- கொலம்பஸ்
- கடல் கடந்த முப்பத்தி மூன்று நாட்கள்
- பிழைகளும் கொலைமுயற்சியும்!
- டியரா டியரா!
- கன்னித்தீவு
- மாயமான நாட்குறிப்பு
- கொலம்பஸும் கொலம்பியாவும்!
- திரும்பும் பயணம்
- இரண்டாம் பயணம் – பயணத்திட்டமிடல்
1493 மார்ச் 15-ல் கொலம்பஸ் ஸ்பெயின் திரும்பியதும், முதல் பயணத்தில் அவர் கண்டுபிடித்த ஆசியாவுக்கான மேற்குப் பாதை (என்று அவர் நம்பியவை) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே ராணி இஸபெல்லா மற்றும் மன்னர் ஃபெர்டினாண்ட் உடனடியாக அவர் விண்ணப்பித்த இரண்டாவது, மிகப் பெரிய பயணத்திற்கு அனுமதி அளித்தனர்.
முதல் பயணத்தைப் போலல்லாமல், இரண்டாம் பயணத்திற்கு அரசவையே நேரடியாக பெரிய அளவில் நிதியுதவி செய்தது. ஏனெனில் புதிய நிலப்பரப்புகளைக் கொலம்பஸ் கண்டறிய வல்லவர் என நிரூபணமாகி இருந்தது. எனவே அடுத்தடுத்த பயணங்களில் நிலங்களை தேடிச்செல்லும் நோக்கம் மட்டுமல்லாமல் கண்டுபிடிக்கப்படும் புதிய நிலங்களில் காலனித்துவ குடியேற்றத்துக்கான பயணமாகவும் அது திட்டமிடப்பட்டது.
1493 செப்டம்பர் 25-ல் ஸ்பெயினின் காடிஸ் (Cádiz) துறைமுகத்திலிருந்து மாலுமிகள், சிப்பாய்கள், வணிகர்கள், மதகுருமார்கள், விவசாயிகள் என பலதரப்பட்டவர்கள் அடங்கிய சுமார் 1,200 முதல் 1,500 பேரும், கூடவே ஏராளமான குதிரைகள், கால்நடைகள், விதைகள், விவசாயக் கருவிகள் என அனைத்துடனும், ஒரு நிரந்தர குடியேற்றத்தை உருவாக்கும் நோக்கத்துடன் 17 கப்பல்கள், புறப்பட்டன.
கப்பல் தொகுதிகளில் இரண்டு பெரிய “நாவோ” வகைக் கப்பல்களும், மற்றவை சிறிய “காரவெல்” வகைக் கப்பல்களாகவும் இருந்தன.
மரிகலாந்தே (Marígalante) என்னும் பெரிய கப்பல்தான் கொலம்பஸின் கொடிக்கப்பல். .மரிகலாந்தேயில் பயணித்த கொலம்பஸ் மொத்த கடற்படைக்கும் “அட்மிரல்” ஆக இருந்தார். கயேகா (Gallega) இரண்டாவது பெரிய கப்பல்.இது கனமான சரக்குகள், பணியாட்கள், கால்நடைகள், உணவு போன்றவற்றைக் கொண்டு செல்லும் முதன்மைப் பொறுப்பில் இருந்தது.
