமாகத் தாக்கிக்கொண்ட அச்சம்பவம், யூத தீவிரவாதிகளான ஸேலெட்டுகளை வெறித்தனமாக கோபம்கொள்ளும் அளவிற்கு அழைத்துச் செல்வதைத் தடுக்கின்ற வகையில்,  புத்திசாலித்தனமாக முடிவெடுக்கும் கவர்னர் டீனியஸ் ரூஃபஸ்,   இஸ்ரேலின் மரபுகள் மற்றும் கட்டுக்கதைகளில் ஆர்வம் கொண்டவராகவும் இருந்ததால், யூதர்களிடையே விருத்தசேதன நடைமுறையை(circonsion) நீட்டிக்க முடிவு செய்தார், காரணம் அண்மையில் யூதர்களின் வழக்கிலிருந்த இத்தவறான செயல் அதீத ஆதாயம் மற்றும் சிற்றின்ப போகத்தை முன்னிட்டு இளம்வயது அடிமைகளுக்கு ஆண்மைநீக்கம்(castration) செய்ய உபயோகப்பட்டு வந்தது, எனவே அதற்கு எதிராகக் கடுமையான தண்டனைகளை வழங்கக்கூடியதொரு சட்டத்தைப் பிறப்பித்திருந்தேன். பிற இனத்தவரிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்வதாக இஸ்ரேல் தெரிவித்த அடையாளங்களில் ஒன்றான இந்நடவடிக்கையை நீட்டிப்பதன் மூலம் யூதத்தீவிரவாதிகளின் வெறிக்குணத்தை அடக்கமுடியுமென கவர்னர் நம்பினார். இத்தகவல் கிடைத்தபோது இதிலுள்ள அபாயத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை ; காரணம், உடற்பயிற்சிக் கூடங்களிலும் பொதுக்குளியல் இடங்களிலும் தங்கள் பிள்ளைகளைக் கேலிக்குரியவர்களாக இத்தகைய மரபுகள் மாற்றுகிறதென நினைத்து, அலெக்ஸாந்திரியா, மற்றும் உரோம் நகரங்களில் நாம் சந்திக்கிற பண்பாட்டிலும், பணத்திலும் வளர்ந்த யூதர்கள் இத்தகைய நடைமுறைக்குத் தங்கள் பிள்ளைகளை உட்படுத்துவதில்லை; அன்றியும் இதுபோன்றவற்றால் உண்டாகும் அடையாளங்களை அவர்கள் தங்களிடமிருந்தே மறைப்பதுண்டு என்பதையும் கேள்விப்பட்டிருந்தேன். இந்த மிர்ர்(Myrrh) வகை குவளைகள் சேகரிக்கும் வங்கியாளர்கள்  அசலான இஸ்ரேலியர்களிடமிருந்து வேறுபட்டவர்களா, வேறுபட்டவர்களெனில் எங்ஙனம் ? நான் அறியேன். 

