- பொது நலம், மேரி டைபாய்ட் கதை மற்றும் சமூக நலன் ஓர் அறிமுகம்
- தடுப்பூசிகளின் வரலாறு
- தடுப்பூசிகளின் அலை
- தடுப்பூசிகள் எவ்வாறு செயல்படுகின்றன?
- தடுப்பூசிகளின் துணைச்சேர்க்கைகளால் பாதிப்பு உண்டா?
- பொதுநலக் கொள்கைகள்- 101
- உடல்நலக் கல்வி
- கூட்டு முயற்சியும் பொது நலமும்
- உடல்நலம் — ஒரு உலகளாவிய கேள்வி
- காப்பீட்டின் பிறப்பிடம்: ஐரோப்பா
தடுப்பூசி என்பது கிருமிக்கு எதிரான பாதுகாப்பு மட்டுமல்ல, அது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பயிற்றுவிக்கும் ஒரு நுட்பமான தொழில்நுட்பமும் கூட என்று பார்த்தோம். நாம் உறுகாய் போடும் போது அதிக நாள் கெட்டுப்போகாமல் இருக்க சில மேல் பொருள்களைச் சேர்ப்பதுபோல, தடுப்பூசியில் சில பொருள்களை சேர்ப்பது உண்டு. இவை தடுப்பூசியின் வீரியத்தை அதிகரிக்கும், அவற்றின் பாதுகாப்பையும், நிலைத்தன்மையையும் அதிகரிக்கும். இவற்றை சக்தியில்லா துணைப்பொருள்கள் அல்லது inactive ingredients , excipients என்று சொல்வார்கள்.
ஒரு தடுப்பூசியில் அதன் முதன்மைப் பொருளான ஆன்டிஜென் (Antigen) தவிர, அதன் செயல்பாட்டைத் தீர்மானிக்கும் ‘துணைச் சேர்க்கைகள்’ (Adjuvants & Excipients) மிக முக்கியமானவை. குறிப்பாக, தொற்றுநோய்களைத் தாண்டி இன்று புற்றுநோய் சிகிச்சையிலும் இவை புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த துணைப் பொருள்கள் அலுமினியம் உப்புகள், சபோனின் அடிப்படை கொண்டவை, அல்லது கொழுப்பை அடிப்படையாகக் கொண்ட நுண்ணிய துகள்களைக் கொண்டவையாக இருக்கும்.
தடுப்பூசியின் வீரியத்தை அதிகரிக்கச் சேர்க்கப்படும் பொருட்கள் எவ்வாறு செயல்படுகின்றன எனப் பார்ப்போம்.
அலுமினியம் உப்புகள் (Alum)
இது ‘டிப்போ விளைவு’ (Depot Effect) மூலம் ஆன்டிஜெனை மெதுவாக உடலில் வெளியிட்டு, நீண்ட காலப் பாதுகாப்பைத் தருகிறது. முதலில் கிருமியைத் தன் வசப்படுத்தும். பிறகு வீக்கத்தின் மூலம், நீண்டகாலம் ஆன்டிபாடிகள் மூலம் பாதுகாப்பைத் தரும். மேலும் NLRP3 இன்ஃப்ளமாசோம் என்ற மூலக்கூறு பாதையைத் தூண்டி வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் நல்ல ஆண்டிபாடி டைட்டர் அல்லது அளவு இருக்கும்.
முதலில் ஃப்ராண்ட்( Freund) தன் நண்பருடன் சேர்ந்து தண்ணீரில் எண்ணெய் சேர்ந்த (water in oil) ஒருவித எமல்ஷனை உருவாக்கி அதை அட்ஜுவண்ட் அல்லது துணையூக்கியாகப் பயன்படுத்தினார். பாக்டீரியாக்களின் லைப்போபாலிசாக்கரைடுகள் பயன்படுத்தப்பட்டன. ஐரோப்பா, அமெரிக்காவில் பல துணையூக்கிகள் தயாரிக்கப்பட்டன. பின் எண்ணெயுடன் தண்ணீர் சேர்ந்த (oil in water)எமல்ஷன்கள் பயன்படுத்தப்பட்டன. 1997களின் இறுதியில் லைப்போசோம், சில நானோமெடீரியல் சார்ந்த துணையூக்கிகள் அனுமதிக்கப்பட்டன.
