- பொது நலம், மேரி டைபாய்ட் கதை மற்றும் சமூக நலன் ஓர் அறிமுகம்
- தடுப்பூசிகளின் வரலாறு
- தடுப்பூசிகளின் அலை
- தடுப்பூசிகள் எவ்வாறு செயல்படுகின்றன?
- தடுப்பூசிகளின் துணைச்சேர்க்கைகளால் பாதிப்பு உண்டா?
- பொதுநலக் கொள்கைகள்- 101
- உடல்நலக் கல்வி
- கூட்டு முயற்சியும் பொது நலமும்
- உடல்நலம் — ஒரு உலகளாவிய கேள்வி
- காப்பீட்டின் பிறப்பிடம்: ஐரோப்பா
- இந்தியாவில் மருத்துவக் காப்பீடு: வாக்குறுதிகளும் யதார்த்தங்களும்
- அமெரிக்கக் காப்பீடுகளின் வரலாறு
- உடல்நலக் காப்பீடுகளின் விற்பனை சந்தை
- அமெரிக்கக் காப்பீடுகளின் வரலாறு: விருப்பமான மருத்துவர் அமைப்பு
- சுகாதார பராமரிப்பு அமைப்பு (HMO) Health Maintenance Organization
கடந்த கட்டுரையில் PPO-வைப் பற்றிப் பார்த்தோம் — அதிக சுதந்திரம், அதிக விலை என்ற சமன்பாட்டை. அந்தக் கட்டுரையின் இறுதியில் சொன்னது போல, இப்போது அதன் நேரடி இணை அமைப்பான சுகாதார பராமரிப்பு அமைப்புகளை (HMO- Health Maintenance Organization) விரிவாக ஆராய்வோம். சுவாரஸ்யமாக, காலவரிசைப்படி பார்த்தால் HMO தான் அண்ணன் — நிர்வகிக்கப்பட்ட பராமரிப்பு (managed care) என்ற கருத்தாக்கத்தையே அமெரிக்காவில் முதன்முதலில் பெரிய அளவில் நிறுவியது HMO தான். அதன் வரலாறு ஒரு அதிபரின் அலுவலக அறையில் நடந்த ஒரு உரையாடலில் தொடங்குகிறது என்றால் நம்பமுடிகிறதா?
இந்தக் கட்டுரையில் HMO என்றால் என்ன, அது எப்படி உருவானது, அதன் நான்கு உள் அமைப்பு மாதிரிகள், PCP என்கிற முதன்மை மருத்துவரின் ‘காவலர்’ (gatekeeper) பாத்திரம், கட்டண அமைப்பு, 1990களில் ஏற்பட்ட பெரும் எதிர்ப்பு, இன்று அதன் நிலை — எல்லாவற்றையும் விரிவாகப் பார்ப்போம்.
Health Maintenance Organization (HMO) என்பது ஒரு மாதாந்திர அல்லது வருடாந்திர நிலையான கட்டணத்திற்கு (fixed fee) பதிலாக, ஒரு குறிப்பிட்ட வலையமைப்பிற்குள் (network) உள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மூலம் மட்டுமே சுகாதார சேவையை வழங்கும் காப்பீட்டு அமைப்பு. PPO-வைப் போலல்லாமல், HMO-வில் ‘வலையமைப்பிற்கு வெளியே’ (out-of-network) என்ற தேர்வே இல்லை. விதிவிலக்கு அவசர சிகிச்சை மட்டுமே, வேறு எந்தச் சூழலிலும் வெளியே சென்றால் முழு செலவும் சொந்த பணத்தில் தான்.
HMO-வின் இரண்டு அடிப்படைத் தூண்கள்:
- ஒரு பிரதம அல்லது முதன்மை பராமரிப்பு மருத்துவர் (Primary Care Physician — PCP) தேர்வு செய்யப்பட வேண்டும் — அவர் தான் உங்கள் அனைத்து சிகிச்சைகளுக்கும் முதல் தொடர்பு புள்ளி.
- நிபுணர் (specialist) சிகிச்சை வேண்டுமெனில், PCP என்கிர முதன்மை மருத்துவரிடமிருந்து ஒரு பரிந்துரை (referral) பெறப்பட வேண்டும் — இல்லையெனில் காப்பீடு அந்தச் செலவை ஏற்காது.
