- ஆராயும் தேடலில் அறிவியல் சிந்தனை
- கலையே உன் வாழ்க்கையின் திசை மாறினால்
- நாளைய வேதியியல் ஆய்வக உதவியாளர்கள்
- கல்லிலே கலைவண்ணம் கண்டார்
- உலகளாவிய இசையின் உணர்ச்சித் தாக்கம், கலாச்சார எல்லைகளுக்கு அப்பால்
- புள்ளிகளும் கோடுகளும் படிக கட்டமைப்புகளும்
- அறிவியலின் மர்மங்கள்: உயிரின் மௌனக் கதைகள்
- நவீன உலகை உருவாக்கும் கணிதம்
- விசித்திரமான வரலாறு மற்றும் அறிவியல் சார்ந்த நீல நிறத்தின் நீண்ட பயணம்
- தியாகம், அச்சுறுத்தல்களுக்கு அப்பாற்பட்ட பாக்டீரியாவின் புதிய பக்கம்
- ரங் பர்ஸே
- தூக்கணாங்குருவி கூடு
- பறவைகள் ஈர்க்கும் தொழில்நுட்பம் மற்றும் கட்டிடங்கள்
- ஒவ்வொரு பூவும் சொல்கிறதே
- பசுமையின் மனம் பாடும் ரகசியம்
- நீர் துளியில் நிகழும் புதுமைகள்
- எறும்புத் தோலை உரித்துப்பார்க்க யானை வந்ததடா!
- வண்ணத்துப்பூச்சிகள் விரிக்கும் புதைந்த இரகசியங்கள்
- பாரம்பரியப் படிக்கிணறுகளின் ஆய்வில் அறிவியல் சிந்தனை
- பாறைகள் பகிரும் பழங்கால கதைகள்
- ஒரு செல்லுக்கு தன்னைப் பற்றி என்ன தெரியும்?
- இயற்கை ஏன் வடிவங்களை உருவாக்குகிறது
- மரங்களின் மர்மங்கள்: பில்லியன் உயிர்களின் கதை
- நீலப் பிரகாசம்
- மனிதர்களுக்கு ஏழாவது உணர்வு இருக்கிறதா?
- இயற்கை ஒரு ஆடம்பரம் அல்ல, மூளைக்கான மருந்து
சமீபத்தில் சிகாகோ பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் நரம்பியல் பேராசிரியர் மார்க் ஜி. பெர்மன் “இயற்கை மற்றும் மனம்: அறிவாற்றல், உடல் மற்றும் சமூக நல்வாழ்வை இயற்கை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதற்கான அறிவியல் பார்வை” என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். இப்புத்தகம் ஒரு எளிய, ஆனால் வலுவான வாதத்தை முன்வைக்கிறது: பசுமை சூழல், மரங்கள், நீர்நிலைகள், பூங்காக்கள் — இவை அனைத்தும் வெறும் அழகுப் பார்வைக்கோ அல்லது ஆடம்பரத்துக்கோ மட்டும் அல்ல; நம் மூளை, மனநிலை, உடல் ஆரோக்கியம் அனைத்துக்கும் ஒரு குறைந்த செலவில், பக்கவிளைவில்லாத “மருந்து” என்று வலியுறுத்துகிறது. “நமது அன்றாட வாழ்க்கையில் நிகழும் சின்னசின்ன தருணங்கள் கூட நம் கவனச் சேர்க்கையைத் தூய்மைப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைத்து, உடலுக்கும், சமுதாயத்திற்கும் நன்மை செய்யக்கூடியது” என்பது இப்புத்தகத்தின் அடிப்படைக் கருத்து.
நமது நவீன நகர வாழ்வில் விளம்பரம், போக்குவரத்து, திரைகள், அறிவிப்புகள் போன்றவை எல்லாம் நம் மூளையிடமிருந்து “கவனம்” என்ற வரியைக் குற்றப்பத்திரிக்கையில்லாமல் வசூலித்து வருகிறபோது, ஒரு சாதாரண இயற்கையை ஒட்டிய நடைப்பயணம் மூளைக்கு ‘ஓய்வு அறை’ போல செயல்படும் என்பதை பெர்மன் பல்வேறு ஆய்வுகளை வைத்து விளக்குகிறார்.
