Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

ஹைக்கூ – ‘அ’ (あ) முதல் ‘ன்’ (ん) வரை

This entry is part 1 of 11 in the series ஹைக்கூ

புரிதலுக்காக:

அவை: 1. ஹிராகனா, 2. கதாகனா, 3. காஞ்சி.

ஹைக்கூ 01:

அழகி

மூங்கில்தொப்பி அணிந்து
கண்ணாடி பார்க்கிறாள்
தேயிலை பறிப்பவள்

கவிஞர்: ககமி ஷீகோ (1665-1731)

菅笠を
着て鏡見る
茶摘かな

= 各務 支考

சுகெ-கச வொ
கித்தெ ககமி மீரு
சா ட்சுமி கன

தன்னுடைய அழகைக் கண்ணாடியில் பார்த்துத் திருத்திக்கொள்வதற்கு எந்தப் பெண்ணுக்கும் சூழல் ஒரு பொருட்டல்ல.

இக்கவிதையில் குறிப்பிடப்படும் பெண் தேயிலை பறிப்பவள். சீன ஜப்பானிய இன்னும் பல கீழை நாடுகளில் விவசாயப் பணியில் இருப்போர் மூங்கில் தொப்பி அணிவது வழக்கம். உயரம் குறைந்த கூம்பு வடிவத்தில் குடையைப் போல இருக்கும் அந்தத் தொப்பியை அணிந்திருக்கும் பெண், தேயிலை பறிப்பவள், தன்னத் தானே கண்ணாடியில் பார்க்கிறாள்.

இங்கு ஷீகோ காட்சிப்படுத்துவது, எளிமையான பின்னணியிலும் பெண் தன் தோற்றத்தின் மீது கவனம் செலுத்தத் தவறுவதில்லை.

*

ஹைக்கூ இலக்கணத்தின் பார்வையில் இக்கவிதையை அணுகினால், ஹைக்கூவின் அசையெண்ணிக்கையான முதலடியில் ஐந்து அசைகளும், இரண்டாம் அடியில் ஏழு அசைகளும், மூன்றாம் அடியில் ஐந்து அசைகளும் இக்கவிதையில் இருக்கின்றன. புதிய ஹைக்கூக்களில்தான் ஜப்பானியர் அசையெண்ணிக்கை இலக்கணத்தை மீறுகிறார்கள். செவ்விலக்கியமாகக் கருதப்படும் அன்றைய ஹைக்கூக்கள் அனைத்தும் ஹைக்கூ இலக்கணத்தின்படியே அமைந்திருக்கும்.

ஜப்பானிய மொழி விளக்கத்தின்படி, இந்த ஹைக்கூவும் காஞ்சி வரிவடிவிலும் ஹிராகனா வரிவடிவிலும் எழுதப்பட்டது. அனைத்து ஹைக்கூக்களும் அப்படித்தான் எழுதப்படும். அசையெண்ணிக்கை அல்லது எழுத்தெண்ணிக்கைக்காக காஞ்சியில் இருக்கும் எழுத்துகளை ஹிராகனாவில் எழுதிப் பின் எழுத்துகளை எண்ணவேண்டும்.

இங்கு முதல் அடியில் இருக்கும் 菅笠 (すげがさ) ‘சுகெ கச’ பொருள் மூங்கில் தொப்பி. முதல் காஞ்சி எழுத்தான ‘சுகெ’ தனியாகவோ வேறு சில எழுத்துகளுடனே சேர்ந்து ஒலிக்கையில் வெவ்வேறு பொருளத் தரும். இங்கு, அதற்கு அடுத்த காஞ்சி ‘கச’வுடன் சேர்ந்து ஒலிப்பதால் மூங்கில் தொப்பி எனப் பொருள்படுகிறது. மூங்கில் தொப்பி என ஜப்பானிய மொழியிலிருந்து தமிழுக்கு அதை மொழிபெயர்த்தாலும், அதன் முழு விளக்கம் மூங்கிலில் பின்னப்பட்ட கூம்பு வடிவத் தொப்பி என்பதாகும். இந்நான்கு எழுத்துகளுடனும் ஐந்தாவதாக を ‘வொ’ சேர்ந்து முதல் அடியை நிறைவு செய்கிறது. இந்த を ஹிராகனா வரிவடிவில் மட்டும் எழுதப்படும். இந்த ‘வொ’ தமிழின் வேற்றுமை உருபு ‘ஐ’க்கு இணையானது.

すげがさを = சுகெகச வொ, சுகெகச = மூங்கில் தொப்பி, வொ = ஐ, சுகெகசவொ = மூங்கில் தொப்பியை, இப்படியாக முதலடி முடிகிறது.

இரண்டாவது அடி 着て鏡見る கித்தே ககமி மீரு, இதில் மூன்று காஞ்சி எழுத்துகளும் இரண்டு ஹிராகனா எழுத்துகளும் உள்ளன. அவற்றை விரித்து எழுதினால் きてかがみみる ‘கி தே க க(ga) மி மி ரு’ தமிழ் வாசிப்பில் கித்தேககமிமீரு.

着 (き) கி = அணிதல், きて = அணிந்து
鏡 (かがみ) = க க(ga) மி, ககமி = நிலைக்கண்ணாடி
見 (み) = பார்த்தல், 見(み)る = மிரூ = பார்த்தான், பார்த்தாள், பார்த்தார்

கித்தே ககமி மீரு என இரண்டாம் அடி முடிகிறது.

மூன்றாவது அடியில் 茶摘かな சா ட்சுமி கன, இதில் இரண்டு காஞ்சிகளும் இரண்டு ஹிராகனாக்களும் உள்ளன. அவற்றை விரித்து எழுதினால் ちゃつみかな சா ட்சு மி க ன. ちゃ ஹிராகனா ‘சா’ வுக்கு அருகில் ஹிராகனா ‘யா’ அளவில் சிறியதாக எஉழ்தப்பட்டிருப்பதால், இந்த சா சற்றே நீண்டு ஒலிக்கும். சாஅ என்றும் சொல்லலாம். சாஅ என்றால் தேநீர், தேயிலை. つみ ட்சு மி கிள்ளுதல். かな க ன = ஆஹா, தேவையெனில் இப்படி அசையெண்ணிக்கைக்கு かな க ன சேர்க்கப்படுவது ஜப்பானிய ஹைக்கூ மரபு. பல ஹைக்கூக்களில் இப்படி ‘கன’வைக் காணலாம்.

சுகெ-கச வொ = மூங்கில்தொப்பியை
கித்தெ ககமி மீரு = அணிந்து கண்ணாடி பார்க்கிறாள்
சா ட்சுமி கன = தேயிலை பறிப்பவள் ஆஹா

தமிழ்ப்படுத்தினால்,

மூங்கில்தொப்பி அணிந்து
கண்ணாடி பார்க்கிறாள்
தேயிலை பறிப்பவள்

(தொடரும்)

ஹைக்கூ

ஹைக்கூ – ‘அ’ (あ) முதல் ‘ன்’ (ん) வரை – 2
Exit mobile version