இந்த இரட்டைக் கட்டுப்பாடு தான் HMO-வை மலிவாக்குகிறது. வழங்குநர்கள் உறுதியான நோயாளி எண்ணிக்கையை உத்தரவாதம் அளிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதால், குறைந்த கட்டணத்தில் சேவை செய்ய ஒப்புக்கொள்கிறார்கள். இதன் விளைவாக HMO-வில் பொதுவாக கழிவுக் கட்டணம் (deductible) இருப்பதில்லை, இருந்தாலும் மிகக் குறைவு; ஆனால், அதற்கு மாறாக ஒவ்வொருமுறையும் மருத்துவரை நாடும் போதெல்லாம் ஒரு சிறிய, நிலையான copay மட்டும் செலுத்த வேண்டும்.
HMO-வின் தொடக்க வரலாறு 1940களுக்கு நம்மை அழைத்துச் செல்லும். இரண்டாம் உலகப் போரின் போது, ஹென்றி கெய்சர் (Henry Kaiser) என்ற கப்பல் கட்டும் தொழிலதிபர், தன் தொழிற்சாலை தொழிலாளர்களுக்காக மருத்துவர் சிட்னி கார்ஃபீல்டுடன் (Sidney Garfield) இணைந்து ஒரு முன்கூட்டியே செலுத்தப்படும் (prepaid) சுகாதாரத் திட்டத்தை உருவாக்கினார். 1945-இல் இது பொது மக்களுக்கும் திறக்கப்பட்டு, பின்னாளில் கெய்சர் பெர்மனெண்டே (Kaiser Permanente) என்ற அமெரிக்காவின் மிகப்பெரிய HMO ஆக வளர்ந்தது.
‘Health Maintenance Organization’ என்ற சொல்லையே உருவாக்கியவர் மருத்துவர் பால் எல்வுட் (Paul Ellwood). 1970களின் தொடக்கத்தில், மருத்துவச் செலவுகள் வேகமாக உயர்ந்துகொண்டிருந்த நேரத்தில், அவர் நிக்சன் நிர்வாகத்தின் ஆலோசகர்களிடம் ஒரு யோசனையை முன்வைத்தார்: ஒவ்வொரு சிகிச்சைக்கும் தனித்தனியாகப் பணம் செலுத்தும் (fee-for-service) முறைக்குப் பதிலாக, ஒரு நிலையான தொகையை (capitation) முன்கூட்டியே கொடுத்துவிட்டால், வழங்குநர்களே செலவைக் கட்டுப்படுத்த ஊக்கம் பெறுவார்கள் என்பதே அந்த யோசனை.
இந்த யோசனை நிக்சனின் உதவியாளர் ஜான் எக்லிச்மென் (John Ehrlichman) மூலம் அதிபரிடம் சென்றடைந்தது. வெள்ளை மாளிகையின் ஒலிப்பதிவுகளில் பதிவான ஒரு உரையாடலில், உதவியாளரே இந்த மாதிரியின் பொருளாதார தர்க்கத்தை நிக்சனுக்கு விளக்கியதாக வரலாற்று ஆவணங்கள் காட்டுகின்றன — குறைவான சிகிச்சை அளிக்கும் தோறும் நிறுவனத்தின் லாபம் அதிகரிக்கும் என்ற உந்துதலே இந்த மாதிரியின் மையத்தில் இருந்தது என்பதே அதன் சாராம்சம். இந்த தர்க்கம் நிக்சனுக்குப் பிடித்திருந்தது.
1973 டிசம்பர் 29-அன்று, செனட்டர் டெட் கென்னடி(Ted Kennedy) உள்ளிட்டோரின் ஆதரவுடன் காங்கிரஸ் நிறைவேற்றிய HMO Act-இல் நிக்சன் கையெழுத்திட்டார். இந்தச் சட்டம்:
- புதிய HMO-க்களை தொடங்க அரசு மானியங்களையும் கடன்களையும் அளித்தது (சுமார் 375 மில்லியன் டாலர்).
- 25-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள், பாரம்பரிய காப்பீட்டுடன் சேர்த்து ஒரு HMO தேர்வையும் கட்டாயமாக வழங்க வேண்டும் என்று கட்டளையிட்டது (‘Dual Choice’ விதி) — இதுவே HMO-க்களை பெரிய அளவில் சந்தையில் நுழைய வைத்த முக்கிய காரணி.
