- துளிம ஈர்ப்பியலை நோக்கிய பயணம்
- வேர்கள்
- வகுத்துச் செல்வதன் எல்லை ?
- பொருட்களின் இயற்கை
- நியூட்டனும் பிறையும் – 1
- நியூட்டனும் சிறுநிலவும் – 2
- மைக்கேல்: புலங்களும் ஒளியும்
- புரட்சியின் தொடக்கம்
- வதனமுறு பெரும் கொள்கை
- கணிதமா இயற்பியலா?
- துளிமம்
- புலங்களும் துகள்களும் ஒன்றே
- துளிம வெளியும் சார்பான காலமும்
- வெளியின் துளிமம்
- காலம் என்பது இல்லை
- கால வெளிக்கு அப்பால்
- நேர்க்காட்சி நிரூபணங்கள்
- துளிமக் கருந்துளைகள்
- முடிவின்மையின் அந்தம்
- தகவல் – 1
- வெப்பக் காலம்
- யதார்த்தமும் தகவலும் (current post)
ஏன் தகவல் இவற்றில் எல்லாம் மையமாக அமைந்திருக்கிறது? அநேகமாக, ஓர் அமைப்பைப் பற்றிய நமது அறிதலை அதே அமைப்பின் பூரண நிலையுடன் குழப்பிக் கொள்வதே காரணமாக இருக்கலாம். நமது அறிதல் என்பது அந்த அமைப்பிற்கும் நமக்கும் இடையேயான தொடர்பைப் பற்றியதே. அறிதல் என்பது உள்ளார்ந்த நிலையில் சார்புடையதே. அறிபடு பொருளுக்கு நிகராக அறிபவரையும் அது சார்ந்திருக்கிறது. ஓர் அமைப்பின் நிலை (State) என்பது வெளிப்படையாகவோ உள்ளார்ந்தோ இன்னொரு அமைப்பையே குறிக்கிறது. இந்த எளிய உண்மையை கருத்தில் கொள்ளாமல், அறிபவனின் தாக்கமே இல்லாமல் யதார்த்தத்தின் காட்சியை – குறைந்த பட்சம் கோட்பாட்டளவில் – பெற இயலும் என்கிற பிழைபுரிதலுக்கு மரபு இயற்பியல் வழிவகுத்தது. ஆனால், இறுதியாக அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என அறிவியலின் வளர்ச்சி நமக்குக் காட்டி விட்டது.
கவனம்: ஒரு கோப்பை தேநீரின் வெப்பநிலை (Temperature) பற்றிய ‘தகவல் உள்ளது’ என்றோ ஒவ்வொரு மூலக்கூறுவின் திசைவேகம் குறித்த ‘தகவல் இல்லை’ என்றோ நான் கூறுகையில், அது ஏதோ மனநிலை சார்ந்தோ அரூபமான சிந்தனைகளோ அல்ல. இயற்பியல் விதிகள், நமக்கும் வெப்பநிலைக்கும் உள்ள இடைத்தொடர்பை நிர்ணயிக்கும் (உதாரணமாக, நான் வெப்ப அளமானியைப் பார்க்கிறேன்) அதே வேளையில் நமக்கும் தனி மூலக்கூறுகளின் திசைவேகத்திற்குமான இடைத்தொடர்புகளை நிர்ணயிக்கவில்லை. தகவல் என்பதைப் பற்றி இந்த பகுதியின் தொடக்கத்தில் நான் பகிர்ந்து கொண்ட கருத்தே இது: உங்கள் கையில் இருக்கும் வெள்ளைப் பந்து, எனது கையில் இருக்கும் கருப்புப் பந்து என்கிற ‘தகவலைக் கொண்டுள்ளது’. இங்கு நாம் மன ஓட்டங்களை அல்ல – புறவயமான தகவல்களையே கையாள்கிறோம். ஒரு தகவலைக் கொண்டிருக்கும் பந்து என்பது ஒரு USB கருவி தன்னுள்ளே சேமித்திருக்கும் தகவல் (எத்தனை தகவலைக் கொண்டுள்ளது என்பதை அதன் மேல் பொறிக்கப்பட்டுள்ள எத்தனை ஜிகா பைட் கொள்ளளவு கூறுகிறது) அல்லாது அதனுடைய ‘மன’ நிலையோ வேறு எதுவோ அல்ல. தகவல் என்பது ஒரு நோக்கில் – அமைப்புகளின் நிலைகளுக்கு இடையேயான தொடர்பு என்பது – அண்டமளாவிய ஒன்று.
