Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

அதிரியன் நினைவுகள் -28

This entry is part 27 of 48 in the series அதிரியன் நினைவுகள்

மூலம் : மார்கெரித் யூர்செனார்

தமிழாக்கம் : நா.கிருஷ்ணா

சில நாட்களுக்குப் பிறகு நாங்கள் அலெக்ஸாண்ட்ரியாவுக்குத் திரும்பினோம். கவிஞர் பான்கிரேட்ஸ்(Pancartes) அருங்காட்சியகத்தில் எனக்காக  விருந்தொன்றிர்க்கு  ஏற்பாடு செய்தார்; விலைமதிப்பற்ற பழமையான இசைக்கருவிகளை  அங்கிருந்த இசைகூடமொன்றிற்கு தருவித்திருந்தார்கள்:   நம்முடைய லயர் யாழ்க்கருவிகளைக் காட்டிலும் கனமான  அதேவேளையில் நம்முடையவற்றைக் காட்டிலும் சிக்கல்கள் அதிகமில்லாத பழமையான டோரியன் வகை லயர்கள்(lyres) ; பிறகு இவற்றுக்கு நெருக்கமான பாரசீக மற்றும் எகிப்து பிரதேசங்களில் இசைக்கப்படும் சற்று வளைந்த சித்தாராக்கள்(Cithares), அலிகளின் குரலைப்போல ஒலிக்கிற ஃபிரிஜியன்(Phrygiens) வகை புல்லாங்குழல்கள், கவனமாக கையாளவேண்டிய இது நாள் வரை அறிந்திராத இந்திய புல்லாங்குழல்கள் ஆகிய அனைத்தும் வாசிக்கப்பட்டன. எத்தியோப்பிய குடிமகன் ஒருவன், வெகுநேரம் ஆப்ரிக்க சுரைக்குடுக்கைகளில் தயாரித்திருந்த தோற்கருவியை வாசித்தான், பிறகு ஒரு பெண்மணி,   முக்கோண வகை ஹார்ப்(harp) இசைக்கருவியை சோகத்தொனியில் இசைத்தாள், வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவைகள் என்னவோ அவற்றை அடையமுடிந்தால் போதுமென, எனது வாழ்க்கையை அப்போது எளிமைபடுத்திக் கொண்டிருந்தேன், அப்படியொரு முடிவை நான் எடுக்காதிருப்பின்,  அதிகம் ஒட்டாமல் விலகியிருந்த அப்பெண்ணின் அழகு ஒருவேளை என்னை மயக்கியிருக்கும். கிரீட் தீவைச்(Crete) சேர்ந்த மீசோமெடிஸ்(Mésomédès), எனக்கு விருப்பமான  இசைக்கலைஞர் ; கடினமும், குழப்பமும், பலத்தக் காற்றோடு கலந்த மணல்போல பிடிபடாத தன்மையும் கொண்ட, தம்முடைய  ஸ்பிங்க்ஸ் (Sphinx) கவிதையை நீர் இசைப்பேழை(Orgue à eau) துணையுடன் வாசித்தார். இசைக்கச்சேரி மண்டபம் ஒரு முற்றத்தில் முடிந்தது, அங்கு நீரூற்றின் படுகையில் சில அல்லிகள் வளர்ந்திருந்தன; அதொரு ஆகஸ்ட்மாத பிற்பகலின் முடிவுநேரம் என்கிறபோதும்,  வெப்பம் தணியாமல் உச்சத்திலிருக்க, அல்லிமலர்கள் இதழ்களை அகலவிரித்து பூத்திருந்தன. கோடைகாலத்தில் இறுதியில் மட்டுமே பூக்கிற  அரிதான ஒரு வகை இரத்த சிவப்பு பூக்களும் அங்கிருந்தன, அவற்றை இடைவேளையின்போது கண்டு வியக்க, கவிஞர் பான்கிரேட்ஸ் எங்களை அனுமதித்தார். ஏமனின் பாலைவனச்சோலையில் நாங்கள் கண்ட  சிவப்புநிற அல்லி மலர்களை நினைவுகூர்ந்தோம். காயமுற்ற விலங்கு, பூக்களிடையே இறந்த அச்சம்பவம் எதையோ தெரிவித்ததுபோல அப்படியொரு உற்சாகசம்  அவருக்கு. ஏமன் வேட்டைச் சம்பவத்தை கவிதை வரிகளாக மாற்றும் யோசனையை முன்வைத்தார், அல்லி மலர்களின் சிவப்புக்கு சிங்கத்தின் இரத்த சாயமே காரணமென்றார்.  வழிமுறை புதியது அல்ல: இருப்பினும் செயல்படுத்த உத்தரவு பிறப்பித்தேன். ஓர் அரசவைக்கவிஞருக்குரிய அத்தனைத் தகுதிகளையும் பெற்றிருந்த பான்கிரேட்ஸ், உடனடியாக ஆண்ட்டினஸைக் கௌரவிக்கும் வகையில் சில இனிமையான கவிதை வரிகளை எழுதினார்: ரோஜா, பதுமராகம், செலண்டைன் ஆகிய பூக்களெல்லாம் கருஞ்சிவப்புநிற அல்லிவட்டத்திற்கு தாரைவார்க்கப்பட்டன, இனி இந்த கருஞ்சிவப்புநிற அல்லிகள், பிடித்தவை பட்டியலில் இடம்பெறக்கூடும். அங்கிருந்த ஓர் அடிமையை அழைத்து நீர்ப்படுகையில் இறங்கி கைநிறைய அல்லிமலர்களை பறிக்குமாறு ஆணயிட்டோம். அளிக்கப்படும் மரியாதைக்கு பழகியிருந்த இளைஞனும் பயபக்தியுடன், மெலிந்தும் வளைந்த தண்டுகளோடும் இருந்த அல்லிமலர்களை ஏற்றுக்கொண்டான், அந்திசாய்ந்ததும் கண்ணிமைகள்போல அவை மூடவும் செய்தன.