எதுவுமே திருத்தமுடியாததில்லை எனக் தெரிவித்திருந்தேன், ஆனால்  இவற்றில்தான் வெறுப்பும், பரஸ்பர அவமதிப்பும், மனக்கசப்பும் இருந்தன. கொள்கையளவில், பேரரசின் மதங்களில் யூத மதமும் அதற்குரித்தான இடத்தைப் பெற்றிருந்தது; எண்ணற்ற கடவுள்களில் இஸ்ரேலியர் கடவுளும் ஒருவர், ஆயினும்   பல்வேறு மக்களிடையே தாங்களும் ஒருவரெனக் கருதப் பல நூற்றாண்டுகளாக இஸ்ரேல் மறுத்து வருகிறது. காட்டுமிராண்டிகளான டேசியன்கள்  தங்கள் ஜால்மோக்ஸ்(Zalmoxis) உரோமில் ஜூபிடர் என்ற பெயரில் அழைக்கப்படுவதை நன்றாக அறிவார்கள் ; காசியஸ் மலை, பால்(Baal)கடவுள்  தம்மில் வெற்றிதேவதையைக்(la Victoire)  கரம்பிடித்த இறைத்தந்தையை(le Père) உணரமுடிந்ததும் அக்கணத்தில் ஞானம்(la Sagesse) பிறந்ததும் பலரும் அறிந்த கதை ; எகிப்தியர்கள், அவர்களின் பல நூற்றாண்டு  கட்டுக்கதைகளில் எத்தனை மூடநம்பிக்கை இருப்பினும்,  ஒசைரிஸில்  இறுதிச் சடங்குகள் நிறைவேற்ற நியமித்த ஒரு பாக்கஸ் பூசாரியைப் பார்க்கச் சம்மதித்தனர் ; காட்டுமிராண்டியான  மித்திரா(Mithra)வுக்குத் தான் அப்பல்லோ கடவுளின் சகோதரர் என்கிற நினைப்பு உண்டு. ஒரே தெய்வமென்கிற கருத்தியத்தின்  குறுகிய எல்லைக்குள் உண்மையை முழுமையாகப்  பூட்டிவைத்து, அனைத்துப் பண்பையும் உள்ளடக்கிய கடவுளின் பன்முகத்தமையை அவமதிக்கும் ஆணவம் இஸ்ரேலியரிடம் மட்டுமே இருந்தது, இதனை உலகில் வேறுமக்களிடம் காணமுடியாது;  பிற சன்னிதானங்களில் பிரார்த்தனை செய்யும் மனிதர்களை வெறுக்கவேண்டுமென்றோ அல்லது அவமதிக்கவேண்டுமென்றோ எந்தவொரு கடவுளும் தம்மை வழிபடும் மக்களிடம்  தூண்டுவதில்லை.  பிறநகரங்களைப்போலவே ஜெருசேலமும் பல்வேறு இனமக்கள், பல்வேறு சமய வழிபாட்டுமுறைகளென்று அமைதியுடன் இருப்பதற்கு வேண்டிய அனைத்தையும் செய்யும் ஆவலில் இருந்தேன்.  தீவிர மதவாதத்திற்கும், பகுத்தறிவுக்கும் இடையிலான எந்தப் போரிலும், பிந்தையது அரிதாகவே வெற்றி பெறுகிறது என்பதைக் கொஞ்சமேனும் ஞாபகத்தில் கொண்டிருக்கவேண்டும், தவறிவிட்டேன். ஜெருசலேம் நகரின், பழைய நகர்ப் பகுதியில் நாம் கிரேக்க இலக்கியம் கற்பிக்கப்படும் பள்ளிகளைத் திறந்திருப்பது யூத மதகுருமார்களைப் பொறுத்தவரைக் கூடாதது, கண்டிக்கத்தது; ஜோஷுவா ஒரு ராபை ; படித்த மனிதர் ; நல்ல பண்பாளரும் ஆவார்.  