சுற்றுச்சூழல் நரம்பியல் என்பது மரங்கள் மற்றும் பூங்காக்கள் முதல் ஒலி, ஒளி மற்றும் காற்று மாசுபாடு வரை அனைத்தும் உடல், சூழல், மூளை மற்றும் நடத்தையை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதாகும். பெரும்பாலான உளவியல் மற்றும் நரம்பியல் ஆய்வுகள் தனிநபரை மையமாகக் கொண்டுள்ளன. ஆனால் இத்துறை விஞ்ஞானிகள், சூழல் எவ்வாறு அறிவாற்றல், உணர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை வடிவமைக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். பெர்மன் மற்றும் பல ஆராய்ச்சியாளர்கள் இயற்கை சூழல்கள் எவ்வாறு மூளையின் செயல்பாடு மற்றும் நடத்தையை பாதிக்கின்றன மற்றும் உளவியல், சுகாதார மாதிரிகளை மேம்படுத்த நாம் எந்த வகையான சூழலை வடிவமைக்க வேண்டும் என்கின்ற இருவழிப் பாதைகளாகும்.
இந்த புத்தகத்தின் சிறப்பு என்னவெனில், ஒரு பாமரனுக்குப் புரியும் வகையில், அதாவது கவனத்தைத் திரும்பத் திருத்தவும் அல்லது சீராக்கவும் (attention restoration) அமைத்த விதம். நாம் ஒரு நாள் முழுக்க வெவ்வேறு பணிகள் மற்றும் கணினி, கைபேசி போன்றவற்றில் ஈடுபட்டு சோர்வடையும் உணர்வு பல நேரங்களில் இருப்பது உண்டு. அந்த நேரத்தில் வெளியில் பசுமை சூழ்ந்த இடத்திற்குச் சென்று ஒரு 15-20 நிமிடங்கள் நடந்துவிட்டு வரும்போது, ஒருவிதமான நிம்மதியை அனுபவித்திருப்போம். அந்தக் காலத்தையும் உணர்வையும், பெர்மன் ஆராய்ச்சிக் கணக்குகளோடு இணைத்து காட்டுகிறார். பெர்மன், இயற்கை என்பது ஒரு இனிமையான சுகவாசம் மாத்திரம் அல்ல, மாறாக, மனிதனின் உளவியல் மற்றும் உடலியல் நலனுக்குத் தேவையான ஒரு அடிப்படை அங்கம் என வாதிடுகிறார். அவர் கடுமையான விஞ்ஞான ஆய்வுகளும் தனிப்பட்ட அனுபவங்களும் மூலம், இயற்கையுடன் தொடர்பு கொண்டிருப்பது கவனத்தை மீட்டெடுக்க, அறிவாற்றலை வளர்க்க, உடல் நல பாதிக்கப்பட்ட அபாயங்களை குறைக்க, மேலும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை வளர்க்கும் என்பதைக் காட்டுகிறார்.
இயற்கை சூழல்களில் காணப்படும் “மென்மையான கவர்ச்சி” (soft fascination) என்பதை பெர்மன் அலசுகிறார். நாம் நகர வீதியில் நடக்கும் போது ஒவ்வொரு விநாடியும் நமது கவனத்தை திசை திருப்புவதற்கான பல விதமான நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும். ஆனால் ஒரு சிறு வனத்திலோ அல்லது மரங்கள் அடர்ந்த பாதையிலோ நடக்கும் போது, மர இலைகளின் அசைவு, பறவைகளின் சத்தம், அருகிலுள்ள நீர்நிலைகளிருந்து உருவாகும் ஒலி — இவை எல்லாம் நமது கவனத்தை மெதுவாகக் கவரும், ஆனால் கட்டாயப்படுத்தாது. இதனால் கவனம் செலுத்தப் படவேண்டிய மூளை சற்று ஓய்வு பெற்று, திரும்ப பணிக்குத் திரும்பும் போது, “ஆஹா, இப்போது எளிதாக யோசிக்க முடிகிறதே” என்று உணர வைக்கும். இதை நம்மில் பலர் பல நேரங்களில் உணர்ந்திருக்க முடியும்
இந்த நூலில் கூறப்படும் மற்றொரு கருத்து, “இயற்கை” என்றால் காட்டுக்குள் சென்று ஒரு குடிசையில் இருந்து கொண்டு வாழ வேண்டும் என்பது அல்ல. நகர வீதியில் ஒரு சில மரங்கள் இருந்தாலே, அந்தப் பகுதியிலுள்ள மக்களிடம் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதயநோய் போன்ற இதய வளர்சிதை பிரச்சினைகள் குறைவாக இருப்பதாக சில தரவுகள் தெரிவிக்கின்றன. வானளாவிய கட்டிடங்களை இடித்து பூங்கா அமைக்கும் அளவிற்கு திட்டம் தேவையில்லை; வேலிபோல் சில மர வரிசைகள் இருந்தாலே போதும். அதனால் ஏற்படும் நேர்மறையான தாக்கம், ஒரு வேலைக்குச் செல்லும் அலுவலக ஊழியருக்கும், அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவருக்கும் நம்பிக்கை தரும் என்கிறது பெர்மனின் ஆய்வு.