இப்படியான தருணத்தில் மகாரணியும் வந்துசேர்ந்தாள். நீண்ட  பயணத்தின் களைப்பு  அவளிடம் தெரிந்ததது,  அனைவரிடமும் கண்டிப்பாக இருக்கப்பழகி அதை நிறுத்த  தவறியதால் பலவீனமானவள். முட்டாள்தனமாக  சூட்டோனியஸை(Suetonius) அவள் ஊக்கப்படுத்திய காலமொன்றுண்டு, தற்போது  அவளுடைய அரசியல் தலையீடுகள் அப்படிப்பட்ட பிரச்சனை எதையும்  தருவதில்லை;  இன்று அவளைச் சுற்றியுள்ள மனிதர்கள்  மொத்தபேரும், அதிகம் அவளை விமர்சிக்காத படித்தபெண்கள். அவளுக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவர், தற்போது கிரேக்கமொழியில் நன்றாக கவிதை எழுதக்கூடிய கவிதாயினி  ஜூலியா பால்பில்லா(Julia Balbilla). மகாராணியும், அவளுடன் வந்த பரிவாரமும் லைசியத்தில்(Lyceum) தங்கினார்கள், வெளியில் அதிகம் வருவதில்லை. மாறாக லூசியஸ் வழக்கம்போல அறிவுத்திறம், விழிகள் இரண்டில் எதன்மூலம் இன்பம் கிடைப்பினும் அதனைத் துய்ப்பதில் ஆர்வமாக இருந்தார், 