- HMO-க்கள் கூட்டாட்சி தகுதி பெற குறைந்தபட்ச சேவைத் தரங்களை நிர்ணயித்தது.
சுவாரஸ்யமான ஒரு உண்மை: கெய்ஸர் பெர்மெனண்டே (Kaiser Permanente)-தான் இந்த மாதிரிக்கு முன்னோடி என்றாலும், சட்டம் இயற்றப்பட்ட உடனேயே அது தகுதி பெறவில்லை — அரசியல் பேச்சுவார்த்தைகளால் மசோதா நீர்த்துப்போன வடிவில் நிறைவேறியதால், 1977-இல் மட்டுமே கெய்ஸரின் அனைத்து பிராந்தியங்களும் கூட்டாட்சி அங்கீகாரம் பெற்ற HMO-க்களாக மாறின.
இந்தச் சட்டத்தின் விளைவு பெரியது. 1970-இல் சுமார் 30 லட்சம் பேர் மட்டுமே HMO-வில் இருந்தனர்; 1987 வாக்கில் அது 3.3 கோடியைத் தாண்டியது. 1990களின் ஆரம்பத்தில் — முதலாளிகள் தொடர்ந்து உயரும் பிரீமியங்களைக் கட்டுப்படுத்த முயன்றபோது — HMO பதிவு இன்னும் வேகமாக உயர்ந்து, 1995-க்குள் வேலைவாய்ப்புக் காப்பீட்டில் 30 சதவீதத்தைத் தாண்டியது.
‘HMO’ என்பது ஒரே மாதிரியான ஒரு அமைப்பு அல்ல. மருத்துவர்களுடன் அது எப்படி ஒப்பந்தம் செய்கிறது என்பதைப் பொறுத்து, நான்கு முக்கிய மாதிரிகள் உள்ளன:
| மாதிரி | அமைப்பு | சிறப்பியல்பு |
|---|---|---|
| Staff Model | மருத்துவர்கள் HMO-வின் நேரடி சம்பள ஊழியர்கள்; HMO-வின் சொந்த கட்டிடங்களில் மட்டுமே பணிபுரிகின்றனர். | மிக இறுக்கமான கட்டுப்பாடு; ஒருங்கிணைந்த பராமரிப்பு அதிகம், தேர்வு மிகக் குறைவு. |
| Group Model | HMO ஒரே ஒரு பல்-துறை மருத்துவக் குழுவுடன் (multi-specialty group) ஒப்பந்தம் செய்கிறது. | கெய்ஸர் பெர்மனெண்டே இதற்கு சிறந்த உதாரணம்; நல்ல ஒருங்கிணைப்பு, ஆனால் குழுவுக்கு வெளியே தேர்வு இல்லை. |
| Network Model | HMO பல மருத்துவக் குழுக்களுடன் ஒரே நேரத்தில் ஒப்பந்தம் செய்கிறது; அந்த குழுக்கள் HMO-க்கு அப்பாற்பட்ட நோயாளிகளையும் பார்க்கலாம். | Group Model-ஐ விட விரிவான தேர்வு; கட்டுப்பாடு சற்று குறைவு. |
| IPA Model | HMO, சுயேச்சையான தனியார் மருத்துவர்களின் சங்கம் (Independent Practice Association) ஒன்றுடன் ஒப்பந்தம் செய்கிறது; மருத்துவர்கள் தங்கள் சொந்த கிளினிக்கில் தொடர்ந்து பணிபுரிகின்றனர். | மிக அதிக தேர்வு சுதந்திரம் — ஆனால் ஒருங்கிணைப்பு மற்றும் தர மேற்பார்வை சவாலானது. |
1988-1993 காலகட்டத்தில் IPA மற்றும் Network மாதிரிகள் ஆண்டுக்கு சராசரியாக 9% வளர்ச்சி கண்டன, மற்ற இரண்டு (Staff/Group) மாதிரிகள் 3% மட்டுமே வளர்ந்தன — நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் இருவரும் அதிக தேர்வு சுதந்திரத்தை விரும்பினர் என்பதற்கான தெளிவான சான்று இது.