பெர்மனின் அணுகுமுறை மனிதர்கள் யார் என்பதையும் இயற்கை எவ்வாறு உருவாக்குகிறது என்பதையும் வெளிப்படுத்துகிறது, குறிப்பாக நவீன நகர சூழல்கள் மனிதகுலத்தின் பரிணாம மூளைகளுக்கு ஏற்றவையாக இல்லை என்பதை வலியுறுத்துகிறது. இந்த நூலில் மனித மனம் மீது நேர்மறை தாக்கம் செலுத்தும் சில முக்கியமான இயற்கை அம்சங்கள் — வளைந்த வடிவங்கள், பச்சை மற்றும் நீல நிறங்கள், சிக்கலான (fractal) வடிவமைப்புகள் — ஆகியவை சிறப்பாக ஆராயப்படுகின்றன. மேலும், மூளை மற்றும் சுற்றுச்சூழல் இடையேயான உறவை புரிந்துகொள்வது சிறந்த வாழ்விட வடிவமைப்பு, நீதி மற்றும் சேர்க்கை (inclusivity) நிறைந்த எதிர்காலம் ஆகியவற்றை உருவாக்க உதவ முடியும் என்பதில் எழுத்தாளர் நம்பிக்கை காட்டுகிறார்.
உடல், மனம், சமூகம் — மூன்று தளங்களில் இயற்கையின் தாக்கம்
இந்நூலின் ஆசிரியர், ஒற்றைக் கோட்டில் நில்லாமல், நரம்பியல், தனிநபர் நடத்தை, மற்றும் சமூகம் என்ற மூன்று நிலையிலும் இயற்கையின் பாதிப்பைப் படம் போட்டு காட்டுகிறார். எடுத்துக்காட்டாக ,தனிநபர் நிலையை ஆராய்வதற்கு, இவரின் குழு, தேர்ந்துடுக்கப்பட்ட பிரதிநிதிகளை இரண்டு வகை நடைப்பயணங்களுக்கு அனுப்பினார்கள்: ஒன்று மரங்கள், ஏரி, பூங்கா வழி நடை; இன்னொன்று அதே தூரம், அதே வேகத்தில் நெரிசல் கூடிய நகர வீதியில் நடை. பிறகு அவர்களுக்கு நினைவுத் தேர்வு, கணிதம் சம்பந்தப்பட்ட எளிய சிக்கல், கவனச் சோதனை போன்றவற்றை நடத்தினார்கள். பசுமை வழி நடந்தவர்கள், நகர வழி நடந்தவர்களை ஒப்பிடும்போது, வேலை செயல்திறன் சுமார் 20 சதவீதம் வரை மேம்பட்டிருப்பது, மனச்சோர்வு குறைந்திருப்பது போன்ற முடிவுகள் வெளியாகின. இது, நமது நடைப்பயிற்சி பசுமை நிறைந்த பாதையில் செல்லும்போது, மூளைக்கு அதிக நன்மை கிடைக்கிறது என்பதை தெரிவிக்கிறது.