இருபத்தாறு வயதில், உரோம் நகர வீதிகளில், வியப்புக்குரிய அவர் அழகை இளைஞர்கள் கொண்டாடியதுண்டு, அந்த அழகில் கிட்டத்தட்ட எதையுமே அவர் இழந்தவரில்லை. தொடர்ந்து அபத்தம், முரண்பாடுகள்,  மகிழ்ச்சி என்று வாழ்நாளை கழித்த மனிதர். அந்நாட்களில் அவரிடம் கண்ட சுயநலம் இன்று முற்றியிருந்தது. பயணம் மேற்கொள்கிறபோதெல்லாம் தனது தலைமை சமையற்காரரை உடன் அழைத்துசெல்வார்; அவரது தோட்டக்காரர்கள் கப்பலில் கூட அவருக்காக, அரிய மலர்களைக் கொண்டு வியக்க வைக்கும் படுக்கைகளை உருவாக்கினார்கள்; தமக்கென்று வடிவமைத்த கட்டில், நான்குவித வாசனைபொருட்கள் திணித்த  படுக்கைகள், அனைத்திற்கும் மேலாக தலையணைகள் எண்ணிக்கைக்கு நிகராக இளம்பெண்களும்  படுக்கையில் சூழ்ந்திருப்பார்கள். வாசனைத் தூள் பூசி, அலங்கார ஆடைகளில், வண்ணமயமாக செஃபிரஸ்(Zéphyes)போலவும் எரோஸ்(Eros) போலவும்  தோற்றம் தருகிற  குற்றேவல் துணைவர்கள்  அவருடைய இச்சைக்கு, (சிலநேரங்களில் அந்த இச்சை விபரீதமாக மாறினும்) தங்களால் முடிந்தவரை இசைந்து நடக்கிறவர்கள். இளைஞன் போரியாஸுடைய மெலிந்த தோற்றத்தை லூஸியாஸ் விரும்பிக் கொண்டாடியதின் விளைவாக, அவன் பட்டினி கிடந்து உயிர் விடும் நிலையிலிருந்தான்,  தவிர்க்க நான் தலையிட வேண்டியிருந்தது. எனினும், இவை அனைத்துமே அவர் மீது அன்பு செலுத்தவேண்டும் என்பதைக் காட்டிலும் எரிச்சலூட்டுவதாக இருந்தது. இப்பிரச்சினையை தவிர்த்துவிட்டு அலெக்ஸாந்திரியா நகர் விஷயத்திற்கு வருகிறேன்,  இங்கிருந்த கலங்கரை விளக்கு, அலெக்ஸாண்டர் மற்றும் மார்க் ஆண்ட்டனியின் கல்லறைகள் (அதிலும் பிந்தைய கல்லறை அலெக்ஸாண்டருக்கு போட்டியாகவிருந்த ஆக்டேவியாவை, கிளியோபாட்ராவை  நிரந்தரமாக வெல்லக் காரணமானவனின் கல்லறை), கோபுரங்கள், தொழிற்சாலைகள் மற்றும்  பட்டறைகள் அனைத்தையும் சென்று பார்த்தோம், இப்படியலில் புறநகரிலிருந்த இறுதிச்சடங்கு செய்பவர்களின் அலுவலகங்களும் அடங்கும். ஒரு கைதேர்ந்த அலெக்ஸாந்திரியா சிற்பியிடம் வீனஸ் டயானா, எர்மெஸ் சிலைகளென்று நிறைய என்னுடைய பிறந்த ஊரான இட்டாலிகாவை(Italica) அழகுபடுத்தவும், நவீனபடுத்த வேண்டுமென்கிற திட்டத்துடனும் வாங்கிவந்தேன். தாலமி பேரரசு கட்டமைத்த செராப்பிஸ்(Serapis) வழிபாட்டுமுறை பூசாரி ஒருவர் எனக்கு ஓப்பாலின்(Opaline) வகை கண்ணாடிக் குவளைகளைப் பரிசளித்தார்; நான் அவற்றை  செர்வியானஸுக்கு(Servianus) அனுப்பிவைத்தேன், அவருடன் என் சகோதரி போலீனாவுக்கு (Paulina) சுமுகமான உறவில்லை என்கிற போதும், நான் நல்லுறவுடன் இருந்தேன், அவரிடம் அதிகம் எனக்குப் பிரச்சினைகளில்லை.  அலெக்ஸாந்திரியா பயணத்தில் அனேக சிரமங்களைச் சந்திக்க நேர்ந்தபோதும் மிகப்பெரிய அளவில் கட்டுமானத் திட்டங்கள் மேற்கொள்ளபட்டன.