HMO அமைப்பின் இதயம் முதன்மை அல்லது பிரதான மருத்துவர், சுருக்கமாக PCP தான். இந்த மாதிரியை பாதுகாப்போன் அல்லது ‘gatekeeping’ என்று அழைக்கின்றனர் — ஏனெனில் PCP-தான் நிபுணர் சிகிச்சைக்கான வாசலைத் திறக்கும் நபர். நீங்கள் நேரடியாக ஒரு தோல் மருத்துவரையோ, மூட்டு நிபுணரையோ சந்திக்க முடியாது; முதலில் உங்கள் PCP-யை சந்தித்து, அவசியம் என்று அவர் கருதினால் மட்டுமே பரிந்துரை கிடைக்கும்.
இந்த அமைப்பின் நோக்கம் இரண்டு: ஒன்று, தேவையற்ற, விலையுயர்ந்த நிபுணர் சிகிச்சைகளைத் தவிர்த்து செலவைக் கட்டுப்படுத்துவது; இரண்டு, ஒரே ஒரு மருத்துவர் உங்கள் முழு சுகாதார வரலாற்றையும் ஒருங்கிணைத்துப் பார்ப்பதன் மூலம் தடுப்பு சிகிச்சையை (preventive care) மேம்படுத்துவது. சில குறிப்பிட்ட சேவைகளுக்கு — உதாரணமாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான வருடாந்திர மேமோகிராம் — பரிந்துரை தேவைப்படாத விதிவிலக்குகளும் உண்டு.
“HMO-வின் அடிப்படை பொருளாதார தர்க்கம் எளிமையானது — குறைவான சிகிச்சை என்பது அதிக லாபம் என்று மாறும்போது, அந்த ஊக்கத்தை யார் கண்காணிப்பது என்பதே அடுத்த கேள்வியாக மாறுகிறது.”
HMO-வின் மிகப்பெரிய கவர்ச்சி அதன் எளிமையான, குறைந்த செலவு கட்டமைப்பு. PPO-வுடன் ஒப்பிடும்போது மூன்று முக்கிய வேறுபாடுகள்:
- Deductible — பெரும்பாலான HMO திட்டங்களில் இல்லை, அல்லது மிகக் குறைவு.
- Copay — ஒவ்வொரு விசிட்டுக்கும் ஒரு நிலையான, முன்கூட்டியே தெரிந்த தொகை (உதாரணமாக, PCP விசிட்டுக்கு $20-$25, நிபுணர் விசிட்டுக்கு $40-$50).
- Coinsurance — பொதுவாக இல்லை; இருந்தாலும் PPO-வை விட மிகக் குறைவு.
ஒரு உதாரண ஒப்பீடு: சின்ன எலும்பு முறிவுக்கு (fracture) சிகிச்சை தேவைப்பட்டால் — PPO-வில் $2,000 deductible-ஐ முழுவதுமாக நீங்களே செலுத்திய பிறகு, 20% coinsurance-ஐயும் நீங்களே சுமக்க வேண்டும் என்றால், HMO-வில் அதே சிகிச்சைக்கு PCP பரிந்துரையுடன் நீங்கள் செலுத்த வேண்டியது வெறும் $250-$300 மட்டும் — ஒரு ER விசிட் copay-யும் ஒரு நிபுணர் விசிட் copay-யும் சேர்த்து. இதுதான் HMO-வின் முக்கிய பொருளாதார நன்மை: குறைந்த பிரீமியம் மட்டுமல்ல, எதிர்பாராத பெரிய பில்களிலிருந்தும் பாதுகாப்பு.
1988-இல் 15% ஆக இருந்த HMO பதிவு 1995-க்குள் 30%-ஐத் தாண்டியபோது, அதன் கட்டுப்பாட்டு முறைகள் மீதான அதிருப்தியும் அதே வேகத்தில் வளர்ந்தது. ‘Gatekeeping’ மற்றும் எதற்காக இந்த சிகிச்சை அவசியம் என்ற மருத்துவரின் கடிதத்தை காப்பீட்டு நிறுவனம் பரிசீலித்தல் (‘utilization review’ முன் அனுமதி பெறுதல்) ஆகியவை நோயாளிகளுக்குத் தேவையான சிகிச்சையைத் தாமதப்படுத்துகின்றன அல்லது மறுக்கின்றன என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது.