அவருடன் ஏதென்ஸ் நகரில்  அடிக்கடி உரையாட நேர்ந்துள்ளது. அவரே இப்பிரச்சினையின்போது  அவருடைய அன்னிய பண்பாட்டு நேசத்திற்கும்,   நம்முடன் உறவு பாராட்டியதற்காகவும்,  சக யூதமக்களிடம் மன்னிப்புகோரும் முயற்சியில் இறங்கினார் ;  அன்றியும் தம்முடைய சீடர்களிடம், தங்களுடைய  சமயத்தில் நம்பிக்கையில்லாதவற்றைப் புறக்கணிக்க வேண்டுமென்றும், அப்படி அவர்கள் விரும்பினால் (யூதர்கள்  சட்டத்தின்படி இரவும் பகலும் படிக்க வேண்டும்), இரவு பகல் அல்லாத வேளைகளில் நேரம் கிடைத்தால் ஒரு மணி நேரத்தை இதற்கென ஒதுக்கலாமெனவும்  கட்டளையிட்டார்.  சன்ஹெட்ரின்(Sanhédrin) யூத சமயத்தினரின் தலைமை அமைப்பு ; அதில் இசுமாயில் முக்கிய உறுப்பினர் ; உரோமானியருக்கு ஆதரவாக இருப்பவரென்று  நம்பப்பட்டவர். ஆனால் அவருங்கூடத் தன்னுடைய உடன்பிறந்தவர் மகன் பென்டாமா என்பவருக்கு,   கவர்னர் டீனஸ் ரூஃபஸ் அனுப்பிய அறுவை சிகிச்சை நிபுணரை நிராகரித்துச் சாக அனுமதித்தார். தீபுர் மக்கள் மதவெறியர்களின் கோரிக்கைகளுக்கு அடிபணியாமல் இருப்பதற்கு, மனங்களை சமரசம் செய்வதற்கான வழிகளைத் தேடிக்கொண்டிருந்தபோது, ​​கிழக்கில் மிகவும் பதற்றநிலை சூழ்ந்தது; ஜெருசலேமில் ஒரு தீவிரவாதத்தின் சதி  மீண்டும் வெற்றிபெற்றிருந்தது. 

இம்மக்கள் கசடுகளுக்கிடையே பிறந்த ஒரு பராக்கிரமசாலிக்குப் பெயர்  சைமன்; யூதர்களுக்கு அவன், பார் கோச்பா(Bar Kochba), அரமேய (Armaic)மொழியில்  « நட்சத்திரத்தின் மகன் » என்று பொருள், கிளர்ச்சித் தீயைப் பற்றவைத்த தீப்பந்தமாகவும், தீப்பற்றவைக்க உதவும் கண்ணாடியாகவும் அவன் இருந்தான். ஆனால் இவை அனைத்தும் வதந்திகள் என்னிடம் உருவாக்கியவை; நேருக்குநேர் அவனைப் பார்த்ததென்னவோ ஒருமுறைதான் ; அதுகூட அவனுடைய துண்டிக்கப்பட்ட தலையை எங்கள் சதயன்(Centurion) ஒருவன் என்னிடம் கொண்டுவந்து காட்டிய நாளின்போது. ஆயினும், மனிதர் பிரச்சினைகளில் இத்தனை உயரத்திற்கு, இவ்வளவு விரைவாக அவனை அழைத்துச் செல்ல ஏதோவொரு திறன் அவனிடம் இருந்துள்ளது ; அதனை அங்கீகரிக்கும் நிலையில் நானும் இருந்தேன் ; குறைந்த பட்சம் ஒருசில அடிப்படைத் திறனின்றி இந்த அளவிற்கு ஒருவர் தம்மை முன்நிறுத்துவது சாத்தியமே இல்லை. பாசாங்கும் சூட்சமும்கொண்ட ‘பார் கோச்பா’ என்று அழைக்கப்பட்ட இந்தச் சாகசக்காரனை முதலில் குற்றம் சாட்டியவர்கள் மிதவாத யூதர்கள்; என்னைப்பொறுத்தவரை பண்பாடற்ற இதுபோன்ற உணர்வுகளுக்குள்ள சிக்கல் அவை