வர்த்தகத்தில் பலவிதம் உண்டென்பதுபோல அலெக்ஸாண்ட்ரியாவில் வேறுபட்ட பல சமயங்கள் இருக்கின்றன, ஆக வர்த்தகப் பொருட்களைப் போலவே இச்சமய  தயாரிப்புகளின் தரமும் ஐயத்திற்குரியவை. கிறிஸ்தவர்கள் வேறுபடுவது  குறிப்பாக பயனற்ற தங்கள் உட்பிரிவுகளால். அவற்றில் இரண்டு எத்தர்கள் கூட்டமுண்டு ஒன்று வாலண்ட்டினஸ் (Valentininus) மற்றது பசிலைடு(Basilide),  இவை இரண்டு கூட்டமும், ஒன்றுக்கொன்று சதிவேலைகளில் ஈடுபட்டதன் காரணமாக  உரோமானிய காவல்துறையினரால் நெருக்கமாகக் கண்காணிக்கப்பட்டன. எகிப்தில்  மக்களில் பாமரர்கள் இதுபோன்ற ஒவ்வொரு சடங்கு  நடைமுறையின்போதும் அதனைத் தங்களுக்குச் சாதமாக எடுத்துக்கொண்டு பிற மக்கள்மீது குண்டான்தடியுடன் தாக்குதலில் இறங்கினார்கள்.  அபிஸ் (Apis)ரக எருதொன்று  மாண்டபோது ஏற்பட்டக் கலவரம் அதற்கு உதாரணம், அதுபோன்றதொரு கலவரம் உரோமப் பேரரசுக்கு வாரிசு சார்ந்த பிரச்சினையில்கூட ஏற்படவில்லை. நாகரீகத்தில் திளைத்த மனிதர்கள் தங்கள் தெய்வங்களை,  ஒரு வைத்தியர் சரிவரவில்லையெனில் இன்னொருவரைத் தேடிப்போவதுபோல  கடவுள்களை மாற்றிக்கொள்கிறார்கள்,  அதில் அவர்கள் ஜெயித்தார்கள் எனவும் சொல்லமுடியாது. உண்மையில் அவர்களுடைய ஒரே விக்கிரகம் தங்கம், வெட்கமற்று அதற்கு வக்காலத்து வாங்கிய மனிதரகளை வேறெங்கும் நான் பார்த்ததில்லை. எனது நன்மைகளை கொண்டாடும் வகையில் புகழ்ச்சிக்குரிய வாசகங்களைப் பொரித்த  கல்வெட்டுகளை ஆங்காங்கே வைக்கப்பட்டன, ஆனால் மக்கள் தங்களால் செலுத்தமுடியும் என்றிருந்த ஒரு வரிக்கு, விலக்கு அளிக்க நான் மறுத்திருந்த நேரமது என்பதால் அக்கடைநிலை மக்களிடம் நான் அந்நியப்பட்டிருந்தேன். எனக்குத் துணையாக  வந்த இரண்டு இளைஞர்கள் பலமுறை அவமானப்படுத்தப்பட்டனர்; லூசியஸ் ஆடம்பரம் எல்லை கடந்து விமசனத்திற்கு ஆளாக நேரிட்டது, அதுபோல  ஆண்ட்டினைனஸ் பூர்வீகத்தில் சில ஐயங்கள் இருந்ததால், மோசமான வதந்திகள் உலவின. இருவருக்கும் என்னிடத்திலிருந்த செல்வாக்கு, அரியணையை  குறிவைத்தது என்ற பெயரில் அடிதட்டுமக்கள் குறைகூறினார்கள்.  இக்கருத்து அபத்தமானது:  உண்மையில் லூசியஸ் அரசாங்க விவகாரங்களில்  எடுத்த முடிவுகள்  வியக்கத்தக்க நுண்ணறிவுடன் இருந்தன, இருப்பினும் தனிப்பட்ட அரசியல் செல்வாக்குகள்  அவனுக்கில்லை; அவ்வாறே ஆண்ட்டினைனஸும் இதுபோன்ற முயற்சிகளில் இறங்கியவனில்லை.  பேட்ரீசியன்(Patrician) வம்சத்தில் வந்த இளைஞன் லூசியஸ் இவ்வுலகத்தை நன்கு படித்தவன் என்பதால் அவனை இழிவுபடுகிறபோது அலட்சியப்படுத்துகிற வகையில் சிரித்தான், மாறாக ஆண்ட்டினைனஸ் மனவேதனையுற்றான்.