யதார்த்தத்தை அறிந்து கொள்ள, யதார்த்தம் என்பது உலகை நெய்திருக்கிற தொடர்புகளின் வலைப்பின்னல் மற்றும் நேர்மாறான தகவல்களே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நம்மைச் சூழ்ந்துள்ள யதார்த்தத்தை பொருட்களாக துண்டுபடுத்தியுள்ளோம். ஆனால் யதார்த்தம் தனித்த பொருட்களால் ஆனதல்ல. அது ஒரு நிலைமாறும் சுழல். கடல் அலை ஒன்றைப் பார்ப்போம். அது எங்கு முடிகிறது? எங்கு தொடங்குகிறது? மலைகளைப் பார்ப்போம். ஒரு மலை எங்கு தொடங்குகிறது? எங்கு முடிவடைகிறது? பூமியின் மேற்பரப்பைப் தாண்டி எவ்வளவு தூரம் உள்ளே செல்கிறது? பெரும்பாலும் இவை அர்த்தமற்ற கேள்விகளே – அலையும் மலையும் தானே தனித்த பொருட்கள் அல்ல – உலகை அறிந்து கொள்ள, எளிதாக விளக்க நாம் உண்டாக்கிய துண்டுகளே. அதன் வரையறைகள் தன்னிச்சையான, வசதியான, மரபானவை: அலைகள் அல்லது மலைகளை விட ஒரு புற அமைப்பாக இருக்கும் நம்மைச் சார்ந்தே அவை இருக்கின்றன. நம்மிடம் இருக்கும் தகவலை ஒருங்கிணைக்கும் வழிமுறைகளே அவை. இன்னும் தெளிவாகச் சொன்னால், நம்மிடம் உள்ள தகவலின் வடிவங்கள் அவை.
சரியாக கருத்தில் எடுத்துக் கொண்டால், அனைத்து பொருட்களுக்கும் – உயிருள்ளவை உட்பட – மேற்கூறியவை பொருந்தும். பாதி வெட்டப்பட்ட நகம் என்பது இன்னமும் ‘நான்’ தானா அல்லவா என்பதும், எனது சோஃபாவில் உதிர்த்துச் சென்ற முடி இன்னமும் பூனையைச் சேர்ந்ததா அல்லவா என்பதும் ஒரு குழந்தையின் வாழ்வு துல்லியமாக எப்போது துவங்குகிறது போன்ற கேள்விகள் அர்த்தமில்லாமல் போவது இதனாலேயே. ஒரு குழந்தையின் வாழ்க்கை கருவுறுவதற்கு முன்னரே அதைப் பற்றி முதன்முதலில் ஒருவர் கனவு காணும் நாளில் துவங்குகிறதா, அல்லது அக்குழந்தை முதல் மூச்சை இழுத்து விடும்போதா, அல்லது தனது பெயரை அது அறியும் போதா அல்லது பல்வேறான முடிவுகளை அதன் மீது செலுத்தும் போதா – இக்கேள்விகள் அனைத்தும் பயனுள்ளவை ஆனால் தன்னிச்சையானவை. சிந்திப்பதற்கும் யதார்த்தத்தின் ஆழத்துடன் நம்மை ஒருக்கிச் செல்லவும் சில வழிமுறைகள் உள்ளன.
ஓர் உயிரினம் என்பது புறவுலகுடன் முடிவின்றி தொடர்பில் இருக்கிற, தான் தானாகவே நிலைத்திருப்பதற்காக தொடர்ந்து தன்னைத்தானே உருமாற்றிக் கொள்ளும் ஓர் அமைப்பு. இதனைத் திறனுடன் செய்கின்ற உயிரினங்களே நிலைத்திருந்து உயிர்வாழுகின்றன. இக்காரணத்திற்காகவே அவை விளக்கப்பட இயலுகின்றவை (Interpretable) என அமைந்திருக்கின்றன – நாமும் அவற்றின் நோக்கம் மற்றும் பொருள்வயப்பாடுகளின் (Intentionality) வழி விளங்கிக் கொள்கிறோம். உயிருலகின் இறுதிநோக்க (Finalistic) கூறுகளும் (டார்வினின் மகத்தான கண்டுபிடிப்பு) அதன் வழியாக சிக்கலான வடிவங்களைத் தேர்ந்தெடுத்தலின் விளைவுகளும் நிலைத்திருக்கின்றன. ஆனால், தொடர்மாற்றத்தில் உள்ள சூழலில் நிலைத்திருப்பதற்கு புறவுலகுடன் இடைத்தொடர்புகளை – தகவலை – சரியாக நிர்வகிக்க வேண்டும். இந்த காரணத்திற்காகவே நோய் எதிர்ப்பு அமைப்புகள், அறிபுலன்கள், நரம்பு மண்டலங்கள், சிக்கலான மூளை அமைப்புகள், மொழிகள், நூல்கள், அலெக்ஸாண்ட்ரியாவின் நூலகம், கணிணிகள் மற்றும் விக்கிப்பீடியாவுடன் ‘டிஎன்ஏ’ இருக்கிறது: தகவல் மேலாண்மையின் – வாழ்வுக்கான இடைத்தொடர்புகளின் மேலாண்மை – திறனை மேம்படுத்துகின்றன.