சமூக நிலையில், பள்ளி வளாகங்களில் பசுமை சதவீதம் அதிகமாக இருந்தால் அந்தப் பள்ளிகளில் குழந்தைகளின் கல்வி முடிவுகள் மேம்படுவது, குற்றச் செயல்கள் குறைவது, குழந்தைகளின் வேலை நினைவுத்திறன் உயர் நிலையில் இருப்பது போன்ற தொடர்புகளும் இவர்களின் ஆய்வுகளில் வெளிவந்துள்ளன. இதனால், பள்ளி, கல்லூரி வளாகங்களில் மரம் நட்டல் என்பது அழகுபடுத்துவதோடு மட்டும் அல்லாமல், அது கல்வி உள்கட்டமைப்பில் மூளை வளர்ச்சிக்கான ஓர் அடிப்படை வசதி என்கிறார் பெர்மன்
எழுத்து நடை
அறிவியல் பின்னணி இல்லாத, ஆனால் ஆர்வமுள்ள வாசகரும் இந்த நூலைப் படிக்க முடியும் வகையில் பெர்மன் எழுத முயற்சித்திருக்கிறார். சின்னச்சின்ன அன்றாட அனுபவங்களிலிருந்து அவர் தொடங்குகிறார்: ஒருநாள் முழுக்க வேலை செய்த பிறகு வரும் களைப்பு, நோக்கமற்ற செயல்களால் ஏற்படும் வெறுமை உணர்வு, இரைச்சல் நிறைந்த வீதியில் நடந்துசெல்லும் சங்கடம் — இவைகளிலிருந்து மூளை எவ்வாறு சோர்வடைகிறது என்பதை எளிமைப்படுத்தி, பின்னர் தன் ஆய்வுகளோடு மற்ற தரவுகளையும் ஒப்பிட்டு விளக்கியுள்ளார்.
சில இடங்களில் தரவுச் சுமை சற்று அதிகமாக காணப்பட்டாலும், இந்த நூல் முழுவதையும் ஒரே தடவையில் வாசிப்பதை தவிர்த்து, அத்தியாயம்–அத்தியாயமாகவும் படிப்பதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. ஆனால் அறிவியலை விரும்புபவர்களுக்கு, பெர்மன் நேரடியாக விவரங்களை அணுகுவது ஒரு பலமாகவே தெரியும்.
பெரும்பாலான நகர–பசுமை ஆய்வுகள், “எங்கு அதிக மரமோ, அங்கு குறைந்த நோய்கள்” போன்ற தொடர்புகளைப் பார்த்து சொல்லும் வகையில் அமைந்துள்ளது. இவர்களின் கணக்குப் புள்ளிவிவரங்கள், ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதிகளின் பொருளாதார ரீதி, காற்று மாசு, மருத்துவ சேவைகள் மற்றும் சாலை பாதுகாப்பு போன்ற பல காரணிகளை ஒன்றாகக் கலந்து, கட்டுப்படுத்த முயன்றுள்ளது. இதன் அடிப்படையில் பசுமை நிறைந்த பகுதிதான் இதற்கான காரணம் என்று தீர்மானமாகச் சொல்ல முடியாது. ஆனால், பெர்மன் சில கட்டுப்பாட்டு ஆய்வுகளையும், பரிசோதனைகளையும் விவரிக்கிறார். இருப்பினும், ஊடகங்கள் விரும்புவதைப்போல் “மரங்கள் = உடனடி ஆரோக்கியம்” என்ற எளிமையான செய்தியாக வாசகன் மனதில் எழக்கூடும். அறிவியலில் “நம்பத்தக்கது, ஆனால் முழு விவரம் பெறுவதற்கு மேலும் ஆய்வுகள் தேவை ” என்ற கண்ணோட்டம் எப்போதும் இருக்கும்.
இயற்கை பற்றிப் பேசும் போது, “எல்லாருக்கும் சம அளவில் பசுமை கிடைக்கிறதா?” என்ற இன்னொரு கேள்வியும் எழுகிறது. உலகப் பெருநகரங்களில் பெரும்பாலும் மரங்கள் நிறைந்த, பூங்கா நெருக்கமான பகுதிகள், வருமானம் அதிகமான, பாதுகாப்பு நன்றாக உள்ள குடியிருப்புப் பகுதிகளாக இருக்கும். குறைந்த வருமானம், அதிக ஒழுங்கின்மை, கூட்ட நெரிசல் கொண்ட பகுதிகளில் பசுமை இன்னும் குறைவு. இந்த நிலையில், ‘காற்றாட சற்று வெளியில் சென்று வாருங்கள்’ என்று நாம் சாதாரணமாக கூறும் அறிவுரை, நிஜ வாழ்க்கையில் அந்தப் பகுதிகளில் வசிக்கும் ஒருவருக்கு அவ்வளவு எளிதாக அமையாது.