பிரச்சினை யூதேயா(Judée) இன வழிவந்த யூதர்களிடமும் குடிகொண்டிருந்தது, பல்வேறு  மதவாதிகள் ஒன்றிணைந்த  இந்த யூதம்மக்கள் ஏற்கனவே கெட்டிருந்த இவ்விவகாரத்தை மேலும் நாற்றமடிக்கத் தங்களால் ஆனதைச் செய்தார்கள். ஜெருசல யூத ஆலயம்  தம்முடைய மரியாதைக்குரிய உறுப்பினர் அகீவா(Akiva) என்பவரை பிரதிநிதியாக என்னிடம் அனுப்பிவைத்தது,  கிட்டத்தட்ட தொண்ணூறு வயதுகொண்ட அம்முதியவருக்கு கிரேக்கமொழி தெரியாது, இருந்தும் ஜெருசலேமில் ஏற்கனவே தொடங்கப்பெற்று நடைபெறும் திட்டங்களை கைவிட என்னைச் சம்மதிக்கச் செய்வது அவருக்கு இடப்பட்டப் பணி. மொழிபெயர்பாளர்களின் உதவியுடன், அவரிடம் பலமுறை பேச்சுவார்ந்தைகள் நடந்தன, நடந்த உரையாடல்கள் அனைத்துமே ஓயாமல் அவர் பேசுவதற்கு   வாய்ப்பை அளித்தனவேயன்றி,  வேறுபயன்களில்லை.  இருவரும் பேச அமர்ந்த ஒருமணி நேரத்திற்குள், அவருடைய பேச்சுக்கு நான் அடிபணியாமல் இருக்கமுடிந்ததால், அவர் மனதில் என்ன இருக்கிறதென்பதை என்னால்  சரிவர வரையறுத்துவிட முடியும் என்று நினைத்தேன், ஆனால் என்னைப் புரிந்துகொள்ள இப்படியொரு முயற்சியை அம்மனிதர் எடுத்தவரில்லை.  இந்த மதவெறியரிடம்,  தங்கள் இடங்களில்  செல்லக்கூடிய  நியயங்கள் பிறவிடங்களில் செல்லுபடியாகுமா, என்பதைக்குறித்த ஐயமேதும் இருப்பதாகத் தெரியவில்லை.  எங்கள் வெறுப்புக்கு ஆளாகியிருந்த இம்மக்களுக்கு உரோமானிய சமூகத்தில் பிறமக்களுக்கு வழங்கியதைப்போலவே ஓர் இடத்தை வழங்கியிருந்தேன், ஆனால்   அகீவாவின் வார்த்தைகளில் நான் உள்வாங்கிக்கொண்டது, ஜெருசேலம் இறுதிவரை ஒரு இனத்தின் கோட்டையாகவும் மனித இனத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட  ஒரு இறைசக்தியாகவும்  இருக்கவேண்டுமென்கிற  விருப்பத்தை மட்டுமே எனக்கு உணர்த்துவதாக இருந்தது. பைத்தியக்காரத்தனமான  அவரது கருத்தில் சூட்சமம் இருந்தபோதும், சலிப்பு தெரிந்தது. இஸ்ரேலின் மேன்மையை உருதிசெய்யும் வகையில் அடுக்கடுக்காக நியாயங்களை  முன்வைத்து பின்னர் சாதுர்யமாக மெல்ல மெல்ல கீழிறங்கிவர, அதனை நான் சகித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம். எட்டு நாட்கள் முடிந்திருந்தன, என்னுடன் உடன்பாடுகாணவந்து,  தமது கருத்தில் பிடிவாதமாக இருந்த யூத ஆலய பிரதிநிதி, தாம் செல்லும் பாதை தவறானது என்பதை உணர்ந்து, புறப்படுவதாகத் தெரிவித்தார். நான் தோல்வியை வெறுத்தேன், அது பிறருடையது என்றாலுங்கூட, தவிர ஒரு முதிய மனிதரின் தோல்வியை என்னால் ஏற்றுகொள்வது கடினமாக இருந்தது, வருந்தினேன். அகிபாவின் அறியாமையும், அவருடைய புனித நூல்கள்,  அவருடைய மக்களைத் தவிர பிறவற்றை  ஏற்க மறுத்த குணமும்,  மனிதர் ஒரு வகையான குறுகிய எண்ணங்கொண்டவர் என்பதைத் தவிர  அப்பாவி என்கிற எண்ணத்தையும் என்னிடம் உருவாக்கின. ஆனால் இதுபோன்ற மதவாதிகளிடம் எப்படி நாம் அனுதாபம் காட்டவியலும். பொதுவில் மனிதர்க்கென்று மெனமையான குணமொன்றிருக்கும், இம்மனிதரிடம் அக்குணமில்லை,  அவருடை நீண்ட ஆயுள் அதைப் பறித்திருப்பதாக எனக்குத் தோன்றியது.   அவருடைய மெலிந்த உடலையும்,  வறண்ட மனத்தையும் வெட்டுக்கிளியொன்றின் கடினமான வீரியத்திற்கு  ஒப்பிடலாம். பின்னர், தமது மக்களுக்காக உயிர் நீத்த செம்மலாக அல்லது “மனிதர் ஒவ்வொருவரும் தங்கள் உயிரை அவரவர் தெய்வத்திற்கு  அர்ப்பணிக்கவேண்டும்” என அவரே வகுத்துக்கொண்ட நெறிப்படி இறந்தாரென தெரியவந்தது.

அலெக்ஸாண்டிரியா நகரில் என கவனத்தைச்ச்சிதற அடிந்தவை அனைத்தும் கரையத் தொடங்கின. நகரில் ஆர்வமுள்ள விஷயங்களையெல்லாம் (அது முடியாட்சியின் பெண் அலுவலராகவும் இருக்கலாம், அல்லது ஆணும் பெண்ணுமான ஒரு பிரபல ஹெர்மாஃப்ரோடைட் (Hermaphrodite) ஆகவும் இருக்கலாம்)  தெரிந்துவைத்திருத  ஃபிளெகன்(Phlégon) ஒரு மந்திரவாதிப் பெண்மணியின் இல்லத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறினார். நமது மண்ணுலகையும், கண்ணுக்குப் புலனாகாத அந்த மாயாலோகத்தையும் இணைக்கும் பணியைச்செய்யும் அப்பெண்மணி கனோப்பஸ்(Canopus) நகரில் வாழ்ந்துவந்தாள். நீரோட்டம் குறைவாக இருந்த ஒரு கால்வாய் வழியாக, இரவு நேரத்தில் படகொன்றில் நாங்கள் அங்கு சென்றோம். உற்சாகமற்ற பயணம். இரண்டு இளைஞர்களுக்கிடையிலும் எப்போதும்போல பகை அமைதியாக குடிகொண்டிருந்தது: நான் அவர்கள் இருவரிடையே நெருக்கமான சினேகிதத்தை  வற்புறுத்தப்போக அதன் விளைவாக கூடுதலாகவே ஒருவரையொருவர் வெறுத்தனர். லூசியஸ் தனது வெறுப்பை பரிகாசத்திற்குரிய  அனுதாபமொன்றில் களவாய் வைத்திருக்க; கிரேக்க இளைஞனோ  கசப்பை, மனதின் வேண்டாத ஓரிடத்தில் ஒளித்துவைத்தான்.  என்னிடத்திலும் சோர்வு இருந்தது; சில நாட்களுக்கு முன்பு கடும்வெயிலில் ஓடிமுடித்துத் திரும்பியதும் சிறிது மயக்கமுற்றேன், அதற்கு  ஆண்ட்டினைசஸ்ஸும்,  ஒரு கறுப்பின வேலைக்காரனும்  மட்டுமே சாட்சி. இருவரும்  அதிகமாகக் கவலைப்பட்டார்கள்; நான் அவர்களை வற்புறுத்தி அமைதிப்படுத்தினேன்.