1995-இல் மார்பக புற்றுநோய்க்கான எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையை (bone marrow transplant) ஒரு காப்பீட்டு நிறுவனம் மறுத்ததும், பின்னர் அந்த நோயாளி இறந்ததும் (Nancy Arnstein வழக்கு) பெரும் ஊடக கவனத்தைப் பெற்றது. நிறைய ஊடகங்கள் HMO-க்களை லாபத்தை மையமாகக் கொண்ட, சிகிச்சையைக் கட்டுப்படுத்தும் அமைப்புகளாகச் சித்தரித்தன. கருப்பையை அறுவை சிகிச்சை செய்த 24 மணி நேரத்திற்குள் தாய்மார்களை வீட்டிற்கு அனுப்புவது போன்ற நடைமுறைகள் ‘drive-through deliveries’ என்று விமர்சிக்கப்பட்டன.
இதன் விளைவாக, பெரும்பாலான மாநிலங்கள் 1995-க்குப் பிறகு நோயாளிகளின் உரிமை (‘Patients’ Bill of Rights’ )எனப்படும் சட்டங்களை இயற்றின — இவை காப்பீட்டு நிறுவனங்களின் மறுப்பு அதிகாரத்தை கட்டுப்படுத்தின, மேல்முறையீட்டு உரிமைகளை உறுதி செய்தன. இந்த எதிர்ப்பின் நீண்டகால விளைவு: HMO பதிவு 1990களின் இறுதியில் உச்சத்தை எட்டியபின், மெதுவாகக் குறையத் தொடங்கியது. 1990களின் இறுதியில் சுமார் 30% ஆக இருந்த HMO பங்கு, 2023 வாக்கில் வேலைவாய்ப்புக் காப்பீட்டில் வெறும் 13% ஆகக் குறைந்துவிட்டது — அதிக தேர்வு சுதந்திரம் தரும் PPO-க்களும் High-Deductible திட்டங்களும் அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டன.
HMO vs PPO vs POS — சுருக்கமான ஒப்பீடு
| அம்சம் | HMO | PPO | POS |
|---|---|---|---|
| PCP தேவை | கட்டாயம் | தேவையில்லை | கட்டாயம் |
| பரிந்துரை தேவை | ஆம் | இல்லை | ஆம் |
| வலையமைப்பு வெளியே | கிட்டத்தட்ட இல்லை | உண்டு, அதிக விலையில் | உண்டு, குறைந்த பலன் |
| Deductible | இல்லை / மிகக் குறைவு | உண்டு | இன்-நெட்வொர்க் இல்லை |
| பிரீமியம் | மிகக் குறைவு | அதிகம் | நடுத்தரம் |
புள்ளிவிவர நிறுவனங்களின் கணக்கெடுப்பின்படி, வேலைவாய்ப்புக் காப்பீட்டில் 47% பேர் PPO-வையும், 29% பேர் High-Deductible திட்டங்களையும், 13% பேர் HMO-வையும், 10% பேர் POS திட்டங்களையும் தேர்ந்தெடுத்துள்ளனர். ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்திய HMO இன்று நான்காவது இடத்தில் உள்ளது — ஆனாலும் அது காணாமல் போகவில்லை.
நன்மைகள்
- மிகக் குறைந்த காப்பீட்டு கட்டணம் (பிரீமியம்) மற்றும் கைக்காசை செலவு செய்யும் தொகை (out-of-pocket).
- Deductible என்கிர கழிவுக் கட்டணம் இல்லாமையால், எதிர்பாராத பெரிய மருத்துவச் செலவுகளிலிருந்து பாதுகாப்பு.
- ஒரு PCP தொடர்ந்து பராமரிப்பதால் ஒருங்கிணைந்த, தடுப்பு-மையமான சிகிச்சை.
- எளிமையான கட்டண முறை( பில்லிங்) — copay தவிர வேறு கணக்கீடு இல்லை.
குறைபாடுகள்
- மருத்துவர் தேர்வு மிகவும் குறைவு; வலையமைப்பிற்கு வெளியே சென்றால் காப்பீடு இல்லை.
- நிபுணர் சிகிச்சைக்கு பரிந்துரை கட்டாயம் — இது தாமதத்தை உண்டாக்கலாம்.
- அவசர நிலை என்பதற்கான வரையறை மிகக் கடுமையானது; பொருந்தவில்லை எனில் காப்பீடு மறுக்கப்படும்.
- பயணம் அதிகமாகச் செய்பவர்களுக்கோ, மாநிலம் மாறி வசிப்பவர்களுக்கோ ஏற்றதல்ல — புவியியல் எல்லைக்குள் தான் சேவை.