தமக்கென்று படைக்கும் பொய்கள் ; சூதுடன் கைகோர்த்திருக்கும் அவற்றின் மதவெறி ; தங்கள் இலட்சியங்களையும் வெறுப்புகளையும் திருப்திப்படுத்த, எந்தவொரு தலைவனுக்குப்  பல நூற்றாண்டுகளாக யூத மக்கள் காத்திருந்தார்களோ, அத்தலைவனாக சைமன் தன்னை முன்நிறுத்தினான். யூதமக்களின் அபிமானத்தைப்பெற்ற இத்தலைவன் தன்னை மெசியா(Messie) என்றும், இஸ்ரேலியர்களை ஆளவந்த சக்கரவர்த்தியென்றும் பிரகடனப் படுத்திக்கொண்டான். கல்வி கேள்விகளிற் சிறந்த முதியவரான ராபை  ஏக்கிபா(Akiba)  ஒரு பித்தர்போல, கதாநாயகன் சைமோனை குதிரையில் அமரவைத்து, அதன் கடிவாளத்தைக் கையிற் பிடித்தபடி ஜெருசலத்தில் வீதி வீதியாகச் சுற்றிவந்திருக்கிறார்; விருத்தசேதனம் செய்திராத பார்வையாளர்கள் ஆலயத்திற்குள் பிரவேசித்ததால் அசுத்தமானதாகக் கூறி மூடிவைத்திருந்த ஆலயத்தை பிரதான ராபையான எலியாசர்(Eleazar), மீண்டும் மக்களுக்கு அர்ப்பணித்தார்; ஏறக்குறைய இருபது ஆண்டுகளாக நிலத்தடியில் புதைக்கப்பட்டிருந்த ஆயுதக் குவியல்களை பார்-கோச்பாவின் தொண்டர்கள் கிளர்ச்சியாளர்களுக்கு விநியோகித்தனர்;  யூதத் தொழிலாளர்களால் வேண்டுமென்றே  குறைபாடுகளுடன் தயாரிக்கப்பட்டு,  அதன் காரணமாக நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்ட ஆயுதங்கள் நம்முடைய ஆயுதக் கிடங்குகளில் குவிந்து கிடந்தன ;  அவற்றையும் கிளர்ச்சியாளர்கள் சூறையாடினர். ஸேலட்(Zealots) கூட்டம்,  திராயான் காலத்திய யூதர்கள் கலகத்தை நினைவூட்டும் வகையில், தனிமைப் படுத்தப்பட்டிருந்த நம்முடைய உரோமானிய பாதுகாப்புப்படை முகாம்மீது ஈவிரக்கமற்ற கொடூரத்துடன் தாக்குதல் நடத்தி  நம்முடைய படைவீரர்களை படுகொலை செய்தது. கடைசியில் ஜெருசலேம் கிளர்ச்சியாளர்களின் கைகளில் விழுந்தது,   ஜெருசலேமின் புதிதாக உருவெடுத்திருந்த ஏலியா கேபிடோலினா(Ælia Capitolina) ஒரு  மகாதீபம்போல எரிந்தது.  இருபத்திரண்டாவது படைப்பிரிவின் முதலாவது அணியை நம்முடைய ஆட்சி பிரதிநிதிகளில்(Légat)  ஒருவரான சிரி பப்லியஸ் மார்செல்லஸ் (Syrie Publius Marcellus) தலைமையில் எகிப்திற்கு அவசர அவசரமாக அனுப்பிவைத்தோம் ; ஆனால் நம்முடைய படைவீரர்களைக் காட்டிலும்  எண்ணிக்கையில் பத்துமடங்கு அதிகமிருந்த ஒரு மனித மந்தையால் அப்படையணியினர் நிலைகுலைந்தனர். கிளர்ச்சி பின்னர் இன்னதென்று விவரிக்கவொண்ணாத  யுத்தமாக வெடித்தது. 