கனோபஸ், மாந்த்ரீகப் பெண்மணி எங்கு குடியிருக்கிறாள் என்பதைத் தெரிந்துகொள்ள உபயோகப்பட்டது  அவ்வளவுதான்: சூனியக்காரியின் குடியிருப்பு,  அந்த உல்லாச நகரின் மிகவும் மோசமான பகுதியில் அமைந்திருந்தது. சிதிலமடைந்திருந்த ஓர் உப்பரிகையை அடைந்தோம். அவளுடைய தொழிலுக்கென்று உபயோகிக்கிற, ஐயத்திற்குரிய சில கருவிகளுடன் சூனியக்காரி உள்ளே காத்திருந்தாள்.  தொழிலில் தேர்ச்சிபெற்றவள் போன்னதொரு தோற்றம்; நாடகத் தோரணை இல்லை, உண்மையானவளாக இருக்கவேண்டும்; முதிய வயதினளும் அல்ல.

அவள் ஆரூடங்களில் நல்ல தகவல்கள் குறைவு. அன்றைய தினம் மட்டுமல்ல கடந்த சில காலமாகவே, வருங்காலத்தை கணித்துச் சொல்கிறேன் என்ற பெயரில் தெரிவித்தவை அனைத்துமே கெட்டவைகளாக இருந்தன. அதில் அரசியல் குழப்பங்கள், அரண்மனைச் சதிகள், கொடிய வியாதிகளென  எல்லாமிருந்தன. சில நேரங்களில் என்னை எச்சரிக்கவும், வேறு சில நேரங்களில் என்னை பயமுறுத்தவும் சபிக்கபட்ட வாய்கள் விஷயத்தில் மனிதர்கூட்டம் ஏற்படுத்தியிருந்த கடுமையானத் தாக்கத்தை தற்போது நம்புகிறேன். மாகாண கவர்னர்கள் தயாரித்து அனுப்பும் அறிக்கைகளைக் காட்டிலும், கீழ்த்திசை நாடுகளின் உண்மை நிலவரத்தை, சூன்யக்காரிகளின் முன்கணிப்புகள் மிகத் தெளிவாகச் சொல்கின்றன. நடக்கவிருக்கும்  உண்மைகள் ஆருடமாக வெளிப்பட்டபோது, பதற்றமின்றி கேட்டுக்கொண்டேன், கண்ணுக்குப் புலனாகாத மாய உலகின்மீது எனக்கு மரியாதை உண்டு, ஆனாலது இத்தெய்வசக்திகள் தெரிவிக்கிற பிதற்றல்களில் நம்பிக்கை வைக்கும் அளவிற்குச் செல்வதில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, நான் முடிசூடிக்கொண்ட குறுகிய காலத்திற்குள்  அந்தியோக்கியா அருகிலிருந்த  எதிர்காலத்தைக் கணிக்கும் டாப்னே(Daphné) வனதேவதை ஆலயத்தை மூடச் செய்தேன். அரசு அதிகாரத்திற்கு நான் வருவேனென்று கணித்தது, உண்மையென்கிறபோதும், இப்பதவிக்கு உரிமைகோரிவருகிற எந்தவொரு முதல் நபருக்கும்  இதுபோன்றதொரு ஆருடத்தைக் கணித்திருக்கக்கூடும் என்கிற அச்சம் அக்கோவிலை மூடச் செய்தது. ஆனால் பொதுவில் சோகவிஷயங்களைச் சொல்லக் கேட்பது எப்போதுமே எரிச்சலூட்டும்.