புத்தகத்தில் நகர திட்டமிடல், பசுமைப் பின்வாங்கல்கள், பள்ளி வளாக வடிவமைப்பு போன்ற விஷயங்களைத் தொட்டாலும், சுற்றுச்சூழல் நீதி என்ற பிரச்சினையை இன்னும் தீவிரமாக ஆராய்ந்திருக்கலாம் என்ற உணர்வு ஏற்படுகிறது. “எங்கெல்லாம் பசுமை சூழல் இருக்கிறது?” என்ற கேள்விக்குப் பதிலாக, எப்படி அதை எல்லோருக்கும் கிடைக்கச் செய்வது என்பதற்கான அரசியல்–சமூகத் திட்டங்களைப் பற்றிய விவாதங்கள் முக்கியமானது.
இந்த நூலை ஒரு செறிந்த நரம்பியல்–சுற்றுச்சூழல் அறிமுக நூலாகவும் பார்க்கலாம்; அதே சமயம் அது ஒரு மெல்லிய சமூக இயக்க அழைப்பாகவும் செயல்பட முடியும். மருத்துவமனைகள், பள்ளிகள், அலுவலகங்கள், குடியிருப்பு வளாகங்கள் — இவை அனைத்திலும் பசுமை இடங்களை முன்னிலைப் படுத்தி வடிவமைக்கும் சிந்தனையை இது ஊக்குவிக்கிறது.
நாம் ஒவ்வொருவரும், எப்படி நமது மூளையையும், மனநிலையையும் சற்று மேம்படுத்த முடியும் என்று யோசிக்க வைப்பதோடு, இந்த நூல் நமக்கு ஒரு அறிவியல் அடிப்படை விளக்கத்தையும் அளிக்கிறது. நாம் நடைப்பயணங்களை அன்றாட வாழ்க்கையின் ஒரு “அவசியம்” போலப் பார்த்துக் கொண்டாலே, நமது உடல் ஆரோக்கியம் மட்டும் அல்ல; மூளையின் தெளிவு, கவனத் திறன், நுண்ணுணர்வு — இவையெல்லாம் நாம் நினைப்பதை விட மெதுவாகவும் ஆழமாகவும் மாறத் தொடங்கும்.
பெர்மனின் நூலை படித்து முடித்தவுடன், சூழலும் மூளையும் எப்படி நம்மைபாதிக்கின்றன என்பதை அனுபவபூர்வமாக ஆராய்வதற்கு நானும் ஒரு நடை பயணம் மேற்கொண்டேன்.
மூடித்தெரியும் மேகங்களால் குளிர் வெளிச்சம் மந்தமாகி, வெப்பநிலை உறைபனிக்குத் தாழ்ந்து நின்ற ஒரு ஞாயிறு மாலை நேரம். ஆர்லிங்டன் நகரம் முழுவதும் குறைந்த உச்ச நிலையில் உறங்குவது போலத் தோன்றினாலும், ஆக்ஸ்ஃபோர்டு வீதி கிட்டத்தட்ட வெறிச்சோடியிருந்தது. வழக்கமாக நகரச் சூழல் மனிதரிடம் கோரும் பல உத்தரவாத கவனப்பணி, அதாவது வண்டிகள், சத்தம், கூட்டம் போன்றவையெல்லாம் அன்று மிகவும் குறைந்து இருந்ததால், பெர்மன் விவரிக்கும் “directed attention” சுமை தாற்காலிகமாகக் குறைந்ததுபோல் உணரமுடிந்தது. அதற்குப் பதிலாக இயற்கைச் சூழல் தூண்டும் மென்மையான, முயற்சியில்லாத கவனம் உள்வாங்கத் துவங்கியதாக தோன்றியது; வெறிச்சோடிய சாலையே மனத்திற்கு ஒரு அறிவாற்றல் சார்ந்த இடைவெளியைத் தந்தது.