ஃப்ரைலா, சான் ஹுவான், கோலினா, கயார்தா, குட்டியேரே, போனியல், ரொட்ரிகா, ட்ரியானா, வியேஹா, ப்ரியேதா, கோர்டா, கார்டேரா, குயின்டேரா ஆகிய சிறியகப்பல்களும் உடனிருந்தன. முதல் பயணத்தில் பயன்படுத்திய நினா மற்றும் பிண்டா கப்பல்களும் இப்பயணத்தில் மீண்டும் பயன்படுத்தப்பட்டன
இந்தப் பயணத்தில் கொலம்பஸுடன் அவருடைய சகோதரர் டியேகோ கொலம்பஸ் (Diego Colón) உடன் வந்தார். பின்னாளில் புளோரிடாவைக் கண்டுபிடித்துப் புகழ்பெற்ற ஹுவான் பொன்ஸ் தெ லியோன் (Juan Ponce de León) இளம் வீரராக இப்பயணத்தில் பங்கேற்றார். கடற்படை அதிகாரியான ஆண்டோனியோ தெ தொரெஸ் (Antonio de Torres) (பின்னர் ஸ்பானிய அரசவைக்கு “டோரெஸ் மெமோராண்டம்” எனும் முக்கிய அறிக்கையை எடுத்துச் சென்றவர்) இப்பயணக் குழுவின் பகுதியாக இருந்தார். மேலும், டாக்டர் சான்சி உள்ளிட்ட மருத்துவர்களும், புதிய நிலங்களின் மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும் நோக்கத்துடன் பல மதகுருமார்களும் இப்பயணத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். புதிய நகர நிர்மாணத்துக்காக தச்சர்களும் கட்டிடத்தொழிலாளர்களும் விவசாயிகளும் அழைத்துச்செல்லப்பட்டனர். எளிதாக தங்கம் கிடைக்கும் என நம்பிய பல ஆர்வலர்களும் தாமாக முன்வந்து பயணத்தில் இணைந்தனர். சில கப்பல்களில் திருட்டுத்தனமாகவும் பலர் ஏறியிருந்தனர்.
காடிஸிலிருந்து புறப்பட்டு கேனரி தீவுகள் வழியாக அங்கு பொருட்களை நிரப்பிய பின்னர் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து கரீபியனை அடைவது எனத்திட்டமிடப்பட்டது. மேலும், முதல் பயணத்தில் விட்டுச் சென்ற லா நவிடாட் கோட்டையில் உள்ளவர்களைச் சந்திப்பதும், முதல் பயணத்தில் ஸ்பெயினுக்கு அழைத்து வந்த தைனோ மக்களில் சிலரை மொழிபெயர்ப்பாளர்களாகப் பணியாற்ற திரும்ப அழைத்துச் செல்வதும் திட்டத்தின் பகுதியாக இருந்தது. இதற்கு முன்னதாக, ஸ்பானிய உரிமைக்கோரல்களை உறுதிப்படுத்தும் வகையில் ஆறாம் போப் அலெக்சாண்டரிடமிருந்து ’Inter caetera’ ஆணையையும் ஸ்பெயின் பெற்றுக்கொண்டது.
கப்பல்களில் சுமார் 1,300 சம்பளம் பெறும் பணியாட்களுடன், சுமார் 200 தனியார் முதலீட்டாளர்களும் இணைந்திருந்தனர்.
இரண்டாம் பயணத்தில் குதிரைகள், மாடுகள், பன்றிகள், ஆடுகள், வெள்ளாடுகள், நாய்கள், கோழிகள் ஆகிய பலவகையான ஐரோப்பியக் கால்நடைகள் கொண்டு செல்லப்பட்டன. இதுவே அமெரிக்காவிற்கு ஐரோப்பியக் கால்நடைகள் அறிமுகமான முதல் தருணம். குதிரைகள் போர் மற்றும் அதிகாரத்தின் அடையாளமாகவும், போக்குவரத்திற்காகவும் கொண்டு செல்லப்பட்டன . கப்பல்களில் ஒரு சிறு குதிரைப்படையே இணைந்திருந்தது. மாடுகள் விவசாயத்திற்கும் உழவு வேலைக்குமாக கொண்டு செல்லப்பட்டன. பன்றிகள் விரைவாக இனப்பெருக்கம் செய்பவை, எதையும் சாப்பிடும் உறுதியும் கொண்டவை என்பதால் குடியேற்றத்திற்கான நிலையான இறைச்சிக்காக அவை கொண்டு செல்லப்பட்டன.