தன்னால் முடிந்தவரை  பொதுவானத் துர்ச்செய்திகளைக் கூறி  எங்களைச் சஞ்சலத்தில்  ஆழ்த்திய  பிறகு,  ஆரூடப் பெண்மணி, தமது  சேவையை எங்களுக்கு வழங்க முன்வந்தார்: எகிப்திய சூனியக்காரர்கள்  மாயமந்திர நிவேதனத்தில் கெட்டிக்காரர்கள், அதிலொன்று விதியுடன் நமக்குள்ள  எல்லா பிரச்சினைகளையும்  இணக்கமாகத் தீர்த்துவைக்க போதுமானது. ஃபெனிசியா (Phoenician) மாந்த்ரீக உலகிற்குள் எனக்கு வாய்த்த இத் திடீர்ப் பிரவேசம், தடைசெய்யப்பட்ட இத்தகைய  நடைமுறைகளில், அதவாது நம்மிடம் மறைத்ததுபோக தெரியவந்தவற்றில்  உள்ள பயங்கரத்தை ஏற்கனவே புரியவைத்திருந்தது. நரபலிகளின் மீதான எனது வெறுப்பு அனைவருக்கும் தெரியும், அப்படி இல்லாமலிருந்தால், ஒர் அடிமையைத் தீயிலிட்டு பலியிடவேண்டுமென எனக்கு  அறிவுறுத்தியிருப்பார்கள். பதிலாக ஒரு செல்லப்பிராணியை பலிகொடுப்பதென்ற பேச்சில் திருப்திகொள்ள முடிந்தது. 

முடிந்தவரை, பலிகொடுக்கப்படவேண்டிய உயிர், என்னைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும்; நாயாக இருக்க சாத்தியமில்லை, எகிப்திய மூடநம்பிக்கைப்படி  அதொரு இழிவான உயிர்; ஒரு பறவை பொருத்தமானது, ஆனால் என்னுடையை பரிவாரக்கூட்டத்தில், கூண்டொன்றில் அடைத்த பறவையுடன் பயணிக்கும் வழக்கமெல்லாம் இல்லை; எனது அன்பிற்குரிய இளம் எஜமான் தன்னுடைய செல்லப்பற்வையான பருத்தை பலியிடலாமென்றார். எனவே  பலிக்குரிய நிபந்தனைகள் பூர்த்திசெய்யப்படும். இந்த அழகான பறவையை ஆஸ்ஸ்ரோன் மன்னனிடமிருந்து நானே பெற்று, பிறகு அவனிடம்  கொடுத்தேன்; அவனே தன் கையால் பறவைக்கு உணவளித்து வந்தான்;அவன் மிகவும்  அன்யோன்யமாக  சொந்தம் கொண்டாடியவை மிகவும் குறைவு, அதில் இப்பறவையும்  ஒன்று. முதலில் மறுத்தேன்;  அவன் ஏற்றுக்கொள்ள வற்புறுத்தினான் ; இச் சலுகைக்கு அவன் அசாதாரணமான முக்கியத்துவத்தை அளித்துள்ளான் என்பதை விளங்கிக்கொண்டேன், அவன் மீது எனக்கிருந்த பிரியம் காரணமாக  சம்மதிக்க வேண்டியிருந்தது. விவரமான தகவல்களுடன் எனது செய்தியாளர் மெனிக்ரேட்ஸ் எங்கள் செராபியக் குடியிருப்பில் பறவையைத் தேடிப் புறப்பட்டார்.  காற்றுபோல விரைந்து சென்றாலும்  மொத்தம் இரண்டு மணி நேரத்திற்கு கூடுதலாக   எடுக்கும். அதுவரை சூனியக்காரியின் அசுத்தமான இக்குடியிருப்பில் நேரத்தை செலவிடுவதென்கிற பேச்சுக்கே இடமில்லை, போதாதற்கு லூசியஸ் படகில் நீர்கோர்த்து சொதசொதவென்றிருக்குமென புலம்பிக் கொண்டிருந்தான். ஃபிளெகன் ஒரு தீர்வைக் கண்டறிந்தார், சரியோ தவறோ ஒரு காமத்தரகர் இல்லத்தில்,   அங்கிருந்த பணியாட்களை அப்புறபடுத்தி விட்டு தங்கினோம். லூசியஸ் உறங்க முடிவு செய்தான், கிடைத்த நேரத்தை பயன்படுத்திக்கொண்டு எனது உதவியாளரிடம் குறிப்பெடுத்துக்கொள்ளுமாறு உத்தியோக பூர்வ ஆணைகைளைப் பிறப்பித்தேன்.  ஆண்ட்டிப்னைனஸ் எனது காலடியில் படுத்திருந்தான். ஃபிளெகனுடைய  நாணல் எழுதுகோல் விளக்கின் கீழ் எதையோ கிறுக்கிக்கொண்டிருந்தது. கண்விழித்த அந்த இரவின் இறுதிக் கட்டத்தை நெருக்கிக் கொண்டிருந்த வேளை, மெனிக்ரட்ஸ் பறவை, கவசக் கையுறை, குல்லா,  சங்கிலி ஆகியவற்றைக் கையோடு கொண்டுவந்திருந்தான். 