லெஸ்லி எலிஸ் பள்ளிக்குப் பின்புறம் உள்ள க்ராஸ்பி பூங்காவை அடையும் போது காட்சிகள் மிக எளிமையாக, ஆனால் கட்டமைப்புடன் தென்பட்டன. இரண்டு வாரம் முன்பு வரை கதிரவனின் பார்வையில் எரிமலையாய் காட்சி அளித்த சிவப்பு மேபிள் மரம், இப்போது இலைகளை முழுவதுமாய் சிதறவிட்டு, வான் நோக்கிய வெற்று கிளைகளுடன் முற்றிலும் நிர்வாணமாய் நிற்கின்றது. கோடையில் நிறம், செழிப்புகளுடன் கூடிய இலைகள் மரத்தின் அமைப்பை முற்றிலும் மறைத்துவிடும். ஆனால் குளிர்கால நேரத்தில் மரத்தின் உட்கட்டமைப்பை Nature and Mind நூலின் பின்னணியில் பார்க்கும் போது, இந்த நிர்வாணக் கிளைமைப்பு மனதின் மாற்றத்துக்கும் ஒப்பான ஒரு வடிவக் கோப்பு போலத் தோன்றியது – நிலையான எலும்புக்கூட்டில், பருவ மாற்றத்துக்கு தகுந்தாற்போல் வாழ்க்கை நடைபெறுவது போல்.
பிராட்வேயில் திரும்பும் போது, அங்கு தோன்றும் காட்சிகளில் மனிதசெயற்பாடு குறைவான ஒரு ஒழுங்கமைந்த அமைதி தெரிந்தது. சில வண்டிகள் மெதுவாகச் சென்றாலும், குளிர் காற்று அவற்றின் சத்தத்தை விழுங்கிவிடும் போல இருந்தது. செயிண்ட் பால் சமாதிக் கல்லறை அருகே ஒரு சிலர் மட்டும் மெதுவாக உலாவிக் கொண்டிருந்தனர்; அங்கே உயிரும் அமைதியும் வேறு வேறு நிலைகள் இல்லாமல் ஒரே தொடர் சுழற்சியின் இரண்டு கட்டங்களாகவே தோன்றின. இத்தகைய இடங்கள், சுற்றுச்சூழல் உளவியலில் சொல்லப்படும் “symbolic restorative environments” வகையைச் சேர்ந்தவை என்ற கருத்தை நினைவூட்டின. இவ்விடங்கள், இலக்குகளிலிருந்து மனதை ஒரு நீண்ட காலம், மரணம், சுழற்சி போன்ற தத்துவமயமான கோணங்களுக்கு தள்ளும் சக்திவாய்ந்தவை.
ஏல்வைப் கிரீன்வே வழியே முன்னேறும் போது இலையுதிர்த்த மரங்கள் விரிந்த வானத்தோடு உரையாடிக் கொண்டிருந்தன; சில பைன் மரங்கள் மட்டும் ஆண்டெங்கும் நிலைத்த பச்சை இலைகளை வைத்துக் கொண்டு காட்சியின் பெயர்ப்பொருளாய் நிற்கின்றன. ஓடையின் நீர் சில இடங்களில் உறைந்து கண்ணாடித்துண்டு போல மினுமினுத்தாலும், அதன் ஓட்டத்தில் தடை ஏதுமில்லாமல் மெல்ல ஓடிக் கொண்டிருந்தது. இத்தகைய சின்ன சின்ன மாறுபாடுகளால் கவனத்தை ஈர்க்கும் தூண்டல்கள் – நீரின் அசைவு, ஒளியின் பிரதிபலிப்பு, பனித்தகடுகளின் ஒழுங்கற்ற மேற்பரப்பு – மன உளைச்சலிலிருந்து மீளும் “restorative environments” குறித்த கோட்பாட்டோடு நெருக்கமாக ஒத்துப் போகின்றன.
ஒரு நிர்வாணக் கிளையில் அசையாமல் அமர்ந்திருந்த ஓர் புறாவின் அமைதி, திடீரென அருகிலிருந்த மரத்தில் இருந்து பறந்து சென்ற ஓஸ்ப்ரேவினால் சற்று உடைக்கப்படுகிறது. ஆனால் அதை ஆய்வுப்பரிசோதனைக் கோணத்திலிருந்து பார்க்கும்போது, இவை குறுகிய, முன்கூட்டியே திட்டமிடப்படாத புறத் தூண்டல்கள்; கவனத்தை சற்று திசைமாற்றினாலும் உடனடி தீர்மானமோ செயல் பதிலோ கோராதவை.