நம்முடைய லீஜியன்கள், ‘கோபாக்கினி’ என்ற பெயர்கொண்ட பன்னிரண்டாவது   படைப்பிரிவு(la Douzième Fulminante), ‘இரும்பு‘ என்ற பெயர்கொண்ட ஆறாவது  படைப்பிரிவு(la Sixième Légion, la Légion de Fer ) இரண்டும், இத்தருணத்தில்  இஸ்ரேலின் யூதேயா(Judée) பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துருப்புகளோடு இணைந்துகொண்டனர் ; அதனால் இப்பகுதியில் நமது படைப்பலம் வலுப்பெற்றது. சில மாதங்களுக்குப் பிறகு, வட பிரித்தானிய மலைப்பகுதிகளில் கடந்தகாலத்தில்  அமைதியை நிலைநாட்டிய ஜூலியஸ் செவெரஸ்(Julius Serverus), இராணுவ நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்றார். அவர் வரும்போது கடினமான நிலப்பரப்பில் சண்டையிடுவதற்குப் பழகிய பிரிட்டிஷ் துணைப்படைகளின் சிறிய படைப்பிரிவுகளைத் தன்னுடன் அழைத்து வந்தார். நமது துருப்புகளிடம் கணிசமாக ஆயுதங்கள் இருந்தன ;  நமது படைத்தளபதிகள்  காலாட்படைக்குரிய பிரத்தியேக  சதுரம் மற்றும் செவ்வகப்(Infantry Square and Phalanx) போர்க்கள யுத்தமுறைமைகளைப் பயின்றவர்கள், ஆயினும் அவர்கள் பெரும் எண்ணிகையிலான துருப்புகளுடன் மோதவும், திடீர் தாக்குதல்களைச் சமாளிக்கவும்,  நாட்டுப்புற கிளர்ச்சி நுட்பங்களுடனும் மோதும் மனிதர்களை எப்படி எதிர்கொள்வதெனத் தெரியாமலும் சிரமப்பட்டனர். சைமன், அவனது வழிமுறையில் கெட்டிகாரன், தனது ஆதரவாளர்களை நூற்றுக்கணக்கான சிறுசிறு சேனைகளாகப் பிரித்து மலைமுகடுகளில்,   குகைகளின் பதுங்கிடங்களில், கைவிடப்பட்ட  குவாரிகளில்,  நெரிசலான புறநகர் பகுதியிலுள்ள வீடுகளில் நிறுத்தி வைத்திருந்தான்; இவனை வெல்வதோ, சிறைப் பிடிப்பதோ இயலாது என்கிறபோதும், இந்த எதிரியைக் கொல்வது சாத்தியமென்று செவெரெஸ் புரிந்துகொண்டார்; தொடர்ந்து சண்டையிட்டு, எதிரியின் ஆட்பலத்தையும் ஆயுதபலத்தையும் குறைப்பதென்று முடிவெடுத்தார். சைமனுடைய மதவாதமும், பயமுறுத்தலும் விவசாயக் குடிகளைத் தொடக்கத்திலிருந்தே ஸேலட்டுகளுடன் கைகோர்ப்பதற்குக் கிடைத்த பொதுவான காரணம் ; பாறைகள் ஒவ்வொன்றும் அரணாகவும், திராட்சைத் தோட்டங்கள் ஒவ்வொன்றும் அகழியாகவும் உருமாறியிருந்தன ; இந்நிலைமை மாறவேண்டுமெனில், ஒவ்வொரு பண்ணையும் பட்டினியால் வாடவேண்டும் அல்லது தாக்குதலுக்கு உள்ளாகவேண்டும். பேச்சுவார்த்தைகளின் கடைசி முயற்சிகள் பயனற்றவை எனத் தெரியவந்த மூன்றாவது வருடத்தில் ஜெருசலேம் திரும்ப நம்முடைய கைக்குவந்தது ; சக்கரவர்த்தி டைட்டஸ்(Titus) தீக்கு