மந்திரக்காரியின் வீட்டிற்குத் திரும்பினோம். ஆண்டினைனஸ் தனது பருந்தின் தலையிலிருந்த குல்லாவை அகற்றியபின், உறக்கத்திலிருந்த அக்காட்டுப்பறவையின் சிறிய தலையை நீண்ட நேரம் தடவிக்கொடுத்த பின்னர் அதனை சூன்யக்காரியிடம் கொடுத்தான்.  அவள்  தொடர்ச்சியான மந்திர குறிப்புகளைக் கைச் சைகைகளாகச் செய்தாள், விளைவாக அவற்றுக்கு வசப்பட்டதுபோல பறவை உறக்கத்தில் ஆழ்ந்தது. மரணம் தன்னிச்சையாக நடைபெறுகிறதெகின்ற தோற்றம் முக்கியம், பலியிடவுள்ள ஜீவன் உயிருக்குப் போராடக்கூடாது. தேன், பன்னீர் ஆகியவற்றை உபயோகித்து சில சடங்குகள் முடிந்தபிறகு, உணர்வற்றிருந்த பறவை நைல் நதி நீர் நிரம்பிய தொட்டியின் உள்ளே மூழ்கடிக்கப்பட்டது; மந்திரக்காரியின் வீட்டிற்குத் திரும்பினோம்.

ஆண்டினைனஸ் தனது பருந்தின் தலையிலிருந்த குல்லாவை அகற்றியபின், உறக்கத்திலிருந்த அக்காட்டுப்பறவையின் சிறிய தலையை நீண்ட நேரம் தடவிக்கொடுத்த பின்னர் அதனைச் சூன்யக்காரியிடம் கொடுத்தான்.  அவள்  தொடர்ச்சியாக மந்திர குறிப்புகளைக் கை சைகைகளாகச் செய்தாள் , விளைவாக அவற்றுக்கு வசப்பட்டதுபோல பறவை உறக்கத்தில் ஆழ்ந்தது. மரணம் தன்னிச்சையாக நடைபெறுகிறதெகின்ற தோற்றம் முக்கியம், பலியிடவுள்ள ஜீவன் உயிருக்குப் போராடக்கூடாது.தே ன், பன்னீர் ஆகியவற்றின் சடங்குகள் முடிந்தபிறகு, உணர்வற்றிருந்த பறவை நைல்நதி நீர் நிரம்பிய தொட்டியில்  வைக்கபட்டது; நீரில் மூழ்கிய உயிரினம் ஆற்றின் நீரோட்டத்தால் கொண்டு செல்லப்பட்ட ஆசிரேஸ்(Osiris) தெய்வத்தை நினைவுகூர்ந்தது;  இம்மண்ணுலகில் பறவை ஜீவித்தகாலம் இனி எனது ஆயுளில் சேர்க்கப்படும்; ஞாயிறு கோளில் பிறப்பெடுத்திருந்த இச்சிறிய ஆன்மா, எந்த மனிதனுக்காக பலியிடப்பட்டதோ அந்த மனித ஆன்மாவோடு ஒன்றிணைந்துவிடும்;  கண்ணுக்குப் புலனாகாத  இந்த உயிர்  எனக்கென தோன்றி இதே வடிவத்தில் எனக்கினி சேவை செய்யக்கூடும். தொடர்ந்து நடைபெற்ற வெகுநேர செயல்பாடுகள் இறந்த உயிரை சமைப்பதற்குரிய ஆயத்தங்கள் என்பதைத் தவிர வேறு  சுவாரஸ்யங்கள் அவற்றில் இல்லை. லூசியஸ் கொட்டாவி விட்டான். நடைபெற்ற சடங்குகள்  மனித இறுதிச் சடங்குகள் வழிமுறைகளில் நடந்தன.  ஓமம் வளர்த்து, விடிய விடிய மந்திரப் பாடல்கள் சொல்லப்பட்டன.  ஒரு கால்வாய் ஓரம் வெகுகாலமாக உபயோகத்திலிராத இடுகாடொன்று இருந்தது, அங்கு இறந்த பறவையை வாசனாதி திரவியங்கள் நிரம்பிய சவப்பெட்டி ஒன்றில் வைத்து மந்திரவாதிப்பெண் அடக்கம் செய்தாள்.   பின்னர்  ஃபிளெகன் கொடுத்த ஊதியமானத் தங்கக் காசுகளை ஒவ்வொன்றாக எண்ண அவள் ஒரு மரத்தடியில் கால்களை மடித்து அமர்ந்தாள். மீண்டும் படகில் ஏறினோம். இதுரை அறிந்ததில்லை, அப்படியொரு கடுங் குளிர் காற்று வீசியது.

தொடரும்…

அதிரியன் நினைவுகள்

அதிரியன் நினைவுகள் – 27 அதிரியன் நினைவுகள் -29
Exit mobile version