கோழிகள் முட்டை மற்றும் இறைச்சிக்காகவும், ஆடுகள்/வெள்ளாடுகள் பால் மற்றும் இறைச்சிக்காகவும் கொண்டு செல்லப்பட்டன. மொத்தத்தில், இது வெறும் கடல் பயணத்திற்கான உணவாக மட்டுமல்லாது புதிய நிலத்தில் ஒரு நிரந்தர ஐரோப்பியப் பாணி விவசாய, உழவு அமைப்பையே கட்டமைக்கும் நோக்கத்துடன் திட்டமிடப்பட்ட ஒரு முயற்சியாக இருந்தது.
கூடவே பயிற்சி அளிக்கப்பட்ட 20 வேட்டை நாய்களும் கப்பலில் இருந்தன. கப்பலில் இருந்தவர்களுக்கான உணவு மற்றும் புதிய நிலத்தில் பயிரிட்டுப் பெருக்குவதற்கான விதைகளும் மூட்டை மூட்டையாக இருந்தன.
ஸ்பானியர்களின் அன்றாட உணவிற்கும் கத்தோலிக்க மதச் சடங்குகளுக்கும் அத்தியாவசியமான கோதுமை, பார்லி மற்றும் அரிசி போன்ற தானியங்களும் கொண்டைக்கடலை, அவரைக்காய் (Broad Beans), அவரைப் பருப்பு (Lentils) போன்ற புரதச்சத்து நிறைந்த பருப்பு வகைகளைளும் எடுத்துச்செல்லப்பட்டன. இவற்றுடன் புதிய குடியேற்றத்தில் உடனடியாகப் பயிரிட்டு அறுவடை செய்யக்கூடிய லெட்டூஸ் கீரை, முள்ளங்கி, வெள்ளரிக்காய், வெங்காயம், பூண்டு போன்ற தோட்டக் காய்கறி விதைகளும், தர்பூசணி மற்றும் முலாம்பழ (Muskmelons) விதைகளும் எடுதுச்ச்செலப்பட்டன.
மேலும், ஐரோப்பிய வாழ்க்கை முறையை அங்கே உருவாக்குவதற்காக ஸ்பெயினின் புகழ்பெற்ற திராட்சைத் தோட்டங்களிலிருந்து திராட்சைக் கொடிகளின் வேர்த் துண்டுகளையும் (Root cuttings), ஆலிவ் மரக்கன்றுகளையும் கொலம்பஸ் கப்பலில் ஏற்றினார்.
ஸ்பானியர்களின் அன்றாட உணவிலும், கத்தோலிக்க திருச்சபையின் புனித சடங்குகளிலும் ‘வைன்’ மிக முக்கிய பங்கு வகித்ததால், அதை புதிய நிலங்களில் தயாரிப்பதற்காக ஸ்பெயினின் புகழ்பெற்ற திராட்சைத் தோட்டங்களில் இருந்து திராட்சைக்கொடியின் வேர்த்துண்டுகள் கொண்டு செல்லப்பட்டன.இந்த அனைத்து விவசாயப் பொருட்களும் புதிய குடியேற்றவாசிகள் தங்களுக்குப் பழகிய ஐரோப்பிய உணவு முறையையும், மதச் சடங்குகளையும் புதிய மண்ணில் உருவாக்குவதற்காகவே திட்டமிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டன. பல நூறு பீப்பாய்களில் குடிநீரும் கொண்டு செல்லப்பட்டது.
நீண்ட கடல் பயணம் திட்டமிடப்பட்டிருந்ததால் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக, உலர்த்தப்பட்ட மற்றும் உப்பில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது. பயணிகளின் முதன்மை உணவாக பலமுறை சுடப்பட்டு நீண்ட காலம் கெடாமல் இருக்கும் ‘ஹார்ட் டாக்’ (Hardtack) எனப்படும் உலர் ரொட்டிகளும் பிஸ்கட்களும் இருந்தன. இவற்றுடன் புரதத் தேவைகளுக்காக உப்பு நீரில் ஊறவைத்து பதப்படுத்தப்பட்ட பன்றி மற்றும் மாட்டிறைச்சிகளும், உலர்த்தப்பட்டு உப்பிலிடப்பட்ட சால்மன் மற்றும் காட் போன்ற கடல் மீன்களும் பெருமளவில் எடுத்துச்செல்லப்பட்டன. இவற்றோடு சமையலுக்கும் சுவைக்கும் பயன்படும் வகையில் ஸ்பெயினின் பாரம்பரியக் கெட்டி சீஸ்கள், ஆலிவ் எண்ணெய் மற்றும் வினிகர் ஆகியவையும் இருந்தன.