அருகில் தனிமையில் நீந்திக்கொண்டிருக்கும் நீர்வாத்து அதன் பயிற்சியை தொடர்ந்து செய்துகொண்டிருப்பது, இந்நூலின் மற்றொரு கோட்பாட்டை வெளிப்படுத்தியது: இயற்கை மனிதரோடு சம்பந்தமில்லாமல் தன் சுற்றுச்சூழலோடு ஒத்திசைவாக இயங்கும் “தகவமைப்பு” ஈடுபாட்டின் ஒரு மாதிரி.
மிஸ்டிக் நதியடிவாரத்தை அடைந்தபோது அந்த அமைதி இன்னும் ஆழமடைந்தது. ஏறக்குறைய அறுபது, எழுபது கனடா வாத்துகள் தரையில் உணவைத் தேடிக் கொண்டும், சில நீரில் மெதுவாகச் சறுக்கிக்கொண்டும் இருந்தன. அவற்றின் பிரதிபலிப்புகள் நிர்வாண மரங்களின் நிழல்களோடு கலந்து கொண்டிருந்தது. இது “விலகி இருப்பது” என்ற கருத்தின் நகர்ப்புற வடிவம் போல தோன்றியது – தன் அந்நிய நகரத்தைவிட்டு வெளியே போகாமல், மனம் தன் வழக்கமான பாத்திரங்கள், பொறுப்புகள், கவலைகளிலிருந்து ஒரு வேறு நிலைக்குச் செல்வது. நதி மற்றும் வாத்துகளின் தன்னியக்க ஒழுங்கமைப்பு, தனிமனித மனம் எதிர்பார்க்கும் தன்னியந்திரணத்தோடு ஒத்த சுழற்சியை வெளிப்படுத்தியது.
மாலை மங்கத் தொடங்கியபோது மெட்ஃபோர்ட் வீதியின் காட்சிகளும் மாறத்தொடங்கியது. மனிதன் உருவாக்கிய செயற்கை ஒளியை கண்கள் முக்கியமாக உணரத் துவங்கியது. சில வீடுகளில் கிறிஸ்துமஸ் சார்ந்த மரியாதைக் காட்சிகளும், ஏசுவின் பிறப்புக் காட்சியும் மற்றும் அலங்கார விளக்குகளும் மாடிப்படிகளிலும் முன்புறத் தோட்டங்களிலும் தோன்றின. இங்கு “இயற்கை” மற்றும் “கலாசாரம்” இரண்டும் கலந்த ஒரு சுற்றுச்சூழல் உருவானது – நிர்வாண மரங்கள், குளிர்காற்று, இருள், அதற்கிடையில் மின்சாரம் கொண்டு உண்டாக்கப்பட்ட பண்டிகை ஒளி, மதச் சின்னங்கள். பெர்மனின் ஆராய்ச்சி விரிவாகக் கூறுவது போல, நகரவாசியின் மனத்திற்கு இயற்கை என்பது பெரும்பாலும் இவ்வகை எல்லைப் பகுதிகளில் தான் கிடைக்கிறது; முழுவதுமாக அல்ல, மனித கட்டமைப்புகளோடு இணைந்த ஒரு பச்சை விளிம்பாக.
ப்ளெசன்ட் கல்லறையை கடந்தபோது நடைத் தருணம் நேரடியான எனது தனிப்பட்ட நினைவோடு சற்று தடைபட்டது. இரண்டு ஆண்டுகளாகஅங்கே உறங்கிக் கொண்டிருக்கும் எனது அமெரிக்க அண்டை வீட்டுக்காரர் ஜார்ஜுடன் 2022-உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை ஒன்றாகக் கண்டு விமர்சித்து ரசித்த காலம் நினைவுக்கு வந்தது. இன்று அந்த உரையாடல் ஒருதலைப்பட்சமாக இருந்தாலும் “நினைவுப் பேணல்” என்ற உளவியல் செயல்முறையின் உயிரோட்டம் வெளிப்பட்டது; இடம், மனிதர், பகிர்ந்த காலம் – மூன்றும் ஒன்றாக இணைந்த சிக்கலான நினைவுக் கட்டமைப்பாக திரும்பின. பெர்மனின் நோக்கத்தில் பார்த்தால், இயற்கைத் துணுக்குகளோடு நகர இடங்களும் இவ்வாறு மனத்தில் சேமித்துள்ள வாழ்க்கைத் துணுக்குகளை மீண்டும் எழுப்புவதன் மூலம் சிந்தனையை ஆழப்படுத்துகின்றன.