எரியுண்டபோது இந்த யூத நகரம் சிறிதேனும் தப்பிக்க முடிந்தது ; இப்பிரச்சினையில் அழிவு எதையுமே விட்டுவைக்கவில்லை. கிளர்ச்சியாளர்களுக்கு இஸ்ரேலிலுள்ள மற்ற நகரங்கள் உடந்தையாக இருப்பது தெரிந்தும், செவெரஸ் நீண்டகாலம் பாராமுகத்துடன் இருந்ததால், அந்நகரங்கள் தற்போது எதிரிகளின் கோட்டைகளாக மாறியிருந்தன. இவற்றையும் கைப்பற்றவேண்டிய நேரம் வந்தது, தாக்குதல்கள் நடத்தப்பட்டன, முதலில் வீதிகள், தொடர்ந்து இடிபாடுகளுடன்கூடிய நகரங்கள் என்கிற வரிசையில் அவையும் பின்னர் நமது கைக்கு வந்தன,  

நெருக்கடியான இக்காலகட்டத்தில், யூதேயாவில் நமது படையினருடன் இருந்தேன். துணை இராணுவத் தளபதிகள் இருவர் உடனிருந்தனர். இப்படிச் சொல்கிறபோது எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளிலும், செயல்படுத்தப்பட்ட எந்தவொன்றிலும், கொடூரமானவைகளுக்கு வாய்ப்புண்டு என்கிற நிலையில், அவ்ற்றில் எனக்கும் பங்குண்டு. இராணுவ நடவடிக்கையின் பொருட்டு மேற்கொள்ளப்பட்டிருந்த இப்பயணத்தின், இரண்டாவதுகோடை முடியும் தறுவாய்; மற்றொரு பயணத்திற்கான ஆயத்தங்களில் கசப்புடன் ஈடுபட்டிருந்தேன். யூஃபோரியன், வழக்கம்போல வெகு நாட்களுக்கு முன்பு ஸ்மிர்னா கலைஞர் ஒருவர் உருவாக்கிய, உபயோகத்தில் நெளிந்திருந்த கழிப்பிடத் தொட்டியையும், ஒப்பனைப் பொருட்களையும், நூல்கள் மற்றும் நிலப்படங்கள் பெட்டியையும், அரசவை மேதை வடித்ததொரு சிலை மற்றும் வெள்ளி விளக்கு ஆகியவற்றையும் மூட்டை கட்டிக் கொண்டிருந்தான். சிதோன்(Sidon) நகரை வந்தடைந்தபோது இலையுதிர்காலத்தின் தொடக்கம். 

ஆட்சிப்பீடத்தில் அமர்வதற்கு முன்பாக இராணுவத்தில் நான் இருந்தவன். நிர்ப்பந்தங்களுக்குரிய இழப்பீடுளைப் பெறாமல் ஒருபோதும் பணிக்கு நான்  திரும்பியவனில்லை. எனது வாழ்க்கையில் உழைக்கும் வயதின் கடைசி இரண்டுவருடங்களைக் கொடூரமான லீஜியன் துருப்புகளோடு, வறண்ட பாலஸ்த்தீன முகாம்களில் கழித்திருக்கிறேன், அதன்பொருட்டு எனக்கு வருத்தமேதுமில்லை. மீண்டும் தோலாடையையும், இரும்பினாலான கவசத்தையும் உடுத்தும் மனிதனாக மாறினேன், அவசரமற்றவைகளைத் தள்ளிவைத்தேன்,  கடினமான வாழ்க்கையின் எளிய நடைமுறைகளின் பின்புலத்தில் ஒரு சில மாற்றங்கள் நேர்ந்தன : குதிரை ஏற்றமும் இறக்கமும்  முன்பைக் காட்டிலும் சற்றுமெதுவாக, முன்பைவிட  நிதானமாக, சற்றுக் கூடுதல் அடக்கத்துடன் நிகழ்ந்தன ; வழக்கம்போலத் துருப்புகள் புடைசூழ ( எதற்காகவென்று தெய்வங்கள் மட்டுமே அறிவர் ) ஓருவகை வழிபாடு வாழ்க்கை, அதில் சமய அணுகுமுறையுமுண்டு, சகோதரத்துவ அணுகுமுறையும் உண்டு.  