புதிய நிலப்பரப்பைக் கைப்பற்றவும், அங்கிருந்த பூர்வகுடி மக்களை ஒடுக்கவும் ஏதுவாக பீரங்கிகள், துப்பாக்கிகள, வாள்கள், கவசங்கள் மற்றும் குதிரைப்படைக்கான ஆயுதங்கள் அதிகளவில் கொண்டு செல்லப்பட்டன.
வீடுகள், கோட்டைகள் மற்றும் தேவாலயங்களைக் கட்டுவதற்கான தச்சு வேலைக் கருவிகள், இரும்பு ஆணிகள், மண்வெட்டிகள், ஏர்கள் போன்ற விவசாயக் கருவிகளும் பெருமளவில் கொண்டு செல்லப்பட்டன.
முதல் பயணத்தைப்போலவே பழங்குடி மக்களிடமிருந்து தங்கம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களைப் பெற்றுக் கொண்டு பதிலுக்குப் பரிசளிக்க ஐரோப்பாவிலிருந்து கண்ணாடி மணிகள், பறவைக்கால் வளையங்கள், வண்ண உடைகள் மற்றும் கத்திகள் போன்ற மலிவான வர்த்தகப் பொருட்களும் ஏராளமாகக் கொண்டு செல்லப்பட்டன.
1493 செப்டம்பர் 25 அன்று மாலை வேளையில், ஏராளமானோர் திரண்டிருந்த துறைமுகத்திலிருந்து கடற்படை கடலுக்குள் நகர்ந்தது. முதல் பயணத்தின் வெற்றியால் கொலம்பஸ் அப்போது புகழின் உச்சத்தில் இருந்தார், பார்சிலோனாவில் அவர் காட்டிய தங்கம், கிளிகள், வாசனைத் திரவியங்கள், மற்றும் மனிதக் கைதிகள் அனைவரையும் ஈர்த்திருந்தன. எனவே திரளாக மக்கள் வந்திருந்து அந்தப் புறப்பாட்டை வேடிக்கை பார்த்தனர்.
துறைமுகத்தில் கூடிருந்த ஆயிரக்கணக்கான மக்களின் ஆரவாரத்திற்கும், ஸ்பானிய அரச முரசுகளின் முழக்கத்திற்கும் இடையே கப்பல்கள் நங்கூரங்களை உயர்த்தின. அரசப் பிரதிநிதிகள் ஒவ்வொரு கப்பலின் சரக்கு மற்றும் மனிதர்களின் பட்டியலை இறுதியாச் சரிபார்த்தனர். இந்த 17 கப்பல்களிலும் ஒரு பெண் கூட இல்லை.