Matrix-M (சபோனின் அடிப்படை)
இது ஒரு மரப்பட்டையிலிருந்து எடுக்கப்படும் இயற்கைப் பொருள். இது செல்களுக்கு இடையே தகவலைப் பரிமாறும் ‘சைட்டோகைன்'(cytokines)உற்பத்தியை அதிகரித்து, முதியவர்களுக்கும் வலிமையான எதிர்ப்புச் சக்தியை வழங்குகிறது.கீழே சில முக்கியமான துணையூக்கிகளைப் பற்றிய விவரங்களைக் கொடுத்திருக்கிறேன். அடுத்த முறை நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் போது என்ன துணையூக்கி இருக்கிறது எனத் தெரிந்துகொள்ளுங்கள்.
லிப்பிட் நானோ துகள்கள் (LNP): mRNA தடுப்பூசிகளில் இவை கடத்திகளாகவும் (Delivery Vehicle), அதே சமயம் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டும் துணையூக்கிகளாகவும் செயல்படுகின்றன.
தடுப்பூசி கெட்டுப்போகாமல் இருக்கவும், உங்கள் செல்களுக்குள் பாதுகாப்பாகச் செல்லவும் இவை அவசியம்:
ட்ரிஹலோஸ் (Trehalose)
இது 2026-ல் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு சர்க்கரை. இது மிக அதிக வெப்பநிலையிலும் தடுப்பூசி புரதங்கள் சிதைந்துவிடாமல் ‘கண்ணாடி போன்ற’ ஒரு கவசத்தை உருவாக்கிப் பாதுகாக்கிறது.
அயனியாக்கக்கூடிய லிப்பிடுகள் (Ionizable Lipids)
இவை செல்களுக்குள் நுழைந்தவுடன் சிதைந்துவிடும் (Biodegradable). இதனால் ஊசி போட்ட இடத்தில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம் 40% வரை குறைக்கப்பட்டுள்ளது.
சாதாரண தடுப்பூசிகள் கிருமிகளைத் தடுக்கின்றன. ஆனால் புற்றுநோய் தடுப்பூசிகள், ஏற்கனவே உடலில் வளர்ந்துள்ள புற்றுநோய் செல்களைக் கண்டறிந்து அழிக்க நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுகின்றன.இவற்றில், STING அகோனிஸ்டுகள் (Stimulator of Interferon Genes) 2026-ன் புற்றுநோய் சிகிச்சை ஆய்வுகளில் இது மிக முக்கியமானது. இந்த மூலக்கூறு புற்றுநோய் செல்களுக்கு எதிராக ‘T-செல்களை’ (T-cells) மிக உக்கிரமாகச் செயல்படத் தூண்டுகின்றன.
TLR-9 அகோனிஸ்டுகள் (CpG Oligonucleotides) எனப்படும் புரதமும் முக்கியமானது. இவை பெயருக்கு ஏற்ற மாதிரி ( Toll like receptor) ஒரு பகைக்கிருமி உள்ளே நுழையும் போது அதன் வைரஸ் அல்லது பாக்டீரியாவின் DNA போன்ற அமைப்பைக் கொண்ட செயற்கை மூலக்கூறுகளை அடையாளம் கண்டு கொண்டு இராணுவத்தை உடனே துரிதப்படுத்தும். இவை புற்றுநோய் செல்களை “அந்நியப் பொருட்கள்” என்று அடையாளம் காட்ட உடலுக்கு உதவுகின்றன. இந்த துணையூக்கிகள், கிருமிகளின் உடல்வாகை அப்படியே நடித்துக் (mimic)காட்டும் சக்தி கொண்டவை.
மூன்றாவது ஆண்டிஜென், ப்ர்சனலைஸ்டு நியோஆன்டிஜென் (Personalized Neoantigens) எனப்படுவது. இது அவரவர் தன்மைக்கு ஏற்ப உருவாக்கப்படுவது. ஒவ்வொரு நோயாளிக்கும் அவர் உடலில் உள்ள புற்றுநோய் செல்களின் மரபணு மாற்றத்திற்கு ஏற்ப, தனிப்பயனாக்கப்பட்ட துணைச் சேர்க்கைகள் இப்போது பயன்படுத்தப்படுகின்றன.
இந்த துணையூக்கிகள் நல்லது செய்யும் என்றால் ஏன் மக்கள் ஆட்டிசம் வரும் என அச்சப்படுகிறார்கள்? இதன் பக்க விளைவுகளைக் கண்டு ஐயுறுகிறார்கள் என்ற கேள்விகள் எழலாம். ஏனெனில் சில துணையூக்கிகளில் மெர்க்குரி அல்லது பாதரசம் இருக்கிரது. இது தீயசக்தி கொண்டது. ஆனால் அது உடலில் தங்குவதும் இல்லை, பாதிப்பை ஏற்படுத்தும் அளவு சேர்ப்பதும் இல்லை.