என்னுடைய இராணுவப் பணியின் இறுதி நாட்களில்,   கிடைத்த விலைமதிப்பற்ற சந்திப்பு, உதவியாளராக நான் தேர்வு செய்திருந்த  செலர் என்ற இளம் திரிப்யூன், அவருடன் மிகவும் பற்றுதலுடனிருந்தேன். இன்றுவரை அவர் என்னுடன் இருக்கிறார், உனக்கும் அவரைத் தெரியும். தலைக்கவசம் அணிந்த அந்த அழகிய மினெர்வா  முகத்தை நான் ரசிப்பதுண்டு. இவ்விவகாரத்தில் அதாவது இதுபோன்ற அன்பு பரிமாற்றத்தில் புலன்களின் பங்களிப்பு குறைவு, அவற்றின் பங்களிப்பு உடலவிட்டு உயிர் பிரிந்தால், முடிந்தது. இராணுவத்தில், ஓர் இரண்டாம் கட்ட அதிகாரியிடம் பொதுவில் நாம் எதிர்பார்க்கிற எல்லாப் பண்புகளும் அவனிடம் இருக்கின்றன; அவன் முதன்மை நிலையை எட்டாமல்  தடுப்பதும் இதே நற்பண்புகள்தான். நேற்றைய காலம் இன்றில்லை, சூழ்நிலையில் பெரு மாற்றம் ; இன்றைக்கும் அர்ப்பணிப்பு, நேசம், பணிவிடை இம்மூன்றிற்கும் தனது விதியை ஒப்படைக்கிற ஒரு ஜீவனை, திரும்பவும் ஒருமுறை என்னால் காணமுடிந்தது; எனவேதான் செலெரை உனக்கும் சிபாரிசு செய்கிறேன்.  நான் அவனை அறியவந்த நாளிலிருந்து என்னுடைய பாதுகாப்பு, எனது நலன் என்பதன்றி வேறொரு சிந்தனை அவனிடம் இருந்ததில்லை;  இன்றைக்கும் எனக்கு உறுதுணையாக இருப்பவன் அவன்தான்.

கிளர்ச்சிக்கெதிரான இராணுவ நடவடிக்கையின் மூன்றாம் ஆண்டு ; வசந்த காலம்.  சைமோன் மற்றும் அவனுடைய ஆதரவாளர்களுக்கு கழுகுக் கூடாக இருந்த,  யூதேயா பிரதேச பெத்தார் கோட்டையை முற்றுகையிட்டிருந்தோம்; உண்ண உணவின்றி, பருக நீரின்றி விரக்தியின் உச்சத்தில் வதைபட்டபோதும் அவற்றை எதிர்கொள்ள  அவர்களால் முடிந்தது; அதன் காரணமாக அவனுடைய ஆதரவாளர்கள் ஒருவர்பின் ஒருவராக மடிந்தபோதும்கூடச் சரணடைய இணங்காமல், சைமன் அதைப் பார்த்துக்கொண்டிருந்தான். கிளர்ச்சியாளர்கள் பின்வாங்கியபோது பழத்தோட்டங்களை எரித்திருந்தார்கள்; விளைந்த தானியங்களை அழித்திருந்தார்கள்; கால்நடைகளைக் கொன்றிருந்தார்கள்; கிணறுகளில் நம்முடைய வீரர்களின் செத்த உடல்களை எறிந்திருந்ததால், தண்ணீர் கிருமித்தொற்றுக்கு உட்பட்டிருந்தது;  எனவே நம்முடைய படையினரின் துன்பமும் கிளர்ச்சியாளர்கள் அடைந்த துன்பத்திற்கு எவ்விதத்திலும் குறைந்ததில்லை. இயற்கையாகவே யூதேயா வறண்டபூமி ; தவிர, பல நூற்றாண்டுகாலமாக முட்டாள்தனமான மற்றும் வெறித்தனமான செயல்பாடுகளால் உறிஞ்சப்பட்டு, எலும்புமட்டுமே மிச்சமிருந்தது, இந்நிலையில்  