கெய்ஸர் பெர்மனெண்ட்டே (Kaiser Permanente) இன்றும் Group Model HMO-வின் மிகப்பெரிய, மிகவும் அறியப்பட்ட உதாரணமாக உள்ளது — காப்பீடு மற்றும் சிகிச்சை இரண்டையும் ஒரே கூரையின் கீழ் வழங்கும் ஒருங்கிணைந்த அமைப்பு. Cigna, Humana, UnitedHealthcare, Aetna போன்ற பெரிய நிறுவனங்களும் தங்கள் சொந்த HMO தயாரிப்புகளை வழங்குகின்றன — Aetna, உதாரணமாக, பாரம்பரிய HMO மற்றும் ‘Aetna Health Network Only’ என்ற இரண்டு விருப்பங்களை வழங்குகிறது. இவை பெரும்பாலும் IPA அல்லது Network மாதிரியில் இயங்குபவை, Kaiser போன்ற Staff/Group மாதிரி அல்ல.
Medicare Advantage திட்டங்களிலும் HMO ஒரு முக்கிய வடிவமாக உள்ளது — குறைந்த பிரீமியத்தை விரும்பும், ஒரு நிலையான PCP-யுடன் தொடர்ந்து பராமரிக்கப்பட விரும்பும் மூத்த குடிமக்களுக்கு இது ஏற்ற தேர்வாக அமைகிறது.
HMO-வும் PPO-வும் ஒரே கேள்விக்கு இரு வெவ்வேறு பதில்கள்: ‘செலவைக் கட்டுப்படுத்த யார் பொறுப்பு?’ PPO-வில் அந்தப் பொறுப்பு பெரும்பாலும் நோயாளியிடமே இருக்கிறது — அதிக சுதந்திரம், ஆனால் அதிக விலை. HMO-வில் அந்தப் பொறுப்பு அமைப்பிடமே இருக்கிறது — PCP வழியாக, பரிந்துரை வழியாக, வலையமைப்பு வரம்பு வழியாக செலவு கட்டுப்படுத்தப்படுகிறது. அதற்குப் பதிலாக நோயாளிக்குக் கிடைப்பது மிகக் குறைந்த, கணிக்கக்கூடிய செலவு.
இரண்டு அமைப்புகளுக்கும் இடையேயான இந்த பரிமாற்றம் — சுதந்திரம் vs செலவு — கடந்த ஐம்பது ஆண்டுகளாக அமெரிக்க சுகாதாரக் காப்பீட்டு விவாதத்தின் மையமாக உள்ளது. 1970களில் Nixon-Kaiser உரையாடலில் தொடங்கிய இந்த சோதனை, 1990களின் பொது எதிர்ப்பைக் கடந்து, இன்று ஒரு நிலையான, ஆனால் சிறிய இடத்தைப் பிடித்திருக்கும் ஒரு தேர்வாக நீடிக்கிறது.
அடுத்த கட்டுரையில், இந்த வரிசையின் நான்கு தொடர்ச்சியான பகுதிகளை (Marketplace, PPO, HMO) ஒன்றிணைத்து, EPO மற்றும் POS திட்டங்களையும் சேர்த்து, ஒரு முழுமையான ‘உங்களுக்கு எது சரி?’ முடிவெடுக்கும் வழிகாட்டியை உருவாக்குவோம்.
“HMO குறைவான செலவையே மக்களுக்கு முன்வைக்கிறது. ஆனால் அந்தக் குறைவு எங்கிருந்து வருகிறது என்பதைக் கேட்காமல் எந்தத் தேர்வும் முழுமையானதல்ல.”
ஆதாரங்கள்
- Investopedia — Health Maintenance Organization (HMO) Explained
- Wikipedia — Health Maintenance Organization Act of 1973
- EBSCO Research Starters — Nixon Signs HMOs into Law
- Kaiser Permanente Thrive — History of the Kaiser Permanente Medical Care Program
- PNHP — Managed Cost, Mismanaged Care
- NCBI StatPearls — Health Maintenance Organization
- RAND Corporation — The Managed Care Backlash: Did Consumers Vote with Their Feet?
- New York Fed — The Impact of the Political Response to the Managed Care Backlash
- KFF — Employer Health Benefits Survey, 2026
- Commonwealth Fund — Markets and Plan Performance: Case Studies of IPA and Network HMOs