துறைமுகத்தை விட்டு கப்பல்கள் நகரத் துவங்கியதும், கப்பல்களின் கீழ்த்தளங்களில் பெரும் பரபரப்பும் சத்தமும் உண்டானது. குடியேற்றத்திற்காகக் கொண்டு செல்லப்பட்ட குதிரைகள், மாடுகள், ஆடுகள், பன்றிகள் மற்றும் கோழிகள் ஆகியவை கடலின் அலைகளினாலும், இடநெருக்கடியினாலும் பயந்து கூச்சலிடத் துவங்கின. விலங்குகளின் கழிவுகளாலும், காற்றோட்டமில்லாத கீழ்த்தளங்களினாலும் கப்பல்களுக்குள் கடுமையான துர்நாற்றம் வீசத் துவங்கியது. மாலுமிகள் மற்றும் குதிரைப்படை வீரர்கள் விலங்குகள் நிலைதடுமாறி விழுந்து கால்கள் உடைந்துவிடாமல் இருக்க, அவற்றை கயிறுகளால் பிணைத்துத் தூக்கி நிறுத்தும் பணியில் உடனடியாகத் தீவிரமாக இறங்கினர். அனைத்து விலங்குகளும் ஹேமக் தூளிகளில் கட்டப்பட்டு கப்பலின் அசைவில் பாதிக்கப்படாமல் தொங்கவிடப்பட்டன. கூண்டுகளுக்குள் அடைக்கப்பட்ட 20 வேட்டை நாய்களும் தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருந்தன.
கப்பல்களின் அடிவயிற்றில் டன் கணக்கில் ஏற்றப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீர்க் கலன்களைப் பாதுகாப்பதே மாலுமிகளின் முதல் வேலையாக இருந்தது. பல மாதங்கள் கடலில் பயணிக்க வேண்டியிருந்ததால், குடிநீர் மற்றும் ஒயின் வைக்கப்பட்டிருந்த மரப் பீப்பாய்கள் கசிந்துவிடாமல் இருக்க மரக்கட்டைகளால் முட்டுக் கொடுத்து இறுக்கப்பட்டன. பருப்பு வகைகளும், காய்கறி விதைகளும் கடல்தண்ணீர் பட்டு அழுகிவிடாமல் இருக்க உலர்ந்த மற்றும் பாதுகாப்பான உயரமான தளங்களில் அடுக்கப்பட்டன. திராட்சைக் கொடிகளின் வேர் துண்டுகளும் , ஆலிவ் மரக்கன்றுகளும் வாடிவிடாமல் இருக்க ஈரமான துணிகளாலும் மண்ணாலும் மூடப்பட்டுத் தனி அறைகளில் வைக்கப்பட்டன.
பீரங்கிகள், துப்பாக்கிகள், வாள்கள், ஈட்டிகள் மற்றும் இரும்புக் கவசங்கள் ஆகியவை கடல்தண்ணீரின் உப்பினால் துருப்பிடித்துவிடாமல் இருக்க அவற்றின் மீது கொழுப்புத் தடவிப் பாதுகாக்கும் வேலையில் வீரர்கள் ஈடுபட்டனர். மற்றொருபுறம் பரிசுப்பொருட்கள் அடங்கிய பெட்டிகள் திருட்டுப் போகாமல் இருக்க பூட்டப்பட்டு, கொலம்பஸின் நேரடிப் பார்வையில் பாதுகாக்கப்பட்டன.
கப்பல்கள் ஸ்பெயின் எல்லையைக் கடந்து திறந்த கடலுக்குள் நுழைகையில், மாலுமிகள் பாய்மரங்களைச் சரிசெய்து காற்றின் திசைக்கேற்ப கப்பலைச் செலுத்தினர். பாதிரியார்கள் கப்பலின் மேல் தளத்தில் நின்று, பயணம் வெற்றிகரமாக அமைய கூட்டுப் பிரார்த்தனைகளைத் துவங்கினர்.
அவர்கள் கப்பலின் முன்பகுதியில் சிலுவையையும் ஜெபமாலையையும் தாங்கியபடி, புதிய உலகைக் கண்டுபிடிக்கும் இந்த ஆபத்தான பயணம் எவ்வித விபத்துகளும் இன்றி வெற்றிகரமாக அமைய வேண்டும் என்றும், தங்களின் உயிர்கள் கடலில் காக்கப்பட வேண்டும் என்றும் முழங்காலிட்டு இறைவனிடம் வேண்டினர்.