கிளர்ச்சியாளர்கள் பிரயோகித்த காட்டுமிராண்டித்தனமான வழிமுறைகள் கொடூரமாக இருந்தன. கோடை கடுமையான வெப்பத்துடனும், உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கின்ற வகையிலும் இருந்தது; காய்ச்சலும், வயிற்றுப்போக்கும் நமது வீரர்களைக் கொன்றது;  ஆனாலும், வீரர்கள் மத்தியில் தொடர்ந்து பாராட்டத்தக்கதொரு ஒழுக்கம் நிலவியது; விளைவாக, செயலற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தபோதும் விழிப்புடன் இருந்தார்கள் ;  நோயில் வாடவும், பிறவகை இன்னல்களுக்கு ஆளாக நேர்ந்தபோதும், ஒருவகை மௌனச் சீற்றம்  அவர்கள் நெஞ்சை நிமிர்த்தியிருந்தது ; அதனை நானும் உணரமுடிந்தது.  இதுபோன்ற இராணுவ நடவடிக்கைகளினால் ஏற்படும் சோர்வுகளையும், கடினமான நாட்களையும், கடும் வெப்பம், மற்றும் கடுங்குளிரையும், பலத்த காற்று மற்றும்  தூசிப்படலம் போன்றவற்றையும்  தாங்கிக்கொள்ள முன்புபோல எனதுடலுக்குச் சக்தியில்லை. என்னுடைய பாத்திரத்தில் பன்றி இறைச்சியையும், வேகவைத்த பருப்புகளையும் உண்ணாமல் மிச்சம்வைப்பதும், அதனால் பசியால் வாடுவதும் வாடிக்கையானது. இதற்கு முன்பு கோடையில் ஒரு மோசமான இருமலால் அவதிப்பட்டேன்; ஆனால் பாதிக்கப்பட்டது நான் மட்டுமல்ல.செனெட்டுக்கு எழுதும் உத்தியோகபூர்வமான கடிதங்களின் தலைப்பில் “சக்கரவர்த்தியும், இராணுவமும் நலம்” , என்கிற வாக்கியம் தவறாமல் இடம் பெறும் ; அதைத், தற்போது நான் உபயோகிப்பதில்லை ; காரணம், இராணுவமும், சக்கரவர்த்தியும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தனர். மாலையில், செவெரஸ்ஸுடன் (Sevérus) உரையாடிய பின்னர், எதிரியின் அணியிலிருந்து,எங்கள் முகாமுக்குத் திரும்பிய எதிரியின் ஆதரவாளர்களிடம் பேச்சுவார்த்தை ; உரோமிலிருந்து  அன்றையதினம் கடைசியாக வந்த மடலைப் பார்வையிடல் ; ஜெருசலேம் நகரின் புறநகர்ப்பகுதிளைச் சுத்தப்படுத்தும் பொறுப்பிலிருந்த பப்லியஸ் மார்செல்லஸிடமிருந்தும், காஸா பகுதியை ஒழுங்குபடுத்தும் பொறுப்பிலிருந்த ரூஃபஸிடமிருந்தும் இறுதித் தகவல்களைக் கேட்டறிதல்  – ஆகிய, அடுக்கடுக்கான பணிகளை முடித்தபின்பு, என்னுடைய குளியலுக்குத் தார்ப்பாயிலான தொட்டியில் ஏவலன் யூஃபோரியன் நீரை அளவோடு வைத்திருப்பான். எல்லாம் முடிந்ததும், என்னுடைய கட்டிலில் படுத்தபடி, எதையாவது யோசிப்பேன்.

தொடரும்……

அதிரியன் நினைவுகள்

இரத்தம் வரும்வரைத் தனதுடலைச் சொறிந்துகொள்ளும்… அதிரியன் நினைவுகள் – 36
Exit mobile version