ஆண்ட்ரூ வேக்ஃபீல்ட் என்பவர் 1998 இல் 12 குழந்தைகளை வைத்து செய்த தவறான ஆய்வே இந்த அச்சத்தின் தொடக்கம். பின்னர் அந்த ஆய்வு “அறிவியல் மோசடி” என நிரூபிக்கப்பட்டு திரும்பப் பெறப்பட்டது. ஆனால் திரும்பப் பெற்றதை மக்கள் கவனிக்கவில்லை.
தியோமெர்சலில் உள்ள ‘எத்தில்மெர்க்குரி’ நரம்புகளைப் பாதிக்கும் ‘மெத்தில்மெர்க்குரி’ (மீன்களில் இருப்பது) போன்றது என மக்கள் நினைத்தனர். ஆனால் எத்தில்மெர்க்குரி பாதுகாப்பானது எனப் பல ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. 20 ஆண்டுகால ஆய்வுகளில், தியோமெர்சல் நீக்கப்பட்ட பின்னரும் ஆட்டிசம் கண்டறியப்படும் விகிதம் குறையவில்லை. இது தடுப்பூசிகளுக்கும் ஆட்டிசத்திற்கும் தொடர்பில்லை என்பதை 100% உறுதி செய்கிறது
இராண்டாவதாக, அதிகப்படியான தடுப்பூசிகள் போடுவதாகச் சிலர் பொய்ப்பிரசாரம் செய்ய ஆரம்பித்தனர். குறுகிய காலத்தில் பல தடுப்பூசிகள் போடுவது நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பாதிக்கும் எனச் சிலர் அஞ்சுகின்றனர். ஆனால், ஒரு குழந்தை தெருவில் விளையாடும்போது எதிர்கொள்ளும் கிருமிகளை விட, தடுப்பூசியில் உள்ள ஆன்டிஜென்கள் மிக மிகக் குறைவு
ஃபார்மால்டிஹைடு சேர்ப்பது ஆபத்தானது என சிலர் கருதுகின்றனர். இது வைரஸ்களைச் செயலிழக்கச் செய்யப் பயன்படுகிறது. ஆச்சரியமான உண்மை என்னவென்றால், ஒரு மனிதனின் இரத்தத்தில் இயற்கையாக இருக்கும் ஃபார்மால்டிஹைடு அளவை விட, ஒரு தடுப்பூசியில் உள்ள அளவு நூறு மடங்கு குறைவு.
கீழே கொடுக்கப்பட்ட அட்டவணை சில தடுப்பூசிகளையும் அவற்றில் சமீபத்தில் செய்த மாற்றங்களையும் குறிக்கிறது.
| பகுதி | செயல்பாடு | நவீன மாற்றம் (2026) |
|---|---|---|
| புற்றுநோய் தடுப்பூசி | புற்று செல்களை அழித்தல் | STING & TLR-9 அகோனிஸ்டுகள் |
| தொற்றுநோய் தடுப்பூசி | கிருமி தடுப்பு | Matrix-M (இயற்கை துணையூக்கி) |
| கடத்திகள் | செல்களைச் சென்றடைதல் | சிதையக்கூடிய (Biodegradable) LNP |
| பாதுகாப்பு | பக்கவிளைவு குறைப்பு | ஹிஸ்டிடின் (Histidine) பஃப்பர்கள (buffers) |
அறிவியல் தொழில்நுட்பம் வளர வளர, தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானதாகவும், துல்லியமானதாகவும் மாறி வருகின்றன. தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்திய நாம், இன்று நவீன துணையூக்கிகளின் உதவியுடன் புற்றுநோயையும் வெல்லும் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்
உசாத்துணை:
- https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC9147349
- https://www.nature.com/articles/s41392-023-01557-7
- https://www.chop.edu/vaccine-education-center/vaccine-safety/vaccine-ingredients/types-of-vaccine-ingredients
- https://phrma.org/blog/what-to-know-about-vaccine-ingredients-aluminum-and-thimerosal
- https://www.fda.gov/vaccines-blood-biologics/safety-availability-biologics/common-ingredients-fda-approved-vaccines