பிரார்த்தனையின் நிறைவாக, பாதிரியார்கள் புனித நீரைத் தெளித்து 17 கப்பல்களையும், அதில் இருந்த மனிதர்கள், ஆயுதங்கள், மற்றும் விலங்குகளையும் ஆசீர்வதித்தனர். அதனைத் தொடர்ந்து, கப்பலின் மணிகள் பலமாக முழங்கின. இந்த பிரார்த்தனை, பல மாதங்கள் அறியாத ஒரு கடலில் பயணிக்கவிருந்த மாலுமிகளின் மனதில் இருந்த பயத்தைப் போக்கி, அவர்களுக்கு மன அமைதியைத் தந்தது.
காடிஸ் துறைமுகத்தின் கரைகள் மெல்ல மெல்லக் கண்களிலிருந்து மறைய, 17 கப்பல்களும் தங்களின் அடுத்த இலக்கான கேனரி தீவுகளை நோக்கி, வரலாற்றின் மிகப்பெரிய விவசாய மற்றும் மனிதப் பரிமாற்றத்தைத் தொடங்க கடலில் நகர்ந்தன.
செப்டம்பர் 25, 1493 அன்று ஸ்பெயினின் காடிஸ் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கப்பல்கள், சரியாக 6 நாட்கள் கடல் பயணத்திற்குப் பிறகு அக்டோபர் 1 அன்று தங்களின் முதல் நிறுத்தமான கேனரி தீவுகளில் உள்ள ‘கிரான் கனாரியா’ (Gran Canaria) மற்றும் ‘கோமேரா’ (La Gomera) ஆகிய தீவுகளில் நிறுத்தப்பட்டன. அங்கு மாலுமிகள் நன்னீர், விறகு மற்றும் உப்புக்கண்டம் போன்ற அத்தியாவசியப் பொருட்களை இறுதி முறையாக நிரப்பினர். மிக முக்கியமாக,கொலம்பஸின் ஆணைப்படி வேர்மற்றும் முளைகளைக்கொண்டிருந்த கரும்புத் தண்டுகளையும், மாலுமிகளுக்கு ‘ஸ்கர்வி’ நோய் வராமல் தடுக்க ஆரஞ்சு, எலுமிச்சை, நாரத்தை போன்ற சிட்ரஸ் பழங்களின் விதைகளையும் நாற்றுகளையும் சேகரித்துக் கொண்டு, கேனரி தீவுகளில் வளர்க்கப்பட்ட சில உள்நாட்டு ஆடுகள், பன்றிகள் மற்றும் வலுவான குதிரைகளையும் கூடுதலாக விலைக்கு வாங்கி கப்பல்களில் ஏற்றினர்.
அங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட அந்த சில கரும்புத் தண்டுகள் தான், பிற்காலத்தில் கரீபியன் தீவுகளின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையே மாற்றியமைத்த சர்க்கரைத் தொழிலுக்கு அடித்தளமாக அமைந்தன. பிறகுதான் கரும்புத் தொழிலும் அடிமைத் தொழிலும் இணைந்து கரீபியனின் தலைவிதியை நிர்ணயித்தன. அதற்கான விதைகள் கொலம்பஸின் இரண்டாம் பயணத்தில் விதைக்கப்பட்டன.
அக்டோபர் 8 அன்று அறியப்படாத அட்லாண்டிக் பெருங்கடலுக்குள் தங்களின் பயணத்தை அந்த கப்பற்படை தொடங்கியது.
அங்கிருந்து தொடர்ந்த பயணத்தில் பல தீவுகளைக் கண்ட கொலம்பஸ் அவற்றிற்கு வரிசையாகப் பெயரிட்டபடியே சென்றது, ஒரு தீவில் நரமாமிசம் உண்ணும் பழங்குடியினரைச் சந்தித்தது, அடுத்த தீவில் சிறு போரில் ஈடுபட்டு சிலரைக் கொன்று, இறுதியாகத் தான் அமைத்துவிட்டு வந்த கோட்டையில் முற்றிலும் எதிர்பாராக் கோரக்கட்சியை கண்டதையெல்லாம் தொடர்ந்து பார்க்கலாம்.
தொடரும்….