செயிண்ட் ஆக்னஸ் பள்ளி முன்வைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மஞ்சரும், அதற்கு எதிர்த்தாற்போல் எழுபத்தைந்து ஆண்டுகள் நிரம்பிய சிவப்பு செங்கற்களால் கட்டமைக்கப்பட்ட நகரின் நினைவுகளைத் தாங்கிக் கொண்டிருக்கும் செயிண்ட் ஆக்னஸ் ஆலயமும், இடங்கள், குறியீடுகள் ஆகியவை அனைத்தும் சமூக நினைவகங்களாக, தலைமுறைகளைத் தாண்டிய தொடர்ச்சி உணர்வை மக்கள் மனதில் உருவாக்குகின்றன. சூழல் நரம்பியல் கோணத்திலிருந்து பார்க்கும்போது, இப்படியான நிலக்குறிப்புகள், ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கைக் கதையை நகரின் நீண்ட வரலாற்றுச் சூழலில் அமைக்க உதவுகின்றன; தனி மனம் மட்டும் அல்ல, சமூக அடையாளமும் இவ்விடங்களில் தங்குகிறது.
ஆர்லிங்டன் மையப் பகுதியை அடையும் போது, நகர சதுக்கத்தில் காணப்படும் கிறிஸ்துமஸ் அலங்கார விளக்குகள், டிலன் (Dylan) அருங்காட்சியகத்தின் ஒளிர்வு ஆகியவை அனைத்தும் சேர்ந்து, இரண்டரை நூற்றாண்டுகள் நிறைவை கொண்டாடும் நகரத்தின் ஒரு நீண்ட வரலாறு, பெருமை மற்றும் வரவிருக்கும் பண்டிகைக்கான காத்திருப்பு ஆகியவற்றை ஒரே காட்சியாக்குகின்றன. விரைவில் நடைபெற இருக்கும் திருவிழா மனநிலையை, வீதிகளும் விளக்குகளும் தாங்கிக் கொண்டிருக்கின்றன. Nature and Mind வலியுறுத்துவது போல, சூழல்கள் வெறும் மனநிலைகளை “ஏற்பது” மட்டுமல்ல, அவற்றைப் பிறப்பிக்கவும், நிலைத்திருக்கவும் செய்கின்றன.
இரண்டு மணி நேரத்தில், நான்கு மைல்கள் கடந்த இந்த நடை பயணம், இந்த நூலின் மையக் கருத்தை வாழ்விலே நிகழும் சம்பவங்களுடன் இணைத்து காட்டுகிறது: “மனம்” ஒருபுறம், “சூழல்” மறுபுறம் என்று பிரித்து பார்க்க முடியாது. சாலைகள், பூங்கா, மரங்கள், பனி, பறவைகள், நதி, கல்லறைகள், பள்ளி, ஆலயம், அருங்காட்சியகம், இவை எல்லாம் ஒன்று சேர்ந்து பரவலான அறிவாற்றல் வலையத்தை உருவாக்குகின்றன. நினைவு, சிந்தனை, தத்துவக் கேள்விகள் போன்ற எதுவும் தனிமையில் உருவாகுவதில்லை; எப்போதும் இடத்துடனான ஓயாத பரிமாற்றத்தில்தான் வெளிப்படுகின்றன. அந்த குளிர்கால மாலையில் மிஸ்டிக் கரையின் அமைதி, மனம் விலகிச் சென்ற வெறுமையல்ல; மனம் தன்னை அளவிட்டுக் கொள்ளும் ஒரு மீளமைவு – சூழலின் நீண்ட, வரலாறு மற்றும் உயிரியல் ஒழுங்குகளோடு தற்காலிகமாக ஒத்திசைந்த ஒரு உள்விளக்கம்.