சலவைக்கல் பாளம் (Block) ஒன்றில் அரிஸ்டாட்டில் காண்கிற சிலை வெறும் கல் மட்டும் அன்று: சிலையின் கருத்து வடிவமும் அல்ல. அரிஸ்டாட்டில் – நாம் – சலவைக்கல் இவற்றிற்கிடையேயான இடைத்தொடர்பில் இருக்கும் ஒன்று. நமக்கோ அரிஸ்டாடிலுக்கோ முக்கியமாகத் தோன்றிய ஏதோ ஒன்றை சலவைக்கல் காட்டியதைப் பற்றிய தகவல் சார்ந்த ஏதோ ஒன்று. ஃபீடியஸ் (Phidias) எனும் வட்டு எறிபவர், அரிஸ்டாட்டில், சலவைக்கல் – இவற்றைப் பற்றிய ஏதோ ஒன்று – சிலையின் அணுக்களின் தொடர்புப் பரவலிலும், பல்லாயிரம் பேருக்கும் இவற்றிற்கும் இடையில் இருக்கின்ற தொடர்புகளிலும், நம்முடைய அல்லது அரிஸ்டாடிலுடைய மனத்திலோ இருக்கின்ற ஏதோ ஒன்றே அது. எனது கையில் இருக்கும் வெள்ளைப் பந்து உங்கள் கையில் இருக்கும் பந்து கறுப்பு நிறமானது எனக் கூறுவது போல மேற்சொன்னவை வட்டு எறியும் ஒருவரைப் பற்றி பேசுகின்றன. இதை – தகவலை – சரியாக நிர்வகிக்கவே நாம் வடிவமைக்கப்பட்டுள்ளோம்- இதனாலேயே தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறோம்.
உலகை அறிகின்ற நமது முயற்சியில் தகவல் என்னும் கருத்தின் மையமான பங்களிப்பு என்பது இதுவரையிலும் நாம் பார்த்த மேலோட்டமான சுருக்கத்திலிருந்தே தெளிவாகிறது. தொலைத்தொடர்பிலிருந்து மரபணுவியலின் அடிப்படை வரை, வெப்ப இயக்கவியலிருந்து துளிம இயக்கவியலுக்கும் அங்கிருந்து துளிம ஈர்ப்பியல் வரைக்கும் தகவல் என்னும் கருத்து அறிதலுக்கான ஓர் அடிப்படை கருவியாக முக்கியத்துவம் பெறுகிறது. உலகை வெறும் அகோலமாகத் தெரிகின்ற அணுக்களின் ஒத்திசைவாகப் புரிந்து கொள்ளக் கூடாது – மாறாக இந்த அணுக்களின் இணைவுகள் உண்டாக்கும் கட்டமைப்புகளுக்கு இடையேயான தொடர்புகளில் காணப்படுகிற ஆடிகளின் ஆடல் மட்டுமே.
டெமாகிரீடஸின் சொற்களில், அணுக்கள் மட்டுமல்ல அவை அடுக்கப்பட்டிருக்கும் ஒழுங்குமே முக்கியமானது. அணுக்கள் எழுத்தின் வடிவங்களைப் போன்றவை: வாசிக்கவும், எதிரொளிக்கவும், தனக்குத் தானே சிந்திக்கவும் கூடிய அபாரமான எழுத்து அது. நாம் அணுக்கள் அல்ல – பிற அணுக்களையும் நம்மை நாமேயும் பிரதிபலிக்கும் அணுக்களது ஒழுங்கு மட்டுமே.
மனிதன் என்பதற்கு விசித்திரமான ஒரு விளக்கத்தை டெமாகிரீடஸ் அளிக்கிறார்: நமக்குத் தெரிந்ததெல்லாம் மனிதனே2. முதற்பார்வைக்கு சிறுபிள்ளைத்தனமாகத் தெரிந்தாலும் அவ்வாறு அல்ல.
டெமாகிரீடஸில் முக்கிய அறிஞரான சாலுமன் லூரிய (Salomon Luria), டெமாகிரீடஸின் இந்த விளக்கம் எளிய ஒன்றல்ல என்கிறார். மனிதனின் இயற்கை என்பது அவனது உள்கட்டமைப்பு அல்ல – அவனது தனிப்பட்ட, சுற்றம் மற்றும் சமூகம் சார்ந்த உள்வினைகளின் வலைப்பின்னலே. இவையே நம்மை ‘உண்டாக்குகின்றன’, பாதுகாக்கின்றன. நம்மைப் பற்றிய மற்றவர்களது அறிதல், நம்மைப் பற்றிய நமது அறிதல், நமது அறிவைப் பற்றிய மற்றவர்களது அறிதல் – மனிதர்களாக நாம் இவ்வளவே. எதிரிடை தகவலின் செறிவான வலைப்பின்னலின் சிக்கலான கணுக்களே (Nodes) நாம்.
இவையனைத்தும் இன்னமும் கொள்கையாக உருவெடுக்கவில்லை. உலகை இன்னமும் நன்றாக அறிந்து கொள்ள நாம் பின்பற்றும் வழிகள் என நம்புகிறேன். அறிந்து கொள்ள வேண்டியது இன்னமும் பிரம்மாண்டமாக இருக்கிறது. இறுதிப் பகுதியில் இதைப் பற்றி பேசுகிறேன்.
***
